Friday, April 3, 2015

ரஜினி நடித்த பழைய திரைப்படங்கள் பற்றிய எனது குறிப்புகள்


ஆறிலிருந்து அறுபதுவரை.... சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். ஒரு 60 வருட சரித்திரத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார் எஸ்.பி முத்துராமன். முரட்டுக்காளையும், சகலகலாவல்லவனையும் பார்த்து எஸ்.பி.முத்துராமனை தவறாக கணித்திருக்கிறேன். ரஜினிகாந்துக்கு எப்போதும் சொல்லிக்கொள்ள ஒரு படம் இது. எந்த வித மிகை நடிப்புமின்றி சந்தானமாக அருமையாக செய்திருக்கிறார். ”கண்மனியே காதல் என்பது” பாடலை எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக நினைத்திருந்தேன். இன்னொருமுறை இந்தப்பாடலின் வீடியோவை காணும் தைரியம் இல்லை. ரஜினியிடமிருந்து மிக அருமையான அனுபவம்.புவனா ஒரு கேள்விக்குறி.. 

”அண்ணே, நாகராசு அண்ணே.. நீங்க கடப்பாறைய முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்டா சரியாப்போயிரும்னு நெனைக்கிறீங்க. ஆனா, அது வயித்த கிழிக்காம விடாதுண்ணே...” சிவக்குமாரையும் வில்லனாக ஒத்துக்கொள்ள வைத்ததும், என்னதான் மோசமான ஆசாமியாக இருந்தாலும் நல்லவனாக, வாழ்க்கையின் ஆதாரத்துக்காக தியாகங்களைச் செய்பவராக ரஜினிகாந்தையும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார். சிவக்குமாருக்கும், ரஜினிக்கும் நடக்கும் உரையாடல்கள் இன்றும் எங்கோ இரு நண்பர்களுக்குள் நடந்துகொண்டுதான் இருக்கும். தனது ஆசாபாசங்களை வாய்விட்டுக்கேட்கிறாரே ஒழிய அதை உரிமையுடன் எடுத்துக்கொள்வதில்லை ரஜினி, உரிமை இருந்தும். உலகம் யாரை நல்லவனாக, வெற்றியாளனாக கருதுகிறது என்பதற்கும், நல்லதுக்கு காலமில்லை என்பதையும் கருப்பு வெள்ளைக்காலத்திலிருந்தே சொல்லி வருகின்றனர்.

அரிச்சந்திரனை தோல்வியடைந்தவனுக்கு உதாரனமாக, பிழைக்கத்தெரியாதவனுக்கு உதாரனமாக எஸ் பி முத்துராமன் இந்தப்படத்திலும், ஆறிலிருந்து அறுபதுவரை படத்திலும் சொல்லி இருக்கிறார். ஆனால், அரிச்சந்திரனாக முயல்பவர்களே வாழ்க்கையில் வெற்றியடைவதாக காட்டியிருப்பதில் இருந்தே இயக்குணர் சொல்ல வருவதை சிறப்பாக சொல்கிறார். நாகர்கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது, அப்போது. கன்யாகுமரியும் எப்படி கட்டிடங்களால் நிரப்பப்படாமல், சுத்தமான கடற்கரையாக காட்சியளிக்கிறது. இப்போதைய நாரோயில் ஒரு குப்பைமேடாகிவிட்டது. போதாக்குறைக்கு எழுத்தாளர்களால் நிரம்பி வழிகிறது.. :) ரஜினியின் இன்னொரு அருமையான படம் ”புவனா ஒரு கேள்விக்குறி” 

ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் இன்றைய ஸ்பெஷல்.. 

இவ்வளவு அருமையாக நடிக்கும் ஒருத்தரைத்தான் மசாலா, இமேஜ், சூப்பர் ஸ்டார் என்ற பொட்டிக்குள் போட்டு அடைத்துவைத்து அவரை இமேஜ் கைதியாக்கி வைத்திருக்கின்றனர்? அதுவும் இந்தப் படத்தின் இறுதியில் வரும் கொஞ்சம் வயதான ரஜினி சான்ஸே இல்லை. பார்வை, உடல் மொழி, வசன உச்சரிப்பில் கலக்குகிறார். ஒரு பெண் படிதாண்டி அனுபவிக்கும் கொடுமைகளும், அதனால் அவள் குடும்பமும். கணவனும் அனுபவிக்கும் மனக்கஷ்டமும்தான் படம். ரஜினி ஆரம்பத்தில் இருந்தே இயல்பான நடிப்பு. இடதுகாலும் வலதுகாலும் நிலத்துல படாம சுத்தி சுத்தி அடிப்பதோ, ஏர்ல பறந்து பறந்து அடிப்பதோ இல்லாமல் கிராமத்து சண்டைகள்..பிடிக்காத மனைவியிடம் (அம்பிகா) கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள், ... எளிமையான ஆனால் தைக்கும் வசனங்கள், முத்து படப்பாடலில் வரும் கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன், கழுத்துவரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் என்பதை இந்தப்படத்தில் கூலியாட்களுக்கு அறிவுரையாக சொல்கிறார் ரஜினி. எஸ்.பி முத்துராமனின் அருமையான இயக்கத்தில் எங்கேயோ கேட்ட குரல். இந்தப் படங்களையெல்லாம் பார்க்காமலேயே 80களில் இருந்து ரஜினி ரசிகன் நான்.இனி ஆயுட்கால ரஜினி ரசிகனாத்தான் இருந்தாகனும்போல.. :)No comments: