Wednesday, December 26, 2007

கத்தாரில் வலைப் பதிவர்கள் மாநாடு.

எனக்கு ஒரு ப்ளாக் தொடங்கனும்கிற ரொம்பநாள் ஆசைய அக்டோபர் 2ம்தேதி தீத்துக்கிட்டேன்.. கத்தர்ல இருந்துகிட்டு ப்ளாக் போடறோமே துணைக்கு யாராவது இரு்ப்பாங்களா அப்படிங்க்கிற பயமெல்லாம் முதப் பதிவு போட்டதுமே ஆதவன கண்ட பனி போல விலகிருச்சி..


அண்ணன் " ரசிகன்" இருக்காக..

நவீன இளவரசர் " பாரதிய நவீன இளவரசன் இருக்காக..

அப்புறம் "கடகம்" இருக்காக..

அப்படின்னு ஆரம்பிச்சாரு நம்ம ரசிகன். அப்ப நம்ம தனியா இல்லபோலயே.. கும்மி அடிக்க ஏகப்பட்ட பேரு இருக்காக போலன்னு ஆனதுக்கப்புறம்தான் கொஞ்சம் தைரியம் வந்துச்சு.

அப்புறம் ரசிகனோட பல முறை பேசி தொடர்புகள உண்டாக்குனதுக்கு அப்புறம் ஒரு பதிவர் மாநாடு (நாலு பேர் சேர்ந்தா மாநாடுங்கிற தமிழ் கலாசாரத்தை அடியொற்றி...!) போட்ரலாம்னு தீவிரமா யோசிச்சு அப்புறம் ஈகைப் பெருநாள் விடுமுறையில போட்ருவோம்னு தீர்மானிச்சு அப்புறம் பல காரணங்களால அதுவும் முடியாம இப்ப சீக்கிறம் சந்திச்சிருவோம்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கத்தார்ல எல்லோரும் ஓட்டமா ஓடுற வேலைபாத்தாலும் இந்த ப்ளாக் எழுதுறதுக்கு மட்டு எப்படித்தான் நேரம் ஒதுக்குறங்கன்னே தெரியல. அதுலையும் இந்த கடகம் போடுற பதிவுகள பாத்தா வேலைக்குப் போறாரான்னே தெரியல.. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு பதிவு போடுறாரு.. சரக்கு இருக்கு.. போடுறாரு..


பாரதிய நவீன இளவரசன் -- இதுதான்னு இல்லாம எல்லாத் தலைப்புலையும் எழுதி கலக்குறாரு.. குறிப்பா எழுத்துல ஒரு தனி முத்திரை பதிச்ச லா.ச.ராமாமிர்தத்தோட அஞ்சலியில அவரே கைப்பட எழுதுன கடிதங்கள இணைச்சு நல்ல விதமா பதிஞ்சிருக்காரு இந்த பதிவுல

ரசிகனோட வலைப்பூவே கலக்கலா அமைச்சிருக்கார். ஆப்பு அடிக்கிறதுலஆரம்பிச்சு, சொந்தக் கதை, விமர்சனம், அட்வைஸ் அப்படி இப்படின்னு எல்லாத்தையும் நல்லா ரசிக்கும்படியா எழுதுறார். இவரோட வாசகர் வட்டம் ரொம்ப பெரிசு போல..


நமக்கு அந்த பிரச்சினை எல்லாம் ஏதும் இல்ல. ஏன்னா சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும். அதனால "ஒண்ணுமே எழுதாம இருக்க ப்ளாக் எதுக்கு" அப்படிங்கிற கமெண்டெல்லாம் அனுமதிக்க வேண்டி இருக்கு. என்னா உண்மையத்தானா சொல்றாங்க.


அடுத்த முறை எப்படியாச்சும் சந்திச்சு எங்க வலைப்பதிவர் மாநாடு பற்றிய குறிப்புகளை அலைகடலென திரண்டு வரப்போகும் உங்களுக்கு வழங்குகிறேன்.

(சிறு குறிப்பு. ரெண்டு பேர் சந்திச்சா அதுசந்திப்பு. மூணு பேர் பாத்துகிட்டு அவங்களுக்கு வலைப் பூவும் இருந்துட்டா அது வலைப் பதிவர் மாநாடு என்பதுதான் பின்நவீனத்துவ கலாசாரம்.)

Saturday, December 15, 2007

எனது புகைப் படத்திறமைக்கு ஒரு சான்றுமஸ்கட்டில் ரியாம் பார்க்கின் உச்சியிலிருந்து எடுக்கப் பட்டது. தெரிவது கல்பூ பார்க்.
இதுவும் ரியாம் பார்க்கிலிருந்து எடுக்கப் பட்டது. படத்தில் தெரிவது கண்கானிப்பு கோபுரம். இப்போதும் பயன் படுத்தப் படுகிறது.
நீலக்கடலில் ஒரு படகு...மத்ராவிலிருந்து மஸ்கட் செல்லும்பாதை...ரியாம் பார்க்கின் உச்சியிலிருந்து எடுக்கப்பட்டது.ஒரு சூரிய உதயம்.. தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து மதுரைக்கு போகும்போது எடுக்கப்பட்டது.
இலைகள்... ஒரு குளோசப் ஷாட்..நிழல் பாதை... எங்கள் பள்ளியில்... ( தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்)
மக்காச் சோளச் செடி...
மஸ்கட்.. குரும் கடற்கரை.

Tuesday, December 4, 2007

பீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.

பெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வித்தியாசமாய் யாருமே தொட விரும்பாத " மல "த்தை தனது கதைப் பொருளாய் வைத்துள்ளார்.

கதைத் தொகுப்பில் எங்கு காணினும் மலம், மலம் மலம் மட்டுமே. அதை கதை மாந்தர் வழியாக எடுத்துவைக்கிறார்.

வேக்காடு கதையில் ஒரு கிராமத்தின் கீழ்மட்ட மக்களின் பிரச்சினைகளை குறிப்பாக தண்ணீருக்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் கால் கழுவக்கூட தண்ணி இல்லாமல் ஊரே கஷ்டப்படும் விதத்தையும் அழகாக விவரித்திருப்பார். அந்த ஊரை பற்றி விவரிக்கும்போது கண்முன் ஊரைக்கொண்டுவந்து விடுகிறார். தனியாக வாழும் கிழவியின் தண்ணீருக்கான தவிப்பும் ஊரே தண்ணீருக்காக கஷ்டப்படும்போது கிழவியை யாரும் கண்டுகொள்ளாமல் விடுவதும் கிழவியின் நிலைமையை அவள் வாயாலேயே சொல்லவைத்திருப்பதும் நல்ல உத்திகள். அடித்தட்டு மக்களின் சமூக கீழ் நிலை நன்றாக விவரிக்கப்பட்டு அவர்கள் எப்படி மேல்குடி மற்றும் உயர்குடி மக்களால் குடிதன்னிருக்குக்கூட அல்லாடவிடப்படுகிறார்கள் என்பதையும் நன்கு விவரித்துள்ளார். உயர்சாதி ஆள் பேசும் வார்த்தைகளும் அவரது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகக் கூடாது என்பதற்காக தண்ணிரில் மலத்தை கலக்கும்படி செய்வதும் இன்றைய குக்கிராமங்களின் நிலையை உள்ளது உள்ளபடி சொல்கிறது.

பீவாங்கியின் ஓலம் --

இதில் ஒரு கிராமத்துப் பெண்ணின் நகர வாழ்க்கையில் ஏற்ப்படும் அனுபவங்களையும், வீட்டுக்குள்ளேயே கழிப்பிடம் இருக்கும் என்ற விஷயத்தைக்கூட அறியாமல் இருக்கும் இடமும், நகரத்தில் சோறு ஆக்க அரிசி களைந்த நீரை மாடு வைத்திருப்பவர்கள் எடுத்துப்போக வருவார்கள் என காத்திருப்பதும் பின்னர் இப்படியே சேர்ந்த கழுநீரினாள் வீட்டுக்குள் ஏற்படும் புளித்த வாடையும் அதை கக்கூசிலேயே கணவன் கொட்ட அது விழுங்குவதாக கற்பனை செய்து கொண்டு பயப்படுவதும், அது என்றாவது ஒருநாள் தன்னை விழுங்கிவிடும் என கற்பனை செய்துகொண்டு பயந்து சாவதையும் பெருமாள் முருகன் நன்கு விளக்கியுள்ளார்.

கடைசி இருக்கை --

ஒரு சிறுவனுக்கு பேருந்தில் ஏறிய பின்பு மலம் வருவதும் ஓட்டுனரை கெஞ்சி முடியாமல் போகும்போது பேருந்திலேயே சிறுவன் கழித்து வைப்பதும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை இன்னொரு பயணியின் பார்வையிலிருந்து சொல்கிறார்.

அத்தை வீட்டுக் கோடை -

இதில் எப்படி கீழ் நிலை மக்களின் உறவுமுறைகள் அவர்களுக்குள்ளேயே இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இவற்றை விளக்கியுள்ளார். அதில் ஒரு சிறுவன் அத்தை வீட்டுக்குப் போவதும் அங்கு அவனது வீடைவிட வசதியாக உணவும், இடமும் , விளையாட ஆட்களும் இருப்பதும், முதலில் ஆசையாக கூப்பிட்டுவந்த அத்தை அவனை வெளியேற்ற முயல்வதும் என அவர்களது மன ஓட்டங்களை அழகாக பதிவு செய்துள்ளார். இதிலும் சிறுவன் அத்தை வீட்டில் இருந்து கழிப்பறையில் அசுத்தம் செய்வதாக ( உடல் நலமில்லாததால்) கூறி அம்மாவுடன் அனுப்பி வைக்கப்படுகிறான். அவனது வீட்டிற்கு சென்றபின்பு அவன் அடையும் அமைதியும், அத்தைவீட்டில் கிடைத்த அரிசிச்சோருக்காக ஏங்குவதும் இயல்பாக உள்ளது.

இது தவிர "கருப்பனார் கிணறு"

கதையில் கிணற்று தண்ணீரில் மலம் கழிக்கும் சிறுவனால் ( உண்மையில் அவன் கிணற்றில் மலம் கழிக்கவில்லை. ஆனால யார் அதிகம் மலம் கழித்துள்ளார்கள் என்ற போட்டி வரும்போது கிணற்றில் மலம் செய்ததாக சொல்கிறான், தாங்களே அதிகம் மலம் கழித்ததாக கூறும் நண்பர்களிடம்) இதனால் குடும்பத்திற்கு ஏற்படும் சிரமங்களையும் அவனது அப்பா மாப்பு தரனும் சாமியோவ் என கேட்டுக்கொண்டு அலைய அவனோ அப்பாவின் அடியில்இருந்து தப்பிக்க ஊரைவிட்டே ஓடுகிறான்..

தோழர் பி.எம்.மின் வெற்றி..

இதில் ஒரு கம்யுனிஸ்ட் தோழர் கிராமத்திற்கு பயிற்சிக்காக வருகிறார். நகர வாழ்க்கையில் பழக்கப்பட்டுப்போன அவரால் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தாமல் மலம் கழிக்க வருவதில்லை. அதில் தோழர் பி.எம்.மாக வருபவர் இதெல்லாம் "குட்டி பூர்ஷுவா" மனநிலை என்கிறார். ( அது என்ன குட்டி பூர்ஷுவ என எனக்கும் தெரியவில்லை) இதிலிருந்து விடுபடவேண்டும் எனவும் கூறி அவருக்கு பழக்கம்தான் இதற்க்கு காரணம். தேநீர் குடிக்காமல் இருந்தால் எப்படி வராமல் போகும்.. வந்ததுதான் ஆக வேண்டும் எனக்கூறி இறுதிவரை அவருக்கு தேநீர் வாங்கித்தராமலேயே அன்றைய தினத்தை ஒட்டிவிடுகிறார்.. இறுதியில் " தோழர் பி.எம். ஓரளவு வெற்றி பெற்றார் " என எழுதுகிறார் பெருமாள் முருகன்.வராக அவதாரம் ..

கிராமத்தில் இருக்கும் ஒருவன் நகரத்திற்கு முதன் முறையாக வேலை விஷயமாய் செல்லும்போது ஏற்படும் அனுபவங்களை குறிப்பாக நகரத்தில் இறங்கிய முதல்நாள் காலைக்கடன்களை முடிக்க படும் அவதிகளையும் அங்கு இருப்பவர்கள் நிர்வானமாக குளிப்பது பற்றியும் கதவைக்கூட மூடாமல் மலம் கழிப்பது பற்றியும் அருவருப்புக் கொள்ளும் ஒருவன் தேவையினால் அவனும் அது போல செய்ய நேர்வதும் பற்றிய கதி இது. வெங்கடேசனும் ஓரு நிமிடம் பன்றியாகிப் போனான் என கதையை முடிக்கிறார் பெருமாள் முருகன்.

கருதாம்பாளை -

கிராமத்தை விட்டே தாண்டாத ஒரு கிழவி மகன் வீட்டில் இருக்க நேர்வதும் அங்கு மலம் கழிக்க வீட்டுக்குள்ளேயே இடமிருப்பதைக் கண்டு அருவருப்படிவதும் பின்னர் பழகப் பழக தனது கிராமத்து வெட்டிலும் அது போல ஒரு கழிப்பறையை உருவாக்கி கொள்வதும்தான் கதை. ஆனால் அந்த கிழவியின் என்ன ஓட்டங்கள் மதிப்பீடுகள் இதுவரை கொண்டிருந்த எண்ணங்களை வசதியாய் இருக்கிறது என்ற காரணத்திற்காக மறந்துவிடுவது என நன்கு சித்தரித்திருக்கிறார்.

சந்தன சோப்பு..

வெளியூரில் பனி செய்யும் ஒருவர் பனி நிமித்தமாய் வெளியூர் செல்லும்போது வழியில் உள்ள உணவகத்தில் நிற்கும்போது அவரது ஊரைச்சேர்ந்த சிறுவனை சந்திக்க நேர்கிறது. அங்கு அவன் கழிப்பறைகளில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வேலையையும், வாங்க சார்.. வாங்க சார் என உள்ளே இருப்பவரை கதவை தட்டும் வேலையயிம் செய்கிறான். முதல் சந்திப்பில் அவன் அவரிடம் எப்படியாவது அவனை ஊரில் கொண்டு போய் விடும்படி கேட்கிறான். பல வேலைகளால் அவனை அடுத்தமுறை கூட்டிப்போவதாக வாகளித்து விட்டு போகிறார். அவன் சொன்ன தகவல்களை வைத்து அவனுக்கு ஏற்படும் மலவாடையைப் போக்க உடனடி தீர்வாக ஒரு சந்தன சோப்பு வாங்கித் தருகிறார். பல விஷயங்களால் இந்த விஷயத்தை மறந்துபோன அவர் மீண்டும் அந்த சிறுவனை அதே உணவகத்தில் சந்திக்கிறார். அப்போது அவன் ஊருக்கு செல்வதில் விருப்பம் இல்லை எனவும் அவனது சேமிப்பிலிருந்து ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து அவன் அம்மாவிடம் சேர்க்கச் சொல்லி விட்டு தான் இதுபோல ஒரு பனி செய்வதைக் அம்மாவிடம் சொல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான். வேலை இருக்குன்னா.. அடுத்து வந்த என்ன பாக்காம போகக்கூடாது என அன்புக் கட்டளை இடுவதுடன், போனவாட்டி நீங்க வாங்கி கொடுத்த சந்தன சோப்பு நல்ல வாசனைய இருக்குன்னா அதத்தான் இப்பவும் போட்டுக்கிட்டிருக்கேன் என ஒரு சிரிப்புடன் பணிக்கு திரும்புகிறான்.. இதில் சிறுவனது மன நிலையும், அவனது வேலை எத்தனை கஷ்டமானது என விவரிக்கும்போதும் பின்னர் தன்னையே சமாளித்து அதே இடத்தில் சீக்கிரம் பொருந்திப் போவதும், அதை எழுத்தில் கொண்டுவந்த விதம் அருமை.

நின்றவண்ணம், கிடந்தவன்னம்

ஒரு கிராமத்தின் ஏரிக்கரையில் குழந்தைகள் விளையாடுவதும் அதனை மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு முளைக்கும் ஒரு குடிசையினால் அவர்களுக்கு அங்கு விளையாட தடை விதிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஒரு சிறுவன் அந்த குடிசையில் நடக்கும் வினோதங்களை ஆர்வமுடன் கவனிக்க பின்னர் அங்கிருக்கும் காளி படத்தை பார்த்ததும் ஏற்படும் அதிர்வினாலும் அந்த காளி உபாசகரை தொடர்ந்து அவருடன் நெருக்கம் ஏற்படுவதையும் அதனால் அச்சிறுவனது தாயார் தனது மகன் காளி உபாசகனாக மாறி அதற்காக மலம் தின்னுவானோ என பயப்படுவதையும் இறுதியில் அச்சிறுவன் உபாசகனாக மாற கிழம்பிவிடுவதியும் குறிப்பால் உனர்த்துகிறார்.

புகை உருவங்கள்

இது ம்லத்தைப் பற்றிய கதை அல்ல. வெளி உலகத்தைப் பார்த்திராத ஒரு சமூகம் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் அவர்களது விவசாயம் பாதிக்கப்படுவதும் அதற்கு கன்னுக்குத்தெரியாத எதிரிதான் காரனம் என அவர்கள் முடிவு செய்ய அந்த எதிரியை அவர்கள் நிழலுருவமாக பார்க்கிறர்கள். பின்னர் ஒவ்வொரு இளைஞனாக ஊரை விட்டுப் போக பெருசுகள் மட்டும் மிஞ்சுகிறர்கள். இக்கதையில் கிராம மக்களின் மனநிலை அவர்களது விவசாயம் பெருகும் போது ஊரைவிட்டு வெளியே சென்றுவந்தவனால்தான் எனவும் அதே விவசாயம் பாதிக்கப் படும்போது ஊரைவிட்டு வெளியே சென்றதுதான் தெய்வகுத்தம் ஆகிவிட்டது எனவும் சிந்திக்கிறார்கள். ஊரைவிட்டுச் சென்றவன் முதலில் நாயகனாகவும் அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், பென்கள் அவன்மீது மையல் கொள்வதும் பின்னர் அவந்தான் இந்த நிலைக்குக் காரனம் என கருதும்போது அவனை வெறுப்பதும் அவனை கொல்ல திட்டமிடுவதுமாக அறியாத மக்களின் மன நிலையை விளக்குகிறார்.

மஞ்சள் படிவு..

ஒரு கிளவியின் வைராக்கியமான வாழ்க்கையில் வயதினால் படிக்கையில் விழ நேர்வதும் முதுமையினால் அவள் அறியாமல் செலையில் மலம் கழித்து விடுவதும் அதத சற்று கோவமாக மகள் கேட்க அன்ன ஆகாரமின்றியும் யாருடனும் பேசாமலும் இருந்து வைராக்கியமான கிழவியாகவே உயிர் விடுவதும்.. கதத மாந்தர்கள் அனைவரும் கிளவிக்குப் பயப்படுவதும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் இருப்பதும் கிழவியின் மனோதிடத்தையும் வைராக்கியத்தையும் குறிக்க உத்தியாக பயன்படுத்துகிறார் ஆசிரியர்.

பிசாசுக்கு பிடித்த விஷயம் ...

நகரத்தில் வாழ்ந்த பெண் கிராமத்திற்கு வாழ்க்கைப் பட்டு வருவதும் அங்கு எல்லா வசதிகளும், கண்ணுக்கும் மனதிற்கும் பிடித்த கனவனும் கிடைத்தும் மலம் கழிக்க இடம் இல்லாமல் திறந்த வெளியில் ஒதுங்க நேர்வதும் அந்த உள்பயத்திலேயே ஒரு நாள் விடிவத்கு முன்னரே வெளியே சென்றுவிட அங்கிருக்கும் பிசாசுதான் தன்னன இவ்வாறு ஏமாற்றி இருக்குமோ என பயந்து தாய் வீட்டிற்கு திரும்பிச்சென்று அங்கு அழைக்க வரும் கனவனிடம் முதல்ல நீங்க நம்மவீட்டுல கக்கூஸ் கட்டுவீங்களாம் பின்னாடி என்ன வந்து கூட்டிட்டு போவீங்களாம் என கூறுவதுடன் கதை முடிவடைகிறது.

என எல்லாக் கதைகளும் படிக்க நன்றாக உள்ளது. பெருமாள் முருகன் யாரும் தொட விரும்பாத கருவைக் கொண்டு ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பை கொடுத்துள்ளார்..

பதிப்பகம் : அடையாளம் பதிப்பகம். ௧௨0௫/௧, கருப்பூர் சாலை, புத்தநத்தம், ௬௨௧௩௧0.
விலை : ௬0/-