Sunday, November 24, 2013

அன்புள்ள அப்பா...

அப்பாவைப் பற்றிய பதிவெழுதவில்லையெனில் நான் நல்ல பிள்ளை இல்லையோ என்பதாகிவிடும் என்பதால் என் அப்பா குறித்து சில...

அப்பாவுக்கு சிலார்பட்டி என்ற கிராமத்தில் கால்நடை பரமாரிப்புத்துறையில் உதவியாளர் வேலை. அந்த ஊருக்கெல்லாம் டாக்டர் வருவது டாக்டர்களின் கௌரவத்துக்கு குறைவு என்பதால் பெரும்பாலான நேரங்களில் அப்பாவே டாக்டர், கம்பவுண்டர் எல்லாம். டாக்டர் வரும் நாட்களில் விவசாயிகள் வரமாட்டார்கள்.. ( என்னத்தையாச்சும் படிச்சுட்டு வந்து மாட்ட கொன்னுபோடுவாய்ங்க என்ற நம்பிக்கை)

கல்லுப்பட்டியிலிருந்து சிலார் பட்டி 12 கிலோமீட்டர். போக வர 24 கிலோமீட்டர். N.ஸ்ரீநிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் என சைக்கிளின் முழுதும் மூடிய செயின் கவரில் எழுதிய வண்டியில்தான் பயணம். சிலார் பட்டி மற்றும் அதற்கு முன்னர் உள்ள சுப்புலாபுரத்தில் 80களில் தினசரிகள் கிடைக்காது. எனவே அந்தந்த ஊரில் கொடுப்பதற்காக வீட்டில் வரும் அந்த செய்தித்தாள்கள்.அப்பா வேலைக்குச் செல்லும் முன்னர் எங்கள் வீட்டில் தினத்தந்தி, தினமலர், தினமணி வரும். அப்பா கிளம்பும் முன்னர் எங்கள் தெரு பெரியவர்கள் வந்து அலுங்காமல் பேப்பரை பார்த்துவிட்டு வைத்துவிட வேண்டும். நானெல்லாம் தினசரி வாசிக்கக் கற்றுக்கொண்டது மூன்றாம் வகுப்பிலிருந்து. எனது தம்பி தினசரியை அப்பாவுக்கு தினமும் வாசித்துக்காண்பிப்பான். (பார்ரா, ராஜேஷ் எப்படி அழகா எழுத்துக்கூட்டி படிக்கிறான் என எனக்கு பாட்டு விழும்)

கிராமத்தில் வேலை என்பதால் எப்போதும் ஏதாவது ஒரு விளைச்சல் மஞ்சள் பையில் அப்பாவுடன் வீடு வந்து சேரும். பெரும்பாலும் ஈர வெங்காயம், வெண்டை, பறித்த நிலக்கடலை, பாசிப்பயறு, மொச்சை என்பதாக.

இது தவிர எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் அரிசிக்கு எப்போதும் தட்டுப்பாடு. கிராமங்களில் பச்சரிசியை யாரும் வாங்க மாட்டார்கள். சொசைட்டி ஆள் சுப்புலாபுரத்திலிருந்து வீட்டிற்கு 100கிலோ மூடையை சைக்கிளில் எடுத்து வந்து போட்டு விட்டுச் செல்வார். 2 ரூபாய் கிலோ என வாங்கியதாக ஞாபகம்.

குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது எங்களையும், பெரியப்பா குழந்தைகளையும் ஒன்றாய் நடத்தி எல்லோரையும் விரும்பியவரை படிக்க வைத்தார். எங்கள் தலைமுறையில் அதிகம் படித்தது எனது அண்ணன் வெங்கட்ராமன் . பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி.

எல்லோரும் தலையெடுக்க ஆரம்பிக்கவும் அவர் ரிடையர் அகவும் சரியாக இருந்தது.

வேலைக்குச் சென்ற காலங்களில் அப்பா 7.30 மணிக்குள் சாப்பாடு சாப்பிட்டு மதியத்திற்கு டிபன் பாக்ஸிலும் எடுத்துச் செல்ல வேண்டும். எனவே எனது அம்மாவைப் போட்டு படுத்தி எடுத்துக்கொண்டிருப்பார். என்னமோ டைம் கீப்பர் போல மணி ஏழு, ஏழேகால், ஏழரை, நான் போய்ட்டு வாரேன், நீயும் உன் சாப்பாடும் என சவுண்டு விட்டுக்கொண்டிருப்பார். ஒருவழியாய் அம்மா அழுது, சமாதானப்படுத்தி அப்பாவை சாப்பிட வைத்து மதியம் கட்டியும் கொடுத்து விடுவார். ரிடயர்மெண்ட்டிற்குள் அம்மாவும் தளர்ந்துவிட பின்னர் அம்மாவுக்கு முடியாத காலங்களில் அப்பா அம்மாவை மிக நன்றாய் பார்த்துக்கொண்டார்.

தற்சமயம் கல்லுப்பட்டியில் இருக்கிறார். கண்பார்வை ஒரு கண்ணில் சுத்தமாய் இல்லை. இருக்கும் ஒரு கண்ணிலும் பாதிதான் பார்வை. அண்ணனிடம் சென்று இருங்கள் என்றால் போடா, கல்லுப்பட்டியில என்னடா கொறச்சல் எனச் சொல்லிக்கொண்டே கல்லுப்பட்டியை விட்டு நகர மாட்டேனென்கிறார்.

கூட்டுக்குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை அப்பாவிடம், பெரியப்பாவிடமும் கற்றுக்கொள்ளலாம். இன்றும் அடுத்த தலைமுறையான நாங்களெல்லாம் அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என ஒற்றுமையாய் இருக்கிறோம். இதை சாத்தியப்படுத்திய எனது அப்பா மற்றும் பெரியப்பாவுக்கு எனது அன்பும், மரியாதையும் என்றும் இருக்கும்.

சேமிக்கும் பழக்கத்தை அப்பாவிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும், அதை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

அப்பாவுக்கு வாழ்த்தெல்லாம் சொல்லி அந்நியப்படுத்த மாட்டேன். எல்லோரும் அவங்கங்க அப்பாவைப் பத்தி சொல்லும்போது எங்கப்பாவைப் பத்தியும் சொல்லனும்ல...

படத்தில் எனது அப்பா, எனது மகளும், அவரது பெயர்த்தியுமான ஜெயஸ்ரீயுடன்..


(16.06.2013ல் எழுதியது)

No comments: