Tuesday, June 10, 2014

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்....

கல்லுப்பட்டியில் 80களில் வந்தஒரு ஆஸ்பத்திரியின் பெயர் சேவா ஆஸ்பத்திரி. பெயருக்கு உண்மையாக அன்றுமுதல் இன்றுவரை சேவை செய்துகொண்டிருக்கிறது.

80களில் 5 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்து அனுப்புவார். 

பேரப்பாத்துட்டு ஓசிக்கு வைத்தியம் பாக்குற ஆஸ்பத்திரின்னுல நெனச்சேன்னு சொல்ற கெளவிகளிடம் சரி, அடுத்தவாட்டி வந்தா காசுகுடுன்னு சொல்லி அனுப்பிருவார்.

மதியம் 2 மணிக்கு சாப்பிடச் செல்வார். அப்பவும் ஒரு சில கெளவிகளும், பெருசுகளும் அமர்ந்திருக்கும் ஆஸ்பத்திரி வாசலில். என்னான்னு கேட்டா பஸ்ஸுக்கு காசில்ல. வெயில்தாழ போலாம்னிருக்கேன்னு சொல்ற பெருசுகளுக்கு காப்பி வாங்கிக் குடுத்து பஸ்ஸுக்கும் காசு குடுத்து விடுவார்.

மறந்தும் இவ்வளவு காசு கட்டுனாத்தான் ஆஸ்பத்திரிக்குள்ள வரனும்னு சொல்ல மாட்டார். பிரசவம் எல்லாம் 99 சதவீதம் சுகப்பிரசவம்தான். கத்தி வைத்தல் கடைசி ஆப்ஷன் இந்த ஆஸ்பத்திரியில்.

இன்று சொந்தக்கட்டிடத்தில் இரு மாடிகளாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஊசி போட்டு மாத்திரை வழங்கி, சிரப்பு, டானிக் எல்லாம் சேர்த்து 75 ரூபாய் வாங்குகிறார்.

எங்களின் குடும்ப டாக்டரான இந்த குமரகுருபரன். அம்மா இறப்பதற்கு ஒரு மாதம் முன்னரே வீட்டுலையே வச்சிப் பாருங்க. நான் முடிஞ்சத செய்றேன்னார். நாங்கதான் அப்பல்லோவுக்கு கூப்டு போனோம். பொறப்ட உடனே சொல்லிட்டாரு. 1 மாசம் அல்லது 1.5 மாசம் வச்சி எல்லா டெஸ்ட்டும் செஞ்சிட்டு 5 லட்ச ரூபா புடிங்கிட்டு விடுவாங்க. ஆனா, உங்களுக்கு அம்மாவ நல்லா பாத்துகிட்டோம்கிற திருப்திதான் மிச்சமா இருக்கும்னார். அதுதான் நடந்தது.

யாருக்கும் அவர் பெயர் குரகுருபரன் என்பதுகூட தெரியாது. சேவா டாக்டர் என்ற பெயரில் மட்டுமே அறியப்படுகிறார்.

இன்றும் மரியாதை நிமித்தமாக ஊரில் சந்திக்கும் சிலரில் இவரும் ஒருவர்.

இவர் மனைவி டாக்டர் தாரகேஸ்வரியும் இவருடன் இணைந்து பணிபுரிகிறார்.

எதுக்கு இந்தக் கதையென்றால் +2 முடித்ததும் நான் டாக்டர் ஆகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என பேட்டியெல்லாம் கொடுக்காமல் உண்மையிலேயே சேவை செய்வதற்காக டாகடருக்கு படித்து சேவை செய்தவர்/ செய்பவர்.

No comments: