Friday, April 17, 2015

Wake up Sid, Hindi

வேக அப் சித் - ஹிந்தி 

இப்படி ஒரு படம் வந்து போனதே B4U சேனலில் பார்த்த பின்னர்தான் தெரிந்தது. பணக்கார அனுபம் கெர்ரின் மகன் சித்தார்த். (Ranbir Kaboor) செல்லமாக சித். எல்லா பணக்கார பையன்கள் போலவே பொறுப்பில்லாமல் வளர்கிறார். ஆங்கிலம் தெரியாத, தெரிந்துகொள்ள முயலும் அம்மாவை மதிக்காத, அம்மாவின் அருமை தெரியாத, வீட்டில் இருக்கும்போதே தினமும் கிரெடிட் கார்டில் பீட்சா வரவழைத்துச் சாப்பிடும் அளவு பணத்திமிரில் வளர்கிறார். 

கல்லூரியில் படிக்கும் சித் ஆண்டு இறுதி தேர்வில் ஃபெயில் ஆகிறார். கல்லூரிதான் முடிந்துவிட்டதே, ஒழுங்காக கம்பெணியில் வந்து வேலைக்குச் சேர் எனச் சொல்லும் அப்பாவிடம் ஒப்புக்காக ஒரு மாதம் வேலை செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு பாதியிலேயே ஓடுகிறார். எதிலும் ஒரு அலட்சியம், காசு எப்போதும் கிடைக்கும் தைரியத்தில் குறிக்கோள் ஏதுமில்லாமல் சுத்திவரும் சித்தார்த் அம்மாவை ஒருநாள் அவமரியாதையாக பேசிவிட அப்பா சித் தை ஒழுங்காக அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டு மதித்து நடக்க வேண்டும், இது என் வீடு, இனி நான் சொல்வதைக் கேட்பதாய் இருந்தால்மட்டும்தான் இங்கே இடம் எனச் சொல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறார். தனக்குப் பிடிக்காத ஒரு கல்லூரி நண்பியின் நண்பி ஆயிஷாவுக்கு ( Konkona Sen Sharma) நண்பராகிறார். 


அவள் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ளவும், எழுத்தாளர் ஆவது என்ற லட்சியத்துடன் வருகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் சித் ஆயிஷாவுடன் தங்குகிறான். நண்பியாய் இருந்தாலும் பத்திரிக்கையில் வேலை செய்துவிட்டு வரும் ஆயிஷாவுக்கு வீட்டை குப்பைக்காடாக வைத்திருக்கும் சித்தின் பொறுப்பின்மை மீது எரிச்சல் வருகிறது. 

அவனது புகைப்படத்திறமை மீது ஏற்படும் நம்பிக்கையால் அவனை ஒரு கம்பெணியில் பயிற்சியாளனாக வேலைக்குச் சேர்த்து விடுகிறாள். இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருப்பதில் ஆயிஷவுக்கு சித் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வருகிறது. அதை உணராத சித் ஆயிஷாவினால் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வேலையிலும் பொறுப்பாகி பின்னர் தன் பெற்றோருக்கு செய்த அவமரியாதைகளை நினைத்து வருந்தி அப்பாவிடமும், அம்மாவிடமும் மன்னிப்புக் கேட்கிறான். அப்பாவும் வீட்டுக்கு வா என அழைக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கிறான். வீட்டிற்குச் சென்றதும் ஆயிஷா இல்லாதது வெறுமையை அளிக்கிறது. தானும் காதலிப்பதை உணர்ந்து அவளுடன் இணைகிறான். 

மிக மென்மையான காதல் கதை. மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள். நண்பர்களாக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காதலில் விழுவது அழகு. மும்பையை ரசிக்கும் மக்களுக்கு நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். மிக அழகான மும்பையை திரையில் காண்பிக்கிறார்கள். ஆயிஷா - இன்றைய இந்திய இளைஞிகளின் முகம். தன்னம்பிக்கையும், புதிதாய்ச் செய்யவும், தன்காலில் நிற்கவும் தயங்காதவள். அவள் பெங்காலி என்பதும், மும்பைக்கு இடம் பெயர்வதுவரை வெளியிடங்களுக்குச் செல்லாதவள். மும்பையில் தனக்கான இடத்தை தேடிக்கொள்கிறாள். பயமும், சந்தேகமுமாக மும்பையில் இறங்கும் ஆயிஷாவுக்கு நல்ல நட்புகள், வேலையில் திருப்தி எல்லாம் சேர்ந்து அவளுக்கு மும்பை மனதுக்கு நெருக்கமாகிறது. இறுதியில் சித்துடன் சேர்வதுடன் படம் நிறைவு. 

ஒளிப்பதிவு கலக்கல். ஆயிஷவாக வரும் நடிகை நம்மூர் சரிதாவின் நகல். அப்படியே சரிதாவை இளமையாக பார்த்ததுபோன்ற ஒரு தோற்றம். நிறமும் அப்படியே. முக பாவங்கள், சிரிப்பு எல்லாம் சேர்ந்துதான் படத்தை முழுமையாக பார்க்க வைத்தது என நினைக்கிறேன். சித்தாக வருபவரின் பால்வடியும் முகம், பணக்காரக் குழந்தைகளின் தெனாவட்டு, அப்பாவின் காசை தண்ணீராக செலவழிக்கும் விதம் எல்லாம் மிக அருமையாக செய்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு அழகான படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போனதோ? வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள். இயக்கம் : அயன் முகெர்ஜி

No comments: