Thursday, April 16, 2015

பாக்தாத்தும் பாஸ்ராவும்

பாஸ்ராவை ஒப்பிடும்போது பாக்தாத் நிச்சயம் மாடர்ன் நகரம்தான்.
பெண்கள் முழு சுதந்திரத்துடன் ஆடை அணிகிறார்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஈராக்கிய பெண்களும். ஹைஹீல்ஸுடன் முழங்காலுக்கு மேல் இருக்கும் ஆடையுடன் ஹோட்டலுக்கு வருகிறார்கள், ஆளையே முழுங்குவதுபோல ஈராக்கிய ஆண்கள் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் சுற்றுகிறார்கள். பாஸ்ராவில் கிறிஸ்தவர்கள் தவிர இதர பெண்மனிகள் 99 சதவீதம் முழு புர்க்காதான்.

இந்நாட்டின் தலைநகரிலும் டாஸ்மாக் போல எல்லா இடங்களிலும் ஆல்கஹால் கிடைக்கிறது.

நகரை அழகுபடுத்த நிறையவே செலவு செய்கிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லும் அழகு படுத்தல் கணக்குக்கு நம்முரில் சில நூறு கிலோமீட்டர்களை அழகு படுத்தலாம். ஏர்போர்ட்டில் ஆரம்பித்து மெயின்ரோடு வரைக்கும் குத்துமதிப்பாக 5 கிலோமீட்டர்கள். இதை அழகுபடுத்த 1 பில்லியன் டாலர்கள் செலவழித்ததாக சொல்கிறது பாக்தாத் ஏர்போர்ட்டும், முனிசிபாலிட்டியும். என்ன அழகு செய்திருக்கிறார்கள் என்றால் பேரிச்சை மரத்தை இரு வரிசைகளாக பிரித்து நட்டிருக்கிறார்கள். இருபக்கமும் சிறிய அளவில் புல்தரை 5 கிலோமீட்டருக்கு. செயற்கை நீரூற்று. நம்மூர் கோவில்களில் அசிங்கப்படுத்துவதற்கென்றே இடப்படும் டைல்ஸ்கல் ஒட்டி சம்பந்தமே இல்லாத இடங்களில் சுவர்கள்.. வெல்கம் டு பாக்தாத் என மூன்று இடங்களில் போர்டுகள். இதற்கு 1 பில்லியன் டாலர்களாம். நம் அரசியல்வாதிகள் தெய்வமாக தோன்றுகிறார்கள் இப்போது.

அவ்வப்போது எங்காவது வெடித்துக்கொன்டிருந்தாலும் அது ஒரு விஷயமே இல்லாத அளவு பழகி இருக்கிறார்கள்.

நல்ல ஹோட்டல்கள் நிறைய வந்திருக்கிறது.

பெரும் மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தனை அபத்திர சூழலிலும் இத்தனை முதலீடு செய்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்

2 மில்லியன் டாலருக்கு வேலை இருக்கு, செய்றீங்கன்னா சொல்லுங்க, முடிச்சிருவோம் எனச் சொல்லும் கோட்டு போட்ட பந்தா பேர்வழிகளின் எண்ணிக்கை கூடுதலாகியிருக்கிறது. நானும் சிரிக்காமல் 5 மில்லியனுக்கு குறைவாய் வேலைகளை எடுப்பதில்லை எனச் சொல்லி அவர்கள் நெளிவதை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இதில் மேற்சொன்ன எதுவுமே இல்லையென்றாலும் விலைமதிப்பற்ற பத்திரமான சூழல் பாஸ்ராவில் உண்டு. மாதம் ஒரு குண்டு வெடித்தாலே செய்தியாகும் அளவு நல்ல சூழல்.
இன்னும் இரு நாட்கள் பாக்தாத்தில் இருப்பேன்.

12.04.2015ல் எழுதியது

No comments: