Monday, August 3, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு..

 நாளைக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு என முதல் நாளிலிருந்தே மகிழ்ச்சியில் மனது துள்ளும். வாரம் 4 நாள் போகும் அதே தேவன் குறிச்சிதான், அதே நீர்ச்சுனைதான், அதே சிவன் கோவில் எல்லாம் அதேதான். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கன்று பக்கத்து வீடுகளுடன், நம் வீட்டின் மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பாடு கட்டிக்கொண்டு போய் மலையில் மாலைமுதல் இரவு வரை அமர்ந்துவிட்டு வருவது போன்ற சுகம், இனிமை எப்போதும் அமைவதில்லை. 

கல்லுப்பட்டியில் இருந்து குறைந்தது 50 குடும்பங்களாவது மலைக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வருவார்கள். இதுதவிர சுற்றியுள்ள கிராமங்கள், அந்த ஆண்டு திருமணமான ஜோடிகள் எல்லாம் அவசியம் வருவார்கள். குறிப்பாய் தேவன் குறிச்சியில் இருக்கும் நீர்நிலை காரணமாக. இது தவிர பஞ்சுமிட்டாய், பலூன், காரசேவு, சீனிச்சேவு, எல்லாம் அன்றைக்கு மட்டும் விற்கும். 

அக்னீஸ்வரரிடம் கூட்டம் அம்மும். கைகால் சாகாத பயக எல்லாம் மலை உச்சியில் ஏதுமில்லாமல் மொட்டையாய் இருக்கும் இடத்தில் ஒரு சிறு சுனை இருக்கும். படியே இல்லாத மலை உச்சிக்கு மரங்கள் மற்றும்கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்று சுழன்றடிக்கும் குளிர் காற்றை அனுபவித்து சுத்துபட்டு கிராமங்களை ஏரியல் வியூவில் தரிசித்துவிட்டு, வன்னிவேலம்பட்டி கன்மாய், பச்சைக் கேக்குகளாக பரந்து கிடக்கும் விவசாய வயல்கள், ஆலங்குளம் சிமிண்ட் ஃபேக்டரியின் புகைக்கூண்டு, கல்லுப்பட்டி எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், நீர் நிரம்பியிருக்கும் குளம், கோபால்சாமி மலை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கீழே வந்து மலை ஏறாமல் இருப்போரிடம் சொன்னால் ஒரு பொறாமைப் பார்வையும், அக்காக்கள், தங்கைகளிடம் என்னையும் ஒருவாட்டி கூப்டுட்டு போடா என்ற அன்பு வேண்டுகோள்களும் இருக்கும். 

ஐந்தாறு வகைகளில் சாப்பாடு, பப்படம், அப்பளம், எல்லாம் சாப்பிட்டுவிட்டு அக்னீஸ்வரர் குளத்தில் கை அலம்பிவிட்டு, சுனையில் கற்கண்டு இனிப்பில் தண்ணீரை மோந்து குடித்தால் அது ஒரு சுகம். நான் 7ம் வகுப்பு படிக்கும்வரை ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். அதன் பின்னர் கல்லுப்பட்டி டவுனுக்கான அரிதாரங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்ததும் ”இங்கன இருக்குற” தேவன்குறிச்சிக்கு போக கல்லுப்பட்டிக்காரனுகளுக்கு முடியாமல் போய்விட்டது.. ஆனால், நான் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தனியாகவாவது ஒருமுறை சென்றுவருகிறேன். 

என் வாழ்க்கையில் கிடைத்த அருமையான நாட்களில் சில தேவன்குறிச்சியில் கிடைத்தவை. ஒரு நாள் மலையிலேயே படுத்துவிட்டு மறுநாள் காலையில் வந்து சேர்ந்தேன். சிவன் கோவிலில் படுப்பவனும், மலையில் இரவு உறங்குபவனும் அடுத்த ஜென்மத்தில் மலைப்பாம்பாக பிறப்பான் என்பது ஒர் ஐதீகம். 

இன்றைக்கு சுனையில் நீர் வரத்து மிகவும் குறைவு, பாசி படிந்த குளமே எப்போதும் காணக் கிடைக்கிறது. 10ம் வகுப்பு விடுமுறை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும்போது ஆர்.எஸ் எஸ் ஏற்பாடு செய்த உளவாரப்பணியில் ஈடுபட்டு தேவன் குறிச்சி மலையின் உச்சியில் அமைந்த பெருமாள் கோவிலுக்கு செங்கலும், மனலும் சுமந்தேன், சனி, ஞாயிறு என இரு நாட்கள். வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் மலைஏற்றம். 6 செங்கலை தூக்கிக்கொண்டு மலை உச்சியில் கொண்டு போய் வைத்துவிட்டு வரவேண்டும், கோவில் கட்ட. ஒரு நாளைக்கு 4 ட்ரிப் வரை அடித்திருக்கிறேன். 10 கிலோ எடையுள்ள மணல் மூடையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறேன். இன்றைக்கு தனியாக மேலே எர்ரா எனச் சொன்னால் முடியுமா எனத்தெரியவில்லை. இன்றைக்கு கல்லுப்பட்டியில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற விஷயமே வீட்டுடன் முடிந்துவிட்டது சோகம்தான்..

No comments: