”நோ தங்கமணி... எஞ்சாய்..” குறும்படம் குறித்த எனது எண்ணங்கள்..
மத்திய கிழக்கில் வாழும் மக்கள் கீழுள்ள ஏதேனும் ஒரு வகையைச் சேர்ந்தவர்கள்.
01. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் லீவில் வருவோர்கள், ( இவர்கள் கிட்டத்தட்ட 80%)
02. எண்ணெய் துரப்பணப்பணியில் வேலை செய்யும் ஆட்கள். ( இவர்களுக்கு 28 நாட்கள் வேலை 28 நாட்கள் லீவ் என்ற சைக்கிளில் வேலை செய்வோர். இவர்கள் அதிகபட்சம் 2% இருக்கலாம்)
03. மனைவி, மக்களுடன் கம்பெனி செலவிலோ அல்லது சொந்த செலவிலோ வேலை செய்யும் நாட்டிலேயே தங்கி இருப்போர். இவர்கள் ஒரு 10 சதவீதம் தேறுவார்கள்.
04. பிடித்தால் 1வருடம் வேலை செய்துவிட்டு பின்னர் குடும்பத்துடன் ஓரிரு ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வந்து செல்வோர்.
05. ஆண்டுக்கணக்கில் ஊருக்குச் செல்ல முடியாதோர். ( விசா பிரச்சினைகள், ஊரில் வாங்கிய கடன், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி இன்னும் பல காரனங்கள்)
இந்த மேற்சொன்ன வரிசையில் மூன்றாவதாக இருப்போர்களில் பலர் என் நண்பர்கள். நல்ல வாசிப்பும், இருக்குமிடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள தெரிந்தவர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என பாசத்துடன் இருப்போர். இப்படி குடும்பத்துடன் வாழ வாய்ப்பு பெற்றோர் பாக்கியசாலிகள்.
அவர்களின் வாழ்க்கையில் மனைவியர் ஊருக்குச் சென்ற சில நாட்களில் எப்படியெல்லாம் குடும்ப நினைவுகள் வாட்டுகிறது, குழந்தைகளை பிரிந்து எப்படி கஷ்டப்படுகின்றனர் என்பதையும், பேச்சுலர் வாழ்க்கையில் சோற்றுக்கு என்ன செய்கிறார்கள் என்பதையும் நகைச்சுவையாக ஒரு குறும்படமாக எடுத்துள்ளனர்.
குறும்படம் என்றாலும் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஓடுகிறது. செண்டிமெண்ட், நகைச்சுவை எல்லாம் சேர்ந்திருக்கிறது.
“கஞ்சிக்கு எதுக்குடா கார்னிஷ்” போன்ற ஒன்லைனர்கள் உண்டு.
இதில் நடித்த, இயக்கிய, இசையமைத்த எல்லோருமே புதுமுகங்கள். முதல் முயற்சியும்கூட.
முதல் முயற்சியிலேயே இருப்பதைக்கொண்டு அழகாக செய்திருக்கின்றனர். லைட்டிங், இசை, இயக்கம் இவற்றில் தடுமாற்றம் ஏதுமின்றி செய்திருக்கின்றனர் என்றாலும் அமெச்சூர்தனம் இருப்பதை மறுப்பதற்கில்லை. இனி வரும் குறும்படங்களில் இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என நம்பலாம்.
முதல் முயற்சியிலேயே இந்தளவுக்குச் செய்த அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
No comments:
Post a Comment