Monday, November 25, 2013

கல்யாணி அக்கா...

கல்யாணி அல்லது கல்யாணி அக்கா..

”கல்யாணி”யை எதிர்கொண்டது ஒரு சாட்சியுடன்.. நம்ம பிரகாஷின் அக்காவுடன். ஒரு சனிக்கிழமை இரவு டி.வியில் எதோ ஒரு படம் இரவு பணிரெண்டு மணியைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. டிவிக்கு நேர் எதிராய் அக்கா அவர்கள் வீட்டு கண்ணாடி பீரோவில் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்த அறையின் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்.

நள்ளிரவு நேரம் (சரியான நேரமெல்லாம் ஞாபகமில்லை) சல்..சல்..சல் என சப்தம். அக்கா டீ.வீ பாத்துக்கிட்டிருக்கும்போது இதென்னக்கா என்றேன். அக்காவுக்கு முதலில் கேட்டிருக்கிறது. பயந்து போயிருக்க வேண்டும். எனக்கு சப்தம் போடாதே என சைகை செய்துவிட்டு காலை காண்பிக்கிறார்கள். அக்கா எப்படி அமர்ந்திருக்கிறார்களோ அப்படியே இருக்கிறார்கள். டி.வியை மியூட்டும் செய்தாயிற்று. அந்த அறையில் நான், அக்கா, மற்றும் பாட்டி மட்டுமே. பாட்டி தூங்குகிறார்கள். கொலுசு போட வாய்ப்பில்லை அக்காவும் இல்லை.. தொண்டைக்குள் பந்து அடைப்பதை அன்றுதான் முதன்முறையாக அனுபவித்தேன். அந்த சப்தம் எங்கள் பள்ளியின் காம்பவுண்டு சுவற்றிலிருந்து ஆரம்பித்து அப்படியே நெருங்கி வருகிறது. நான் அமர்ந்திருக்கும் படிக்கு அருகில் சமையல் கூடம் அதன் வெளியே ஒரு காலி இடம் முழு வீட்டின் நீளத்திற்கும்.அந்தக் காலியிடம் சாலையில் சென்று சேரும். அதாவது எனது வீட்டிற்கு எதிராக அந்த சந்து அல்லது காலியிடம் இருக்கிறது. கல்யாணி தூரத்தில் நடந்து வருவதை டி.வி ஓடும்போதே கேட்க முடிந்தது.

மியூட்டில் இருக்கும்போது எங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது கொலுசு அணிந்த ஒரு பெண் வேகமாக நடந்து செல்லும்போது எப்படி இருக்குமோ அப்படி கேட்டது. அக்கா இருக்கும் தைரியத்தில் போய்ப் பார்க்கவா என்றேன்.. அக்காவும் நானும் வருகிறேன் என சைகை கான்பித்தார்கள். இருவரும் சைகை பாஷையில் பேசி, வாசலுக்கு இரு கதவையும் திறந்து வருவதற்குள் கல்யாணி காற்றில் கரைந்திருந்தார்கள். நாய் ஊளை, பின்னர் அமைதி எல்லாம் பிரகாஷ் விவரித்திருந்தது போலவே. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின்னர் கல்யாணியைப் பற்றிய பயம் வரவில்லை. நானும். பிரகாஷும் கல்யாணி நடந்து செல்லும் பாதையில் பலமுறை படுத்திருக்கிறோம். ஆனால், கல்யாணி நடந்து செல்வதைக் கேட்க முடிந்ததில்லை.

கல்யாணி - அவர்கள் வீட்டாராலேயே கொலை செய்யப்பட்ட ஒரு பெண் எனவும், அவர் காதலித்த ஆளின் வீட்டுக்கு செல்வதாகவும் பிரகாஷின் அண்ணனின் நண்பன் சுந்தரராஜ் ஒரு நம்பத்தகுந்த ரீலை சுற்றிவிட்டிருந்தான். ஆனால், இன்றுவரை கல்யாணி யாரெனத் தெரியாது.. ஆனால், சினிமா தியேட்டர் லட்சுமியைத் தெரியும்... அவளால்தான் சினிமா தியேட்டருக்கு லட்சுமி தியேட்டர் என்றே பெயர் வந்தது. (இது என்னவெனப்புரியாதவர்கள் பிரகாஷ் ராஜகோபால் எழுதிய இடுகையையும் படித்து விடுங்கள். அது கீழே..
-----
செகண்ட் ஷோ முடிந்து எங்கள் வீதியில் நடந்து வருபவர்கள் தனியாக நடந்து வரக் கொஞ்சம் பயப்படுவார்கள்.காரணம்: கல்யாணிப் பேய்.

பனிரெண்டு மணிக்கு மேல் கல்யாணிப் பேய்,ஜல் ஜல் என்கிற கொலுசுச் சத்தத்துடன் நடந்து போகுமாம். அண்ணன்மார்கள் நிறையப் பேர் சொல்லிக் கேள்வி.

பனிரெண்டாம் வகுப்பு. அரைப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது.என் வீட்டிற்கு எதிர்வீடுதான் ஜெயக்குமாரின் வீடு.அவனது அப்பா, நாங்கள் படிப்பதற்கென்றே கூட்டுக் குடித்தனத்தின் ஒரு வீட்டை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தார். யாரேனும் விருந்தினர் வந்தால் மட்டும் அவர்களுக்கு ஹாலைக் கொடுத்து விட்டு, நாங்கள் முன்கூடத்தில் படித்து விட்டு, அங்கேயே தூங்குவோம்.

பயாலஜி பரீட்சை,வரும் திங்கள் கிழமை.முந்தைய வெள்ளிக்கிழமை இரவு நானும் ஜெயக்குமாரும் முன் கூடத்தில் ரத்தம் உறைதல் பற்றிய கம்பைன் ஸ்டடியில்.

நைட் ஸ்டடி என்றால்,பதினோரு மணி வாக்கில், கடைத்தெருவுக்குப் போய் எஸ்.பி.எம் கடை அருகே தள்ளுவண்டியில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், அரைத்தூக்கத்தில் ஒருவர் விற்கும் சுக்குமல்லி காஃபியைக் குடித்து விட்டு வருவோம்.

எனக்குப் புத்துணர்ச்சியைத் தரும் அதே சுக்குமல்லிக் காஃபி, அவனுக்கு மட்டும் எப்படித் தூக்கத்தைக் கொடுக்கிறது என்பது இன்று வரை எனக்கு விளங்காத பயாலஜிக்கல் மிஸ்ட்ரி.
சு.ம. காஃபி குடித்து விட்டு வந்து, படிக்க உட்கார்ந்தால் அவனது அமர்ந்த கோலம் எப்போது கிடந்த கோலமாக ஆகும் என்று அந்த மஹாவிஷ்ணுவுக்கே தெரியாது.

“ரத்தத்தில் உள்ள "த்ராம்பின்' பிளாஸ்மாவில் உள்ள "ஃபைபிரினோஜென்' என்ற புரதத்தை, "ஃபைபிரின்' என்ற நீண்ட நூலிழைகளாக மாற்று….”
அட! ஜெயக்குமார் உறங்கி விட்டான்.

சரி, சனி ஞாயிறு இரண்டு நாள்கள் இருக்கிறதென நானும் அவனைத் தண்ணீர் ஊற்றி எல்லாம் எழுப்பவில்லை.
மணி பனிரெண்டரைக்கு மேல் இருக்கும். செகண்ட் ஷோ போய்விட்டு எங்கள் தெருவழியே சென்றவர்களின் பேச்சொலியும் செருப்புச் சத்தமும் சுத்தமாக நின்று விட்டது.

நாளமில்லாச் சுரப்பிகள் பற்றிப் படித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று நாய்கள் குரைக்கும் சப்தமும், ஊளையிடும் சத்தமும் விடாது கேட்டது. எதிர்வீட்டில் கட்டப் பட்டிருந்த பசுக்கள் வித்தியாசமாகப் பெருமூச்செறிந்து குரல் எழுப்பி, கயிற்றை அறுக்க முயல்வதைப் போல சத்தம்.எனக்கு பயம் லேசாகத் துளிர் விட ஆரம்பித்தது.

அதெல்லாம் ஒண்ணுமிருக்காது, பேயாவது, பிசாசாவது என்றெண்ணி, ஹார்மோன்களில் ஹார்மனைஸ் ஆக முயன்றேன். இப்போது நாய்களின் ஊளைச்சத்தம் ஊஃபர் எஃபெக்ட்டுடன் பெரியதாகக் கேட்டது. இரண்டு மூன்று நாய்கள் வீட்டைக் கடந்து குரைத்துக் கொண்டே ஓடின.

சில நிமிடங்களிலேயே நாய்களின் குரைப்புச் சத்தம், மாடுகளின் ஓசை எல்லாமே அடங்கி மரத்தின் ஒரு இலை கூழே விழுந்தால் கூட கேட்குமளவு எங்கள் வீதியே மன்மோகன் மோட்-ல் ஆனது.

“பேய் வர்றப்ப, நாயோட வாயைக் கட்டிப் போட்ருமாம்”- அண்ணன்கள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. கண்கள் மட்டும் பாடப்புத்தகத்தில்…மெய் வாய், மூக்கு செவி என்று என் மற்ற பூதங்கள் அனைத்தும் அந்தப் பேயின் அசைவுகளுக்காக உஷாராகி..

தூரத்தில் மெதுவாக ஜல் ஜல் என்ற கொலுசு ஓசை கேட்க ஆரம்பித்தது. ஐயே! ஏதோ சில்வண்டோட சத்தமா இருக்கும் என்று செயற்கை தைரியத்தை என் மனதுக்குள் குடம் குடமாக ஊற்றத் துவங்கினேன். ஜல் ஜல் ஒலி பெரியதாகிக் கொண்டே வந்தது. சரி வரட்டுமே, நாம் தான் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கிறோமே!

முன்கூடத்தை, முழுக்கச் சுவர்கள் வைத்துக் கட்டாமல், கம்பிகள் வைத்துக் கட்டிய அந்தக் கொத்தனாரை அந்த நடு ராத்திரியில் சபித்தேன். நல்ல வேளை. அந்தக் கம்பிகளுக்கு மறைப்பாக சாக்கு, திரைத் துணி என்று போட்டிருந்ததால், பேய் வந்தாலும் அது என்னைப் பார்க்க முடியாது என்று அசட்டு தைரியம் பிறந்தது.

அங்கு எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைப்பதா வேண்டாமா என்கிற டைலமாவில், ஒளி இருக்கும் இடத்திற்குப் பேய்கள் அவ்வளவு கேஷீவலாக வராது என்கிற என் பொது அறிவை மெச்சிக் கொண்டே தொடர்ந்து படிக்க(?!)(நடுங்க)லானேன்

எழுத்துக்களின் மேல் கண் இருந்தாலும், ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை.அட்ரினலின் ஹார்மோன் இயக்கம் எல்லாம் படிக்காமலேயே உடம்புக்குள்ளே நடந்து கொண்டிருந்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

ஜல் ஜல் ஒலி தெருவின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குப் போவது போல இப்போது மிக அருகில் ஒலிக்க ஆரம்பித்தது. திடீரென்று மல்லிகைப்பூ வாசம் தூக்கலாக அடிக்க ஆரம்பித்தது. மூன்றடி தூரத்தில் யாராவது நான்கு முழம் மல்லிகைப் பூ வைத்திருந்தால் எப்படி வாசனை அடிக்குமோ அப்படி.

ஜெயக்குமாரை எழுப்பலாமா என யோசித்தேன். வேண்டாம், இவன் எழுந்திருக்கும் சத்தத்தில் பேய் இந்தப் பக்கம் வந்து விடுமோ என்கிற பயத்தில் பேசாமல் இருந்தேன்.இப்போது ஜல் ஜல் ஒலி நான் உட்கார்ந்திருந்த கூடத்துக்கு வெளியே கேட்க ஆரம்பித்தது. எனக்கு சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது. இருந்தாலும், மனதுக்குள் ஒரு விபரீத ஆசை- பேயைப் பார்க்கலாமா என.

நான் சாக்குத் திரையை விலக்கிப் பார்ப்பதை அந்தப் பேய் கவனித்து என்னை ஏதேனும் செய்து விட்டால்?
ஐயையோ! இந்த உலகத்துக்கு இன்னும் நான் எந்த ஒரு செய்தியையும் எழுதிக் கூட வைக்கவில்லையே.

வேண்டாம் என்று ஒரு மனமும், இல்லை, இது டெய்லி வாக்கிங் போகும் நம்ம தெரு கல்யாணி தான்- நம்மை ஒன்றும் செய்யாது, துணிந்து பார் என்று இன்னொரு மனமும்..

கொஞ்சம் மனதை தைரியப் படுத்திக் கொண்டு இன்றைக்குப் பார்த்தே விடுவதென முடிவெடுத்தேன்.

படபடக்கும் இதயத்தோடு சாக்குத் திரையை மெதுவாக விலக்கிப் பார்த்தேன்.

மேற்கூறிய வரிக்கும், அதற்கு முந்தைய வரிக்குமான கால இடைவெளி சுமார் ஒன்றரை மணி நேரம்.

No comments: