Monday, August 16, 2010

தையல் - வலைப்பக்கம் அறிமுகம்.


முதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்கம். அப்படிப்பட்ட எண்ணம் அவர்கள் எழுத்தைப்பற்றிய உண்மையான அபிப்ராயம் நமக்குக் கிடைக்காமல் செய்துவிடும். அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் தையல் வலைப்பதிவை தொடர்ச்சியாக தாண்டிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். அவரது வலைத்தளத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் அவ்வபோது எதையாவது படித்துவிட்டு சென்று விடுவேன். இப்போது முதலில் இருந்து படிக்க ஆரம்பித்து முழுதும் முடித்திருக்கிறேன்.

எல்லாக் கட்டுரைகளும் நல்ல நடையிலும், கச்சிதமாகவும் இருக்கிறது. வள வள என்று நீளமாகவோ, தேவையற்ற கிண்டல்களோ, ஏதுமின்றி, ஒரு விஷயத்தை எப்படிச் சுவாரசியமாய்ச் சொல்ல முடியும் என தொடர்ந்து முயற்சித்திருக்கிறார் ஜெ.ராம்கி. எல்லாமே மிக நன்றாய் வந்திருக்கிறது.

கோவிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி அவர் எழுதும் குறிப்புகள் அந்தக்கோவிலையே பார்த்திராதவர்களுக்குக் கூட கோவில் எப்படி இருக்கும் , சென்று வந்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தனது எழுத்து மூலமே தந்துவிடுகிறார். அடி அண்ணாமலை கட்டுரை இதற்கு ஒரு உதாரனம்.

சோபன்பாபு எபிசோட்.. ஆச்சரியம் கலந்த தகவல்.. நான் அப்போது 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 17.04.1980ல் ஜெயலலிதா ஒரு வாசகர் கடிதம் எழுதி இருக்கிறார் என்பதும் அதில் சோபன் பாபுவைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதும் ஆச்சரியம் கலந்த உண்மை. ஜெ.ராம்கி அவர் எழுதிய ஜெ புத்தகத்தில் இதையெல்லாம் எழுதியிருக்கிறார்.

ராம்கியின் முதல் புத்தகமான ஜே.பி யை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இன்னும் தீராத ஆச்சரியம் எப்படி இரண்டாம் சுதந்திரமான ”எமர்ஜென்ஸியிலிருந்து விடுதலை”க்குக் காரணமான ஒருவரை மக்களின் ஞாபகத்திலிருந்தே ஒரே ஒருகுடும்பத்தால் திட்டமிட்டு அழிக்கமுடிந்தது என்பதும், அதை காங்கிரஸை கடுமையாய் எதிர்க்கும் மற்ற எந்த கட்சியாலும் இந்த இருட்டடிப்பை தடுத்த நிறுத்த முடியாமலும், ஜெ.பியின் புகழை பரப்ப முடியாமலும் இருந்தார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. இத்தனைக்கும் இன்றைக்கும் பல தலைவர்கள் எமர்ஜென்ஸியின் கோரப்பிடியில் கொடுமையை அனுபவித்தவர்கள். ஒருவேளை இன்றைக்கு சுரண்டலினால் கிடைத்த வசதிவாய்ப்புகள் அவர்களுக்கு அந்த நினைவையே அத்துப்போகச் செய்திருக்கும். அதேபோல புத்தகத்தின் மூல ஆசிரியர் ( தேவ சகாயம்) எழுதியது போல இந்தியர்களாகிய நாமெல்லாம் ஜெ.பிக்கு செய்நன்றி கொன்றவர்கள்.

ரேஷன் கார்டு - ஒவ்வொரு இந்தியனின் கனவு அட்டை. ராம்கி அவரது பதிவில் சரியாகச் சொன்னபடி ரேஷன் கார்டு என்பது ” சென்னையில் அலல்து தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு” என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என்னோட வீட்ட்டுக்காரம்மா பெயரைச் சேர்க்கும் சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆனால் சென்னையில் வீட்டுக்காரம்மா பெயரை குடும்ப அட்டையில் இருந்து உடனே எடுத்துவிட்டார்கள். வித்தியாசமான அரசு இயந்திரம்.

புலிவிடும்தூது.. கலக்கல். அரசியல் நையாண்டியில் நிஜமாகவே வலிக்காமல் அடிக்கிறார்.

பிறவார்த்தை யாதொன்றும் கட்டுரையில் //தமிழ்நாட்டு மக்கள், புலிகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் காட்டும் அசாத்திய உறுதி தவறானது என்பதை எந்த தேர்தல்களும் இதுவரை நிரூபிக்கவில்லை.// என்பது எவ்வளவு பெரிய உண்மை? இனிமேல் இலங்கைத் தமிழர் குறித்து ஒருவரும் பேசப்போவதில்லை..

சாரு நிவேதிதாவும் கருணாநிதியும்... சான்ஸே இல்லை.. இருவரையும் ஒப்பிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார்.

அடுத்த கட்டம் கட்டுரையெல்லாம் சொல்வனம் போன்ற இலக்கிய பத்திரிக்கைகளில் வரவேண்டியது. மிக அருமை. தமிழ் சினிமாவைப் பற்றியும் அதன் நிதர்சனங்களைப் பற்றியும் ஏதுமறியாதவர்கள் விடும் உதார்களை அழகாக தோலுரிக்கிறார்.

ரஜினியின் படங்களில் வரும் நல்ல பாடல்வரிகளை ”சில்லுண்டியிசம்” என்ற பெயரில் ரஜினியின் படத்தின் கீழே இடுகிறார்.

அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து இவ்வாறு “பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது” என சுயபுராணத்தில் எழுதியிருக்கிறார்.

பொதுவாக சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு இளக்காரமான பார்வையே பரிசாகக் கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காக சினிமாக்களைப் பார்க்காமல் அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைப்பதும், அதற்காக வேலைசெய்வதுமாக வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்பதும் கிண்டல் செய்பவர்களின் வாதம். அதிலும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்துவிட்டால் கிண்டல் இன்னும் கொஞ்சம் கூடும். உலக சினிமா எடுக்கிறேன் என ஆங்கில திரைப்படங்களை காப்பியடித்து கூத்தடித்துக்கொண்டிருக்கும் கமல் இவர்களுக்கு மிகச் சிறந்த நடிகன். ஆனால் உண்மையில் திரையிலும், நேரடி வாழ்க்கையிலும் நல்லவனாகவே வாழும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் ரஜினியை ரசித்தால் கிண்டல். ரஜினி ரசிகன் எனில் இலக்கியம் படைப்பதும், சமூக அக்கறை சார்ந்து எழுதக்கூடியவராகவும் இருப்பது நடக்கவே கூடாத ஒரு விஷயம் என நினைக்கிறார்கள்.

ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருந்துகொண்டு அதே சமயம் சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரைகளையும், நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதும் ரஜினி ராம்கியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் புதியவர்களுக்கு ஒரு நல்ல வலைப்பக்கமான தையலை அறிமுகம் செய்த திருப்தி எனக்கு.

5 comments:

ஜெ. ராம்கி said...

இணையத்தில் இருககும் சக நண்பரை இன்னொரு நண்பர் பாராட்டுவதே அரிது. அதிலும் முழுமையாக, பொறுமையாக எல்லாவற்றையும் படித்துவிட்டு அழகாக ஒரு அறிமுகத்தை கொடுத்திருக்கிறீர்கள். பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. மிக்க நன்றி :-)

pichaikaaran said...

நல்ல பார்வை . நானும் அவர் எழுத்தை ரசிப்பவன் . போன் செய்து பாராட்டியிருக்கிறேன் . அவரிடம் சந்திரமுகி படத்துக்கு டிக்கெட் பெற்றது மறக்கமுடியாதது. உங்கள் கூர்மையான வாசித்தலுக்கும் , விரிவான அறிமுகத்துக்கும் நன்றி

கத்தார் சீனு said...

நன்றி ஜெயக்குமார். நல்ல பதிவு...
நீங்க சொல்லித்தான் தையல் தளத்தை பற்றி தெரிந்து கொண்டேன்.
நல்லா இருக்கு.....

Unknown said...

தங்களின் பரந்த பாரட்டும் உள்ளம் எல்லாருக்கும் இருக்க வேண்டும்.

ரசிகன் said...

//
பொதுவாக சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு இளக்காரமான பார்வையே பரிசாகக் கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காக சினிமாக்களைப் பார்க்காமல் அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைப்பதும், அதற்காக வேலைசெய்வதுமாக வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்பதும் கிண்டல் செய்பவர்களின் வாதம்//

அது வாதமில்லைங்க மாம்ஸ். நிதர்சனம்:))