Friday, June 18, 2010

ராவணன்




மணிரத்னத்தின் இன்னுமொரு மெகா முயற்சி. ராமாயணமும், மஹாபாரதமும் இன்னும் எத்தனையோ படங்களுக்கு கதை தரும் போல.. மீண்டும் ஒரு ராமாயணக் கதை கொஞ்சம் மாடர்னாக பர்னச்சாலையில் இருந்து ஆரம்பித்து ராவணன் இறப்பதுவரையாக தொடர்கிறது.

அண்ணன் விக்ரம்தான் ராவணன். ஐஷ்வர்யாதான் சீதா, கார்த்திக்தான் கிட்டத்தட்ட அனுமார், விக்ரமின் தம்பியாக வருபவர்தான் விபீஷணன்.

ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டு வரும் ராமர்தான் பிரித்விராஜ்.

இப்படியும் புரிந்து கொள்ளலாம்..

அல்லது

தமிழ்த் தேசியவாதியாக இறப்பதற்கு முன்னும், இன்னும் ஆக்கப்பட்ட வீரப்பர் கதையைப் போலவும் இதைப் புரிந்துகொள்ளலாம். போலிஸ் அராஜகங்களில் இருந்து மலைவாழ் மக்களை காக்கும் காவலாளியாக விக்ரமையும், முத்துலட்சுமியாக ரஞ்சிதாவையும், அவனது அடிப்பொடிகளாக பிரபு வகையறாக்களையும், சேர்க்கலாம்.

அல்லது

தங்கையைக் (பிரியாமணி) கொன்ற போலீஸ்காரர்களை பழிவாங்கும் அண்ணனின் கதையாகவும் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அழகான காடுகளிலும், அருவிகளிலும் அலைந்து திரிந்து வருகிறோம், நாம். நல்ல தியேட்டரில் பார்க்கக் கொடுத்துவைத்திருந்தால் அருவியின் சாரல் நம்மீது அடிப்பதைக் கூட உணரலாம்.

துல்லியமான ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவனும் அவரது உதவியாளர் ஒருவரும் கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் எல்லோருக்கும் படத்தில் பிடித்த மிக நல்ல அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கும்.

இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஓரிரு பாடல்கள்தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். பிண்ணனி இசை, ஓவர் சத்தம்.

சுகாசினியின் வசனங்கள் சுமார் ரகம். சந்தன வீரப்பனின் கிறுக்குத்தனமான உடல் மொழிகளுக்கேற்ற சில ஒலிகளை விக்ரம் அடிக்கடி விட்டுக்கொண்டே இருக்கிறார். ஓரளவுக்குமேல் எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஐஷ்வர்யா பச்சன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இவரே. மிக மிக அழகாய் இருக்கிறார். எளிமையான உடையில், கண்ணை உறுத்தாத கவர்ச்சி காட்டுகிறார்.

அழகாய் இருப்பதாலோ என்னவோ, அவரது முகபாவனைகளும், அவரது உடல்மொழிகளும் மிக நன்றாய் இருக்கிறது.

விக்ரம்.

இந்த பாத்திரத்திற்கேற்ற உடல் முறுக்கும், வேஷங்களுமாக சூப்பராய் இருக்கிறார். ஐஷ்வர்யாவுடனான சொல்லாமலே காதல் காட்சிகளில் உடல்மொழிகளிலும், சிரிப்புகளுமாக கலக்குகிறார். படத்தின் இன்னொரு முக்கிய பலம் இவரே.

பிரித்விராஜ்.

மிக நல்ல நடிகர். இந்ந்தப்படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கடத்திச்செல்லப்பட்ட மனைவியை மீட்பது மட்டுமே இவரது வேலை. இவரது திரைவாழ்க்கையில் ஐஷ்வர்யாவின் ஜோடி என்பது மிக முக்கியமானதொரு விஷயமாய் இருக்கும்.


விக்ரமும், ப்ரித்விராஜும் தொங்கு பாலத்தில்போடும் சண்டை மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட். இருவருமே கலக்கியிருப்பார்கள்.

ரஞ்சிதா.

நித்தி கேசுக்குப் பின்னர் வெளியாகும் ரஞ்சிதா நடித்த படம் இது. ஐஷ்வர்யாவைவிட மிக அதிக கைதட்டல் கிடைப்பது இவருக்குத்தான். இவர் திரையில் தோன்றும் முதல் காட்சி முதல் எப்போதெல்லாம் திரையில் தோன்றுகிறாரோ அப்போதெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அருகிலிருந்த மலையாளி கூட்டம், எதுக்குடா இந்த சப்பை பிகருக்கு இந்தக் கைதட்டல் என நினைத்திருக்கும். படத்தில் ஏன் இவர் இருக்கிறார் எனத்தெரியவில்லை. இவர் இருக்கும் பகுதிகளை வெட்டியிருந்தால்கூட படத்தில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது. படத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். நித்தி கேசினால் மட்டுமா இல்லை, மணிரத்னமே போதும் என நினைத்ததாலா எனத் தெரியவில்லை.

பிரியாமணி

படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் கதையில் வரும் இவர் இருக்கும் சில நிமிடங்களில் நன்றாய்ச் செய்திருக்கிறார். போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரிப்பதும், அதன் பின்னர் கிணத்தில் விழுந்து இறப்பதுடன் அவரது பகுதி முடிந்து விடுகிறது. இதற்குத்தான் அண்ணன் விக்ரம் பழிவாங்கப் புறப்படுகிறார்.

கார்த்திக்

சிறிய வேடம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். புரியும்படி வசனம் பேசிய அவரது மிகச்சில படங்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும்.

மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே. குத்துப்பாட்டுகள், அனாவசிய சண்டைகள் ஏதுமின்றி ஒரு படம் காணக்கிடைப்பதே அரிதாய் இருக்கும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு இலுப்பைப் பூ சர்க்கரைதான்.

உயிரே படத்தில் எல்லையோரக் காவல்படையை வில்லனாக்கியிருந்தார். இந்தப் படத்தில் தமிழகக்காவல் துறையை வில்லனாய்க் காட்டியிருக்கிறார், மணிரத்னம்.


Thursday, June 17, 2010

நான் பத்தாப்புப் படிச்சதை இன்னிக்குப் படிப்பவர்களுடன் ஒப்பிட்டு திரும்பிப் பார்க்கிறேன்

இன்றைக்கு தினமலரில் ஒரு செய்தி

4.கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி ராமநாதபுரம் கல்வி அதிகாரி விசாரணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட கல்வி துறை அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா (மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி கழிப்பறையில் யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தை பெற்று, கழிப்பறையில் போட்டுவிட்டு சென்றார். குழந்தையின் அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறியதை தொடர்ந்து , கழிப்பறையில் உயிருக்கு போராடிய பச்சிளம் பெண் குழந்தையை ஆசிரியர்கள் மீட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் கல்வி துறை அதிகாரிக்கே தெரியாமல் ,மாணவியின் பெற்றோரிடம் மாணவி மற்றும் பச்சிளம் குழந்தையை ஒப்படைத்து, மாணவியின் பள்ளி டி.சி.,யையும் வழங்கினர். தகவல் வெளியே தெரிந்ததை தொடர்ந்து ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் உத்தரவின்படி, பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா ஜெயராணியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறியதாவது: தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினேன். சம்பவம் நடந்த தினத்தில்,"" மாணவி உடையில் அதிக ரத்தம் இருந்ததால் ஆசிரியர்கள் மாதவிலக்கு அதிகமாக போயிருக்கலாம்,'' என, கருதி மாணவிக்கு தேவையான நாப்கின் வழங்கி உரிய உதவி செய்துள்ளனர். முதலில் மாணவிக்கு ரத்தபோக்கு அதிகமாகியிருக்கிறது என்றுதான் அனைவரும் நினைத்துள்ளனர். குழந்தை பெற்றிருப்பார் என யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை . குழந்தையின் அழுகுரல் கேட்டதை தொடர்ந்துதான் ஆசிரியர்களுக்கே தெரியவந்துள்ளது.இதன் விசாரணை அறிக்கை கல்வி துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.
குழந்தையை காப்பாற்றிய ஆசிரியர்கள் : மாணவி பெற்ற பெண் குழந்தை சிவப்பு நிறந்தில் அழகாக இருந்துள்ளது. குழந்தையை பெற்ற மாணவியோ, செய்வதறியாமல் பெற்ற பச்சிளம் குழந்தையை கழிப்பறை ஓட்டையில் திணித்து விட்டு வந்துள்ளார். அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறிய தகவலை தொடர்ந்து, ஓடிவந்த ஆசிரியர்கள் ஆறு பேர் துரிதமாக செயல்பட்டு கழிப்பறையில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றி முதலுதவி வழங்கினர். ஆசிரியர்களின் துரிதநடவடிக்கையால் பச்சிளம் குழந்தை காப்பாற்றப்பட்டது. "" மாணவியின் நிலைக்கு யார் காரணம்,'' என, வெளியே சொல்ல மாணவி மறுத்துவருகிறார் என கூறப்படுகிறது. மாணவியை ஏமாற்றியவரை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்


முதலில் இந்தப் பெண்ணைப் பெற்றோருக்கு மகளைப்பற்றி எவ்வளவு அக்கறை இருந்திருக்கும்? இப்படி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதுகூட அறிய முடியாத அளவு..

அடுத்த அதிர்ச்சி, பத்தாம் வகுப்புப் படிக்கும்பெண் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி கடந்த 10 மாதங்களாக இருந்திருக்க முடிந்திருக்கிறது.

இந்தப் பெண் பெற்றோரிடம் கூறியிருந்தாலாவது இந்த அவமானத்தையாவது தடுத்திருக்கலாமே? எது தடுத்திருக்கும்? பிள்ளையைப் பெற்று தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியமா?

இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. போட்டியான உலகில் அதிக மதிப்பெண்கள் பெற ஒரு குழு தன்னார்வத்தாலோ அல்லது பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ ஓடிக்கொண்டிருக்க, இப்படி ஒரு குழு எதிர்காலத்தை தனது வயதிற்குப் பொருந்தாத செயல்கள்மூலம் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு தன்னிடம் படிக்கும் குழந்தைகளின் ஜாதகமே தெரிந்திருந்தது நாங்கள் படிக்கும் காலங்களில். இத்தனைக்கும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை எனில் எல்லாப் பிரிவுகளுக்கும் ( அ பிரிவு முதல் ஊ பிரிவு வரை) அவர்தான் கணிதமோ, அறிவியலோ எடுப்பார். அப்படியிருந்தும் அது சாத்தியமானது. ( சுப்பையா மகந்தானடா நீயி? நாளைக்கு உங்கப்பாவக் கூப்டுட்டு வா)

இதுபோன்ற வருத்தம் தரும் நிகழ்வுகளுக்கு பெற்றோர்களின் செல்லம் ஒரு பங்கு எனில் ஊடகங்களின் பங்கு முக்கால் பங்கு. காலைமுதல் மாலைவரை ஓடும் பாடல் நிகழ்ச்சிகளின் கீழே பார்த்திருக்கிறீர்களா? ரம்யா ஐ லவ் யூ - அய்யப்பன், சுப்பு, மீட் மி அட் அவர் ப்ளேஸ் என ஓட விடுவதன்மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கோ, காண்போர்களை தக்க வைக்கவோ முயல்கிறது ஊடகங்கள். ஆனால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கெடுதலைச் செய்கிறோம் என உணர்வதேயில்லை. உண்மையில் காதலிப்பவர்கள் இப்படி டி.வியில் ஓட விட்டா காதலிப்பார்கள்?. எதையும் செய்துபார்க்கத் துடிக்கும் இளைய தலைமுறையை இப்படியா வீணடிப்பது?

தினமலர் கொஞ்சமவது பொறுப்புனர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறது. இல்லையெனில் பத்திரிக்கையை விற்பதற்காக அந்த பெண்ணின் புகைப்படத்தைக்கூட போடத்தயங்க மாட்டார்கள் சில வியாபாரிகள்.

சமீபத்தில் பள்ளியை விட்டு வெளியேவந்தபோது கூட மாணவர்களின் தரம் ஓரளவு நன்றாய் இருந்தது ( 1992). இன்றைய நிலையை நினைத்துப்பார்க்கவே அச்சமும், மலைப்புமாய் இருக்கிறது, வயதுக்கு வந்த குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களை நினைக்கையில்.

நன்றி: தினமலர்.

Saturday, June 12, 2010

ஓராண்டை நிறைவு செய்யும் - சொல்வனம்



இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள்.

தரமான ஒரு இணைய இலக்கியப்பத்திரிக்கையை ஓராண்டு காலம் தொய்வின்றியும், இலக்கிய இதழ்களுக்கே உரித்தான சிண்டுமுடிதல்கள், உள் அரசியல்கள், பிற எழுத்தாளர்களை வசைபாடுதல் என்ற அக்கபோர்கள் ஏதுமின்றி ஒரு இலக்கியப் பத்திரிக்கையை "இப்படியும் நடத்தலாம்" என்று நடத்திக்காட்டியிருக்கும் சொல்வனம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சொல்வனம் மென்மேலும் சிறப்பாய் செயல்படவும், நல்ல இலக்கியக் கட்டுரைகளையும், ஆய்வுகளையும், கலைச்செல்வங்கள் யாவையும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அளிக்கவும் வாழ்த்துக்கள்.

சொல்வனத்தின் வெற்றிக்கான காரணங்களாக நான் நினைப்பது,

மிகச் சிறப்பான விமர்சனங்களையும், இலக்கியவாதிகளின் பேட்டிகளையும், இசைகுறித்தான கட்டுரைகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்ததும்...

வலைப்பக்கத்தை இளமைப் பொலிவுடன் கட்டியமைத்ததும், மகரந்தம் போன்ற பொதுத்தளத்தில் கிட்டாத பொதுஅறிவுச் செய்திகளை தவறாமல் வழங்கியதும்..

புன்முறுவலுடனே படிக்க வைக்கும் ராமன்ராஜாவின் அறிவியல் கட்டுரைகள் மற்றும், சுகாவின் அனுபவக் கட்டுரைகள்..

மொழிமாற்றக் கதைகளில் மிகச் சிறப்பானதொரு நேர்த்தியும், தொடர்ந்து அதை கடைப்பிடித்ததும்...

வழக்கமான கேலிச்சித்திரங்களாய் இல்லாமல் இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் விதமாய் அமைந்த கேலிச்சித்திரங்களும் ...

தரமான கவிதைகளும், சினிமா விமர்சனங்களுமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளதே சொல்வனத்தின் வெற்றி.

குறைகளே இல்லையா என்றால்..

தரமான எழுத்தாளர்களாகவே இருப்பினும், தெரிந்த பெயர்களையே மீண்டும், மீண்டும் பார்க்கும்போது படிக்கும் ஆர்வம் சிறிது குன்றாமலில்லை.

இன்னும் கொஞ்சம் இறங்கிவந்து, தரத்தில் சமரசமின்றி அதேசமயம் பெருவாரியான வாசகர்களைக் கவர என்ன செய்யலாம் என்பதுகுறித்து சொல்வனம் குழு யோசிக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தாண்டி இலக்கிய உலகில் வாராதுவந்த மாமணி “சொல்வனம்” என்றால் அது மிகை இல்லை.

சொல்வனம் இதழ்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, June 9, 2010

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்


ஒரு கொலை வழக்கை நாவல் போல விவரிக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறார் ரஹோத்தமன்.

இந்த புத்தகத்தைப் படிக்கையில், நமது நாட்டில் ஆள் பலமும், அதிகார பலமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும் என்பதையும், நமது தலைவர்களின் பாதுகாப்பு ஏற்படுகளைப்பற்றி அறிய நேர்கையில் பொதுஜனமாகிய நாமெல்லாம் பிழைத்திருப்பது கடவுள் புண்ணியத்தால் என்பதும் தெரிய வருகிறது.

புத்தகம் முழுக்க கேஸ் நம்பரும், இடங்களுமாக எழுதி அறுத்துத் தள்ளாமல், தோளில் கைபோட்டு “என்ன நடந்துச்சி தெரியுமா” எனப்பேசும் ஒரு நண்பனைப் போல இருக்கிறது இப்புத்தகம்.

இன்றைய இலங்கை நிலவரத்தைக் காண்கையில், இதற்காகவா இவ்வளவும் செய்தார்கள் என்பதை குறைந்தபட்சம் மனதளவிலாவது கேட்காமல் இருக்கமாட்டார்கள் தமிழ்பேசுவோர். தமிழர்களுக்காக, அவர்தம் உரிமைகளுக்காக போராடுவதாகச் சொன்ன இயக்கம், அதற்குத் தடையாக இருப்பவர்கள் என அவர்கள் நினைத்தவர்களையெல்லாம் ஒழித்தார்கள். அவர்கள் நினைத்ததுபோல நடக்காத ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழிவாங்க தீர்மானித்ததில் முக்கிய குறி நமது முன்னாள் பாரதப் பிரமர் ராஜீவ் காந்தி. ஆனால் அதைக்கூட உணரமுடியாத அளவு நமது உளவுப்படைப்பிரிவினர் சாதாரன அரசு குமாஸ்தாவின் மனநிலையில் செயல்பட்டதால் நமது முன்னாள் பிரதமரை இழந்தோம் என்பதைத் தெளிவாய்ச் சொல்கிறது புத்தகம்.

விடுதலைப்புலிகள் எப்படி தங்கள் இயக்கத்துக்கான ஆதரவாளர்களை உருவாக்குகிறார்கள், தனது வாழ்க்கையையே அர்பனிக்க வைக்கிறார்கள்? எப்படி தங்களது திட்டங்களுக்கு தேவையெனில் சாகவும் தயங்காத ஆட்களைச் சேர்க்கிறர்கள், மூளைச்சலவை எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதெல்லாம் அப்படியே போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அவர்கள் ராஜீவைக் கொலைசெய்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்த எப்படி இயங்கினார்கள் என்பதை படிக்கையில், நமது உளவுத்துறையினர் போகவேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என இந்திய உளவுத்துறையில் இருக்கும் ஒருவருக்குமே சந்தேகம் வராதபடிக்குத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் இயங்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளும் நாங்கள் இதைச் செய்யவில்லை, செய்தவர்களை முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விடும் நிலையில்தான் நமது உளவுப்பிரிவுகள் இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளின் கர்னல்கிட்டு சொல்வதை வைத்து தமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார் நமது உளவுப்பிரிவுத் தலைவர் என்ற அதிர்ச்சித் தகவலைக் கேட்டபின் மற்ற தகவல்கள் எதுவுமே நமக்கு அவ்வளவு அதிர்ச்சியைத்தருவதில்லை.

இன்றைக்கு பூனைப்படை, எலிப்படை என எல்லா வகையான படைகளையும் வைத்துக்கொண்டு சுற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களின் தலைவனாய், எளிமையாய், இந்தியாவை வல்லரசாக்கும் கனவில் இருந்தவரை உடலைச் சிதறடித்துக் கொன்றுவிட்டார்கள். எல்லோரும் எளிதில் அனுகும் விதத்தில் அவர் இருந்ததும், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச்செல்வதை அவர் விரும்பியதுமே எதிரிகளுக்கு வசதியாகவும், அவருக்கு எமனாகவும் அமைந்துவிட்டது.

விசாரனையை எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் இருந்த விசாரனை அதிகாரிகளுக்கு உளர ஆரம்பிக்கும் போட்டோகிராபர் மூலமாய் முதல்துப்பு கிடைக்கிறது. பிறகு நளினி - முருகன் காதல், வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. எப்படி திட்டமிட்டார்கள் என்பதையும், எப்படி செயல்படுத்தினார்கள் என்பதையும் கொலையாளிகளின் வாக்குமூலத்தையே நமக்கு எழுதிக்காட்டியிருக்கிறார் ரகோத்தமன்.

ஆழமாய்ப் படிக்க ஒன்றுமே இல்லைபோலத் தோன்றினாலும், தமிழகத்தில் இருந்த மற்றும் இன்றிருக்கும் பல பெரிய தலைகளுக்கு தெரிந்தேதான் இந்தப் படுகொலை நடந்திருக்க முடியும் என்பதை ரகோத்தமன் நம்புகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், அவர் விசாரிக்க விரும்பிய தலைவர்களான வை.கோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் எனப் பலரை விசாரிக்க விடாமல் மூத்த அதிகாரி கார்த்திகேயன் நடந்துகொண்டதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவகையில் பார்த்தால் புத்தகத்தில் பல இடங்களில் நேரடியாகவே கார்த்திகேயன் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே இருக்கிறார். சரியாக விசாரிக்க அனுமதித்திருந்தால் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்க முடியும் என்பதுதான் அவரது வருத்தமெல்லாம்.

மொத்தத்தில் நமது ஆட்சியாளர்களின் ஊழல்களை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன நமக்கு அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முகத்தையும் நமக்கு காட்டுகிறார் ரகோத்தமன். அவர்கள் நிஜமாகவே கையும், களவுமாய் பிடிபட்டால் நொட்டைநியாயம் செய்வதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் தொடர முடிந்ததும், மீண்டும் ஆட்சியில் அமர்வதும் நாம் நமக்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட இருப்பவர்களில் எவ்வளவு தரமானவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கு ஒரு சாம்பிள்.

இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆதரவிருந்தால் நீங்கள் உலகமகா கொலைகாரனாய் இருந்தாலும் உங்களை போலிஸ் பிடிக்காமல் போலிஸே பார்த்துக்கொள்ளும். ஆளும் கட்சிக்கு எதிராய் இருந்தால் உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமலேயே கஞ்சாபொட்டலம் இருக்கும். உங்களை கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.

பத்மநாபாவைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டாம் என ஒரு வாய்மொழி உத்தரவு வந்ததாக ரகோத்தமன் குறிப்பிடுகிறார். அப்படியெனில் வாய்மொழியாக உத்தரவிடும் பொறுப்பில் இருப்பவருக்கு யார் கொல்லப்படப் போகிறார் என்பதும், யார் கொல்லப்போகிறார் என்பதும், தெரிகிறது. அவரை தப்ப விட உத்தரவிட்டதன் மூலம் ஏதேனும் ஒரு ஆதாயமோ அல்லது தனக்கு ஆபத்து வராமலோ பார்த்துக்கொள்ள முடிகிறது. நமது நாட்டில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்க சாத்தியங்கள் உண்டு. அப்படி யார்வாய்மொழி உத்தரவிட்டார்கள் என்பதை இன்று வரை பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்துவிட முடிகிறது. இந்த வழக்கின் உயரதிகாரியான ரகோத்தமன் அவர்களுக்கே தெரியாமல் மறைத்துவிட முடிகிறது.

நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு எத்தனை பங்கு இருக்கிறதோ அதே அளவு அல்லது அதைவிட மேலேயே உளவு நிறுவனங்களுக்குப் பங்கிருக்கிறது. ஆனால் அதிலும் திறமையின்மை, ஊழல், சுயநலம் எல்லாம் புரையோடிய மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் நமது நாட்டை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.
ராஜீவ் கொல்லப்பட காரணமான அலட்சியத்துடன் நடந்துகொண்ட அதிகாரிகள் குறித்த விசாரனைகூட முறையாய் நடைபெறவில்லை என்று ரகோத்தமன் பதிவு செய்கிறார். அதற்கான கேஸ் டயரிகூட இல்லை என எழுதுகிறார்.

எங்கெங்கு காணினும் ஊழலடா என்பதைப் போல இன்றும் அங்கிங்கெனாதபடிக்கு ஊழல் புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் காணமுடிகிறது. மத்திய அமைச்சர் பதவி யார்யாருக்கு என்பதை ஒரு தரகுப் பெண்மனி முடிவு செய்கிறார். மந்திரியாக வரப்போகும் நபரிடம் பேரம் பேசுகிறார். இன்று ஊழல் என்ற ஒன்று இல்லாத ஏதேனும் ஒரு அமைச்சகம் இருக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாய் இருக்கும்.
நம் நாட்டு ராணுவ ரகசியங்களையும், ராஜாங்க ரகசியங்களையும் எதிரி நாட்டினருக்கு பனத்திற்காகவோ, அல்லது காதலுக்காகவோ விற்கும் கும்பல்தான் நமது ராஜாங்க அதிகாரிகள்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஏன் இத்தனைகாலம் காலம் தாழ்த்திச் சொல்லவேண்டியிருந்தது என்பதற்கு ரகோத்தமன், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த தேடப்படும் குற்றவாளியான பிரபாகரன் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதும், இந்த வழக்கு முடிந்துபோனதாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும்தான் என்றிருக்கிறார்.


இந்தப் புத்தகத்தில் பல கருப்பு நகைச்சுவையும் உண்டு.

சீக்கிய தீவிரவாதிகளால் இந்திராவிற்கு ஆபத்து என உளவுப்பிரிவு எச்சரிக்க, இந்திராகாந்தியின் பாதுக்காப்புப் பணியில் இருந்த அனைத்து சீக்கியர்களும் விடுவிக்கப்பட்டு வேறு ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். இப்படிச் செய்ததன்மூலம் சீக்கியர்களை அவமதித்து விட்டீர்கள் என குரல் எழுந்தவுடன் எல்லா சீக்கியரும் மீண்டும் இந்திராகாந்தியின் பாதுகாப்புப் பணியில். சில மாதங்களில் அன்னை இந்திரா சீக்கியர்களால் சுடப்பட்டு இறக்கிறார்.


மந்திரியாய் இருக்கும் சுப்ரமணியசாமி விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என அடித்துச் சொல்ல, உளவுப்பிரிவுத்தலைவர் சொல்கிறார், நான் விடுதலைப் புலிகள் கூட்டத்தில் நமது உளவாளியை வைத்திருக்கிறேன், நிச்சயமாய் இந்தக் கொலையை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என்கிறார். அவர் சொல்லும் உளவாளி கர்னல் கிட்டு.
மொத்தத்தில் ஒரு துப்பறியும் நாவலைப் படித்துமுடித்த திருப்தியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சோர்வும் ஒருசேர எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சென்னையில் விமானத்தில் ஏறும்போது படிக்க ஆரம்பித்து 4 மணிநேரத்திற்குள் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு எளிமையான, சுவாரசியமான மற்றும் விறுவிறுப்பான எழுத்து நடை.

வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்

ஆசிரியர் : கே.ரகோத்தமன்

விலை : ரூ.100

கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.


நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்

Tuesday, February 2, 2010

நகைச்சுவை நடிகர் கொச்சி ஹனிஃபா காலமானார்.





சலீம் அஹமது கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் கொச்சின் ஹனீஃபா ஈரல் புற்றுநோயால் அவதிப்பட்டு இன்று (02.02.2010) சென்னையில்மரணம் அடைந்தார்..

நகைச்சுவை கலந்த வில்லனாக மலையாளத்தில் பெரும்பான்மையாகவும், தமிழில் பல படங்களிலும் சில இந்திப் படங்களுமாக கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறார். சிறு வேடங்கள் முதல் பெரிய வேடங்கள் வரையாக தமிழில் 80 படங்களில் நடித்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை அவரது உடல் மொழிதான் அவரது பலம். மலையாளத்தில் கிரீடம் , திலக்கம், பஞ்சாபி ஹவுஸ் என்ற மூன்று படத்திலும் அவரது நகைச்சுவையைக் கண்டு வியந்திருக்கிறேன்.

தமிழில் மகாநதி, சிவாஜி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரை மலையாள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் இழந்துவிட்டது.

அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக.

Saturday, January 30, 2010

மூன்று முட்டாள்கள். ( 3 Idiots)




தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்காமே.. அதான் 3 Idiots பெயரை தமிழ் "படுத்தி" இருக்கிறேன்

தமிழில் இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா அல்லது பிற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா என்ற வினாவிற்கு ஜெயகாந்தன் சொன்னது “ இலக்கியத்தில் முற்போக்கு, பிற்போக்கு என்பதெல்லாம் கிடையாது.. எல்லாம் ஒரே போக்குத்தான், அது முற்போக்கு மட்டுமே” என்று.

அப்படி முற்போக்காய் சிந்திக்கும், படமெடுக்கும் அளவு போய்க்கொண்டிருக்கும் சமகால நடிகர் மற்றும் தயாரிப்பாளராகியுள்ள அமீர்கானும், அவரது வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்தித் திரைப்பட உலகமும், ரசிகர்களும்.

படத்தைப்பற்றிய ஒரு அறிமுகம்

இம்பீரியல் பொறியியல் கல்லூரியல் படிப்பவர்கள் ஃபர்ஹான், (மாதவன்), ராஜு ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி) மற்றும் ரன்ச்சோட் என்றழைக்கப்படும் ரன்ச்சோட்தாஸ் ஷியாமள்தாஸ் ச்சன்சட் ( அமீர்கான்) மூவரும் தங்கியிருப்பதும் ஒரே அறையில்தான்.

ஃபர்ஹானும், ராஜுவும் குடும்பத்தின் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக பொறியியல் கல்லூரிக்கு வந்திருப்பவர்கள், ஆனால் ரன்ச்சோட் படிக்கும் மகிழ்ச்சிக்காகவும், வாகனங்களை வடிவமைப்பதிலும் அதன் பொறியியல் மீதான ஆவலாலும் கல்லூரிக்குப் படிக்க வந்துள்ள பணக்கார மாணவன்.

ரன்ச்சோட்வின் புதியதான, வழக்கத்திற்கு மாறான பதில்களால் கல்லூரியின் முதல்வர் வீரு சஹஸ்ரபுதே ( பொமான் இரானி) வின் கோபத்திற்கு ஆளாகிறார்.

இரக்கமற்ற முதல்வரின் செயலால் ( பிராஜக்டை முடிக்க கொஞ்சம் அவகாசம் தராமலும், உங்கள் மகன் பாஸ் செய்ய மாட்டான் என மானவனின் பெற்ற்றோருக்கு போன்மூலம் தெரிவிப்பதும்) ரன்ச்சோட்வின் கூடப்படிக்கும் மாணவன் ஜாய், மனஅழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

அந்த தற்கொலைக்குக் காரணம் முதல்வரின் முட்டாள்தனமான, மனிதாபிமானம் அற்ற, வெற்றுப்படிப்பை மட்டுமே படிப்பு எனக் கொள்ளும் அவரது குணமே என்று குற்றம் சாட்டுகிறான் ரன்ச்சோட். கோபம் கொள்ளும் முதல்வர் ரன்ச்சோட்டை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொல்ல, ரன்ச்சோட் உண்மையில் இல்லாத ஒன்றைச் சொல்லி அதைக் குறித்து விளக்குமாறு கேட்க ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டிக் கொண்டிருக்க இறுதியில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்லி வைரசையும், இதர ஆசிரியர்களையும் தர்ம சங்கடத்துள்ளாக்குகிறான். முதல்வர் வைரஸ் ரன்ச்சோட்விடம் நட்பாய் இருக்கும் மற்ற இருவரையும் பிரிக்க முயல்கிறார்.

அதிக மதிப்பெண்கள் எடுப்பவதே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி, அதுவே மதிப்பையும், பணத்தையும் சம்பதித்துத் தரும் என்பதை குறிக்கோளாய்க் கொண்டிருக்கும் இன்னொருவன் சதுர் ராமலிங்கம் எனும் சைலன்ஸர் ( ஓமி வைத்யா)

தான் அதிக மதிப்பெண்கள் இவன் எடுக்க வேண்டுமெனில் மற்றவர்கள் குறைவாய் எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாருடைய அறையிலும் ஆபாசப் புத்தகங்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். கொஞ்சம்கூடப் புரியாமல் படித்து ஒப்பிப்பது மட்டுமே இவனது சாமர்த்தியம். சரியான பாடம் புகட்ட ரன்ச்சோட் தீர்மானிக்கிறான். சைலன்ஸருக்கு முதல்வர் வைரஸ் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்க, அவன் பேச வேண்டிய இந்திக் குறிப்பை கல்லூரி நூலகர் ஆங்கிலத்தில் டைப்படித்து வைத்திருக்க அதில் ”சமத்கார்” என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் ”பலாத்கார்” என்று மாற்றிவைத்துவிடுகிறான். சைலன்சர் உனர்ச்சிகரமாக அந்த உரையைப் படிக்க மொத்த அரங்கமே குலுங்குகிறது. அவமானத்தின் உச்சத்தை அடைகிறான் சைலன்ஸர். வாழ்க்கையில் அவர்கள் அனைவரையும் விட மிக உயர்ந்த நிலையை அடைந்த பின் நிச்சயம் சந்திப்பேன் என்கிறான்.

ரன்ச்சோட் வைரசின் மகள் பியாவுடன் ( கரீனா கபூர்) காதல் - தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் நண்பர்கள் மூவரும் குடித்துவிட்டு வைரஸுக்குத் தெரியாமல் வைரஸின் மகள் பியாவைப் பார்க்கச் சென்றுவிட்டு அவரது வீட்டிலுள்ள பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்துவிட்டு வருகின்றனர். அந்தப் போதையுடன் கல்லூரி வகுப்பரையில் உளரும் ராஜுவை கல்லூரியிலிருந்து வைரஸ் நீக்குவதாக சொல்கிறார். அதிலிருந்து தப்பிக்க ரன்ச்சோட்தான் இதைச் செய்தான் எனச் சொல்லிவிட்டால் போதும் என்கிறார் வைரஸ்.

கல்லூரியிலிருந்து வெளியேயும் வரமுடியாமல், நண்பனையும் காட்டிக்கொடுக்க இயலாமல் மாடியிலிருந்துகீழே குதித்து விடுகிறான். தீவிர சிகிச்சையும், ரன்ச்சோட் மற்றும் பர்ஹானின் இடைவிடாத முயற்சியும் ராஜுவை படுக்கையிலிருந்து காப்பாற்றுகின்றது. பர்ஹானும், ராஜுவும் ரன்ச்சோட்வின் வழிமுறையை உனர்கின்றனர். பர்ஹானுக்கு வரும் நேர்முகத்தேர்வுக்கு கால், கையில் கட்டுடனும், சக்கர நாற்காலியிலும் சென்று ராஜு கலந்துகொள்கிறான். அவர்கள் எதிர்பாராத ஆனால் நேர்மையான பதிலால் ராஜுவுக்கு வேலை கிடைக்கிறது.

பர்ஹானும் அவனதுபெற்றோரிடம் வாதாடி விருப்பமான புகைப்படக்காரனாய் ஆகிறான்.

ராஜு தேர்வை முடித்தால்தான் வேலைகிடைக்கும் என்பதால் அவனை தேர்வில் வெற்றிபெற முடியாத அளவு கடினமான கேள்விகளை வைத்து அவனைத் தோற்கடிப்பேன் என்கிறார் வைரஸ்..

பியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எப்படி பணம் மட்டுமே வாழ்க்கை என இருக்கிறான் என இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ரன்ச்சோட் நிரூபிக்க, கலியாணம் நடக்க இருக்கும் சில மணி நேரத்தில் மற்ற இரு நண்பர்கள் மற்றும் தனது பெருமையை நிரூபிக்கவும், தனது வியாபாரத்திற்க்கான கூட்டணி அமைக்கவும் இந்தியாவுக்கு வந்திருக்கும் வைரசுடனும் ரன்ச்சோட்வுடன் சேர போகிறாள்.

அதன் பின்னர் பியா ரான்ச்சோவுடன் சேர்ந்தாளா,

ரன்ச்சோட் என்பவன் ரன்ச்சோட்தானா ? அதன் பிண்ணனி என்ன?

வாழ்க்கையில் வெற்றியடைந்த மற்ற இரு நண்பர்களும், பியாவும் ரன்ச்சோட்வைக் கண்டார்களா?

சைலன்ஸர் வாழ்க்கையில் அவன் எதிர்பார்த்த வெற்றியடைந்தானா?

எது உண்மையில் வெற்றி என நமக்கும் புரிகிறதா?

என்ற கேள்விகளுக்கு விடை வெண் திரையில் ..

தாரே ஜமீன் பர் ( மண்ணில் வின்மீன்கள்) என்ற முதல் படத்திலேயே குழந்தைகளின் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளமுடியாத அளவு கண்ணை மூடிக்கொண்டு போட்டியில் ஜெயிக்க வைக்க முயலும் பெற்றோரைச் சாடியிருந்தார்.

இந்தப் படத்தில் நமது கல்வித்துறையின் போக்கை நகைச்சுவை கலந்த, சீரியஸ்தனத்துடனும் அனுகி இருக்கிறார்.

தனது சொந்த மூளையை உபயோகித்து படிக்கிறவனுக்கும், மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையும் கானும் இன்றைய ஆசிரியர் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையே நல்ல மாணவனாகக் கொள்கிறார்.

ஒரு சிறிய உதாரனமாக இயந்திரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு “ மனிதனின் வேலையை எளிதாக்கும் எல்லாமே” இயந்திரம் தான் என்பார் அமீர்கான். ஆனால் ஒரு இயந்திரம் என்றால் என்ன என்பதை புத்தகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதுபோல ஒப்பிக்கும் ஒரு மாணவனை பாராட்டுவார் ஆசிரியர்.

படித்ததை பரீட்சையில் வாந்தி எடுப்பவர்களில் அதிகம் வாந்தி எடுப்பவருக்கு அதிகம் மதிப்பெண்கள் கிடைக்கிறது. உலக நடப்பில் அவரே சிறந்தவராகவும் வெற்றியாளராகவும் அறியப்படுகிறார். இதில் உள்ள அபத்தத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் அமிர்கான்.

போட்டி, போட்டி என குழந்தைகளின் இயல்பாய் மலர வேண்டிய அறிவை பாடங்களினால் நிரப்பி அதை வாந்தியெடுக்க வைக்கும் அபத்தத்தையும், குழந்தைகளின் உண்மையான திறனை அடையாளம் கண்டு அதனை அந்தந்த துறையில் வளரவிடாமல் பெற்றோர்களின் ஆசைப்படி வளரவேண்டிய கட்டாயத்தில் இன்றைய குழந்தைகள் இருக்கும் நிலையையும் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் படத்தில்.

சோகம், மகிழ்ச்சி, கிண்டல் என படம் முழுக்க சந்தோஷமாய்ச் செல்கிறது.

உகாண்டாவில் பிறந்து, பாண்டிச்சேரியில் படித்த தென்னிந்தியர்போல சித்தரிக்கப்பட்டுள்ள (ராமலிங்கம்) ஒருவரை வைத்து தென்னிந்தியர் அனைவரும் மொட்டை மனப்பாடம் செய்பவர்கள் என்பதுபோல கிண்டலடித்திருக்கிறார் அமீர். இது வடக்கின் எண்ணம் நம்மைப் பற்றி.

”எத்தனையோ பன்னிட்டோம், இதச் செஞ்சிரமாட்டமா” என்பதன் நாகரீக வடிவம்தான் ”ஆல் இஸ் வெல்” என்று பிரமாதப்படுத்தப்படும் வசனம்.

மொத்தத்தில் உன்மீது நம்பிக்கை வை என்பதை மாணவர்களுக்கும், குழந்தைகள் மீது உங்கள் ஆசையை தினிக்காமல் அவர்கள் ஆசைப்படி அவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள் என பெற்றோருக்கும் அமீர் விடுத்துள்ள வேண்டுகோளே இப்படம்.

அவசியம் பெற்றோருடன் சென்று பாருங்கள். உங்க தம்பியோ, தங்கச்சியோ விரும்பியபடி படிக்க உங்க அம்மாப்பா வாய்ப்பளிக்கலாம்.

Tuesday, January 26, 2010

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.


வலையுலகில் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

பாரதத்தாயானவள்,

வரும் ஆண்டுகளில் இந்தியர்கள் அனைவரும் தமது நாட்டைப் பற்றி குறைந்தபட்சம் சிந்திக்கவும்,

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கவும், இல்லையெனில் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் கருப்புப் பணம், கள்ளக்கடத்தல், பதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடாமலிருக்கவும்,

அரசியல்வாதிகள் பிற மத தீவிரவாதிகளால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து உண்மையான கவலைகொண்டு செயலாற்றவும், சிறுபான்மையினரின் வாக்குவங்கிகளுக்காக நாட்டை பலிகொடாதிருக்கவும்,

சக இந்தியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாவிடினும் பிரிவினையை தூண்டாதிருக்கவும்,

நமது நாட்டின் சுதந்திரம் குறித்து சிறிதளவாவது தெரிந்துகொள்ளவும், தற்போதைய தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாக சுதந்திரத்திற்காக உழைத்த “நேதா” ஜி குறித்தும், ”சர்தார்” குறித்தும், தாதாபாய் குறித்தும், ஜெயப்ரகாஷ் நாராயணன் குறித்தும் தெரிந்து கொள்ளவிழைவோம்.

தாயைக் காப்பதும், நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்.. - பாரதிதாசன்..

பாரத நாட்டின் புதல்வர் நாம்.. நம் தாயை பாதுகாக்க உறுதி கொள்வோம்..


ஜெயக்குமார்

Monday, January 18, 2010

UP - Animation Movie. ( பறக்கும் வீடு.)



வால்டிஸ்னி - பிக்ஸார் குழுமத்தின் சிறப்பான குழந்தைகளுக்கான அனிமெஷன் ப்டங்களை உருவாக்கும் திறனை மான்ஸ்டர் இன்க் படம் முதலில் காட்டியது என நினைக்கிறேன். ( நான் முதலில் பார்த்ததே அந்தப் படமாகவும் இருக்கலாம்)

அதன்பின்னர் “அப்” என்ற ஆங்கிலப் பெயரில் ஒரு குழந்தைகளுக்கான படம் வந்திருக்கிறது அவசியம் பாருங்கள் என நண்பரின் பரிந்துரையில் இந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்தேன்..

முதலில் இதை ஒரு குழந்தைகளுக்கான படம் என்பதையே நாம் நம்ப முடியாது, அவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

சார்லஸ் முண்ட்ஸ் என்ற சாகசவீரரை தனது ஆதர்சமாகக் கருதும் கார்ல்பிரடெரிக்சனும், சாகசத்தில் ஆர்வமுள்ள அதேசமயம் கார்லைப்போலவே சார்லஸ் முண்ட்ஸை தனது ஆதர்சமாகக் கருதும் எல்லியும், நண்பர்கள். சார்லஸ் முண்ட்ஸ் தென் அமெரிக்கக் காடுகளில் இருக்கும் ஒருவகையான அபூர்வப் பறவையின் எலும்புக்கூடைக் கொண்டுவர அதை அறிவியலாளர்கள் அவர் எலும்புக்கூடுகளை வைத்து இல்லாத ஒன்றைக் காண்பித்துவிட்டார் என அறிவிக்க, அவரது அறிவியலாளர் குழு உறுப்பினர் தகுதி கூட பறிக்கப்படுகிறது. அவமானமடைந்த சார்லஸ் உண்ட்ஸ் , அவர் காண்பித்த எலும்புக்கூட்டிற்கு சொந்தமான அதே இனப்பறவையை உயிருடன் பிடித்துவருவேன், அதுவரை திரும்பமாட்டேன் என சபதம் செய்து ஆகாய பலூனில் பறந்து செல்கிறார். அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.


தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.

காலப்போக்கில் எல்லியும், கார்லும் காதலும் செய்து, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதும், அவ்வப்போது தென் அமெரிக்காவில் பாரடைஸ் ஃபால்ஸில் வீடுகட்டும் கனவை அசைபோடுவதும் அதன் பின்னர் பலவித காரணங்களால் அதைத் தள்ளிப்போட நேர்வதுமாக காலம் கழிகிறது. தென் அமெரிக்கா செல்வதற்காக பணமும் சேகரிக்கிறார்கள். அந்தப் பணம் சேகரிக்கும் உண்டியல் வீட்டின் பல தேவைகளுக்காக மகிழ்ச்சியுடனே உடைக்கப்படுகிறது.

இதற்கிடையில் எல்லி, கார்ல் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்ற சோகமும் படர்கிறது. ஒரு நாள் கார்ல் தென் அமேரிக்கா செல்ல இருவருக்கும் விமான டிக்கெட் வாங்கி வீட்டிற்கு வரும் போது எல்லிக்கு உடம்பு சுகமில்லாமல் போகிறது. அதன் பின்னர் சில காலத்தில் எல்லி இறக்கிறாள். தனிமையில் தவிக்கும் கார்ல், எல்லியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். அவரது தனிமையில் ஒரு சிறுவன் குறுக்கிடுகிறான் (ரஸ்ஸல்). சாரணச் சங்கத்தைச் சேர்ந்த அவனுக்கு பலமெடல்கள் கிடைத்தாகி விட்டது. இன்னும் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்னொரு பதக்கத்தை அவன் பெற்றால் அவனது பதக்கப் பட்டியல் பூர்த்தியாகும். அவன் கார்லிடம் வந்து உங்களுக்கு எப்படி உதவ முடியும் எனக் கேட்க, அவனை துரத்துவதற்காக அவரது தோட்டத்தில் ஒரு விசித்திரப் பறவை வருவதாகவும், அதைப் பிடிக்கும்படியும் சொல்கிறார்.

ஒருநாள் அவரது வீட்டின் எதிரில் கட்டிட வேலைகள் நடக்கிறது. அவர்கள் கார்லின் வீட்டையும் வாங்குவதற்காக தரமுடியுமா எனக் கேட்கின்றனர். கிடைக்கும், ஆனால் நான் செத்த பிறகு எனச் சொல்லி கதவை அடைக்கிறார். மனைவியின் நினைவாய் அந்த வீட்டைத் தர மறுக்கிறார். ஒருநாள் அங்கு வேலை செய்யும் ஒருவன் தெரியாமல் அவர்களது வீட்டின் தபால் பெட்டியை வாகனத்தால் இடித்து விடுகிறான். அது கார்லும், அவரது மனைவியும் வண்ண மையினால் தங்களது கையை அதில் பதித்து செய்த தபால் பெட்டி. அதை சேதப்படுத்திவிட்டானே என்ற ஆத்திரத்தில் இடித்தவனை தனது வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு போடு போட ரத்தம் வருமளவு அடிபட்டு விடுகிறது. உள்ளூர் கோர்ட்டில் நடக்கும் கேஸில் பெரியவர் கார்லை முதியோர் இல்லத்தில் சேர்க்க தீர்ப்பாகிறது.

அவரை அழைத்துச் செல்ல வருபவர்களிடம், ஒரு நிமிடம் இருங்கள் என சொல்லிவிட்டு வீட்டினுள்ளே செல்பவர் அப்படியே ஆயிரக்கணக்கான பலூன்களின் உதவியால் வீட்டோடு ... ஆமாம் வீட்டோடு பறந்து போகிறார், தனது மனைவியின் ஆயுள் கால கனவான தென் அமெரிக்கக்காடுகளில் இருக்கும் பாரடைஸ் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியை நோக்கி... பறந்துகொண்டிருக்கும்போது அவரது வீட்டுக் கதவு தட்டப்படுகிறது..

அங்கு பார்த்தால் நம்ம ஸ்கௌட் ரஸ்ஸல் நிற்கிறான். கார்ல் வீட்டில் தொந்தரவு செய்துவந்த பறவையைப் பிடித்துவிட்டதாகவும், அவரோடு சேர்ந்து கொள்வதாகவும்..வேறு வழியின்றி அவனையும் சேர்த்துக் கொண்டு செல்கிறார். பலவித சிக்கல்களுடன் வீடு பறந்து, பறந்து தென் அமெரிக்கக் காடுகளை அடைகிறது.

பின்னர் இருவரும் இணைந்து தென் அமெரிக்கக் காடுகளில் சுற்றி வருகின்றனர். பெரியவர் தனது மனைவி எல்லி சொன்ன இடத்தைத் தேடி அதில் அவரது வீட்டை வைத்துவிட ரஸ்ஸல் உதவியுடன் முயல்கிறார். அங்கு அவர்கள் பேசும் நாய்களையும், விநோதப் பறவையையும் சந்திக்கின்றனர். உடனே ரஸ்ஸல் அந்த வண்ண மயமான, நீள்மூக்கு கொண்ட பறவைக்கு கெவின் எனப் பெயரிடுகிறான். முதலில் கார்லிடம் பினங்கும் கெவின் பின்னர் கார்ல், ரஸ்ஸல் இருவரிடமும் நட்பு பாராட்டுகிறது.

ஊரில் சபதம் செய்துவிட்டு வெளியேறிய விஞ்ஞானி ஊண்ட்ஸ், அந்தப் பறவையை ( கெவின் என ரஸ்ஸல் பெயரிட்ட) பிடிப்பதற்காக காடுகள் முழுவதும் இதைப் போன்ற பேசும் நாய்களை உலவ விட்டிருப்பார். இவர்களிடம் அந்தப் பறவை இருப்பதை அந்த ஆராய்ச்சியாளர் அந்த உளவு நாய்கள் மூலம் அறிய வர அவர்களை வீட்டோடு அங்கு இழுத்து வரவைக்கிறார்.

கார்லுக்கு அவரது ஆதர்ச சாகச வீரரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் நீங்கள் சார்லஸ் முண்ட்ஸ் தானே எனக் கேட்க ஆமாம் என அவர் ஆமோதிக்க கைதிபோல வந்த கார்ல் தற்போது விருந்தினர் ஆகிவிடுவார். ஆனால் அவர் கெவின் என்ற அந்தப் பறவையைப் பிடிக்கத்தான் இங்கு இருக்கிறார் என அறிந்தவுடன், முண்ட்ஸிடமிருந்து பறவையைக் காப்பாற்றுவதுதான் ரஸ்ஸல் மற்றும் கார்லின் வேலையாகிப் போகிறது.


பலவிதப் போராட்டங்களுக்குப் பின்னர் முண்ட்ஸ் மற்றும் அவரது பேசும் நாய்களிடமிருந்து கெவினைக் காப்பாற்றி இறுதியில் கெவினை அதன் குடும்பத்துடன் சேர்த்து விட்டு கார்ல் மற்றும் ரஸ்ஸல் முண்ட்ஸின் பலூன் விமானத்திலேயே ஊர் திரும்புகின்றனர்.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் செய்ப்பட்டிருந்தாலும், நாம் அதை உணர முடிவதேயில்லை என்பது அதன் மிகப்பெரிய பலம். கார்லும் சரி, அவரது மனைவி எல்லியும் சரி அப்படியே ஒரு ஆதர்ச கணவன், மனைவியாக வாழ்வதையும், சந்தோசமான தருணங்களை ஒரு மரத்தடியில் தலைக்குத் தலை தொட்டுக்கொண்டு வானத்தைப் பார்ப்பதும், சோகமான நேரங்களில் இருவரும் இருட்டில் இருக்க வெளியிலிருந்து நிழல்கள் போல காண்பிக்கும் நேரங்களிலும், முதுமையடையும் தருணங்களையும் மிக மிக அழகாக எடுத்துள்ளனர்.

செலவினங்களுக்காக தென் அமெரிக்கா போக சேர்த்துவைக்கும் உண்டியலை உடைக்க நேரும்போது இது வைத்தியத்துக்கு, இது வீடு மேல் மரம் விழுந்துவிட்டதால் பராமரிப்பிற்கு என நமது நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையைப் போல வாழ்வதும், அதை சந்தோஷமாய் செய்வதும் இயல்பு..

படத்தில் முதியோர் இல்லத்தில் அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பவர்களிடம் கொஞ்சம் பொறுங்கள் என உள்ளே சென்றுவிட்டு, இத்தனை நாள் செய்துவைத்திருந்த பலூன்களை விடுவிக்க வீடு அப்படியே காற்றில் மிதந்து செல்வதும், ஒவ்வொருவரும் அவரவர் வீடு மாடியிலிருந்து பார்ப்பதும், கிராஃபிக்ஸ் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.. ஆயிரக் கணக்கான வன்ன வன்ன பலூன்கள் அப்படியே கூம்புவடிவத்தில் இருக்க அவற்றை அனைத்துள்ள நூல்களின் உதவியுடன் வீடு பறப்பது அழகு.

கார்ல் தானே வடிவமைத்த சுக்கான் உதவியுடனும், பாய்மரத்துடனும் காற்றில் பறந்து செல்வதும், திசைகாட்டும் கருவியை வைத்து தென் அமெரிக்கக் காடுகளை அடைவதும், ரஸ்ஸலின் தொந்தரவையும், அதே சமயம் அவனது எதையும் நல்லவிதமாகவே அனுகும் முறையும் அந்தந்த பாத்திரத்தை இயல்பாய் வைக்கின்றன.

Monday, December 28, 2009

சொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..


வலையுலகமெலாம் மொக்கைகளின் பின்னாலும், நுன்னரசியல்களின் பின்னாலும் சென்று அறிவியல் தந்த வசதியை வெட்டி அரட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழில் உருப்படியான வலை இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒன்று சொல்வனம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.


மாதமிருமுறை, வித்தியாசமான கட்டுரைகளையும், முயற்சிகளையும், அபூர்வமான கலைஞர்களையும், அறிவியலையும் நமக்குத் தருவதில் காட்டும் முனைப்பில் அவர்களது சமூக அக்கறை புலப்படுவதைக் கானலாம்.


அதன் தொடர்ச்சியாக இந்த இதழை சொல்வனம் “இசைச் சிறப்பிதழ்” ஆக தயாரித்துள்ளது. நமது வாராந்தரிகளைப் பொருத்தவரை ”இசைச் சிறப்பிதழ்” என்றால் என்னென்ன வாத்தியங்கள் உண்டோ அவைகளைப் பற்றிய சிறுகுறிப்பும், அதை நடிகையர் வைத்திருப்பதுபோல படமிட்டும் வெளியிடுவது மட்டுமே. பெரிய பத்திரிக்கைகள், அதிகம் விற்கும் பத்திரிக்கைகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் குமுதம், விகடன் போன்ற இதழ்களும் இப்படித்தான் வெளியிடுகின்றன. விதிவிலக்குகளாக சில நல்ல கட்டுரைகள் வந்துவிடுவதும் உண்டு. இந்த மாதிரியான வணிக சூழ்நிலையில் , வலைப் ப்த்திரிக்கை ஒன்றில் இசையைப் பற்றி இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, ஒரு நல்ல இசை ரசிகனுக்கு என்னெவெல்லாம் பிடிக்குமோ, அதை தரமான முறையில் வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது சொல்வனம் குழு.


சேதுபதி அருணாச்சலம் எழுதிய பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு என்ற கட்டுரையில், எப்படி இன்றைய தலைமுறைக்கு நமது முந்தைய தலைமுறையின் இசையுலகின் அரசியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் நமது ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறது என்பதையும், சாதீய ரீதியான உணர்வு எப்படி தகுதியுள்ள ஒருவரை அவரது மறைவின்போது கூட புறக்கனிக்கச் செய்துவிட்டது எனபதைப் பற்றி அக்கறையுடனும், தற்போதைய தமிழ் சமூகம் குறித்தான கவலையுடன் எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல இலங்கை தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ”தாமரை பூத்த தடாகம்” என்ற கட்டுரையில் அவரது இளமைக் காலங்களில் அவருக்கிருந்த இசையுடனான அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.


அதில் ஓரிடத்தில்

//தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான்.//

//அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்//

எனற தனது இசை அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்கிறார்.


பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”க் கட்டுரையில் எப்படி ஒரு நல்ல இசையை அனுபவிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகவே நமக்குக் காட்டுகிறார். தனது குட்டிக்கு பால் தராத ஒரு ஒட்டகம எப்படி இசைக்கு மயங்கி தாயுணர்வுடன் தனது குட்டிக்கு பால் தந்தது எனபதை குறித்தான ஒரு மங்கோலியத் திரைப்படம் குறித்து சொல்லும்போது இசையின் வலிமையை குறிப்பால் உனர்த்துகிறார்.


ரா.கிரிதரன் எழுதிய ”எப்படிப் பெயரிட” ( How to name it?") என்ற இளையராஜாவின் அருமையான இசைமுயற்சி எப்படி கண்டுகொள்ளப்படாமலேயே போனது என்பது குறித்தும், அதன் சிறப்பு குறித்தான கட்டுரை என்னைப்போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக இருக்கும்..


ஒரு நல்ல நாதஸ்வர இசையில் மனம் கரையும் ஒரு வெள்ளையனைப் பற்றிய ஒரு கதை தி.ஜானகிராமனின் ”செய்தி” கதையிலும், இன்றைய சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்களின் தரம் குறித்தும், அவர்களது இசை அறிவு குறித்தும், சபாக்களில் பாட கிடைக்கும் வாய்ப்புகளுக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றியும் அங்கதமான நடையில் தேசிகன் எழுதியுள்ள “கல்யாணி” கதையும், ராமன்ராஜாவின் வழக்கமான அதிரடி நகைச்சுவையுடன் கூடிய அறிவியலைக் கலந்துதரும் ”வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்” கட்டுரையும் வாசகர்களை அதிகம் கவரும்.

இதுதவிர கர்நாடக இசைப்பிரியர்களுக்கென எழுதப்பட்டுள்ள பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.

மொத்தத்தில் சொல்வனத்தில் இதுவரை வெளியான இதழ்களில் இந்த இசைச் சிறப்பிதழ் ஆகச்சிறந்த சொல்வனம் இதழ்களில் ஒன்றாக இருக்கும். இனிமேல் வரும் இதழ்கள் இதையும் விஞ்சும்படி தயாரிக்கவேண்டிய சோதனை சொலவனம் குழுமத்தாருக்கு...

ஆதரித்து, வாழ்த்த வேண்டிய இதழ் சொல்வனம் எனபதில் சந்தேகமில்லை..

Sunday, December 20, 2009

நேரில் கண்ட விபத்து

நேற்றிரவு வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.

உள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.

அந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.

மத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.

நான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது? எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.

நரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா?

Sunday, December 13, 2009

தோஹா (கத்தார்)வில் மழை.



கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மாலை முதல் இந்த நிமிடம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.

நம்மூரில் பெய்வதுபோல அடைமழை நேற்றிரவும் இன்று அதிகாலையும் பெய்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் மழை என்பது அபூர்வம். நம்மூர்போல மழைக்கால மழையாக இருப்பதில்லை. எப்போதாவது ஏற்படும் புயல்சின்னங்கள் மூலமே மழை பெய்கிறது. ஆதலால் எப்போதும் சேதாரங்கள் இல்லாமல் மழைகள் செல்வதில்லை.

போன மாதம் ஜெத்தாவில் ( சவுதி)மழையினால் கிட்டத்தட்ட 120 பேர்கள் வரை இறந்தனர். 2007ல் ஏற்பட்ட கோரமான மழையினால் பல நாட்கள் மஸ்கட் (ஓமன்) நகரம் தண்ணீரில் தத்தளித்தது. குடிக்கக்கூட நீரின்றி மக்கள் சில நாட்கள் இருந்தனர். ஓமன் நாடு முழுதும் பேரழிவைச் சந்தித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில், சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் இருப்பதில்லை. மழை எப்போதவது பெய்வதால் அதற்கு தனிக்கவனம் செலுத்துவதில்லை. நம்மூர் போல எல்லாக் காலநிலைகளுக்கும் ஏற்ற "ஆல்வெதர்" சாலைகளும் கிடையாது. அதானாலேயே வண்டிகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும், ஆட்கள் ஜலசமாதியடைவதும் சர்வசாதாரனமாக நடக்கிறது. நல்லவேளையாக கத்தாரில் அந்த அளவுக்கு பயங்கர மழையாக இல்லாமல் நல்ல மழையாகவே இதுவரை பெய்து வருகிறது.



மேகம் மறைத்த ஆசிய விளையாட்டுப்போட்டி நினைவு விளக்குத்தூண்.





மழையில் மிதக்கும் தோஹா.

இங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மன்னும், நீரும் தொடர்ச்சியக வண்டிச் சக்கரங்களில் அரைக்கப்பட்டு அது கூழாகி அந்த இடங்கள் மனிதன் கால் வைப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகி பின்னர் வண்டிச்சக்கரங்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று தூசியாகி மீண்டும் அதன் இருப்பிடம் அடையும்.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்திலுள்ள நீரைமட்டும் உறிஞ்சி வெளியே விடுவார்கள். இதர இடங்களுக்கு நான் மேலே சொன்ன கதிதான்..

நம்மூரிலாவது ஆங்காங்கே குளம் குட்டைகளில் ஒரு 10 முதல் 20 சதமான தண்ணீராவது சேரும், பின்னர் ஏதோ ஒரு வகையில் பயன்படும். ஆனால் இங்கெல்லாம் அப்படியே தாழ்வான இடங்களில் தண்ணீர் சேர்ந்து முழுதும் ஆவியாகியும், தரைக்குள்ளும் சென்று வீணாகும்.

நம்மூரில் மழைபெய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சி இங்கும் ஏற்படும். ஆனால் நம்மூர் போல கடைக்குப் போய் ரெண்டு பஜ்ஜியும், ஒரு டீயும் சாப்பிட்டு மழையை அனுபவிக்க முடியாது.. அல்லது வெளியே சென்று மழையில் நனைதல் சாத்தியமில்லை.

இனி இந்த மழை ஓய்ந்து வெயில் வந்துவிட்டால் அடுத்த வருடமோ இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் மழையைப் பார்க்க முடியும்.

இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு மழையைப் பார்க்காமல் சென்ற குறை இப்போது கத்தாரில் வந்த மழையினால் தீர்ந்தது. மழையைப் பார்க்காத ஒவ்வொரு ஆண்டும் மனதை என்னவோ செய்கிறது.. என்னமோ யாருமே இல்லாத அல்லது சீக்கிரம் அழியப்போகும் உலகில் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த 2009 இந்த மழையினால் அருமையாக கழிந்தது..

மழை பெய்து முடிந்தால் கடுமையான குளிர்காலம் ஆரம்பிக்கும். அதையும் அனுபவிக்க வேண்டியதுதான்..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என்ற பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை..

அந்தப்பாடலின் ஒலியும், ஒளியும் இங்கே..




(படங்கள் எனது அலைபேசியில் எடுத்தது.)

Saturday, December 12, 2009

சீ திஸ் விமர்சனம் ஐ சே... ( குயிக் கன் முருகன்)


ரைஸ்பிளேட் ரெட்டிதான் வில்லன் சார்..

குயிக் கன் முருகந்தான் ஹீரோ சார்..

வில்லனோட ”வப்பு” தான் மேங்கோ சார்

”ரவுடி”தான் ரைஸ் பிளேட்டோட கையாள் சார்.

”மெக் தோசா” தான் ரைஸ்பிளேட் ரெட்டி விக்கிற தோசையோட பேரு சார்..

" குயிக் கன் முருகன சுடுறவன் இன்னும் பொறக்கலை, ஐ சே” அப்படின்னு சவுண்டு விடுற குயிக் கன்ன ரைஸ் பிளேட் ரெட்டி கொன்னுடுறான்..

குயிக் கன் முருகன் பசுக்களை பாதுகாக்கிற, சைவ உணவுக்கு ஆதரவு அளிக்கும் மாட்டுப் பையன், அதாங்க கவ் பாய் பாய் (cow Boy)

ரைஸ் பிளேட் ரெட்டி (நாசர்) ஊர்ல இருக்குற சைவ ஓட்டலையெல்லாம் அவனோட அடியாள்கள வச்சி பிடுங்கி அசைவ ஓட்டலா மாத்துறான். அத தட்டிக்கேட்ட குயிக் கன் முருகன சுட்டுக்கொன்னுர்ரான் ...

குயிக் கன் முருகன் மேல ( செத்து) போய் சித்திரகுப்தண்ட்ட பூமியில் ரைஸ்பிளேட் செய்யுற அநியாயங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பூலோகத்துக்கே மனுஷனா பசுக்களை காப்பாத்துறதுக்கும், சைவ பழக்க வழக்கத்த காப்பாத்துறதுக்கும் திரும்பி வந்து பூமியில பெரிய ஆளா ஆய்ட்ட நம்ம ரைஸ் பிளேட் ரெட்டிய பழி வாங்குறதுதான் கதை.

நாலு பைட்டு, ஆறு சாங்கு, மூனு செண்டி கடைசியில சுபம்னு பாத்துப் பாத்து அலுத்துபோன ஆளுகளுக்கும், நகைச்சுவைய வித்தியாசமா குடுத்தா ரசிக்கத் தெரிஞ்ச ஆளுகளுக்கும் நான் இந்த படத்தை சிபாரிசு செய்வேன்.. கமல் டைப் காமெடியையும், வடிவேல் காமெடியையும், விவேக் காமெடியையும் மட்டுமே காமெடினு நம்புற ஆளுகளுக்கு.. தயவு செஞ்சு இந்தப் படத்துக்கு போயிறாதீங்க..

ரைஸ்பிளேட் ரெட்டியால சுடப்பட்டு மேலோகம் போற குயிக் கன்னுக்கு அங்க லட்சுமிசாமியப் பாக்குறாரு.. காலண்டர்ல பாத்த மாதிரியே இருக்குனு சொல்லிட்டு அடுத்த ரூமப்பாத்தா தேவலோக ரம்பைகள் ஸ்டெப் வச்சு டான்ஸுக்கு ட்ரெயினிங் எடுத்திட்டிருக்காங்க..

எப்படியாச்சும் பூமிக்குப் போயி அந்த ரைஸ்பிளேட் கிட்ட இருந்து பசுக்கள காப்பாத்தனும்னு சித்திரகுப்தன்ட்ட கெஞ்சுறார். அவரும் சீனியாரிட்டி மற்றும் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் விளக்கிட்டு இருந்தாலும் உங்க கேஸ் வித்தியாசம்கிறதனாலயும், வெஜிடேரியனிஸம்தான் இப்ப நீட் ஆஃப் த ஹவர் எப்படின்னு சொல்லி அவருடைய மறுஜென்மத்திற்கு (மறுபடியும் குயிக் கன் முருகனாவே)அப்ப்ரூவ் பன்றார்.

பூமிக்கு வந்து ரெட்டிய தேடிப்புடிச்சு அவன கொல்றதுதான் மீதிக்கதை.

இந்தியா கேட் பக்கத்துல மேலோகத்துல வந்து இறங்குறதும் அதுல ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் ஆகி பாதி ட்ரெஸ்ல வந்து இறங்குறவருக்கு மீதி ட்ரெஸ் மேலோகத்துல இருந்து சாரி ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் அப்படின்னு சொல்லிட்டு மீதி ட்ரெஸ்ஸும் வந்து இறங்குறதுல ஆரம்பிச்சு, வில்லனுக சுடுற துப்பாக்கிக் குண்டை பல்லுல கவ்வுறது, கையில புடிக்கிரது அப்படின்னு பல கிறுக்குத்தனமான ஜோக்ஸ்.


இதுக்கு நடுவுல் குயிக் கன் முருகனோட அண்ணன், மற்றும் அன்னிய பாக்குறதும், ரைஸ்பிளேட் ஆளுங்க குயிக் கன் முருகன்னு நெனச்சி கொன்றுவிட்டுஅவங்க அண்ணிய மெக் தோசைக்கு அருமையான ரெசிப்பிக்காக கொண்டுபோக பழிவாங்குறார் ஹீரோ, குயிக் கன்

ரம்பா வோட பேரு மேங்கோ.. ரைஸ்பிளேட்டோட காதலியா வர்ராங்க..நல்ல அழகு இந்தப்படத்துல..


இந்த படத்துல அப்படி என்ன விசேஷம்??

நம்ம எகத்தாளமா பாக்குற பழைய சினிமா படங்களையும், ஒருகாலத்துல எம்.டீ.வியிலோ, வி.டீவியிலோ வந்த “குயிக் கன் முருகன்” அப்படிங்கிற ஒரு கேரக்டரை அப்படியே கிண்டல் பன்னி ஒரு முழுநீளத் திரைப்படம் எடுப்பதென்பதும் அதை வனிக ரீதியாக வெற்றிபெற வைக்க முடியும் என்பதும் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை.. ஆனல் நம்பி எடுத்திருக்கிறர்கள்.. வெற்றி பெற்றார்களா எனத் தெரியவில்லை.

கதை முன்னும், பின்னும் போவதும், தொடர்ச்சி இல்லாமல் போல தெரிவதும், காமெடிப் படத்தில் வில்லன் மிக சீரிஸாக இருப்பதும் பலவீனங்கள்..


பழைய கால முறையில் ட்ராப் த கன் ஐ சே என்பது போல எதற்கெடுத்தாலும் ஐ சே சேர்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது கேட்க..

கேரக்டர்களின் பெயர்களும் கன் பவுடர், ரவுடி எம்.பி.ஏ, ரைஸ்பிளேட் ரெட்டி, மேங்கோ டாலி என வித்தியாசமாய்த்தான் வைத்திருகிறார்கள்.

இந்துக்கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள்..ஆனல் இந்து கடவுள் படமல்ல. யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ இல்லை.. அப்படி இருப்பின் அது தற்செயலே என சொல்கிறார்கள். நம்புவோம்..

இதர மதங்கள் சொல்லும் மேலுலகம் என ஒன்றிருப்பதை நம்பவில்லையோ, இவர்கள்??

மற்றபடி நான் ரசித்த ஒரு திரைப்படம் இது..

அதன் ட்ரெயில இங்கே

Wednesday, November 18, 2009

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்




சங்க கால இலக்கியங்கள் நமக்கு அறிமுகம் ஆவதெல்லாம் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பாடலில் முதல் இரண்டு வரியாகவோ அல்லது காதல் காட்சிகளில் பின்னனியாகவோ ஓட விடுதல் மூலமே..

காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் அடிக்கடி சங்க இலக்கியங்களில் உள்ள சுவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டியும் வந்தார்.

அதற்குப்பின்னர் தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை முக்கியப்பாடமாக எடுத்து படிப்போர் தவிர இதர தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களில் பரிச்சியமோ, அப்படி ஒன்று இருப்பதை அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஜெயமோகனின் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அதில் சங்கச் சித்திரங்களும் ஒன்று.

அவருக்குப் பிடித்த சங்க காலப் பாடல்களை தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கதையாகச் சொல்லி அந்தப் பாடலின் எளிய தமிழ் வடிவத்தை அந்தக் கட்டுரையின் இறுதியில் தருகிறார். படிக்க படிக்க சுவாரசியமாகவும், சங்க காலப் பாடலை நாம் நேரடியாக படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோலத்தெரிந்த அதே பாடல் அவரது எளிமைப் படுத்தப்பட்ட பாடலை படித்த பின்பு மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.

பாடல்களை அக்குவேறாக ஆனிவேறாக அலசாமல், அந்தந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்லியிருப்பது படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் எப்போதுமே தாண்டிச் செல்லவே விரும்புவோம். ஆனால் அதே விஷயத்தை நமக்குப் பிடித்ததுபோல அறிமுகம் செய்யும்போது அதன்மீது ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். அதைத்தான் இந்த சங்கச் சித்திரங்கள் செய்கிறது.

தமிழர்களின் சொத்தான சங்கப்பாடல்கள், கூலிக்கு மாரடிக்கும் பெரும்பான்மையான தமிழாசிரியர்களால் தானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தனது மாணவனுக்கும் சரியாக சொல்லித்தராமல் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் சங்கப்பாடல்களின் வாசனையே இன்றி பள்ளிக்கூடங்களைத் தாண்டிவந்துவிட்டது.

ஒரு நல்ல ஆசிரியனைபோல நல்ல விஷயங்களை நமது மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கும் ஜெயமோகனின் இந்த உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

ஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சமயத்திலேயே பரவலான பாராட்டைப் பெற்றது இந்த சங்கச் சித்திரங்கள்.

Sunday, November 15, 2009

ராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை சொல்லி.

ராமன்ராஜா என்ற பெயர் எழுத்துலகில் எனக்கு அறிமுகம் ஆனது சொல்வனம் இதழில்தான். அவரது கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் பொதுவாக அதிகம் விவாதிக்கப்படாத வறண்ட தலைப்புகள்.

அப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசகனை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைப்பதென்பது சவாலான விஷயம், சொல்லப்போனால் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் அப்படி சுவாரசியமாக எழுதிவிட முடியாது.

தமிழில் சுஜாதாவுக்கு அறிவியலை எளிய மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சென்றவர் என்ற நற் பெயரும், இலக்கியத்தை தேவையில்லாமல் எளிமைப்படுத்தினார் என்ற கெட்ட பெயரும் உண்டு.

அவரது வரிசையில் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதிலும் அதை எளிதாய் மாற்றுவதிலும், ஜனரஞ்சகமாக்குவதிலும், சொல்லப்படும் விஷயம் எந்த விதத்திலும் நீர்த்துப்போகாமலும் வாசகர்களுக்குத் தருவதில் வெற்றி பெற்று வருகிறார் திரு.ராமன் ராஜா அவர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளில் காணப்படும் வித்தியாசமான தலைப்புகளினால் ஈர்க்கப்படும் வாசகன் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் அதன் சரளமான நடையிலும், நகைச்சுவையிலும் இருந்து வெளிவருதல் சாத்தியமில்லாத ஒன்று. ராஜன் ராமனின் விசிறியாக மாறிவிடுவார். அப்படிப்பட்ட சிறந்த நடையைக் கொண்டது அவரது எழுத்துக்கள்.

சில தலைப்புகள்..

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்.

விழப்போகிறது

பளிச்சென்று எரிந்த பொருளாதாரம்

எறும்பு மூளையின் சிறந்த முடிவு.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

இன்னும் பல...

அவரது நான்கே நான்கு கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எனது கருத்தாக இதைப் பதிக்கிறேன். நிச்சயம் நீங்களும் நான் சொல்வதை உண்மை எனக் கண்டுகொள்வீர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளின் சுட்டிகள் இங்கே.

Wednesday, September 16, 2009

இனிமேல் இன்று ஒரு தகவலை கேட்க இயலாது.


ஊடகங்களில் குரலால் மட்டுமே பிரபலம் அடைய வேண்டியது வானொலியில்தான்.. தமிழகத்தில் அனைவரையும் காலை 6.40க்கு மாநிலச் செய்திகளுக்கு முன்னதாக வரும் “ இன்று ஒரு தகவலை” கேட்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் தனது வித்தியாசமான குரலால் நல்ல நல்ல தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்வதை தமிழகமே கேட்டு மகிழ்ந்தது ஒரு காலத்தில்...

கிராமங்களில் இன்னிக்கு தென்கச்சி கதை நல்லா இருந்துச்சில்ல என ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளும் அளவு பிரபலமாக இருந்தது அவரது நிகழ்ச்சியும், அவரது குரலும்.


இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றியின் காரனமே துனுக்குச் செய்திகளை கேட்க விரும்பும் நமது மனநிலைதான் என எண்ணுகிறேன். அதை தென்கச்சி அவர்கள் தனது குரலில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி கதை சொல்லும் பானியில் சொல்லி இறுதியில் ஒரு நகைச்சுவை துனுக்குடன் சொல்லியவிதம் நம்மையெல்லாம் ரசிக்க வைத்தது.

இவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்ச்சி 1988 ஜூலையில் தொடங்கியது. அவர் வேலை செய்த நிலைய இயக்குனர் திரு.செல்வம் சொன்னதைத் தட்ட முடியாமல் ஆரம்பித்து பின்னர் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகவும், அதிக பட்சவருவாயை ஈட்டித்தரும் நிகழ்வாகவும் ஆனபின்பு அந்நிகழ்ச்சி தென்கச்சி அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஆனதாக அம்புலிமாமா வலைத்தளத்திற்கு அளித்த நேர்கானலில் கூறி இருக்கிறார்.

இனிய உதயம் என்ற இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

அது “ஈழத் தமிழர்கள்!'


அனைவராலும் விரும்பப்படும் அரிய மனிதராக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.தென்கச்சி கோ. சாமிநாதன்.

ஒரு அருமையான கதை சொல்லியை இழந்து வாடும் தமிழர் அனைவருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது அஞ்சலிகள்.

அண்ணாகண்ணன் அவர்களுக்கு தென்கச்சி அளித்த நேர்கானல் இங்கே

Sunday, August 23, 2009

ரப்பர் - ஜெயமோகனின்





ஜெயமோகனின் முதல் படைப்பான ரப்பரை வாசிக்கும் அனுபவம் நேற்றுத்தான் கிடைத்தது.. வர்ணனைகளின் மன்னனாகத்தான் இருந்திருக்கிறார் அன்றும், இன்றும்...

அது ஊமைச் செந்நாயாகட்டும், மத்தகமாகட்டும், விஷ்ணுபுரம் ஆகட்டும் தனது வார்த்தைகளாலேயே சூழ்நிலையை கண்முன் கொண்டு வரும் கலையை வரப்பெற்றவர்.

மரவள்ளிகிழகிற்காக ஒரு குழந்தையை அடித்து கொன்றவன் பெருவட்டன் என்ற பட்டம் பெறுவதும் அந்த குடும்பம் மீண்டும் மீள்வதும் ரப்பர் நாவல் என கொள்ளலாம். நாயர்கள் நாடார்களை விலங்குகளைப்போல கொல்ல, நாடார்கள் நாயர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக வளர்ந்த கதை ரப்பர். கோடீஸ்வரர்களாக இருந்த நாயர்களிடம் கூலி வேலை செய்த நாடார்கள் ரப்பரால் பெருவட்டர்கள் ஆனதும் கொட்டாரங்கள் அமைத்ததும் நாயர்கள் பொருளாதார நிலையில் கீழ்நிலைக்கு போனதும் பற்றிய நாவல் ரப்பர்.

தனது சுயநலத்திற்காக இயற்கையை காவுகொடுத்து வளர்க்கப்பட்ட ரப்பரால் ஒரு இனம் உயர்ந்ததும் இன்னொரு இனம் தனது போலி கௌரவத்தாலும் பழம்பெருமையினாலும் அழிந்த கதை ரப்பர்.

இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்...

ரப்பரின் ஆரம்பமே ஒரு பண்னை வீட்டுக்குள் கார் நுழைவதிலிருந்து ஆரம்பிக்கிறது..ஒரு மிகப்பெரிய குடும்பத்தின், மிகப் பணக்காரக் குடும்பத்தின் அழகை வர்ணித்துக்கொண்டே அது மியூசியம்போல இருக்கிறது என கதையில் வரும் டாக்டரைப்போலவே நம்மையும் நினைக்க வைக்கிறார். அதற்கேற்றார்போல் வர்ணனை.

பெருவட்டன் என்பது குடும்பப் பெயர்.. அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன?? அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன?? யார் செய்தது?? அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அழகாக விவரித்துக்கொண்டே அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் அழகாக விவரிக்கிறார்..

பெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது.

கங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். அவரைப்போலவே கிராமங்களில் இன்றும் எசமானனுகாக உழைக்கும் கங்காணிகளைப் பார்க்க முடியும். அவர்கள் எண்ணமெல்லாம் எப்படி தனது முதலாளிகளுக்கு உழைப்பது என்பதிலேயே இருக்கும். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது.

பணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார்.

அவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும்.

பெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்..பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார்.

பெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் ஜெயமோகன் தனது எழுத்துக்களின்மூலமாகவே கண்முன் நிறுத்துகிறார்.

பிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன்.

கங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது நாஞ்சில் பகுதியினுடைய சுற்றுப்புற சூழியல் கெடுதலுக்கு எதிராக தன்னாலான முயற்சிகளைத் தொடருகிறான். அதை மருத்துவர் ராமின் இடத்தில் வைத்து விவரிக்க தாத்தாவின் முடிவும் தொலைப்பேசியில் கிடைக்க லாரன்ஸ்-உடன் அவன் இணைவதாக கூறி முடிகிறது கதை.

’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல நாஞ்சில் நிலத்திற்கு சற்றும் பொருந்தாத ரப்பர் மரங்களை அதனால் கிடைக்கும் லாபத்திற்காக ’முதலாளிகள் ‘ பயிரிட வழக்கமான விவசாயம் நொடிய அதை எதிர்த்து களமிறங்குகிறான் லாரன்ஸ். ரப்பரால் கெட்டுப்போன சுற்றுப்புற சூழலையும் ரப்பரால் வளமடைந்த முதலாளிகளையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் அழகாக விளக்குகிறார்.

நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாவலின் ஓட்டத்தை அது ஏந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.


’நான் கடவுள்’ படத்தில் கடவுளை திட்டிய ஜெயமோகன் இதற்கு முன்னரே தனது முதல் நாவலிலேயே கடவுளை ஃபாதர் வாயிலாக திட்டியிருக்கிறார். அது கடவுளைக் குறித்தான அவமரியாதையோ எள்ளலோ அல்ல. கடவுளின் பிரதிநிதிகள் தனது தன்நிலை இழக்கும்போது அவர்கள் கடவுளை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே. ஜெயமோகனின் இதர நாவல்களைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முதல் நாவலிலேயே தனது முத்திரையை பதித்திருக்கிறார் ஜெயமோகன்.


நாவல் கிடைக்குமிடம் : கவிதா பப்ளிகேசன் No. 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை - 17

Saturday, August 15, 2009

சுதந்திரதின வாழ்த்துக்கள்




கத்தாரில் சுதந்திர தினம்.

ஒவ்வொரு தேசிய விழாக்களும் இந்தியத் தூதரகம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்படும் கத்தாரில் இன்று 62வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.


கத்தாருக்கான இந்தியத் தூதர் திருமதி தீபா கோபாலன் வாத்வா இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கூடியிருந்தவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செய்தனர்.



பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. சுதந்திரதின உரையை இந்தியத்தூதர் ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்தியப்பள்ளியான பிர்லா பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியத்தூதர் கேக்கை வெட்ட அனைவருக்கும் அது விநியோகம் செய்யப்பட்ட்து.

அனைவருக்கும் இனிமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கத்தைவிட சிறப்பாகவும், அதிக அளவு இந்திய மக்களின் பங்களிப்புடன் விழா நடைபெற்றது. ஜவகர்லால் நேருவைப்போல வேடமிட்ட ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்...



இந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் இந்திய சுற்றுலா குறித்து சிறு சிறு புத்தகங்கள் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்தது.

கத்தாரில் இருந்து வெளியாகும் தி பெனின்சூலா என்ற ஆங்கில நாளிதல் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.


அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். வெல்க இந்தியா...

சுதந்திரதின நிகழ்ச்சிகளின் தொகுப்புப் புகைப்படங்கள் கீழே ஆல்பமாக..

Tuesday, August 4, 2009

அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்


அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்.

சமீபத்தில் சொல்வனத்தில் படித்த திலீப்குமார் எழுதிய அக்ரஹாரத்தில் பூனை என்ற இந்தக் கதை தமிழில் நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று எனச் சொல்வேன்.

குஜராத்திக் குடும்பத்தில் நடக்கும் இந்த கதை சொல்லும் விஷயங்கள் பல..

மிக எளிய நடையில் நமக்குக் கதைசொல்லும் பாணியில் ஒரு நகைச்சுவை இழையுடன் இந்தக்கதை சொல்லப்படுகிறது. முதலில் ஆச்சாரசீலராய் இருப்போருக்கும் மனதில் இருக்கும் வன்மம்.. இத்தனை வன்மத்தை இயல்பாய் மனதில் வைத்துக்கொண்டு சாதாரனமாய் இருப்பவர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது இக்கதை.

அதே சமூகத்தில் முரடனாகவும், தீய பழக்கங்கள் கொண்டவனாகவும் அறியப்படுபவனுக்கு (சூரி) இருக்கும் நல்ல எண்ணம் மற்றும் குணம் இரண்டு நிகழ்வுகளில் காட்டப்படுகிறது.

பூ விற்கும் பெண்ணிடம் வம்புசெய்பவர்களின் சைக்கிளைக் கோவில் குளத்துக்குள் வீசுவது.... நீதிக்குப் பின்தான் சாதி எனபது அவனது கொள்கை...

பூனையை பப்லிப் பாட்டி மூக்குப்பொடி தேய்த்து அது சித்திரவதை அனுபவிக்கும்போது கூடிநிற்பவர்கள் அதைப்பார்த்து சிரிக்க, பூனைபடும் அவஸ்தையைப் பார்த்து தாளமாட்டாமல் சிரிப்பவர்களை நோக்கி அவன் மிக மிக மோசமான கெட்டவார்த்தையை உதிர்த்துச் செல்வது என அவனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை காட்டுவதும்..

பப்லிப்பாட்டியின் ஆசாரத்தன்மையையும், இறைவனுக்குப் பூஜை செய்யாமல் உணவு அருந்தாதவள் என்ற குணத்தை விஸ்தாரமாக விளக்கிவிட்டு, அதே பப்லிப் பாட்டி ஆத்திரத்தின் உச்சத்தில் வாயில்லாப் வாயில்லாப் பிராணியான பூனையைக் கொடுமைப் படுத்தக்கூட தயங்காதகுணத்தையும், தனது மருமகளை அவள் வார்த்தையால் விளாசுவதையும்.. பப்லிப் பாட்டியின் மகள் வியாதியால் அளவே இல்லாமல் பெருத்துக் கிடந்தும் அவளுக்காக கிழவி கண்ணிர் உகுப்பதையும், அவரது மருமகன் தன் மனைவியை உயிராக நினைப்பதையும் என பல குணாதிசயங்களைக் கொண்ட மக்களைக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.


அவரவர்களது குறைநிறைகளை ஏற்றி இறக்கிச் சொல்லாமல் அப்படியே சொல்லிச் செல்வதன்மூலம் கதையை இயல்பாய் இருக்கவிட்டிருக்கிறார் திலீப்குமார்

இந்தக் கதையைப்பற்றிய முன்னுரையாக சொல்வனத்தில் இப்படி இருக்கிறது...

// இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.//

ஆச்சரியமில்லை என நான் நினைக்கிறேன்.


திலீப்குமார் பற்றிய ஜெயமோகனின் பதிவு இது.
சொல்வனத்தில் திலீப்குமார் குறித்த திருமலைராஜன் எழுதிய அறிமுகப்பதிவு இது

Thursday, July 16, 2009

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்



இந்திய குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா?? (1987)

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.


இளமைக் காலம் :-

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்..

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ்ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்:-

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கினைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.


இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திப்பூர்வமான உறவைப் பேனினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.



ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டதுபோலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுடமறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப்பிரிவினை:-

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாய் கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :

” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”

என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:-

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடது என சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் ,காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

அவரைப்பற்றிய சிறு விவரனப் படம் இங்கே..



நன்றி: விக்கிபீடியா.

Sunday, July 12, 2009

வெளிநாட்டிற்கு வருகிறீர்களா??

வெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....

திரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...

கம்பெனியைப் பற்றி..

வேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..

முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..

01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா? இதர படிகள் எல்லாம் தனியானதா??

02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா?? இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா???

03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..

ஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நேர்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..

04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.

விசாக்கள்.(Visas)

இரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.

விசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)

ஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.

ரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)

இதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.

வேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...

துபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா?? சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.

விசாவில் கவனிக்க வேண்டியவை:-

01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)

02. உங்களது பாஸ்போர்ட் எண்.

03. உங்களது பிறந்த தேதி

04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு

05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..

இந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.

உங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்

ஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்ததுபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.

உங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.

உங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.

இந்தியத் தூதரகம்:-

இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.

வெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.


போலிஸ்:-

லஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..

லேபர் டிபார்ட்மெண்ட்:-

உங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.

இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.

ஆல் தி பெஸ்ட்...

Friday, July 10, 2009

கத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்

போனவாரம் கத்தாரில் இருக்கும் ஆஸ்பையர் பூங்கா சென்றிருந்தோம்.. ஆசியா விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளிகள், நீர்நிலைகள் விளையாட்டு மைதானம் எல்லாம் வைத்து பலவித பயண்பாடுகளை மனதில் வைத்துக் கட்டப்பட்டது.. அதன் படங்கள் கீழே...



நீர்நிலையில் மிதக்கும் வாத்துக்கள்...



பூங்காவிற்குள் இருக்கும் டீக்கடை...



செயற்கை ஏரி...



பூங்கா ஒரு பறவைப்பார்வை...




நீர் வளைவு.. ( ஆர்ச்)