Tuesday, February 24, 2009

எனது எண்ணங்கள்.

எனது எண்ணங்கள்.

சட்டத்துறைக்கும், காவல்துறைக்குமான தற்போது நடக்கும் மோதல் போக்கு விபரீதமானது. சட்டத்தை பாதுகாக்கும் வக்கீல்கள்தான் அதிக பட்ச வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

நம் நாட்டில் பொறுப்பின்மைக்கு தண்டனையே கிடையாதா.. குழ்ந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளில் தவறவிடவா பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ??? பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா?? இருப்பினும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன..

அந்நியன் படத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த குழ்ந்தையின் தகப்பன் கோர்ட்டில் சொல்லும் வாதங்கள் அபத்தமாகப் பட்டது.. கோர்ட்டில் இருக்கும் நீதிபதியே இத்தனை பேரையும் எப்படி தண்டிக்க முடியும் எனக் கேட்பார். அப்படியெனில் பேருக்கு எவரையாவது பலிகடாவாக்கி பிரச்சினையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் தான் நாமும், நமது நீதித் துறையும் இருக்கின்றோமா, அல்லது அப்படி வளர்க்கப்படுகிறோமா??

அல்லா ரக்கா ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். ஆனால் ஸ்லாம் டாக் மில்லியநேரை விட சிறப்பான இசைக்கோவைகளை இவர் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப்படமாக இருந்தால்தான் ஆஸ்கார் கிடைக்கும் என்பதாலும், இந்தியாவை இழிவு படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கே ஆஸ்கார் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விட்டமையால் இனி இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். நம்ம உலகநாயகனுக்கும் ஒரு பிடி கிடைத்தது போல இருக்கும்..

இனி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்ற உலக முக்கியமான கூத்துக்கள் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்டுகள் முதல் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள்.. இனி யாருடன் கூட்டு சேர்ந்தால் பிழைக்கலாம் என்ற கணக்கைப் போட்டு கூட்டணி அமையும். நேர்மையாவது, கத்தரிக்காயாவது.. பிளடி இடியட்ஸ். குடுத்த காசுக்கு நாய் மாதிரி வந்து ஒட்டுப்போடுவானுங்க பரதேசிங்க.. (இப்படித்தான் காசு கொடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்துக்கொள்வான்) நாமும் நமது கடமையைச் செய்யாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு யார் யார் எங்கெங்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என செய்திகள் படித்து அதிகம் சொத்து சேர்த்தவனுக்கு ஓட்டுப்போடுவோம்..

இணையத்தில் எழுதும்போது சற்றுப் பொறுப்பாக எழுத வேண்டும். இல்லையென்றால் சட்டம் தான் கடமையை செய்யும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். இதுவரை எழுதியதற்கு என்ன கணக்கு என அவர் சொல்லவில்லை. யாராவது அந்த எழுத்தை எடுத்துக்காட்டி கேசுபோட்டால் எடுப்பார்கள் போல..


காஷ்மீரில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற மாயை உண்டாக்கப்பட்டு அது திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்று யாசின் மாலிக்கின் சொந்தக்காரர் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்ததால் உடனடியாக போராட்டம்.. நம்ம வீட்டுப்பிள்ளைகள் குழாயில் விழுந்து இறந்தாலும், குண்டு வெடித்து இறந்தாலும் கேக்க நாதியில்லை. ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கொலைவழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இத்தனை நேர்மையாய் அரசு நடந்தாலும்

கான்பூர் ஐ.ஐ டி. மாணவர்கள் சாடலைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். தீப்பூச்சி என்ற பொருள்படும் ஜுக்னு என்ற இந்த செயற்கை கோளை இயற்கை அழிவுகளின் தகவல்களை சேகரிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியை கண்காணிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா என்னதான் கஷ்டத்தில் இருந்தாலும் இந்தியர்கள் எங்கும், எப்போதும் சொடைபோவதில்லை. வேலையிலாகட்டும், நிர்வாகத்திலாகட்டும், ஊழலில் ஆகட்டும். எப்போதும் எங்கும் பெஸ்ட் ..

அப்பப்ப இப்படி என்னத்தையாவது எழுதி வைக்கிறேன்.

ஜெயக்குமார்

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

போடு தாம்பாளம். போடு புழுக்க.. & கட்டு கயிறு, வெட்டு வெட்டருவா, சுடு விளக்கு..

ஒரு ஊர்ல ஒரு கஷ்டப்பட்ட குடும்பம் இருந்துச்சி. அம்மா, அப்பா காட்டு வேலைக்குப் போனாலும் சரியாக்கூட சாப்பிட முடியாத அளவு வறுமை. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன்கிட்ட அவங்கம்மா தம்பி இட்லி சுட்டுத்தரேன் அதைக் கொண்டுபோயி வித்துக் கசாக்கிட்டு வாடான்னாங்க.. அவனும் இட்லிய எடுத்துகிட்டு ஊர்ல இருக்குற குளத்தங்கரைக்கு வியாபாரத்துக்கு போனான். அங்க போயி ரொம்ப நேரம் ஆகியும் வியாபாரமே ஆகல. அதனால அவனோட அம்மா சுட்டுத் தந்த ஏழு இட்லியில ஒன்னத் திங்கட்டுமா, ரெண்டைத் திங்கட்டுமா, மூனத் திங்கட்டுமா, நாலத்திங்கட்டுமா, அஞ்சத் திங்கட்டுமா , ஆரத்திங்கட்டுமா, ஏழையும் தின்னுபுட்டா ராத்திரிக்கு என்ன செய்யுறதுன்னு சத்தமா சொல்லிகிட்டே யோசிச்சிருக்கான்..

அந்த கொளத்துல இருக்குற சப்த கன்னியர்களும், இவன் பெரிய ராட்சசனா இருப்பான் போல இருக்குதே அப்படின்னுட்டு அவனுக்கு காணிக்கையா ஒரு தாம்பாளத்த குடுத்தாங்க. அவன்கிட்ட கொடுத்து இத போடு தாம்பாளம்னு சொன்னா ருசி ருசியா சாப்பாடு போடும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.

அத எடுத்துகிட்டு பக்கத்துல இருந்த பாட்டி வீட்டுக்குப் போயி குடுத்து வச்சிட்டு குளிக்க போனான். போறப்ப மறக்காம பாட்டி, பாட்டி இத போடு தாம்பாளம்னு மட்டும் சொல்லிராத அப்படின்னு சொல்லிட்டுப் போனான. கெளவி இவன் இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்றானே இதுல என்னமோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சிகிட்டு அவன் போனப்புறம் போடு தாம்பாளம் அப்படின்னு சொல்லிச்சு. அம்புட்டுத்தான்.. சாப்பாடு வகையென்ன, சாம்பார் வகையென்ன, காய்கறி வகையென்ன, இப்படி சாப்பாடு அயிட்டமா வந்து குமிஞ்சிருச்சி. பாட்டி சாமர்த்தியமா அதை மறைச்சு வச்சிட்டு அதே மாதிரி இருக்குற இன்னொரு தாம்பாளத்த குளிச்சிட்டு வந்த நம்ம பயகிட்ட குடுத்துருச்சி. நம்ம பயலும் வீட்டுக்குப் போயி அம்மாகிட்ட நடந்தத சொல்லிட்டு போடு தாம்பாளம்னு சொல்லி இருக்கான். அதுதான் வெறும் தாம்பாளம் ஆச்சே. பேசாம இருந்திருக்கு.


மறுநாள் அதே மாதிரி அவனோட அம்மா இட்லி செஞ்சு குடுக்க அதே மாதிரி இவனும் ஒன்னத் திங்கட்டுமா அப்படின்னு ஆரம்பிக்க அதே போல சப்த கன்னியரும் வர இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டிய தர்றோம், அதுகிட்ட போயி போடு புழுக்க .. அப்படின்னு சொன்னா தங்கமும், வைடூரியமும் போடும் அப்படின்னாங்க.. நம்மாளு மறுபடியும் பாட்டி வீட்டுக்கு போயி வழக்கம்போல பாட்டி போடு புழுக்க அப்படின்னு சொல்லிராதன்னு சொல்லிட்டு குளிக்கப் போனான். பாட்டியும் போடு புழுக்கன்னு சொல்ல தங்கமும் வைரமுமா கொட்டுச்சு.. கெளவி அத மறைச்சு வச்சிட்டு சாதா ஆடு ஒன்ன குடுத்து விட்டுட்டா.. வீட்டுக்குப் போயி போடு புழுக்கன்னா அது புழுக்கையத்தன் போடுது.

மறுநாளும் அவனோட அம்மா இதேபோல இட்லி சுட்டுத் தர அதைக் கொண்டுபோய் விக்க மத்யானம் இதே மாதிரி ஒன்னத் திங்கட்டுமான்னு சொல்ல கன்னிமார்கள் வந்து இவனுக்கு மொதல்ல குடுத்த ரெண்ட வச்சிருந்தாலே இவனோட தலைமுறைக்கும் காணுமே .. இவன வேற யாரோ ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சிகிட்டு அன்னைக்கு ஒரு கயிறு, வெட்டருவா, ஒரு விளக்கு மூனும் குடுத்துவிட்டாங்க. கட்டு கயிறுன்னு சொல்லணும், வெட்டு வெட்டருவா ன்னு சொல்லணும் , சுடுவிளக்குன்னு சொல்லணும் அப்படின்னாங்க. நம்மாளு வழக்கம்போல கெளவி வீட்டுக்குப் போயி மறக்காம என்ன சொல்லக் கூடாது அப்படிங்கிறதையும் சொல்லிட்டு குளிக்கப் போனாரு. போய்ட்டு திரும்பி வந்து பாட்டி, பாட்டின்னு கத்துராப்ல.. கெளவிய ஆளையே காணோம்.. ஒரு மூலையில இருந்து உம்.உம்.உமுனு சத்தம் மட்டும் வருது.. அங்க பாத்தா கெளவி ஒரு பந்து மாதிரி சுருண்டு கிடக்கு..

நம்மாளு கெளவிய கயித்துக் கட்டுலருந்து அவுத்து விட கெளவி உண்மைய சொல்லி எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துருச்சி.

நம்மாளும் வீட்டுக்குப் போயி போடு தாம்பாளம்னு சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்பாடு சாப்டதில்லைன்னு சொல்றமாதிரி சாப்பாடு வருது..

அப்புறம் போடு புழுக்கைன்னு ஆட்டப் பாத்து சொன்னா அது தங்கமும், வைரமும், வைடூரியமுமா போடுது..

கட்டு கயிறு மேட்டர் என்னன்னு நம்ம ஆளுக்கு தெரியும். அதனால அத செஞ்சு பாக்கல..

அந்நேரம் பாத்து அவங்க நாட்டப் பாத்து எதிரி ராஜா படையெடுக்க.. உள்ளூர் ராஜாவுக்கு உதறல் எடுத்துருச்சி.. எதிரி நாட்டு ராசா எவ்வளவு பலசாலின்னும் தெரியும்.. அதனால வீட்டுக்கு ஒரு ஆளு போருக்குத் தயாராகணும் அப்படின்னு முரசு அறைஞ்சு சொல்லச் சொன்னாரு. இதக் கேள்விப்பட்ட நம்ம ஆளு போயி ராஜாவைப் பாக்க அனுமதி வாங்கி அவர்கிட்டப் போயி ராஜா நான் ஒரே ஆளு போதும், எதிரி நாட்டுப் படையவே கொளுத்திருவேன்னு சொல்ல நீ மட்டும் அப்படி செஞ்சுட்ட எம் பொன்னையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்தார்..

நேரா போர்களத்துக்கு போய் நம்ம ஆளு நிக்கிறார் அவனோட நாட்டு படைகள் நிக்க வேண்டிய இடத்துல.. எதிரி நாட்டு ஆளுங்க என்னடான்னா ஆனைபடை, குதிரைப் படை, காலாட் படைன்னு ஒரு பெரிய சேனை திரட்டி நிக்கிறாங்க.

போர் ஆரம்பம் அப்படின்னு எக்காளம் எடுத்து ஊதுன உடனேயே நம்ம ஆளு கட்டு கயிறு அப்படின்னு சொல்லி கயிற தூக்கிப் போட்டான.. அம்புட்டுத்தான். .. ஆன, குதுர, ஆளு எல்லாத்தையும் ஒரே சுருட்டா வாரி சுருட்டி ஒரு பந்து மாதிரி ஆக்கிருச்சி.

அடுத்து விட்டான் " வெட்டு வெட்டருவா " அப்படின்னு சொல்லி.. அம்புட்டுதேன், சும்மா காய்கறி வெட்டுற மாதிரி ஆளுக தலைய சீவிருச்சி அருவா.

அப்புறம் விட்டான் சுடு விளக்கேன்னு ஒரு சத்தம்..வெட்டிப் போட்ட எல்லாத்தையும் மொத்தமா எரிச்சி சாம்பலாக்கிருச்சி.

அவனோட ராஜாவுக்கு சந்தோஷம் தாளல.. இனிமே நீதாம்ப்பா இந்த நாட்டுக்கு ராஜா. உனக்கு என்னோட பொன்னையும் கட்டிவைக்கிறேன்னு சொல்லி கட்டி வச்சாரு.

அந்த கலியாணத்துக்கு எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போயிருந்தாங்கன்னு சொல்லக் கேள்வி.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு முற்றிற்று.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. முட்டா ராஜான்னு சொன்னாதான் சரியா வரும்.. அவனோட நாட்ல பகல்ல எல்லோரும் தூங்கனும்.. ராத்திரியில வேல செய்யணும்.. இந்த விதிமுறைய யார் மீறினாலும் கழுவிலேத்தி கொல்லும் தண்டனை தந்தாரு ராசா..

இப்படி போய்க்கிட்டிருந்தப்ப அந்த நாட்டுக்கு மூனுபேரு ராஜாவைப் பாத்து தங்களோட திறமைகள காமிச்சு வேலை வாங்குறதுக்காக வந்தாங்க.. நல்ல புத்திசாலி ஆளுகளும் கூட. ஊர்ல இருந்தவங்க இவங்ககிட்ட வந்து இந்த ராஜா பண்ற அநியாயத்தையும் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதான்னு ஏங்கிக் கிட்டிருப்பதையும் சொன்னாங்க. சரி, முட்டாப்பய போல.. இவன ஒழிச்சிற வேண்டியதுதான்னு மூணு பேரும் தீர்மானம் செஞ்சாங்க.

புதுசா ஊருக்கு வந்த இவங்க வழக்கம்போல காலையில எந்திரிச்சி சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க .. உடனே ராசாவோட ஆட்கள் வந்து உங்களுக்கு இந்த ஊர் சட்டம் தெரியாதா?? எப்படி நீங்க காலை நேரத்துல சமையல் செய்யலாம்னு கேக்க அப்படித்தான் செய்வோம் அப்படின்னு சொன்னாங்க வந்த மூணு பேரும். காவலாளிக ராஜாகிட்ட கூப்டுட்டுப் போக, ராஜா இந்த நாட்டு சட்டம் தெரியாம செஞ்சிட்டோம்னு சொல்லுங்க விட்டுடுறேன் அப்படின்னார். உடனே அவங்க மூணு பேரும் இல்ல ராசா தெரிஞ்சேதான் செஞ்சோம் அப்படின்னாங்க.

மகாராஜா எங்களுக்கு சீக்கிரம் சொர்கத்துக்குப் போகனும்னு ஆசை அதனால இப்படி செஞ்சோம் அப்படின்னாங்க. உடனே ராஜா இந்த மூணு பேரையும் கழுவில ஏத்துங்க அப்படின்னு உத்தரவு போட்டாரு.

மூணு பேரும் சந்தோசத்துல துள்ளிக் குதிச்சாங்க.. அதுல ஒரு ஆளு முன்ன வந்து மஹாராஜா என்னைத்தான் மொதல்ல கழுவுல போடணும் அப்படின்னு விண்ணப்பம் வச்சார். அடுத்தாளு வந்து இல்ல மஹாராஜா என்னையத்தான் போடனும்னு கேக்க.. மூனாமத்து ஆளு வந்து என்னையத்தான் போடனும்னு கேக்க ராஜா கொழம்பிப் போயி ஏம்ப்பா கழுவுல சாகுறதுக்கு முந்துறீங்கன்னு கேக்க, வந்திருந்தவங்க மஹாராஜா இன்னைக்கு யாரெல்லாம் கழுவுல ஏறி சாகுராங்களோ அவங்கல்லாம் நேரா சொர்கத்துக்கே போயிருவாங்க அப்படின்னு சொன்னங்க. இந்த ராசாவோட கொடும பொருக்கமாட்டாம இருந்த மந்திரி மார்களும் ஆமா ராசா நீங்கதான் சொர்கத்துக்கு செல்ல தகுதியான ஆளுன்னு ஏத்திவிட மனுஷன் சந்தோசமா உசுர விட தயாராயிட்டாரு. உடனே ராஜா அந்த மூணு பேருக்கும் கழுவுல ஏத்துற தண்டனைய ரத்து செஞ்சுட்டு என்னையத்தான் மொதல்ல போடணும்.. நான்தான் மொதல்ல சொர்கத்துக்கு போவேன்னு சொல்ல மக்களே எல்லா ஏற்பாடும் செஞ்சு ஊரே பாக்க ராசாவ கழுவில ஏத்துனாங்க.


ஊரே சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.. அந்த மூணு பேரையும் இனிமே நீங்கதான் எங்க ராஜா அப்படின்னு ஊர்க்காரங்களும், பழைய ராஜாவோட மந்திரிகளும் சொல்ல அவங்களும் அத ஏத்துக்கிட்டு ராசாவ இருந்து நாட்ட நல்லபடியா ஆண்டாங்க.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன முதல் கதை முற்றிற்று .