மலரினும் மெல்லிய காமம் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு மோகன்தாஸின் பீயிங் மோகன்தாஸிற்குள் நுழைந்தேன். அருமையான காதல் கதை. அவர்களின் உரையாடல்களும், மோகன் தாஸின் தற்குறிப்பேற்றங்களும் மிகவும் ரசித்துப் படிக்க வைத்தது. அப்படியே அவரது வலைப்பக்கங்களை முழுதும் படித்து முடித்த பொழுது கொஞ்சம் பிரமிப்பும், நிறைய மகிழ்வுமாய் இருந்தது.
மோகன் தாஸ் கதை எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், அருமையான புகைப்படம் எடுக்கிறார்,கவிதை எழுதுகிறார்...கவிதை தவிர எல்லாவற்றையும் சிறப்பாகவும் செய்கிறார். இது எனது அபிப்ராயம். அவரது வலைப்பதிவில் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை சுவாரசியமாக இல்லை.
இவரது வலைப்பதிவைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “ அழகான மெல்லிய காமம் “ என்பேன். வலைப்பதிவின் பெரும்பான்மையான இடத்தை மெல்லிய காமமே பிடித்துக்கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் கதாநாயகன் மோகனாக, அல்லது தாஸாக அல்லது இரண்டும் சேர்ந்து மோகன் தாஸாக வருகிறார். அதேபோல நாயகியும் ஒரே ஆள்தான்.. அகிலா. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் ஆகிவிட்டது.
எல்லாக் கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களான கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேலை செய்யும் இடம், திருமணம் முடிந்து நடக்கும் வாழ்க்கை இப்படி மோகன் மற்றும் அகிலாவைக் குறித்த டைரிக்குறிப்பை ரசனையுடன் கதையாக்கித் தந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மோகன் தாஸின் வலைப்பதிவில் கதைகள்.
இது தவிர சொந்தக் கதையையும் அப்படியே எழுதுகிறார். பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதல் குறித்த பதிவு. எல்லோரும் எழுதலாம்தான். ஏன் நிறைவேறவில்லை என்பதில் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார்.
அதேபோல முடிந்தவரை மனதில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் செல்கிறார். ஹீரோ பில்டப் எல்லாம் இன்றி, என்னால் முடியவில்லை, அல்லது நான் அதற்கு தகுதியாய் இல்லை என்பதை எல்லாம் அப்படியே சொல்கிறார்.
காமக்கதை என்றாலே எப்படி இருக்கும் என்பது இணையத்தில் உலவும், அல்லது பள்ளி கல்லூரிகளில் அப்படிப்பட்ட புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்கு தெரியும். மிஞ்சிப்போனால் 5 அல்லது 10 உறவுமுறைகள்தான் மீண்டும், மீண்டும். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் குப்பை என நமக்கே தெரிந்துவிடும். ஆனால் இவரது கதைகளில் நமது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்லிச் செல்கிறார். வழக்கமாய் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தரங்கம் குறித்து எழுதுவதில்லை. பழைய சினிமாக்களில் காட்டுவதைப்போல இரண்டு பூக்களை ஒட்டவைத்து நம்மை கேவலமாய்ச் சிந்திக்க வைப்பதைப்போல.
மோகன் தாஸ் அந்தரங்கம் என நாம் நினைப்பதையும் எழுதுகிறார், இயல்பான வார்த்தைகளில். அதைவிட முக்கியம் அந்த சூழ்நிலைகளில் நாம் எப்படிப் பேசுவோமோ அப்படியே. அதைவைத்து மட்டுமே மெல்லிய காமம் என்கிறேன் நான்.
மோகன் தாஸ் பக்கத்தை நான் எனது தங்கைக்கோ, மகளுக்கோ அறிமுகம் செய்வேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவர்கள் படிக்கலாம் என்பதே எனது எண்ணம். ஆனால் அறிமுகம் செய்து படிக்க வைக்க மனத்தடை உள்ளது.
இன்னும் கொஞ்ச காலம் ஆனபின்னால் படிக்கச் சொல்வேனோ என்னமோ.
கதைகளில் சுவாரசியம்தான் அடிப்படையே. நமது காலகட்டத்திய கதையாய் இருப்பதால் நமது பள்ளி, கல்லுரி காலத்தை மீண்டும் மகிழ்வுடன் அசைபோடும் ஒரு வாய்ப்பாக எனக்குப் படுகிறது.
அழகான தொய்வற்ற எழுத்து நடை, நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தல், காமத்தையும் அதன் எல்லை மீறாமல் அழகாகச் சொல்வது, விவரனைகளை சுவாரசியமாக சொல்வது என அவருக்கென ஒரு நடையை வைத்திருக்கிறார். அவரது கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்த கதைகள் போலிருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பேசுவதால் போரடிப்பதில்லை.
ஏன் மோகன் தாஸ் வலைப்பக்கத்துக்கு ஒரு அறிமுகம் எழுதினேன்? நான் படிக்க ஆரம்பித்த பின்னர் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது கதைகள், சுவாரசியம்தான் காரனம்.
பலவகையான விஷயங்களைப் பற்றிச் சொல்ல தொடர்ந்து முயன்றிருக்கிறார். வலைப்பதிவின் அக்கப்போர்கள் இருந்த காலத்தில்கூட அக்கப்போர்களில் கலந்து கொள்ளாமல் அவைகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார்.
அவரது எழுத்தை அவரே ரசிக்கிறார். நமக்கே பிடிக்காத விஷயத்தை எப்படி மற்றவர்களுக்குத் தருவது? 2005 முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். செகுவேரா வின் தீவிர விசிறி. பிடல் காஸ்ட்ரோ குறித்தும் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நிறைய வாசித்திருக்கிறார், வாசிக்கிறார். பாரதியின் கவிதைகள் இவருக்கு ஆதர்சம். அச்சமில்லை என்ற பாரதியின் பாடல் எப்படி இவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
குறைகள் எனச் சொன்னால் சில நல்ல தொடர்கதைகளை அப்படியே பாதியிலேயே தொங்க விட்டிருப்பது. குறிப்பாக நீராக நீளும் காதல். வேறு வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணை நாயகன் சந்தித்து அதன் பின்னர் அது காதலாக மாறும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த பகுதியைக் காணவில்லை.
அதேபோல கொலைத்தொழில் வல்லவன் என்ற ஒரு தொடர்..அதுவும் பாதியில்..
எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவுகள் எனில் கதைகள், தொடர் கதைகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள்.
Being Mohandoss'ல் எனக்குப்பிடித்த டாப் டென் கதைகள்..
01. மலரினும் மெல்லியது காமம் ( தலைப்பு உதவி வள்ளுவராம் :-) )
02. உள்ளம் உடைக்கும் காதல்
03. மதுமிதா
04. தேவதையின் காதலன்
05. சோழ பரம்பரைக் கதைகள்
06. மோகனீயம் தொடர்கள்
07. Curse of the Golden Flower - Cinema Review
08. கன்னடப் பைங்கிளீயுடன் ஒரு காதல் மொழி.
09. I lost my virginity to Mohandoss
10. அவளை அவன் கண்விடல்.
இது தவிர நிறையக் கதைகள் பிடித்திருந்தாலும் மேற்சொன்ன கதைகள் மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்தவை.
ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த பதிவும் அருமை. இவரது வலைப்பதிவில் நல்ல நல்ல புகைப்படங்களும், ஓவியங்களையும் காணலாம்.
என்னங்கப்பா மோகன் தாஸ் வலைப்பதிவுக்கே அறிமுகமானு கேட்பவர்களுக்கு.. புதுசா நான் தெரிஞ்சிகிட்டேன்.. அதை மத்தவங்களுக்கும் நான் சொல்றேன்..அம்புட்டுத்தேன்.
No comments:
Post a Comment