Friday, June 20, 2008

பாரு பாரு தோஹா பாரு..

பாரு பாரு தோஹா பாரு..

எனக்கும் எழுதறதுக்கு வேற விஷயம் இல்லாததனால நான் இப்போதைக்கு இருக்குற தோஹாவைப் பத்தியும் அதில் பாக்க வேண்டிய இடங்களைப் பத்தியும் உங்களுக்கு சொல்லலாமுன்னு இந்த பதிவு.


முதல்ல கார்னிச் எனப்படும் கடலில் விளையாட முடியாத கடற்கரை:-

பெரும்பான்மையான மக்களின் மாலை நேர பொழுதுபோக்கு இந்த கடற்கரையில் அப்படியே வாக்கிங் போவதுதான். கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் எந்த விதமான தொந்தரவும் இன்றி மெதுவாய் நடக்கலாம். காவல்துறையின் தலைமையகமான மினிஸ்ட்ரி ஆஃப் இன்டீரியரிலிருந்து அப்படியே ஆசிய விளையாட்டுப் போட்டி சின்னம் வரை காலாற நடந்து போகலாம். அதன் படம் கீழே.









ஷாப்பிங் மால்கள் :-

இங்கு அதிகம் அறியப்பட்ட மால்களாக இருப்பவை கேர்ரபோர், லூலூ ஹைபர் மார்கெட், சிடி சென்டர், டாஸ்மான் சென்டர் என பல வகையான மால்கள். இது தவிர இந்திய குடும்பங்கள் விரும்பிச் செல்லும் ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் அனைத்து சாமான்களும் இங்கு கிடைக்கும், வடகம் வத்தல் முதல் வாழை இலை வரையும் அனைத்தும் கிடைக்கும். கருகப்பிலை இலவசமாய் தருவது ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன. லூலூவிலும் எல்லாம் கிடைக்கும் ரெடிமேட் இட்லி மாவுவரை. அரிசி தஞ்சாவூர் பொன்னி, இந்திய, பாகிஸ்தானிய பாசுமதி அரிசிகள் பங்களாதேஷ் மற்றும் இந்திய காய்கறிகள், பிலிப்பின, மற்றும் ஆஸ்திரேலிய பழங்கள் எல்லாம் கிடைக்கும். கத்தாருக்கு வர விரும்புபவர்கள் உணவுக்காக யோசிக்க வேண்டாம் தைரியமாய் வரலாம்.

உணவகங்கள் :-




இது போன்ற கடைகள் தவிர திருநெல்வேலியின் ஆரியாஸ், சென்னையின் ஹோட்டல் வசந்தம், ஷாலிமார், மற்றும் எளியவர்களுக்கான ஹோட்டல் போனன்சா போன்ற ஹோட்டல்களும் உண்டு. நம்மூர் இட்டிலி, தோசை முதற்கொண்டு எல்லாம் கிடைக்கும். இங்கு வருகின்ற அனைத்து ஆட்களும் தவறாமல் சொல்வது நம்மூர் விலைதான் இங்கேயும் உள்ளது என. இரண்டு இட்டிலி நாற்பது ரூபாய்கள். பில்டர் காபி நாற்பது ரூபாய்கள், நம்மூர் மதிப்பில். மற்றபடி சைனீஸ் உணவு வகையில் ஆரம்பித்து, லெபனான் உணவுகள், சூடானிய உணவுகள், நேபாள உணவுகள் என உணவில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் கிடைக்கும். பர்ஸ் மட்டும சீக்கிரம் ஆவியாகிவிடும்.

போனன்சா ஹோட்டலில் பத்து ரியால்கள் இருந்தால் நான்கு இட்டிலி, ஒரு தோசை ஒரு காப்பியும் சாப்பிட்டு விடலாம். சிவகங்கையை சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். நம்மூர் மக்களின் கூட்டம் எப்போதும் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சாம்பாரும் சட்னியும் கிடைக்கும். கிட்டத்தட்ட மதுரையிலும். சிவகங்கையிலும் சாப்பிடுவது போன்ற உணர்வுதான் இருக்கும். அண்ணே, அப்படின்னு கூப்டா போதும் மூணு சட்னி, ஒரு சாம்பார் எல்லாத்தையும் இடம் இருக்குற வரைக்கும் ஊத்திட்டு போயிருவார். எனக்குப் பிடித்த ஓட்டல்களில் போனன்சவும் ஒன்று அதன் சுவைக்காகவும், நம்ம ஊர்க்காரர் ஓட்டல் என்பதாலும், இன்னும் குறிப்பாய் அதன் விலைக்காகவும்.


நமது மக்களின் பொழுதுபோக்குகள்:-

வேலை செய்துவிட்டு வந்து தொலைகாட்சி பார்த்தல். அது தவிர வெள்ளிக்கிழமைகளில் தோகாவில் எங்காவது சந்தித்தல். தோஹாவில் சந்தித்தல் என்பது எல்லாராலும் முடியாத காரியம். அவரவர்கள் வேலை செய்யும் கம்பெனி அனைவரையும் சாமான்கள் வாங்கவும் மற்றபடி வெளியுலகைப் பார்க்கவும் வாரம் ஒரு நாள் கம்பெனி வண்டியிலேயே வேலையாட்களை அழைத்துச்சென்று பின்னர் திருப்பி அழைத்துவருவார்கள். அப்போதுதான் உள்ளூர்க்காரன், சொந்தபந்தம், தெரிஞ்சவன் இப்படி பலபேர் சந்திக்கும் களமாகவும், ஊருக்கு பணம் அனுப்புவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கீழே உள்ள படம் பணம் அனுப்புவதற்காக நிற்கும் கூட்டம்.





வெள்ளிக்கிழைமை மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை இருந்துவிட்டு அடுத்தவார பணிகளுக்கு தயாராக திரும்பவேண்டும். பல கம்பெனிகள் வாகன வசதிகள் கூட செய்து தராது.

கொஞ்சம் நல்ல வேளையில் வந்தவர்கள் கடற்கரையிலும், ஷாப்பிங் மால்களிலும் பொழுதைக் களிப்பர். இது தவிர நிறைய இரவு உணவு விடுதிகளும், கிளப்புகளும், உண்டு. இந்தியன் கிளப் கூட உண்டு கத்தாரில்.

சினிமாக்கள்







தோஹா சினிமா, மற்றும் கல்ப் சினிமா என இரண்டு தியேட்டர்களில் தமிழ், தெலுகு மற்றும் மலையாள படங்களும் வரும். இது தவிர மால் சினிமாவில் அவ்வப்போது தமிழ் படங்கள் வரும். சிடி சினிமா போன்ற பல தியேட்டர்கள் உள்ளன. தமிழ் சினிமாக்கள் அனைத்தும் 25 கத்தாரி ரியால்கள் பால்கனியில் அமர்ந்து பார்க்க. முதல் வகுப்பு கட்டணமாக ௨0 கத்தாரி ரியால்களும் அதற்க்கு கீழே 15 கத்தாரி ரியல்களும் கட்டணம். நம்மூர் திண்டுக்கல், மதுரை தியேட்டர்கள் போலத்தான் இருக்கும். மற்ற மால் சினிமா சிடி சினிமாக்கள் அனைத்தும் நம்மூர் சினி, மினி பிரியா போல இருக்கும். இது தவிர திருட்டு வி சி டிக்கள் வெள்ளமென கிடைக்கும். ஒரு படம் ௧0 ரியாலிலிருந்து ௧௫ ரியால்கள் வரை விற்கப்படும் குத்து மதிப்பான கணக்கு என்னவெனில் ஒரு சி.டி ஐந்து ரூபாய், அதான் கணக்கு. என்ன படம் வேண்டுமானாலும் கிடைக்கும் குசேலரு தவிர..


..தொடரும்...

Wednesday, June 18, 2008

வாகனக் காப்பீடு - இந்தியாவிலும், கத்தாரிலும். ஒரு ஒப்பீடு

சமீபத்தில் ஊருக்குப் பேசியபோது எனது அக்கா சொன்னது அவரோட வண்டி(அக்காவின் கணவர் ) ஆக்சிடென்ட் ஆயிருச்சிடா அப்படின்னாங்க. அப்படின்னா உடனேயே காப்பீடு செய்துள்ள கம்பெனிக்கு தகவல் சொல்லி இழப்பீடுக்கு மனு போடச் சொல்லுங்க அப்படின்னேன். ஏனெனில் மொத்த செலவு பதினையாயிரம் ரூபாய்கள். இருந்தும் அவர்கள் இழப்பீடு வாங்க விரும்பவில்லை.

இந்தியாவில் இழப்பீடு பணம் கையில் கிடைப்பதற்குள் நமது வாகனம் ஓடுவதற்கு லாயக்கில்லாமல் போனாலும் போய்விடும் அளவுக்கு தாமதம் செய்கிறார்கள். எனவே கைக்காசை போட்டு செலவு செய்துவிட்டு வண்டி ஓட்டத்தில் இருந்தால் குறைந்தபட்சம் வண்டிக்கான வங்கி கடனையாவது அடைக்க முடியுமே என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். பிறகு எதற்கு காப்பீடு செய்தீர்கள் என்றால் இல்லையெனில் வாகனம் பதிவு செய்யப்படமாட்டாது என்பதற்காக.

நான் வேலை செய்யும் கத்தார் நாட்டில் விபத்து நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

விபத்து நடந்த உடன் போலிசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். சிறிய விபத்தோ பெரிய விபத்தோ.

பின்னர் தவறு யாருடையது என்பது தெளிவாகத்தெரிந்தால் போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு நாங்களே போலிஸ் ஸ்டேஷன் வருகிறோம் எனச்சொல்லிவிட்டு அங்கு சென்று போலிஸ் பேப்பர் எனப்படும் விபத்து பற்றிய குறிப்பும் இழப்பீடு பெறுவதற்காக ஒரு குறிப்பு இழப்பீட்டு கம்பெனிக்கும் வழங்கப்படும். பெரிய விபத்துகளுக்கும், யாருடைய தவறு என தீர்மானிக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் போலிஸ் வரும்வரை காத்திருக்க வேண்டும். உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் விபத்து நடந்த இடத்தைப் பொறுத்து ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் போலிஸ் வரும். அதன் பின்னர் அவர் யார்மீது தவறு என விபத்து நடந்த விதத்தை வைத்து முடிவு செய்து தீர்ப்பு சொல்வார். அதுதான் தீர்ப்பு.அதன் பின்னர் இழப்பீடு கம்பெனிக்கும் வாகனம் சரி செய்யும் பணிமனைக்கும் போலிஸ் பேப்பர் கொடுப்பார்கள். இதைக் கொண்டு போய் இழப்பீடு கம்பெனியில் கொடுத்தால் அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொண்டு வாகனத்தை சரிசெய்ய ஒரு சீட்டு கொடுப்பார்கள் அதைக் கொண்டு போய் உங்கள் வாகனம் எந்த கம்பெனி தயாரிப்போ அங்கு செய்து சீர் செய்து கொள்ளலாம். இது வாகனம் வாங்கியதிலிருந்து முதல் ஆண்டுக்கு மட்டும். அதன் பின்னர் இரண்டாம் ஆண்டிலிருந்து இழப்பீடு கம்பெனி குறிப்பிடும் பல பணிமனைகளில் உங்களுக்கு அருகில் இருக்கும் அல்லது நீங்கள் நம்பும் பணிமனையில் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம். விபத்து நடந்ததிலிருந்து வாகனம் சரியாகி உங்கள் கைக்கு கிடைக்க அதிகபட்சம் 15 நாட்கள் முதல் இருபது நாட்கள் ஆகலாம்.

பத்தாயிரம் கத்தாரி ரியால்களுக்குள் இருப்பின் உடனடியாக இழப்பீடு கிடைக்கும். அதற்கு அதிகமான தொகைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் கேஸ் எண் தரப்படும். அதன் பின்னர் இழப்பீடு கிடைக்கும்.

இதிலும் அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் போலிஸ் பேப்பரும் கோர்ட் என்னும் கிடைத்துவிடும். எனவே விபத்து நடப்பதால் யாரும் கவலைப்படுவதில்லை. நம்மூர் மதிப்பில் ஐயாயிரம் ரூபாயை இழப்பீடு கம்பெனிக்கு கொடுத்துவிட்டால் ஒன்னேகால் லட்ச ரூபாய் வரை இழப்பீடு பணம் கிடைக்கும்.

இவ்வளவு எளிதாக வாகன காப்பீடு செய்யப்படும்போது நமது நாட்டில் மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள் எனத்தெரியவில்லை.

இது தவிர இங்கு போக்குவரத்தும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. இருப்பினும் சாலை விபத்துக்கள் மிக அதிகம். ஒவ்வொரு சாலை போக்குவரத்து விதிமுறை மீறலும் கடுமையாக தண்டிக்கப் படுகிறது. இருப்பினும் இத்தனை விபத்துகள்.

சாலைகளில் சர்வசாதரணமாக பயன் படுத்தவே முடியாத அளவு சேதமடைந்த வண்டிகள் கிடக்கும். முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து எடுத்துப் போடும்வரை அங்கேயே கிடக்கும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் அந்த இடத்தில் விபத்து நடந்த சுவடே இன்றி சுத்தம் செய்து சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.

எல்லா இடங்களிலும் ரேடார் மூலம் வாகன வேகத்தை கண்காணிக்கிறார்கள். நூற்றி இருபது கிலோமீட்டர் தான் அதிக பட்ச வேகம். அதற்கு மேல் வேகமாய் செல்லும் பட்சத்தில் ராடார் உங்களை காட்டிகொடுத்துவிடும். உங்கள் வண்டி எண்ணின் பெயரில் முன்னூறு ரூபாய் பற்று வைக்கப்படும். அடுத்த முறை வாகன பதிவை புதுப்பிக்குமபோது அந்த பணத்தைத் தரவேண்டும். இதுதவிர தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் இருநூறு ரியால்களும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதுபோல வாகனத்தி நிறுத்தினால் அறுநூறு ரியால்களும் கட்டவேண்டும். எல்லா போக்குவரத்து காவலரும் ஒரு புத்தகத்தோடேயே திரிவார். எங்காவது போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் கண்டால உடனே பைன் எழுதி வண்டியின் ஓட்டுனர் அருகில் இருக்கும் கண்ணாடியில் ஒட்டிவிட்டுச் செல்வார்.

நமது நாட்டிலும் விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டு அதனை செயல்படுத்துவதன் மூலமே விபத்துக்களைத் தடுக்கவும், உயிர் இழப்புகளை தவிர்க்கவும் முடியும். காப்பீடு நிறுவனங்கள் விதிகளை எளிமையாக்கி அனைவருக்கும் காப்பீடு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் பின்னர் காப்பீடு செய்ய மக்கள் வருவார்கள், நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யாமலேயே..

ஜெயக்குமார்

Monday, June 16, 2008

தசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி


தசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி.

ஒரு மோசமான திரைப்படத்தைக் கூட எப்படி விற்பனை செய்வது பற்றி கமலிடம் தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. ஜக்கிசானை வைத்து ஒலிபேழை வெளியீடு என்ன.. மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி அணிவகுப்பு என்ன, எண்பத்தைந்து வயதுள்ள முதியவருக்கு படத்தைப் போட்டுக்காட்டி அவரைக் கட்டிபிடித்து பாராட்டிய செய்திகளை வெளியிடுவதென்ன என இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இமாலய உயரத்திற்கு ஏற்றிவிட்டு ஒரு சொத்தைப் படத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் கமல்.

வித்தியாசமான கோணங்களை அமைத்ததற்காக ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு. சுனாமி காட்சிகள், விஷ்னுசிலையை கடலில் வீசும் காட்சி தவிர மற்ற அனைத்தும் சராசரி வகையே.

பத்து வேடங்களில் கமல் நடித்தாலும் (??) உண்மையில் கவர்வது பூவராகவனும், தெலுங்கு மாட்லாடும் உளவு அதிகாரியும் மட்டுமே. மற்ற அனைவரும் வருந்தி உள்நுழைக்கப் பட்டது அப்பட்டமாக தெரிகிறது. எப்படியாவது பத்து வேடங்களில் திரையில் வந்துவிட வேண்டும் என நினைத்த கமல் கொஞ்சம் மக்கள் பார்ப்பதுபோல இருக்க வேண்டும் எனவும் சிந்தித்திருக்கலாம்.

இனி அடுத்த படத்திற்கும் எதாவது ஒரு கேனத்தனமான தயாரிப்பாளர் கிடைத்தால் லைட்பாயிலிருந்து இயக்கம், வெளியீடு மற்றும் தியேட்டரில் பார்த்தல் வரை கமலே செய்யுமாறு பணமும் நேரமும் செலவழித்த ஒரு அப்பாவி ரசிகன் வேண்டுகோள் விடுக்கிறான். செய்யுங்கள் உலக நாயகனே என உசுப்பேத்தப்பட்டுள்ள கமலஹாசன்.

ஜெயக்குமார்