Friday, December 26, 2014

Qatar National Day (18.12.2014)

2004 நவம்பரில் 15 நாள் வேலையாக மஸ்கட்டிலிருந்து தோஹா - கத்தார் வந்து சேர்ந்தேன். வந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு பம்பரமாய் சுற்றியதில் ஊர் பிடிபட்டு விட்டது. மஸ்கட்டில்தான் எனக்கு வேலை என்றாலும் ஆன் அரைவல் விசாவிலேயே 6 மாதங்களுக்கு மேலாக கழித்து வந்தேன். விசா காலாவதியாகும்போது பஹ்ரெய்னுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுத்து போகும் விமானம் திரும்பிவரும்போதே வந்துவிட்டால் அடுத்த 28 நாளைக்கு கவலையில்லை. 

மகா மோசமான சாலைகள், போக்குவரத்து விதிகளை மதிக்காத கத்தாரிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லாத லேபர் டிபார்ட்மெண்டுகள், யார்மீது தப்பிருந்தாலும் உள்ளூர் கத்தாரிகளுக்கே சப்போர்ட் செய்யும் போலிஸ் என மூன்றாம்தர அரபு நாடாகத்தான் எனக்கு கத்தார் தெரிந்தது. 

2006 டிசம்பரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகளை கத்தார் நடத்த வாய்ப்பு பெற்றிருந்தும் 2006ம் ஆண்டு செப்டம்பர் வரை எந்தவித முன்னேற்றமும், வசதி வாய்ப்புகள் எதையும் செய்யாமல் இருந்தது. திடீரென முழித்துக்கொண்டு செப்டம்பர் முதல் நவம்பர் இறுதிக்குள் ஏனோ, தானோ என சாலைகளும், மானாவாரியாக ரோட்டை தோண்டி எடுப்பதுமாக என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் வேலை செய்து ஒருவழியாக டிசம்பர் 1, 2006ல் ஓப்பனிங் செரிமொனியில் ஒர் கலக்கு கலக்கினார்கள். 

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் முடிந்த பின்னரே கத்தாரை இப்படியெல்லாம் முன்னேற்ற முடியாது என எண்ணி முழுத்திட்டங்கள் தீட்டி சாலைகளும், பாலங்களும், வசதி வாய்ப்புகளும், கனினி மயமாக்கங்களுமாக கத்தார் கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னால் நிமிர ஆரம்பித்தது. அழுது வடிந்துகொண்டிருந்த போலிஸ் துறை மிக நவீனமயமாக்கப்பட்டு கத்தாரின் எந்தப்பகுதியில் விபத்து நடந்தாலும் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் தரைவழியாகவோ, இல்லை ஆகாய மார்க்கமாகவோ சென்றடைய திட்டம் தீட்டி செயலும் படுத்தினர். நம்மூர் பையன் இந்த ஏர் ஆம்புலன்ஸால் காப்பாற்றப்பட்டான். பின்னர் சிவில் கேஸ்களை கவனிக்க தனி போலிஸ், போக்குவரத்துக்கென தனிப்போலிஸ், அவசரங்களை மட்டும் கவனிக்க தனி போலிஸ், தீயனைப்புக்கென தனிப்போலிஸ் என ஏரியா பிரித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. தயவு தாட்சன்யம் இன்றி சாலை விதிகளை மீறுவோர்க்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் வியாபாரம் நடத்துவதற்கான சூழலை நன்றாக்கினார்கள். இருப்பினும், விசாக்கள் பெறுவது எப்போதும் சிக்கலான காரியமாகவே இருந்து வருகிறது. 

இத்தனை வளர்ச்சிக்குப்பின்னரும் அடிப்படைவாத இஸ்லாம் கண்ணுக்குத்தெரியாமல் ஆனால் தெளிவாக இருந்து வந்தது. 2008 வாக்கில் கொஞ்சம் சரியானது. இப்போது அவ்வளவாக பிற மதத்தினருக்கு கெடுபிடிகள் இல்லை. 2020ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த உரிமை பெற்றுள்ளது, கத்தார். அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. நிச்சயம் சிறப்பாக செய்து முடிப்பார்கள். இத்தனை வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தொழிலாளர் நலன் மட்டும் இன்னும் அத்தனை முன்னேற்றம் அடைந்துவிடவில்லை. இன்றும் எக்ஸிட் எனப்படும் ஸ்பான்சரின் ஒப்புதலின்றி நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. எத்தனை கொடுமையான முதலாளியாக இருந்தாலும் வேறு கம்பெனிக்கு எளிதா மாறும் வாய்பில்லை. அங்கு வேலை செய்வோர் குடும்பத்தை அழைத்து வந்து கத்தாரில் வாழ்வது அத்தனை எளிதில்லை. பணக்காரர்களின் தேசமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

இன்று (18 December 2014) அதன் நேஷனல் டே எனப்படும் தேசிய தினம். நான் பார்த்த ஒரு கிராம ஏர்போர்ட் போல இருந்த தோஹா ஏர்போர்ட் இன்றைக்கு ஹமது இண்டர்நெஷனல் ஏர்போர்ட்டாக பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது. வளர்ச்சிகளுக்கு வாழ்த்தும் இந்நேரத்தில் கத்தார் அதன் வளர்ச்சிக்கு காரனமான வெளிநாட்டவர் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பது எனது ஆசையும், அவர்களது தார்மீக கடமையும் கூட.

Published in Face Book on 18th December, 2014

No comments: