Wednesday, December 24, 2014

ஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு

திண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந்து நத்தம் போகும் வழியில்
தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் ஒரு கும்புடு போட்டுச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் தாடிக்கொம்பு மக்களே அப்படி ஒரு பெருமாள் கோவில் இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார்கள், பஞ்சத்தில் அடிபட்ட பெருமாள் கோவிலாக இருந்தது. அப்படி யாருமே செல்லாத கோவில் அது. இத்தனைக்கும் அருமையான சிற்பங்களைக்கொண்ட வசந்த மண்டபம் உண்டு. கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டும் வந்து மன்மதன், ரதி சிலைக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். அருகிலிருக்கும் அழகிய சிற்பங்கள் கண்ணிலேயே படாது. :)

ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கிருக்கும் அர்ச்சகரிடம் சொல்லிவிட்டு சக்கரத்தாழ்வார் சன்னிதி செல்லும் வழியில் புதர் மண்டியிருப்பதை சுத்தம் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு 3 வாரங்களில் சுத்தம் செய்து கொடுத்தேன். அர்ச்சகருக்கும் மிகுந்த சந்தோஷம். இந்தக்கோவிலையும் மதிச்சி ஒருத்தன் வாரான், மேலும் கோவிலுக்கு உழவாரப்பணி செய்யவும் முன்வருகிறானே என. அதற்கு பிரதிபலனாக நின்ற பெருமாளுக்கு 10 அடிதூரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல அனுமதிப்பார், சனிக்கிழமைகளில். நானும் வாராவாரம் காலையில் சாப்பிடாமல் வந்து சகஸ்ரநாமம் சொல்லிவிட்டு,பின்னர் தாடிக்கொம்பிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வேன். 

கோவிலுக்கு எப்படி மக்களை வரவழைப்பது என்பது அங்கிருந்த அர்ச்சகரது கவலையாக இருந்தது. இத்தனை தேஜஸான பெருமாள், அழகிய சிற்பங்கள், அருமையான சூழலில் அமைந்த கோவிலாக இருந்தும் யாரும் வருவதில்லை என்ற கவலை அவருக்கு. யார்வந்தாலும், வராவிட்டாலும், பெருமாளுக்கு தினமும் விதவிதமாய் அலங்காரம் செய்வார். ஒருநாள் காய்கறிகளால் பெருமாளுக்கு அலங்காரம் செய்திருந்தார். அன்றைக்கு பெருமாள் அப்படி ஒரு அழகாக இருந்தார். திண்டுக்கலில் ஃபேமஸாக இருந்த துணிக்கடை எஸ்.கே.சீஸ் (இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன்) அதன் முதலாளி தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது நானும், என் கல்லூரி சீனியரும் அப்போதைய எனது பாஸுமான ரமேஷ்குமார் அண்ணனும், அர்ச்சகரும் இருந்தோம். பெருமாளின் அலங்காரத்தைக்கண்டு அசந்துபோய் நீண்ட நேரம் சன்னிதி முன்பு அமர்ந்துவிட்டுச் சென்றார். அதற்கு அடுத்தவாரமே சனிக்கிழமை மிகப்பெரிய திருவிழா அளவுக்கு அலங்காரங்கள் செய்ய உபயமும், பிரசாதத்துக்கு ஏற்பாடும், ஒரு சிறு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்தார். 

திண்டுக்கல் மக்களுக்கு தங்களுக்கு இத்தனை அருகில் இப்படி ஒரு கோவில் இருப்பதே அப்போதுதான் கண்ணுக்கு தெரிந்தது. அதன் பின் நான் 100 அடி தள்ளி அமர்ந்துதான் சகஸ்ரநாமம் சொல்லும்படி ஆனது. அவ்வளவுதூரம் மக்கள்கூட்டம். பெருமாளுக்கு கூட்டம் அம்ம ஆரம்பித்தது. 

ஒருகாலத்தில் கேட்க நாதியில்லாத கோயிலில் பார்க்கிங் டிக்கெட் போடும் அளவு கார்களும், பைக்குகளும். அடுத்து கோவிலின் உள்ளே வலது பக்கம் இருந்த ஒரு பைரவர் சிலைக்கு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் என ஒரு போர்டு மாட்டினார். தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். எஸ்கேஸி உபயத்தில் சில வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் எஸ்கேஸி முதலாளியே அபிஷேகம் செய்ய சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் நீங்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இப்போது பெருமாளுக்கு இணையாக ஸ்வர்ண ஆகர்ஷன பைரவருக்கும் மக்கள் கூட்டம். இந்த வசதிவேண்டி அம்மும் கூட்டம் மறந்துபோனது அங்கிருக்கும் அழகான சிற்பங்கள். 2008 வாக்கில் வீட்டுக்காரம்மாவை அழைத்துச் சென்றிருந்தேன் இந்தக்கோவிலுக்கு, கொஞ்சம் ஆன்மீகம் இல்லாத்தன்மையாக தெரிந்தாலும் என் அனுபவத்தில் இந்தக்கோவிலிலும், கல்லுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் உழவாரப்பணிகள் செய்த சில மாதங்களிலேயே சம்பந்தமே இல்லாமல் வெளிநாடு வேலைக்கு தேர்வானேன். (மிகப்பெரிய கூட்டத்தில் நான் தேர்வானது ஒரு அதிசயம்) 

இன்று ராமச்சந்திரன் உஷா எழுதிய பதிவில் இருந்த ”பைரவர்” என்ற வார்த்தை இந்த ஞாபகங்களைக் கிளறிவிட்டது. வாய்ப்புக்கிடைத்தால் தாடிக்கொம்பிலிருக்கும் அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாளையும், தாயாரையும், ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். சாம்பிளுக்கு ஒரு சிற்பத்தின் படம். 


கோவில் குறித்த தகவல்களும், சிற்பங்களின் படங்களையும் இங்கு காணலாம். http://thadicombu-sri-soundararaja-perumal.blogspot.com/

No comments: