Saturday, November 14, 2015

குழந்தைகள் தின சுழல் கேள்விகள்..

குழந்தைகள் தினத்துக்காக 2014ல் ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட கேள்விகளை நால்வரைக் கேட்கவேண்டும் என்பது போட்டிவிதியாக வைத்து சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டிருந்தனர். 

 எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் எனக்கும் இந்தக்கேள்விகளை அனுப்பி இருந்தார்..

 1. சின்ன வயதில் கண்ட fantacy கனவு எது? 

ஒரு கனவு என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. யாராவது ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்தால் அன்றிரவே ஒரு மாபெரும் கூட்டத்தின் நடுவே அந்த செயலை சிறப்பாக செய்துகாட்டுவதாகவும், எல்லோரும் என்னைப் புகழ்வதுபோலவும் கனவு வரும். இது கல்லூரிகாலம் வரை தொடர்ந்தது. இந்த வகையில் நான் கூத்தாடியாக, சர்க்கஸில் சைக்கிளில் சுற்றுபவனாக, விவேகானந்தராக, சிறந்த பேச்சாளனாக, சிறந்த ரயில் ட்ரைவராக, எங்கள் கல்லூரியின் கண்ணன்சார் பாராட்டும் சிறந்த ப்ரொஃப்சராக இப்படி ஏகப்பட்ட கனவுகள். :) 

2. பள்ளிக்குச் செல்லும் வழியில் அனுபவித்த மறக்கமுடியாத விஷயம்? 

நானும் என் நண்பன் சரவணக்குமாரும் ரோடுபோட வைத்திருந்த தார்டின்னில் இருந்த தாரை உருண்டையாக உருட்டி சாலையில் லாரி வரும்போது உருட்டி விடுவோம். அது தரையோடு நசுங்குவதைப் பார்ப்பது ஒருவிளையாட்டு. எங்கள் கெட்ட நேரம் ஒரு கோவக்கார லாரி ட்ரைவர் நாங்கள் என்னமோ வண்டிக்குள் உருட்டிவிடப்போகிறோம் என்பதை தூரத்திலேயே தெரிந்துகொண்டு எங்கள் அருகில் வந்து லாரியை நிறுத்தி எங்கள் இருவரையும் பொடனியில் அடித்து லாரியில் ஏற்றி வண்டியைக் கிளப்பிவிட்டார். சரி எங்கையே கண்கானாத இடத்துக்கு கொண்டுபோய் கொல்லப்போறார்னு நெனச்சிட்டிருந்தா 5 நிமிஷத்துல எங்க ஊர் எல்லையில இறக்கிவிட்டு மீண்டும் பொடனியில் ஒரு அப்பு அப்பி இனிமே இப்படி செஞ்சீங்க மதுரையில கொண்டுபோய் விட்ருவேன் எனச் சொல்லிச் சென்றார். லாரியில் இருந்து கீழே இறங்கி ஸ்டெடியாக நிற்க அரைமணி நேரத்துக்கு மேல் ஆனது. 

3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்? 

நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்ததே 11ம் வகுப்புக்கு பிறகே. தி.ஜா வின் மோகமுள்தான் அப்படியே கட்டிப்போட்ட புத்தகம். பாபுவும், யமுனாவும் கிட்டத்தட்ட 1 வாரத்துக்கு மேல் என்னைவிட்டு இறங்கவில்லை. அதுவரை எனக்குப் பிடித்த பெயர் என நினைத்துக்கொண்டிருந்த காயத்ரி மனதில் இருந்து விலகி யமுனா என்ற பெயர் மந்திரம் போல அமர்ந்துகொண்டது. எல்லாப் பெண்களிலும் யமுனாவையே தேடிக்கொண்டிருந்தேன், பல ஆண்டுகளாக. மோகமுள் திரைப்படத்தை நான் பார்த்தது ஆகப்பெரிய தவறு. என் கற்பனையில் இருந்த என்றுமே சந்திக்க முடியாதோ என நினைத்துக்கொண்டிருந்த யமுனாவை இழந்து.விட்டேன் :) 

4. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்? 

பரிசு வாங்குமளவு விளையாட்டில் ஜொலித்ததில்லை. ஆனால், எங்கள் பி ஈ டி வாத்யாருக்கு இவன் டென்னிகாய்ட்டில் நல்லா வருவானோ, பேட்மிண்டனில் நல்லா வருவானோ, 100 மீட்டரில் ஓட பயிற்சி கொடுத்தா நல்லா வருவானோ என எண்ணம் வரும் அளவு மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால், எதிலுமே நன்றாக வந்ததில்லை. 

5. பாலியத்துக்குத் திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்? 

நான் படிப்பில் மிகச் சுமார். உண்மையைச் சொல்வதாய் இருந்தால் மஹா மக்கு. இன்னொரு வாய்ப்புக்கிடைத்தால் நன்றாக படிப்பேன். ஏதேனும் ஒரு விளையாட்டிலாவது ஜொலிக்க முயல்வேன். பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க முயல்வேன். இவனெல்லாம் எங்க உருப்பட? என்ற வார்த்தையை பெரியவர்களிடம் கேட்காமல் வளர முயல்வேன். :) இக்கேள்விகளை இன்னும் நான்கு பேரிடம் கேட்கவேண்டுமென்று சொன்னார்கள். அந்த சுழல் கேளவிகளை நான் கேட்டிருந்தது

 Prakash Rajagopal Raj SuperRaj Sudhakar Kasturi Jayashree Govindarajan. இதில் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மட்டுமே பதிலளித்தார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன். :)