Wednesday, August 19, 2015

இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் களைகள்

மக்கள் செருப்பாலடித்து மூலையில் உட்கார வைத்தும்கூட இன்னும் திருந்தாமல் ஒரு உருப்படியான விவாதத்திற்குகூட உதவாமல் பாராளுமன்றத்தை முடக்கி நாட்டின் வளர்ச்சியைத்தடுப்பதன் மூலம் காங்கிரஸ் இந்திய நாட்டு மக்களுக்குச் சொல்லாமல் சொல்வது...
நாங்கள் மட்டுமே இந்த நாட்டைக் கொள்ளையடிப்போம்.
எங்களைத்தவிர வேறு யாரும் இந்தநாட்டை ஆளக்கூடாது. அதுவும் இந்தியாவில் பிறந்த காங்கிரஸ் கட்சியினர்கூட கிடையாது, இத்தாலி சோனியாவும், அவரது முட்டாள் மகனும் மட்டுமே ஆளவேண்டும்.
இந்த தேசம் நன்றாய் இருக்க விடமாட்டோம், முடிந்தவரை நாசமாக்குவோம்.
இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிகள் என்ற சும்பன்களால் கேவலப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நேற்றைக்கு பூடானின் பாரளுமன்றக்குழுவினர் முன்னிலையில் கேவலப்படுத்தினர்.
காரியக்காரரான முலாயம்சிங்கூட பாராளுமன்ற முடக்கத்திற்கு எதிராய் பேசும் அளவு காங்கிரஸின் அராஜகம் இருக்கிறது.
ராஜ்யசபாவில் பலமில்லை என்பதற்காக இந்த அநியாயங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறது பாஜக. பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைகள்.
சுஷ்மா ஸ்வராஜ் நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல கேவலமாகக்கேட்டும் இன்னும் கேவலமாக சப்தமிட்டுகொண்டிருக்கும் இந்தக் கும்பல்கள் நாட்டின் சாபக்கேடுகள்.
இந்திய ஜனநாயகம் மிக மோசமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்றிருக்க வேண்டியதுதான்.

---------------
ராஜ்யசபாவில்  ராகுல்காந்திக்கு
சுயமாக பேசவராதென்றால்கூட தப்பில்லை. யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அளவுதான் திறமையுள்ளவர் பாரதத்தின் பிரதமராக ஆசைப்படுவது அவர் தப்பில்லை. ஆனால், ஊழல் செய்ய வாய்ப்புக்கிடைக்கும் என்பதற்காக அவரை பிரதமராக்கத் துடிக்கும் காங்கிரஸில் இருக்கும் தேசத்துரோகிகளை நினைத்தால்தான் வயிறு எரிகிறது.

ஈராக்கும் இந்திய சுதந்திரமும்

ஈரான் எல்லையை ஒட்டிய சிறு கிராமம் அபுல் கசீஃப்.
இரு வீடுகளுக்குள் சண்டை.
ஒருவர் எப்போதும் சட்டையை கழற்றிவிட்டு டவுசருடன் மைனர் போல சுற்றி இருக்கிறார், அதை எதிர் வீட்டுக்காரர் பெண்கள் இருக்கும் பகுதியில் இப்படி சுற்றாதே என பலமுறை சொல்லி இருக்கிறேன் மீண்டு செய்கிறாயா என கோபத்தில் கேட்க, அப்படித்தான் செய்வேன், முடிஞ்சதை செய்துகொள் என்பதுதான் சண்டைக்கு காரனம்.
இப்போது அது இரு இனக்குழுக்களுக்கான சண்டையாகி நேற்று இரு ஜாதியினரும் துப்பாக்கியால் சண்டையிட மாடியில் காயப்போட்ட துணியை எடுக்கச் சென்ற சம்பந்தமே இல்லாத பெண் பலி.
இப்போது இந்த சண்டை மூன்று இனக்குழுக்களுக்கு என மாறியுள்ளது.
சுதந்திரம் அடைஞ்சி என்னகிடைத்தது எனக் கேட்போர்களுக்கு, இப்படி காட்டுமிராண்டி கூட்டம்போல ஆகாததும், நாம் வாழ விரும்பும் வகையில் வாழ முடிவதும், நம் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருப்பதும் ஆகும்.
நம் வீட்டருகில் குண்டு வந்து விழும்வரையோ, குடும்பத்தில் யார் தலையிலாவது துப்பாக்கி குண்டு வெடிக்கும்வரைக்கும் என்னத்த பெருசா சுதந்திரம் வாங்கிட்டோம் எனக் கேட்டுக்கொண்டுதான் இருப்போம்.
ஏனெனில் சுதந்திரம் இல்லாத வாழ்க்கையை நாம் வாழ்ந்ததில்லை என்பதால் நமக்கு அதன் அருமைகள் புரிவதில்லை.

ஜாதி அரசியல் காவு வாங்கிய மாரியம்மனின் தேர்

தேரை எரித்தவர்கள் மறந்துபோனது அது எரித்தவனும் வணங்கும் தெய்வம் சென்ற தேர் என்பதை.
ஜாதி வெறியின் உச்சத்தில் சக மனிதனை இழிவுபடுத்துவோர் படிக்கவேண்டிய பாடம் ஒன்றுண்டு.
எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னர் செய்த பிழைகளுக்கு இன்றுவரை தன்டனை அனுபவிக்கும் பிராமனர்களின் கதியே உங்களுக்கும் வரும்.
நீங்கள் செய்த பாவமெல்லாம் இன்னும் அடுத்த பல தலைமுறைகளுக்கான சுமை.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒன்றுண்டு என்பதை மறவாதீர்கள்.
செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக தப்பு செய்த கயவாளி கூட்டத்தை போலிஸில் ஒப்படையுங்கள்.
இரு பிரிவினரும் இணைந்து இந்த தேரோட்டத்தை இணைந்து நடத்துங்கள்.
இதை அரசியல்வாதிகள் கையில் கொடுத்தால் இந்தப்பிரச்சினை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு கிடைத்த வாய்ப்பாக கொண்டு உங்களை என்றென்றைக்கும் சேராமல் செய்து விடுவார்கள். முடிந்தால் உங்களையே விற்று விடுவார்கள்.
நீங்களே சென்று பாதிக்கப்பட்ட தலித் சகோதரர்களிடம் மன்னிப்பை கோருங்கள். இனி இதுபோல நடவாது என்பதற்கான உத்தரவாதத்தை அளியுங்கள். மீண்டும் தேரோட்டம் இரு சாதியினரும் இணைந்து நடத்துவதாய் இருக்கட்டும்.
மிகக்கேவலமாய் உணரும் நாள் இது.

படம் - விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரம் அருகே - சேஷசமுத்திரம் கிராமம்

வெண்முகில் நகரம் - ஜெயமோகன்

மஹாபாரதம் குறித்து இந்திய சமூகம் அறிந்து வைத்துள்ளது எவ்வளவு என சோதித்தால் பெரும்பான்மை இப்படித்தான் சொல்லும்.
தர்மனும், பாண்டவ தம்பிமாரும் ரொம்ப நல்லவங்க. அண்ணன் தம்பின்னா இப்படி இருக்கனும்.
துரியோதனன் ரொம்ப கெட்டவன், 5 கிராமங்களைக்கூட பாண்டவர்களுக்கு தரமாட்டேன்னு சொல்லி அவங்களை நாட்டை விட்டு விரட்டுனான். துரியோதனாதிகள்லாம் பாண்டவர்களுக்கு அநியாயம் செஞ்சாங்க.
சகுனிப்பயலாலதான் மஹாபாரதப்போரே வந்துச்சி. அவந்தான் தர்மரை சூதுக்கழைச்சு அவர்ட்ட இருந்த எல்லாத்தையும் புடுங்குனான்.
கௌரவர் அவையில வச்சி பாஞ்சாலிய சேலைய உரிச்சான் துச்சாதனன், கிருஷ்ணர்தான் மானத்த காப்பாத்துனாரு.
பாஞ்சாலி போட்ட சபதத்தை ஜெயிச்சா.
கிருஷ்ணனே அர்ஜுனருக்கு தேரோட்டியா வந்தாரு.
பகவத்கீதைன்னு நாம படிக்கிற கீதை போர்க்களத்துல அர்ஜுனருக்கு கிருஷ்ணன் சொன்னது.
நல்லவங்களுக்குத்தான் எப்பவும் வெற்றி கிடைக்கும்கிறதுதான் மஹாபாரதம்.
நான் மேல சொன்னதுல கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கலாம். மஹாபாரதத்தை ருசித்து வாசித்தவர்கள் கண்களில் நீர்வழிய நிகழ்வுகளைச் சொல்லலாம். ஆனால், கர்னபரம்பரையாய் மஹாபாரதத்தைக் கேட்கும் சமூகத்திற்கு நான் மேலே சொன்ன அளவுதான் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். நான் வியாசர் விருந்து படித்திருக்கிறேன். ஆனால், அதைப் படித்தது 12ம் (1989) வகுப்பு விடுமுறையில். படிக்கும்போதே தெரிஞ்ச கதையைத்தானே படிக்கிறோம் என்ற அலட்சியத்துடந்தான் வாசித்த ஞாபகம்.
அதன் பின்னர் இஸ்கான் வெளியிட்ட பகவத்கீதை உண்மையுருவில், சித்பவானந்தர் எழுதிய உரை, என சில புத்தகங்களை வாங்கிப் படித்திருந்தாலும் மனதில் அத்தனை தாக்கத்தை உருவாக்கியதில்லை.
ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு ஆரம்பிக்கும்போது எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. 10 ஆண்டுகள் எழுதப்போவதாக சொல்லி இருக்கிறாரே, முதல் அத்தியாயத்தின் விறுவிறுப்பை கடைசிவரை அவரால் நீட்டிக்க முடியுமா என்பதும், சிறுகதைகளில் அதர்வம் போல பல கதைகளை வாசிக்கும்போதே நமக்கு மனதில் ஒட்டிக்கொள்ளுமே, இந்த வெண்முரசை இவரால் இப்படி பிடித்தவகையில் எழுதிவிட முடியுமா? எல்லோருக்கும் தெரிந்த, எப்போதும் ஏதோ ஒரு வகையில் இந்திய வாழ்க்கையில், பழமொழிகளாகவும், பெயர்களாகவும் உலவும் இந்த மஹாபாரதத்தை இவரால் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லிவிட முடியும் என்பதும் எனது சந்தேகங்களாய் இருந்தது.
வெண்முரசின் முதல் நாவல் முதற்கனலை வாசித்து முடிக்கும்போதே தெரிந்துவிட்டது, இது பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கப்போகிறதென. அடுத்து வந்த மழைப்பாடலும், வண்ணக்கடலும் ஆவலை அதிகரித்துக்கொண்டே செல்ல, நீலம் ஒரு பித்தமயக்குகொள்ள வைத்தது. அடுத்து வந்த பிரயாகைதான் வெண்முரசின் உச்சமாக இருக்கப்போகிறது என எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்து வந்த வெண்முகில் நகரம் வாசிக்கும்வரை.
பொதுவாக நான் ஜெயமோகனின் தளத்தை தினமும் வாசித்தாலும் முதற்கனலிலேயே இந்த வெண்முரசு தொடரை ஒவ்வொருநாளும் படிக்கக்கூடாது என்பதை புரிந்துகொண்டுவிட்டேன். அடுத்த அத்யாயத்துக்காக 24 மணி நேரம் காத்துக்கொண்டிருப்பது பெரும் வதையாகப்பட்டது. எனவே எப்போதும் 15 அத்யாயங்கள் சேர்ந்த பின்னரே வாசிப்பதை வழக்கமாய்க் கொண்டுவிட்டேன்.
வெண்முகில் நகரம் வரும்வரை ஒவ்வொரு நூலுக்கும் எனக்குப் பட்டதை ஏதாச்சும் எழுதிவைத்து போஸ்ட் செய்ய நினைத்தாலே பயம் வந்துவிடும். இதென்ன சிறுபிள்ளைத்தனமாக ஒரு குறிப்பு என. அப்படியே டெலிட் பட்டன் தான்.
துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் அடுத்து யார் ஹஸ்தினாபுரத்தை ஆள்வது என்ற கேள்வி வரும்வரையில் ஆதர்ச அண்ணன் தம்பிகளாய்த்தான் இருக்கிறார்கள். அதன் பின்னர் சகுனியின் சதியால் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்து அவர்கள் தப்பிய பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கும்போது மூத்தவர் தம்பியை மன்னித்து விட்டதாகச் சொல்லும் கட்டமும், அதன் பின்னர் நடக்கும் உச்சபட்ச உணர்ச்சி நிகழ்வுகளும் பூரிசிரவஸுபோல நாமும் கண்ணீருடன் வாசித்து முடித்திருப்போம்.
எத்தனை கெட்டது செய்தாலும் உடன்பிறந்தார் மீதான பாசமும், தர்மன் மீதான நம்பிக்கையும், அவரது தர்மத்திலிருந்து விலகாத்தன்மையைக் குறித்த பெருமதிப்பும் எப்போதும் துரியோதனாதிகளிடமும், அவரது தகப்பனாரிடமும் எப்போதும் கண்களில் நீரில்லாமல் சொல்லப்படுவதில்லை. திருதராஷ்ட்ரன் என்ற ராட்சத உடல்கொண்ட ஹஸ்தினபுரி அரசன் நியாயத்தை அன்றி வேறொன்றை நம்பாதவன், செய்ய விளையாதவன் என்பதை ஜெயமோகனின் எழுத்துகளில் படிக்கும்போது அவர்மீதெழும் அன்பும் அத்தகையதே.
கிருஷ்ணன் வரும் ஒவ்வொரு பகுதியும் அழகு. எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது அவன் யாதவ அரசனில்லை, மிக மோசமான மாயன் என. ஆனால், மானுட உருவில் இருப்பதால் அந்த யாதவனை வெல்ல தொடர்ந்து முயல்கிறார்கள். பாஞ்சாலியைக் குறித்து வரும் பகுதிகளும், பால்ஹிஹ நாடுகள் குறித்த விவரனையும், பூரசிரவஸின் சாதாரன ஒரு பிரபலமில்லா நாட்டின் இளவரசன் என்ற நிலையிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதும் அவன் இந்த வெண்முகில் நகரம் நூல் முடியும்போது அவனை காண்பித்திருக்கும் விதமும் என்ன சொல்ல?
துவாரகையின் வளர்ச்சியும், யாதவர்களின் எழுச்சியும், இந்த்ரபிரஸ்தம் மனதளவில் உருவாகி வரைபடம் வரை வந்து நிற்பதும், அரசியல் பகடையாட்டங்களும், என ஒவ்வொரு அத்யாயமும் அடுத்து அடுத்து என வாசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன, அழகிய எழுத்தால்.
இத்தனை பெயர்களையும், ஊர்களையும், கதைகளையும், அரச சரித்திரங்களையும், அரசியல் சூழ்ச்சிகளையும், சூதர்கள் சொல்லும் கதைகள் என வருபவற்றையும் ஒரு மனிதன் இத்தனை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது முதல் அதிசயம் என்றால், அதை அழகாகக்கோர்த்து கதை சொல்லும் விதமும், அதில் வரும் வர்ணனைகளும் வாசிக்கும்போது வாசிப்பின்பம் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் கிட்டுகிறது.
நாமறிந்த மஹாபாரதத்தை இத்தனை விஸ்தாரமாக சிறு சிறு பாத்திரங்களும் விஸ்வரூபம் எடுப்பதையும் சுவாரசியத்துடன், அழகுதமிழில் வாசிக்கக் கிடைத்திருப்பது நமது நற்பேறு.
இந்த அசாத்தியமான பிரும்மாண்ட முயற்சியை ஆரம்பித்து இன்றுவரை தொய்வடையாமல் நமக்கு வாசிக்க அளிக்கும் ஜெயமோகனுக்கு இறை தனது பரிபூரன ஆசியருளட்டும். என்ன சொன்னாலும், என் மனதில் உருவாகும் களிப்பை, நான் கானும் காட்சியை, எனக்கு கிடைக்கும் அனுபவத்தை எழுத்தாக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. முழுவதையும் சிறப்புற எழுதிமுடிக்க தெய்வங்கள் துனையிருக்கட்டும்.

சர்வதேச புகைப்பட நாள் எண்ணங்கள்80கள் மற்றும் 90களில் யாஷிகா கேமெரா வைத்திருப்பது பெருமை. (ரோல் போட்டு எடுப்பது) அதில் 36 படம் எடுத்து முடித்ததும் தாஸ் அல்லது ராஜேஸ்வரி கலர் லேப்பில் 4 ரூபாய் 50 காசுகளுக்கு ஒரு ப்ரிண்ட் (மேக்ஸி) போட்டுத்தருவார்கள். 

பெரும்பாலான படங்கள் ஷேக் ஆகியோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமலோ, நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரின் முகம் தெரியும் ஆனால் முடியில் பாதி இல்லாமலும் இருக்கும். என்னைய போட்டோ எடுங்க மாமா என நாயாய் அலைந்திருக்கிறோம். அவரும் நம் மனசு நோகாதபடிக்கு ஒரு ப்ளாஷை அடித்துவிட்டு போய்விடுவார். நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வரவுக்காய் காத்திருப்போம். நிச்சயம் நம் படம் இருக்கும் என்ற நம்பிக்கையில். ஏதேனும் ஒரு படத்தில் நாம் எட்டியாவது தலையைக் காண்பித்திருப்போம். அந்த படம்தான் நமக்கு பார்க்கக் கிடைக்கும். 

லேபில் முதலில் பிலிமைக்கழுவி நெகடிவைக் கொடுப்பார்கள். அங்கிருக்கும் ஃபில்ம் வியூவிங் லைட்டில் பார்த்து நமக்கே தேரும் என நினைக்கும் படங்களை நம்பர் எழுதிக்கொடுத்துவிட்டால் பிரிண்ட் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகல் தெரியும் எனக்காண்பிக்கவும், கைபட்டால் ரேகை படாமல் இருக்கவும் படம் பிரிண்ட் போடும்போதெ மேட்டி பிரிண்ட் போடுங்கண்ணே என்றால் நாளைக்கு வா என்பார். கொஞ்சம் கெஞ்சினால் மாலை கிடைக்கும். அதற்குள் அத்தை வீடோ அல்லது சினிமா தியேட்டரோ சென்று விட்டு வந்தால் படங்கள் ரெடியாய் இருக்கும். அதைக் கையில் வாங்கிக் கொண்டு 36 படங்களுக்கு 40 போட்டோக்கள் வைக்கும் அளவு ஒரு ஃபோல்டரையும் ஓசி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தால் எல்லோரும் படத்தை பார்க்க ஆவலாய் இருப்பார்கள். 

ஒரு நாலு நாட்களுக்குள் அந்தப்படத்தை வீட்டிலுள்ளோர் 10 முறையும், பக்கத்து வீடு அக்கம் பக்கம் வீடுகளில் உள்லொர் இருமுறையும் பார்த்திருப்பார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எங்கேயாவது நம் முகம் வந்திருக்கிறதா என்பதை பார்ப்பதற்குதான் ஆல்பத்தையே வாங்குவார்கள். ஃப்ளாஷ் அடிச்சி ஏமாந்த பெரியவர்களாய் இருப்பின் பொல்லாத போட்டோ எடுக்குறானுக என கடுப்பில் திட்டுவர். 

இன்றைக்கு 16 மெகாபிக்சல் கேமெராவில் எடுத்த படங்களை அந்த நிமிடமே பார்த்துவிட்டு நல்லா இல்லை என்றால் உடனே அடுத்த படத்தை எடுக்க முடிகிறது. ஆனால், இந்த வசதிகள் எல்லாம் இல்லாமல் வெறும் வியூஃபைண்டரில் பார்த்து அட்டகாசமான படங்களை எடுத்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மதுரை அன்பு. அவர் எடுத்த ஒரு படமாவது இந்த கலர் லேபுகளில் பெரிதாய் இருக்கும். பிள்ளையார்பட்டி விநாயகரை எல்லாருடைய மணிபர்சுக்குள்ளும் தினித்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த படம்தான் பல ஆண்டுகளாக மறு பதிப்பு கண்டுகொண்டிருந்தது. புகைப்பட நாளை ஒட்டி என் எண்ணங்கள்.

Monday, August 3, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு..

 நாளைக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு என முதல் நாளிலிருந்தே மகிழ்ச்சியில் மனது துள்ளும். வாரம் 4 நாள் போகும் அதே தேவன் குறிச்சிதான், அதே நீர்ச்சுனைதான், அதே சிவன் கோவில் எல்லாம் அதேதான். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கன்று பக்கத்து வீடுகளுடன், நம் வீட்டின் மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பாடு கட்டிக்கொண்டு போய் மலையில் மாலைமுதல் இரவு வரை அமர்ந்துவிட்டு வருவது போன்ற சுகம், இனிமை எப்போதும் அமைவதில்லை. 

கல்லுப்பட்டியில் இருந்து குறைந்தது 50 குடும்பங்களாவது மலைக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வருவார்கள். இதுதவிர சுற்றியுள்ள கிராமங்கள், அந்த ஆண்டு திருமணமான ஜோடிகள் எல்லாம் அவசியம் வருவார்கள். குறிப்பாய் தேவன் குறிச்சியில் இருக்கும் நீர்நிலை காரணமாக. இது தவிர பஞ்சுமிட்டாய், பலூன், காரசேவு, சீனிச்சேவு, எல்லாம் அன்றைக்கு மட்டும் விற்கும். 

அக்னீஸ்வரரிடம் கூட்டம் அம்மும். கைகால் சாகாத பயக எல்லாம் மலை உச்சியில் ஏதுமில்லாமல் மொட்டையாய் இருக்கும் இடத்தில் ஒரு சிறு சுனை இருக்கும். படியே இல்லாத மலை உச்சிக்கு மரங்கள் மற்றும்கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்று சுழன்றடிக்கும் குளிர் காற்றை அனுபவித்து சுத்துபட்டு கிராமங்களை ஏரியல் வியூவில் தரிசித்துவிட்டு, வன்னிவேலம்பட்டி கன்மாய், பச்சைக் கேக்குகளாக பரந்து கிடக்கும் விவசாய வயல்கள், ஆலங்குளம் சிமிண்ட் ஃபேக்டரியின் புகைக்கூண்டு, கல்லுப்பட்டி எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், நீர் நிரம்பியிருக்கும் குளம், கோபால்சாமி மலை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கீழே வந்து மலை ஏறாமல் இருப்போரிடம் சொன்னால் ஒரு பொறாமைப் பார்வையும், அக்காக்கள், தங்கைகளிடம் என்னையும் ஒருவாட்டி கூப்டுட்டு போடா என்ற அன்பு வேண்டுகோள்களும் இருக்கும். 

ஐந்தாறு வகைகளில் சாப்பாடு, பப்படம், அப்பளம், எல்லாம் சாப்பிட்டுவிட்டு அக்னீஸ்வரர் குளத்தில் கை அலம்பிவிட்டு, சுனையில் கற்கண்டு இனிப்பில் தண்ணீரை மோந்து குடித்தால் அது ஒரு சுகம். நான் 7ம் வகுப்பு படிக்கும்வரை ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். அதன் பின்னர் கல்லுப்பட்டி டவுனுக்கான அரிதாரங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்ததும் ”இங்கன இருக்குற” தேவன்குறிச்சிக்கு போக கல்லுப்பட்டிக்காரனுகளுக்கு முடியாமல் போய்விட்டது.. ஆனால், நான் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தனியாகவாவது ஒருமுறை சென்றுவருகிறேன். 

என் வாழ்க்கையில் கிடைத்த அருமையான நாட்களில் சில தேவன்குறிச்சியில் கிடைத்தவை. ஒரு நாள் மலையிலேயே படுத்துவிட்டு மறுநாள் காலையில் வந்து சேர்ந்தேன். சிவன் கோவிலில் படுப்பவனும், மலையில் இரவு உறங்குபவனும் அடுத்த ஜென்மத்தில் மலைப்பாம்பாக பிறப்பான் என்பது ஒர் ஐதீகம். 

இன்றைக்கு சுனையில் நீர் வரத்து மிகவும் குறைவு, பாசி படிந்த குளமே எப்போதும் காணக் கிடைக்கிறது. 10ம் வகுப்பு விடுமுறை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும்போது ஆர்.எஸ் எஸ் ஏற்பாடு செய்த உளவாரப்பணியில் ஈடுபட்டு தேவன் குறிச்சி மலையின் உச்சியில் அமைந்த பெருமாள் கோவிலுக்கு செங்கலும், மனலும் சுமந்தேன், சனி, ஞாயிறு என இரு நாட்கள். வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் மலைஏற்றம். 6 செங்கலை தூக்கிக்கொண்டு மலை உச்சியில் கொண்டு போய் வைத்துவிட்டு வரவேண்டும், கோவில் கட்ட. ஒரு நாளைக்கு 4 ட்ரிப் வரை அடித்திருக்கிறேன். 10 கிலோ எடையுள்ள மணல் மூடையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறேன். இன்றைக்கு தனியாக மேலே எர்ரா எனச் சொன்னால் முடியுமா எனத்தெரியவில்லை. இன்றைக்கு கல்லுப்பட்டியில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற விஷயமே வீட்டுடன் முடிந்துவிட்டது சோகம்தான்..