Friday, November 29, 2013

ஏர்பிலின் Citadel or Fort.. உலகின் மிகப் பழமையான மனிதன் வாழிடம்..

குர்தியில் கலா (Ghala) ஆங்கிலத்தில் (Citadel) தமிழில் கோட்டை
இன்று காலை நடைபெற வேண்டிய சந்திப்பு நாளைக்கு ஒத்திப்போனதால் எர்பில் நகரின் விசேஷங்களில் ஒன்றான சிட்டாடல் சென்று வந்தேன். கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறான் அதுவும் வீடுகள் கட்டி கிட்டத்தட்ட நகரை நிர்மானம் செய்து!.
எர்பிலில் இருக்கும் இந்தக் கோட்டை  உலகின் பழமையான மனித வாழிடம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்
Ghala எனும் கோட்டை வடிவில் இருக்கும் இந்த பழங்கால மனித வாழிடத்தை தூரத்தில் வரும்போதே காணலாம். அதைச் சுற்றி நிறைய சூக்குகள் எனப்படும் உள்ளூர் மார்க்கெட்டுகள் அமைந்திருக்கின்றன. அவைகளும் கோட்டைக்கு இணையாக அல்லது அதற்குப் பிந்தியகாலத்தில் அமைந்தவை. சூக்குகளில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அந்தக்கால சந்தையை நாகரீகப்படுத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. டீக்கடைகள், ஹோட்டல்கள், உள்ளூர் தின்பண்டங்கள், துனிமணிகள், மின்னணு சாதனப் பொருட்கள், சிகை திருத்தகம், இப்படி கலவையாக.

வெளிநாட்டவர் நிறைய வந்து இந்தக் கோட்டையைக் காணுவதால் கோட்டையைச் சுற்றி செயற்கை நீரூற்றுகள் அமைத்து பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் அமர்ந்துகொள்ள வசதி செய்திருக்கிறார்கள். தற்சமயம் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது ஈராக்கில். குர்திஸ்தானில் தற்சமயம் தென்றல்தான் பகலிலும், இரவிலும். இதை எனது ஹோட்டலின் ஜன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு ரம்மியமான காற்றை அனுபவித்துக்கொண்டே எழுதுகிறேன்.

இந்தக் கோட்டையின் கதை.

எர்பில் கோட்டை என்றழைக்கப்படும் இந்தக் உயரமான குடியிருப்பு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் (Millennias) மனிதன் வாழாமலேயே இருந்திருக்கிறது. இதன் ஆயுளை உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் தீவிர தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவுகள் மற்றும் கிடைத்த சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது இது 6000ம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கின்றனர்.

இந்த கோட்டை நகரமே கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1365ம் ஆண்டு முதல் 612 க்குள் அசிரியர்களின் காலத்தில் அதாவது இன்றைக்கு 3000 ஆண்டுகளுகு முன்பு இருந்திருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோட்டையானது புதிய கற்காலம் முதல் வென்கலயுகத்துக்குள் (6000 – 1500 கி.மு.) ஏற்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.

எப்படி இப்படி ஒரு உயரத்துக்கு மேடும் அதன் மீது கோட்டையும் அந்தக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் என ஆச்சரியப்படுவோர் இந்த தொடுப்பைத் தொடர்ந்து சென்று முழுதும் அறிந்துகொள்ளுங்கள். (http://www.erbilcitadel.org/ErbilCitadel/history.php )
இனி சிட்டாடல் அல்லது கோட்டையை பார்த்தது பற்றி.
உள்ளே நுழையும் இடத்தில் நமது பெயர், நாடு பற்றிய விபரங்களைக் கேட்டு அதை கனினியில் பதிந்துகொண்டு நம்மை மேலே நடந்து செல்ல அனுமதிக்கிறார்கள். அனுமதிக்கட்டணம் இல்லை.

மேலே செல்ல சிறு சதுரக் கற்களால் ஆன சரிவான ஆனால் சீரான மலைப்பாதை. நகரின் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. நகரின் சுற்றுவட்டாரத்தில் மலைகள் போல அல்லது இவ்வளவு உயரமான பகுதி என எதுவும் இல்லை. இதை அந்தயுக மக்கள் மேடாக்கி அதன் மீது நகரை கட்டி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கோட்டையை யுனெஸ்கோவும், எர்பில் நகர சிட்டாடல் பாதுகாப்பு குழுவும் இணைந்து மறுநிர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது இந்த கோட்டை. அதன் நடுவே நகரம். மரம் கிளை பரப்பி நின்றால் எப்படி இருக்குமோ அதே வடிவில் தெருக்கள். எல்லா வீடுகளும் ஒரு அல்லது இரு அறைகள் கொண்டவை. மிஞ்சிப்போனால் 8 முதல் 10 அடி இருக்கலாம். ஒவ்வொரு தெருவிலும் 5 முதல் 8 வீடுகள் கொண்டிருக்கின்றன.

எல்லாத்தெருக்களுக்கும் கிளைத்தெருக்கள்  மற்றும் அவை எல்லாம் முக்கியத் தெருவில் வந்து சேருகின்றன. நகரின் மையத்தில் ஒரு பெரிய மைதானம். அதில்தான் தற்போதைய புனர் நிர்மான பணிகளுக்கான அலுவலகம் இயங்குகிறது.

மேலிருந்து கீழே பார்க்க முடியாத அளவு பெரிய மதில்கள். மிகப்பெரிய நுழைவு வாயில். அங்கிருந்து கோட்டைநகரின் மையம் செல்ல நீளமான மற்றும் அகலமான பாதை. மொத்த ஊரின் அளவே 12.5 ஹெக்டேர் என அங்கிருக்கும் தகவல் குறிப்பு சொல்கிறது.
மராமத்துப் பணிகளை அந்தக்காலத்தில் இருந்ததுபோல அதேநிற மண்னை எங்கிருந்தோ எடுத்து வந்து அதில்தான் கட்டுகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் சுற்றி வந்தேன். கிழே இறங்கி சூக்குகளை சுற்றி வந்தேன்.

புஸ்தகக் கடைகளை மேயும்போது நமது காந்தியடிகள் அவரது சத்திய சோதனையை குர்தி மொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். குர்தி இன மக்களுக்கு காந்தியடிகளின் சரிதம் தெரியுமாம்.
ஜான்ஸிராணி லக்குமிபாயால் உத்வேகம் பெற்றிருக்கிறார்களாம். இன்றும் குர்தி தொலைக்காட்சியில் தினமும் ஜான்ஸிராணி தொடர் உண்டாம்.

மதியம் இந்தியா கேட் உணவகத்தில் தால் கிச்சடியும், தயிர் சாதமும் சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினேன்.
நான் எடுத்த படங்களை இந்த சுட்டியில் காணலாம்.




Tuesday, November 26, 2013

எனக்குப் பிடித்த அருமையானதோர் பாடல்..(ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - மலையாளம்)

மோகன்லால் பொதுவாக மசாலாப்படங்களில் அதிகம் நடித்தவர். ஆனால், இசையை அடிப்படையாக வைத்து வந்த படங்களில் ஒன்று ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, காவ்லி பாடகராக இருக்கும் இவர் ஒரு குறுநில மன்னர் ஒருவரை கொல்வதற்காக கூலிப்படை ஆளாக அழைத்துவரப்படுவார்.. அவரது பாடும் திறனால் கவரப்பட்ட மன்னரின் ப்ரியத்துக்குட்படும் இவர் மன்னரைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் கதை.. படத்தில் ஒவ்வொரு பாடலும் முத்து. அதிலும் குறிப்பாய் தேவசபாதலம் எனும் இப்பாடல் எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத பாடல் எனக்கு.. நீங்களும் கேட்க இங்கே பதிகிறேன்.

தேன்குரல் பாட்டி...(அழகிய கண்ணே...)

இந்த வயதில் இவ்வளவு இனிமையான குரல் இறைவன் வரம். அருமையான இரு பாடல்கள்.. அவசியம் கேளுங்கள் / பாருங்கள்..

Monday, November 25, 2013

கத்தார் - காஃபில் முறை எனும் அறிவிக்கப்படாத அடிமைமுறை

கத்தாரில் வேலை செய்வோர் எந்த படிப்பு படித்து எந்த வேலை செய்பவராய் இருப்பினும் இந்த கெஃபலா சிஸ்டத்தால் அறிவிக்கப்படாத அடிமையே. 

உங்களிடம் டிக்கெட், பாஸ்போர்ட் இருந்தாலும் உங்களின் ஸ்பான்ஸர் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேற முடியாது. 

அருகிலிருக்கும் ஓமான், அமீரகம், பஹ்ரைன் எல்லாம் இந்த கேஃபாலா முறையின்றியே நடந்துகொண்டிருக்க இன்னும் கத்தாரும் இதைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது ஏன் எனத்தெரியவில்லை.

சவுதியும், குவைத்தும்கூட இந்த சிஸ்டத்தை வைத்திருந்தாலும் அவர்களையெல்லாம் நாடுகளாய்க்கூட கருத இயலாது. அவர்களெல்லாம் உலக நீரோட்டத்தில் கலந்து கொள்ள தயாராகும்போது மற்ற நாடுகள் எல்லாம் எங்கோ போய்விட்டிருக்கும்.

இந்த செய்தி ஒரு கால்பந்து வீரனை இந்த கேஃபாலா சிஸ்டத்தின் மூலம் 2 ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் வைத்திருக்க முடிகிறது.

2022ல் உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்த தேர்வாகியிருக்கும் கத்தார் நாடுதான் இதை ஒரு கால்பந்து வீரனுக்கு செய்துள்ளது என்பது என்ன ஒரு நகைமுரன்?

http://www.aljazeera.com/news/middleeast/2013/11/qatar-accused-abusing-footballer-rights-20131113163616157721.html