Tuesday, June 10, 2014

லெபனான் குறிப்புகள் -1

ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக லெபனானி ரொட்டியில் ஜத்தர் மற்றும் வெங்காயம், தக்காளி சேர்த்தரைத்துச் சேர்த்த ஒரு பசையை தடவி தரும் ரொட்டி இருந்தது. அதை மதிய உணவாக எடுத்துக்கொண்டேன்.

எனது நண்பர் ஒருவர் டவுண்டவுன் பெய்ரூட் அருமையாக இருக்கும் அவசியம் சென்று வாருங்கள் எனச் சொல்லி இருந்தார். அதனால் முதலில் டவுண்டவுன். நம்மூர் ஷேர் ஆட்டோ போல இங்கே ஷேர் டாக்ஸி கிடைக்கிறது. அதி என்னுடன் ஒரு சிரிய பெண்ணும் பயணம் செய்தார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்ததால் எங்கு இறங்கினால் டவுண்டவுனை முழுதும் கவர் செய்யலாம் எனக் கேட்டு இறங்கிக்கொண்டேன். அவர் சொன்னது மணிக்கூண்டு இங்கே பிரசித்தம். அப்படியே சுற்றி உள்ள பகுதிகள் குறிப்பாய் பார்லிமெண்ட்500 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எல்லாம் உள்ளது பாருங்கள் என்றார்.

முதலில் லெபனானில் பிடித்தது சுத்தம். கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் சுத்தத்தையும், அமைதியையும் பேனுகிறார்கள். ( நான் இன்று பார்த்த வரையில்) தாங்கள் அராபியர்கள் என்ற எண்ணமோ, அதற்குண்டான வெட்டி திமிரோ இல்லாமல் இருக்கின்றனர். 90% மக்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியுமாம். எனக்கு தெரியாததால் சோதிக்க முடியவில்லை. 

ஒரு டாலருக்கு 1500 லிபான்கள். (லெபனான் பணம்) ஈராக்கும், ஈரானும்தான் மகா மோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். லெபனானும் இந்த லிஸ்ட்டில்தான் உள்ளது. (பொருளாதாரம் அதளபாதாளத்தில்)

சாலைகள் அனைத்தும் ஐரோப்பாவையே நினைவு படுத்திக்கொண்டிருந்தன. நகருக்குள் பெரும்பாலும் 2 வாகனங்கள் செல்லும் வழி மட்டுமே. (2+2) 


தெருக்களுக்குள் இருவழிச்சாலை. ஆனால், எல்லோரும் கார்களை சாலையில்தான் நிறுத்துகிறார்கள். அதனால் எப்போதும் நெரிசல். 

போக்குவரத்து விளக்குகள் பல இடங்களில் அரைக்கிலோமீட்டருக்கு ஒன்று என்ற அளவில் இருக்கிறது. மொத்த பெய்ரூட்டில் பாதிக்கு மேல் மலைகளின்மீதே அமைந்துள்ளது. அங்கேயே சாலை, மின்சாரம், குடிநீர் எல்லாம் கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மால்கள் வரை, பள்ளிகளிலிருந்து, ஆஸ்பத்திரி, போலிஸ் ஸ்டெஷன்வரை எல்லாம் உண்டு.


இன்றைய ஊர் சுத்தலில் நம்முர் பையன்கள் மூவரை சந்தித்தேன். கட்டிட வேலைகள் செய்கிறார்கள். என்ன சம்பளம் எனக் கேட்டு அவர்கள் மனதை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அருகில் ஏதும் டீக்கடை இல்லை. எனவேகொஞ்சநேரம் ஊர்க்கதை பேசிவிட்டு கிளம்பினோம். மூவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள். 

500 ஆண்டுகள் பழமையான தேவாலயம்..

500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தேவாலயம் சிதலமடைந்து இருந்ததை சரி செய்திருக்கிறார்கள். பழைய தரை, மற்றும் சுவர்களை எங்கெங்கு அப்படியே பயன்படுத்த முடியுமோ அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். நம்மூரில் யேசுநாதர் ப்ரும்பாலும் சிலுவையில் மட்டுமே தொங்குகிறார். கொஞ்சம் நல்ல படமாக இருந்தால் தலையில் முள்கிரீடத்தை வைத்து விடுகிறார்கள். ஆனால், இங்கே யேசுநாதர் ராஜா கோலத்தில் இருக்கிறார். பாதிரியாரிடம் இப்படி படங்களை எங்கள் நாட்டில் பார்த்ததில்லையே எனச் சொன்னேன். அவர் யேசு கஷ்டப்பட்டது உண்மை. ஆனால், அவர் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா. எனவேதன் அவரை அரசர் கோலத்தில் வரைந்திருக்கிறார்கள் அந்தக்கலத்தில் என்றார். அதே தேவாலயத்தில் சிலுவையில் தொங்கும் யேசுநாதரும் இருந்தார். ஆனால் அவர் முதன்மையானவர் அல்ல அங்கே. ராஜாகோலம் உள்ள யேசுநாதருக்கே மூலஸ்தானம். 

அதே தேவாலயத்தின் பின்புறம் மரியத்துக்கும் தனி சாப்பல் உள்ளது. ரோமானியர்கள் காலத்தில் வரையப்பட்ட சில படங்களை (பீட்டர், பால் போன்றோர்) யும் வைத்திருக்கின்றனர். படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால், நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட தேவாலயங்களை தேடிப்போய் பார்ப்பது என் வழக்கம் என்றதால் ஒரு ப்டம் மட்டும் தேவாலயத்தின் உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார். பின்னர் பாதிரியாரே என்னையும் தேவாலய வாசலில் வைத்து படம் எடுத்தார். 

பின்னர் கிரேக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த கட்டிடங்கள் அகழ்வாராயப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கம் அதை தொல்லியல் துறைக்கு வழங்கவில்லையாம். வழங்கிய பின்னர் அந்த முழு இடத்தையும் கண்காட்சியாக மாற்றும் திட்டம் இருக்கிறதாம்.

பின்னர் துறைமுகம் பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே காலாற நடந்தால் நான் எங்கேயோ சென்றுகொண்டிருந்தேன். அதனால் ஒரு டாக்ஸிக்காரரிடம் நம்பிக்கை ஏதும் இல்லாமல் இந்திய உணவகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கொண்டுபோய் இறக்கிவிடு என அரபியில் சொன்னதும் “அதான் எனக்கு தெரியுமே” ஸ்டைலில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டார். அது இந்திய சாமான்கள் விற்கும் பலசரக்கு கடை. 

நம்மூர் பஞ்சாபி 25 ஆண்டுகளுக்கு முன்னரே லெனபான் வந்து ஒரு லெபனான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு 3 பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருடன் ப்டம் எடுத்துக்கொண்டேன். பின்னர் அவரே அவருக்கு தெரிந்த ஒரு டாக்ஸிக்காரனை அனுப்பி ஒரு ஹோட்டலுக்கு அனுப்பினார். அங்கு இரவு உணவு முடித்து விட்டு ரூம் வந்து சேர்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.. 


படங்களின் ஆல்பம் காண இங்கே சொடுக்குங்கள்.

No comments: