Wednesday, August 19, 2015

வெண்முகில் நகரம் - ஜெயமோகன்

மஹாபாரதம் குறித்து இந்திய சமூகம் அறிந்து வைத்துள்ளது எவ்வளவு என சோதித்தால் பெரும்பான்மை இப்படித்தான் சொல்லும்.
தர்மனும், பாண்டவ தம்பிமாரும் ரொம்ப நல்லவங்க. அண்ணன் தம்பின்னா இப்படி இருக்கனும்.
துரியோதனன் ரொம்ப கெட்டவன், 5 கிராமங்களைக்கூட பாண்டவர்களுக்கு தரமாட்டேன்னு சொல்லி அவங்களை நாட்டை விட்டு விரட்டுனான். துரியோதனாதிகள்லாம் பாண்டவர்களுக்கு அநியாயம் செஞ்சாங்க.
சகுனிப்பயலாலதான் மஹாபாரதப்போரே வந்துச்சி. அவந்தான் தர்மரை சூதுக்கழைச்சு அவர்ட்ட இருந்த எல்லாத்தையும் புடுங்குனான்.
கௌரவர் அவையில வச்சி பாஞ்சாலிய சேலைய உரிச்சான் துச்சாதனன், கிருஷ்ணர்தான் மானத்த காப்பாத்துனாரு.
பாஞ்சாலி போட்ட சபதத்தை ஜெயிச்சா.
கிருஷ்ணனே அர்ஜுனருக்கு தேரோட்டியா வந்தாரு.
பகவத்கீதைன்னு நாம படிக்கிற கீதை போர்க்களத்துல அர்ஜுனருக்கு கிருஷ்ணன் சொன்னது.
நல்லவங்களுக்குத்தான் எப்பவும் வெற்றி கிடைக்கும்கிறதுதான் மஹாபாரதம்.
நான் மேல சொன்னதுல கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கலாம். மஹாபாரதத்தை ருசித்து வாசித்தவர்கள் கண்களில் நீர்வழிய நிகழ்வுகளைச் சொல்லலாம். ஆனால், கர்னபரம்பரையாய் மஹாபாரதத்தைக் கேட்கும் சமூகத்திற்கு நான் மேலே சொன்ன அளவுதான் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். நான் வியாசர் விருந்து படித்திருக்கிறேன். ஆனால், அதைப் படித்தது 12ம் (1989) வகுப்பு விடுமுறையில். படிக்கும்போதே தெரிஞ்ச கதையைத்தானே படிக்கிறோம் என்ற அலட்சியத்துடந்தான் வாசித்த ஞாபகம்.
அதன் பின்னர் இஸ்கான் வெளியிட்ட பகவத்கீதை உண்மையுருவில், சித்பவானந்தர் எழுதிய உரை, என சில புத்தகங்களை வாங்கிப் படித்திருந்தாலும் மனதில் அத்தனை தாக்கத்தை உருவாக்கியதில்லை.
ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு ஆரம்பிக்கும்போது எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. 10 ஆண்டுகள் எழுதப்போவதாக சொல்லி இருக்கிறாரே, முதல் அத்தியாயத்தின் விறுவிறுப்பை கடைசிவரை அவரால் நீட்டிக்க முடியுமா என்பதும், சிறுகதைகளில் அதர்வம் போல பல கதைகளை வாசிக்கும்போதே நமக்கு மனதில் ஒட்டிக்கொள்ளுமே, இந்த வெண்முரசை இவரால் இப்படி பிடித்தவகையில் எழுதிவிட முடியுமா? எல்லோருக்கும் தெரிந்த, எப்போதும் ஏதோ ஒரு வகையில் இந்திய வாழ்க்கையில், பழமொழிகளாகவும், பெயர்களாகவும் உலவும் இந்த மஹாபாரதத்தை இவரால் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லிவிட முடியும் என்பதும் எனது சந்தேகங்களாய் இருந்தது.
வெண்முரசின் முதல் நாவல் முதற்கனலை வாசித்து முடிக்கும்போதே தெரிந்துவிட்டது, இது பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கப்போகிறதென. அடுத்து வந்த மழைப்பாடலும், வண்ணக்கடலும் ஆவலை அதிகரித்துக்கொண்டே செல்ல, நீலம் ஒரு பித்தமயக்குகொள்ள வைத்தது. அடுத்து வந்த பிரயாகைதான் வெண்முரசின் உச்சமாக இருக்கப்போகிறது என எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்து வந்த வெண்முகில் நகரம் வாசிக்கும்வரை.
பொதுவாக நான் ஜெயமோகனின் தளத்தை தினமும் வாசித்தாலும் முதற்கனலிலேயே இந்த வெண்முரசு தொடரை ஒவ்வொருநாளும் படிக்கக்கூடாது என்பதை புரிந்துகொண்டுவிட்டேன். அடுத்த அத்யாயத்துக்காக 24 மணி நேரம் காத்துக்கொண்டிருப்பது பெரும் வதையாகப்பட்டது. எனவே எப்போதும் 15 அத்யாயங்கள் சேர்ந்த பின்னரே வாசிப்பதை வழக்கமாய்க் கொண்டுவிட்டேன்.
வெண்முகில் நகரம் வரும்வரை ஒவ்வொரு நூலுக்கும் எனக்குப் பட்டதை ஏதாச்சும் எழுதிவைத்து போஸ்ட் செய்ய நினைத்தாலே பயம் வந்துவிடும். இதென்ன சிறுபிள்ளைத்தனமாக ஒரு குறிப்பு என. அப்படியே டெலிட் பட்டன் தான்.
துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் அடுத்து யார் ஹஸ்தினாபுரத்தை ஆள்வது என்ற கேள்வி வரும்வரையில் ஆதர்ச அண்ணன் தம்பிகளாய்த்தான் இருக்கிறார்கள். அதன் பின்னர் சகுனியின் சதியால் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்து அவர்கள் தப்பிய பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கும்போது மூத்தவர் தம்பியை மன்னித்து விட்டதாகச் சொல்லும் கட்டமும், அதன் பின்னர் நடக்கும் உச்சபட்ச உணர்ச்சி நிகழ்வுகளும் பூரிசிரவஸுபோல நாமும் கண்ணீருடன் வாசித்து முடித்திருப்போம்.
எத்தனை கெட்டது செய்தாலும் உடன்பிறந்தார் மீதான பாசமும், தர்மன் மீதான நம்பிக்கையும், அவரது தர்மத்திலிருந்து விலகாத்தன்மையைக் குறித்த பெருமதிப்பும் எப்போதும் துரியோதனாதிகளிடமும், அவரது தகப்பனாரிடமும் எப்போதும் கண்களில் நீரில்லாமல் சொல்லப்படுவதில்லை. திருதராஷ்ட்ரன் என்ற ராட்சத உடல்கொண்ட ஹஸ்தினபுரி அரசன் நியாயத்தை அன்றி வேறொன்றை நம்பாதவன், செய்ய விளையாதவன் என்பதை ஜெயமோகனின் எழுத்துகளில் படிக்கும்போது அவர்மீதெழும் அன்பும் அத்தகையதே.
கிருஷ்ணன் வரும் ஒவ்வொரு பகுதியும் அழகு. எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது அவன் யாதவ அரசனில்லை, மிக மோசமான மாயன் என. ஆனால், மானுட உருவில் இருப்பதால் அந்த யாதவனை வெல்ல தொடர்ந்து முயல்கிறார்கள். பாஞ்சாலியைக் குறித்து வரும் பகுதிகளும், பால்ஹிஹ நாடுகள் குறித்த விவரனையும், பூரசிரவஸின் சாதாரன ஒரு பிரபலமில்லா நாட்டின் இளவரசன் என்ற நிலையிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதும் அவன் இந்த வெண்முகில் நகரம் நூல் முடியும்போது அவனை காண்பித்திருக்கும் விதமும் என்ன சொல்ல?
துவாரகையின் வளர்ச்சியும், யாதவர்களின் எழுச்சியும், இந்த்ரபிரஸ்தம் மனதளவில் உருவாகி வரைபடம் வரை வந்து நிற்பதும், அரசியல் பகடையாட்டங்களும், என ஒவ்வொரு அத்யாயமும் அடுத்து அடுத்து என வாசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன, அழகிய எழுத்தால்.
இத்தனை பெயர்களையும், ஊர்களையும், கதைகளையும், அரச சரித்திரங்களையும், அரசியல் சூழ்ச்சிகளையும், சூதர்கள் சொல்லும் கதைகள் என வருபவற்றையும் ஒரு மனிதன் இத்தனை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது முதல் அதிசயம் என்றால், அதை அழகாகக்கோர்த்து கதை சொல்லும் விதமும், அதில் வரும் வர்ணனைகளும் வாசிக்கும்போது வாசிப்பின்பம் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் கிட்டுகிறது.
நாமறிந்த மஹாபாரதத்தை இத்தனை விஸ்தாரமாக சிறு சிறு பாத்திரங்களும் விஸ்வரூபம் எடுப்பதையும் சுவாரசியத்துடன், அழகுதமிழில் வாசிக்கக் கிடைத்திருப்பது நமது நற்பேறு.
இந்த அசாத்தியமான பிரும்மாண்ட முயற்சியை ஆரம்பித்து இன்றுவரை தொய்வடையாமல் நமக்கு வாசிக்க அளிக்கும் ஜெயமோகனுக்கு இறை தனது பரிபூரன ஆசியருளட்டும். என்ன சொன்னாலும், என் மனதில் உருவாகும் களிப்பை, நான் கானும் காட்சியை, எனக்கு கிடைக்கும் அனுபவத்தை எழுத்தாக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. முழுவதையும் சிறப்புற எழுதிமுடிக்க தெய்வங்கள் துனையிருக்கட்டும்.

No comments: