ஜெயமோகனின் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது இந்த ஆண்டு (2013) தெளிவத்தை ஜோசஃப் என்ற இலங்கையைச் சேர்ந்த மலையக எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவலினால கவரப்பட்ட அவரது வாசகர்களும், ஜெயமோகனும் இணைந்து பொதுவாக கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்விருதின் நோக்கமாகக் கொண்டு இவ்விருதினை வழங்குகின்றனர்.
இம்முறை அதிகம் கவனம் பெறாமல் இருக்கும் நல்ல எழுத்தாளரும், மூத்த எழுத்தாளருமான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்குகின்றனர்.
இம்முறை அதிகம் கவனம் பெறாமல் இருக்கும் நல்ல எழுத்தாளரும், மூத்த எழுத்தாளருமான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்குகின்றனர்.
பரிசு பெறும் ஜோசஃப் அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பணமும் ஒரு நினைவுப்பரிசும் வழங்கப்படும்.
தெளிவத்தை ஜொசப்பின் எழுத்துக்களை முதன் முறையாக வாசிக்கிறேன். ஜோசஃப் விருது பெறுவதை ஒட்டி அவருடைய மூன்று கதைகள் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்திருக்கிறது.
பயணம் - இலங்கையில் மலையக மக்கள் போக்குவரத்துக்கு படும் கஷ்டங்களை விவரிப்பதுடன் பெரும்பான்மைக்கு பயந்து தமிழ் மக்கள் வாழ்வதையும் தொட்டுச் செல்கிறது. தமிழ் மக்களுக்குள்ளும் மலையக மக்களுக்கும் இதர மக்களுக்குமான பிரிவினைகளையும் கோடி காட்டுகிறது. இந்த அடிப்படை வசதிகூட இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் வாழ்க்கையை எப்படித்தான் நடத்தினார்களோ என்று முடிக்கிறார்.
மனிதர்கள் நல்லவர்கள் என்ற கதையில் பிச்சைக்காரர்களைக் குறித்து இரங்குகிறார். சமூகம் எப்படியெல்லாம் அவர்களைப் பற்றி யோசிக்கிறது என்பதையும் சொல்கிறார். அவர் பிச்சையிட்ட ஒரு ரூபாய் எப்படி பிச்சைக்காரனை திருடனாய்க் காண்பித்தது என்பதை இவ்வாறு முடிக்கிறார். “ உளுத்துப் போயிருக்கும் ஓட்டைக் குடிலுக்கு ஓடு போடப் போய் குடிலையே உடைத்துவிட்ட குற்றத்துக்காக மனம் என்னை வதைத்தது.”
மீன்கள் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் வரிகள் இவை.
//[என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் , விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத்தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும்துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.
இக்கதையின் சிறுகதைமுடிச்சு மிக இயல்பானமுறையில் நிகழ்ந்திருப்பதை ஒரு கலைவெற்றி என்றே நினைக்கிறேன். ஆனால் இதை மேலும் வலுவானதாக ஆக்குவது இக்கதையின் தொடக்கத்தில் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ள மிகச்சங்கடமான ஒரு தருணம். வாழ்க்கையின் அவலங்களில் ஒன்று அது]//
உண்மையிலேயே தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அருமையாக சொல்லி இருக்கிறார். நாம் பரதேசி படத்தில் பார்த்த காட்சிகளுக்கே அரண்டு போயிருந்தோம். ஆனால் ஜோசஃப் எழுதி இருப்பது நேரடி வர்னனை.
எனக்குத்தெரிந்து கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர் சமுதாயத்தை வாசிப்பின் பக்கம் இழுத்து வரச் செய்ததில் ஜெயமோகனுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த இளைஞர்களின் வாசிப்பை கூர்மை செய்ய ஊட்டியில் ஆண்டுதோறும் கூட்டங்கள் கூட்டி வாசிப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல பயிற்சியும், கூடி இருந்து வாசிக்கும் குருகுல வாசம் போன்ற சூழ்நிலையையும் உருவாக்கித்தருகிறார். இன்றுவரை தடையின்றி நட்ந்து வருகிறது ஊட்டி முகாம்.
தமிழில் பிற எழுத்தாளனை கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுவாக இருந்தாலும், முடிந்தவரை சக எழுத்தாளனை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தகுதி இருந்தும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள எழுத்தாளர்களை கவனத்திற்கு கொண்டு வருவது என்பது உண்மையிலேயே குறிப்பிட்ட எழுத்தாளனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கௌரவம்.
இதைச் சாதித்திருக்கும் ஜெயமோகனுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். விழா சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment