Wednesday, December 31, 2014

மோதியும் நிருபரும்..(குஜராத் கலவரத்தை முன்வைத்து)

இவரும் அரசியல்வாதிதான்.. மாநில முதலமைச்சர்தான்.. இவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.. எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவசியமின்றி வாய்தா எதுவும் கேட்கவில்லை. வழக்கை முழுமையாக சந்தித்தார். அவரை முழுதும் வீழ்த்திவிட அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பொய்சாட்சிகளை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்ல வைத்தனர். அத்தனையையும் உண்மையால் வென்று மோதி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மக்களும் அவரை பிரதமர் ஆக்கினார்கள். அதன் பின்னரும் இந்த காசுக்கு குரைக்கும் மீடியா நாய்கள் விடாமல் அவரை துரத்துவது நடந்துகொண்டுதான் இருந்தது. 

அந்த நேரத்தில் ஒரு நிருபர் அப்ரண்டீஸ் மிகப்பெருந்தன்மையாக நடந்து கொள்ள அறிவுரை சொல்வதாக நினைத்து “ போனது போகட்டும், நடந்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன், மேலும் முன்னேறுவோம் என நீங்கள் ஏன் சொல்லக்கூடாது என மோடியைப் பார்த்துக்கேட்கிறார்.. 

அதற்கு மோடியின் பதில்...(ஆங்கிலத்தில்) நான் ஏதும் தவறு செய்திருந்தால் எனக்கு தண்டனை வேண்டும். ஒரு படி மேலேயே கேட்கிறேன்.. மேலும், இந்தியாவில் குற்றவாளிகளுக்கு வாய்ப்பளிக்காதீர்கள். அவர்களுக்கு தண்டனை கொடுங்கள். (இதன் பின்னர் ஹிந்தியில் பேசியது) மோதி தவறிழைத்திருந்தால், மோதிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீங்கள் ஏன் இந்த பாவிக்கு மன்னிப்பு வழங்கப்பார்க்கிறீர்கள் எனப்புரியவில்லை.அதில் உங்களுக்கு என்ன லாபம்? மோதியை ஏன் மன்னிக்கிறீர்கள்? நிச்சயம் (மன்னிக்க)கூடாது. மோதிக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். 125 கோடிப்பேர் பார்க்க இந்த ஆள் இப்படிப்பட்ட குற்றங்கள் இழைத்தார், அதனால் இந்த தண்டனை கிடைத்துள்ளது (எனத்தெரியும்படி தண்டனை வாங்கிக் கொடுங்கள்) அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு இன்னொருவர் இப்படி தப்பு செய்யாதபடிக்கு அப்படி செய்யுங்கப்பா...இப்படி மோதியை மன்னிக்கிற வேலையையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள்.. நேராகவே சொல்கிறேன். இப்படிப்பட்ட வேலையைச் செய்யாதீர்கள். (அதற்கு பதிலாக) என்.டி.டி.வியுடன் கைகோர்த்து மோதிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க பிரச்சாரம் செய்யுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 




 இந்தியாவுல எத்தனை அரசியல்வாதிகளுக்குய்யா இந்த தில்லும், திமிரும், முதுகெலும்பும் இருக்கு? இவருக்கு இந்த தில்லும், திமிரும், முதுகெலும்புள்ளவனின் பதிலுமாக இருக்க காரனம் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. 

Tuesday, December 30, 2014

தமிழக முக்கிய செய்திகள். (நவம்பர் 2014)


01. நாடாளும் மக்கள் கட்சியின் பல லட்சம் தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்த கார்த்திக்கால் தமிழக அரசியல் நிலவரமே மாறிவிட்டதாகவும், அவரை அதிமுக, திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் இணைய வ்ரும்படி தூது அனுப்பி இருப்பதாக கழுகார் / ஆந்தையார் / பூனையார் / எலியார் / பன்றியார் தெரிவிக்கின்றனர்.

02. வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரஸின் கோஷ்டிகளில் ஒன்று குறைந்ததாக காங்கிரஸ் கோஷ்டி மேய்ப்புக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இனி அவர் தனிக்கட்சி கோஷ்டி என்ற பிரிவின் கீழ் செயல்படுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. 

03. பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜன் புதுக்கட்சி வரவேற்புக்குழு தலைவராக தன்னிச்சையாக நியமித்தது செல்லாது என அறிவித்துள்ளது, தமிழக தமிழிசை எதிர்ப்புப்பிரிவு பாஜக. 

04. கரடியே காரித்துப்பிய கட்சிகளில் தாங்களே முடலிடம் என திமுகவும் ( பாமக மற்றும் மதிமுக கரடிகள் துப்பியதால்) நாங்களே என பாஜகவும் ( வாசன் கரடி துப்பியதால்) அறிவித்துள்ளன. 

05. மக்கள் முதல்வரே இன்னும் ஆட்சியில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் என்ற பதவி இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் ஏஜென்ஸியை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. 

06. அதிமுக தாடி வளர்ப்புக்குழுவின் தலைவராக திரு.ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது. 

07. நானே 2016ல் முதல்வர் என்ற சுப்ரமணியசாமியின் அறிவிப்பால் தமிழக பாஜக கோஷ்டிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகவும், அப்படி ஒன்று நிகழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே சு.சாமியை அமித்ஷா தூண்டிவிட்டதாகவும் டெல்லியில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

08. நாம் தம்ப்ளர், நாம் டபரா கட்சியும் தாங்களே முதல்வர் என்றும், டெபாசிட் கிடைக்கும் நிலை ஏற்பட்டால் மக்கள் முதல்வராக செயல்படுவோம் என சைமன் அறிவித்துள்ளார். 

09. அரசியல் அநாதைகளாக தாங்கள் ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம் என தாவீது பாண்டியன் அறிவித்துள்ளார், இருப்பினும் கோபாலபுரத்திலும், போயஸ் கார்டனிலும் ஒற்றர்களை அமைத்துள்ளதாகவும் கதவு திறந்தால் உடனே பாய்ந்து உள்ளே செல்லும்படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. 

10. யாருக்கு ஆதரவாக அறிக்கை விடுவது என விடுதலை உணர்வுடன் சிந்திப்பதாக வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். 

11. இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ”லட்சிய திராவிட முன்னேற்றக்கழக”த்தை புறக்கனித்துவிட்டு யாரும் ஆட்சியமைக்க முடியாது எனப்பாட்டுப்பாடி பேட்டி கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர். இதைச் சொல்லும்போது ராஜேந்தர் கண்ணீர் மல்க நின்றிருந்ததாகவும், என்னசார் தனியா நின்னு அழுதுட்டு இருக்கீங்க? என்று கேட்ட நிருபரிடம் How do you say, I am alone, I am a Green Tamilan, do you know? How do you say that I am alone,, ? இறுதியாக தமிழண்டா, தமிழண்டா, தமிழன் தமிழன் எனப் பல்வேறு மாடுலேஷன்களில் சொன்னதாக புதிய பறவை செய்தியாளர் அவரது பிளாக்கில் எழுதியுள்ளார். 11. 2016 நம்ம கையிலே, சந்திப்போம்டா தோளா நம்ம சட்ட சபையில என குருவி, கத்தி நடிகரும், ஜாதிவாரியாக உள்ள நடிகர்கள் அனைவரும் சொல்லி இருப்பதையும் தமிழகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

12. சமீபத்திய ஜாதி அரசியல் கட்சிகள் வெளியிட்ட மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்டிப்பார்த்த தமிழக மக்கள் தொகைக்கணக்கெடுப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஜாதிக்கட்சிகளின் கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள்தொகை இருப்பது தெரிய வந்துள்ளது. 

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தது.. வணக்கம்

Monday, December 29, 2014

7.83 ஹெர்ட்ஸ் - சுதாகர் கஸ்தூரி


தமிழில் அறிவியல் புனைகதைகளின் அரசன் என்றால் முதலில் சுஜாதா.

அவரது ஏன் எதற்கு எப்படி மக்களிடம் பெற்ற வரவேற்பும் இன்றும் விரும்பிப் படிக்கக்கூடிய புத்தகமாக இருப்பதற்கும் வாசகனின் தரத்துக்கு இறங்கி வந்து எழுதியதே. இதையே ஒரு குறையாகவும் அப்போது சொல்லிக்கொண்டிருந்தனர். 

அறிவியலை நீர்த்துப்போகச் செய்து வாசகனை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் என. என் இனிய இயந்திரா நான் வாசித்து அதிசயித்த முதல் சயின்ஸ் பிக்‌ஷன். அடுத்து மீண்டும் ஜீனோ. 

அந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரசித்து வாசித்தது சுதாகர் கஸ்தூரியின் 6174. முதலில் புத்தகத்துக்கு வெறும் எண்களை மட்டுமே தலைப்பாக வைத்து அது பெருவாரியான வரவேற்பைப்பெற்றதும் அதிசயமே. 

தமிழ் எழுத்துச் சூழலில் இப்படி தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ கணக்கு புத்தகம்போல என தாண்டிச் செல்வோரே அதிகம். அதன் நடையும், கட்டமைப்பும் மொழியும் வாசகர்களை பெரும் விளம்பரம் ஏதுமின்றியே தேடிச்சென்றடைந்தது. 

சுதாகர் கஸ்தூரியின் அடுத்த நாவல் 7.83 ஹெர்ட்ஸ். மனிதனின் எண்ன அலைகளை கட்டுப்படுத்த வசதியான ஓர் அலைவரிசை. அப்படி இந்த அலைவரிசைக்கு மனிதர்களை வரவைத்து அவர்கள் மூலம் நாசவேலைகளைச் செய்தலின் சாத்தியங்களை செயலாக்க முனையும் ஒரு குழு., அப்படி நடந்தால் என்ன மாதிரியான அழிவுகள் இருக்கும் என்பதையும் அவரது பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறார். 

கதையின் ஆரம்பம் பெங்களூரில் நடக்கும் ஒரு தீவிரவாதச் செயல். இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல. ஒரு வித்தியாசமான வாளின் கைப்பிடிதான் அந்த சம்பவத்தில் கிடைக்கும் முக்கியமான க்ளு. அதைவைத்துக்கொண்டு கதை முன்னேறுகிறது. கதை முடியும் முன்னர் குஜராத், தமிழ்நாடு, முன்னாள் ரஷ்யா, ஜப்பான், என பயணிக்கிறது. 

கதையில் எனக்குப் பிடித்த பகுதியாக நான் நினைப்பது அந்த நாகர்கோவில் பெரியவர் ஓநாய்களைப் பற்றிய தகவல்களை நாகர்கோவில் மொழியில் சொல்லிக்கொண்டே செல்லுதலும், ஒரு இடத்தில் ஓநாய்க்கூட்டத்தை சந்தித்ததை விவரிப்பதும். ஓநாய்கள் குறித்த தகவல்கள் மற்றும் மூளையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் அபாரம். படிக்க மிக சுவாரசியமான பதிவுகள். 

அதிகம் அறிவியலைச் சுற்றி இருந்தாலும் போரடிக்காமல் வாசிக்க வைக்கின்றன. ஏகப்பட்ட கதை மாந்தர்கள் சுற்றி வந்தாலும் அவர்களை இணைத்த விதமும் அருமை. கதையில் நடக்கும் சிறு சம்பவங்களுக்கும் கதையில் ஓரிடத்தில் விளக்கம் இருக்கிறது. அதை சேர்த்த விதமும் அருமை. 

செசன்யா, துருக்கி, ரஷ்யா இந்தியா மற்றும் இந்தியாவின் காடுகள் என கதை சுற்றினாலும் எல்லாவற்றையும் இணைக்கும் ஒழுங்குதான் சுதாகர் கஸ்தூரி அவர்களின் எழுத்து ரகசியம். தமிழில் சொல்லப்பட்ட இன்னொரு அருமையான அறிவியல் புனைகதை. 

தமிழ்ஹிந்துவில் வெளியான விரிவான விமர்சனம் இங்கே

Sunday, December 28, 2014

வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள்..

ஐந்து இந்திய மீனவர்கள் கைதும், விடுதலையும் இலங்கை மற்றும் இந்திய அரசும் போடும் நாடகம்.. வைகோ. (12.11.2014)

வைகோ போன்றோர் எதற்காக அரசியலில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. திமுகவில் இருக்கும்போதும், வெளி வந்தபோதும், தனிக்கட்சி தொடங்கியபோதும், கட்சி பாக்கியில்லாமல் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்தபோதும், நீங்கள் செய்ததற்கு பெயர் என்ன மிஸ்டர் வைகோ? 

ஒரு கூட்டணியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை இந்திரன், சந்திரன் என புகழ்வதும், வெளியேறியவுடன் ஒருமையில் பேசுவதும் என்ன வகையான நாடகம் வைகோ? சுயநினைவுள்ள ஒருவன் செய்யும் காரியங்களா நீங்கள் செய்வது.? 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்திய மீனவர்கள் அனுதினமும் செத்துக்கொண்டிருந்தபோதும், கைதாகிக்கொண்டிருந்தபோதும் வெற்றுக்கூச்சல்களையே உங்களால் போட முடிந்தது. கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். 

இன்றைக்கு மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் கொள்கையால் மீனவர்கள் கைதாவது நின்றும், சுடப்படுவதும், சூறையாடப்படுவதும் நின்றபின்னரும் மத்திய அரசாங்கத்தையும், மோதி ஜியையும் வாய்க்கு வந்தபடி பேசுவது யாரைக்குளிர்விக்க? விசா கொடுங்கள், நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் எனச் சொல்கிறீர்களே, கைதானவர்கள் அங்கே அவர்களின் பாட்டி வீட்டில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? 

இலங்கைத்தமிழர் குறித்து உங்களைப்போன்றவர்கள் வாய் திறக்காமல் இருப்பதே அங்குள்ளவர்களுக்கு நல்லது எனவும், இங்கு இருக்கும் இலங்கை அதிகளை திருப்பி அனுப்புங்கள் என திரு.விக்னேஸ்வரன் கேட்கும் அளவில் இருப்பதே இந்தியாவில இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லும் மக்களின் லட்சனத்தைச் சொல்லும். 

கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டோர். உண்மையோ, பொய்யோ, ஆனால் கைதுசெய்திருப்பது ஒரு அரசாங்கம், வழக்கு நடந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு. இருப்பினும் பொது மன்னிப்பு வாங்கித்தரும் அளவு இந்தியாவுக்கு செல்வாக்கு இருக்கிறது, இது தவறான முன்னுதாரனத்தை ஆரம்பித்து வைக்கும் என்றாலும் எனக்கு மீனவர்கள் திரும்புவதில் மகிழ்ச்சியே. 

இன்றைய சூழலில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்களிடம் இருக்கும் பெரும் செல்வம் நல்ல தமிழ். அதைக்கொண்டு தமிழகத்தில் தமிழை வளர்க்க பாடுபடுங்கள். தமிழின் உன்னதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். வெற்றுக்கூச்சலை நம்பி ஓட்டுப்போடும் கூட்டமல்ல இன்றைய தமிழ் மக்கள் என்பதை உணர்ந்தால் உங்களுக்கு நல்லது. 

You have lost all your respect and credibility Mr.Vaiko, please go home.... and save your face. People are not as foolish as you think. Need an example? see your election results and political journey.. You have been continuously thrown in the corner for more than a decade.

12.11.2014ல் ஃபேஸ்புக்கில் எழுதியது.

Saturday, December 27, 2014

ஹிந்தி ஒழிக?

90 களில் வேலை செய்த இடங்கள் ஆந்திரா கர்நாடகா உத்திர பிரதேசம்.

 கற்ற மொழிகள் பேச்சு தெலுங்கு, பேச்சு ஹிந்தி, பேச்சு உருது, 

நான் பேசிக்கொண்டிருந்த கன்னடம் எவ்வளவு பிழைகள் மலிந்தது எனத்தெரிந்து குறைந்தபட்சமாக அவர்கள் பேசுவதை சரியாக புரிந்துகொள்ள கற்றது இருந்த உடைந்த ஆங்கிலம் சரியானது. 

கிடைத்த பயன்கள்.. தெலுங்கு தெரிந்த ஒரே காரனத்தினால் ஸ்டெர்லிங்க் ட்ரீ மேக்னத்தில் ஆந்திராவின் விஜயநகரத்தில் பிளாண்டேஷன் சூப்பர்வைசர் வேலை. ( 92ல் 3500 ரூபாய் சம்பளம், அப்போது விவசாய டிப்ளொமா படித்தோருக்கு கிடைத்த அதிகபட்ச சம்பளம் 2500 ரூபாய்) ஹிந்தி / ஆங்கிலம் / தென்னிந்திய மொழிகள் தெரிந்ததால் முதன்முறையாய் வெளிநாடுக்கு விமானம் எறினேன். 

தமிழ்தான் எனக்குப் பிடித்த மொழி. ஆனால், இதர மொழிகள் தெரிந்திருந்தது வாழ்க்கையில் உயர மிக உதவியது. 

தமிழே சொல்லித்தராமல் ஹிந்தியை மட்டுமே புகுத்தும் முயற்சியை நான் வன்மையாக கண்டிப்பேன். அதேபோல, தமிழுடன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வாய்ப்புக்கிடைப்பதை தடுக்கும் மூடர்களையும் நிச்சயம் எதிர்க்கிறேன். 

ஹிந்தி தெரிஞ்சா ஏன் வடநாட்டான் இங்கே வந்து பானிபூரி விற்கிறான் என எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாய் பேசும் மக்களுக்கு, ஹிந்தி தெரியாமல் வடநட்டில்போய் ஹிந்தி கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியோர் பலர். 

”கற்ற வித்தை காலத்திற்குதவும்” என்பதையும் நம் தமிழ்நாட்டு முன்னோர்கள்தான் சொல்லிச் சென்றார்கள் என்பதை ஞாபகத்தில் கொண்டால் ஹிந்தியை இப்படி கண்மூடித்தனமாக எதிர்க்க மாட்டோம். இனி அவரவர் பாடு....

Friday, December 26, 2014

Qatar National Day (18.12.2014)

2004 நவம்பரில் 15 நாள் வேலையாக மஸ்கட்டிலிருந்து தோஹா - கத்தார் வந்து சேர்ந்தேன். வந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு பம்பரமாய் சுற்றியதில் ஊர் பிடிபட்டு விட்டது. மஸ்கட்டில்தான் எனக்கு வேலை என்றாலும் ஆன் அரைவல் விசாவிலேயே 6 மாதங்களுக்கு மேலாக கழித்து வந்தேன். விசா காலாவதியாகும்போது பஹ்ரெய்னுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுத்து போகும் விமானம் திரும்பிவரும்போதே வந்துவிட்டால் அடுத்த 28 நாளைக்கு கவலையில்லை. 

மகா மோசமான சாலைகள், போக்குவரத்து விதிகளை மதிக்காத கத்தாரிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லாத லேபர் டிபார்ட்மெண்டுகள், யார்மீது தப்பிருந்தாலும் உள்ளூர் கத்தாரிகளுக்கே சப்போர்ட் செய்யும் போலிஸ் என மூன்றாம்தர அரபு நாடாகத்தான் எனக்கு கத்தார் தெரிந்தது. 

2006 டிசம்பரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகளை கத்தார் நடத்த வாய்ப்பு பெற்றிருந்தும் 2006ம் ஆண்டு செப்டம்பர் வரை எந்தவித முன்னேற்றமும், வசதி வாய்ப்புகள் எதையும் செய்யாமல் இருந்தது. திடீரென முழித்துக்கொண்டு செப்டம்பர் முதல் நவம்பர் இறுதிக்குள் ஏனோ, தானோ என சாலைகளும், மானாவாரியாக ரோட்டை தோண்டி எடுப்பதுமாக என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் வேலை செய்து ஒருவழியாக டிசம்பர் 1, 2006ல் ஓப்பனிங் செரிமொனியில் ஒர் கலக்கு கலக்கினார்கள். 

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் முடிந்த பின்னரே கத்தாரை இப்படியெல்லாம் முன்னேற்ற முடியாது என எண்ணி முழுத்திட்டங்கள் தீட்டி சாலைகளும், பாலங்களும், வசதி வாய்ப்புகளும், கனினி மயமாக்கங்களுமாக கத்தார் கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னால் நிமிர ஆரம்பித்தது. அழுது வடிந்துகொண்டிருந்த போலிஸ் துறை மிக நவீனமயமாக்கப்பட்டு கத்தாரின் எந்தப்பகுதியில் விபத்து நடந்தாலும் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் தரைவழியாகவோ, இல்லை ஆகாய மார்க்கமாகவோ சென்றடைய திட்டம் தீட்டி செயலும் படுத்தினர். நம்மூர் பையன் இந்த ஏர் ஆம்புலன்ஸால் காப்பாற்றப்பட்டான். பின்னர் சிவில் கேஸ்களை கவனிக்க தனி போலிஸ், போக்குவரத்துக்கென தனிப்போலிஸ், அவசரங்களை மட்டும் கவனிக்க தனி போலிஸ், தீயனைப்புக்கென தனிப்போலிஸ் என ஏரியா பிரித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. தயவு தாட்சன்யம் இன்றி சாலை விதிகளை மீறுவோர்க்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் வியாபாரம் நடத்துவதற்கான சூழலை நன்றாக்கினார்கள். இருப்பினும், விசாக்கள் பெறுவது எப்போதும் சிக்கலான காரியமாகவே இருந்து வருகிறது. 

இத்தனை வளர்ச்சிக்குப்பின்னரும் அடிப்படைவாத இஸ்லாம் கண்ணுக்குத்தெரியாமல் ஆனால் தெளிவாக இருந்து வந்தது. 2008 வாக்கில் கொஞ்சம் சரியானது. இப்போது அவ்வளவாக பிற மதத்தினருக்கு கெடுபிடிகள் இல்லை. 2020ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த உரிமை பெற்றுள்ளது, கத்தார். அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. நிச்சயம் சிறப்பாக செய்து முடிப்பார்கள். இத்தனை வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தொழிலாளர் நலன் மட்டும் இன்னும் அத்தனை முன்னேற்றம் அடைந்துவிடவில்லை. இன்றும் எக்ஸிட் எனப்படும் ஸ்பான்சரின் ஒப்புதலின்றி நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. எத்தனை கொடுமையான முதலாளியாக இருந்தாலும் வேறு கம்பெனிக்கு எளிதா மாறும் வாய்பில்லை. அங்கு வேலை செய்வோர் குடும்பத்தை அழைத்து வந்து கத்தாரில் வாழ்வது அத்தனை எளிதில்லை. பணக்காரர்களின் தேசமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

இன்று (18 December 2014) அதன் நேஷனல் டே எனப்படும் தேசிய தினம். நான் பார்த்த ஒரு கிராம ஏர்போர்ட் போல இருந்த தோஹா ஏர்போர்ட் இன்றைக்கு ஹமது இண்டர்நெஷனல் ஏர்போர்ட்டாக பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது. வளர்ச்சிகளுக்கு வாழ்த்தும் இந்நேரத்தில் கத்தார் அதன் வளர்ச்சிக்கு காரனமான வெளிநாட்டவர் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பது எனது ஆசையும், அவர்களது தார்மீக கடமையும் கூட.

Published in Face Book on 18th December, 2014

Thursday, December 25, 2014

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது.

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..(தமிழ்நாட்டுலதான்) உலகின் எந்தக் கம்பெணி தொழில் தொடங்க வந்தாலும் அது சென்னையைத்தாண்டுவதில்லை.. அதிகபட்சம் திருச்சி தெற்கு தமிழகத்தில் குடிக்க தண்ணீரோ, மின்சாரமோ இல்லையெனில் கேட்க நாதியில்லை.. ஆனால், வடக்கிலோ கிட்டத்தட்ட 24 மணிநேர குடிநீர், தடையற்ற மின்சாரம். தென் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வக்கில்லை, ஆனால் வடக்கு தமிழகத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஆடம்பர விழாக்கள் நடத்த தடையில்லா மும்முனை மின்சாரம். சிங்காரச் சென்னையாம், ஆனால் மதுரை மட்டும் இன்னும் அதே குப்பைக்கூளங்களுடன். கட்சித்தலைமைகள் பலத்தைக் காட்டனுமா, ஓடு மதுரைக்கு.. புதுக்கட்சி ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு.. புதுப்படம் ரிலீசானா ரிசல்ட் தெரியனுமா, மதுரையைக் கேளு,. புதுசா செய்தித்தாள் ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு ஆனா, கரண்டு, தடையில்லா குடிநீர், அமைதியான சூழல், சட்டம் ஒழுங்குக்கு தெந்தமிழக மக்கள் சாலைக்கு வந்தாலும் மதுரைக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே, திருச்சி மற்றும் திருச்சிக்கு தெற்கே உள்ள தமிழகத்தை மதுரை நாடு என பிரித்து வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவன், மாமதுரை நாட்டினர் (இது நகைச்சுவை பதிவல்ல.. )

Wednesday, December 24, 2014

ஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு

திண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந்து நத்தம் போகும் வழியில்
தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் ஒரு கும்புடு போட்டுச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் தாடிக்கொம்பு மக்களே அப்படி ஒரு பெருமாள் கோவில் இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார்கள், பஞ்சத்தில் அடிபட்ட பெருமாள் கோவிலாக இருந்தது. அப்படி யாருமே செல்லாத கோவில் அது. இத்தனைக்கும் அருமையான சிற்பங்களைக்கொண்ட வசந்த மண்டபம் உண்டு. கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டும் வந்து மன்மதன், ரதி சிலைக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். அருகிலிருக்கும் அழகிய சிற்பங்கள் கண்ணிலேயே படாது. :)

ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கிருக்கும் அர்ச்சகரிடம் சொல்லிவிட்டு சக்கரத்தாழ்வார் சன்னிதி செல்லும் வழியில் புதர் மண்டியிருப்பதை சுத்தம் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு 3 வாரங்களில் சுத்தம் செய்து கொடுத்தேன். அர்ச்சகருக்கும் மிகுந்த சந்தோஷம். இந்தக்கோவிலையும் மதிச்சி ஒருத்தன் வாரான், மேலும் கோவிலுக்கு உழவாரப்பணி செய்யவும் முன்வருகிறானே என. அதற்கு பிரதிபலனாக நின்ற பெருமாளுக்கு 10 அடிதூரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல அனுமதிப்பார், சனிக்கிழமைகளில். நானும் வாராவாரம் காலையில் சாப்பிடாமல் வந்து சகஸ்ரநாமம் சொல்லிவிட்டு,பின்னர் தாடிக்கொம்பிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வேன். 

கோவிலுக்கு எப்படி மக்களை வரவழைப்பது என்பது அங்கிருந்த அர்ச்சகரது கவலையாக இருந்தது. இத்தனை தேஜஸான பெருமாள், அழகிய சிற்பங்கள், அருமையான சூழலில் அமைந்த கோவிலாக இருந்தும் யாரும் வருவதில்லை என்ற கவலை அவருக்கு. யார்வந்தாலும், வராவிட்டாலும், பெருமாளுக்கு தினமும் விதவிதமாய் அலங்காரம் செய்வார். ஒருநாள் காய்கறிகளால் பெருமாளுக்கு அலங்காரம் செய்திருந்தார். அன்றைக்கு பெருமாள் அப்படி ஒரு அழகாக இருந்தார். திண்டுக்கலில் ஃபேமஸாக இருந்த துணிக்கடை எஸ்.கே.சீஸ் (இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன்) அதன் முதலாளி தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது நானும், என் கல்லூரி சீனியரும் அப்போதைய எனது பாஸுமான ரமேஷ்குமார் அண்ணனும், அர்ச்சகரும் இருந்தோம். பெருமாளின் அலங்காரத்தைக்கண்டு அசந்துபோய் நீண்ட நேரம் சன்னிதி முன்பு அமர்ந்துவிட்டுச் சென்றார். அதற்கு அடுத்தவாரமே சனிக்கிழமை மிகப்பெரிய திருவிழா அளவுக்கு அலங்காரங்கள் செய்ய உபயமும், பிரசாதத்துக்கு ஏற்பாடும், ஒரு சிறு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்தார். 

திண்டுக்கல் மக்களுக்கு தங்களுக்கு இத்தனை அருகில் இப்படி ஒரு கோவில் இருப்பதே அப்போதுதான் கண்ணுக்கு தெரிந்தது. அதன் பின் நான் 100 அடி தள்ளி அமர்ந்துதான் சகஸ்ரநாமம் சொல்லும்படி ஆனது. அவ்வளவுதூரம் மக்கள்கூட்டம். பெருமாளுக்கு கூட்டம் அம்ம ஆரம்பித்தது. 

ஒருகாலத்தில் கேட்க நாதியில்லாத கோயிலில் பார்க்கிங் டிக்கெட் போடும் அளவு கார்களும், பைக்குகளும். அடுத்து கோவிலின் உள்ளே வலது பக்கம் இருந்த ஒரு பைரவர் சிலைக்கு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் என ஒரு போர்டு மாட்டினார். தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். எஸ்கேஸி உபயத்தில் சில வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் எஸ்கேஸி முதலாளியே அபிஷேகம் செய்ய சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் நீங்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இப்போது பெருமாளுக்கு இணையாக ஸ்வர்ண ஆகர்ஷன பைரவருக்கும் மக்கள் கூட்டம். இந்த வசதிவேண்டி அம்மும் கூட்டம் மறந்துபோனது அங்கிருக்கும் அழகான சிற்பங்கள். 2008 வாக்கில் வீட்டுக்காரம்மாவை அழைத்துச் சென்றிருந்தேன் இந்தக்கோவிலுக்கு, கொஞ்சம் ஆன்மீகம் இல்லாத்தன்மையாக தெரிந்தாலும் என் அனுபவத்தில் இந்தக்கோவிலிலும், கல்லுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் உழவாரப்பணிகள் செய்த சில மாதங்களிலேயே சம்பந்தமே இல்லாமல் வெளிநாடு வேலைக்கு தேர்வானேன். (மிகப்பெரிய கூட்டத்தில் நான் தேர்வானது ஒரு அதிசயம்) 

இன்று ராமச்சந்திரன் உஷா எழுதிய பதிவில் இருந்த ”பைரவர்” என்ற வார்த்தை இந்த ஞாபகங்களைக் கிளறிவிட்டது. வாய்ப்புக்கிடைத்தால் தாடிக்கொம்பிலிருக்கும் அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாளையும், தாயாரையும், ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். சாம்பிளுக்கு ஒரு சிற்பத்தின் படம். 


கோவில் குறித்த தகவல்களும், சிற்பங்களின் படங்களையும் இங்கு காணலாம். http://thadicombu-sri-soundararaja-perumal.blogspot.com/

Tuesday, December 23, 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)

 ..... ராசி நேயர்களே.. ( உங்க ராசியை கோடிட்ட இடத்தில் நிரப்பி வாசிக்க ஆரம்பிக்கவும்) 

இந்த சனிப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பொதுவாக நல்லதே பெரும்பன்மையாக நடக்கும். சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், பகைவர்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் வலிமையான பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம். மேலும், தேவையில்லாத சண்டைகள் உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். 

பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருப்போர் கவலைகொள்ள தேவையில்லை. எத்தனை அடி வாங்கினாலும் உங்களை எல்லோரும் “நல்லவண்டா” எனப்புகழக்காண்பீர்கள். 

தொழில் மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கியமாக கடின உழைப்பும், நாட்டு நிலவரத்தையும் நன்கு தெரிந்திருத்தல் நல்லது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். 

குழந்தைகள் மூலம் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. அவர்களை கண்டிப்பதன் மூலம் உங்கள் மரியாதைக்கு பங்கம் வர வாய்ப்புண்டு. எனவே கவனம். 

காசு, பணம் விரயமாகும் காலமிது. எனவே இருக்கும் பணத்தில் கத்தி, கபடா போன்ற படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வதை தவிர்க்கவும். 

பெண்களுக்கு :- கனவர்கள் கைக்குள் அடங்கி இருப்பார்கள். மாமியார்களால் மற்றும் நாத்தனார்களால் தொல்லை உண்டு. அனுசரித்துப்போவது நல்லது. மாமியாருக்கு பிடித்த சீரியல் பார்க்க தினமும் அரைமணிநேரம் ரிமோட்டை தருவது நல்ல பலனை தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீண்ட நாட்களாக மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். 

மாணவர்களுக்கு:- நன்றாக படித்தால் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு. தினமும் சரஸ்வதி ஸ்லோகம் சொல்லிவர படிப்பும், பெற்றோர்கள் சொல்வதைக் கேட்க நல்லபிள்ளை எனப் பெயர் வர வாய்ப்புண்டு. 

உத்யோகத்தில் இருப்போர்களுக்கு :- கடும் உழைப்பு நல்ல பலனைத்தரும். சட்டத்திற்கு உட்படாத காரியங்களை செய்ய வேண்டாம். லஞ்சம் வங்குவதை எப்போதும் தவிர்ப்பது கடமை என்றாலும் நமநமக்கும் கையை அமுக்கி வைத்துக்கொள்வது வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும். 

எல்லோருக்குமான பொதுப்பலன்கள் :- தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவைக் குறைத்தால் சேமிப்பு வளரும். அண்ணன் தம்பி உறவு வலுப்பட மனைவியரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டாம். அக்காள் தங்கைகள் பொறாமைப் படுவதைக் குறைக்க வேண்டிய நேரமிது. 

சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள்ளோதரை படையலும், நல்லெண்ணெய் விளக்கும் இட்டு வழிபட்டால் சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். சுபம்.

ஆண்டாள் கிளியின் கண்கள் - ராமச்சந்திரன் உஷா

மத்திய கிழக்கு வாழ்க்கை அல்லது ”காக்காப்பொன்” 

மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய கம்பெனிகளின் கேம்புகளில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் தங்கி இருப்பார்கள், பல அடுக்குகளில். அப்படிப்பட்ட கேம்புகளில் அவ்வப்போது கேள்விப்படும் விஷயமாக / முதுகுக்கு பின்னால் பேசும் விஷயமாக இருக்கும் இது. ஊர்ல இருந்து வந்து ஒருவருஷத்துக்கு மேல ஆகப்போகுது, குழந்த பொறந்துருக்குனு லட்டு தாராண்டா என லட்டு கொடுத்தவனை கேவலமாக பேசும் கும்பல் உண்டு. 

என்னுடன் வேலை பார்த்த ஒருவனின் மனைவியைப்பற்றி மிக மோசமாக வதந்திகள் உலவவிடப்பட்டதுண்டு. இத்தனைக்கும் அவனுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 1 மாதம் லீவ் என்று வேலைபார்த்தவன் / ஊருக்கு சென்று வருபவன். 

வெளிநாட்டில் வேலைபார்ப்பதாலேயே ஆடம்பரமாக இருக்க நினைப்போரின் சிக்கல்கள், போலி பெருமை எல்லாம் தொட்டுச் செல்கிறார். 

”ஆண்டாள் கிளியின் கண்கள்” என்ற தலைப்பில் Ramachandran Usha எழுதி தினகரன் - வசந்தம் இதழில் வெளிவந்த தொடர் மத்திய கிழக்கில் வாழும் பலருக்கு நெருக்கமானதாக தோன்றும். 

”அவனுக்கென்னடா, வெளிநாட்டுல சம்பாதிக்கிறான்” என உள்ளூரில் இருந்துகொண்டு பேசும் நண்பர்களுக்கும் மத்திய கிழக்கில் இருப்போரின் வலி புரிய வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். 

இரு பகுதிகளுக்குத்தான் பதிந்திருந்தார். மீதமுள்ளதை விரைவில் பகிர்வார் என நம்புகிறேன். ஆண்டாள் கிளியின் கண்கள் - முதல் பாகம் 

ஆண்டாள் கிளியின் கண்கள் - இரண்டாம் பாகம் 

Tuesday, July 29, 2014

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி திரைப்பட விமர்சனம் இட்லிவடை வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “நம்பக்கூடாத கடவுள் ” புத்தக விமர்சனம் இட்லிவடையில் வெளியாகி உள்ளது.

//முதலில் இந்தப்புத்தகம் நமக்குக்காட்டுவது நாம் இன்றுவரை கண்டிராத ஓர் கதவு. இதுவரை வெறும் ஹிந்துவாக, இந்தியனாக இருந்த நாம் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மைக் குறித்த உண்மையன பெருமையும், நமது தொன்மம் குறித்த மனவிலக்கங்களிலிருந்தும், நமக்கு போலி பகுத்தறிவுவாதிகளால் நம்மீது சுமத்தப்பட்ட குற்ற உணர்சியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

நமது கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் சரித்திரத்துக்கும் , மேலை நாட்டு நாகரீகம் என நம்பப்படும் போலிகளிலிருந்து நாம் எவ்வளவுதூரம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.//

முழு விமர்சனத்தையும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

12 Angry Men திரைப்பட விமர்சனம்

இட்லிவடையில் வெளியான 12 ஆங்க்ரிமென் விமர்சனத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

//1957ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப்படம்.
ஒரு சிறுவன் தனது தகப்பனை கத்தியால் குத்திக் கொன்றதை சாட்சியோடு நிரூபிக்கப்பட்ட ஒரு வழக்கு. 
12 பேர் கொண்ட ஜூரிக்கள் குழு அவர்களது கருத்தை ஒருமித்து அவன் குற்றவாளிதான் அல்லது குற்றமற்றவன் எனச் சொல்ல வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் விவாதமும் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.//

Tuesday, July 8, 2014

இன்றைய ஈராக்

இன்றைய ஈராக் என்ற பெயரில் இரு பாகங்களாக இட்லிவடை வலைத்தளத்தில் கட்டுரையாக எழுதினேன்.

அதன் சுட்டிகள் கீழே

இன்றைய ஈராக் முதல் பாகம்

இன்றைய ஈராக் இரண்டாம் பாகம்

ஜெயக்குமார்

Wednesday, June 11, 2014

மிதவை - நாஞ்சில் நாடன்


தண்ணீரில் மிதந்து செல்லப் பயன்படும் எதையும் மிதவை எனலாம். இது தவிர சாதாரனமாக மிதந்துகொண்டிருக்கும் எதையும் மிதவை எனலாம்.

வாழ்க்கை எனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் மக்கள்தான் இங்கு மிதவை எனப்படுகின்றனர். அவர்கள் நினைத்ததுபோலெல்லாம் பயணம் செய்ய இயலாது. அலை இழுத்துச் செல்லும் திசையில்தான் செல்ல முடியும். அதிர்ஷ்டமிருப்பின் நல்ல இடத்திலும், இல்லையெனில் சாக்கடையிலும் போய் விழுவோம்.

பம்பாய் எனும் மாபெரும் மனிதக்கடலுக்குள் தினமும் மேலும் மேலும் மக்கள் வெள்ளம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது. அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, குறிப்பாய் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை பம்பாய் செல்லாமலேயே நாம் அறிந்து கொள்ளமுடியும், மிதவை நாவல் மூலமாக.

சிறுவயதில் நான் படிக்கும் விதத்தைப் பார்த்து எனது அப்பா எபோதும் சொல்லும் ஒரு வசனம், மதுரை ராகவேந்திர விலாஸ்ல போயி சீனு அனுப்புனார்னு சொல்லு, டேபிள் கிளீனர் வேலை நிச்சயமா ராகவன் மாமா தருவார்ரா என்பது. ஆனால், மிதவையில் பட்டணத்திலிருந்து வரும் பெரியப்பாவின் கருனைக்காக, அவரது சிபாரிசுக்காக காத்திருக்கிறான். எந்தத் தகவலும் வராமல் போக, அப்பா உழும் நிலத்தின் உரிமையாளர் பம்பாய்க்கு அனுப்பி வைத்து விடு, அவனை எங்கையாவது உக்காத்தி வச்சிர்ரேன் என்று சொல்லும் உறுதிமொழியை நம்பி பம்பாய்க்குப் பயணமாகும் ஒரு கிராமத்தான சந்திக்கும் அனுபவங்களே கதை.

ஆனால், இது கதையா எனில் நாஞ்சில் நாடன் ஆம் எனச் சொல்லக்கூடும். ஆனால், இன்றைய பம்பாயின் நிதர்சனத்தை சண்முகம் மூலம் நமக்குச் சொல்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனது எண்ணங்கள் மாறுவதையும், எப்படி இருப்பதை வைத்து சமாளிப்பது என்பதைக் குறித்த சிந்தனையுடனே இருக்கிறான். நான் பம்பாயில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக ஒவ்வொரு ஏஜென்ஸியாக ஏறி அலைந்த காலம் ஞாபகம் வருகிறது. அப்பொது இருக்கும் காசுக்குள்ளேயே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் கூட சட்டைபையில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் சாப்பிடும் நாள் வாய்த்ததேயில்லை.

காலமெனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் சிறு மிதவையென சண்முகத்தை உருவகம் செய்து கதை சொல்கிறார். நாகர்கோவிலின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது என்னவாகப்ப்போகிறானோ என்ற எண்ணமும், பின்னர் சென்னையில் பெரியப்பாவின் வீட்டில் பெரியப்பாவின் உண்மையான உதவியின்றி இருக்கின்ற காலமும், பின்னர் திடீரென அய்யர் மூலம் கிடைக்கும் பம்பாய் பயண வாய்ப்பும், அப்படியே...

நாஞ்சில் நாடனின் எழுத்துகளில் மிக முக்கியமாக நான் உணர்வது அலங்காரமற்ற சுட்டெரிக்கும் உண்மையை பொட்டென போட்டு உடைத்து விடுவது.

கும்பமுனியாக இன்னொரு வேஷம் கட்டி அவர் எழுதிய எழுத்துகளும் அந்த வகையே. சமூகத்தைச் சாட நஞ்சில் நாடன் கட்டும் இன்னொரு வேஷம் கும்பமுனி.

மிதவையாக இருக்கும் சண்முகம் கரைசேர்ந்தானா என்பதே கதை. ஆனால், அவன் படும் அலைக்கழிப்புகள் எல்லாமே கெட்டும் பட்டணம் போய்ச் சேர்ந்த பலரின் வாழ்க்கைக்கதையாய் தெரிவதற்கு வாய்ப்புகளே அதிகம். சண்முகம் படும் பாட்டில் பெருவாரியானதை நானும் பட்டிருக்கிறேன், மும்பையில் இல்லாமல் ஆந்திராவிலும், கர்நாடகாவிலுமாக.

மிதவை : கஷ்டபட்டு முன்னேறிய அனைவருக்கும் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தது போலிருக்கும். அவசியம் வாசியுங்கள் என சிபாரிசு செய்வேன்.

விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த நாவல்.

Tuesday, June 10, 2014

ஆதிகாலத்து ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை

மதுரையில் ”ஆதிகாலத்து ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை” என ஒரு கடை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மீணாட்சி கோவிலின் கிழக்கு கோபுரத்திலிருந்து புதுமண்டபத்துக்குள் நுழைந்து வெளியேறினால் வலதுகைப்பக்கம் 3 வது கடை. (வலப்புறம் இருக்கும் கடையில் முதல் கடை) ஏனெனில் அருகிலேயே அதே பெயரில் அண்ணனோ, தம்பியோ கடைபோட்டிருக்கிறார்கள்.

அதன் ஸ்பெஷல் காராச்சேவு.. பட்டை வத்தலை அரைத்து காரத்துக்காக சேர்த்திருப்பார்கள். காரம் பிடிப்பவர்களுக்கு தேவாமிர்தம். பிடிக்காதவர்களுக்கு, காரமா என அலறுபவர்களுக்கு ஒரே ஒரு சேவு குச்சியை வைத்துக்கொண்டு ஒரு தட்டு சோற்றை உள்ளே தள்ளிவிடலாம்.

எனது அப்பாவுக்கு ”படுக்கார முத்தே” என்றழைக்கபடும் பட்டை வத்தல், பெருங்காயம், புளி சேர்த்து பிசைந்த சட்னி போன்ற வஸ்து பிடிக்கும். ஒரு துளி நாக்கில் எடுத்து வைத்தாலே கண்ணீர் மல்கும்.  அவரைப்போன்ற ஆட்களுக்கு இன்றுவரை அதன் சேவுக்காகவே அந்தக்கடையில் இருந்து வாங்கி வரச் சொல்வார்கள். போன ஜனவரியில் ஊரிலிருந்து எனது நண்பர்களுக்காக அரைக்கிலோ காராச்சேவு துபாய்க்கு கொண்டு சென்றிருந்தேன். ஒரே ஒரு சேவை வாயில் போட்டவர்கள் ஏய், என்ன இது பட்டவத்தலையே அரைச்சு சேவு மாதிரி செஞ்சிருக்காய்ங்களா என மதுரைக்கார நண்பரே கேட்டார். பின்னர் முழுதும் நானே வரும்போதும், போகும்போதும் தின்று தீர்க்க வேண்டியதாகிற்று.

வாய்ப்புக்கிடைத்தால் அவர்களின் சூடான அல்வா ஒரு வாயும், இந்த காராசேவையும் காம்ப்னேஷனாக வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.. வாழ்க்கைக்கும் மறக்காத சுவையாய் இருக்கும்.
2427LikeLike ·  · 

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்....

கல்லுப்பட்டியில் 80களில் வந்தஒரு ஆஸ்பத்திரியின் பெயர் சேவா ஆஸ்பத்திரி. பெயருக்கு உண்மையாக அன்றுமுதல் இன்றுவரை சேவை செய்துகொண்டிருக்கிறது.

80களில் 5 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்து அனுப்புவார். 

பேரப்பாத்துட்டு ஓசிக்கு வைத்தியம் பாக்குற ஆஸ்பத்திரின்னுல நெனச்சேன்னு சொல்ற கெளவிகளிடம் சரி, அடுத்தவாட்டி வந்தா காசுகுடுன்னு சொல்லி அனுப்பிருவார்.

மதியம் 2 மணிக்கு சாப்பிடச் செல்வார். அப்பவும் ஒரு சில கெளவிகளும், பெருசுகளும் அமர்ந்திருக்கும் ஆஸ்பத்திரி வாசலில். என்னான்னு கேட்டா பஸ்ஸுக்கு காசில்ல. வெயில்தாழ போலாம்னிருக்கேன்னு சொல்ற பெருசுகளுக்கு காப்பி வாங்கிக் குடுத்து பஸ்ஸுக்கும் காசு குடுத்து விடுவார்.

மறந்தும் இவ்வளவு காசு கட்டுனாத்தான் ஆஸ்பத்திரிக்குள்ள வரனும்னு சொல்ல மாட்டார். பிரசவம் எல்லாம் 99 சதவீதம் சுகப்பிரசவம்தான். கத்தி வைத்தல் கடைசி ஆப்ஷன் இந்த ஆஸ்பத்திரியில்.

இன்று சொந்தக்கட்டிடத்தில் இரு மாடிகளாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஊசி போட்டு மாத்திரை வழங்கி, சிரப்பு, டானிக் எல்லாம் சேர்த்து 75 ரூபாய் வாங்குகிறார்.

எங்களின் குடும்ப டாக்டரான இந்த குமரகுருபரன். அம்மா இறப்பதற்கு ஒரு மாதம் முன்னரே வீட்டுலையே வச்சிப் பாருங்க. நான் முடிஞ்சத செய்றேன்னார். நாங்கதான் அப்பல்லோவுக்கு கூப்டு போனோம். பொறப்ட உடனே சொல்லிட்டாரு. 1 மாசம் அல்லது 1.5 மாசம் வச்சி எல்லா டெஸ்ட்டும் செஞ்சிட்டு 5 லட்ச ரூபா புடிங்கிட்டு விடுவாங்க. ஆனா, உங்களுக்கு அம்மாவ நல்லா பாத்துகிட்டோம்கிற திருப்திதான் மிச்சமா இருக்கும்னார். அதுதான் நடந்தது.

யாருக்கும் அவர் பெயர் குரகுருபரன் என்பதுகூட தெரியாது. சேவா டாக்டர் என்ற பெயரில் மட்டுமே அறியப்படுகிறார்.

இன்றும் மரியாதை நிமித்தமாக ஊரில் சந்திக்கும் சிலரில் இவரும் ஒருவர்.

இவர் மனைவி டாக்டர் தாரகேஸ்வரியும் இவருடன் இணைந்து பணிபுரிகிறார்.

எதுக்கு இந்தக் கதையென்றால் +2 முடித்ததும் நான் டாக்டர் ஆகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என பேட்டியெல்லாம் கொடுக்காமல் உண்மையிலேயே சேவை செய்வதற்காக டாகடருக்கு படித்து சேவை செய்தவர்/ செய்பவர்.

கலில் ஜிப்ரான் வீடு மற்றும் அருங்காட்சியகம். (லெபனான் குறிப்புகள் - 2)

உலகமெங்கும் உள்ள மக்களால் விரும்பப்படும் மிஸ்டிக் (மிஸ்டிக் என்பதன் தமிழர்த்தம் என்ன?) கவிஞர், ஓவியர் மற்றும் தி ப்ராஃபெட் என்ற அழியா புத்தகத்தை உலகிற்கு அழித்த கலில் ஜிப்ரானின் வீட்டிற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று. கம்பெணி செலவில் இந்த ஆண்டு கைகூடியது.

புஷ்ஷேர் என்றழைக்கப்படும் கிராமத்தில் இருக்கிறது. அந்தக் கிராமம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1500 மீட்டர் உயரமான மலைமீது இருக்கிறது இக்கிராமம்.

உலகின் தலைசிறந்த கவிகளுக்கு என்ன நடக்குமோ அதுதான் இவருக்கும். பெய்ரூட்டிலிருந்து புஷ்ஷேர் என்ற ஊர் எனக் கேட்டுக்கொண்டேதான் செல்ல வேண்டியிருந்தது. கலில் ஜிப்ரான் பிறந்த ஊர் என வழிகேட்டதில் 3 பேர் மட்டுமே தெரியும் இப்படிப் போ என வழி சொன்னார்கள்.

முதலில் வீடு. இப்படி ஒரு அழகான வீட்டில் எதிர்த்தாற்போல பள்ளத்தாக்கும் இருக்கிறது. (தற்போது வீட்டின் எதிர்புறம் புதிய சர்ச்சொன்று கட்டப்பட்டுள்ளது)

எளிமையான ஆனால் அழகான வீடு. அந்தக்காலத்திலேயே டேபிள், மேசை வைத்து எழுதி, படங்கள் வரைந்திருக்கிறார். வீட்டில் நுழைந்ததும் வலதுபுறம் கட்டில். நேராக வரவேற்பறை, வலதுகோடி மூலையில் டேபிள் சேர்.

வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். அங்கே அவரது மார்பளவு சிலையை அரசாங்கம் வைத்திருக்கிறது. அவரது இல்லத்தை சுற்றிப்பார்த்த நேரம் முழுக்க என்னைத்தவிர வேறு யாரும் இல்லை, காவலாளி உட்பட. 


கலில் ஜிப்ரானின் வீட்டின் உள்ளே நுழைந்ததும் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது அவர் திராட்சை தோட்டங்கள் வழியாக அடந்து செல்லும்போது தாய்மார்கள் குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்கும்போது எப்படி இருந்திருப்பார் என மனது நினைத்துக்கொண்டே இருந்தது. நான் மனதில் வைத்திருந்த ஜிப்ரான் மறைந்து அங்கே படத்தில் இருந்த ஜிப்ரான் இடம் மாறிக்கொண்டார்.

வீடிருக்கும் சூழல் மிகவும் ரம்மியமாக, மிகக்குளிர்ச்சியாக, செடிகொடிகள் மற்றும் மரங்களுடன் இயற்கையுடன் இயைந்து இருக்கிறது, ஜிப்ரான் வாழ்ந்த காலத்தில் இந்த நாகரீக முன்னேற்றங்கள் ஏதுமின்றி, மின்சாரம் இன்றி மிகவும் ரம்மியமாய் இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

கொஞ்ச நேரம் அமர்ந்து அந்த மகிழ்ச்சியை முழுதும் அனுபவித்தேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு. இன்னும் இந்த கிராமத்தைப் பார்க்காத, கலில் ஜிப்ரானின் பெருமைகளை அறியாத இன்றைய தலைமுறை லெபனானிகள் இருக்கக்கூடும்.


பின்னர் அங்கிருந்து கிளம்பி அவரது பெயரில் இயங்கும் அருங்காட்சியகம் மற்றும் கல்லறைக்கு சென்றேன். அவர் இறக்கும்போது எங்கு. எப்படி புதைக்க வேண்டும், அவரது கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டே இறந்திருக்கிறார்.

அருங்காட்சியகம்.

ஒரு அருமையான அருங்காட்சியகம் எப்படி இருக்கலாம், இருக்க வேண்டும் என்பதற்கு கலில் ஜிப்ரானின் அருங்காட்சியகமும் ஒன்று. 8000 லிபான்கள் நுழைவுக் கட்டணம். (5.5 டாலர்கள்) கையேடு ஒன்றும் தருகிறார்கள், அதில் எந்தெந்த அறைகளில் என்னென்ன வைக்கப்ட்டுள்ளது, அதற்கான விளக்கம் ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. 

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடமே கொள்ளை அழகு. கோலப்பொடி செய்யும் கல்லால் ஆன மலை. அதைக் குடைந்து 4 அடுக்குகளில் 18 அறைகள் செய்து ஒவ்வொன்றிலும் அவரது பெயிண்டிங் மற்றும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் ஆகியன வைத்துள்ளனர். ஒவ்வொரு அறையிலும் இருக்கும் விஷயங்களுக்கும் தனித்தனி எண்கள் தரப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தின் கீழ் 3 என இருந்தால் அந்த அறை எண்ணை பார்த்து 3ம் நம்பரை வாசித்தால் அந்த புகைப்படம் பற்றிய விளக்கம் இருக்கிறது. கைடுகளே தேவைப்படாத அருமையான முயற்சி. கலில் ஜிப்ரான் போன்ற மிஸ்டிக்குகள் குறித்து காணச் செல்லும்போது கூட இன்னொருவர் இருப்பதே அசௌகரியம். இது நான் உணர்ந்தது. அருமையான புல்லாங்குழல் எல்லா அறைகளிலும் மெல்லிய சப்தத்தில் இசைக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் நாம் செல்லும்போது விளக்குகள் தானாகவே ஒளிர்கிறது. அருமையான லைட்டிங்குகள். உள்ளே கேமெரா கொடு செல்லவோ, படங்களை, ஓவியங்களை தொட்டுப்பார்க்கவோ அனுமதி இல்லை. கலில் ஜிப்ரான் கையால் வரைந்த ஓவியங்கள்.


தி ப்ராஃபெட் எழுத உந்துசக்தியாக இருந்தது அந்த குகைக்குள் வந்துகொண்டிருந்த மெல்லிய நீரோடை. அதை இன்றும் சிறப்பாக பராமரிக்கின்றனர். மிக மிக ரம்மியமான சூழல்.

ஜப்பானிய தூதரகம் இந்த அருங்காட்சியகத்திற்கு விளக்குகளும், சிசிடிவி கேமெராக்களையும் பொருத்திதந்துள
்ளது.

ஒரு குடைவரைக் கட்டிடத்தின் ஏதோ ஒரு மாடியில் நாம் மட்டும் தனியாக ஓவியங்களை மெல்லிய இசையுடன் காணும் அனுபவத்தை என்னவென்று சொல்வது. அதை அனுபவித்தால் நிச்சயம் வாழ்நாள் அனுபவமாக நிச்சயம் இருக்கும். 

அருங்காட்சியகத்தை நிர்வகிப்போருக்கு இந்தியாவில் இருந்து ஒருவன் இதைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனால், விதிகளை கொஞ்சம் தளர்த்தி எனக்கு சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார்.

கலில் ஜிப்ரானின் கல்லறை. :-

கிட்டத்தட்ட தரை மட்டத்திலிருந்து இரண்டு அடுக்குகள் கீழே உள்ளது கல்லறை. அவர் இறுதிக்காலத்தில் குகையாக இருந்த இப்பகுதியில் தங்கி படங்கள் வரைந்திருக்கிறார். தீர்க்கதரிசி புத்தகம் எழுதுவதற்கான உத்வேகம் இந்த மலைக்குகைக்குள்தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. 

கீழே கல்லறையில் அவர் கல்லறையில் எழுதச் சொன்ன வாசகங்களை ப்ரொஜெக்டர் மூலம் சுவற்றில் விழச் செய்துள்ளனர். (படங்களில் இருக்கிறது) 

கல்லறை திறந்தவாறே உள்ளது. கல்லறையின் உள்ளே அவரை வைத்து மூடி வைத்துள்ள பெட்டியை நாம் காணலாம். கீழே அதிகக் குளிர் என்பதால் ஹீட்டர் மூலம் அறையின் தட்பவெப்பத்தை சீராக வைத்துள்ளனர். 

சில படங்கள் கல்லறையின் உள்ளே எடுத்துக்கொண்டேன். கீழே கல்லறையில் இருக்கும்போது யாரோ சுவற்றில் சாய்ந்து நிற்பதுபோல ஒரு நிழல் சுவற்றில் விழுந்தது. ப்ரொஜெக்டர் மூலம் விழச்செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதைக் கேட்டு அவர்கள் ஆமாம் எனச் சொன்னால் நான் இழந்த அந்த சில விநாடிகள் பரவசத்தை இழந்துவிடுவேன் என்பதால் கேட்கவில்லை. (படங்களில் இருக்கிறது)

கிட்டத்தட்ட நீண்டகால நண்பனொருவனை வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதோ என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை இன்று அனுபவித்தேன். 14.05.2014 என் வாழ்க்கையில் பொன்நாள்..


படங்களைக் காண இங்கே சொடுக்கவும். 

லெபனான் குறிப்புகள் -1

ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக லெபனானி ரொட்டியில் ஜத்தர் மற்றும் வெங்காயம், தக்காளி சேர்த்தரைத்துச் சேர்த்த ஒரு பசையை தடவி தரும் ரொட்டி இருந்தது. அதை மதிய உணவாக எடுத்துக்கொண்டேன்.

எனது நண்பர் ஒருவர் டவுண்டவுன் பெய்ரூட் அருமையாக இருக்கும் அவசியம் சென்று வாருங்கள் எனச் சொல்லி இருந்தார். அதனால் முதலில் டவுண்டவுன். நம்மூர் ஷேர் ஆட்டோ போல இங்கே ஷேர் டாக்ஸி கிடைக்கிறது. அதி என்னுடன் ஒரு சிரிய பெண்ணும் பயணம் செய்தார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்ததால் எங்கு இறங்கினால் டவுண்டவுனை முழுதும் கவர் செய்யலாம் எனக் கேட்டு இறங்கிக்கொண்டேன். அவர் சொன்னது மணிக்கூண்டு இங்கே பிரசித்தம். அப்படியே சுற்றி உள்ள பகுதிகள் குறிப்பாய் பார்லிமெண்ட்500 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எல்லாம் உள்ளது பாருங்கள் என்றார்.

முதலில் லெபனானில் பிடித்தது சுத்தம். கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் சுத்தத்தையும், அமைதியையும் பேனுகிறார்கள். ( நான் இன்று பார்த்த வரையில்) தாங்கள் அராபியர்கள் என்ற எண்ணமோ, அதற்குண்டான வெட்டி திமிரோ இல்லாமல் இருக்கின்றனர். 90% மக்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியுமாம். எனக்கு தெரியாததால் சோதிக்க முடியவில்லை. 

ஒரு டாலருக்கு 1500 லிபான்கள். (லெபனான் பணம்) ஈராக்கும், ஈரானும்தான் மகா மோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். லெபனானும் இந்த லிஸ்ட்டில்தான் உள்ளது. (பொருளாதாரம் அதளபாதாளத்தில்)

சாலைகள் அனைத்தும் ஐரோப்பாவையே நினைவு படுத்திக்கொண்டிருந்தன. நகருக்குள் பெரும்பாலும் 2 வாகனங்கள் செல்லும் வழி மட்டுமே. (2+2) 


தெருக்களுக்குள் இருவழிச்சாலை. ஆனால், எல்லோரும் கார்களை சாலையில்தான் நிறுத்துகிறார்கள். அதனால் எப்போதும் நெரிசல். 

போக்குவரத்து விளக்குகள் பல இடங்களில் அரைக்கிலோமீட்டருக்கு ஒன்று என்ற அளவில் இருக்கிறது. மொத்த பெய்ரூட்டில் பாதிக்கு மேல் மலைகளின்மீதே அமைந்துள்ளது. அங்கேயே சாலை, மின்சாரம், குடிநீர் எல்லாம் கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மால்கள் வரை, பள்ளிகளிலிருந்து, ஆஸ்பத்திரி, போலிஸ் ஸ்டெஷன்வரை எல்லாம் உண்டு.


இன்றைய ஊர் சுத்தலில் நம்முர் பையன்கள் மூவரை சந்தித்தேன். கட்டிட வேலைகள் செய்கிறார்கள். என்ன சம்பளம் எனக் கேட்டு அவர்கள் மனதை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அருகில் ஏதும் டீக்கடை இல்லை. எனவேகொஞ்சநேரம் ஊர்க்கதை பேசிவிட்டு கிளம்பினோம். மூவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள். 

500 ஆண்டுகள் பழமையான தேவாலயம்..

500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தேவாலயம் சிதலமடைந்து இருந்ததை சரி செய்திருக்கிறார்கள். பழைய தரை, மற்றும் சுவர்களை எங்கெங்கு அப்படியே பயன்படுத்த முடியுமோ அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். நம்மூரில் யேசுநாதர் ப்ரும்பாலும் சிலுவையில் மட்டுமே தொங்குகிறார். கொஞ்சம் நல்ல படமாக இருந்தால் தலையில் முள்கிரீடத்தை வைத்து விடுகிறார்கள். ஆனால், இங்கே யேசுநாதர் ராஜா கோலத்தில் இருக்கிறார். பாதிரியாரிடம் இப்படி படங்களை எங்கள் நாட்டில் பார்த்ததில்லையே எனச் சொன்னேன். அவர் யேசு கஷ்டப்பட்டது உண்மை. ஆனால், அவர் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா. எனவேதன் அவரை அரசர் கோலத்தில் வரைந்திருக்கிறார்கள் அந்தக்கலத்தில் என்றார். அதே தேவாலயத்தில் சிலுவையில் தொங்கும் யேசுநாதரும் இருந்தார். ஆனால் அவர் முதன்மையானவர் அல்ல அங்கே. ராஜாகோலம் உள்ள யேசுநாதருக்கே மூலஸ்தானம். 

அதே தேவாலயத்தின் பின்புறம் மரியத்துக்கும் தனி சாப்பல் உள்ளது. ரோமானியர்கள் காலத்தில் வரையப்பட்ட சில படங்களை (பீட்டர், பால் போன்றோர்) யும் வைத்திருக்கின்றனர். படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால், நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட தேவாலயங்களை தேடிப்போய் பார்ப்பது என் வழக்கம் என்றதால் ஒரு ப்டம் மட்டும் தேவாலயத்தின் உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார். பின்னர் பாதிரியாரே என்னையும் தேவாலய வாசலில் வைத்து படம் எடுத்தார். 

பின்னர் கிரேக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த கட்டிடங்கள் அகழ்வாராயப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கம் அதை தொல்லியல் துறைக்கு வழங்கவில்லையாம். வழங்கிய பின்னர் அந்த முழு இடத்தையும் கண்காட்சியாக மாற்றும் திட்டம் இருக்கிறதாம்.

பின்னர் துறைமுகம் பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே காலாற நடந்தால் நான் எங்கேயோ சென்றுகொண்டிருந்தேன். அதனால் ஒரு டாக்ஸிக்காரரிடம் நம்பிக்கை ஏதும் இல்லாமல் இந்திய உணவகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கொண்டுபோய் இறக்கிவிடு என அரபியில் சொன்னதும் “அதான் எனக்கு தெரியுமே” ஸ்டைலில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டார். அது இந்திய சாமான்கள் விற்கும் பலசரக்கு கடை. 

நம்மூர் பஞ்சாபி 25 ஆண்டுகளுக்கு முன்னரே லெனபான் வந்து ஒரு லெபனான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு 3 பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருடன் ப்டம் எடுத்துக்கொண்டேன். பின்னர் அவரே அவருக்கு தெரிந்த ஒரு டாக்ஸிக்காரனை அனுப்பி ஒரு ஹோட்டலுக்கு அனுப்பினார். அங்கு இரவு உணவு முடித்து விட்டு ரூம் வந்து சேர்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.. 


படங்களின் ஆல்பம் காண இங்கே சொடுக்குங்கள்.

லெபனான் - பைப்லோஸ்

நேற்றைய ஊர் சுற்றுதலில் இந்த தொன்மையான கடற்கரை கிராமமும் இடம் பெற்றிருந்தது. ஒரேடியா படங்களாக போட்டுத்தள்ளினால் நண்பர்களை இழக்க நேரிடலாம் என்பதால் இன்று வெளியீடு.. 

ரோமானியர்களின் கடற்கரையாக இருந்திருக்கிறது பைப்லொஸ் நகரம். காண்பதற்கு அழகான இடம். லெபனானிகளின் மாலை நேர பொழுதுபோக்கு இந்தக் கடற்கரையில் உள்ள ரெஸ்டாரெண்டுகளில் ஹூக்கா பிடிப்பது, சிற்றுண்டி சாப்பிடுவது, காதலர்களின் சந்திக்கும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகள் லெபனானில் தவறாது பார்க்கும் இடமாகவும் இது இருக்கிறது.

மீன்பிடி துறைமுகமாகவும் செயல்படுகிறது. உல்லாசப் படகுகள் கடலுக்குள் செல்ல இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சுற்றி வர அருமையான இடம். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஃபாஸில்களை தோண்டி எடுத்து வந்து விற்றுக்கொண்டிருக்கின்ற

னர். எனக்கு நம்பிக்கை வராததால் எதையும் வாங்கவில்லை.

சுற்றியபின்னர் ஒரு லெபனானி ரொட்டியை ஜத்தர் மற்றும் காய்கறிகளுடன் சாப்பிட்டுவிட்டு மாலையை நிறைவு செய்தேன்..

14.05.2014 லெபனான் டயரிக்குறிப்பு..

படங்கள் இங்கே..

Just asking..