Monday, December 29, 2014

7.83 ஹெர்ட்ஸ் - சுதாகர் கஸ்தூரி


தமிழில் அறிவியல் புனைகதைகளின் அரசன் என்றால் முதலில் சுஜாதா.

அவரது ஏன் எதற்கு எப்படி மக்களிடம் பெற்ற வரவேற்பும் இன்றும் விரும்பிப் படிக்கக்கூடிய புத்தகமாக இருப்பதற்கும் வாசகனின் தரத்துக்கு இறங்கி வந்து எழுதியதே. இதையே ஒரு குறையாகவும் அப்போது சொல்லிக்கொண்டிருந்தனர். 

அறிவியலை நீர்த்துப்போகச் செய்து வாசகனை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் என. என் இனிய இயந்திரா நான் வாசித்து அதிசயித்த முதல் சயின்ஸ் பிக்‌ஷன். அடுத்து மீண்டும் ஜீனோ. 

அந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரசித்து வாசித்தது சுதாகர் கஸ்தூரியின் 6174. முதலில் புத்தகத்துக்கு வெறும் எண்களை மட்டுமே தலைப்பாக வைத்து அது பெருவாரியான வரவேற்பைப்பெற்றதும் அதிசயமே. 

தமிழ் எழுத்துச் சூழலில் இப்படி தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ கணக்கு புத்தகம்போல என தாண்டிச் செல்வோரே அதிகம். அதன் நடையும், கட்டமைப்பும் மொழியும் வாசகர்களை பெரும் விளம்பரம் ஏதுமின்றியே தேடிச்சென்றடைந்தது. 

சுதாகர் கஸ்தூரியின் அடுத்த நாவல் 7.83 ஹெர்ட்ஸ். மனிதனின் எண்ன அலைகளை கட்டுப்படுத்த வசதியான ஓர் அலைவரிசை. அப்படி இந்த அலைவரிசைக்கு மனிதர்களை வரவைத்து அவர்கள் மூலம் நாசவேலைகளைச் செய்தலின் சாத்தியங்களை செயலாக்க முனையும் ஒரு குழு., அப்படி நடந்தால் என்ன மாதிரியான அழிவுகள் இருக்கும் என்பதையும் அவரது பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறார். 

கதையின் ஆரம்பம் பெங்களூரில் நடக்கும் ஒரு தீவிரவாதச் செயல். இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல. ஒரு வித்தியாசமான வாளின் கைப்பிடிதான் அந்த சம்பவத்தில் கிடைக்கும் முக்கியமான க்ளு. அதைவைத்துக்கொண்டு கதை முன்னேறுகிறது. கதை முடியும் முன்னர் குஜராத், தமிழ்நாடு, முன்னாள் ரஷ்யா, ஜப்பான், என பயணிக்கிறது. 

கதையில் எனக்குப் பிடித்த பகுதியாக நான் நினைப்பது அந்த நாகர்கோவில் பெரியவர் ஓநாய்களைப் பற்றிய தகவல்களை நாகர்கோவில் மொழியில் சொல்லிக்கொண்டே செல்லுதலும், ஒரு இடத்தில் ஓநாய்க்கூட்டத்தை சந்தித்ததை விவரிப்பதும். ஓநாய்கள் குறித்த தகவல்கள் மற்றும் மூளையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் அபாரம். படிக்க மிக சுவாரசியமான பதிவுகள். 

அதிகம் அறிவியலைச் சுற்றி இருந்தாலும் போரடிக்காமல் வாசிக்க வைக்கின்றன. ஏகப்பட்ட கதை மாந்தர்கள் சுற்றி வந்தாலும் அவர்களை இணைத்த விதமும் அருமை. கதையில் நடக்கும் சிறு சம்பவங்களுக்கும் கதையில் ஓரிடத்தில் விளக்கம் இருக்கிறது. அதை சேர்த்த விதமும் அருமை. 

செசன்யா, துருக்கி, ரஷ்யா இந்தியா மற்றும் இந்தியாவின் காடுகள் என கதை சுற்றினாலும் எல்லாவற்றையும் இணைக்கும் ஒழுங்குதான் சுதாகர் கஸ்தூரி அவர்களின் எழுத்து ரகசியம். தமிழில் சொல்லப்பட்ட இன்னொரு அருமையான அறிவியல் புனைகதை. 

தமிழ்ஹிந்துவில் வெளியான விரிவான விமர்சனம் இங்கே

No comments: