Monday, November 25, 2013

குர்திஸ்தானில் ஜெயக்குமார்..

எர்பில் அனுபவங்கள்.

ஈராக்கின் வடஎல்லையில் இருக்கும் மாகானம் என ஈராக்கும், குர்திஸ்தானின் ஆவனங்களும் சொன்னாலும், தனிக்கொடி, தனி பார்லிமெண்ட் என தனி ராஜாங்கத்தை நடத்தும் குர்திஸ்தான் மாநிலத்தின் தலைநகர் எர்பிலுக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தேன்.

துபாயின் டனாட்டாவிடம் (Dnata) விமான நிலையத்தை பாதுகாப்பு தவிர இதர அனைத்திற்கும் ஒப்படைத்திருக்கிறார்கள். எனவே துபாயின் குட்டி விமான நிலையத்தை பார்த்ததுபோல இருந்தது. அதே சுத்தம், அதே குழப்பமற்ற அறிவிப்பு பலகைகள், மிக சுத்தமான டாய்லட்டுகள் இப்படி எல்லாமே தரமாக.

அதேபோல போலிஸ் (இமிக்ரேஷன்) நட்புடன் பேசி முத்திரை குத்தி வெல்கம் டு குர்திஸ்தான் என அனுப்பி வைக்கின்றனர். இராக்கில் இந்த ஒரு விமான நிலையத்தில் மட்டுமே இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா 15 நாட்களுக்கு தருகிறார்கள். மேலும் 15 நாட்கள் நீட்டித்தும் கொள்ளலாம்.

டாக்ஸி கிடைத்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ஒரு திருப்பமாக வாகன ஓட்டுனரே 70 டாலருக்கு அருமையான ஹோட்டல் இருக்கிறது, பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையெனில் எயின்காவா என்ற இடத்தில் முன்னரே நீங்கள் சொல்லி வைத்திருந்த ஹோட்டலுக்கே கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார். அல் ஜவாஹிரி என்ற ஹோட்டல். 70 டாலருக்கு அருமை. இலவச காஃபி எப்போதும், காலையில் இலவச பிரேக்ஃபாஸ்ட்டுடன். வைஃபை பட்டையைக் கிளப்புகிறது

இதே ஹோட்டல் பாஸ்ராவில் இருந்திருந்தால் 5ஸ்டார் ஹோட்டல் என நாமகரனம் சூட்டி 250 டாலரும், 15 டாலர் வைஃபைக்கும் வாங்கி இருப்பார்கள். வைஃபை தொங்கும்..

காலையில் சந்திக்க வேண்டிய ஆள் அவரது வாகனத்திலேயே வந்து அவரது அலுவலகம் அழைத்துச் சென்றார்.

எர்பில் நகரம் முழுதும் சுத்தமாய் இருக்கிறது. மீண்டும் துபாயுடன் தான் ஒப்பிட வேண்டியிருக்கிறது. சாலைகள் அனைத்தும் அடையாளங்களுடன், வேகத்தை கண்கானிக்கும் ரேடார்களுடன் இருக்கிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரே இடத்தில் குவியாமல் நகர் முழுக்க பரவி இருக்கிறது. இந்தியர்களுக்கான மரியாதை இங்கும் இருக்கிறது.

நான் முதலில் சந்தித்தது இலங்கைத் தமிழர் ஒருவரை. எர்பில் விமான நிலையத்தில் கிளீனராக இருக்கிறார். இலங்கைப் பணம் 4 லட்சம் கொடுத்து 400 டாலர் மாதம் கிடைக்கும் வேலைக்கு வந்திருக்கிறார். மொபைல் போன் வாங்கினால் காசு செலவாகும் என இன்னும் நம்பர்கூட வாங்கவில்லையாம். எனக்கு டாக்ஸி கிடைக்கும்வரை என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாநிலத்தைச் சேர்ந்தவர். பெயர் தினேஷ். (இலங்கையில் கூட தினேஷ், ரமேஷ், சுரெஷ் எல்லாம் இருப்பார்கள் போல)

இன்று மதியம் (25.10.2013) இந்தியா கேட் உணவகத்திற்கு உணவருந்தச் சென்றோம். ட்ரிப் அட்வைசர் டாட் காமில் அந்த ஹோட்டலில் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்பார்கள் என கமெண்ட் போட்டிருந்தார்கள். ஆனால் இன்று நான் சென்றிருந்தபோது அருமையான ஆம்பியன்ஸில் நல்ல இடத்தில் அருமையான சுவையில் இந்திய உணவுகள் கிடைத்தது. என்னுடன் ஒரு குர்தி, ஒரு துருக்கியர் மற்றும் ஒரு பாக்தாதியும் வந்திருந்தனர். அவர்களும் எனக்காக இன்று இந்திய உணவு வகைகளையே சாப்பிட்டனர். நல்லா இருக்கு என்றுதான் சொன்னார்கள் மூவரும். ஆனல், குர்திக்கும், துருக்கியருக்கும் நம்மூரின் காரம் சுத்தமாய் வாயில் வைக்க முடியவில்லை. 

அந்த ஹோட்டலில் முழுக்க முழுக்க ஆந்திரா மக்கள். சர்வர் முதல் கிளீனர்கள் வரை. சாப்பிட வந்தவர்களில் நிறைய இந்திய முகங்களை பார்க்க முடிந்தது.

உண்டபின்னர் காரிலேயே மீண்டும் ஒரு நகர் உலா. பார்லியமெண்ட் கட்டிடம், புதிதாய் உருவாகும் கேட்டட் கம்யூனிட்டிகள், பலமாடிக் கட்டிடங்கள் எல்லாம் காண்பித்தார்.

எர்பில் நகரம் முழுக்க வட்ட வடிவ சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கு சாலைகளும் கிளைச்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது, எர்பில் நகரின் சுத்தம்.

அதேபோல பிரம்மாண்டமான மால்கள் எங்கெங்கு காணினும். ராயல் மால், ஃபேமிலி மால் என எல்லாம் கிங் சைசில். உலகத்தின் அனைத்து முன்னணி பிராண்டுகளின் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றது.

இந்த இரு மால்களைத்தான் உள்ளே சென்று பார்த்தேன். மத்திய கிழக்கின் மால்கள் போல இங்கும் முழுக்க முழுக்க இந்தியர்களே கிளீனர்கள், சர்வர்கள் எல்லாம். 100 பேர் கொண்ட டீம் ஆந்திராவின் கரீம் நகர் மாவட்டத்தில் இருந்தும், நிஜாமாபாத் மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கும் 400 டாலர்கள்தான் சம்பளம். எவ்வள்வு குடுத்து வந்தீங்க எனக் கேட்டு அவரையும், அதைக் கேட்டு என்னையும் வருத்தம் கொள்ளவைக்க வேண்டாம் என அதைக் கேட்கவில்லை.

ராயல் மாலின் ஃபுட் கோர்ட்டில் இந்திய உணவு வகைகள் எல்லாம் கிடைக்கிறது. நான் நெய்தோசை சாப்பிட்டேன். இராக்கில் இது கிடைப்பதே பெரிய விஷயம் என்பதால் சுவை பற்றி பேசப்போவதில்லை.. 

விலைவாசியைப் பொருத்தவரை கிட்டத்தட்ட பாக்தாத் மற்றும் பாஸ்ராவைப் போலத்தான். ஆனால், இங்கு எல்லாமே தரமாக.

பாஸ்ரா மற்றும் பாக்தாத்தைப் பொருத்தவரை டாக்ஸிக்கள் என்றாலே சீனா அல்லது ஈரானில் தயாரிக்கப்பட்ட டப்பா கார்கள். இங்கு ஒரு சீனக்காரோ அல்லது ஈரானியக் காரோ காணக்கிடைக்கவில்லை.

அதேபோல டீக்கடைமுதல் எந்த உணவகம் சென்றாலும் மிக சுத்தமாய் வைத்திருக்கின்றனர். யாரும் குப்பையை தெருவில் போடுவதில்லை. சாலைகள் பளிச்சென இருப்பதறகு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

குர்திஸ்தான்... குர்திஸ்தான்.. குர்திஸ்தான்.. இதுதான் எங்கும் எதிலும் காணக்கிடைப்பது.

ஈராக்கை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டால் நாளை படையெடுத்து குர்திஸ்தானை அழித்து விடுவார்கள் என்பதால் அரசு அலுவலகங்களில் ஈராக்கிய கொடியும் உப்புக்குச் சப்பானியாக உண்டு. ஆனால் எந்த அரசு அலுவலகத்தின் போர்டிலும் அரபி கிடையாது. எல்லாம் குர்தி எழுத்துக்கள். குர்திஸ்தானத்துக் கொடி தூரத்தில் இருந்து பார்த்தால் நம் நாட்டுக்கொடிபோலவே இருக்கிறது.

அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்த பின்னர் சதாமின் கோபத்தின் வடிகாலாக குர்திஸ்தான் இருந்திருக்கிறது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அழித்திருக்கிறார். இப்போது நான் பார்க்கும் இந்த வளர்ச்சியை வெறும் பத்தாண்டுகளில் அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஈராக்கில் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்ட இனம் குர்திகளே.

நாளையும் இன்னொரு மீட்டிங் இருக்கிறது. அது முடிந்ததும் இன்னொரு சுற்று ஊர்க்கடைசியை ஒட்டி 4000 ஆண்டுகள் பழமையான ஓர் இடம் இருக்கிறதாம். சென்று பார்க்க வேண்டும்.

படங்களை தனியாக ஏற்றுகிறேன்.

No comments: