சமீபத்தில் ஊருக்குப் பேசியபோது எனது அக்கா சொன்னது அவரோட வண்டி(அக்காவின் கணவர் ) ஆக்சிடென்ட் ஆயிருச்சிடா அப்படின்னாங்க. அப்படின்னா உடனேயே காப்பீடு செய்துள்ள கம்பெனிக்கு தகவல் சொல்லி இழப்பீடுக்கு மனு போடச் சொல்லுங்க அப்படின்னேன். ஏனெனில் மொத்த செலவு பதினையாயிரம் ரூபாய்கள். இருந்தும் அவர்கள் இழப்பீடு வாங்க விரும்பவில்லை.
இந்தியாவில் இழப்பீடு பணம் கையில் கிடைப்பதற்குள் நமது வாகனம் ஓடுவதற்கு லாயக்கில்லாமல் போனாலும் போய்விடும் அளவுக்கு தாமதம் செய்கிறார்கள். எனவே கைக்காசை போட்டு செலவு செய்துவிட்டு வண்டி ஓட்டத்தில் இருந்தால் குறைந்தபட்சம் வண்டிக்கான வங்கி கடனையாவது அடைக்க முடியுமே என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். பிறகு எதற்கு காப்பீடு செய்தீர்கள் என்றால் இல்லையெனில் வாகனம் பதிவு செய்யப்படமாட்டாது என்பதற்காக.
நான் வேலை செய்யும் கத்தார் நாட்டில் விபத்து நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
விபத்து நடந்த உடன் போலிசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். சிறிய விபத்தோ பெரிய விபத்தோ.
பின்னர் தவறு யாருடையது என்பது தெளிவாகத்தெரிந்தால் போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு நாங்களே போலிஸ் ஸ்டேஷன் வருகிறோம் எனச்சொல்லிவிட்டு அங்கு சென்று போலிஸ் பேப்பர் எனப்படும் விபத்து பற்றிய குறிப்பும் இழப்பீடு பெறுவதற்காக ஒரு குறிப்பு இழப்பீட்டு கம்பெனிக்கும் வழங்கப்படும். பெரிய விபத்துகளுக்கும், யாருடைய தவறு என தீர்மானிக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் போலிஸ் வரும்வரை காத்திருக்க வேண்டும். உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் விபத்து நடந்த இடத்தைப் பொறுத்து ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் போலிஸ் வரும். அதன் பின்னர் அவர் யார்மீது தவறு என விபத்து நடந்த விதத்தை வைத்து முடிவு செய்து தீர்ப்பு சொல்வார். அதுதான் தீர்ப்பு.அதன் பின்னர் இழப்பீடு கம்பெனிக்கும் வாகனம் சரி செய்யும் பணிமனைக்கும் போலிஸ் பேப்பர் கொடுப்பார்கள். இதைக் கொண்டு போய் இழப்பீடு கம்பெனியில் கொடுத்தால் அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொண்டு வாகனத்தை சரிசெய்ய ஒரு சீட்டு கொடுப்பார்கள் அதைக் கொண்டு போய் உங்கள் வாகனம் எந்த கம்பெனி தயாரிப்போ அங்கு செய்து சீர் செய்து கொள்ளலாம். இது வாகனம் வாங்கியதிலிருந்து முதல் ஆண்டுக்கு மட்டும். அதன் பின்னர் இரண்டாம் ஆண்டிலிருந்து இழப்பீடு கம்பெனி குறிப்பிடும் பல பணிமனைகளில் உங்களுக்கு அருகில் இருக்கும் அல்லது நீங்கள் நம்பும் பணிமனையில் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம். விபத்து நடந்ததிலிருந்து வாகனம் சரியாகி உங்கள் கைக்கு கிடைக்க அதிகபட்சம் 15 நாட்கள் முதல் இருபது நாட்கள் ஆகலாம்.
பத்தாயிரம் கத்தாரி ரியால்களுக்குள் இருப்பின் உடனடியாக இழப்பீடு கிடைக்கும். அதற்கு அதிகமான தொகைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் கேஸ் எண் தரப்படும். அதன் பின்னர் இழப்பீடு கிடைக்கும்.
இதிலும் அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் போலிஸ் பேப்பரும் கோர்ட் என்னும் கிடைத்துவிடும். எனவே விபத்து நடப்பதால் யாரும் கவலைப்படுவதில்லை. நம்மூர் மதிப்பில் ஐயாயிரம் ரூபாயை இழப்பீடு கம்பெனிக்கு கொடுத்துவிட்டால் ஒன்னேகால் லட்ச ரூபாய் வரை இழப்பீடு பணம் கிடைக்கும்.
இவ்வளவு எளிதாக வாகன காப்பீடு செய்யப்படும்போது நமது நாட்டில் மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள் எனத்தெரியவில்லை.
இது தவிர இங்கு போக்குவரத்தும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. இருப்பினும் சாலை விபத்துக்கள் மிக அதிகம். ஒவ்வொரு சாலை போக்குவரத்து விதிமுறை மீறலும் கடுமையாக தண்டிக்கப் படுகிறது. இருப்பினும் இத்தனை விபத்துகள்.
சாலைகளில் சர்வசாதரணமாக பயன் படுத்தவே முடியாத அளவு சேதமடைந்த வண்டிகள் கிடக்கும். முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து எடுத்துப் போடும்வரை அங்கேயே கிடக்கும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் அந்த இடத்தில் விபத்து நடந்த சுவடே இன்றி சுத்தம் செய்து சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.
எல்லா இடங்களிலும் ரேடார் மூலம் வாகன வேகத்தை கண்காணிக்கிறார்கள். நூற்றி இருபது கிலோமீட்டர் தான் அதிக பட்ச வேகம். அதற்கு மேல் வேகமாய் செல்லும் பட்சத்தில் ராடார் உங்களை காட்டிகொடுத்துவிடும். உங்கள் வண்டி எண்ணின் பெயரில் முன்னூறு ரூபாய் பற்று வைக்கப்படும். அடுத்த முறை வாகன பதிவை புதுப்பிக்குமபோது அந்த பணத்தைத் தரவேண்டும். இதுதவிர தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் இருநூறு ரியால்களும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதுபோல வாகனத்தி நிறுத்தினால் அறுநூறு ரியால்களும் கட்டவேண்டும். எல்லா போக்குவரத்து காவலரும் ஒரு புத்தகத்தோடேயே திரிவார். எங்காவது போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் கண்டால உடனே பைன் எழுதி வண்டியின் ஓட்டுனர் அருகில் இருக்கும் கண்ணாடியில் ஒட்டிவிட்டுச் செல்வார்.
நமது நாட்டிலும் விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டு அதனை செயல்படுத்துவதன் மூலமே விபத்துக்களைத் தடுக்கவும், உயிர் இழப்புகளை தவிர்க்கவும் முடியும். காப்பீடு நிறுவனங்கள் விதிகளை எளிமையாக்கி அனைவருக்கும் காப்பீடு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் பின்னர் காப்பீடு செய்ய மக்கள் வருவார்கள், நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யாமலேயே..
ஜெயக்குமார்
No comments:
Post a Comment