Thursday, January 15, 2015

Battle of Algiers - French (1966 )

 ஃப்ரெஞ்சுக்காலனியாய் இருந்த அந்நாளைய அல்ஜியரின் சுதந்திரப்போராட்டம்தான் படம். முழுக்கதையும் கஸ்பா என்ற ஊரில் நடப்பதாக காட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஒரு போராளியிடம் இருந்து “விசாரனை”மூலம் குழுத்தலைவன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அழிக்கச் செல்கிறது ஃப்ரெஞ்சு அதிரடிப்படைக் குழு. போராளிக் குழு அழிக்கப்படும் முன்னர் போராளிக்குழுவின் தலைவன் என்ன நடந்தது என்பதை ஃப்ளாஷ்பேக்காக நினைத்துப்பார்ப்பதாக செல்கிறது படம். 

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நம் நாட்டை ஃப்ரெஞ்சுக்காரர்களிடமிருந்து விடுவிக்கவேண்டும் என ஒரு சிலர் தீர்மானிக்கிறார்கள். தீர்மானித்த உடன் முதலில் ஒரு போராட்டக்குழு ஆரம்பித்து அதற்கு எஃப் என் எல் எனப்பெயரிடுகின்றனர். குழுஆரம்பிக்கும்விதமும் அவர்கள் தலைமையை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதும் அதன் பின்னர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும், சிறு சிறு வெற்றிகளுக்குப் பின்னர் முழுவீச்சில் இறங்குவதுமாக ஒரு போராளி இயக்கம் ஆரம்பிப்பதில் இருந்து சுதந்திரம் பெறும் வரையிலுமான போராட்டத்தை அழகாக எடுத்திருக்கின்றனர். 

போராட்டக்குழு அதன் கொள்கைவிளக்கமாக மக்களுக்கு முதல் அறிக்கையை கொடுக்கின்றனர். 

National Liberation Front : First communication : ”அல்ஜிரிய மக்களே, நமது போராட்டம் காலனியாக்கத்துக்கு எதிரான போர், நமது குறிக்கோள் சுதந்திரம் பெறுவதும், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அல்ஜீரிய நாட்டை அமைப்பதும், மதம், இனம் வேறுபாடின்றி அடிப்படை உரிமைகளை மதிப்பதும் ஆகும்.” 

போராட்டக்குழுவின் அடுத்த குறியாக முதலில் தங்கள் மக்களை சீர் செய்தல். பொதுமக்களை தங்களுக்குச் சாதகமாக்குதல் அப்படி ஒத்துவராதவர்களை தீர்த்துக்கட்டுதல். இதை தலைவன் குழுவில் சேரும் இன்னொருவனுக்குச் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக குழுவின் 24வது அறிவிப்பு வருகிறது. 

”ஃப்ரெஞ்சுக்காரர்கள் நம்மை ஏழைகளாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நம் சகோதர சகோதரிகளை கீழ்மையான வழியில் சீர்கெடுத்து, மரியாதைக்குறைவாய் நடத்துகிறார்கள், நம்மக்களும் அவர்களின் மதிகெட்டு, தங்கள் சுயமரியாதையை இழந்துவிட்டனர். எஃப் எல் என் இந்த இழிநிலையைப்போக்க சில திட்டங்களை வகுத்துள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நமது சுதந்திரத்தின் முதல் படி. இன்றிலிருந்து எஃப் எல் என் அல்ஜீரிய மக்களுக்களின் மனம் மற்றும் உடலின் நல்வாழ்வுக்காக பொறுப்பாளராக பொறுப்பெடுத்துக்கொள்கிறது. அதனால் கீழக்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதை மருந்து மற்றும் சாராயம் தடைசெய்யப்படுகிறது. விபச்சாரமும், வாங்கி விற்பதும் தடை செய்யப்படுகிறது. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள். மறுமுறை மீறுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.” 

இந்த அறிவிப்பிற்குமுன்னர் அல்ஜீரிய மக்களின் வாழ்க்கை எபப்டி இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். தெருவெங்கும் சிகரெட் விற்பவர் போல போதைப்பொருள் விற்பவர் இருக்கிறார். குடி தாராளமாக புழங்குகிறது. விபச்சாரம் சர்வ சாதாரனமாக நடக்கிறது. போராட்டகுழுவுக்கு மக்களின் ஆதரவும், இயக்கத்துக்காக உழைப்பவர்களின் ஆதரவும் பெருகத்தொடங்குகிறது. போலிஸைக் கொல்வதும், தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதுமாக இயக்கம் வேகமாக வளர்கிறது. எஃப் எல் என் பிரபலம் ஆனதும் ஒரு வாரத்துக்கான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர், கடையடைப்பு பலத்த வெற்றி பெறுகிறது, ஃப்ரெஞ்சு போலிஸின் அடக்குமுறை இருந்தும். கடையடைப்புக்கு முதல் நாள் பென் மெஹ்தி என்ற போராட்டக்குழு தலைவரில் ஒருவருக்கும், அலி என்பவனுக்கும் நடக்கும் உரையாடல்.. 

பென் மெஹ்தி: ஏன், (ஸ்ட்ரைக்) கூடாது? 

அலி: ஏனெனில் நாம் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவினால். 

பென் மெஹ்தி: போராகட்டும், புரட்சியாகட்டும், வன்முறை எப்போதும் போரை வெல்ல உதவுவதில்லை. ஆரம்பத்தில் பயங்கரவாதம் பயன்படும். அதன் பின்னர் மக்களே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கடையடைப்பு. எல்லா அல்ஜீரியர்களையும் ஒன்று திரட்ட, நமது பலத்தை அறிய, (இந்த கடையடைப்பு வேண்டும்) அலி: ஐக்கிய நாடுகள் சபைக்கு நிரூபிக்கவா? 

பென் மெஹ்தி: ஆம், அவர்களுக்கு நிரூபிக்கத்தான். இந்த கடையடைப்பு எந்த நன்மையும் நமக்குச் செய்யாமல் போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் சபைக்கு நமது பலம் தெரிய வரும். உனக்கு தெரியும் அலி, ஒரு போராட்டத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல. அதை (வீரியம் குறையாமல்) நடத்திச் செல்வது அதைவிடக்கடினம். எல்லாவற்றையும் விடக் கடினம் அந்த போராட்டத்தில் வெல்வது. ஆனால், அதற்குப்பின்னர், வென்றபின்னர்தான் உண்மையான கஷ்டங்கள் ஆரம்பிக்கும். 

அதன் பின்னர் போராட்டக்குழு முழுதும் நசுக்கப்பட்டு விடுகிறது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு மக்களிடம் எந்த எதிர்ப்புமில்லை. திடீரென இரு ஆண்டுகளுக்குப்பின்னர் மக்களே பொங்கி எழுகிறார்கள். அதன் பின்னர் 2 ஆண்டுகள் தொடர் போராட்டங்களின் விளைவாய் அல்ஜீரிய நாடு பிறக்கிறது. 

படம் கருப்பு வெள்ளையில் வந்தது. வசனங்கள் அனைத்தும் அரபியிலும், ஃப்ரெஞ்சிலுமாக இருக்கிறது. ஆங்கில சப்டைட்டிலுடன் பார்க்க வேண்டும். இஸ்லாமிய அரசமைக்க நடத்தப்படும் போராட்ட வழிமுறைகள் அன்றும் இன்றும் அப்படியே தொடர்கிறது. 

அல்ஜீரிய சுதந்திர போராட்டமாவது சுதந்திரப்போராட்டம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்று சுதந்திர நாடுகளில் முழு சுதந்திரத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்போரும் இதே வழிமுறையைத்தான் இன்றும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். 

நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தியாகிகள் எல்லாம் ஏன் உலகுக்கே உதாரனமாய் இருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். பர்மிய ஆங் சன் சூயி ஆகட்டும், நெல்சன் மண்டேலா ஆகட்டும், மார்ட்டின் லூதர் கிங் ஆகட்டும் நம் நாட்டின் காந்தியடிகளைத்தான் உதாரனமாகக் கொண்டார்களே தவிர ஆயுதத்தை எடுத்து போராடவில்லை. 

முழு புர்கா அணிந்த பெண்களை ஆயுதக்கடத்தலுக்கும், போராட்டத்திற்கு உதவவும் பயன்படுத்துவது. இந்த பயண்பாட்டுக்கு பயன்படுத்த வசதியாக இஸ்லாமியப் பெண்களை சோதனைக்குட்படுத்தக்கூடாது என எப்போதும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அது இன்றும் தொடர்கிறது. அதே சமயம் போராட்டத்துக்கு தேவை எனில் ஃப்ரெஞ்சு பெண்கள் போல நாகரீக உடையணிந்து குண்டு வைக்க அதே அல்ஜீரிய இஸ்லாமியப்பெண்களை பயன்படுத்துகின்றனர். நிராயுதபானிகளாய் இருக்கும் பொதுமக்களைக் கொல்வது ஷரியா சட்டத்தை முதலில் அவர்களுக்குள் அமல்படுத்துவது நேரடி போராட்டமாக இல்லாமல் ஒளிந்திருந்து மறைமுகமாக தாக்கிவிட்டு ஓடுவது. நம் நாட்டில் சுதந்திரப்போராட்டத்தின்போது இவர்களுக்கு தீவிரவாதிகள் எனப் பெயர். இத்தனைக்கும் நம்மூர் தீவிரவாதிகள் வெள்ளைக்காரனை மட்டும்தான் நேரடியாக கொன்றார்கள். அவனது குடும்பத்தினரைக்கூட ஒன்றும் செய்யவில்லை. பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவைத்து கொத்துக்கொத்தாய் கொல்வது என அன்று முதல் இன்றுவரை அதே வரிசையில் நீள்கிறது. 

1960ம் ஆண்டு ஆனாலும் சரி, 2014 ஆனாலும் சரி. இதுதான் அவர்கள் வழிமுறையாக இருக்கிறது. சிறைக்காட்சியில் கில்லெட் எனும் தலையை வெட்டும் கருவியைக் கான்பிக்கிறார்கள். அல்ஜீரிய தெருக்களில் அந்தக்காலத்திலெயே கேமெராவை ஓடவிட்டிருக்கிறார்கள். அழகான கோணங்கள், சிறப்பான ஒளிப்பதிவென நன்றாகவே இருக்கிறது. இசை : இனிமையான புல்லாங்குழலில் ஆரம்பிக்கும் இசை ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு முன்னர் ஒரு வித்தியாசமான இசையை இசைக்கிறது. நிச்சயம் படத்துக்கு பலம் சேர்க்கிறது இசை. அல்ஜீரிய சுதந்திரப்போராட்டம் குறித்து தெரிந்துகொள்ளவும், இல்லை ஒரு ஆயுத போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி எப்படி சுதந்திர போராட்டமாக உருவெடுக்கிறது, பின்னர் எப்படி வெல்கிறது என்பதையும் காண்பதற்காகவும் இந்தபப்டத்தை அவசியம் பார்க்க சிபாரிசு செய்வேன். யுடியூபிலேயே ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது. வாய்ப்பும், நேரமும் இருப்போர் அவசியம் பாருங்கள்.

No comments: