Tuesday, June 10, 2014

பாரதி



14 பேருடனான இறுதி ஊர்வலத்தில் படம் ஆரம்பிக்கிறது.. தமிழ் மக்களின் மனதில் சுதந்திர நெருப்பை ஊற்றியவனின் இறுதி ஊர்வலம். 

சாதிக்கொடுமைகள் வேண்டாம்..தன்னில் செழித்திடும் வையம் எனச் சொன்னவனையே பூணூல் போட்டாத்தான் மகள் கல்யாணத்துக்கு வரமுடியும் என மிரட்டுகிறது.

பிராமணர்கள், நாங்கள்லாம் உயந்தவர்கள் என்ற திமிரில்தானே ஆடுகிறீர்கள், ஆதி திராவிடனையும் பூணூல் இட்டு பிரம்மோபதேசம் செய்து ப்ராமணர்கள் ஆக்குகிறேன் எனக் கொதித்தவன்.

தான் ஒரு நல்லதோர் வீனை என உணர்ந்தவன். அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என பராசக்தியைக் கேட்கிறான்.

தனது குடும்பம், தனது மக்கள் என்று இல்லாமல் பிஜித்தீவில் பெண்கள் பட்டினியால் சாவதை நினைத்து கண்ணீர் விடுகிறான்.

கேளடா மானிடவா நம்மில் கீழோர் மேலோர் இல்லை என அல்றுகிறான், ஒருபயலும் கேட்கவில்லை. அவன் கதறியது இந்த தலைமுறைவரை கேட்கவில்லை என்பதுதான் இன்னும் சோகம்.

தாழ்த்தப்பட்டவனிடமிருந்த காசைக்கூட கையில் வாங்காத அளவு காசியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுவதைக் கண்டு பூணூலையே அறுத்தெறிகிறான். பிராமணனுக்கு ஒவ்வாத மீசையை முறுக்கு மீசையாக வைக்கிறான், தலையில் முண்டாசு கட்டுகிறான். உங்க மேல எனக்கு கோபம்டா, சக மனுஷனை நீங்கள் இழிவு செய்வதைக் கண்டு வந்த கோபமடா எனச் சொல்கிறான் தனது உடையால்.

அந்தக்கால மஹாராஜாக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதை எட்டையபுர மஹாராஜாவின் தினசரி அலுவல் சொல்கிறது.

தனது வித்யாகர்வத்தை, தான் யார் என உணர்ந்தவனின் திமிர் எட்டையபுரம் ராஜா வீட்டு வாசலில் நிற்கும்போது கீழே இறங்கிவராமல் ஷெல்லியின் கவிதையை வாசித்து மகிழ்கிறான். கோபமடைந்த ராஜா அவனை நாளையிலிருண்டு வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்ல மாடியில் இருந்தபடியே வேலையில் இருந்து விடுதலை அளித்ததற்கு நன்றி எனச் சொல்லும் தைரியம் அளிக்கிறது.

நிவேதிதாவிடமிருந்து பெண்களை சமமாக நடத்தும் ஞானம் பெறுகிறான், ஊரில் இருந்து வந்ததும் முதல் வேலையாக செல்லம்மாவிடம் மன்னிப்பையும் கோருகிறான் பாரதி.

ஒரு சாதாரன குடும்பத்தலைவி எப்படி இருப்பாளோ அப்படி இருக்கவே முயலும் செல்லம்மா. கையில் காசோ, வீட்டில் சாமான்களோ இல்லாமல் இருக்கும்போது நாலுபேரை வீட்டிற்கு அழைத்து வந்து உணவிடச் சொல்லும் கணவனை எந்தப் பெண் மதிப்பாள்.?

பராசக்தியாவது கொஞ்சம் கண் திறந்திருக்கலாம்.

நமக்கு மூன்று தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி தம்முடன் இருப்பதைக்கூட உனராமல் அவனை ஓட ஓட விரட்டினர். ஆனால், அவனும் சமூகத்தை திருத்துவதற்கு இறுதிவரை முயன்றான். பாபம், கூறுகெட்ட சமுதாயத்துக்காக வாழ்க்கை முழுதையும் கழித்து செத்தான்.

அவனை சமூகம் எப்படி நடத்தியது என்பதற்கு அவன் நீண்டநாள் கழித்து எட்டைய புரத்தில் கால்வைத்ததும் மக்கள் அவனை வரவேற்ற விதமே போதும்.

வாழ்க்கையையே தனது சமுதாயத்துக்காக இழந்தவனின் இறுதியாத்திரைக்கு அவனது சொந்தங்கள், குவளை உட்பட மொத்தம் 14 பேர்..

நமக்கா நல்ல வாழ்வு கிடைக்கும்?

பாரதி படத்தை பார்க்காதவர்கள் இருந்தால் அவசியம் பாருங்கள். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் குறித்தெல்லாம் எழுத இப்போது மனசு இல்லை.


04.06.2014 ல் எழுதியது

No comments: