Thursday, April 30, 2015

பாஸ்ராவின் துப்புரவு தொழிலாளர்கள் குறித்து

பாஸ்ராவின் துப்புரவு வேலை முதலில் உள்ளூர் கான்ட்ராக்டர்களிடம் இருந்தது. அவர்கள் நம்மூரின் பாலம் கட்டும், ரோடுபோடும் கான்ட்ராக்டர்கள் வகை. கமிஷனெல்லாம் கொடுத்துவிட்டு, லாபமெல்லாம் எடுத்து வைத்துக்கொன்டபின்னர் மிச்சக்காசில் கட்டுவதைப்போல இங்கேயும் பேப்பர் அளவில் மட்டுமே துப்புரவு வேலை நடக்கும்.
உள்ளூர் ஈராக்கிக்கு மாத சம்பளம் 800 டாலர். வேலையும் சுமாருக்கு கீழே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குவைத்தி கம்பெனி இந்த க்ளீனிங் கான்ட்ராக்டை எடுத்தது.
மத்திய கிழக்குக்கென அதிகம் நேர்ந்துவிடப்பட்ட குறிப்பாய் இதுபோன்ற படிப்பு தேவையில்லாத வேலைகளுக்கெண இருப்போர்கள் பங்களாதேஷிகள். 250டாலர்கள் சம்பளத்திற்கு காலைமுதல் மாலைவரை குப்பையை அள்ளிக்கொன்டிருக்கிறார்கள். ஊரும் முன்னரைவிட இப்போது கொஞ்சம் சுத்தமாக இருக்கிறது, சில சரி செய்யவே முடியாத பகுதிகளை தவிர.
இந்த பெங்காலி என அழைக்கப்படும் பங்களாதேஷிகள் இந்த 250 டாலர் சம்பளம் உள்ள வேலைக்கு அவர்கள் ஊரின் 2 லட்சம் டாக்கா கொடுத்து வந்திருக்கிறார்கள். சிலருக்கு பெங்காலி தவிர வேறெதுவும் தெரியாது. மத்திய கிழக்கில் ஏற்கனவே வேலை செய்த மக்களுக்கு ஹிந்தியும், கொஞ்சம் அரபியும் தெரிந்திருக்கிறது.
250 டாலர் அளவு கூட பங்களாதேஷில் சம்பாதிக்க முடியாதா? இங்கே வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?

Friday, April 17, 2015

Wake up Sid, Hindi

வேக அப் சித் - ஹிந்தி 

இப்படி ஒரு படம் வந்து போனதே B4U சேனலில் பார்த்த பின்னர்தான் தெரிந்தது. பணக்கார அனுபம் கெர்ரின் மகன் சித்தார்த். (Ranbir Kaboor) செல்லமாக சித். எல்லா பணக்கார பையன்கள் போலவே பொறுப்பில்லாமல் வளர்கிறார். ஆங்கிலம் தெரியாத, தெரிந்துகொள்ள முயலும் அம்மாவை மதிக்காத, அம்மாவின் அருமை தெரியாத, வீட்டில் இருக்கும்போதே தினமும் கிரெடிட் கார்டில் பீட்சா வரவழைத்துச் சாப்பிடும் அளவு பணத்திமிரில் வளர்கிறார். 

கல்லூரியில் படிக்கும் சித் ஆண்டு இறுதி தேர்வில் ஃபெயில் ஆகிறார். கல்லூரிதான் முடிந்துவிட்டதே, ஒழுங்காக கம்பெணியில் வந்து வேலைக்குச் சேர் எனச் சொல்லும் அப்பாவிடம் ஒப்புக்காக ஒரு மாதம் வேலை செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு பாதியிலேயே ஓடுகிறார். எதிலும் ஒரு அலட்சியம், காசு எப்போதும் கிடைக்கும் தைரியத்தில் குறிக்கோள் ஏதுமில்லாமல் சுத்திவரும் சித்தார்த் அம்மாவை ஒருநாள் அவமரியாதையாக பேசிவிட அப்பா சித் தை ஒழுங்காக அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டு மதித்து நடக்க வேண்டும், இது என் வீடு, இனி நான் சொல்வதைக் கேட்பதாய் இருந்தால்மட்டும்தான் இங்கே இடம் எனச் சொல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறார். தனக்குப் பிடிக்காத ஒரு கல்லூரி நண்பியின் நண்பி ஆயிஷாவுக்கு ( Konkona Sen Sharma) நண்பராகிறார். 


அவள் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ளவும், எழுத்தாளர் ஆவது என்ற லட்சியத்துடன் வருகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் சித் ஆயிஷாவுடன் தங்குகிறான். நண்பியாய் இருந்தாலும் பத்திரிக்கையில் வேலை செய்துவிட்டு வரும் ஆயிஷாவுக்கு வீட்டை குப்பைக்காடாக வைத்திருக்கும் சித்தின் பொறுப்பின்மை மீது எரிச்சல் வருகிறது. 

அவனது புகைப்படத்திறமை மீது ஏற்படும் நம்பிக்கையால் அவனை ஒரு கம்பெணியில் பயிற்சியாளனாக வேலைக்குச் சேர்த்து விடுகிறாள். இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருப்பதில் ஆயிஷவுக்கு சித் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வருகிறது. அதை உணராத சித் ஆயிஷாவினால் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வேலையிலும் பொறுப்பாகி பின்னர் தன் பெற்றோருக்கு செய்த அவமரியாதைகளை நினைத்து வருந்தி அப்பாவிடமும், அம்மாவிடமும் மன்னிப்புக் கேட்கிறான். அப்பாவும் வீட்டுக்கு வா என அழைக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கிறான். வீட்டிற்குச் சென்றதும் ஆயிஷா இல்லாதது வெறுமையை அளிக்கிறது. தானும் காதலிப்பதை உணர்ந்து அவளுடன் இணைகிறான். 

மிக மென்மையான காதல் கதை. மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள். நண்பர்களாக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காதலில் விழுவது அழகு. மும்பையை ரசிக்கும் மக்களுக்கு நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். மிக அழகான மும்பையை திரையில் காண்பிக்கிறார்கள். ஆயிஷா - இன்றைய இந்திய இளைஞிகளின் முகம். தன்னம்பிக்கையும், புதிதாய்ச் செய்யவும், தன்காலில் நிற்கவும் தயங்காதவள். அவள் பெங்காலி என்பதும், மும்பைக்கு இடம் பெயர்வதுவரை வெளியிடங்களுக்குச் செல்லாதவள். மும்பையில் தனக்கான இடத்தை தேடிக்கொள்கிறாள். பயமும், சந்தேகமுமாக மும்பையில் இறங்கும் ஆயிஷாவுக்கு நல்ல நட்புகள், வேலையில் திருப்தி எல்லாம் சேர்ந்து அவளுக்கு மும்பை மனதுக்கு நெருக்கமாகிறது. இறுதியில் சித்துடன் சேர்வதுடன் படம் நிறைவு. 

ஒளிப்பதிவு கலக்கல். ஆயிஷவாக வரும் நடிகை நம்மூர் சரிதாவின் நகல். அப்படியே சரிதாவை இளமையாக பார்த்ததுபோன்ற ஒரு தோற்றம். நிறமும் அப்படியே. முக பாவங்கள், சிரிப்பு எல்லாம் சேர்ந்துதான் படத்தை முழுமையாக பார்க்க வைத்தது என நினைக்கிறேன். சித்தாக வருபவரின் பால்வடியும் முகம், பணக்காரக் குழந்தைகளின் தெனாவட்டு, அப்பாவின் காசை தண்ணீராக செலவழிக்கும் விதம் எல்லாம் மிக அருமையாக செய்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு அழகான படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போனதோ? வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள். இயக்கம் : அயன் முகெர்ஜி

Thursday, April 16, 2015

இன்றைய டாக்டர்கள் கடவுளருக்கு அடுத்தா?

டாக்டர் புருனோ அவர்கள் எழுதியது கீழே,,
//உள்ளஞ்சலில் ஒரு இளம் மருத்துவரின் சந்தேகம் : சமூகத்திற்கு மிகவும் தேவைப்படும் மருத்துவர்களை எப்பொழுதிலிருந்து சமூகம் அவமதிக்க துவங்கியது
என் பதில் : மருத்துவர்களை விட சமூகத்திற்கு அதிகம் தேவைப்படும் விவசாயிகளையும், ஆசிரியர்களையும் அவமதிக்க துவங்கிய பிறகு//
இது மருத்துவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக வேண்டுமானால் பகிர்ந்துகொள்ளலாம்.
என்றைக்கு பெருவாரியான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதே மக்களுக்குச் செய்யும் சேவை, சேவையை முடிந்தபோது செய்துகொள்ளலாம் என வட்டிக்கு விடும் தொழிலையும், இதர சைடு பிஸினஸுக்கான நேரமும் போக மீதியுள்ள நேரங்களில் பாடம் நடத்த தொடங்கினார்களோ அன்றிலிருந்து அழிய ஆரம்பித்தது ஆசிரியர்களுக்கான மரியாதை. (தனியார் பள்ளிகளில் இந்த சைடு பிஸினஸ்ஸெல்லாம் செய்ய இயலாது)
உண்மையிலேயே சிகிச்சைக்கு தேவைப்படும் சோதனைகளை செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட சோதனைகளை சாதாரன மக்களின் மீதும் தினிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து மருத்துவர்கள் மீதான மரியாதை குறைய ஆரம்பித்தது. (இதுபற்றி நீண்ட் விவாதம் நடந்ததும் இந்தச் சோதனைகள் எல்லாம் அவசியம்தான் என்றும் நீங்கள் சொன்னதாக ஞாபகம்)
விவசாயிகளுக்கான மரியாதையை அழித்தது மக்களல்ல. அவர்களை விலை நிர்ணயம் செய்ய விடாமல், விளை பொருட்களை தானே விற்றுக்கொள்ள அனுமதிக்காத அரசாங்கம். பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும், ஆனால், சுயநலமும், நாம் விவசாயி இல்லையே என்ற எண்ணமும் விவசாயிகள் குறித்த அவர்களின் பிரச்சினைகள் குறித்த அக்கறையில்லாமல் செய்துவிட்டது.
இன்றைக்கும் நல்ல ஆசிரியர்களுக்கும், தரமான, மனிதாபிமானம் உள்ள மருத்துவர்களுக்கும் மரியாதை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் டாக்டர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாகத்தான் மதிக்கப்படுகிறார்கள்.
விதிவிலக்குகளாய் இருந்திருக்க வேண்டிய கொள்ளையடிக்கும் டாக்டர்கள் எண்ணிக்கையில் பெருக, நியாயமான கட்டணத்துடன் சேவை உள்ளத்துடன் இருக்கும் டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்ததுமே இப்படி உங்கள் “இளம் டாக்டருக்கு” நம்மை ஏன் மக்கள் மதிப்பதில்லை என எண்ணம் தோன்றி சீனியரான உங்களிடம் கேட்க வைத்திருக்கிறது.
இப்படி பல இளம் டாக்டர்கள் சுயசோதனை செய்துகொள்ள ஆரம்பித்தாலே மீண்டும் அந்த மரியாதையான காலம் வந்தே தீரும்.

பாக்தாத்தும் பாஸ்ராவும்

பாஸ்ராவை ஒப்பிடும்போது பாக்தாத் நிச்சயம் மாடர்ன் நகரம்தான்.
பெண்கள் முழு சுதந்திரத்துடன் ஆடை அணிகிறார்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஈராக்கிய பெண்களும். ஹைஹீல்ஸுடன் முழங்காலுக்கு மேல் இருக்கும் ஆடையுடன் ஹோட்டலுக்கு வருகிறார்கள், ஆளையே முழுங்குவதுபோல ஈராக்கிய ஆண்கள் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் சுற்றுகிறார்கள். பாஸ்ராவில் கிறிஸ்தவர்கள் தவிர இதர பெண்மனிகள் 99 சதவீதம் முழு புர்க்காதான்.

இந்நாட்டின் தலைநகரிலும் டாஸ்மாக் போல எல்லா இடங்களிலும் ஆல்கஹால் கிடைக்கிறது.

நகரை அழகுபடுத்த நிறையவே செலவு செய்கிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லும் அழகு படுத்தல் கணக்குக்கு நம்முரில் சில நூறு கிலோமீட்டர்களை அழகு படுத்தலாம். ஏர்போர்ட்டில் ஆரம்பித்து மெயின்ரோடு வரைக்கும் குத்துமதிப்பாக 5 கிலோமீட்டர்கள். இதை அழகுபடுத்த 1 பில்லியன் டாலர்கள் செலவழித்ததாக சொல்கிறது பாக்தாத் ஏர்போர்ட்டும், முனிசிபாலிட்டியும். என்ன அழகு செய்திருக்கிறார்கள் என்றால் பேரிச்சை மரத்தை இரு வரிசைகளாக பிரித்து நட்டிருக்கிறார்கள். இருபக்கமும் சிறிய அளவில் புல்தரை 5 கிலோமீட்டருக்கு. செயற்கை நீரூற்று. நம்மூர் கோவில்களில் அசிங்கப்படுத்துவதற்கென்றே இடப்படும் டைல்ஸ்கல் ஒட்டி சம்பந்தமே இல்லாத இடங்களில் சுவர்கள்.. வெல்கம் டு பாக்தாத் என மூன்று இடங்களில் போர்டுகள். இதற்கு 1 பில்லியன் டாலர்களாம். நம் அரசியல்வாதிகள் தெய்வமாக தோன்றுகிறார்கள் இப்போது.

அவ்வப்போது எங்காவது வெடித்துக்கொன்டிருந்தாலும் அது ஒரு விஷயமே இல்லாத அளவு பழகி இருக்கிறார்கள்.

நல்ல ஹோட்டல்கள் நிறைய வந்திருக்கிறது.

பெரும் மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தனை அபத்திர சூழலிலும் இத்தனை முதலீடு செய்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்

2 மில்லியன் டாலருக்கு வேலை இருக்கு, செய்றீங்கன்னா சொல்லுங்க, முடிச்சிருவோம் எனச் சொல்லும் கோட்டு போட்ட பந்தா பேர்வழிகளின் எண்ணிக்கை கூடுதலாகியிருக்கிறது. நானும் சிரிக்காமல் 5 மில்லியனுக்கு குறைவாய் வேலைகளை எடுப்பதில்லை எனச் சொல்லி அவர்கள் நெளிவதை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இதில் மேற்சொன்ன எதுவுமே இல்லையென்றாலும் விலைமதிப்பற்ற பத்திரமான சூழல் பாஸ்ராவில் உண்டு. மாதம் ஒரு குண்டு வெடித்தாலே செய்தியாகும் அளவு நல்ல சூழல்.
இன்னும் இரு நாட்கள் பாக்தாத்தில் இருப்பேன்.

12.04.2015ல் எழுதியது

ஞாநி எனும் அஞ்ஞாநிக்கு ஒரு கேள்வி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாம்...
எங்கள் தலைமுறையின் ”ஞாநி”(?)யாம்....
சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் பார்ப்பனராம், (சட்டைக்குள் நெளியுது பூணூல் என கட்டுரை எழுதப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்)
அணு விஞ்ஞானியாம்....
கடுகில் இருந்து கக்கூஸ் வரைக்கும் எதற்கும் கருத்துச் சொல்லும் அறிவுச்சுடராம்...
”ஞாநி” என்ற சங்கரனுக்கு கருங்குளம் மா முருகன் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், மழுப்பாமல் பதில் சொல்ல முடியுமா ஞாநி என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஞானசூன்யத்திற்கு?
கருத்துச்சுதந்திரம் குறித்து காதுகிழியப்பேசும் இந்த ஞாநி சங்கரன் தன்னை ஃபேஸ்புக்கில் எதிர்த்து எவன் கேள்வி கேட்டாலும் ”பிளாக் பாண்டி”யாக மாறி வாயை அடைக்கும் கருத்து புர்ச்சிவாதி..
இன்னும் இந்தாளெல்லாம் கருத்துச் சொல்லி நாலுபேர் கேக்குறான்னா, சமூகம் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு.
சில முட்டாள்கள் பெரியார் படத்துக்கு மூத்திராபிஷேகம் செய்கிறார்கள். 93 வயதிலும் மூத்திரம் போகக் குழாய் வைத்தப் பையைக் கூட தூக்கிக் கொண்டு கடைசி வரை சமூக நீதிக்காக பிரசாரம் செய்த பெரியாருக்கு மூத்திராபிஷேகம் செய்தாலும் அவருக்குப் பெருமைதான். உங்கள் பாலாபிஷேகம் சந்தனாபிஷேகங்களை விட ! சமூக இழிவைப் போக்க உழைப்பவர்களுக்கு வேறு எதுவும் இழிவாகாது.
-ஞாநி சங்கரன்
# நாத்திகர்களைப் பொருத்தவரை காலாதீத மெய்ப் பேரறிவுப் பேரின்பப் பேருணர்வாம் பிரபஞ்ச பேரான்மாவோ அதன் பகுதியாய் பெருங்கடலின் பேரலை போன்ற ஜீவ ஆன்மாவோ இல்லை எனும் போது வெறும் காகிதமான ஈவெரா படத்திற்கு சிறு நீர் குளியல் செய்வித்தது எப்படி என்றோ இறந்து போன ஈவெராவை அவமதிப்பதாகும்..?
எந்த ஆத்திகனும் கருங்கல் சிலையே ஐம்பொன் சிலையே என்று வழிபடுவதில்லை..எங்கும் நிறைந்த கால தேச வர்தமானங்களைக் கடந்த மெய்ப் பேரறிவுப் பேருணர்வையே ஒரு உருவில் வரித்து வழிபடுகிறான்...
அவன் வழிபடுவது கல் எனக் கூறி செருப்பால் அடிப்பதை நியாயப் படுத்திய ஈனர்கள் ஈவெரா சிலைகளும் படங்களும் கல்லும் காகிதமும் தானே என்பதை ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.?
கடவுள் இருந்தால் கடவுள் விக்ரகத்தை செருப்பால் அடிக்கும் போது வந்து தடுக்கட்டும் என்றவர்கள் வெறும் காகிதத்தை ஈவெரா எனக் கூறுவீர்களானால் அந்த ஈவெரா வந்து இப்போது தடுக்கட்டும் என்று மூத்ராபிஷேகம் செய்பவன் கேட்க மாட்டானா..?

”நோ தங்கமணி... எஞ்சாய்..???” குறும்படம்

”நோ தங்கமணி... எஞ்சாய்..” குறும்படம் குறித்த எனது எண்ணங்கள்..
மத்திய கிழக்கில் வாழும் மக்கள் கீழுள்ள ஏதேனும் ஒரு வகையைச் சேர்ந்தவர்கள்.
01. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் லீவில் வருவோர்கள், ( இவர்கள் கிட்டத்தட்ட 80%)
02. எண்ணெய் துரப்பணப்பணியில் வேலை செய்யும் ஆட்கள். ( இவர்களுக்கு 28 நாட்கள் வேலை 28 நாட்கள் லீவ் என்ற சைக்கிளில் வேலை செய்வோர். இவர்கள் அதிகபட்சம் 2% இருக்கலாம்)
03. மனைவி, மக்களுடன் கம்பெனி செலவிலோ அல்லது சொந்த செலவிலோ வேலை செய்யும் நாட்டிலேயே தங்கி இருப்போர். இவர்கள் ஒரு 10 சதவீதம் தேறுவார்கள்.
04. பிடித்தால் 1வருடம் வேலை செய்துவிட்டு பின்னர் குடும்பத்துடன் ஓரிரு ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வந்து செல்வோர்.
05. ஆண்டுக்கணக்கில் ஊருக்குச் செல்ல முடியாதோர். ( விசா பிரச்சினைகள், ஊரில் வாங்கிய கடன், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி இன்னும் பல காரனங்கள்)
இந்த மேற்சொன்ன வரிசையில் மூன்றாவதாக இருப்போர்களில் பலர் என் நண்பர்கள். நல்ல வாசிப்பும், இருக்குமிடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள தெரிந்தவர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என பாசத்துடன் இருப்போர். இப்படி குடும்பத்துடன் வாழ வாய்ப்பு பெற்றோர் பாக்கியசாலிகள்.
அவர்களின் வாழ்க்கையில் மனைவியர் ஊருக்குச் சென்ற சில நாட்களில் எப்படியெல்லாம் குடும்ப நினைவுகள் வாட்டுகிறது, குழந்தைகளை பிரிந்து எப்படி கஷ்டப்படுகின்றனர் என்பதையும், பேச்சுலர் வாழ்க்கையில் சோற்றுக்கு என்ன செய்கிறார்கள் என்பதையும் நகைச்சுவையாக ஒரு குறும்படமாக எடுத்துள்ளனர்.
குறும்படம் என்றாலும் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஓடுகிறது. செண்டிமெண்ட், நகைச்சுவை எல்லாம் சேர்ந்திருக்கிறது.
“கஞ்சிக்கு எதுக்குடா கார்னிஷ்” போன்ற ஒன்லைனர்கள் உண்டு.
இதில் நடித்த, இயக்கிய, இசையமைத்த எல்லோருமே புதுமுகங்கள். முதல் முயற்சியும்கூட.
முதல் முயற்சியிலேயே இருப்பதைக்கொண்டு அழகாக செய்திருக்கின்றனர். லைட்டிங், இசை, இயக்கம் இவற்றில் தடுமாற்றம் ஏதுமின்றி செய்திருக்கின்றனர் என்றாலும் அமெச்சூர்தனம் இருப்பதை மறுப்பதற்கில்லை. இனி வரும் குறும்படங்களில் இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என நம்பலாம்.
முதல் முயற்சியிலேயே இந்தளவுக்குச் செய்த அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

Friday, April 3, 2015

ரஜினி நடித்த பழைய திரைப்படங்கள் பற்றிய எனது குறிப்புகள்


ஆறிலிருந்து அறுபதுவரை.... சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். ஒரு 60 வருட சரித்திரத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார் எஸ்.பி முத்துராமன். முரட்டுக்காளையும், சகலகலாவல்லவனையும் பார்த்து எஸ்.பி.முத்துராமனை தவறாக கணித்திருக்கிறேன். ரஜினிகாந்துக்கு எப்போதும் சொல்லிக்கொள்ள ஒரு படம் இது. எந்த வித மிகை நடிப்புமின்றி சந்தானமாக அருமையாக செய்திருக்கிறார். ”கண்மனியே காதல் என்பது” பாடலை எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக நினைத்திருந்தேன். இன்னொருமுறை இந்தப்பாடலின் வீடியோவை காணும் தைரியம் இல்லை. ரஜினியிடமிருந்து மிக அருமையான அனுபவம்.புவனா ஒரு கேள்விக்குறி.. 

”அண்ணே, நாகராசு அண்ணே.. நீங்க கடப்பாறைய முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்டா சரியாப்போயிரும்னு நெனைக்கிறீங்க. ஆனா, அது வயித்த கிழிக்காம விடாதுண்ணே...” சிவக்குமாரையும் வில்லனாக ஒத்துக்கொள்ள வைத்ததும், என்னதான் மோசமான ஆசாமியாக இருந்தாலும் நல்லவனாக, வாழ்க்கையின் ஆதாரத்துக்காக தியாகங்களைச் செய்பவராக ரஜினிகாந்தையும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார். சிவக்குமாருக்கும், ரஜினிக்கும் நடக்கும் உரையாடல்கள் இன்றும் எங்கோ இரு நண்பர்களுக்குள் நடந்துகொண்டுதான் இருக்கும். தனது ஆசாபாசங்களை வாய்விட்டுக்கேட்கிறாரே ஒழிய அதை உரிமையுடன் எடுத்துக்கொள்வதில்லை ரஜினி, உரிமை இருந்தும். உலகம் யாரை நல்லவனாக, வெற்றியாளனாக கருதுகிறது என்பதற்கும், நல்லதுக்கு காலமில்லை என்பதையும் கருப்பு வெள்ளைக்காலத்திலிருந்தே சொல்லி வருகின்றனர்.

அரிச்சந்திரனை தோல்வியடைந்தவனுக்கு உதாரனமாக, பிழைக்கத்தெரியாதவனுக்கு உதாரனமாக எஸ் பி முத்துராமன் இந்தப்படத்திலும், ஆறிலிருந்து அறுபதுவரை படத்திலும் சொல்லி இருக்கிறார். ஆனால், அரிச்சந்திரனாக முயல்பவர்களே வாழ்க்கையில் வெற்றியடைவதாக காட்டியிருப்பதில் இருந்தே இயக்குணர் சொல்ல வருவதை சிறப்பாக சொல்கிறார். நாகர்கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது, அப்போது. கன்யாகுமரியும் எப்படி கட்டிடங்களால் நிரப்பப்படாமல், சுத்தமான கடற்கரையாக காட்சியளிக்கிறது. இப்போதைய நாரோயில் ஒரு குப்பைமேடாகிவிட்டது. போதாக்குறைக்கு எழுத்தாளர்களால் நிரம்பி வழிகிறது.. :) ரஜினியின் இன்னொரு அருமையான படம் ”புவனா ஒரு கேள்விக்குறி” 

ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் இன்றைய ஸ்பெஷல்.. 

இவ்வளவு அருமையாக நடிக்கும் ஒருத்தரைத்தான் மசாலா, இமேஜ், சூப்பர் ஸ்டார் என்ற பொட்டிக்குள் போட்டு அடைத்துவைத்து அவரை இமேஜ் கைதியாக்கி வைத்திருக்கின்றனர்? அதுவும் இந்தப் படத்தின் இறுதியில் வரும் கொஞ்சம் வயதான ரஜினி சான்ஸே இல்லை. பார்வை, உடல் மொழி, வசன உச்சரிப்பில் கலக்குகிறார். ஒரு பெண் படிதாண்டி அனுபவிக்கும் கொடுமைகளும், அதனால் அவள் குடும்பமும். கணவனும் அனுபவிக்கும் மனக்கஷ்டமும்தான் படம். ரஜினி ஆரம்பத்தில் இருந்தே இயல்பான நடிப்பு. இடதுகாலும் வலதுகாலும் நிலத்துல படாம சுத்தி சுத்தி அடிப்பதோ, ஏர்ல பறந்து பறந்து அடிப்பதோ இல்லாமல் கிராமத்து சண்டைகள்..பிடிக்காத மனைவியிடம் (அம்பிகா) கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள், ... எளிமையான ஆனால் தைக்கும் வசனங்கள், முத்து படப்பாடலில் வரும் கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன், கழுத்துவரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் என்பதை இந்தப்படத்தில் கூலியாட்களுக்கு அறிவுரையாக சொல்கிறார் ரஜினி. எஸ்.பி முத்துராமனின் அருமையான இயக்கத்தில் எங்கேயோ கேட்ட குரல். இந்தப் படங்களையெல்லாம் பார்க்காமலேயே 80களில் இருந்து ரஜினி ரசிகன் நான்.இனி ஆயுட்கால ரஜினி ரசிகனாத்தான் இருந்தாகனும்போல.. :)