Saturday, September 4, 2010

நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.

2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்யும் டீக்கடை வாசமும், தினத்தந்தி பேப்பருமாய் செட்டில் ஆகியிருந்த காலம் அது. ஒருநாள் தினத்தந்தியில் மஸ்கட்டில் தோட்டக்கலை மேற்பார்வையாளருக்கு ஆட்கள் தேவைனு ஒரு விளம்பரம். அன்னிக்கு காலையில் ரொம்ப ஃப்ரீயா இருந்தேன், என்னோட பிரண்டு சரவணக்குமார் கடையில் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கி கைலையே எழுதின ஒரு சி.வி ரெடி செஞ்சு 2 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அவங்க சொன்ன அட்ரஸுக்கு அனுப்பி வச்சுட்டேன். விளம்பரம் பாத்ததிலிருந்து ஒருமணி நேரத்துல எழுதி போஸ்ட் செஞ்சாச்சு. ஏன்னா 1996ல இருந்து பாஸ்போர்ட் எங்கிட்ட இருக்கு. ஒருவாட்டிகூட வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கலை. கழுத இந்த வேலை கெடைச்சுப்போச்சுன்னா??

நமக்குக் கெடைக்காதுன்னு நல்லாத் தெரியும். இருந்தாலும் கழுதைய போட்டுத்தான் வைப்பமேன்னு போட்டு வச்சது. அட்லீஸ்ட் இண்டர்வியூவுக்கு கூப்டாய்ங்கன்னா, அப்படியே தாம்பரத்துல அக்கா வீட்டுல ஒரு நாலுநாள் இருந்துட்டு அப்படியே அக்காகிட்ட கொஞ்சம் கைச்செலவுக்கு காசையும் தேத்திட்டு வந்துறலாம்கிறது மாஸ்டர் பிளான்.

மறுநாள் டீக்கடையில் உக்காந்திருக்கேன், சரவணன் வந்து எங்கப்பா என்னைய தேடிக்கிட்டிருக்கார்னு சொன்னான். சாப்பிடுற நேரம் தவிர மத்த நேரத்துல தேடமாட்டாரேனு வீடுக்குப் போனா, டேய் ரெண்டுவாட்டி மெட்ராஸுல இருந்து ஃபோன் வந்துச்சிரா அப்படின்னார் எங்கப்பா.. நமக்கு எவண்டா மெட்ராஸ்ல இருந்து போன் செய்யப்போறான்னு என்னமாச்சும் சொன்னாங்களாப்பானு கேட்டா இல்லடா திருப்பி அரைமணி நேரத்துல கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காய்ங்க அப்படின்னார். சொல்லிவச்ச்ச மாதிரி கரெக்டா கூப்டாய்ங்க..

நீங்க ஜெயக்குமார்தான.. ஆமா சார், கார்டன் சூப்பர்வைசர் வேலைக்கு அப்ளிகெஷன் போட்டிருந்தீங்கள்ல, ஆமா சார். உடனே கிளம்பி நாளைக்கு நடக்குற இண்டர்வியூவுக்கு வந்துருங்க அப்படிண்னுட்டாய்ங்க.. நானும் கெத்தா அதெல்லாம் சும்மா ஊர் சுத்துற மாதிரின்னா நான் வரலை. செலெக்ட் ஆகுறதுக்கு ஒரு 50 சதவீதமாச்சும் வாய்ப்பிருக்கனும்னேன். அந்த ஆளும் சார் இதுவரைக்கும் வந்ததுலையே நீங்க தான் சார் டிப்ளோமா, நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் சார்னான்.. சரி கழுதைய போய்ட்டுத்தான் வருவமேன்னுட்டு அப்பாட்ட ஒரு 500 ரூபாயத் தேத்திகிட்டு சென்னைக்கு வந்தாச்சு.

ஏதோ ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. காலையில 9 மணிக்கே போயாச்சு. அங்க பாத்தா உக்கார இடம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு 500 பேர் இருக்காய்ங்க..

என்னைய கூப்டவன அந்தக் கூட்டத்திலையும் தேடிக்கண்டுபிடிச்சி என்னையா இது திருவிழாக்கூட்டம் மாதிரி உக்காந்திருக்காய்ங்க அப்படின்னா, சார், கோச்சுக்காதீங்க, இது கிளீனர்களுக்கும், தோட்டவேலை செய்றவங்களுக்கும் இண்டர்வியூ, உங்களுக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அப்படிண்ட்டான். என்ன செய்யுறது வந்தாச்சு அட்டெண்ட் பன்னிட்டே போய்ருவோம்னு சாயந்திரம் வரைக்கும் இருந்து 4 மணிக்கு இண்டர்வியூவுக்குப் போனேன். ஒரு 9 பேர் இருந்தாய்ங்க. அதுல ஒருத்தன் பி.எஸ்.ஸி அக்ரி. சரி நமக்கு இன்னிக்கு இல்லைனு முடிவே செஞ்சுட்டேன். அதுபோக எட்டுபேருல மத்தவைங்க எல்லாம் +2க்கு அப்புறம் தோட்டக்காரனுங்களா 10 வருஷத்துக்கு மேல வெளிநாட்டுல வேலை செஞ்சு சூப்பர்வைசர் ஆகுறதுக்காக காத்திருக்குற ஆளுங்க..நானு இப்பதான் இந்த வேலைகிடைச்சாத்தான் வெளிநாட்டையே பாக்கப்போற ஆளு.

சரி, நம்மள கூப்டு கழுத்தறுத்தவன சும்மா விடக்கூடாதுன்னு கருவிகிட்டே இருந்தேன். 6 வது ஆளாவோ, ஏழாவது ஆளாவோ கூப்டாய்ங்க. மொத்தம் ரெண்டு பேரு. பொதுவா மத்திய கிழக்கு வேலைன்னா ஒரு அரபியாச்சும் வந்து சும்மா உக்காந்திருப்பாரு, இங்க அப்படி யாருமே இல்லை. சரி, இன்னிக்கு இவனுங்கள போட்டு நொங்கெடுத்துற வேண்டியதுதான்னு பிளான் செஞ்சு மாலை வணக்கம் சொல்லி உக்காந்தேன். சர்டிபிகேட் எல்லாம் பாத்தாங்க.. அப்புறம் வீட்டைப் பத்தி சொல்லுனு இங்கிலீசுல கேட்டாய்ங்க.. சொன்னேன். அப்புறம் புல் எப்படிப் போடுவ அப்படின்னாங்க.. என்னய்யா கேள்வி கேக்குறனு ஒரு எரிச்சலோட கேட்டேன். இல்லை ஒரு காலி இடத்துல எப்படி லான் போடுவன்னு கேட்டாய்ங்க, சொன்னேன். அப்புறம் புல்லுக்கு என்னென்ன வியாதிகள் வரும்னாய்ங்க சொன்னேன்.. அடுத்து எந்தெந்த பூ எந்தெந்த பருவ காலத்துல பூக்கும்னாய்ங்க.. உங்களப்பாத்தா வேலை தர்ற மாதிரித் தெரியலை.. எனக்கு ராத்திரிக்கு பஸ் இருக்கு, ஊரப்பாத்துப் போகனும், சட்டு, புட்டுனு இண்டர்வியூவ முடிங்கய்யான்னேன்.. உடனே ஒருத்தர் ஆப்ரேஷன் மேனேஜராம்.. அவர், தம்பி நீ செலக்ட் ஆய்ட்ட , உன்னோட இங்கிலீஷையும், ஹிந்தியையும்தான் செக் பன்னிகிட்டிருக்கோம்னார். எனக்கு இவனுக சொல்றதுல நம்பிக்கை இல்லாததுனால கொஞ்சம் மப்பா, உங்க ரெண்டு பேரவிட நான் நல்லாப் பேசுவேனு சொன்னதும், சரி, கெளம்பிக்க. ஒரு வாரத்துல அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஏஜெண்டுக்கு வரும்னுட்டாய்ங்க..

அப்பத்தான் கொஞ்சூண்டு நம்பிக்கை வந்துச்சு.. இதுலையும் ஒரு இக்கன்னா வச்சித்தான் விட்டாய்ங்க. ஒரு லச்ச ரூபா கட்டுனாதான் வேலைன்னு. நான் கேட்ட சம்பளத்துல பாதிதான் குடுத்தாய்ங்க. ( எனக்கு தன்நம்பிக்கை ஜாஸ்தி) எதுக்குடா தரனும், என்னோட படிப்பையும், பேச்சையும் வச்சித்தானடா குடுத்தீங்க அப்படினு சண்டை போடவும், டபால்னு எங்க கமிஷன் வேண்டாம் ஏஜெண்டுக்கு மட்டும் 65 ஆயிரம் கட்டிருன்னாய்ங்க. நாலு மாசம் வெட்டியா திரிஞ்சதா நெனச்சுக்க வேண்டியதுதான்னு சரிய்யான்னு சொல்லி வச்சேன். அப்புறம் என்னோட கண்டிசன்களான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெர் ஓமான் கம்பெனியோட லெட்டெர் ஹெட்ல என்னோட வீட்டு விலாசத்துக்கு வரனும். அதுக்கப்புறம்தான் நான் பணம் தருவேன் அப்டின்னு சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாய்ங்க. எனக்கு நல்ல நேரம் எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மஸ்கட்டுல இருந்தார். அவர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெரை அனுப்பி வச்சி இப்படி ஒரு கம்பெனி இருக்கா, சம்பளம் எல்லாம் ஒழுங்கா தர்ராய்ங்களா அப்டினு எல்லாம் கேட்டு கன்ஃபார்ம் செஞ்ச பின்னாடிதான் வண்டி ஏறுனேன்..

எல்லாம் சரியாயி, விசா, டிக்கெட் எல்லாம் வந்தாச்சி, ஒருவேளை கம்பெணி ஏமாத்திட்டா அப்டின்னு ஒரு 12000 ரூபாய்க்கு ஓமானி ரியாலா மாத்தி கையில வச்சிகிட்டேன்.. திரும்பி வர்ரதுக்கு வேனும்ல..காலையில 6 மணிக்கு கல்ஃப் ஏர் பிளைட். மொதநா ராத்திரி 11 மணிக்கே ஏர்போர்ட்டுக்குபோயாச்சு. எங்க அண்ணன், அக்கா வீட்டுக்காரர், நானு. எல்லோரும் வரிசையில் போற மாதிரி நானும் வரிசையில் போனேன். உள்ள விடுறதுக்கு முன்னால ஒரு போலிஸ் செக் செய்வார், டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம். அவரு டிக்கெட்ட பாத்துட்டு என்னைய ஒரு ஏளனப் பார்வை பாத்தாரு பாருங்க.. எத்தன வருஷம் ஆனாலும் மறக்காது.. யோவ் ஆறு மணி ஃப்ளைட்டுக்கு இப்பவே வந்து என்னய்யா சாதிக்கப்போற.. போய்ட்டு நாலு மணிக்கு வான்னுட்டார். வேற வழியில்லாம ஏர்போர்ட்லையே அடுத்த அஞ்சு மணி நேரத்தை டீ குடிச்சே ஒழிச்சோம்.

காலையில உள்ளூர் நேரம் எட்டு மணிக்கு மஸ்கட் ஏர்போர்ட்டுல இறங்கியாச்சி. ஒரிஜினல் விசாவை கவுண்டர்ல இருந்து வாங்கிட்டு வந்து இம்மிக்ரேஷன் ஆபிசர்ட்ட தரனும். அதைச் செஞ்சதே பெரிய சாதனை செஞ்ச மாதிரி இருந்துச்சி. அப்புறம் மஸ்கட் ஏர்போர்ட்டுக்கு வெளிய வந்தேன். என்னைய கூப்டுட்டுப் போக யாராச்சும் வந்திருப்பாய்ங்கன்னு ஒவ்வொருத்தனையா பாத்துகிட்டு, ஒவ்வொரு பிளக்கார்டையா பாத்துகிட்டு வாரேன் ஒருத்தனுமே இல்லை.. லேசா வயித்தக் கலக்கிச்சி. சரி, போட்டுத்தள்ளிட்டாய்ங்க அப்படினு மனசுல ஒரு பயம்.. திடீர்னு ஒருத்தர் வந்தார், ஹலோ ஜெயக்குமார்தான நீங்க அப்படின்னு தமிழ்ல கேட்டார், ஆமா சார்னேன், அப்படியே பின்னாடியே வாங்கன்னு விறு விறுன்னு நடக்க ஆரம்பிச்சார். நானும் என்னோட பெரிய பொட்டிய தூக்கிகிட்டே கிட்டத்தட்ட ஓடுனேன். கடைசியில ஏர்போர்ட்டோட கடைசிப் பகுதிக்கு வந்தாச்சு, அதாவது டிபார்ச்சர் கவுண்டர் கிட்ட உள்ள பகுதிக்கு வந்தாச்சு. சடக்குனு ஒரு ரூமுக்குள்ள நுழைஞ்சாரு, நானும் பின்னாடியே போனேன். பிளைட்ல என்னையா சாப்ட அப்படின்னார். நான் ஒன்னும் சாப்பிடலை அப்படின்னேன். சரி, தோசையும் சாம்பாரும் இருக்கு சாப்பிடுங்க அப்படின்னார். எனக்கு இவங்க யாரு, எதுக்கு நம்மள இங்க கூப்டு வந்திருக்காய்ங்க, எப்படி நம்மள பேரச் சொல்லி கூப்டுட்டு வந்தாய்ங்க அப்படினு ஒரே குழப்பத்துல இருந்தேன். அவர்ட்ட சார், நான் என்னோட கம்பெனி ஆளுக வந்து கூப்டுட்டுப் போவாங்கன்னு சொன்னாங்க, அதனால அங்க நிக்கிறேன்னேன். அவரு ஒரு சிரிப்பு சிரிச்சு நம்மாளுக மொதவாட்டி வரும்போது என்னல்லாம் தப்பு செய்வாய்ங்களோ அதெல்லாம் கரெக்டா செய்யுறைய்யா நீயி அப்படின்னார்.

என்ன சார்னா, என்னோட சட்டையப் பாரு.. என்ன எழுதியிருக்குனு அப்படின்னார், நான் வேலைக்கு வந்திருக்குற கம்பெனியோட ஆளுதான் அவரு. நான் வேலைக்கு வந்ந்திருக்குற கம்பெனிதான் ரன்வேயில ஆரம்பிச்சு, வெளியில் கார்பார்க் வரைக்கும் கிளினிங்கும், கார்டனிங்கும் செய்யுது. கொஞ்சம் பதட்டப்படாம இருந்திருந்தாலே இதையெல்லாம் கவனிச்சிருக்கலாம். அதுக்கப்புறம் என்னைய வரவேற்ற நண்பர் சைமன் என்னுடைய உயிர் நண்பன் ஆனார். அந்தக் கம்பெனியை விட்டு கிட்டத்தட்ட 7வருஷம் ஆயிருச்சி. இப்பவும் அவர்ட்ட பேச்சுவார்த்தை இருக்கு.

அன்னிக்கு வெளிநாட்டுக்குப் போனவன் அதுக்கப்புறம் திரும்பிப் பாக்கலைனு வைங்க..எதுக்கு இந்தக் கதைன்னா, எங்கையாச்சும் வாய்ப்பு இருந்துச்சுன்னா கல்ல எறிஞ்சிறனும், நமக்கு எங்க கிடைக்கப்போகுது அப்படினு விட்டுடக் கூடாது. அதான் நான் தினத்தந்தி பேப்பரப் பாத்து அப்ளிகேஷன் போட்டது மூலமா கத்துக்கிட்டது. அந்த முதல் அடியிலிருந்துதான் எனது இன்றைய நிலை எட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஒரு ஆச்சரியம் கலந்த பரவசம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை

13 comments:

ஆயில்யன் said...

அட சூப்பரா இருக்கே நீங்க கல் எறிஞ்ச கதை :)

நாங்க ரெசூயும் ராக்கெட்டா செஞ்சு மெயில்ல விட்டு த்தேத்தின முதல் வாய்ப்புல இங்கே வந்து கெடக்குறேனாக்கும் மத்தபடி சூப்பர் கம்பெனி சூப்பர் வேலை [ அதான் ப்ளாக்கு,டிவிட்டரை பார்த்தா தெரியுதேய்யான்னுசொல்லாதீங்க நான் ஒழுங்கா ஜாப் அட்டெண்ட் செய்வேனாக்கும்] :)))

puduvaisiva said...

really nice way of writing

thanks

tshankar89 said...

Hi

I worked in Muscat and was there for about nearly 3 years. Lovely place.. Seeb, Al Azaiba (my company, Tebodin Engineers was located there), Al Khuwair, Al Khurram, Ruwi.. all locations are unforgettable. My daughter did IX &X in Indian School Muscat (ISM).. Also visited so many places in Oman including Salalah.. Nice to see ur first hand experiance.. Seeb airport.. mmm.. every time we board our flight to site visits to PDO Onshore camps..

Good to read ur blog..

Anonymous said...

The Last word is 100% correct.

வடுவூர் குமார் said...

ஏழு வ‌ருட‌ம் முன்பு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வா,ந‌ன்றாக‌ இருக்கு.

பத்மகிஷோர் said...

Amazing write up. ஒரு சாதாரண தபால் ஒருவருடைய வாழ்கையில் இவ்வளவு மாற்றத்தை கொண்டு வருமா.

கானகம் said...

வாங்க ஆயில்யன்.. ட்விட்டர்காரனுவ உங்களுக்கு பரிசு குடுக்க தேடிட்டிருக்கானுங்களாம். அவ்வளவு பெரிய ஆதரவாளராம் நீங்க :-)நன்றி தலை வருகைக்கும் கருத்துக்கும்.

கானகம் said...

புதுவை சிவா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கானகம் said...

tshankar89

வருகைக்கு நன்றி. எனக்கும் மத்திய கிழக்கில் அதிகம் பிடித்த நாடெனில் ஓமான் தான். மிக நல்ல மக்கள், நல்ல நாடு, வெளிநாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வே வராத நாடு..

கானகம் said...

வடுவூர்குமார், பத்மகிஷோர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பத்மகிஷோர், எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் ஒரு சாதாரன தபாலே மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டது. மேலும் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் நம்மை எப்படி சூழ்நிலைக்கு தக்காற்போல மாற்றிக்கொள்கிறோமோ அவ்வளவுதூரம் மேலே சென்றுவிட முடியும்.

tshankar89 said...

கானகம்,

நன்றி...இன்னும் அங்கு தான் வேலை செய்கிறீர்க‌ளா? என்னுடைய நண்பர்கள் இன்னும் அங்கு உள்ளார்கள். சமீபத்தில் புயலும், மழையும் ஓமானை தவிக்க விட்டு விட்டது என்று அறிந்தேன். சீப் விமான நிலையத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? நான் 2002 செப் முதல் 2005 ஏப்ரல் வரை அங்கு வசித்தேன்.

அல் குவைர் நெடுஞ்சாலையில் ஜவாவி மசூதி அருகில் (பனிக்கட்டி சறுக்கி வலையம் கூட அருகே உண்டே!)பிலிப்ஸ்/கே.எஃப்.சி கட்டட வளாகத்தில் வசித்தேன். (வட்ட வடிவமான கட்டடம்). கடுமையான கோடைக்குப் பின் வரும் காலத்தில் (குளிருக்கு முன்) நமது "பொருட்காட்சி" என்பது மாதிரியான திடலுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். நல்ல குளிருக்கு முன், சாலை ஓர மலர்களை காண்பது கண் கொள்ளா காட்சி. அவர்களது நகர அமைப்பினர் நகரத்தினை சுத்தமாக வைப்பது பற்றி மிக நன்றாக செயல்படுத்துகிறார்கள்.

ஓமான், க‌த்தார், சௌதி அரேபியா (இந்த மூன்றிலும் வேலை பார்த்து இருக்கிறேன்) அமீர‌க‌ம்,(அமீர் ஏழில், ஐந்திற்கு) ப‌ஹ்ரைன், (குவைத் நீங்கலாக) அனைத்து இடத்திற்கும் சென்றதில், நீங்கள் சொன்னது மாதிரி ஓமான் மிகச் சிறந்த நாடு. அனைத்து பலுசி மக்களும் ஹிந்தி/உருதுவில் உரையாடுவது இன்னும் மிக்க மகிழ்ச்சியாகும். சென்னை ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் முத‌ற்கொண்டு ந‌ல்ல‌ உண‌வு விடுதிக‌ள்...

(அல்லாவின் க‌ருணை இருந்தால்), ஒருமுறை ம‌ஸ்க‌ட் வ‌ர‌ வேண்டும்...

ச‌ங்க‌ர‌ நா. தியாகராஜ‌ன்

senthil said...

epadiellam katha eluthalamaa

thank u

கானகம் said...

Senthil,

It is not a story. This is what happened when I applied in a white paper.

Thanks for coming and keep coming ...

:-)

Jeyakumar