Friday, August 15, 2008

இந்திய சுதந்திர தினம்.

கத்தாரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்.


சுதந்திர தினம் இந்திய தூதரகத்தின்கீழ் வரும் இந்தியன் கல்சுரல் செண்டரில் நடைபெற்றது. கத்தாருக்கான இந்தியதூதர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மூவர்னக்கொடியை ஏற்றிவைத்தார்.






அதன் பின்னர் இந்திய பிரதமரின் உரையை தூதுவர் படித்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் கூட்டுப்பாடல் (இந்தியில்) நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கம்போல கேக் வெட்டும் வைபவம் நடைபெற்றது.






இந்திய தூதரகத்தின் புதிய வலைப்பக்கம் இந்தியதூதரால் திறந்துவைக்கப்பட அதன் செயல்பாடுகள் மற்றும் விவரனங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் இனிய சிற்றுண்டியுடன் இந்திய தூதரகத்தின் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்திய பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

எல்லாதரப்பு மக்களும் கலந்துகொண்டது நல்ல விஷயம். காலை 7.30 மணிக்கு அதுவும் வெள்ளிக்கிழமை வருவதென்பது ஆச்சரியம்தான்.

கத்தாரிலிருந்து வெளிவரும் கல்ஃப் டைம்ஸ் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.



















வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

Friday, August 1, 2008

ரஜினியின் வள்ளி பாகம் 2 - குசேலன்







படம் ஆரம்பிக்கும்போதே ரஜினியின் செருப்புக்கால் ஆசிர்வாதம் இல்லாத படமாக இருக்கிறதே தேறுமா என்ற சந்தேகம் இருந்தது.. அதை நிரூபித்தது முழுப்படமும்...

இன்று குசேலன் பார்க்கப்போகிறோம் என்று அளவுக்கதிகமான சந்தோஷத்துடன் சென்ற ரஜினி ரசிகர்களை ஏமாற்றி அனுப்பிவிட்டார் பீ.வாசு.


ஆரம்பத்தில் அழகான கிராமமும், மீனாவும், பசுபதியும் நன்றாய்த்தான் ஆரம்பித்தது. அதன் பின்னர் அந்த கிராமத்தைவிட்டு படம் நகரவேயில்லை. மீனா மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாய் பிரமோஷன் பெற்றிருக்கிறார். ஆனால் அதே மீனா. பசுபதியை அதிகபட்சமாக நடிக்க சொல்லி இருப்பார்கள் போல.. மனுஷன் படம் முழுக்க இப்போ அல்லது அப்போ என அழுகைக்காக தயாராய் இருக்கிறார். பசுபதியின் குழந்தையாய் வரும் பெண் " எப்படிப்பா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்க??" என்று ஒரு கேள்வி வேறு. அழகான கிராமத்து ஏரிக்கரையில் டால்பின் துள்ளி விளையாடுவதெல்லாம் ஓவர். வடிவேலு வழக்கம்போல் வெடிவேலு. ரஜினியை வடிவேலு சந்திக்கும் இடம் அருமை. "நீதான் பாக்குற நீதான் பாக்குற" என வடிவேலு சந்தோஷத்தின் உச்சியில் தன்னைத்தானே கூறிக்கொள்வது இன்னும் கொஞ்ச நாள் மனதில் இருக்கும்.

பணக்கார ரஜினியை ஏழை பசுபதி சந்திப்பது என்ற ஆலஇலையின் பின்புறம் எழுதக்கூடிய கதையை மூன்று மனிநேரமாக இழுத்தடித்து அதில் பாசம், வறுமை, குடும்பம், நட்பு, நகைச்சுவை, கவர்ச்சி எல்லாம் கலந்துகட்டி ஒரு கூட்டாஞ்சோறு ஆக்கி இருக்கிறார்கள். அதிலும் பசுபதியை வைத்து ஊரார் பாடும் பாட்டில் கவர்ச்சி என்ற பேரில் ஒரு கேவலமான நடனம்.

இப்போது வரும் ரஜினி படங்களில் ரஜினியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்.

சிவாஜியில் ஷ்ரேயாவை தோலுரித்தார்கள்.. குசேலனுக்கு நயன்தாரா.. வடிவேலுவுக்கு அவர் அளிக்கும் தர்ம தரிசனமும், அருவியில் குளிக்கும் பாடலும் அவரது அளவுகள் பற்றிய சந்தேகமிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த கையேடு.

கடைசி முப்பது நிமிடங்களில் வரும் ரஜினி கலங்க வைக்கிறார். ஆனால் அதற்காக மூன்று மணி நேர தண்டனையை தாங்க தயாராய் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கலாம்.. ஏகப்பட்ட செட்டிங்குகள், அனாவசியமான சந்திரமுகி ரீமிக்ஸ், ஒரு பாட்டு இதெல்லாம் வைத்தாலே எல்லோரும் பார்ப்பார்கள் என பீ.வாசு நம்பலாம்.. ரஜினி நம்பலாமா???

இது ரஜினி படமும் அல்ல.. நூறு சதவீதம் பசுபதி படமும் அல்ல.. பீ.வாசுவின் அக்மார்க் மசாலா படம். சந்திரமுகி என்ற ஒரு வெற்றியை தந்ததற்காக பீ.வாசுவை அருகில் வைத்திருக்கும் ரஜினி யோசிக்க வேண்டிய நேரம் இது.

மிக மிக சுமாரான திரைப்படத்தை திரை கொள்ளாத அளவுக்கு நடிகர்களைக் கொண்டு நிரப்பி இருக்கிறார்கள். ரஜினி வாழ்வளித்தோர் பட்டியலாக அது இருக்கலாம்.

புது இசையமைப்பாளர் பற்றி ரஜினி படப்பிடிப்பு நேரத்தில் உதிர்த்தது சரியே.. (யாருங்க இந்த சின்னப்பையன்??) எந்த பாட்டுமே மனதில் நிற்கவில்லை.. பின்னனி இசையும் சுமார் ரகம்.

ரஜினியும் பசுபதியும் எப்படி நண்பர்களானார்கள் என்ற கொசுவத்தி இல்லாமலிருந்தது ஒரு ஆறுதல்.

இந்த படத்தைப் பார்க்கும்போது ரோபோ பற்றிய பயம் அதிகரிக்கிறது.

படம் முழுக்க ரஜினி நுழைந்ததிலிருந்து இறுதிவரை அவரை ஆள் மாற்றி ஆள் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், நேர்த்திக்கடன் மாதிரி...





கலியான வீட்டிற்கு வருவதுபோல் வந்த கூட்டம் (தோஹாவில்) படம் முடிந்து துக்க வீட்டிலிருந்து செல்வதுபோல சென்றனர். இன்று இரவு இரண்டு காட்சிகளுக்கும் இரவு 8 மணிக்கே அரங்கு நிறைந்துவிட்டது. நாளைமுதல் எப்படியோ..






பாவம் பசுபதி.. அடுத்து ஒரு நல்ல படத்தில் நடித்து பாவத்தை போக்கிக்கொள்ளவேண்டும்..

ரஜினி சார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...