Sunday, November 24, 2013

6174 - சுதாகர் கஸ்தூரி

சுதாகர் கஸ்தூரியின் முதல் நாவலான 6174 எனும் நாவலைக் குறித்து கத்தார் ஏர்போர்ட்டில் ட்ரான்ஸிட்டில் அமர்ந்திருக்கும்போது சாட்டிங்கில் சொன்னார். சரி, நமக்குத் தெரிந்தவர் புஸ்தகம், வாங்கித்தான் படித்துப்பார்போமே என வாங்கி 4 மாதங்களாக தூங்கிக் கொண்டிருந்த்து. 

இம்முறை இந்தியாவுக்கு வரும் வழியில் ஷார்ஜாவில் 6 மணி நேரம் ட்ரான்ஸிட். இராக்கில் வேலை செய்வதில் இருக்கும் இன்னொரு அசௌகரியம் இந்த ட்ரான்ஸிட்டில் அமர்ந்திருக்கும் கொடுமை.

வந்து இறங்கிய உடன் நாவலை புரட்ட ஆரம்பித்தவன் எப்போது அதனுள் மூழ்கினேன் என நினைவில்லை. அப்படி ஒரு அருமையான நடை. கதையின் காலம் முன்னும், பின்னும் அலைபாய்ந்தாலும் எளிதில் சேர்ந்துவிட முடிகிறது. இந்தியா, பர்மா, கொரியா என பல நாடுகள் சம்பந்தப்படுகிறது கதையில். நிறைய கணக்குகள்குறித்த பக்கங்களும் உண்டு. படம் வரைந்து பாகங்களை விளக்கும் விளக்கப்படங்களும் உண்டு.

பல நூற்றாண்டுகளின் கதையாக இருப்பினும், கதையில் வருவோர் பேசிக்கொள்ளும் வசனங்கள் அன்னியத்தன்மையற்று எல்லோரும் 21ம் நூற்றாண்டுத்தமிழிலேயே பேசிக்கொள்ளுதல் படிப்பதை எளிதாக்குகிறது. லெமூரியக் கண்டமும் அதன்மர்மங்களும்தான் கதைக்களன். மிச்சமெல்லாம் அதனைச் சுற்றி நடப்பவை.

மிக மெலிதாக ஒரு காதலும் உண்டு.

இப்படிப்பட்ட ஊசலாட்டக் கதைகளில் லாஜிக் ஓட்டைகள் எளிதில் வந்துவிடும். முதல் நாவலாய் இருப்பினும், கடின உழைப்பைச் செய்து நிறைய ஆதாரங்களுடனும், பொதுக்கருத்தில் இருக்கும் விஷயங்களையும் இணைத்து ஒரு நல்ல நாவலைப் படைத்திருக்கிறார்.

உன்மையைச் சொன்னால் நான் அவ்வளவு நம்பிக்கையுடன் படிக்க ஆரம்பிக்கவில்லை. அவரது எக்ஸிகியூட்டிவ் தனமான படங்களைப் பார்த்து சரி, ஒரு நாவலை முயன்றிருப்பார், சுமாராக இருக்கும் என்ற முன்முடிவுடந்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் அவரது அசாத்திய உழைப்பும், சரியான தகவல்களை தர அவர் நன்கு முயன்றிருப்பதும், சுவரசியத்துக்காக எதையும் தேவையில்லாமல் சேர்க்காமல் ஆனால் விறுவிறுப்பான நடையில் எழுதியிருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

இரா.முருகன் முன்னுரை பொய்யில்லை. நிஜமாகவே புஸ்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.

சுதாகர் கஸ்தூரி தமிழின் டான் பிரவுனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் டான் பிரவுனையெல்லாம் படித்த்தில்லை. ஆனால், இன்னொரு அருமையான கதை சொல்லி தமிழுக்கு கிடைத்திருக்கிறார் என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்.

சுதாகர் கஸ்தூரி அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், படிக்காதவர்களுக்கு அவசியம் வாங்கிப் படியுங்கள் என்ற பரித்துரையும் செய்கிறேன். நிச்சயம் ஒரு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும். Sudhakar Kasturi

1 comment:

Anonymous said...

http://subadhraspeaks.blogspot.in/2014/05/6174.html