Tuesday, December 23, 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)

 ..... ராசி நேயர்களே.. ( உங்க ராசியை கோடிட்ட இடத்தில் நிரப்பி வாசிக்க ஆரம்பிக்கவும்) 

இந்த சனிப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பொதுவாக நல்லதே பெரும்பன்மையாக நடக்கும். சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், பகைவர்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் வலிமையான பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம். மேலும், தேவையில்லாத சண்டைகள் உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். 

பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருப்போர் கவலைகொள்ள தேவையில்லை. எத்தனை அடி வாங்கினாலும் உங்களை எல்லோரும் “நல்லவண்டா” எனப்புகழக்காண்பீர்கள். 

தொழில் மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கியமாக கடின உழைப்பும், நாட்டு நிலவரத்தையும் நன்கு தெரிந்திருத்தல் நல்லது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். 

குழந்தைகள் மூலம் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. அவர்களை கண்டிப்பதன் மூலம் உங்கள் மரியாதைக்கு பங்கம் வர வாய்ப்புண்டு. எனவே கவனம். 

காசு, பணம் விரயமாகும் காலமிது. எனவே இருக்கும் பணத்தில் கத்தி, கபடா போன்ற படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வதை தவிர்க்கவும். 

பெண்களுக்கு :- கனவர்கள் கைக்குள் அடங்கி இருப்பார்கள். மாமியார்களால் மற்றும் நாத்தனார்களால் தொல்லை உண்டு. அனுசரித்துப்போவது நல்லது. மாமியாருக்கு பிடித்த சீரியல் பார்க்க தினமும் அரைமணிநேரம் ரிமோட்டை தருவது நல்ல பலனை தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீண்ட நாட்களாக மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். 

மாணவர்களுக்கு:- நன்றாக படித்தால் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு. தினமும் சரஸ்வதி ஸ்லோகம் சொல்லிவர படிப்பும், பெற்றோர்கள் சொல்வதைக் கேட்க நல்லபிள்ளை எனப் பெயர் வர வாய்ப்புண்டு. 

உத்யோகத்தில் இருப்போர்களுக்கு :- கடும் உழைப்பு நல்ல பலனைத்தரும். சட்டத்திற்கு உட்படாத காரியங்களை செய்ய வேண்டாம். லஞ்சம் வங்குவதை எப்போதும் தவிர்ப்பது கடமை என்றாலும் நமநமக்கும் கையை அமுக்கி வைத்துக்கொள்வது வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும். 

எல்லோருக்குமான பொதுப்பலன்கள் :- தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவைக் குறைத்தால் சேமிப்பு வளரும். அண்ணன் தம்பி உறவு வலுப்பட மனைவியரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டாம். அக்காள் தங்கைகள் பொறாமைப் படுவதைக் குறைக்க வேண்டிய நேரமிது. 

சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள்ளோதரை படையலும், நல்லெண்ணெய் விளக்கும் இட்டு வழிபட்டால் சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். சுபம்.

No comments: