Monday, April 6, 2009

எதிர்பாரா சந்திப்புகள்

எதிர்பாரா சந்திப்புகள்..

திண்டுக்கல்லில் வேலை அஸ்தமனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்ன கம்பெனிகள் உண்டோ அத்தனைக்கும் விண்ணப்பம் அனுப்பிக் காத்துக்கொண்டிருந்தபோது வாராது வந்த மாமணீயாய் வெளிநாட்டில் வேலைக்கான ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது.

அதன் பின்னர் நேர்முகத்தில் தேர்வாகி பின்னர் ஓமானிலுள்ள மஸ்கட்டில் வேலைக்காக புறப்பட்டேன்.

அங்கு நடக்கும் ஆரம்பகால சடங்குகளுக்குப் பின்னர் எனக்கான குழுவும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. (தோட்டக்கலை மேற்பார்வையாளர்)

அதாவது நானும் எனது குழுவில் 15 தோட்டத்தொழிலாளர்களுமாக அமைந்தோம்..

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆள், சார், நீங்க வெள்ளரி கம்பெனி மேனேஜர்தான என்றார்.. ஆமா எப்படி கண்டுபுடிச்சீங்க அல்லது எப்படித்தெரியும் என்றேன்..

சார் நான் உங்க கூட சண்டை போட்டிருக்கேன் என்று அன்பாக அறிமுகம் செய்து கொண்டார்.

ஒரு சிறிய அறிமுகம்..

வெளிநாட்டுக்கு போவதற்கு முன்னர் நான் வெள்ளரிக்காயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கிராமங்களில் சென்று விவசாயிகளுக்கு எப்படிப் பயிர் செய்வது, என்னென்ன மருந்து எப்போது அடிக்கவேண்டும் இன்னபிற தகவலைத்தருவதுதான் எனது பணி. அதில் கிட்டத்தட்ட 100 விவசாயிகளுக்கு மேலேயே இருப்பார்கள். யாரைப்பார்த்தோம், யாரைப் பார்க்கவில்லை என ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். அதில்தான் இந்த நபரும் ஒருவர். அவரது வெள்ளரிக்காய்களை தரத்தினடிப்படியில் நிராகரிக்க வேண்டியதாயிருந்தது. அதெப்படி செய்யலாம் என சண்டை.. அதைத்தான் அவர் குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டார்..

வெரி ஸ்மால் வேர்ல்டுங்க.. என கமலஹாசன் சதிலீலாவதியில் சொல்வதுபோல எங்கோ பிறந்து திண்டுக்கல் நத்தத்திற்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை வேலை நிமித்தமாய் சந்தித்தது இரண்டாண்டுகளுக்கு முன்னர்...

அதே ஆளை வெளிநாட்டில் மீண்டும் சந்திப்பது என்பது வெரி ஸ்மால் வேர்ல்டுங்க என்பதை மீண்டும் கேட்டதுபோல உனர்ந்தேன்..

அவருக்கு நத்தத்தில் வெள்ளரிக்காயை நிராகரித்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 20 ரூபாய்கள் இருக்கலாம்..ஆனால் என்னிடம் வேலைக்கு சேர்ந்ததால் அவருக்கு ஓவர்டைம் மூலம் பலநூறுமடங்கு திருப்பிக் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன்..

இதேபோல எத்தனையோ ரயில் ஸ்நேகங்களும், வெளிநாட்டில் வேலை செய்யும்போது ஏற்படும் நட்புகளும், என நட்பு வட்டாரங்கள் விரிவதும் கால ஓட்டத்தில் அவரவர் வாழவேண்டிய அவசரத்தில் நட்புகள் நினைவில் இல்லாமல் போவதும் சாதாரனமானது எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றி விடுகிறது..

கொடுக்காமல் விட்ட கடன்காரனை மீண்டும் சந்திக்கும் நாட்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றாலும்....

Saturday, April 4, 2009

சில புகைப்படங்கள்.

மனதை அள்ளிய புகைப்படங்கள் எனத் தலைப்பிட்டேன்.. பின்னர் என் மனதை அள்ளிய புகைப்படங்கள் எனப் பெயரிட்டு என் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டேன்.. அப்படியும் மனம் ஒப்புக்கொள்ளாததால் வெறும் “சில புகைப்படங்கள்” எனப் பெயரிட்டுவிட்டேன்.


பாவனாவின் புகைப்படம் தவிர இதர படங்கள் எனது கைப்பேசியில் எடுத்தது.. எனவே தரம் சற்று முன்,பின்தான் இருக்கும்..

 


மனதை அள்ளும் சிரிப்பில் பாவனா..


 


ஃபெராரி ஒன்று கானக்கிடைத்தது..

 



 
Posted by Picasa


ஒரு மழை நாளின் தோஹாவின் கடற்கரை..

Saturday, March 28, 2009

அபியும் நானும்



தமிழ் சினிமா உலகில் மக்கள் ரசனையைப் பற்றிய மிக மோசமான அபிப்பிராயம் உள்ளது. அவர்களுக்கு குத்து டான்சுதான் பிடிக்கும், அதுவும் கும்தாஜ், மும்தாஜ் மற்றும் நமிதா கோஷ்டிகள் ஆடினால்தான் பிடிக்கும் என்பது மாதிரியும், கதாநாயகன் என்பவன் ஒரே குத்தில் 50 பேரை அடித்து வீழ்த்தும் பலமுள்ளவன் போலவும், ஆனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல்.. ஏய்.. பேசிக்கிடிருக்கோம்ல.. சைலன்ஸ் அப்படினு சவுண்டு விட்டுக்கொண்டு திரியும் இந்த நேரத்தில்தான் “ராதாமோகனின்” அபியும், நானும் மக்களின் ரசனையை உயர்வாக மதித்து அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ’மொழி’ படமும் ராதா மோகன் இயக்கியதுதான்..

’நமது குழந்தைகள் நம் வழியாக வந்தவர்களேயன்றி நமக்கானவர்கள் அல்லர்’ என்ற கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்தான் கதை .

தனது மகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் ஒரு தகப்பன் மகள் தன்னிஷ்டப்படி காதலித்து திருமனம் செய்து கொண்டு போனபின்பு திருப்தியுடன் பூங்காவில் சந்திக்கும் ஒருவரிடம் ( பிரித்விராஜ்) தனது (பிரகாஷ்ராஜ்) வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் விவரிக்கும் வகையில் சொல்வதுதான் படம்.

வாழ்க்கையின் சந்தோஷமான தருனங்களை ஒவ்வொன்றாக பிரகாஷ்ராஜ் சொல்ல அது அப்படியே பிளாஷ்பேக்காக விரிகிறது. படம் முழுக்க கதை சொல்லும் பானியிலேயே எடுக்கப்பட்டு அந்த உத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

பிளஸ்கள்:-

முதலில் படத்தில் எதிர்மறை கருத்தென ஒன்றும் இல்லாததற்கே ஒரு பாராட்டு.

அநாவசியமான சண்டை, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோல படம் செல்வது.

குளுமையான இடங்களில் மட்டுமே படம் செல்கிறது. படத்தில் வெயிலைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அவ்வளவு குளிர்ச்சி, பசுமை படம் முழுக்க.

தெளிவான கதை உத்தி.முதலில் ஆசுவாசமாகச் சொல்லி பின்னர் வேகவேகமாய் ஓடாமல் ஒவ்வொரு காட்சியையும், அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்கள்

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்துக்கு பாடல்களே தேவை இல்லை. இந்தப் படத்தில் பாடல்கள் மிக செயற்கையாகப் படுகிறது. பஞ்சாபி இசை தவிர பிற பாடல்கள் செயற்கையாகத் தெரிகிறது.

பிரகாஷ் ராஜின் அலட்டல்கள் சில சமயம் எல்லைமீறும்போது.. குறிப்பாய் அவர் பிரதமரிடமிருந்து அழைப்பு என்றவுடன் ”எஸ் சார், ஓக்கே சார், தாங்க்யூ சார்” என சவுண்டு விடுவது வழக்கமான பிரகாஷ்ராஜ்.

மற்றபடி மிக அருமையான குடுமபத்துடன் கானத் தகுதியுள்ள திரைப்படம் அபியும் நானும்.

படத்திலிருந்து சில நல்ல காட்சிகள்.

பஞ்சாபி மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமானது. அவர்களுக்கு இசையும் நடனமும் உயிர்.. துள்ளலான இசையை வாழ்க்கையில் கொண்டவர்கள் அவர்கள். சுத்தமான இதயமும், பொய் சொல்லாத குணமும், தேசத்தை நேசிக்கும் குணமும், பிறரை ஆதரித்து வாழும் கொள்கையும், சுயகௌரவத்தை தங்களது வாழ்க்கையாகவும் கொண்டவர்கள்.. ( இது நமது பிரதமருக்குப் பொருந்தாது)

திரிஷா ஜோகி என்ற சர்தாருடன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்க ஜோகியைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜ் காட்டும் உடல் மொழி அருமை..

அடுத்தடுத்து வீட்டில் வீட்டில் வடநாட்டு உணவுகளாகப் பரிமாறப்பட அவர் காட்டும் முகபாவங்கள், ஜோகியின் சொந்தமக வரும் ஒருவர் பிரகாஷ்ராஜை கட்டிப்பிடித்து அவரகளது பானியில் வாழ்த்துச் சொல்வதும், பிரகாஷ்ராஜ் அல்லல்படுவதும், இரண்டு சிறுவர்கள் பிரகாஷ்ராஜைப் படுத்தும் பாடும் என நல்ல நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

இவர் யாரும்மா என பிரகாஷ் ராஜ் மகளிடம் கேட்க எங்க ஸ்கூல் வாசல்ல பெக்கரா இருக்காரு என சின்ன வயது திரிஷா சொல்ல என்னமோ பேங்க்குல மேனேஜர் மாதிரி சொல்றம்மா..என பிரகாஷ் ராஜ் சொல்லும் இடம்..

எல் கேஜி அட்மிஷனுக்கு பிரகாஷ்ராஜ் விழுந்து விழுந்து படிப்பதும் கடைசியில் கேப்பிடேஷன் பீஸ் வாங்கிக்கொண்டு குழந்தையை சேர்த்துக்கொண்டு விட “ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்மா.. ரெண்டு மூனு கேள்வியாவது கேளுங்க” என கெஞ்சுவதும், படாய்படுத்தி படிக்க வைத்த மனைவியை அவர் பார்க்கும் பார்வையும் ..


பிச்சைக்காரர்களை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்வதுபோல படம் எடுப்பது இப்போதுதான் என நினைக்கிறேன். அது உறுத்தாமலும் அவர்களைக் கேவலமாகக் காட்டாமலும் அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் பகுதியை. அவனுக்கு ஜோகியின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் வர அவர்களுக்கு திருமணமும் நடக்கும். நல்ல முதிர்ச்சியான மற்றும் பெருந்தன்மையான மனம் இயக்குனருக்கு.

நன்பனாக வரும் தலைவாசல் விஜய் அவருக்கான பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்பிக்கையூட்டும் வசனங்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறார்.

நல்ல திரைக்கதையுடன், அருமையான பாத்திரங்கள் மூலம் நம்மைக் கட்டிப்போடுகிறார்கள் அபியும், நானுமாகிய ராதாமோகன்.

அபியாக திரிஷாவும், நானுமாக பிரகாஷ் ராஜும், அபியின் அம்மாவாக ஐஷ்வர்யாவும், பிரகாஷ்ராஜின் நன்பனாக தலைவாசல் விஜயும் நடித்துள்ளார்கள்.

Wednesday, March 11, 2009

பிச்சை எடுக்காமல் உழைத்து உண்ணும் முதியவர்.





வேலை கிடைக்கவில்லை என நம்மூர் மக்கள் ரோட்டைத் தேய்க்கும் இந்நாளில் இத்தனை வயதான பின்னும் கைவண்டி இழுக்கும் பெரியவர் ..

இயற்கை எரிவாயுவினால் வளம் கொழித்துக்கிடக்கும் கத்தாரில்தான் இந்தக் கைவண்டி இழுப்பவர் இருக்கிறார்.

வண்டியை இப்படியும் ஓட்டலாம்



கத்தாரில் நடந்த ஒரு சாலை விபத்து.. எனது செல்லிடப்பேசியில் எடுத்தது..

Tuesday, February 24, 2009

எனது எண்ணங்கள்.

எனது எண்ணங்கள்.

சட்டத்துறைக்கும், காவல்துறைக்குமான தற்போது நடக்கும் மோதல் போக்கு விபரீதமானது. சட்டத்தை பாதுகாக்கும் வக்கீல்கள்தான் அதிக பட்ச வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

நம் நாட்டில் பொறுப்பின்மைக்கு தண்டனையே கிடையாதா.. குழ்ந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளில் தவறவிடவா பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ??? பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா?? இருப்பினும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன..

அந்நியன் படத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த குழ்ந்தையின் தகப்பன் கோர்ட்டில் சொல்லும் வாதங்கள் அபத்தமாகப் பட்டது.. கோர்ட்டில் இருக்கும் நீதிபதியே இத்தனை பேரையும் எப்படி தண்டிக்க முடியும் எனக் கேட்பார். அப்படியெனில் பேருக்கு எவரையாவது பலிகடாவாக்கி பிரச்சினையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் தான் நாமும், நமது நீதித் துறையும் இருக்கின்றோமா, அல்லது அப்படி வளர்க்கப்படுகிறோமா??

அல்லா ரக்கா ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். ஆனால் ஸ்லாம் டாக் மில்லியநேரை விட சிறப்பான இசைக்கோவைகளை இவர் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப்படமாக இருந்தால்தான் ஆஸ்கார் கிடைக்கும் என்பதாலும், இந்தியாவை இழிவு படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கே ஆஸ்கார் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விட்டமையால் இனி இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். நம்ம உலகநாயகனுக்கும் ஒரு பிடி கிடைத்தது போல இருக்கும்..

இனி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்ற உலக முக்கியமான கூத்துக்கள் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்டுகள் முதல் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள்.. இனி யாருடன் கூட்டு சேர்ந்தால் பிழைக்கலாம் என்ற கணக்கைப் போட்டு கூட்டணி அமையும். நேர்மையாவது, கத்தரிக்காயாவது.. பிளடி இடியட்ஸ். குடுத்த காசுக்கு நாய் மாதிரி வந்து ஒட்டுப்போடுவானுங்க பரதேசிங்க.. (இப்படித்தான் காசு கொடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்துக்கொள்வான்) நாமும் நமது கடமையைச் செய்யாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு யார் யார் எங்கெங்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என செய்திகள் படித்து அதிகம் சொத்து சேர்த்தவனுக்கு ஓட்டுப்போடுவோம்..

இணையத்தில் எழுதும்போது சற்றுப் பொறுப்பாக எழுத வேண்டும். இல்லையென்றால் சட்டம் தான் கடமையை செய்யும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். இதுவரை எழுதியதற்கு என்ன கணக்கு என அவர் சொல்லவில்லை. யாராவது அந்த எழுத்தை எடுத்துக்காட்டி கேசுபோட்டால் எடுப்பார்கள் போல..


காஷ்மீரில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற மாயை உண்டாக்கப்பட்டு அது திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்று யாசின் மாலிக்கின் சொந்தக்காரர் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்ததால் உடனடியாக போராட்டம்.. நம்ம வீட்டுப்பிள்ளைகள் குழாயில் விழுந்து இறந்தாலும், குண்டு வெடித்து இறந்தாலும் கேக்க நாதியில்லை. ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கொலைவழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இத்தனை நேர்மையாய் அரசு நடந்தாலும்

கான்பூர் ஐ.ஐ டி. மாணவர்கள் சாடலைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். தீப்பூச்சி என்ற பொருள்படும் ஜுக்னு என்ற இந்த செயற்கை கோளை இயற்கை அழிவுகளின் தகவல்களை சேகரிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியை கண்காணிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா என்னதான் கஷ்டத்தில் இருந்தாலும் இந்தியர்கள் எங்கும், எப்போதும் சொடைபோவதில்லை. வேலையிலாகட்டும், நிர்வாகத்திலாகட்டும், ஊழலில் ஆகட்டும். எப்போதும் எங்கும் பெஸ்ட் ..

அப்பப்ப இப்படி என்னத்தையாவது எழுதி வைக்கிறேன்.

ஜெயக்குமார்

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

போடு தாம்பாளம். போடு புழுக்க.. & கட்டு கயிறு, வெட்டு வெட்டருவா, சுடு விளக்கு..

ஒரு ஊர்ல ஒரு கஷ்டப்பட்ட குடும்பம் இருந்துச்சி. அம்மா, அப்பா காட்டு வேலைக்குப் போனாலும் சரியாக்கூட சாப்பிட முடியாத அளவு வறுமை. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன்கிட்ட அவங்கம்மா தம்பி இட்லி சுட்டுத்தரேன் அதைக் கொண்டுபோயி வித்துக் கசாக்கிட்டு வாடான்னாங்க.. அவனும் இட்லிய எடுத்துகிட்டு ஊர்ல இருக்குற குளத்தங்கரைக்கு வியாபாரத்துக்கு போனான். அங்க போயி ரொம்ப நேரம் ஆகியும் வியாபாரமே ஆகல. அதனால அவனோட அம்மா சுட்டுத் தந்த ஏழு இட்லியில ஒன்னத் திங்கட்டுமா, ரெண்டைத் திங்கட்டுமா, மூனத் திங்கட்டுமா, நாலத்திங்கட்டுமா, அஞ்சத் திங்கட்டுமா , ஆரத்திங்கட்டுமா, ஏழையும் தின்னுபுட்டா ராத்திரிக்கு என்ன செய்யுறதுன்னு சத்தமா சொல்லிகிட்டே யோசிச்சிருக்கான்..

அந்த கொளத்துல இருக்குற சப்த கன்னியர்களும், இவன் பெரிய ராட்சசனா இருப்பான் போல இருக்குதே அப்படின்னுட்டு அவனுக்கு காணிக்கையா ஒரு தாம்பாளத்த குடுத்தாங்க. அவன்கிட்ட கொடுத்து இத போடு தாம்பாளம்னு சொன்னா ருசி ருசியா சாப்பாடு போடும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.

அத எடுத்துகிட்டு பக்கத்துல இருந்த பாட்டி வீட்டுக்குப் போயி குடுத்து வச்சிட்டு குளிக்க போனான். போறப்ப மறக்காம பாட்டி, பாட்டி இத போடு தாம்பாளம்னு மட்டும் சொல்லிராத அப்படின்னு சொல்லிட்டுப் போனான. கெளவி இவன் இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்றானே இதுல என்னமோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சிகிட்டு அவன் போனப்புறம் போடு தாம்பாளம் அப்படின்னு சொல்லிச்சு. அம்புட்டுத்தான்.. சாப்பாடு வகையென்ன, சாம்பார் வகையென்ன, காய்கறி வகையென்ன, இப்படி சாப்பாடு அயிட்டமா வந்து குமிஞ்சிருச்சி. பாட்டி சாமர்த்தியமா அதை மறைச்சு வச்சிட்டு அதே மாதிரி இருக்குற இன்னொரு தாம்பாளத்த குளிச்சிட்டு வந்த நம்ம பயகிட்ட குடுத்துருச்சி. நம்ம பயலும் வீட்டுக்குப் போயி அம்மாகிட்ட நடந்தத சொல்லிட்டு போடு தாம்பாளம்னு சொல்லி இருக்கான். அதுதான் வெறும் தாம்பாளம் ஆச்சே. பேசாம இருந்திருக்கு.


மறுநாள் அதே மாதிரி அவனோட அம்மா இட்லி செஞ்சு குடுக்க அதே மாதிரி இவனும் ஒன்னத் திங்கட்டுமா அப்படின்னு ஆரம்பிக்க அதே போல சப்த கன்னியரும் வர இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டிய தர்றோம், அதுகிட்ட போயி போடு புழுக்க .. அப்படின்னு சொன்னா தங்கமும், வைடூரியமும் போடும் அப்படின்னாங்க.. நம்மாளு மறுபடியும் பாட்டி வீட்டுக்கு போயி வழக்கம்போல பாட்டி போடு புழுக்க அப்படின்னு சொல்லிராதன்னு சொல்லிட்டு குளிக்கப் போனான். பாட்டியும் போடு புழுக்கன்னு சொல்ல தங்கமும் வைரமுமா கொட்டுச்சு.. கெளவி அத மறைச்சு வச்சிட்டு சாதா ஆடு ஒன்ன குடுத்து விட்டுட்டா.. வீட்டுக்குப் போயி போடு புழுக்கன்னா அது புழுக்கையத்தன் போடுது.

மறுநாளும் அவனோட அம்மா இதேபோல இட்லி சுட்டுத் தர அதைக் கொண்டுபோய் விக்க மத்யானம் இதே மாதிரி ஒன்னத் திங்கட்டுமான்னு சொல்ல கன்னிமார்கள் வந்து இவனுக்கு மொதல்ல குடுத்த ரெண்ட வச்சிருந்தாலே இவனோட தலைமுறைக்கும் காணுமே .. இவன வேற யாரோ ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சிகிட்டு அன்னைக்கு ஒரு கயிறு, வெட்டருவா, ஒரு விளக்கு மூனும் குடுத்துவிட்டாங்க. கட்டு கயிறுன்னு சொல்லணும், வெட்டு வெட்டருவா ன்னு சொல்லணும் , சுடுவிளக்குன்னு சொல்லணும் அப்படின்னாங்க. நம்மாளு வழக்கம்போல கெளவி வீட்டுக்குப் போயி மறக்காம என்ன சொல்லக் கூடாது அப்படிங்கிறதையும் சொல்லிட்டு குளிக்கப் போனாரு. போய்ட்டு திரும்பி வந்து பாட்டி, பாட்டின்னு கத்துராப்ல.. கெளவிய ஆளையே காணோம்.. ஒரு மூலையில இருந்து உம்.உம்.உமுனு சத்தம் மட்டும் வருது.. அங்க பாத்தா கெளவி ஒரு பந்து மாதிரி சுருண்டு கிடக்கு..

நம்மாளு கெளவிய கயித்துக் கட்டுலருந்து அவுத்து விட கெளவி உண்மைய சொல்லி எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துருச்சி.

நம்மாளும் வீட்டுக்குப் போயி போடு தாம்பாளம்னு சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்பாடு சாப்டதில்லைன்னு சொல்றமாதிரி சாப்பாடு வருது..

அப்புறம் போடு புழுக்கைன்னு ஆட்டப் பாத்து சொன்னா அது தங்கமும், வைரமும், வைடூரியமுமா போடுது..

கட்டு கயிறு மேட்டர் என்னன்னு நம்ம ஆளுக்கு தெரியும். அதனால அத செஞ்சு பாக்கல..

அந்நேரம் பாத்து அவங்க நாட்டப் பாத்து எதிரி ராஜா படையெடுக்க.. உள்ளூர் ராஜாவுக்கு உதறல் எடுத்துருச்சி.. எதிரி நாட்டு ராசா எவ்வளவு பலசாலின்னும் தெரியும்.. அதனால வீட்டுக்கு ஒரு ஆளு போருக்குத் தயாராகணும் அப்படின்னு முரசு அறைஞ்சு சொல்லச் சொன்னாரு. இதக் கேள்விப்பட்ட நம்ம ஆளு போயி ராஜாவைப் பாக்க அனுமதி வாங்கி அவர்கிட்டப் போயி ராஜா நான் ஒரே ஆளு போதும், எதிரி நாட்டுப் படையவே கொளுத்திருவேன்னு சொல்ல நீ மட்டும் அப்படி செஞ்சுட்ட எம் பொன்னையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்தார்..

நேரா போர்களத்துக்கு போய் நம்ம ஆளு நிக்கிறார் அவனோட நாட்டு படைகள் நிக்க வேண்டிய இடத்துல.. எதிரி நாட்டு ஆளுங்க என்னடான்னா ஆனைபடை, குதிரைப் படை, காலாட் படைன்னு ஒரு பெரிய சேனை திரட்டி நிக்கிறாங்க.

போர் ஆரம்பம் அப்படின்னு எக்காளம் எடுத்து ஊதுன உடனேயே நம்ம ஆளு கட்டு கயிறு அப்படின்னு சொல்லி கயிற தூக்கிப் போட்டான.. அம்புட்டுத்தான். .. ஆன, குதுர, ஆளு எல்லாத்தையும் ஒரே சுருட்டா வாரி சுருட்டி ஒரு பந்து மாதிரி ஆக்கிருச்சி.

அடுத்து விட்டான் " வெட்டு வெட்டருவா " அப்படின்னு சொல்லி.. அம்புட்டுதேன், சும்மா காய்கறி வெட்டுற மாதிரி ஆளுக தலைய சீவிருச்சி அருவா.

அப்புறம் விட்டான் சுடு விளக்கேன்னு ஒரு சத்தம்..வெட்டிப் போட்ட எல்லாத்தையும் மொத்தமா எரிச்சி சாம்பலாக்கிருச்சி.

அவனோட ராஜாவுக்கு சந்தோஷம் தாளல.. இனிமே நீதாம்ப்பா இந்த நாட்டுக்கு ராஜா. உனக்கு என்னோட பொன்னையும் கட்டிவைக்கிறேன்னு சொல்லி கட்டி வச்சாரு.

அந்த கலியாணத்துக்கு எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போயிருந்தாங்கன்னு சொல்லக் கேள்வி.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு முற்றிற்று.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. முட்டா ராஜான்னு சொன்னாதான் சரியா வரும்.. அவனோட நாட்ல பகல்ல எல்லோரும் தூங்கனும்.. ராத்திரியில வேல செய்யணும்.. இந்த விதிமுறைய யார் மீறினாலும் கழுவிலேத்தி கொல்லும் தண்டனை தந்தாரு ராசா..

இப்படி போய்க்கிட்டிருந்தப்ப அந்த நாட்டுக்கு மூனுபேரு ராஜாவைப் பாத்து தங்களோட திறமைகள காமிச்சு வேலை வாங்குறதுக்காக வந்தாங்க.. நல்ல புத்திசாலி ஆளுகளும் கூட. ஊர்ல இருந்தவங்க இவங்ககிட்ட வந்து இந்த ராஜா பண்ற அநியாயத்தையும் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதான்னு ஏங்கிக் கிட்டிருப்பதையும் சொன்னாங்க. சரி, முட்டாப்பய போல.. இவன ஒழிச்சிற வேண்டியதுதான்னு மூணு பேரும் தீர்மானம் செஞ்சாங்க.

புதுசா ஊருக்கு வந்த இவங்க வழக்கம்போல காலையில எந்திரிச்சி சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க .. உடனே ராசாவோட ஆட்கள் வந்து உங்களுக்கு இந்த ஊர் சட்டம் தெரியாதா?? எப்படி நீங்க காலை நேரத்துல சமையல் செய்யலாம்னு கேக்க அப்படித்தான் செய்வோம் அப்படின்னு சொன்னாங்க வந்த மூணு பேரும். காவலாளிக ராஜாகிட்ட கூப்டுட்டுப் போக, ராஜா இந்த நாட்டு சட்டம் தெரியாம செஞ்சிட்டோம்னு சொல்லுங்க விட்டுடுறேன் அப்படின்னார். உடனே அவங்க மூணு பேரும் இல்ல ராசா தெரிஞ்சேதான் செஞ்சோம் அப்படின்னாங்க.

மகாராஜா எங்களுக்கு சீக்கிரம் சொர்கத்துக்குப் போகனும்னு ஆசை அதனால இப்படி செஞ்சோம் அப்படின்னாங்க. உடனே ராஜா இந்த மூணு பேரையும் கழுவில ஏத்துங்க அப்படின்னு உத்தரவு போட்டாரு.

மூணு பேரும் சந்தோசத்துல துள்ளிக் குதிச்சாங்க.. அதுல ஒரு ஆளு முன்ன வந்து மஹாராஜா என்னைத்தான் மொதல்ல கழுவுல போடணும் அப்படின்னு விண்ணப்பம் வச்சார். அடுத்தாளு வந்து இல்ல மஹாராஜா என்னையத்தான் போடனும்னு கேக்க.. மூனாமத்து ஆளு வந்து என்னையத்தான் போடனும்னு கேக்க ராஜா கொழம்பிப் போயி ஏம்ப்பா கழுவுல சாகுறதுக்கு முந்துறீங்கன்னு கேக்க, வந்திருந்தவங்க மஹாராஜா இன்னைக்கு யாரெல்லாம் கழுவுல ஏறி சாகுராங்களோ அவங்கல்லாம் நேரா சொர்கத்துக்கே போயிருவாங்க அப்படின்னு சொன்னங்க. இந்த ராசாவோட கொடும பொருக்கமாட்டாம இருந்த மந்திரி மார்களும் ஆமா ராசா நீங்கதான் சொர்கத்துக்கு செல்ல தகுதியான ஆளுன்னு ஏத்திவிட மனுஷன் சந்தோசமா உசுர விட தயாராயிட்டாரு. உடனே ராஜா அந்த மூணு பேருக்கும் கழுவுல ஏத்துற தண்டனைய ரத்து செஞ்சுட்டு என்னையத்தான் மொதல்ல போடணும்.. நான்தான் மொதல்ல சொர்கத்துக்கு போவேன்னு சொல்ல மக்களே எல்லா ஏற்பாடும் செஞ்சு ஊரே பாக்க ராசாவ கழுவில ஏத்துனாங்க.


ஊரே சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.. அந்த மூணு பேரையும் இனிமே நீங்கதான் எங்க ராஜா அப்படின்னு ஊர்க்காரங்களும், பழைய ராஜாவோட மந்திரிகளும் சொல்ல அவங்களும் அத ஏத்துக்கிட்டு ராசாவ இருந்து நாட்ட நல்லபடியா ஆண்டாங்க.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன முதல் கதை முற்றிற்று .

Monday, January 26, 2009

இந்திய குடியரசு தினம் - கத்தார்

இந்திய குடியரசு தினம் - கத்தார்.




குடியரசு தினம் வழக்கமான் உற்சாகத்துடன் இன்று கத்தாரின் இந்தியன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இந்திய தூதுவர் பஹ்ரைன் சென்றுவிட்டதால் சார்ஜ் டி அபெர்ஸ் திரு. சஞ்சீவ் கோக்லி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

பள்ளிக்குழந்தைகள் மற்றும் கலந்து கொண்ட அனைவரும் தேசியகீதம் பாடினர். அதன் பின்னர் அசோகா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. சஞ்சீவ் கோக்லி குடியரசுத்தலைவர் உரையை வாசித்தார். அதன் பின்னர் டெல்லி பப்ளிக் ஸ்கூல் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களை இந்தியில் பாட பின்னர் குடியரசு தின கேக்கை வெட்ட கூட்டம் இனிதே முடிவடைந்தது.

சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சில புகைப்படங்கள் கீழே










ஜெயக்குமார்

Sunday, January 25, 2009

நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்


நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்

சின்ன வயதில் என்னை அதிக பயத்துக்குள்ளாக்கிய பேய்க்கதை இது. வசனம், இயக்கம், எல்லாம் எனது அண்ணன்.

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் காரைக்கேணி. அந்த ஊருக்கு எப்போதும் சைக்கிளிலும், நடையிலுமாக ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பாதையில் எங்குமே விளக்குகள் இருக்காது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த முத்தையா அண்ணாச்சி இரவு காரைக்கேணியிலிருந்து கல்லுப்பட்டிக்கு வரும் வழியில் யாரோ பின்னால் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டதுபோல இருந்ததாம்.. ஏய் யாருப்பா அது, யாருப்பா அதுன்னு முத்தையா அண்ணாச்சி கத்திக்கிட்டே வேக வேகமா அழுத்திகிட்டு கல்லுப்பட்டி எல்லை வரைக்கும் வந்துருக்காரு. அப்புறமா கொஞ்சம் வெளிச்சம் உள்ள் இடம் வந்த உடனே திரும்பிப் பாத்தா யாரையும் கானல.. ஆனா, ஒரு மொரட்டு ஆள வச்சு மிதிச்சிகிட்டு வந்த மாதிரி இருந்திருக்கு அவருக்கு... அப்புறம்தான் தெரிஞ்சிச்சி அங்க பேய் நடமாட்டம் இருக்குமாம்...அதுக்கப்புறம் ராத்திரி ரொம்ப நேரம் ஆச்சிருச்சின்னா எங்க வீட்லையே இல்லன்னா வேற எங்கையாச்சும் படுத்துட்டு கோழிகூப்ட ஊருக்குப் போவாரு. இத முத்தையா அண்ணாச்சியும் எங்கிட்ட சொல்லி இருக்காரு..

அதுக்கப்புறம் இதே மாதிரி இன்னோரு கதையக் கேட்டேன்.. இப்பையும் எங்கண்ணந்தான் இந்தக் கதையச் சொன்னாரு..

யாரோ ஒரு ஆளு ராத்திரி பதினோருமனிவாக்குல சைக்கிள்ள போய்க்கிட்டே இருந்திருக்காரு.. அப்ப அண்ணே பின்னாடி ஏறிக்கிரட்டுமா அப்படின்னு கேக்க இவரும் சரிப்பான்னுட்டாரு.. அப்புறம் பின்னாடி இருந்த ஆளு அண்ணே கடல சாப்பிடுறீங்களான்னு கேட்டு சைக்கிள் ஓட்றவருக்கு குடுத்துருக்காரு. கையில பாத்தா எல்லாமே மனுசப்பல்லு.. அய்யோன்னு கத்திக்கிட்டே திரும்பிப் பாத்திருக்காரு.. சைக்கிள் பின்னாடி யாருமே இல்ல.. கையிலையும் மனுசப்பல்லைக் காணோம்.

இது தவிர,

எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டு சந்துல லச்சுமின்னு ஒரு பேய் சுத்திகிட்டு இருக்கு ராத்திரி அது போற வழியில படுத்தா அப்படியே தூக்கி வீசிரும்,

கெனத்துக்குள்ள ஒரு சின்னப்புள்ள தினமும் இறங்கிப் போகுது.. அது பக்கத்துல இருக்குற புளிய மரத்துல இருந்துதான் வருது...

இதுமாதிரி எங்க ஊர்ல கேக்காத பேய்க்கதையே இல்ல.. அவ்வளவு கேட்ருக்கேன்.


ஜெயமோகனின் பன்முக ஆளுமை மற்றும் எழுத்தில் அவரது வீச்சு குறித்த விரிவான அலசல் திரு.வெங்கட் சாமிநாதன் முதல் நேற்றைய வலைப்பதிவர்கள் வரை அலசப்பட்டு விட்டது. புதிதாய் சொல்ல ஏதுமில்லை, நமது காலகட்டத்தில் வாழ்கின்ற ஒரு இலக்கிய மற்றும் பன்முக ஆளுமை என்பதைத்தவிர. அவரது சமீபத்திய கதைகளான , மத்தகம், ஊமைச் செந்நாய், அனல்காற்று தொடர், மற்றும் பல கதைகளும், கட்டுரைகளும் அவரது வலை வாசிப்பாளர்களுக்காகவே எழுதியவை. அழகான நடையுடன், வாசிப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வை அளிப்பவை அவரது கட்டுரைகளும், கதைகளும், நாவல்களும். அவர் எழுதி வாசிக்காமல் விட்டவை பல.. உண்மையில் அவரது எழுத்து வேகத்துக்கு வாசிப்பாளனால் ஈடு கொடுக்க முடியாது என்பது அவரது வலைப்பதிவை வாசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். அவ்வளவு விஷயங்கள் நமக்குச் சொல்ல வைத்திருக்கிறார் ஜெயமோகன், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்.

அந்த வகையில் இந்த நிழல் வெளிக்கதைகளும் இன்னொரு வகையான இனிமையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு.

பேய்க்கதை அரசன் பி.டி சாமி என்றொரு ஆசாமி இருந்தார். அவருக்குப்பின்னர் பேய்க்கதைகளை படிக்கும் பழக்கத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வைத்திருந்தேன். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி தற்போது படித்து முடித்த நிழல்வெளி கதைகள் பற்றி எனது எண்ணங்கள்..

இயக்குனர் லோகிததாசுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகம் ஒரு அருமையான பேய்க் கதைகளின் தொகுப்பு.

இமையோன் என்ற கதையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாபமிடப்பட்ட அரசகுலப் பெண்ணின் தீராத மோகம் தான் கரு. வாழ்க்கையில் தீராத ஆசைகள் கொண்ட ஒரு ஆன்மா தனது ஆசைகள் அடங்கும் வரை ஆவியாய் அலையும் என்ற நமது புராதன நம்பிக்கைதான் கதைக் களன். அதைப் பலவித சூழ்நிலைகளுடனும், உள்ளூரில் புழங்கும் செவி வழிக்கதையிலும் புகுத்தி சிறந்ததொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

வர்ணனைகளும், சூழலும், கதை மாந்தர்களும், எல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றமும், கதை சொல்லும் விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள எளிமை படிப்பதை நம்பும்படியாக்குகிறது. அதாவது பேய் இருக்கிறது என நம்புவோருக்கு..

தன்னிடம் போகம் கொள்ளுவதாக நினைக்கும் ஒருவரும்.. இறக்கும் தருவாயில் அந்த கதையை அவர் இன்னொருவனிடம் சொல்ல அவனுக்கும் அதேபோல அனுபவம் ஏற்படுவதும் அதை சக மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கும் அளவு அவர்கள் அந்த ஆவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் உறவும்.. நல்ல விதமாய் சொல்லப்பட்டுள்ளன.
ஒருமுறை ஒருவனைப்பிடித்த பேய் அவனை அனுபவிக்க தொடர்ந்து வரும் என்பது போன்ற நம்பிக்கைக்கு லாரி ஓட்டுனராக வரும் ஒருவனது கதையிலும் அந்த ஆவியின் நம்பிக்கையால் இருவரது சாவுக்கு அவன் காரணமாய் அமைவதும் நடக்கின்றன.

இமையோன்
பாதைகள்
அறைகள்
தம்பி
யட்சி
ஏழுநிலைப் பந்தல்
இரண்டாவது பெண்
குரல்
ஐந்தாவது நபர்
ரூபி

என மொத்தம் பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப்புத்தகம். கிராமங்களில் சாயந்திரம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரெண்டு,மூனு குடும்பங்கள் சேர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசும்போது கேள்விப்பட்ட செவி வழிச்செய்திகளை கதைகளாக்கும் உத்தி இது என நினைக்கிறேன். காதால் கேட்ட விஷயங்களை கதையாக மாற்றியமைக்கும் உத்தியில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயமோகன்.


விரிவான வர்ணனைகளும், நிஜ அனுபவங்களுக்கு நெருக்கமாக வாசகர்களை இட்டுச் செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பனுபத்தைக் கொடுக்கும். அவசியம் படியுங்கள்..

ஜெயக்குமார்

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.





இந்தியா என்றொரு நாடுண்டு ..அதில் ஏலம் கிராம்பு பெறுவதுண்டு.. பொன்னும் பொருளும் மிகவுண்டு .. அதன் போக்கறியாதார் பலருண்டு. எனப்பாடினான் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி பாரதி.

இன்று இந்தியா அவன் கனவு கண்ட சுதந்திரமும் அடைந்து, குடியரசாக மலர்ந்து ஜனநாயகம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அவன் கனவு கண்ட வலிமையான இந்தியாகவும் ஆகி வருகிறது. இந்த கட்டுக்கோப்பைக் குலைத்து நாட்டைத்துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் பாரதியின் பாடலே பதில்..

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள எங்கள்தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

ஐயா!

பேயவள் காண் எங்கள்தாய் - பெரும்
பித்துடையாள் எங்கள்தாய்
காயழல் ஏந்திய கையன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள்தாய்....

இது ஏதோ கவியின் கனவு இல்லை. 'நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா! தடையற்ற தெய்வத்தின் வார்த்தை! இது சாதனை செய்க பராசக்தி!'

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

ஜெயக்குமார்.

போட்டோ உதவி.. Friend Cuttack

Thursday, January 15, 2009

மேட் இன் கத்தார் - பொருட்காட்சி




கத்தாரிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான பொருட்காட்சி தோஹா கண்காட்சி திடலில் நடைபெற்றது. அதில் கத்தாரின் இளவரசர் கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக ..

ஜெயக்குமார்

Thursday, January 8, 2009

கத்தார் - சில புகைப்படங்கள்



மணற்குன்றுகளில் விளையாடும் மணல் பைக்குகள் மற்றும் ஃபொர் வீல் டிரைவ் வாகனங்கள்.




மாலை நேரச்சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்.




சுத்தமான கடற்கரை.



கடலலைகள் செய்த மாயம்.



இயற்கை வரைந்த கோலம்.

Sunday, January 4, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம்.

ஒரு பக்கா தமிழ் சினிமா இயக்குனரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி திரையுலகில் நடக்கும் அபத்தங்களையும், என்னென்ன கேணத்தனங்கள் சாத்தியம் என்பதையும் சில வித்தியாசமான முடிச்சுகளுடன் இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் பாரதிராஜா.
என இனிய தமிழ் மக்களே என்ற இருகை கூப்பிய பாரதிராஜாவாக இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் செய்துகொள்கிறார்.

நானா படேகரின் முதல் தமிழ் படம் என நினைக்கிறேன் இது. ஒரு முன்னணி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது இவரது நடிப்பால்.

கதை.. முழுதும் சொன்னால் சுவாரசியம் போய்விடும்.. எனவே ஒரு சிறுகுறிப்பு மட்டும்..
முன்னணி இயக்குனரான ரானா ( நானா படேகர்) ஒரு perfectionist. அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடிக்க மறுக்கும் நடிகையை தூக்கிவிட்டு புதிய நாயகியை தேடுகிறார். அதன்பின்பு திஷ்னா என்ற ( ருக்மிணி) நடிகையை வைத்து படத்தை தொடர்கிறார் ரானா. அந்த படம் முடிவதற்குள் மர்மமான முறையில் இருவர் கொல்லப்படுகின்றனர். மிக கறாரான பேர்வழியான ரானா இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிசுக்கு வர விசாரணையில் உண்மை வெளிவருகிறது. நம்ம அர்ஜுன் தான் போலிஸ் ஆபிசர் ( விக்ரம் வர்மா) கவிதை எழுதும் பெண்மணியும், ராணாவின் மனைவியாக ரஞ்சிதாவும் உண்டு.

நானா படேகர் :-

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் நானா படேகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். வாழ்வதெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் செய்யட்டும். கிரேனில் அமரும் விதம், கட்டளைகள் பிறப்பிக்கும் விதம், அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி என அட்டகாசமாக படத்தில் வருகிறார். அதே ஐந்து நாள் தாடி, ஜீன்ஸ், ஒரு அலட்சியமான பார்வை என கலக்குகிறார்.


ராணாவுக்கு பெண்கள் விஷயத்தில் மோகம் என்பதைப்போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு உருவாக்க ரஞ்சிதா சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் போடும் சண்டை, அது முடிந்த பின்பு அவர் நாயகியிடம் நடந்து கொள்ளும் விதம், நாயகியிடம் அத்துமீற நினைப்பவர்களிடம் அவர் காட்டும் கடுமை ஆகியன.


படத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்லவும் ரானா மீது சந்தேகம் வர காரணமாகவும் இந்த நிகழ்ச்சிகள் உதவுகிறது. மற்றபடி பீப்பாயாக இருக்கிறார் ரஞ்சிதா..

ரானா ஒரு perfectionist எனக்காட்ட அவர் வீட்டில் நடந்துகொள்வது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காட்டும் தேவையற்ற கடுமை, எல்லாம் சற்றே நாடகத்தன்மையுடன் இருக்கிறது. இது இயக்குனரின் பலவீனம்.

மற்றபடி விவேக் மதுரை என்னும் பேரில் வந்து சொறிந்துவிட்டுப் போகிறார். திரைப்பட தயாரிப்பாளரின் நிலையும், அவரது மகன்கள் நடந்துகொள்ளும் விதமும், இயக்குனர் மணிவண்ணன் நடித்துள்ள பகுதியும் இயல்பாய் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

த்ரிஷ்னாவாக வரும் ருக்மிணி மிக நன்றாக செய்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்புக்கு அவர் அதிகபட்ச உழைப்பைக்கொடுத்து அனாயாசமாக சமாளித்திருக்கிறார்.

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் அர்ஜுன் இந்த படத்தில் சி.பி.ஐ ஆபிசராக அழாகாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பழைய பாரதிராஜா இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வெற்றிப்படமாக அமையவாய்ப்புக்கள் மிகக்குறைவு. நிச்சயமாக பழைய பாரதிராஜாவாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாரதிராஜாவின் நல்லபடங்களின் வரிசையில் பொம்மலாட்டமும் சேரும்.


ஜெயக்குமார்

ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை ( Shall we dance - 2004)




ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை


2004ல் வெளிவந்த சினிமா இது.. இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது.
நிறைவான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு ( ரிச்சர்ட் கேர்) இன்னும் எதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது. அதை கண்டடையும் ஒருவனது வாழ்க்கையே ஷல் வி டான்ஸ் என்ற இந்த ஆங்கில திரைப்படம்.

மனைவு மற்றும் மகளுடன் வாழும் கதாநாயகனுக்கு தினமும் வேலைக்குச் செல்லுதல், வீடு திரும்புதல் இந்த தொடர் ஓட்டம் போரடிக்கிறது. சுவாரசியமாய் எதாவது செய்ய விரும்புகிறான், தினமும் ரயிலில் சென்று வரும் பாதையில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி தென்படுகிறது. அதில் ஒரு சோகமான முகமும் தென்படும். நாயகனும், அந்த சோகமான முகம் கொண்டவளும் ( Jenifer Lopez) தினமும் கண்களால் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த பால் ரூம் டான்சை ஏன் நாம் கற்றுக்கொள்ளக்கூடாது என நினைக்கிறான். இணையத்தில் இந்த நடனம் கற்றுக்கொடுக்கும் பள்ளியை தேடி பின்னர் தான் தினமும் போகும் வழியில் காணும் பள்ளியிலேயே சேர்கிறான்.

அந்தப் பள்ளியில் சேர்ந்த உடனேயே ஒரு மாணவனின் குதூகலம் தொற்றிக்கொள்கிறது. அலுவலகத்திலும் அவனது கால்கள் நடனமிடுகிறது. அங்கு நடனம் கற்றுத்தரும் பள்ளியில் வேலைசெய்யும் பாலினா ( Jenifer Lopez) உடன் சகஜமாக உரையாட நினைக்கிறான். ஆனால அவளோ நாயகனை எட்டவே வைக்கிறாள். மாணவர்களுடன் சோஷியலைஸ் செய்வதில்லை என்கிறாள். அவளுக்கு பெரிய நடனப்போட்டியில் கலந்து கொண்டு தகுதி சுற்றுக்குக் கூட வரமுடியாமல் போன சோகத்துடன் எப்போதும் இருக்கிறாள். இதை நாயகனுக்கு எழுதும் ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறாள் கடைசியில்.

இந்த இடைவெளியில் ம்னைவி பெவெர்லி க்ளார்க் ( Susan Sarandon) கணவன் மீது சந்தேகம் வருகிறது. எங்கு செல்கிறான்?? என் தற்போது ஒருமாதிரியாக நடந்து கொள்கிறான் என்ற சந்தேகத்திற்கு விடைகான உளவு நிறுவனத்தை அணுகி உதவி கேட்கிறாள். அவர்களும் நாயகனைப் பின்தொடர்ந்து அவன் நடனப்பள்ளியில் சேர்ந்திருப்பதையும், வேறு ஒரு சிக்கலும் இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். நடனப்பள்ளியில் தனது கணவன் சேர்ந்திருப்பதை நம்ப முடியாமல் என்ன காரணமாய் இருக்கும் என கேட்கிறாள். Desperation தான் காரணம் என தெரிகிறது.

தன்னிடம் கூட கூறாமல் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன என அவள் குழம்புகிறாள்.
இப்படியே போகிறது. ஒருநாள் நடனப்பள்ளிகளுக்கு இடையேயான பால்ரூம் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்கிறான் நமது நாயகன். மிக சிறப்பாக நடனமாடுகிறான். அங்கு நாயகனது மனைவியும், மகளும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். ஆர்வமிகுதியில் அவனது மகள் அவனது போட்டி என்னை சத்தமாக கூறி கவனத்தை ஈர்க்கிறாள். இதனால் கவனம் சிதறும் நாயகன் போட்டியில் தோற்கிறான். இதனிடையில் என்னிடம் என் கூறவில்லை என மனைவியும் கடிந்துகொள்கிறாள். சரி, இனிமேல் நான் இந்த நடனம் கற்றுக்கொள்ள போகவில்லை எனக் கூறிவிடுகிறான்.

இதனிடையில் நடனம் கற்றுக்கொடுத்த பள்ளியில் இருந்த ஆசிரியை பாலினா ( Jenifer Lopez) நடனத்தில் மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்கிறாள். . அதற்கான பிரிவு உபச்சார விழாவில் உங்களுடன் நடனமாட விரும்புகிறேன்.. வருவீர்களா என கேட்டு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்புகிறாள். அதைப்படிக்கும் நாயகனின் மனைவி உண்மையைப் புரிந்துகொண்டு கணவனுடன் அங்கு செல்கிறாள். அங்கு அவளது கணவன் எவ்வளவு உற்சாகமாக் இருக்கிறான் எனக் காண்கிறாள். அவளுக்கும் ஆவல் தொற்றிக்கொள்கிறது. அவளும் அந்த பள்ளியில் சேர்வதுடன் படம் நிறைவுறுகிறது.

இந்த படத்தில் பின்னணி இசையாக வரும் பால்ரூம் டான்சுக்கான இசை அப்படியே மனதை அள்ளுகிறது. ஒரு தெளிந்த நீரோடையைப்போல நகர்கிறது கதை.

நடனப்பள்ளியில் நடன ஆசிரியையாக வரும் ஜெனிபர் லோபசுக்கும், ரிச்சர்டு கெரெவுக்கும் இருக்கும் அந்த நட்புகலந்த உணர்வுகளும் அவர்களது ஒத்த என்ன அலைவரிசையில் இருவரும் இணைந்து ஆடும் நடனங்கள் அழகோ அழகு. நாமும் அங்கு சென்று ஆடமாட்டோமா என நினைக்கவைக்கிறது அங்கு இருக்கும் சூழ்நிலையும், நட்புகளும்.
தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டு வாழும் ஜெனிபர் லோபஸ் மெல்ல மெல்ல க்ளார்க்கின் கல்மிஷமில்லாத உண்மையான நட்பைக்கண்டு அவனுடன் நட்புகொள்கிறாள். க்ளார்க்கிடம் முதலில் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறாள்.
நடனப்பள்ளியில் அவனது உடன் படிக்கும் மாணவர்களாக ஒரு குண்டுப்பையனும் நடிக்கிறான். அவனுக்கும் அவனது ஆசிரியைக்குமான உறவுகள், அவனை அவனது உடல் வேர்வை நாற்றத்திற்க்காக வெறுக்கும் அவனது ஆசிரியை பின்னர் அவனது நிலையைக்கண்டு அவனுக்கு சொல்லித்தருகிறாள்.

இன்னும் மகளாக நடித்திருக்கும் பெண் தனது அப்பா அறைக்குள் நடனம் ஆடுவது கண்டு ஆச்சரியப்படுகிறாள். அம்மாவிடம் தெரிவிக்கிறாள்.

ஆங்கில சினிமாவில் வழக்கமாக காணும் அடிதடி காட்சிகளோ, அனாவசியமான முத்தக்காட்சிகளோ இல்லாத அருமையான உறவு முறையையும், நல்ல நட்புகளையும், அழகான இசையும் கொண்டுள்ள ஷல் வி டான்சை ஒரு கவிதை என நான் நினைக்கிறேன்.
மனதின் நுண்ணிய உணர்வுகளை இந்த திரைப்படத்தில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்.


ரிச்சர்டு கெரெயை தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். நம்மூர் ஷில்பா ஷெட்டியை மேடையில் முத்தமிட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டவர். புத்த மதத்தை தழுவியவர்.

ஜெயக்குமார்

Friday, August 15, 2008

இந்திய சுதந்திர தினம்.

கத்தாரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்.


சுதந்திர தினம் இந்திய தூதரகத்தின்கீழ் வரும் இந்தியன் கல்சுரல் செண்டரில் நடைபெற்றது. கத்தாருக்கான இந்தியதூதர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மூவர்னக்கொடியை ஏற்றிவைத்தார்.






அதன் பின்னர் இந்திய பிரதமரின் உரையை தூதுவர் படித்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் கூட்டுப்பாடல் (இந்தியில்) நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கம்போல கேக் வெட்டும் வைபவம் நடைபெற்றது.






இந்திய தூதரகத்தின் புதிய வலைப்பக்கம் இந்தியதூதரால் திறந்துவைக்கப்பட அதன் செயல்பாடுகள் மற்றும் விவரனங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் இனிய சிற்றுண்டியுடன் இந்திய தூதரகத்தின் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்திய பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

எல்லாதரப்பு மக்களும் கலந்துகொண்டது நல்ல விஷயம். காலை 7.30 மணிக்கு அதுவும் வெள்ளிக்கிழமை வருவதென்பது ஆச்சரியம்தான்.

கத்தாரிலிருந்து வெளிவரும் கல்ஃப் டைம்ஸ் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.



















வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

Friday, August 1, 2008

ரஜினியின் வள்ளி பாகம் 2 - குசேலன்







படம் ஆரம்பிக்கும்போதே ரஜினியின் செருப்புக்கால் ஆசிர்வாதம் இல்லாத படமாக இருக்கிறதே தேறுமா என்ற சந்தேகம் இருந்தது.. அதை நிரூபித்தது முழுப்படமும்...

இன்று குசேலன் பார்க்கப்போகிறோம் என்று அளவுக்கதிகமான சந்தோஷத்துடன் சென்ற ரஜினி ரசிகர்களை ஏமாற்றி அனுப்பிவிட்டார் பீ.வாசு.


ஆரம்பத்தில் அழகான கிராமமும், மீனாவும், பசுபதியும் நன்றாய்த்தான் ஆரம்பித்தது. அதன் பின்னர் அந்த கிராமத்தைவிட்டு படம் நகரவேயில்லை. மீனா மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாய் பிரமோஷன் பெற்றிருக்கிறார். ஆனால் அதே மீனா. பசுபதியை அதிகபட்சமாக நடிக்க சொல்லி இருப்பார்கள் போல.. மனுஷன் படம் முழுக்க இப்போ அல்லது அப்போ என அழுகைக்காக தயாராய் இருக்கிறார். பசுபதியின் குழந்தையாய் வரும் பெண் " எப்படிப்பா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்க??" என்று ஒரு கேள்வி வேறு. அழகான கிராமத்து ஏரிக்கரையில் டால்பின் துள்ளி விளையாடுவதெல்லாம் ஓவர். வடிவேலு வழக்கம்போல் வெடிவேலு. ரஜினியை வடிவேலு சந்திக்கும் இடம் அருமை. "நீதான் பாக்குற நீதான் பாக்குற" என வடிவேலு சந்தோஷத்தின் உச்சியில் தன்னைத்தானே கூறிக்கொள்வது இன்னும் கொஞ்ச நாள் மனதில் இருக்கும்.

பணக்கார ரஜினியை ஏழை பசுபதி சந்திப்பது என்ற ஆலஇலையின் பின்புறம் எழுதக்கூடிய கதையை மூன்று மனிநேரமாக இழுத்தடித்து அதில் பாசம், வறுமை, குடும்பம், நட்பு, நகைச்சுவை, கவர்ச்சி எல்லாம் கலந்துகட்டி ஒரு கூட்டாஞ்சோறு ஆக்கி இருக்கிறார்கள். அதிலும் பசுபதியை வைத்து ஊரார் பாடும் பாட்டில் கவர்ச்சி என்ற பேரில் ஒரு கேவலமான நடனம்.

இப்போது வரும் ரஜினி படங்களில் ரஜினியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்.

சிவாஜியில் ஷ்ரேயாவை தோலுரித்தார்கள்.. குசேலனுக்கு நயன்தாரா.. வடிவேலுவுக்கு அவர் அளிக்கும் தர்ம தரிசனமும், அருவியில் குளிக்கும் பாடலும் அவரது அளவுகள் பற்றிய சந்தேகமிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த கையேடு.

கடைசி முப்பது நிமிடங்களில் வரும் ரஜினி கலங்க வைக்கிறார். ஆனால் அதற்காக மூன்று மணி நேர தண்டனையை தாங்க தயாராய் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கலாம்.. ஏகப்பட்ட செட்டிங்குகள், அனாவசியமான சந்திரமுகி ரீமிக்ஸ், ஒரு பாட்டு இதெல்லாம் வைத்தாலே எல்லோரும் பார்ப்பார்கள் என பீ.வாசு நம்பலாம்.. ரஜினி நம்பலாமா???

இது ரஜினி படமும் அல்ல.. நூறு சதவீதம் பசுபதி படமும் அல்ல.. பீ.வாசுவின் அக்மார்க் மசாலா படம். சந்திரமுகி என்ற ஒரு வெற்றியை தந்ததற்காக பீ.வாசுவை அருகில் வைத்திருக்கும் ரஜினி யோசிக்க வேண்டிய நேரம் இது.

மிக மிக சுமாரான திரைப்படத்தை திரை கொள்ளாத அளவுக்கு நடிகர்களைக் கொண்டு நிரப்பி இருக்கிறார்கள். ரஜினி வாழ்வளித்தோர் பட்டியலாக அது இருக்கலாம்.

புது இசையமைப்பாளர் பற்றி ரஜினி படப்பிடிப்பு நேரத்தில் உதிர்த்தது சரியே.. (யாருங்க இந்த சின்னப்பையன்??) எந்த பாட்டுமே மனதில் நிற்கவில்லை.. பின்னனி இசையும் சுமார் ரகம்.

ரஜினியும் பசுபதியும் எப்படி நண்பர்களானார்கள் என்ற கொசுவத்தி இல்லாமலிருந்தது ஒரு ஆறுதல்.

இந்த படத்தைப் பார்க்கும்போது ரோபோ பற்றிய பயம் அதிகரிக்கிறது.

படம் முழுக்க ரஜினி நுழைந்ததிலிருந்து இறுதிவரை அவரை ஆள் மாற்றி ஆள் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், நேர்த்திக்கடன் மாதிரி...





கலியான வீட்டிற்கு வருவதுபோல் வந்த கூட்டம் (தோஹாவில்) படம் முடிந்து துக்க வீட்டிலிருந்து செல்வதுபோல சென்றனர். இன்று இரவு இரண்டு காட்சிகளுக்கும் இரவு 8 மணிக்கே அரங்கு நிறைந்துவிட்டது. நாளைமுதல் எப்படியோ..






பாவம் பசுபதி.. அடுத்து ஒரு நல்ல படத்தில் நடித்து பாவத்தை போக்கிக்கொள்ளவேண்டும்..

ரஜினி சார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

Wednesday, July 23, 2008

தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை



















மேலே உள்ள படத்தில் உள்ள வல்லூறு அந்த குழந்தை சாவதற்காக காத்திருக்கிறது. இப்புகைப் படத்தை எடுத்தவர் மூன்றே மாதத்தில் மன அழுத்தத்தில் இறந்துபோனதாக தெரிகிறது.



தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க
- தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று


குமரகுருபரரின் இந்த வாக்கை அடிக்கடி நமக்கு மெய்ப்பிக்க வேண்டி இந்த ஆப்பிரிக்க நாடுகள் இருக்கின்றனவோ என நினைக்கத்தோன்றுகிறது. நம்மில் எத்தனை பேர் எத்தனை தடவை வீட்டிலோ அல்லது போன இடங்களிலோ "இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா" எனக்கூறி இருக்கிறோம்?? ஆனால் உலகில் எத்தனையோ இடங்களில் ஒருவேளை உணவாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலர்.

இங்கு இணைத்துள்ள படங்களைப்பார்க்கும்போது கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவது நாம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

கத்தாரில் கூட ஸ்பான்சர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ நேபாளிகளையும், பங்களாதேஷிகளையும் பேப்பர் பொறுக்க காணும்போது மனதில் மண்டும் சோகம். எனது நிஜமான எண்ணங்கள், உணர்ச்சிகள் இவை. பெப்சி டப்பாக்களும், பாலிதின் கவர்களும் பொருக்கி அதில் கிடைக்கும் காசும், மற்றும் எங்கெல்லாம் வேலைகிடைக்குமோ அங்கெல்லாம் வேலைசெய்தும் தனது உணவுக்கு உயிரைகொடுத்து வேலைசெய்வோர் பலர். இவர்களை நம்பி ஊரில் இருக்கும் குடும்பங்கள் என்ன ஆகும்?? எப்படி சாப்பிடுவார்கள்???

எப்போது வேலைக்கு வெளியே வந்தேனோ அப்போதே சாப்பாடைகுறை சொல்வதை நிறுத்திக்கொண்டேன். என்ன கிடைக்கிறதோ அதையே உண்ணவும் கடைசி பருக்கை வரை சாப்பிடவும் பழகிக்கொண்டேன். பிடிக்காத காய்கறிகளை வாங்குவதை நிறுத்தி பிடிக்கும் பொருட்களை வாங்கி முழுதும் பயன்படுத்தும் மனநிலைக்கு எப்போதோ மாறியாகிவிட்டது. வீணாய் செலவழித்த பணத்தை நல்ல வழியில் சேமிக்கப் பழகி இருக்கிறேன்.

இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் நமக்கு நாமே சாப்பாட்டையும், தண்ணீரையும் வீணாக்கமாட்டேன் என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். ஒவ்வொருமுறை அனாவசியமாய் குழாயைத்திறந்து வைத்துக்கொண்டு பல்துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் யாருக்கோ கிடைக்கவேண்டிய தண்ணீரை நாம் வீணாக்குகிறோம் என்ற எண்ணம் மனதில் தைக்க வேண்டும். பள்ளியில் படிக்கும்போது கேட்ட செய்தி இது. காந்தியடிகள் கங்கைக்கரையில் பல்துலக்கும்போதுகூட தேவையான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்து பல்துலக்கினாராம். கூட இருந்தவர்கள் எப்படியும் கடலுக்குத்தானே சென்று சேர்கிறது அதை சற்று தாராளமாய் பயன்படுத்தினால் என்ன எனக் கேட்டபோது பிறருக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை நான் எடுத்துக்கொள்வது எப்படி முறையாகும் எனச்சொன்னாராம். காந்தியடிகள் சொன்ன "தேவைக்குமேல் வைத்திருப்பவன் திருடன்" என்ற கூற்றும் இன்றைக்கு உண்மையாய் கண்கூடாய் காணும் நிலையில் இருக்கிறோம்.

குறைந்தபட்சம் சிந்திக்கும் கூட்டம் என நினைக்கும் நாம் இதைப்பின்பற்றலாமே!!!!

அன்புடன்,

ஜெயக்குமார்

Sunday, July 13, 2008

75 ரூவாயும் கல்விச்சுற்றுலாவும்..

வாழ்க்கையில் முதன்முதலாக போன சுற்றுலா நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் உறவினர்களுடன் சென்ற ஒரு மாத தென்னிந்திய சுற்றுலா.. அதில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அனைத்து குடும்பங்களும் சந்தித்து அங்கிருந்து புறப்படுவதாக ஏற்பாடு. முதன்முதலாக ரயிலில் ஏறியதும் அன்றுதான். ரயில், ஓடும் தண்டவாளத்திலிருந்து பிரிந்து பின் சேர்வதும் கைகாட்டிகளும், வண்டியோடும் திசைக்கு எதிராக ஓடும் வயல் வரப்புகளும், வீடுகளும் அப்படியே ஒரு புதுவித அனுபவத்தைத் தந்தது. எல்லாக் குடும்பங்களும் ஒரே கம்பார்ட்மெண்ட், ஒரே பேருந்து, ஒரே தங்குமிடம் என அருமையாய் எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம்.

மேற்கூறிய சுற்றுலாவிற்குப் பின்னர் ஒம்போதாப்பு படிக்கும்போது எங்களது கா.நி.மே.நி. பள்ளியில் அழைத்துச்சென்ற கல்விச் சுற்றுலா-மறக்கமுடியாத ஒரு ஜாலி டூர்
வாழ்க்கையில் முதன்முதலாய் அம்மா அப்பாவுடன் இல்லாமல் தனியாக இருந்த மூன்று நாட்கள் அவை.

கல்விச்சுற்றுலாவுக்கு எங்கள் பள்ளியில் கூட்டம் சேர்ப்பதற்குள் ஆசிரியர்களுக்கு தாவு தீர்ந்துவிடும். எங்கள் ஊரே ஒரு கிராமம். அந்த ஊரில் உள்ள எங்கள் பள்ளியில் படிக்க எங்கள் ஊரைவிட வரப்பட்டிக்காடு கிராமங்களில் இருந்து வரும் ஏழைமாணவர்கள் படிக்கும் பள்ளி அது. வருடம் பதினைந்து ரூபாய் கட்டணம். அதையே மூன்று தவணைகளில் கட்டும் ஆட்களும் உண்டு. (1983) அதுபோல சூழ்நிலையில் இருக்கின்ற ஐந்நூறு மாணவர்களில் ஒரு ஐம்பது மாணவர்களை சேர்ப்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை?? பயணக்கட்டணம் ரூபாய் எழுபத்தைந்து. மூன்று நாட்கள் பயணம். முதல் நாள் கட்டுச்சோறு. மற்ற இரண்டு நாட்களும் எங்கள் அய்யாக்களே சாப்பாடு வாங்கித்தந்து விடுவார்கள் அந்தப் பேருந்து கட்டணத்திலேயே. இந்த கட்டணத்தில் ரெண்டு நாள் சாப்பாடும் போட்டு வண்டிவாடகையும் குடுத்து கூப்டுட்டு போக ஆம்னி பஸ்ஸா கிடைக்கும்.?எங்களுக்கென்றே ஜெயவிலாஸ் கம்பெனியிலிருந்து ஒரு இத்துப்போன பஸ் கருப்பு பெயிண்டும் மஞ்சள் பார்டரும் போட்டு வரும். அதுதான் எங்கள் பயண ஊர்தி. எங்கள் சயின்ஸ் வாத்தியார்தான் இந்த கல்விச்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர். அப்படியே ஒவ்வொரு மரத்தடிக்கு கீழேயும் ஒரு நாள் மீட்டிங் நடக்கும். அப்பத்தான எல்லா இடத்தையும் கவர் பண்ண மாதிரி இருக்கும். எங்க பள்ளிக்கூடத்துல இருக்குற மரங்கள எண்ணி மாளாது. பணம் முதல்லேயே குடுத்தவைங்க முன்னாடியும், குடுக்காதவங்க பின்னாடியும் உக்காந்து எங்க எங்கெல்லாம் போகப் போறோம் அங்க என்னென்ன விசேஷம் எல்லாம் விவரமா அய்யா எடுத்துச்சொல்வார். இன்னைக்கு இருக்குற கைடுக எல்லாம் எங்க அழகர்சாமி அய்யாகிட்ட பிச்சை வாங்கனும். இங்கிருந்து நேரா கெளம்பி திருச்சி உச்சிப்புள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு, அப்படியே ஸ்ரீரங்கம் போறோம். காவிரி போற அழகை அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம்டா. அப்புறம் அங்கையே மத்தியான சாப்பாடு. அங்கிருந்து நேரா கெளம்பி மெட்ராஸுக்குப் போறோம். அங்க ஜெயவிலாஸ் கெஸ்ட் ஹவுசுல தங்கல். மறுநா காலையில அப்படியே ம்யூசியம். அங்க நம்ம ராமனய்யா பின்னாலையே போகனும்டா. நாங்களும் கண்ணு வச்சிருப்போம். இருந்தாலும் சொல்றேண்டா. அப்புறமா மெரினா பீச். உலகத்துலையே பெரிய செயற்கை கடற்கரை. அங்க இருந்துட்டு சாமான் வாங்குறவங்கெல்லாம் வாங்கிக்கிறீங்க.. அப்படினு ஒவ்வொரு இடமா சொல்லிக்கிட்டே வருவார். இந்த சுற்றுலாவுல கலந்துக்கல நம்மோட வாழ்க்கையே போச்சு அப்படிங்கிற எண்ணம் வர்ரமாதிரி சொல்லுவாரு. ஒவ்வொரு மீட்டிங் முடிஞ்ச மறுநாள் ரெண்டுபேராவது பேர் குடுத்துருவாய்ங்க. அவிங்க அப்பா அம்மாவ அடிப்பாய்ங்களோ இல்ல இவைங்களையே அடிச்சிகிருவாய்ங்களோ தெரியாது. பணத்தை தேத்திருவாய்ங்க. இல்லைன்னா அப்பாவ விட்டு பையன் டூருக்கு கண்டிப்பா வாரான்னு அய்யாகிட்ட சொல்ல வச்சி பஸ்ஸுல சீட்டு போட்ருவாய்ங்க.பணம் பின்னாடி குடுத்துக்கலாம் . இப்படியே ஒரு மாசம் நடக்கும் அதுக்கப்புறம் புறப்படுற அன்னைக்கு மொதநா ராத்திரியே பள்ளிக்கூடத்துல வந்து படுத்துக்கிரனும். சிலசமயம் டேய் பஸ் இன்னிக்கு வர்லையாம்டா நாளைக்குத்தானாம்டா என எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் கதைகட்டி விடுவார்கள். காலையில அஞ்சு மணிக்கு பஸ் வரும். அவ்வளவுதான். கூட்டமா ஓடி மொதல்ல அவன் அவன் பிரண்டுகளோட இடம் பிடிச்சி உக்காந்துகிருவாய்ங்க.
ஆனா அய்யாவுங்க வந்த உடனேயே சின்னப்பயகெல்லாம் முன்னாடி வாங்கடான்னு அய்யா பக்கத்துலையே உக்கார வச்சிருவாங்க. கொஞ்சம் வளந்த பசங்க செய்யிற கொஞ்ச நஞ்ச சேட்டையும் செய்ய முடியாம அப்படியே இருக்க வேண்டியதுதான்.
ஒவ்வொரு ஊரா கூட்டிட்டுபோயி எங்களுக்கு எங்க ஓசியில தங்க இடம் தருவாங்களோ அங்கன தான் தங்குவோம். அங்கயும் காலங்காத்தால் கூட்டுப்பிரார்த்தனை எல்லாம் இருக்கும். எங்க பள்ளிக்கூட பெருமைய காமிக்க. எங்க பள்ளிக்கூட பேமஸே கூட்டு பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துக்கு யார் வந்தாலும் அவைங்கள ஒரே அமுக்கு அமுக்கனும்னா கூட்டுப்பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துல உள்ள நிறைய கட்டிடங்கள் பல தொழிலதிபர்கள் கட்டிகொடுத்தது. பொள்ளாச்சி மகாலிங்கமாகட்டும், மறைந்த காஞ்சிப்பெரியவர் ஆகட்டும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகட்டும், ஜெயவிலாஸ் மொதலாளி ஆகட்டும் மொதல்ல கூட்டுப்பிரார்த்தனைதான். அப்புறம்தான் பேச்செல்லாம். 'ஓம் தத் சத்' அப்படின்னு இந்து மதப் பிரார்த்தனையில் தொடங்கி, 'அவ்வூது பில்லாஹி மின ஷைத்தான்" என எங்கள் அப்பாஸ் அலி அய்யாவோ அல்லது அக்பர் அலி அய்யாவோ சொன்ன பின்பு 'பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவை' அழைத்து எங்கள் பிரார்த்தனை முடியும். நான் படித்த 13 ஆண்டுகளும் ( அட குட்டிஒண்ணாப்பையும் சேத்துங்க) மாறாதிருந்த வரிசை இது.

மெட்ராஸ்ல மியுசியத்துல, டாய்லட்டுக்குள்ள போன ஒருத்தன் ஒரு மணிநேரமா காணோம். ராமனய்யவும், அழகர்சாமி அய்யாவும் ரெண்டு வாட்டி மூணுவாட்டி தலைய எண்ணி பேரக்கூப்டுப்பாத்தாச்சு ஒரு ஆளு மட்டும் குறையுறான். அப்புறமா ஆடி அசைஞ்சு வர்றாரு நம்ம ஆளு. ராமனய்யா கேட்டது இன்னும் நெனவு இருக்கு. எண்டா வெளிக்கிப்போனயா இல்ல கொடல புடுங்கி சுத்தம் பன்னயாடானு. பண்ணயாடானுஅப்புறம் மகாபலிபுரத்துல ஒருத்தன் அப்புறம் இன்னொரு இடத்துல ஒருத்தன்னு ஒவ்வொருத்தனையா தேடி ஊருக்கு கொண்டு வந்து சேக்குரதுக்குள்ள அய்யாக்களுக்கு நாக்குத்தள்ளிரும். எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சாங்க ?? நம்ம பசங்களுக்கு நாலு இடம் சுத்திப்பாத்தாதான வெளிய என்ன நடக்குதுன்னு தெரியும் அதுக்காகத்தான் இவ்வளவு சிரமமும் எடுத்து செஞ்சாங்க. இப்பெல்லாம் அப்படி கல்விச்சுற்றுலா எல்லாம் கூப்டுட்டு போறாங்களான்னு தெரியல.
மூணு நாள் பயணம்முடிஞ்சஉடனேயே ஒரு பயணக்கட்டுரை எழுதி முடிச்சா அந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.
எனக்கு இந்த சந்தோஷம் பள்ளிக்கோடத்துல ஒருவாட்டி கிடைச்சுது. அதுக்கப்புறம் காலேஜுல போன கல்விச் சுற்றுலாவத்தான் சுற்றுலான்னு சொல்ல முடியும். சும்மா படமெடுத்து ஆடுனாய்ங்க எங்காளுக எல்லாம். படிக்கிற காலத்துலயே காந்திகிராம பல்கலைகழகத்துல படிச்சவைங்களே அப்படித்தான் இருந்தாய்ங்க. சிகரெட் என்ன, சரக்கு என்ன சும்மா ஊட்டியில ராத்திரி குளுருல ஆட்டமா போட்டாய்ங்க. அதுல ஒருத்தனுக்கொருத்தன் கைலிய பிடிச்சு இழுக்க, பிடிக்காத வாத்தியார சவுண்டு விட அப்படின்னு ஒரே அமர்க்களமா போச்சு. ,மெட்ராஸ்ல வந்த பின்னாடி ஒரே சமத்துவமா எங்க வாத்தியாரும், பயகளும் சேந்து தண்ணி அடிச்சு ஒரே பாசமழை. திரும்பி வந்து இண்டேர்னல ஆப்பு அடிச்சாங்க அது தனிக்கதை. அதுலையும் சின்னத்தம்பின்னு ஒருத்தன் சிரிக்கிற சிரிப்புக்கு ஊரே திரும்பி பாக்கும். கலக்கலா போயிட்டு வந்தோம். போன இடத்துல போன ரெண்டு வண்டியில ஒரு வண்டி ஆக்சிடென்ட் ஆயி எல்லோரையும் ஒரே பஸ்சுல போட்டு அடைச்சி யுனிவேர்சிடியில கொண்டுவந்து தள்ளுனாங்க. முழுசா அனுபவுக்க முடியாட்டியும் இருந்தவரைக்கும் அனுபவிச்ச அமர்க்களமான டூர் அது. நமக்குத்தான் வேடிக்கை பாக்குற பாக்கியத்தோட முடிஞ்சுபோச்சு. சேட்டையில எல்லாம் கலந்துக்குற அளவுக்கு தைரியமும் , வசதியும் இல்ல அப்ப.
இப்ப சுத்துறதுதேன் பொழைப்பா இருக்கு. ஆனா அங்க அனுபவிச்சசந்தோஷம் இனிமே கிடைக்குமா என்ன??

Sunday, July 6, 2008

தோஹா - கத்தாரின் அழகான இடங்கள். Part 1

தோஹாவில் கடற்கரை மட்டுமே செலவு இன்றி பொழுதுபோக்கும் இடம். மாற்ற இடங்களில் எல்லாம் ( ஷாப்பிங் மால்கள், கிளப்புகள் வகையறா) பணம் இருப்பின் மட்டுமே இருக்க முடியும்.

ஒரு மாலை நேரத்தில் கடற்கரையில் இருந்து கடலில் உள்ள ஒரு சிறு திட்டை படம் எடுத்தேன். நன்றாக இருப்பதாக நான் நினைத்ததால் உங்கள் பார்வைக்கு..

 



கடற்கரையை ஒட்டிய நடைபாதையும், கடற்கரையும்.


 


தொலைவில் தெரிவது இஸ்லாமிய பொருட்காட்சிகள் நடக்கும் இடம். தற்போது விரிவாக்கம் நடைபெறுகிறது.

 


பொழுதுபோக்குப் படகு. ஒரு ஆளுக்கு பதினைந்து ரியால்களும் மொத்தமாக வாடகைக்கு எடுக்க அறுபது முதல் எழுபது ரியால்கள் வரையும் வாங்குகிறார்கள். முப்பது நிமிட பயணத்திற்கு. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதில் சென்று வந்தால் அருமையாக இருக்கும்.


 


அடுத்த பகுதி போட்டோக்கள் விரைவில்..