Monday, January 4, 2016

நிரந்தரமில்லா வாழ்க்கையும், நாமும்

சரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு
( ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்)
சென்னை வெள்ளத்திற்கு உதவியவர், எந்தவித நோயும் இல்லாமல், ஷீர்டி சென்றுவிட்டு வரும் வழியில் ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தவர் எப்படியோ ரயிலுக்கும், ப்ளாட்பாரத்துக்கும் நடுவில் இடைவெளியில் சிக்கி பலியாகிவிட்டர்.
சார்டட் அக்கவுண்டண்ட், குடும்பஸ்தன், உபகாரி எல்லா அடைமொழியும் ஒரு பெட்டிக்குள் வருகிறது, புனேவிலிருந்து.
எனக்கு நண்பர் அல்ல, என் மனைவிக்கு தெரிந்தவர், ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைபார்த்த காலத்தில்.
இன்னொரு சம்பவம்
ஈராக்கிற்கு எண்ணெய் துரப்பணப்பணியில் வேலை செய்ய வந்தார் ஒரு தென்காசிக்காரர். அவர் வந்த அன்று பாஸ்ராவில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு. அன்று மாலையே இந்த ஊரில்வேலை பார்க்கமாட்டேன் என அடம்பிடித்து ஊருக்கு சென்றார். தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு குளிக்க பைக்கில் போகும்போது விபத்து. பாஸ்ராவிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட 5 நாட்களுக்குள்.
இன்னொருவரின் மரணம் நமக்குள் ஒரு நடுக்கத்தை கொடுக்கிறது. நிரந்தரமின்மை என்பதை செவிட்டில் அறைந்து சொல்லிச் செல்கிறது. அந்த பதட்டத்தில் நமக்கு தோன்றுவதெல்லாம் “ இருக்கும்வரைக்கும் நல்லது செஞ்சிட்டு போயிட்டே இருக்கனும், குறைந்தபட்சம் இன்னொருத்தனுக்கு கெடுதல் செய்யாமையாவது இருக்கனும்” என.
ஆனால், அந்த பதட்டம் குறையக்குறைய, வேறு விஷயங்கள் மனதை ஆக்கிரமிக்க நாம் மீண்டும் பழைய ஆளாகவே மாறுகிறோம்.
மரணம் மட்டுமே நிரந்தரம். எப்போது வரும் என்பதும் அதற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
முடிந்தவரை ஆடாமல் இருந்துவிட்டு செல்லவேண்டியதுதான்.

Wednesday, December 30, 2015

பாஜக அரசின் வெளியுறவுத்துறை

சவுதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்தியர்கள் மூவர் கேரளம் திரும்பினர்.
சுஷ்மாவுக்கு வாழ்த்தும், நன்றிகளும் குவிகின்றன.
உண்மையில் சுஷ்மா தன் கடமையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், பாராட்டு மழையில் நனைகிறார்,
காங்கிரஸ் ஆண்ட காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிலும் குறிப்பாய் மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்கள் எல்லாம் மனிதர்களாகவே மதிக்கப்பட்டதில்லை. 
ஒரு பாஸ்போர்ட் ரெனிவலில் ஆரம்பித்து, ஒரு போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட் தேவைக்கும், முதலாளி சம்பளம் தராமல் கொல்கிறான், சாப்பாடு இல்லாமல் 3 மாதங்களாக கஷ்டப்படுகிறோம், ஊருக்கு போகக்கூட வழியில்லை என்ற கோர்க்கைகளோடு வரும் இந்தியர்களை இன்றைக்கு குறைந்தபட்ச மரியாதையோடு கையாளும் தூதரகங்கள் அன்றைக்கு அத்தனை கேவலமாய் நடத்தின.வெளியுறவுத்துறை அமைச்சர் என்றால் யாரென்றே தெரியாத அளவுதான் நிலைமை இருந்தது. அல்லது அனுகமுடியாத அளவு.
படித்த மக்களுக்கே அதுதான் நிலையாக இருந்தது. இன்றைக்கு மத்த்ய மந்திரியை ஒரு ட்வீட் மூலம் தொடர்புகொள்ள முடிகிறது. வேலையும் நடக்கிறது.
கடமையைச் செய்தவர்களையே கைதட்டி பாராட்டும் அளவு நாம் இருந்தால் காங்கிரஸ் எப்படி மக்களைக் கையாண்டிருக்கும் என்பதற்கு வேறு ஆதாரங்கள் வேண்டாம்.
இந்த பாராட்டுகளால் மெய்மறந்துவிடாமல் மக்களை காகும் அரசாங்கம் நாம் என்பதை எப்போதும் மனதில்கொள்ளவேண்டியது பாஜக அரசின் கடமை. அதைச் செய்வார்கள் என நான் நம்புகிறேன். ( 27.12.2015ல் எழுதியது)

Monday, December 28, 2015

பொறாமை பிடித்த காங்கிரஸ் Vs நரேந்திர மோதியும்

குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்துவிடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக்கொடியை ஏற்றும் நரேந்திரமோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப்படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்றமாதிரி மாத்துங்க என ஆண்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவதுகூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்கி செலுத்த உத்தரவிடும் நரேந்திரமோதியைக்கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித்தலைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொல்லும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக்கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு எதிரி நாட்டுக்குள் காலைவைக்கும் தைரியம் வேண்டும், அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக்கொண்டு மீடியாவில் உளரிக்கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....

பாக்கிஸ்தானில் இரு வல்லவர்கள்

யு டியூபில் பார்த்தால் பாக்கிஸ்தான் டீவிக்களில் இந்தியா குறித்து நடந்த விவாதங்களில் 90 சதவீதம் நரேந்திர மோதியின் நல்லாட்சியை மரியாதையாக பார்ப்பதும், அதே சமயம் என்ன செய்வார் என்றே அனுமானிக்க முடியாத ஆள் என நரேந்திர மோதியைக் குறித்தும், அஜித் டோவல் என்ற மிகப்பெரிய எதிரி என்னென்ன செய்ய காத்திருக்கிறானோ என விவாதிப்பதுமே நிறைய கிடைக்கும்.
பாக்கிஸ்தான் மக்களுக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், பாக்கிஸ்தானிய ராணுவத்திற்கும் அஜித் டோவல் மட்டும் கையில் கிடைத்தால் பச்சையாக தின்றுவிடும் அளவு வெறியேற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களிலும், கூட்டங்களிலும் பாக்கிஸ்தானுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார். அதிலும் குறிப்பாய் நீ என்னவெல்லாம் எனக்கு செய்கிறாயோ அதையெல்லாம் உனக்கும் செய்வோம், அதற்கு மேலும் செய்வோம் என பேசுகிறார்.
பாக்கிஸ்தானுக்கு சவாலாக “ மும்பையில் நடத்தியது போன்ற தாக்குதலை இன்னொருமுறை செய்து பார், நீ பலுச்சிஸ்தானத்தை இழப்பாய்” எனச் சொல்கிறார்.
இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கு சென்ற இருவர் யாரென பார்த்தால் நரேந்திர மோதியும், அஜித் டோவலும்தான். smile emoticon
எதிராளியின் குகைக்குள் சென்று எதிரியின் பிடறியை பிடித்து ஆட்டுவதென்பது இதுதான். ஆனால், எதிரிக்கும் நம் பிடறியை பிடித்து ஆட்டுகிறார்கள் என்பதே தெரியாமல் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் இருவரும்..
ஒருசில பாக்கிஸ்தானிகள் மிகச்சரியாக பிடித்துவிட்டார்கள், இந்த விஷயத்தை.
இந்தியா வழக்கம்போல அட்டகாசமாக திட்டமிட்டு நவாஸ் ஷெரிப்புக்கு ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல சம்மன் அனுப்பி அதில் வெற்றியும்கண்டிருக்கிறது என்கிறது ஒரு டிவீட்.
அதுதான் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலும், பொறாமையும்.

திருமாவளவன் சாதிவெறி பேச்சு





ஒரு சமூகம் முட்டிமோதி மேலெழ உறுதுனையாய் இருக்கவேண்டியது அந்த ஜாதி அல்லது ஜாதிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய், எப்படி உயரவேண்டும் என்பதற்கு தன்னையே எடுத்துக்காட்டய் கொள்ளுமளவு வாழ்ந்து காட்டுதல் அச்சாதியினரை முன்னேற்ற உதவும்.
ஆனால், நாம் பார்க்கும் தலைவர்கள் ஜாதிக்கட்சியின் தலைவராய் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அந்தச் சமூகத்தை குறித்து என்னென்ன குற்றச்சாட்டுகள் பொதுவில் உண்டோ அத்தனையையும் மெய்ப்பிக்கும் விதமாக மேடையில் கைதட்டலுக்காக பேசி இதர சமூகத்தினரிலிருந்து அந்நியப்படுத்தும் வேலையை கனகச்சிதமாக செய்கின்றனர்.
இந்தச் செய்கையை நான் நல்லா இருந்தா போதும், என்னை நம்பி வருபவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே செய்வர்.
இன்றைய எடுத்துக்காட்டு தொல்.திருமாவளவன்,
உண்மையில் தலித் சகோதரர்கள் இப்படிப்பட்ட தலைவர்களை நம்பி தங்கள் வாழ்க்கையையே இழந்துகொண்டிருக்கின்றனர்.
இனியேனும் நல்ல தலைவர்களை தேடாமல் அச்சமூகத்திலிருந்தே தன் சமூகத்தை காட்டிக்கொடுக்காத, பிற கட்சியினரிடம், பிற சமூகத்திடம் அடகு வைக்காத தலைவர்கள் உருவாவதே ஒரே வழி.
தொல்.திருமாவளவனின் வீடியோ கிடைத்ததால் நாம் இதை பேசுகிறோம். இதைப்போல இன்னும் யார் யாரெல்லாம் தங்கள் சமூகத்தை இவ்வாறாக “வழிநடத்தி”க்கொண்டிருக்கிறார்களோ...அவர்களுக்கே வெளிச்சம்.


நேபாளம் - நரகத்தில் வாழும் மக்கள்.

20.09.2015 - இடைக்கால அரசியலமைப்புச்சட்டத்தை நீக்கி புதிய அரசியலமைப்புச்சட்டத்தை அமல்படுத்திய நாள். எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய நேரத்தில் நேபாளத்தில் காலம்காலமாய் வாழ்ந்துவரும் மாதேசிகள் என்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே பூகம்பத்தால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து, பல்லாயிரம்கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்து நிமிர முயற்சி செய்யும் நேரத்தில் மாதேசிகளின் கோரிக்கையான அரசியலமைப்பில் திருத்தம் வேண்டிய போராட்டம் விஸ்வரூபமெடுத்தது.
2015, செப்டம்பர் 23ம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டத்தால் நேபாள நாடே முழுதும் பாதிக்கப்பட்டது. நிலத்தால் சூழப்பட்ட நேபாள நாட்டின் 90 சதவிகித தேவைகளை இந்தியாவே தீர்க்கிறது. போராட்டக்காரர்களின் இலக்கு இந்தியாவிலிருந்துவரும் பொருட்களை நேபாளத்திற்குள் வரவிடாமல் செய்வதே. அதில் வெற்றியும் கண்டதால் நேபாளமே ஸ்தம்பித்தது. மிக மோசமாக அடிவாங்கியது நேபாள தொழில் துறையும், போக்குவரத்துமே. தொழில்களுக்கு தேவையான கச்சாப்பொருள் கிடைக்காததால் நேபாள தொழில்துறை காலவரையின்றி மூடப்பட்டன. எரிபொருள் எதுவும் கிடைக்காததால் வாகனங்கள் ஓடவில்லை, இருக்கும் எரிபொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தது. வீடுகளில் மண்ணென்ணெய், கேஸ் என ஏதுமின்றி மக்கள் மீண்டும் பழைய முறையான விறகு அடுப்புகளில் சமைக்க வேண்டியிருக்கிறது.
இதன் பாதிப்பு நேபாளத்தின் வருவாயின் உயிர்நாடியான சுற்றுலாத்துறையிலும் எதிரொலிக்கிறது. ஆசிய வங்கியின் கணக்குப்படி இந்த ஆண்டு இருக்க வேண்டிய வளர்ச்சி விகிதமான 4.5 சதவீதம் இந்த போராட்டத்தினால் 1% வளர்ச்சி அடைவதே கடினம் என சொல்லி இருக்கிறது.
யார் இந்த மாதேசிகள்? அவர்களுக்கு என்ன வேண்டும்?
நேபாளத்தின் டெராய் பகுதியைச் சேர்ந்த மக்கள். பெரும்பாலும் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். நேபாள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்.
அவர்களின் கோரிக்கைகள் என்ன?
01. மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் எங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் அதிக பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
02. மாநிலங்கள் பிரித்த வகையில் வேண்டுமென்றே எங்கள் மக்கள் வாழும் பகுதிகளை கூறுபோட்டு எங்களுக்கான பிரதிந்தித்துவம் கிடைக்காமல் செய்ததை திரும்பப்பெற்று மீண்டும் மாதேசிகள் வாழும் பகுதிகளை ஒன்றாக்க வேண்டும்.
மாதேசிகளை பொருத்தவரை புதிய அரசியலமைப்புச் சட்டம் மாதேசிகளின் கோரிக்கைகள், கருத்துகள் எதையும் கேளாமல் வலுக்கட்டாயமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பதே. அவர்களின் போராட்டம் உரிமைப்போராட்டம் என்கின்றனர்.
தற்போது இந்த உள்நாட்டுச் சண்டையில் அரசுக்கும், மாதேசிக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்திருப்பவர் நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சாந்தா. இவர் எப்போதுமே இந்திய எதிர்ப்பாளர். இவரால் பிரச்சினை அதிகரிக்கலாமே தவிர குறைய வாய்ப்பில்லை. போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் நடுவே பாலமாய் இருக்க விரும்புகிறேன் எனச் சொல்லி இந்த தரகு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்திய அரசாங்கத்தைப்பொருத்தவரை எந்தவித பொருளாதார தடையையும் விதிக்கவில்லை. நேபாளத்தில் நடக்கும் உள்நாட்டுக்கலவரத்தால் வாகனங்களில் பொருளைக்கொண்டு செல்வோர் அச்சப்படுவதால் நேபாளத்திற்குள் பொருட்கள் வரவில்லை. இந்த தடைகளுக்கும், இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நிலையை தெளிவாக்கியுள்ளது. ஆனால், இது உண்மையா என்றால், பாதி உண்மை, பாதி உண்மை இல்லை.
நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2.8 கோடி மட்டுமே. ஒப்பீட்டுக்கு சொன்னால் சென்னையும் அதைச்சுற்றியுள்ள 8 மாவட்டங்களை சேர்த்தால் இருக்கும் மக்கள் தொகையே நேபாள நாட்டின் மக்கள் தொகை. இந்தியா நினைத்திருந்தால் உதவ வழி கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், கலவரத்தில் வழிபிறக்கட்டும் என விட்டுவிட்டனர். ஏனெனில், போராட்டக்காரர்கள் இந்திய வம்சாவழியினர் என்பதால்.
நேபாளத்தின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைக்குறித்து நேபாள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், இந்தியா என்ற பெரியண்ணன் நமக்கு நிறைய உதவுவார் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், தற்போதைய அறிவிக்கப்படாத பொருளாதார தடையினால் இந்தியா மீதும், இந்திய மத்திய அரசாங்கத்தின் மீதும் பெரும் எரிச்சலையும், இந்திய விரோத மனப்பான்மையையும் கொண்டுவந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இருதினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ஒரு ஹேஷ் டாக் ‪#‎BackofIndia‬ ‪#‎IndaSTOPbullyingNepal‬ என்பன.
கிட்டத்தட்ட மூன்றுமாதத்திற்கும் மேலான இந்த போராட்டத்தால் அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது நேபாள பாராளுமன்றம். ஆனால், நேபாள பாராளுமன்றம் செய்வதாக சொல்லி இருக்கும் திருத்தங்கள் தங்களுக்கு திருப்தி கிடையாது எனச் சொல்லி இருக்கிறார்கள் மாதேசிகள்.
இதற்கு நடுவே நிலைமையை சமாளிக்க நேபாளம் சீனாவுடன் சில நீண்டகால ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது, குறிப்பாக தடையற்ற எரிபொருள் சப்ளையும் அதில் அடங்கும். சீனாவுடன் நேபாளம் பகிரும் எல்லைகளில் மேலும் பல எல்லைச்சாவடிகளை அமைத்தும், பழைய எல்லைச்சாவடிகளை புதிப்பிக்கவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. நேபாளம் இந்தியாவுடன் உறவு நன்றாக இருக்கும் காலத்திலேயே நேபாளத்தை சீனாவுடன் இணைக்கும் சாலையை இந்திய எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தியது. அதனால், இதை இந்தியாவுக்கான பின்னடைவு எனக்கொள்ளாமல், தற்காலிக கோபமாக கொள்ளலாம். ஏனெனில், கூப்பிடு தூரத்தில் இருப்பது இந்தியா மட்டுமே. நம்முடனே நேபாளிகள் கொண்டும், கொடுத்தும் வாங்கியும் இருந்திருக்கிறார்கள், நமது மதம், கலாச்சாரம் எல்லாம் பிண்ணிப்பிணைந்தது.
நேபாள பத்திரிக்கைகளின் தலையங்கங்களும் இந்தியா மீது நேபாளிகள் வைத்திருக்கும் நன்மதிப்பை இழந்துகொண்டிருக்கிறது. நேபாளத்தின் சுயமரியாதையை அளவுக்கு மீறி சீண்டினால் இந்திய வெறுப்பு எல்லை மீறும் எனவும் எச்சரிக்கும் வேளையில் ஆளும் அரசாங்கத்திற்கும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு விரைவில் கண்டு பிரச்சினையை தீர்க்கும்படியும் அறிவுறுத்துகிறது.
எழுதப்படிக்கத்தெரிந்த நேபாளிகள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இந்தியாவுக்கு எதிராக எழுதிக்கொண்டுள்ளனர். அவர்களின் வார்த்தைகளில் தெரிவதெல்லாம் இயலாமையும், கோபமுமே. உங்களையே நாங்கள் சார்ந்து இருப்பதால்தான் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள், அத்யாவசியப்பொருட்கள்கூட கிடைக்காத அளவு எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறீர்கள் எனக்கேள்வி எழுப்புகின்றனர்.
இதில், எரியும்வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் மணிசங்கர் அய்யர் போன்றோர் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை திறம்பட செய்கின்றனர். மாதேசிகள் பிரச்சினையைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல், நேபாளத்தில் இருக்கும் அறிவிக்கப்படாத பொருளாதாரதடை நரேந்திர மோடி உண்டாக்கியது என என்.டி.டிவியில் கட்டுரை எழுதுகிறார்.
மாதேசிகள் பிரச்சினை, கலவரம், மேலும் இந்திய வாகன ஓட்டுநர்கள் நேபாளத்திற்குள் செல்ல பயப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனது தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியிருக்கும் ஒருநாட்டை இப்படி கையை முறுக்குவது சரியல்ல என்பதே எனது எண்ணம்.

லவ் ஜிகாத் எனும் சமூக பயங்கரம்.

”கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்...”
” தீ வச்சி கொளுத்திருவேன்...”
”கேவலமான படங்களை எடுத்து அனுப்பு...”
”இஸ்லாத்துக்கு மதம் மாறி என்னைய கல்யாணம் செஞ்சிக்கோ”
என காதலை முறித்துக்கொண்டு சென்ற பெண்ணை டார்ச்சர் செய்த ஒருவர் சொன்ன அன்பு மொழிகளே மேலுள்ளது.
வேலை செய்யப்போன பெண்ணை இவன் கொடுத்த டார்ச்சரால் பிரச்சினையை முடிப்போம் என ஊருக்கு வந்த பெண்ணை கடத்தி மூன்று நாட்களாக பாத்ரூமில் வைத்து சித்திரவதை செய்திருக்கிறான், இந்த கொடூரன்.
இஸ்லாமியர்களுக்கு படிப்பறிவில்லை, அதனால்தான் கள்ளக்கடத்தலிலும், குண்டுவைக்கவும் போகிறார்கள், என்போர்களுக்கு,
இந்த லவ் ஜிகாத்தை செய்தவர் டெல் கம்பெனியில் வேலை செய்பவர் என்பது உங்கள் தகவலுக்கு.
லவ் ஜிகாத்தா? அது எங்கையோ ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா பக்கம் இருக்கு என்போர் வழக்கம்போல கண்களைமூடிக்கொண்டு உலகில் எதுவும் நடந்துவிடவில்லை என அவர்களின் உலகில் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.

மேலுள்ளதைக்குறித்து வந்த செய்தி இங்கே

27.12.2015ல் எழுதியது

Saturday, November 14, 2015

குழந்தைகள் தின சுழல் கேள்விகள்..

குழந்தைகள் தினத்துக்காக 2014ல் ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட கேள்விகளை நால்வரைக் கேட்கவேண்டும் என்பது போட்டிவிதியாக வைத்து சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டிருந்தனர். 

 எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் எனக்கும் இந்தக்கேள்விகளை அனுப்பி இருந்தார்..

 1. சின்ன வயதில் கண்ட fantacy கனவு எது? 

ஒரு கனவு என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. யாராவது ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்தால் அன்றிரவே ஒரு மாபெரும் கூட்டத்தின் நடுவே அந்த செயலை சிறப்பாக செய்துகாட்டுவதாகவும், எல்லோரும் என்னைப் புகழ்வதுபோலவும் கனவு வரும். இது கல்லூரிகாலம் வரை தொடர்ந்தது. இந்த வகையில் நான் கூத்தாடியாக, சர்க்கஸில் சைக்கிளில் சுற்றுபவனாக, விவேகானந்தராக, சிறந்த பேச்சாளனாக, சிறந்த ரயில் ட்ரைவராக, எங்கள் கல்லூரியின் கண்ணன்சார் பாராட்டும் சிறந்த ப்ரொஃப்சராக இப்படி ஏகப்பட்ட கனவுகள். :) 

2. பள்ளிக்குச் செல்லும் வழியில் அனுபவித்த மறக்கமுடியாத விஷயம்? 

நானும் என் நண்பன் சரவணக்குமாரும் ரோடுபோட வைத்திருந்த தார்டின்னில் இருந்த தாரை உருண்டையாக உருட்டி சாலையில் லாரி வரும்போது உருட்டி விடுவோம். அது தரையோடு நசுங்குவதைப் பார்ப்பது ஒருவிளையாட்டு. எங்கள் கெட்ட நேரம் ஒரு கோவக்கார லாரி ட்ரைவர் நாங்கள் என்னமோ வண்டிக்குள் உருட்டிவிடப்போகிறோம் என்பதை தூரத்திலேயே தெரிந்துகொண்டு எங்கள் அருகில் வந்து லாரியை நிறுத்தி எங்கள் இருவரையும் பொடனியில் அடித்து லாரியில் ஏற்றி வண்டியைக் கிளப்பிவிட்டார். சரி எங்கையே கண்கானாத இடத்துக்கு கொண்டுபோய் கொல்லப்போறார்னு நெனச்சிட்டிருந்தா 5 நிமிஷத்துல எங்க ஊர் எல்லையில இறக்கிவிட்டு மீண்டும் பொடனியில் ஒரு அப்பு அப்பி இனிமே இப்படி செஞ்சீங்க மதுரையில கொண்டுபோய் விட்ருவேன் எனச் சொல்லிச் சென்றார். லாரியில் இருந்து கீழே இறங்கி ஸ்டெடியாக நிற்க அரைமணி நேரத்துக்கு மேல் ஆனது. 

3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்? 

நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்ததே 11ம் வகுப்புக்கு பிறகே. தி.ஜா வின் மோகமுள்தான் அப்படியே கட்டிப்போட்ட புத்தகம். பாபுவும், யமுனாவும் கிட்டத்தட்ட 1 வாரத்துக்கு மேல் என்னைவிட்டு இறங்கவில்லை. அதுவரை எனக்குப் பிடித்த பெயர் என நினைத்துக்கொண்டிருந்த காயத்ரி மனதில் இருந்து விலகி யமுனா என்ற பெயர் மந்திரம் போல அமர்ந்துகொண்டது. எல்லாப் பெண்களிலும் யமுனாவையே தேடிக்கொண்டிருந்தேன், பல ஆண்டுகளாக. மோகமுள் திரைப்படத்தை நான் பார்த்தது ஆகப்பெரிய தவறு. என் கற்பனையில் இருந்த என்றுமே சந்திக்க முடியாதோ என நினைத்துக்கொண்டிருந்த யமுனாவை இழந்து.விட்டேன் :) 

4. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்? 

பரிசு வாங்குமளவு விளையாட்டில் ஜொலித்ததில்லை. ஆனால், எங்கள் பி ஈ டி வாத்யாருக்கு இவன் டென்னிகாய்ட்டில் நல்லா வருவானோ, பேட்மிண்டனில் நல்லா வருவானோ, 100 மீட்டரில் ஓட பயிற்சி கொடுத்தா நல்லா வருவானோ என எண்ணம் வரும் அளவு மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால், எதிலுமே நன்றாக வந்ததில்லை. 

5. பாலியத்துக்குத் திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்? 

நான் படிப்பில் மிகச் சுமார். உண்மையைச் சொல்வதாய் இருந்தால் மஹா மக்கு. இன்னொரு வாய்ப்புக்கிடைத்தால் நன்றாக படிப்பேன். ஏதேனும் ஒரு விளையாட்டிலாவது ஜொலிக்க முயல்வேன். பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க முயல்வேன். இவனெல்லாம் எங்க உருப்பட? என்ற வார்த்தையை பெரியவர்களிடம் கேட்காமல் வளர முயல்வேன். :) இக்கேள்விகளை இன்னும் நான்கு பேரிடம் கேட்கவேண்டுமென்று சொன்னார்கள். அந்த சுழல் கேளவிகளை நான் கேட்டிருந்தது

 Prakash Rajagopal Raj SuperRaj Sudhakar Kasturi Jayashree Govindarajan. இதில் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மட்டுமே பதிலளித்தார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன். :)

Sunday, October 25, 2015

வள்ளி அக்கா

2010ல் மார்ச் மாதம் குவைத்துக்கு மாற்றலானது, வீடு தேடும் படலத்தில் ஒரு அபார்ட்மெண்டில் வீடு இருப்பதாக கேள்விப்பட்டு சென்றேன். நான் குடிவரப்போகும் வீட்டில் ஆள் இருந்ததால் இன்னொரு வீட்டை சாம்பிள் காட்ட அழைத்துச் சென்றார் ஹாரிஸ் என்று அழைக்கப்படும் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன். 

வீட்டில் நுழைந்ததுமே அது ஒரு தெலுங்கு குடும்பம் என்பது தெரிந்ததால் சரளமாக தெலுங்கில் பேச ஆரம்பித்த 5வது நிமிடத்தில் மிக நல்ல நண்பராகிவிட்டார். என்னை வள்ளி அக்கா எனக்கூப்பிடுங்கள் என அறிமுகம் செய்துகொண்டார். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்களுக்கு ஹெல்ப் செய்ய நாங்க இருக்கோம் என்று உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கேட்டபின்னர் வேறு வீடு பார்க்க தோன்றவில்லை. உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு ஊருக்கு ஃபோன் செய்து சொன்னேன், பக்கத்துலையே நல்ல ஃப்ரண்ட் உனக்கு கிடைப்பாங்க. நல்லா பேசுறாங்க, நல்ல மாதிரியா இருக்காங்க. அபார்ட்மெண்டுல நிறைய இந்தியர்கள் இருக்காங்க என வீட்டுக்காரம்மாவுக்கு அப்டேட் கொடுத்துவிட்டு சில நாட்களிலேயே ஆன் அரைவல் விசாவில் வீட்டுக்காரம்மாவையும் அழைத்து வந்துவிட்டேன். 

வந்த அன்று காலை விமானம், வீட்டுக்கு வந்து சேர காலை 11 மணி. உள்ளே நுழைந்து சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போதே புயலென நுழைந்தார், எதிர்வீட்டு வள்ளி அக்கா. எல்லாம் சரியா இருக்கா என அவரே ஒரு மேற்பார்வை செய்துவிட்டு உங்களிடம் கத்தி, மிக்ஸி இல்லை, காய்கறி வெட்ட பலகை இல்லை என அவரே சொல்லிவிட்டு விடுவிடுவென அவர் வீட்டில் இருந்து எல்லாம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்றார். 

அடுத்த 10வது நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரையும் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு முதலிலேயே அவரைப்பற்றி தெரிந்திருந்ததால் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. வீட்டுக்காரம்மாவுக்கு இப்படில்லாமா உலகத்துல ஆட்கள் இருப்பாங்க என்ற ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 

ஆரம்ப தயக்கம் எல்லாம் போன சில நாட்களிலேயே மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். இரு குழந்தைகள் அவர்களுக்கு. அவர்களும் உடனே நெருங்கி விட்டனர். மாலை ஊர் சுற்றல், ஷாப்பிங் எல்லாம் அவர்களுடன், அவர்கள் வீட்டில் என்ன செய்தாலும் ஒரு பங்கு வந்து சேரும் அளவு நெருக்கமானது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் இருமுறை வீடு மாற்றினேன். 

எப்போதும் எங்கள் நட்பும் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு வந்து செல்லுதலும் நிற்காமல் பார்த்துக்கொண்டோம். வியாழன் இரவுகளில் டீவியில் இரு குடும்பங்களும் சேர்ந்து படம் பார்த்தலும் அதில் உண்டு. பின்னர் எங்கள் கம்பெனி குவைத்தை மூடும் முடிவை எடுத்ததில் வீட்டுக்காரம்மாவுக்கு மிக வருத்தம். இப்படி ஒரு நட்பை பிரிந்து செல்கிறோமே என. 

கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் தொலைபேசுதலிலும், மெயில்களிலும், நான் குவைத் சென்று பார்த்துவிட்டு வருவதிலும் நட்பு தொடர்கிறது. உண்மையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவுதலை அந்த குடும்பம் யாருக்கும் போதிக்காமல் செய்து காட்டிகொண்டிருந்தது. ஏழைக்குழந்தைகளுக்கு கல்விக்கு பணம் கொடுத்தல், குழந்தைகளை நம் பாரம்பரியம் விடாமல் இரவு படுக்கச் செல்லும்முன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிவிட்டு தூங்கச் செல்லுதல், பாட்டு கற்பித்தல் என ஒரு மாதிரிக்குடும்பமாக இருந்து கொண்டிருக்கின்றனர். 

எங்கள் பிரியத்துக்குரிய வள்ளி அக்காவின் ( Kanaka Valli ) பிறந்தநாள் (25, அக்டோபர்) இன்று. எல்லா நலன்களும் கிட்டுவதாக என வாழ்த்துகிறேன். அவர்களுக்கு நான் எழுதியதில் எதுவும் புரியப்போவதில்லை. அவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும். எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவும் ஒருவரை நான் சந்தித்ததையும் இன்னும் நட்பில் இருப்பதையும் என் நண்பர்களான உங்களுக்குச் சொல்லவே இந்த பதிவு.

Monday, September 28, 2015

பாரதப்பிரதமர் அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் பேச்சின் தமிழாக்கம்

பாரதப்பிரதமர் அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து சில துளிகள் .. எனக்குத் தெரிந்த மொழி பெயர்ப்பில்.. :) 

( இதை நான் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மொழி பெயர்த்து ஃபேஸ்புக்கில் இட்டுக்கொண்டிருந்தேன், 28, செப்டம்பர், 2014ல்)



உங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கிறேன், இருப்பினும் உங்கள் வலியை நான் அறிவேன். (ஏர்போர்ட் லஞ்சம், விசா வாங்குவதில் இருக்கும் லஞ்சம் இவைகாஇ வைத்து) அமெரிக்காவில் உலகம் முழுதும் உள்ள மக்கள் வந்து சேர்கிறார்கள், ஆனால், இந்தியர்கள் உலகம் முழுதும் சென்று சேர்கிறர்கள். இந்தியர்கள் இல்லாத இடம் உண்டா உலகில்? 

ஒவ்வொரு யுகத்திலும் மஹா புருஷர்கள் நாட்டுக்காக பலிதானமாக தன்னையே தந்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக உழைத்தார்கள், வாரிசுகள் வந்தார்கள், போனார்கள். ஆனால் மஹாத்மா காந்தி இன்னொரு முறையில் நாட்டுக்காக உழைத்தார். குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாலும், ஒருவனுக்கு உண்ண உணவு தந்தாலும், கூட்டிப்பெருக்கினாலும், அவரது ஒவ்வொரு செயலும் நாட்டின் விடுதலைக்காக செய்வதாகவே செய்தார். அதேபோல நாம் நாட்டு மக்களும் என் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்கிறேன் அதன் மூலம் நாட்டுக்காக நானும் உழைக்கிறேன் என்பதை உணரவேண்டும். நாட்டின் பிரதமரைவிட நற்செயலை நானும் செய்கிறேன் என மகிழ்ச்சி கொண்டு செய்வதை நாட்டுக்காக சிறப்பாக செய்ய வேண்டும். 

125 கோடிப்பேர்களும் என்ன செய்தாலும் அதை நாட்டுக்காக செய்கிறேன் என உணர்ந்து செய்ய வேண்டும் எனது எந்த ஒரு செயலும் நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டுமே தவிர எந்த விதத்திலும் நாட்டுக்கு கெடுதலை உண்டாக்கிவிடக்கூடாது என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். உலகம் முழுக்க இன்றைக்கு வயதானவர்களே நிறைந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு தேவை உள்ளது. நாம் நல்ல திறமையான உழைக்கும்வர்க்கத்தை உலகம் முழுக்க அனுப்புவோம். அஹமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்ல 10 ரூபாயாவது ஆகும். ஆனால், செவ்வாய்க்குச் செல்ல நாம் வெறும் 7 ரூபாய்தான் கிலோமீட்டருக்கு செலவழித்தோம். :) அதுமட்டுமல்ல, செவ்வாய்க்கு சென்று சேர்வதில் முதல் முறையிலேயே வெற்றியும் பெற்ற நாடும் நம்முடையது. தரையிலும், செவ்வாயிலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே சமயத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய செயற்கைக்கோளும், அமெரிக்க செயற்கைக்கோளும் இரு தினங்கள் வித்யாசத்தில் சென்று சேர்ந்ததை நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும் ஹாலிவுட் சினிமா தயாரிப்பு செலவை விட குறைந்த செலவில் செவ்வாய் சென்று சேர்ந்துவிட்டோம். இருவிதமான ஸ்கில் டெவலமெண்ட்டை குறி வைத்திருக்கிறோம். ஒருவர் வேலை கொடுக்கும் அளவு திறமைவாய்ந்தவராக்குவது. அப்படி முடியாதோருக்கு, சிறப்பாக வேலை செய்யத்தெரிந்தவராக்குவது...

தேர்தலில் கேட்டிருப்பீர்கள்.. நாங்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம், அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம் என சொல்பவர்களை...(காங்கிரஸை கிண்டல் செய்து) நான் வேறு வேலையை ஆரம்பித்தேன்.. நாட்டின் பழமையான சட்டங்களை ஒழிக்கும் வேலையை ஆரம்பித்தேன்.. ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டியை வைத்து தேவையில்லாத சட்டங்களை எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு சட்டத்தை நீக்க முடிந்தால் எனக்கு மிகவும் ஆனந்தமாய் இருக்கும்.

நீங்கள் பேப்பரில் படித்திருப்பீர்கள். தில்லியில் அரசாங்க ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருகிறார்கள் என, நீங்களே சொல்லுங்கப்பா, இது ஒரு செய்தியாய்யா? இதை செய்தியாக்கும் அளவு நிலை. நேரத்துக்கு வேலைக்குச் செல்வது உங்களின் பொறுப்பில்லையா? இது ஒரு செய்தியா? ஆனால், நிலை அப்படி இருந்தது.. நாட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.. எனக்கு தெரியும், நீங்கள் இதை வரவேற்பீர்கள்.. ( டெல்லியில் வேலைக்கு நேரத்துக்கு வராததைக் (இதற்கு முன்னால்) கிண்டல் செய்ய ஆரம்பித்து பின்னர் நாடை சுத்தம் செய்யும் பிரதமரின் திட்டத்தை அதன் பின்னால் சொல்லும் மோடியின் திறமை..

ஒரு பிரதம மந்திரி செய்யும் வேலையா இது என உலகம் நினைக்கலாம்.. ஆனால், மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தருவதை நானே செய்ய ஆரம்பிப்பேன். சில சமயம் பலர் என்னிடம் கேட்பார்கள்.. மோடி ஜி, பெரிய விஷன் செய்யுங்களேன் என.. ( இதைக் கிண்டல் தொனியில் சொல்கிறார்) நான் அவர்களிடம், பாருங்கப்பா, நான் டீ வித்துக்கிட்டிருந்து மேல வந்தவன்.. ( கூட்டம் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்கிறது) நான் ரொம்ப சின்ன ஆளு, வெகு சாதாரனன், என் குழந்தைப்பருவமும் இப்படித்தான் இருந்தது. என் மனதும் சிறியது. அதனால்தான் சாமான்யர்களுக்கு உதவும் சிறு சிறு வேலைகளில் என் மனது செல்கிறது. ( டாய்லட் கட்டுவதை கிண்டல் செய்து பெரிய விஷயமா செய்யுங்கள் எனச் சொல்வோர்களுக்கு பதிலாக சொல்லியது) சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்களுக்கு பெரிய பெரிய வேலைகள் செய்துதர மனது விளைகிறது.

சொல்லுங்கள்.. உங்கள் அம்மா அப்பாவை கங்கையில் குளிக்கவைக்க ஒருமுறையாவது அழைத்துச் செல்லவேண்டும் என தோன்றியதில்லை என? ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் ஆசை இது, (கங்கையில் ஒருமுறையாவது குளிப்பது) ஆனால் நாம் படிக்கிறோம், கங்கை மாசுபட்டிருக்கிறதென. நீங்கள் சொல்லுங்கள் கங்கையை சுத்தம் செய்ய வேண்டுமா வேண்டாமா? என்னுடன் நீங்களும் கங்கையை சுத்தம் செய்வதில் உதவ வேண்டுமா, வேண்டாமா? ( கூட்டம் வேண்டும் வேண்டும் எனச் சொல்கிறது) எனக்கு உதவுவீர்களா? (கங்கையை சுத்தம் செய்ய) செய்வோம் என கூட்டம் சொல்கிறது. சகோதர சகோதரிகளே, இன்றுவரை ஆயிரக்காணக்கான கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. 

நான் இந்த விஷயத்தை கையில் எடுத்ததும் எல்லோரும் மோதிஜி உங்களை நீங்களே அடித்துக்கொள்கிறீர்கள். இதில் ஏன் கையை வைக்கிறீர்கள்? இப்படிப்பட்ட விஷயங்களில் நான் கையை வைக்காவிடில் மக்கள் என்னை பிரதமர் ஆக்கியிருக்க மாட்டார்கள். கஷ்டமான வேலைகளைச் செய்யத்தானே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளனர்? 125 கோடி மக்களுக்கு இருக்கும் ஆசைதான் எனக்குள்ளும் இருக்கிறது. (கங்கையை சுத்தம் செய்ய) உலகின் சுற்றுச்சூழல் பார்வையிலும் கங்கையின் சுத்தம் மிக அவசியமானது. அது மட்டுமல்ல கங்கையின் கரைகளில் இருக்கும் உத்தரகண்ட்டாகட்டும்,பீஹாராகட்டும், உத்திரப்பிரதேசமாகட்டும், வங்காளமாகட்டும் என கங்கை நதிபாயும் இடங்களில் 40 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக கங்கை திகழ்கிறது.. இதைச் சுத்தம் செய்யாவிடில் இந்தக் கரையில் வாழும் 40 சதவீத மக்களின் வாழ்க்கை சிதிலமாவதுடன், இதை வைத்து ஒரு பொருளாதார அஜெண்டாவும் உள்ளது. 

2019ல் மஹாத்மா காந்திஜி பிறந்து 150 ஆண்டுகள் ஆகின்றது. மஹாத்மா காந்தி நமக்கு சுதந்திரம் கொடுத்தார். நாம் மஹாத்மா காந்திக்கு என்ன திருப்பிக்கொடுத்தோம்? ஒவ்வொரு இந்தியனும் தன்னைத்தானே இதைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா, நீங்களே சொல்லுங்கள்.. என்றைக்காவது காந்தி ஜியை சந்திக்க நேர்ந்தால் இந்தக்கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல இயலுமா? அதனால், அவரது 150 ஆண்டுவிழாவின்போது நாம் அவருக்கு பிரியமானதைச் செய்வோம். அவருக்கு பிடித்தமானதில் ஒன்று விடுதலை அல்லது சுதந்திரம். இன்னொன்று அவருக்கு பிடித்தது சுத்தம். காந்தியடிகள் சுத்தத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. மிகப்பிடிவாதமாக இருந்தார். (சுத்தத்தை பேணுவதில்) காந்தியடிகள் பாரத மாதாவை அடிமைத்தளையிலிருந்து மீட்டார். பாரதமாதாவை அசுத்தத்திலிருந்து மீட்பது நமது கடமையா, இல்லையா? 

2019ம் ஆண்டு வரும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளின்போது சுத்தமான இந்தியாவை காந்தியடிகளின் காலடிகளில் நாம் சமர்ப்பிக்க முடியாதா? எந்த மஹா புருஷர் நமக்கு விடுதலை வாங்கித்தந்தாரோ அவருக்கு நாம் இதைத்தரமுடியுமா, முடியாதா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த பொறுப்பை நாம் ஏற்க வேண்டுமா, வேண்டாமா? எப்போது இந்தியாவின் 125 கோடி மக்களும் நான் இந்தியாவை அசுத்தபடுத்தமாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டால் இந்தியாவை வேறு எந்த சக்தியாலும் அசிங்கப்படுத்திவிட முடியாது.

2022ல் நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியாகும். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. இந்தியாவின் சரித்திரத்தில் 75ஆண்டுகள் என்பது மிக முக்கியமான பகுதி. உங்களின் ஆசிர்வாதங்களுடன் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எந்த ஒரு குடிமகனுக்கும் இருக்க இடமில்லை என்ற நிலையில் இருந்து மீட்போம். நான் உங்களுக்கு இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லிச் செல்கிறேன். ஆனால் இந்த சின்னச் சின்ன விஷயங்களே இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப்போகின்றவைகள். இந்த தலையெழுத்தை மாற்றும் வேலையில் நாம் அனைவரும் இணைவோம்.

 2015, அடுத்த ஆண்டு, மிக முக்கியமான ஆண்டு. நீங்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள். இந்தியாவிலிருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். உங்களைப்போலவே மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியும் வெளிநாட்டில் வாழும் இந்தியராய் இருந்தார்.

ஜனவரி1915ம் ஆண்டு இந்தியா திரும்பி வந்தார். ஜனவரி 2015ம் ஆண்டு காந்தி இந்தியா திரும்பி வந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தினம் கொண்டாடப்படுகிறது. உங்களைப்போன்றோர் பலர் வருகிறார்கள். இந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் அடுத்த ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. காந்தியடிகள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து 100 ஆண்டுகள் ஆகிறது. அவரும் வெளிநாடு சென்றார், பாரிஸ்டர் ஆனார், நிறைய சாதித்தார், ஆனால், நாட்டுக்காக உழைக்கவே விரும்பினார். நனும் உங்களை திறந்த கைகளுடன் அழைக்கிரேன், வாருங்கள், நம் தாய் நாட்டிற்கு உழைக்க வாருங்கள் என அழைக்கிறேன். (நிறைய ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் இந்த இடத்தில் பிடிபடவில்லை) 

பி.ஐ ஓ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க தீர்மானித்திருக்கிறோம். (கூட்டத்தினரைப்பாத்து) மகிழ்ச்சிதானே? மேலும் இந்தியாவில் நீண்ட நாள் தங்கி இருப்போர் (பி ஐ ஓ கார்டு ஹோல்டர்ஸ்) காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இனிமேல் நீங்கள் காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை. இன்னும் சில மாதங்களில் பி ஐ ஓ மற்றும் ஓ சி ஐ சி ஓ இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒன்றாக்கி விடுவோம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அமெரிக்க குடிமக்களுக்கு நீண்டகால விசாக்கள் வழங்கப்படும். இந்தியாவுக்கு பயணமாக வரும் அமெரிக்கர்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்கப்படும். 

இறுதியில் நன்றிஉரையில் நீங்கள் அனைவரும் எனக்கு மிக அதிகமாக அன்பை வழங்கியுள்ளீர்கள். இதுவரை எந்த தலைவர்களுக்கும் இதுபோன்றதொரு வரவேற்பு கிடைத்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு கைம்மாறாக நீங்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்கிக்காட்டுவேன் என உறுதி ஏற்கிறேன். நாம் இணைந்து பாரத அன்னைக்கு சேவை செய்வோம். நம்மால் முடிந்ததை நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வோம். நாம் படித்த பள்ளி, கல்லூரி எல்லாவற்றுக்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோம். அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய்


Sunday, September 20, 2015

Selfie from Hell ( த்ரில்லர் குறும்படம்)



ஒரு குறும்படம் என்பதற்கான இலக்கணம் அதிகபட்சம் 5 நிமிடங்கள் இருக்கலாம். சினிமா தவிர வேறெதையும் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை, முதல் சீனிலேயே நம்மை கட்டிப்போட்டால்தான் அடுத்த 5 நிமிடங்களையும் பார்க்கும் அளவு பொறுமை குறைந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

ஒரு நிமிடம் 41 விநாடிகளுக்குள் ஒரு செமையான த்ரில்லர் குறும்படம். :)

கேபிள் சங்கர் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அருமையாக இருந்ததால் நானும் என் பக்கத்தில் பதிந்துகொண்டேன்.


Wednesday, August 19, 2015

இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் களைகள்

மக்கள் செருப்பாலடித்து மூலையில் உட்கார வைத்தும்கூட இன்னும் திருந்தாமல் ஒரு உருப்படியான விவாதத்திற்குகூட உதவாமல் பாராளுமன்றத்தை முடக்கி நாட்டின் வளர்ச்சியைத்தடுப்பதன் மூலம் காங்கிரஸ் இந்திய நாட்டு மக்களுக்குச் சொல்லாமல் சொல்வது...
நாங்கள் மட்டுமே இந்த நாட்டைக் கொள்ளையடிப்போம்.
எங்களைத்தவிர வேறு யாரும் இந்தநாட்டை ஆளக்கூடாது. அதுவும் இந்தியாவில் பிறந்த காங்கிரஸ் கட்சியினர்கூட கிடையாது, இத்தாலி சோனியாவும், அவரது முட்டாள் மகனும் மட்டுமே ஆளவேண்டும்.
இந்த தேசம் நன்றாய் இருக்க விடமாட்டோம், முடிந்தவரை நாசமாக்குவோம்.
இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிகள் என்ற சும்பன்களால் கேவலப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நேற்றைக்கு பூடானின் பாரளுமன்றக்குழுவினர் முன்னிலையில் கேவலப்படுத்தினர்.
காரியக்காரரான முலாயம்சிங்கூட பாராளுமன்ற முடக்கத்திற்கு எதிராய் பேசும் அளவு காங்கிரஸின் அராஜகம் இருக்கிறது.
ராஜ்யசபாவில் பலமில்லை என்பதற்காக இந்த அநியாயங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறது பாஜக. பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைகள்.
சுஷ்மா ஸ்வராஜ் நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல கேவலமாகக்கேட்டும் இன்னும் கேவலமாக சப்தமிட்டுகொண்டிருக்கும் இந்தக் கும்பல்கள் நாட்டின் சாபக்கேடுகள்.
இந்திய ஜனநாயகம் மிக மோசமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்றிருக்க வேண்டியதுதான்.

---------------
ராஜ்யசபாவில்  ராகுல்காந்திக்கு
சுயமாக பேசவராதென்றால்கூட தப்பில்லை. யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அளவுதான் திறமையுள்ளவர் பாரதத்தின் பிரதமராக ஆசைப்படுவது அவர் தப்பில்லை. ஆனால், ஊழல் செய்ய வாய்ப்புக்கிடைக்கும் என்பதற்காக அவரை பிரதமராக்கத் துடிக்கும் காங்கிரஸில் இருக்கும் தேசத்துரோகிகளை நினைத்தால்தான் வயிறு எரிகிறது.

ஈராக்கும் இந்திய சுதந்திரமும்

ஈரான் எல்லையை ஒட்டிய சிறு கிராமம் அபுல் கசீஃப்.
இரு வீடுகளுக்குள் சண்டை.
ஒருவர் எப்போதும் சட்டையை கழற்றிவிட்டு டவுசருடன் மைனர் போல சுற்றி இருக்கிறார், அதை எதிர் வீட்டுக்காரர் பெண்கள் இருக்கும் பகுதியில் இப்படி சுற்றாதே என பலமுறை சொல்லி இருக்கிறேன் மீண்டு செய்கிறாயா என கோபத்தில் கேட்க, அப்படித்தான் செய்வேன், முடிஞ்சதை செய்துகொள் என்பதுதான் சண்டைக்கு காரனம்.
இப்போது அது இரு இனக்குழுக்களுக்கான சண்டையாகி நேற்று இரு ஜாதியினரும் துப்பாக்கியால் சண்டையிட மாடியில் காயப்போட்ட துணியை எடுக்கச் சென்ற சம்பந்தமே இல்லாத பெண் பலி.
இப்போது இந்த சண்டை மூன்று இனக்குழுக்களுக்கு என மாறியுள்ளது.
சுதந்திரம் அடைஞ்சி என்னகிடைத்தது எனக் கேட்போர்களுக்கு, இப்படி காட்டுமிராண்டி கூட்டம்போல ஆகாததும், நாம் வாழ விரும்பும் வகையில் வாழ முடிவதும், நம் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருப்பதும் ஆகும்.
நம் வீட்டருகில் குண்டு வந்து விழும்வரையோ, குடும்பத்தில் யார் தலையிலாவது துப்பாக்கி குண்டு வெடிக்கும்வரைக்கும் என்னத்த பெருசா சுதந்திரம் வாங்கிட்டோம் எனக் கேட்டுக்கொண்டுதான் இருப்போம்.
ஏனெனில் சுதந்திரம் இல்லாத வாழ்க்கையை நாம் வாழ்ந்ததில்லை என்பதால் நமக்கு அதன் அருமைகள் புரிவதில்லை.

ஜாதி அரசியல் காவு வாங்கிய மாரியம்மனின் தேர்

தேரை எரித்தவர்கள் மறந்துபோனது அது எரித்தவனும் வணங்கும் தெய்வம் சென்ற தேர் என்பதை.
ஜாதி வெறியின் உச்சத்தில் சக மனிதனை இழிவுபடுத்துவோர் படிக்கவேண்டிய பாடம் ஒன்றுண்டு.
எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னர் செய்த பிழைகளுக்கு இன்றுவரை தன்டனை அனுபவிக்கும் பிராமனர்களின் கதியே உங்களுக்கும் வரும்.
நீங்கள் செய்த பாவமெல்லாம் இன்னும் அடுத்த பல தலைமுறைகளுக்கான சுமை.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒன்றுண்டு என்பதை மறவாதீர்கள்.
செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக தப்பு செய்த கயவாளி கூட்டத்தை போலிஸில் ஒப்படையுங்கள்.
இரு பிரிவினரும் இணைந்து இந்த தேரோட்டத்தை இணைந்து நடத்துங்கள்.
இதை அரசியல்வாதிகள் கையில் கொடுத்தால் இந்தப்பிரச்சினை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு கிடைத்த வாய்ப்பாக கொண்டு உங்களை என்றென்றைக்கும் சேராமல் செய்து விடுவார்கள். முடிந்தால் உங்களையே விற்று விடுவார்கள்.
நீங்களே சென்று பாதிக்கப்பட்ட தலித் சகோதரர்களிடம் மன்னிப்பை கோருங்கள். இனி இதுபோல நடவாது என்பதற்கான உத்தரவாதத்தை அளியுங்கள். மீண்டும் தேரோட்டம் இரு சாதியினரும் இணைந்து நடத்துவதாய் இருக்கட்டும்.
மிகக்கேவலமாய் உணரும் நாள் இது.

படம் - விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரம் அருகே - சேஷசமுத்திரம் கிராமம்

வெண்முகில் நகரம் - ஜெயமோகன்

மஹாபாரதம் குறித்து இந்திய சமூகம் அறிந்து வைத்துள்ளது எவ்வளவு என சோதித்தால் பெரும்பான்மை இப்படித்தான் சொல்லும்.
தர்மனும், பாண்டவ தம்பிமாரும் ரொம்ப நல்லவங்க. அண்ணன் தம்பின்னா இப்படி இருக்கனும்.
துரியோதனன் ரொம்ப கெட்டவன், 5 கிராமங்களைக்கூட பாண்டவர்களுக்கு தரமாட்டேன்னு சொல்லி அவங்களை நாட்டை விட்டு விரட்டுனான். துரியோதனாதிகள்லாம் பாண்டவர்களுக்கு அநியாயம் செஞ்சாங்க.
சகுனிப்பயலாலதான் மஹாபாரதப்போரே வந்துச்சி. அவந்தான் தர்மரை சூதுக்கழைச்சு அவர்ட்ட இருந்த எல்லாத்தையும் புடுங்குனான்.
கௌரவர் அவையில வச்சி பாஞ்சாலிய சேலைய உரிச்சான் துச்சாதனன், கிருஷ்ணர்தான் மானத்த காப்பாத்துனாரு.
பாஞ்சாலி போட்ட சபதத்தை ஜெயிச்சா.
கிருஷ்ணனே அர்ஜுனருக்கு தேரோட்டியா வந்தாரு.
பகவத்கீதைன்னு நாம படிக்கிற கீதை போர்க்களத்துல அர்ஜுனருக்கு கிருஷ்ணன் சொன்னது.
நல்லவங்களுக்குத்தான் எப்பவும் வெற்றி கிடைக்கும்கிறதுதான் மஹாபாரதம்.
நான் மேல சொன்னதுல கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கலாம். மஹாபாரதத்தை ருசித்து வாசித்தவர்கள் கண்களில் நீர்வழிய நிகழ்வுகளைச் சொல்லலாம். ஆனால், கர்னபரம்பரையாய் மஹாபாரதத்தைக் கேட்கும் சமூகத்திற்கு நான் மேலே சொன்ன அளவுதான் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். நான் வியாசர் விருந்து படித்திருக்கிறேன். ஆனால், அதைப் படித்தது 12ம் (1989) வகுப்பு விடுமுறையில். படிக்கும்போதே தெரிஞ்ச கதையைத்தானே படிக்கிறோம் என்ற அலட்சியத்துடந்தான் வாசித்த ஞாபகம்.
அதன் பின்னர் இஸ்கான் வெளியிட்ட பகவத்கீதை உண்மையுருவில், சித்பவானந்தர் எழுதிய உரை, என சில புத்தகங்களை வாங்கிப் படித்திருந்தாலும் மனதில் அத்தனை தாக்கத்தை உருவாக்கியதில்லை.
ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு ஆரம்பிக்கும்போது எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. 10 ஆண்டுகள் எழுதப்போவதாக சொல்லி இருக்கிறாரே, முதல் அத்தியாயத்தின் விறுவிறுப்பை கடைசிவரை அவரால் நீட்டிக்க முடியுமா என்பதும், சிறுகதைகளில் அதர்வம் போல பல கதைகளை வாசிக்கும்போதே நமக்கு மனதில் ஒட்டிக்கொள்ளுமே, இந்த வெண்முரசை இவரால் இப்படி பிடித்தவகையில் எழுதிவிட முடியுமா? எல்லோருக்கும் தெரிந்த, எப்போதும் ஏதோ ஒரு வகையில் இந்திய வாழ்க்கையில், பழமொழிகளாகவும், பெயர்களாகவும் உலவும் இந்த மஹாபாரதத்தை இவரால் அப்படி என்ன சிறப்பாகச் சொல்லிவிட முடியும் என்பதும் எனது சந்தேகங்களாய் இருந்தது.
வெண்முரசின் முதல் நாவல் முதற்கனலை வாசித்து முடிக்கும்போதே தெரிந்துவிட்டது, இது பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கப்போகிறதென. அடுத்து வந்த மழைப்பாடலும், வண்ணக்கடலும் ஆவலை அதிகரித்துக்கொண்டே செல்ல, நீலம் ஒரு பித்தமயக்குகொள்ள வைத்தது. அடுத்து வந்த பிரயாகைதான் வெண்முரசின் உச்சமாக இருக்கப்போகிறது என எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்து வந்த வெண்முகில் நகரம் வாசிக்கும்வரை.
பொதுவாக நான் ஜெயமோகனின் தளத்தை தினமும் வாசித்தாலும் முதற்கனலிலேயே இந்த வெண்முரசு தொடரை ஒவ்வொருநாளும் படிக்கக்கூடாது என்பதை புரிந்துகொண்டுவிட்டேன். அடுத்த அத்யாயத்துக்காக 24 மணி நேரம் காத்துக்கொண்டிருப்பது பெரும் வதையாகப்பட்டது. எனவே எப்போதும் 15 அத்யாயங்கள் சேர்ந்த பின்னரே வாசிப்பதை வழக்கமாய்க் கொண்டுவிட்டேன்.
வெண்முகில் நகரம் வரும்வரை ஒவ்வொரு நூலுக்கும் எனக்குப் பட்டதை ஏதாச்சும் எழுதிவைத்து போஸ்ட் செய்ய நினைத்தாலே பயம் வந்துவிடும். இதென்ன சிறுபிள்ளைத்தனமாக ஒரு குறிப்பு என. அப்படியே டெலிட் பட்டன் தான்.
துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் அடுத்து யார் ஹஸ்தினாபுரத்தை ஆள்வது என்ற கேள்வி வரும்வரையில் ஆதர்ச அண்ணன் தம்பிகளாய்த்தான் இருக்கிறார்கள். அதன் பின்னர் சகுனியின் சதியால் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்து அவர்கள் தப்பிய பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கும்போது மூத்தவர் தம்பியை மன்னித்து விட்டதாகச் சொல்லும் கட்டமும், அதன் பின்னர் நடக்கும் உச்சபட்ச உணர்ச்சி நிகழ்வுகளும் பூரிசிரவஸுபோல நாமும் கண்ணீருடன் வாசித்து முடித்திருப்போம்.
எத்தனை கெட்டது செய்தாலும் உடன்பிறந்தார் மீதான பாசமும், தர்மன் மீதான நம்பிக்கையும், அவரது தர்மத்திலிருந்து விலகாத்தன்மையைக் குறித்த பெருமதிப்பும் எப்போதும் துரியோதனாதிகளிடமும், அவரது தகப்பனாரிடமும் எப்போதும் கண்களில் நீரில்லாமல் சொல்லப்படுவதில்லை. திருதராஷ்ட்ரன் என்ற ராட்சத உடல்கொண்ட ஹஸ்தினபுரி அரசன் நியாயத்தை அன்றி வேறொன்றை நம்பாதவன், செய்ய விளையாதவன் என்பதை ஜெயமோகனின் எழுத்துகளில் படிக்கும்போது அவர்மீதெழும் அன்பும் அத்தகையதே.
கிருஷ்ணன் வரும் ஒவ்வொரு பகுதியும் அழகு. எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது அவன் யாதவ அரசனில்லை, மிக மோசமான மாயன் என. ஆனால், மானுட உருவில் இருப்பதால் அந்த யாதவனை வெல்ல தொடர்ந்து முயல்கிறார்கள். பாஞ்சாலியைக் குறித்து வரும் பகுதிகளும், பால்ஹிஹ நாடுகள் குறித்த விவரனையும், பூரசிரவஸின் சாதாரன ஒரு பிரபலமில்லா நாட்டின் இளவரசன் என்ற நிலையிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதும் அவன் இந்த வெண்முகில் நகரம் நூல் முடியும்போது அவனை காண்பித்திருக்கும் விதமும் என்ன சொல்ல?
துவாரகையின் வளர்ச்சியும், யாதவர்களின் எழுச்சியும், இந்த்ரபிரஸ்தம் மனதளவில் உருவாகி வரைபடம் வரை வந்து நிற்பதும், அரசியல் பகடையாட்டங்களும், என ஒவ்வொரு அத்யாயமும் அடுத்து அடுத்து என வாசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன, அழகிய எழுத்தால்.
இத்தனை பெயர்களையும், ஊர்களையும், கதைகளையும், அரச சரித்திரங்களையும், அரசியல் சூழ்ச்சிகளையும், சூதர்கள் சொல்லும் கதைகள் என வருபவற்றையும் ஒரு மனிதன் இத்தனை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது முதல் அதிசயம் என்றால், அதை அழகாகக்கோர்த்து கதை சொல்லும் விதமும், அதில் வரும் வர்ணனைகளும் வாசிக்கும்போது வாசிப்பின்பம் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் கிட்டுகிறது.
நாமறிந்த மஹாபாரதத்தை இத்தனை விஸ்தாரமாக சிறு சிறு பாத்திரங்களும் விஸ்வரூபம் எடுப்பதையும் சுவாரசியத்துடன், அழகுதமிழில் வாசிக்கக் கிடைத்திருப்பது நமது நற்பேறு.
இந்த அசாத்தியமான பிரும்மாண்ட முயற்சியை ஆரம்பித்து இன்றுவரை தொய்வடையாமல் நமக்கு வாசிக்க அளிக்கும் ஜெயமோகனுக்கு இறை தனது பரிபூரன ஆசியருளட்டும். என்ன சொன்னாலும், என் மனதில் உருவாகும் களிப்பை, நான் கானும் காட்சியை, எனக்கு கிடைக்கும் அனுபவத்தை எழுத்தாக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. முழுவதையும் சிறப்புற எழுதிமுடிக்க தெய்வங்கள் துனையிருக்கட்டும்.

சர்வதேச புகைப்பட நாள் எண்ணங்கள்







80கள் மற்றும் 90களில் யாஷிகா கேமெரா வைத்திருப்பது பெருமை. (ரோல் போட்டு எடுப்பது) அதில் 36 படம் எடுத்து முடித்ததும் தாஸ் அல்லது ராஜேஸ்வரி கலர் லேப்பில் 4 ரூபாய் 50 காசுகளுக்கு ஒரு ப்ரிண்ட் (மேக்ஸி) போட்டுத்தருவார்கள். 

பெரும்பாலான படங்கள் ஷேக் ஆகியோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமலோ, நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரின் முகம் தெரியும் ஆனால் முடியில் பாதி இல்லாமலும் இருக்கும். என்னைய போட்டோ எடுங்க மாமா என நாயாய் அலைந்திருக்கிறோம். அவரும் நம் மனசு நோகாதபடிக்கு ஒரு ப்ளாஷை அடித்துவிட்டு போய்விடுவார். நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வரவுக்காய் காத்திருப்போம். நிச்சயம் நம் படம் இருக்கும் என்ற நம்பிக்கையில். ஏதேனும் ஒரு படத்தில் நாம் எட்டியாவது தலையைக் காண்பித்திருப்போம். அந்த படம்தான் நமக்கு பார்க்கக் கிடைக்கும். 

லேபில் முதலில் பிலிமைக்கழுவி நெகடிவைக் கொடுப்பார்கள். அங்கிருக்கும் ஃபில்ம் வியூவிங் லைட்டில் பார்த்து நமக்கே தேரும் என நினைக்கும் படங்களை நம்பர் எழுதிக்கொடுத்துவிட்டால் பிரிண்ட் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகல் தெரியும் எனக்காண்பிக்கவும், கைபட்டால் ரேகை படாமல் இருக்கவும் படம் பிரிண்ட் போடும்போதெ மேட்டி பிரிண்ட் போடுங்கண்ணே என்றால் நாளைக்கு வா என்பார். கொஞ்சம் கெஞ்சினால் மாலை கிடைக்கும். அதற்குள் அத்தை வீடோ அல்லது சினிமா தியேட்டரோ சென்று விட்டு வந்தால் படங்கள் ரெடியாய் இருக்கும். அதைக் கையில் வாங்கிக் கொண்டு 36 படங்களுக்கு 40 போட்டோக்கள் வைக்கும் அளவு ஒரு ஃபோல்டரையும் ஓசி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தால் எல்லோரும் படத்தை பார்க்க ஆவலாய் இருப்பார்கள். 

ஒரு நாலு நாட்களுக்குள் அந்தப்படத்தை வீட்டிலுள்ளோர் 10 முறையும், பக்கத்து வீடு அக்கம் பக்கம் வீடுகளில் உள்லொர் இருமுறையும் பார்த்திருப்பார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எங்கேயாவது நம் முகம் வந்திருக்கிறதா என்பதை பார்ப்பதற்குதான் ஆல்பத்தையே வாங்குவார்கள். ஃப்ளாஷ் அடிச்சி ஏமாந்த பெரியவர்களாய் இருப்பின் பொல்லாத போட்டோ எடுக்குறானுக என கடுப்பில் திட்டுவர். 

இன்றைக்கு 16 மெகாபிக்சல் கேமெராவில் எடுத்த படங்களை அந்த நிமிடமே பார்த்துவிட்டு நல்லா இல்லை என்றால் உடனே அடுத்த படத்தை எடுக்க முடிகிறது. ஆனால், இந்த வசதிகள் எல்லாம் இல்லாமல் வெறும் வியூஃபைண்டரில் பார்த்து அட்டகாசமான படங்களை எடுத்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மதுரை அன்பு. அவர் எடுத்த ஒரு படமாவது இந்த கலர் லேபுகளில் பெரிதாய் இருக்கும். பிள்ளையார்பட்டி விநாயகரை எல்லாருடைய மணிபர்சுக்குள்ளும் தினித்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த படம்தான் பல ஆண்டுகளாக மறு பதிப்பு கண்டுகொண்டிருந்தது. புகைப்பட நாளை ஒட்டி என் எண்ணங்கள்.

Monday, August 3, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு..

 நாளைக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு என முதல் நாளிலிருந்தே மகிழ்ச்சியில் மனது துள்ளும். வாரம் 4 நாள் போகும் அதே தேவன் குறிச்சிதான், அதே நீர்ச்சுனைதான், அதே சிவன் கோவில் எல்லாம் அதேதான். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கன்று பக்கத்து வீடுகளுடன், நம் வீட்டின் மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பாடு கட்டிக்கொண்டு போய் மலையில் மாலைமுதல் இரவு வரை அமர்ந்துவிட்டு வருவது போன்ற சுகம், இனிமை எப்போதும் அமைவதில்லை. 

கல்லுப்பட்டியில் இருந்து குறைந்தது 50 குடும்பங்களாவது மலைக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வருவார்கள். இதுதவிர சுற்றியுள்ள கிராமங்கள், அந்த ஆண்டு திருமணமான ஜோடிகள் எல்லாம் அவசியம் வருவார்கள். குறிப்பாய் தேவன் குறிச்சியில் இருக்கும் நீர்நிலை காரணமாக. இது தவிர பஞ்சுமிட்டாய், பலூன், காரசேவு, சீனிச்சேவு, எல்லாம் அன்றைக்கு மட்டும் விற்கும். 

அக்னீஸ்வரரிடம் கூட்டம் அம்மும். கைகால் சாகாத பயக எல்லாம் மலை உச்சியில் ஏதுமில்லாமல் மொட்டையாய் இருக்கும் இடத்தில் ஒரு சிறு சுனை இருக்கும். படியே இல்லாத மலை உச்சிக்கு மரங்கள் மற்றும்கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்று சுழன்றடிக்கும் குளிர் காற்றை அனுபவித்து சுத்துபட்டு கிராமங்களை ஏரியல் வியூவில் தரிசித்துவிட்டு, வன்னிவேலம்பட்டி கன்மாய், பச்சைக் கேக்குகளாக பரந்து கிடக்கும் விவசாய வயல்கள், ஆலங்குளம் சிமிண்ட் ஃபேக்டரியின் புகைக்கூண்டு, கல்லுப்பட்டி எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், நீர் நிரம்பியிருக்கும் குளம், கோபால்சாமி மலை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கீழே வந்து மலை ஏறாமல் இருப்போரிடம் சொன்னால் ஒரு பொறாமைப் பார்வையும், அக்காக்கள், தங்கைகளிடம் என்னையும் ஒருவாட்டி கூப்டுட்டு போடா என்ற அன்பு வேண்டுகோள்களும் இருக்கும். 

ஐந்தாறு வகைகளில் சாப்பாடு, பப்படம், அப்பளம், எல்லாம் சாப்பிட்டுவிட்டு அக்னீஸ்வரர் குளத்தில் கை அலம்பிவிட்டு, சுனையில் கற்கண்டு இனிப்பில் தண்ணீரை மோந்து குடித்தால் அது ஒரு சுகம். நான் 7ம் வகுப்பு படிக்கும்வரை ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். அதன் பின்னர் கல்லுப்பட்டி டவுனுக்கான அரிதாரங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்ததும் ”இங்கன இருக்குற” தேவன்குறிச்சிக்கு போக கல்லுப்பட்டிக்காரனுகளுக்கு முடியாமல் போய்விட்டது.. ஆனால், நான் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தனியாகவாவது ஒருமுறை சென்றுவருகிறேன். 

என் வாழ்க்கையில் கிடைத்த அருமையான நாட்களில் சில தேவன்குறிச்சியில் கிடைத்தவை. ஒரு நாள் மலையிலேயே படுத்துவிட்டு மறுநாள் காலையில் வந்து சேர்ந்தேன். சிவன் கோவிலில் படுப்பவனும், மலையில் இரவு உறங்குபவனும் அடுத்த ஜென்மத்தில் மலைப்பாம்பாக பிறப்பான் என்பது ஒர் ஐதீகம். 

இன்றைக்கு சுனையில் நீர் வரத்து மிகவும் குறைவு, பாசி படிந்த குளமே எப்போதும் காணக் கிடைக்கிறது. 10ம் வகுப்பு விடுமுறை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும்போது ஆர்.எஸ் எஸ் ஏற்பாடு செய்த உளவாரப்பணியில் ஈடுபட்டு தேவன் குறிச்சி மலையின் உச்சியில் அமைந்த பெருமாள் கோவிலுக்கு செங்கலும், மனலும் சுமந்தேன், சனி, ஞாயிறு என இரு நாட்கள். வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் மலைஏற்றம். 6 செங்கலை தூக்கிக்கொண்டு மலை உச்சியில் கொண்டு போய் வைத்துவிட்டு வரவேண்டும், கோவில் கட்ட. ஒரு நாளைக்கு 4 ட்ரிப் வரை அடித்திருக்கிறேன். 10 கிலோ எடையுள்ள மணல் மூடையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறேன். இன்றைக்கு தனியாக மேலே எர்ரா எனச் சொன்னால் முடியுமா எனத்தெரியவில்லை. இன்றைக்கு கல்லுப்பட்டியில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற விஷயமே வீட்டுடன் முடிந்துவிட்டது சோகம்தான்..

Friday, May 1, 2015

RED (Retired Extremely Dangerous)

RED (Retired Extremely Dangerous) என்றொரு படம் பார்த்தேன் இன்றைக்கு. சி.ஐ ஏவில் இருந்து ரிடையர்ட் ஆன ஒருவரை கொல்ல நினைக்கிறது அரசு. அவருடன் நட்பில் இருக்கும் பெண்னையும் சேர்த்து போட்டுத்தள்ள இருப்பது ஹீரோவுக்கு தெரிய அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை செமையாக சொல்லி இருக்கிறார்கள். இதில் நோண்ட ஆரம்பிக்கும்போதுதான் பெரிய லிஸ்ட்டையே ஒருவர் போட்டுக்கொடுக்க அதன் வரிசைப்பிரகாரம் ஒவ்வொருவராய் மரணமடைந்தது தெரிய வருகிறது. அதன் மூலத்தைக் கண்டுபிடித்து காரனகர்த்தாவான அமெரிக்க துனை அதிபரின் கதையை முடிப்பதில் படம் முடிகிறது. மோர்கன் ஃப்ரீமேன் ஒரு ஆள்தான் எனக்கு தெரிந்தவர். மற்றவர்கள் எல்லாம் பரிச்சயம் இல்லை. இதுபோன்ற படங்களில் படம் ஆரம்பத்திலிருந்து 1.30 மணி நேரம் நம்மை விடாமல் பார்க்க வைக்கிற திறமைதான் ஆச்சரியப்படுத்துகிறது. அடுத்தடுத்த திருப்பங்கள், செய்யசாத்தியமற்றதைச் செய்ய முயன்று அதற்கு கூட்டணி அமைத்து செய்து முடிப்பதிலும், அரக்கத்தனமான சண்டையைக்கூட ஸ்டைலாக செய்து முடிப்பதிலும் கலக்குகிறார்கள். படம் எனக்கு மிகப் பிடித்துப்போயிற்று. ஆனால், எப்படிச் சொல்வது எனத்தெரியவில்லை. பலமாதங்களுக்கு முன்னர் பார்த்த படம்தான், ஆனால், இன்றைக்கும் அதே சுவாரசியத்துடன் பார்க்க முடிந்தது.