சரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு
( ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்)
சென்னை வெள்ளத்திற்கு உதவியவர், எந்தவித நோயும் இல்லாமல், ஷீர்டி சென்றுவிட்டு வரும் வழியில் ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தவர் எப்படியோ ரயிலுக்கும், ப்ளாட்பாரத்துக்கும் நடுவில் இடைவெளியில் சிக்கி பலியாகிவிட்டர்.
சார்டட் அக்கவுண்டண்ட், குடும்பஸ்தன், உபகாரி எல்லா அடைமொழியும் ஒரு பெட்டிக்குள் வருகிறது, புனேவிலிருந்து.
எனக்கு நண்பர் அல்ல, என் மனைவிக்கு தெரிந்தவர், ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைபார்த்த காலத்தில்.
இன்னொரு சம்பவம்
ஈராக்கிற்கு எண்ணெய் துரப்பணப்பணியில் வேலை செய்ய வந்தார் ஒரு தென்காசிக்காரர். அவர் வந்த அன்று பாஸ்ராவில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு. அன்று மாலையே இந்த ஊரில்வேலை பார்க்கமாட்டேன் என அடம்பிடித்து ஊருக்கு சென்றார். தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு குளிக்க பைக்கில் போகும்போது விபத்து. பாஸ்ராவிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட 5 நாட்களுக்குள்.
இன்னொருவரின் மரணம் நமக்குள் ஒரு நடுக்கத்தை கொடுக்கிறது. நிரந்தரமின்மை என்பதை செவிட்டில் அறைந்து சொல்லிச் செல்கிறது. அந்த பதட்டத்தில் நமக்கு தோன்றுவதெல்லாம் “ இருக்கும்வரைக்கும் நல்லது செஞ்சிட்டு போயிட்டே இருக்கனும், குறைந்தபட்சம் இன்னொருத்தனுக்கு கெடுதல் செய்யாமையாவது இருக்கனும்” என.
ஆனால், அந்த பதட்டம் குறையக்குறைய, வேறு விஷயங்கள் மனதை ஆக்கிரமிக்க நாம் மீண்டும் பழைய ஆளாகவே மாறுகிறோம்.
மரணம் மட்டுமே நிரந்தரம். எப்போது வரும் என்பதும் அதற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
முடிந்தவரை ஆடாமல் இருந்துவிட்டு செல்லவேண்டியதுதான்.
No comments:
Post a Comment