Sunday, November 24, 2013

பாரதிமணி அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

24, September...

சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பழக்கமான பெரியவரை பார்க்கச் சென்றிருந்தேன். வழக்கமான அறிமுகத்திற்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருந்தார், தனது தொடர்ச்சியான கலகலப்பான பேச்சினால்.

சினிமா, நாடகம், எழுத்து, வேலை அனுபவங்கள் மற்றும் சில நகைச்சுவைத் துணுக்குகள் என கலந்து கட்டி பேசிக்கொண்டிருந்தோம். எனது இந்திய பயணத்தில் அவரைச் சந்திப்பதும் திட்டத்தில் இருந்தது.

இணையத்தில் பழகிய சில நாட்களில் அவர் எழுதிய புஸ்தகத்தைக் கேட்டு (பல நேரங்களில் பல மனிதர்கள் ) அதற்க்குண்டான பணத்தை தந்துவிடுகிறேன் எனச் சொன்னதற்கு இந்த புஸ்தகத்தை உங்களுக்கு தருவதன்மூலம் எழையாகிவிட மாட்டேன், யாரையாவது அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தார்.

சினிமா அவருக்கு அள்ளிஎல்லாம் கொடுக்கவில்லை. கிள்ளித்தான் கொடுத்திருக்கிறது.கிடைத்ததையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். எல்லாம் பெரிய இடத்து தொடர்புகள். சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆளுமை. இருப்பினும் துளி பந்தா பழகும் அற்புத குணத்துக்கு சொந்தக்காரர்.

பாரதி படத்திற்கு தனது கைக்காசை போட்டு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு கிடைத்த சன்மானம் ஒரு விமான டிக்கெட்டுக்கு கூட காணாது. அவ்வளவு சொற்பம் மற்றும் அற்பத்தொகை, இருப்பினும் தமிழின் ஒரு முக்கியமான படத்தில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக செய்து கொடுத்திருக்கிறார்.

தனது கையால் போட்ட காபியைக் கொடுக்காமல் யாரையும் அனுப்புவதில்லை.

முன்பின் பார்த்திராத இணையத்தில் மட்டுமே பழகியிருந்த என்னையும் அன்புடன் வரவேற்று பேசிய வயதில் மூத்தவரும் எனது அன்பு நண்பருமனான பாட்டையாவை அவரது பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்.

பந்தா இல்லாத பிறருக்கு தீங்கு நினையாத எங்கள் பாட்டையா நீடூழி வாழ இறைவன் அருளட்டும்.

வயோதிகம் படுத்தும் பாடும், துபாயும்..

போனமாதம் விசாவுக்காக குடும்பத்துடன் துபாய் போயிருந்தபோது குழந்தையையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தேன்.. வழியில் இந்த தம்பதியைப் பார்த்தேன். இந்தியராக / சர்தாராக இருப்பதால் மரியாதைக்காக சாஸ்த்ரிகால் ஜி எனச் சொன்னவுடன் மீண்டும் முகமன் சொல்லிவிட்டு, எப்படியாவது பேசவேண்டும் என்ற தவிப்பில் உரையாடலை ஆரம்பித்தார். எங்கு வேலை செய்கிறேன், இந்தியாவில் எங்கே, தமிழ்நாடு எனச் சொன்னதும் எனது ஹிந்தியைப் பாராட்டி சில வரிகள், அவர் அங்கு வந்ததுமுதல் தற்போது வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் கொட்டித்தீர்த்து விட்டார்.

தூரத்தில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. பெயர்த்தி.

குழந்தையோட அப்பா அம்மா வரலையா எனக் கேட்டதுதான் தாமதம்..

என்னோட பையனும், மருமகளும் ஒரே இடத்துல வேலை பாக்குறாங்க, ஆளுக்கொரு கார எடுத்துகிட்டு போறாங்க..

சாயந்தரம் ஆச்சின்னா ரெடி ஆகிட்டு மறுபடியும் சுத்தக் கிளம்பிர்ராங்க.. எங்க போறாங்கன்னுகூட சொல்றதில்லை.. குழந்தையையும் கூப்டுட்டு போறதில்லை..

பெரியவங்கன்னு சொல்லி கூப்ட்டு வந்தான்.. நின்னு அஞ்சு நிமிஷம் பேசுறதில்லை. வீட்டுக்குள்ளையெ உக்காந்திருந்தா பயங்கர போரடிக்குது. இந்தக் குழந்தை எப்ப பாத்தாலும் டி.வி பாத்துகிட்டே இருக்கு.. அதான் குழந்தைய கூப்டுட்டு வெளிய வந்தோம்னு சொல்லி முடிச்சார்.

முக்கியமான ஆதங்கம்.. பெருமைக்கு பெற்றொர்களை அழைத்து வந்துவிட்டு வார இறுதியில் நண்பர்கள் வீட்டுக்கு உணவுக்கு அழைத்துச் செல்வதுடன் பெரியவர்களுக்கான மரியாதை நின்று விடுகிறது..
சாப்பிட்டார்களா, இல்லையா என்றுகூட மகனோ, மருமகளோ கேட்பதில்லை என்ற வருத்தம்..

நான் நின்று ஒரு 10 நிமிடம் பேசியதில் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. வீட்டுக்கு அழைத்தார்கள். அவர் பேசிய பின்னர் வீட்டு நிலவரம் தெரிந்திருந்ததாலும், அடுத்த இரு தினங்களில் இந்தியா திரும்ப வேண்டியிருந்ததாலும் மரியாதையுடன் மறுத்து விட்டேன்..

இந்தியா முழுக்க பெற்றோர்களின் நிலை இதுதான் போல..

ஈராக்கிய அனுபவங்கள் ( ருமைலா எண்ணெய்க் கினறுகள்)

இன்றைக்கு வடக்கு ருமைலா (North Rumaila) என்ற எண்ணெய்க்கினறுகள் உள்ள ஒரு பகுதிக்கு ஒரு அலுவல் ரீதியான சந்திப்புக்காக சென்றிருந்தேன். ஒரு அமெரிக்க கம்பெனிக்கு அவர்கள் வாங்கும் ஒரு கருவியின் தரத்தை சோதிப்பதற்கான வழிகள் குறித்து பேசுவதற்காக. 

அது முடிந்த பின்னர் அந்தப் பகுதியை சுற்றிப்பார்க்க சென்றுவந்தேன். படமெடுக்க அனுமதி இல்லை. ( விதிகளை மீறுதல் கூடாது என்ற கொள்கையாலும், எங்கிருந்தாவது மெஷின் கன் நம்மைக் குறிபார்க்கும் என்ற பயத்தாலும் படம் எடுக்கவில்லை)

எங்கெங்கு பார்த்தாலும் எண்ணெய்க் கினறுகள். கச்சா எண்ணெயை கேதரிங் ஸ்டேஷன் எனப்படும் ஓரிடத்தில் சேமித்து அதை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். பெரும்பன்மையான எண்ணெய் தரையில் பள்ளம் தோண்டி பெரிய குளம்போல சேமித்து வைத்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு ஈராக் தினமும் 20 லட்சம் பேரல்களை உற்பத்தி செய்கிறது. டாலர்களில் கிட்டத்தட்ட 300 மில்லியனை தினமும் சம்பாதிக்கிறது. 2015க்குள் ஆறுமில்லியன் பேரல்களாக உற்பத்தியை அதிகரிக்க திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. (அதனால்தான் எங்கள் பிழைப்பு ஓடுகிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை  )

இவ்வளவு வருமானம் இருந்தும் பாக்தாத்தில் ஆரம்பித்து, தென்கோடியான பாஸ்ராவரை எந்த ஊரையும் குறைந்த பட்ச சுத்தத்துடன் வைத்திருக்க முடியவில்லை.

இன்றுவரை ஈராக்கிய மக்களுக்கு எந்த ஊரிலும் பாதுகாப்பான குடிநீர் கிடையாது. யூப்ரடிஸ், டைகிரிஸ் நதியில் வரும் நீரை குழாய்களில் வழங்குகிறார்கள். காலையில் குழாயைத் திறந்ததும் முதல் 10 நிமிடம் கீழே ஓட விட வேண்டும். அப்படியே சாக்கடை நாற்றம். அதைத்தான் 100 சதவீத ஈராக்கியர்களும் பயன்படுத்த வேண்டும். நகரங்களில் தங்கியிருக்கும் என்னைப்போன்ற வெளிநாட்டவருக்கும் அஃதே.

எண்ணெய் துரப்பனப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு மட்டும் போர்வெல்களிலிருந்தும், மறு சுத்திகரிப்பு செய்யப்பட்ட வாயில் வைக்க முடிந்த அளவு உள்ள குடிநீர். ஏனெனில் அதில் 99% மக்கள் வெளிநாட்டவர்கள். இந்த வசதியைக்கூட செய்துதரவில்லையெனில் ஓடிவிடுவார்கள்.

ஈராக்கிய குழந்தைகளுக்கு 7 வயதில்தான் பள்ளி வழ்க்கையே ஆரம்பமாகிறது. 7 வயதுக்கு முன்னர் பள்ளிகளும் சேர்த்துக்கொள்வதில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. நம்மூரில் குழந்தைகள் 7 வயதில் 2ம் வகுப்பு முடிந்திருக்கும். எழுதப்படிக்க தெரிந்திருக்கும். ஆனால், ஈராக்கிய குழந்தைகளுக்கு 2ம் வகுப்பில்தான் எழுத்தும், படிப்பும் ஆரம்பமாகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் என்ன கற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதை உங்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். தொடர்ச்சியாக 5 நிமிடம் ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞனைக் கூட பார்ப்பது அரிது. பேசத்தெரிந்தவன் மட்டும் எண்ணெய்க் கம்பெனிகளில் பி.ஆர்.ஓ வாக சேர்ந்துகொள்கிறான்.

ஒரு நல்ல கல்லூரியோ, பாலிடெக்னிக்கோ, ஐ.டி.ஐயோ கிடையாது. எனவே இளைஞர்களின் பள்ளி வாழ்க்கை 5 ஆண்டுகளோடு சரி. இருக்கும் பல்கலைக் கழகத்தின் தரமும் அப்படியே...

நம்முர்போல எனக்கு இதைச் செய்துகொடு, அதைச் செய்துகொடு என கோஷமிட்டு வெளியே ஊர்வலம் எல்லாம் செய்ய முடியாது. மொத்தக்கூட்டத்தையும் கேள்வி கேப்பாடு இல்லாமல் அழித்து விடுவார்கள். இராக்கிய போலிஸ் மற்றும் மிலிட்டரியின் தினசரி சோதனைகளே ஈராக்கிய பொதுமக்களின் தைரியத்தை குலைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

எதற்கு இதெல்லாம் என்றால் இவ்வளவு வருமானமும் எங்கு செல்கிறது?

எனது வருத்தமெல்லாம்

ஏன் ஒரு அரசங்கத்தால் தனது குடிமக்களுக்கு குறைந்த பட்ச தேவையான சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரைக்கூட வழங்க முடியவில்லை?

நல்ல கல்லூரிகளையோ, பாலிடெக்னிக்கையோ, ஐ.டி.ஐயையோ நிர்மானித்து இளைஞர்களுக்கு கைத்தொழில் சொல்லித்தர முடியவில்லை?

தடையற்ற மின்சாரம், ஏழைகளுக்கு நல்ல உறையுள் இப்படி எதுவும் செய்ய முடியவில்லை?

இன்றைக்கு நடக்கும் வன்முறைகளுக்கு இப்படி வெட்டியாய் பொழுதுபோக்கும் இளைஞர்களும் காரணம்.

இதே ஈராக்கின் இன்னொரு மாநிலம்தான் குர்திஸ்தான்.. அவர்களும் சதாம் காலத்தில் அப்படி ஒரு கொடுமையை அனுபவித்தவர்கள். குர்தி என்பதற்காக (அவர்கள் சதாமை தலைவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை..அதனால் குர்திக்கள் சதாமால் கிட்டத்தட்ட சித்ரவதை செய்யப்பட்டார்கள்) அமெரிக்க படைகள் சதாமை அகற்ற ஆரம்பித்தபோது குர்திஸ்தானைத்தான் சதாம் அழித்தார்.

ஆனால், அதே குர்திஸ்தான் இன்றைக்கு மத்திய கிழக்கின் எந்த நாட்டுடனும் போட்டி போடும் அளவு அடிப்படை கட்டமைப்புகளான தண்ணீர், மின்சாரம், சாலைகள், வீடுகள், கல்லூரிகள், பல்கலைகள் என கலக்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே செய்திருக்கிறார்கள்.

அதெப்படி ஈராக்கின் பெரும்பகுதி இருட்டிலும், வசதியின்றியும் இருக்க ஒரே ஒரு மாநிலம் மட்டும் இப்படி ஒளிர்கிறது? ரொம்ப சிம்பிள்..

ஒளிவுமறைவற்ற வியாபாரம், மற்றும் அரசங்க செயல்பாடுகள், திட்டமிட்ட முன்னேற்றம், முடிந்த அளவு தனியார் மயமாக்கம், மொழிப்பற்று. இதை நாங்கள் ஈரக்கின் ஒரு பகுதி என்பதைச் சொல்லியே சாதித்திருக்கிறார்கள். (தனி குர்திஸ்தானம் கோரிக்கை சதாம் காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது)

இந்த ஏற்றத்தாழ்வை ஆராய்ந்தால் நமக்குத் தெரிவதெல்லாம் நல்ல தலைமை கிடைத்தால் / ஊழலற்ற ஆட்சியமைந்தால் / மக்களுக்குள் பிரிவினை இன்றி இருந்தால் / நமது நாடு என்ற எண்ணம் இருந்தால் ஒரே யூனியனுக்குள் இருந்துகொண்டே மிக நல்லவண்ணம் வாழலாம்,

தனது விதியை நொந்துகொண்டே நம்மை ஆள்பவர்கள் நம்மை கேவலமாக நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவில் இதை ஒப்பிட வேண்டுமெனில் இதர வடக்கு மாகானங்களையும், குஜராத்தையும் ஒப்பிடலாம்.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாலங்கள், சப் ஸ்டேஷன்கள் என ஒவ்வொன்றாக வருகிறது. காலத்தில் உறைந்துபோன ஈராக்கிய நகரங்கள் ஓரளவு நிமிரும்போது பக்கத்து நாடுகளும், குர்திஸ்தானும் எங்கேயோ சென்றிருப்பார்கள்.

தினமும் பிச்சையெடுக்கும் ஈராக்கிய பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் வயிற்றெரிச்சலாய் இருக்கும். குடும்பத்தலைவன் சரியில்லாத குடும்ப பெண்களின், குழந்தைகளின் நிலைதான் அவர்களுக்கும்.

6174 - சுதாகர் கஸ்தூரி

சுதாகர் கஸ்தூரியின் முதல் நாவலான 6174 எனும் நாவலைக் குறித்து கத்தார் ஏர்போர்ட்டில் ட்ரான்ஸிட்டில் அமர்ந்திருக்கும்போது சாட்டிங்கில் சொன்னார். சரி, நமக்குத் தெரிந்தவர் புஸ்தகம், வாங்கித்தான் படித்துப்பார்போமே என வாங்கி 4 மாதங்களாக தூங்கிக் கொண்டிருந்த்து. 

இம்முறை இந்தியாவுக்கு வரும் வழியில் ஷார்ஜாவில் 6 மணி நேரம் ட்ரான்ஸிட். இராக்கில் வேலை செய்வதில் இருக்கும் இன்னொரு அசௌகரியம் இந்த ட்ரான்ஸிட்டில் அமர்ந்திருக்கும் கொடுமை.

வந்து இறங்கிய உடன் நாவலை புரட்ட ஆரம்பித்தவன் எப்போது அதனுள் மூழ்கினேன் என நினைவில்லை. அப்படி ஒரு அருமையான நடை. கதையின் காலம் முன்னும், பின்னும் அலைபாய்ந்தாலும் எளிதில் சேர்ந்துவிட முடிகிறது. இந்தியா, பர்மா, கொரியா என பல நாடுகள் சம்பந்தப்படுகிறது கதையில். நிறைய கணக்குகள்குறித்த பக்கங்களும் உண்டு. படம் வரைந்து பாகங்களை விளக்கும் விளக்கப்படங்களும் உண்டு.

பல நூற்றாண்டுகளின் கதையாக இருப்பினும், கதையில் வருவோர் பேசிக்கொள்ளும் வசனங்கள் அன்னியத்தன்மையற்று எல்லோரும் 21ம் நூற்றாண்டுத்தமிழிலேயே பேசிக்கொள்ளுதல் படிப்பதை எளிதாக்குகிறது. லெமூரியக் கண்டமும் அதன்மர்மங்களும்தான் கதைக்களன். மிச்சமெல்லாம் அதனைச் சுற்றி நடப்பவை.

மிக மெலிதாக ஒரு காதலும் உண்டு.

இப்படிப்பட்ட ஊசலாட்டக் கதைகளில் லாஜிக் ஓட்டைகள் எளிதில் வந்துவிடும். முதல் நாவலாய் இருப்பினும், கடின உழைப்பைச் செய்து நிறைய ஆதாரங்களுடனும், பொதுக்கருத்தில் இருக்கும் விஷயங்களையும் இணைத்து ஒரு நல்ல நாவலைப் படைத்திருக்கிறார்.

உன்மையைச் சொன்னால் நான் அவ்வளவு நம்பிக்கையுடன் படிக்க ஆரம்பிக்கவில்லை. அவரது எக்ஸிகியூட்டிவ் தனமான படங்களைப் பார்த்து சரி, ஒரு நாவலை முயன்றிருப்பார், சுமாராக இருக்கும் என்ற முன்முடிவுடந்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் அவரது அசாத்திய உழைப்பும், சரியான தகவல்களை தர அவர் நன்கு முயன்றிருப்பதும், சுவரசியத்துக்காக எதையும் தேவையில்லாமல் சேர்க்காமல் ஆனால் விறுவிறுப்பான நடையில் எழுதியிருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

இரா.முருகன் முன்னுரை பொய்யில்லை. நிஜமாகவே புஸ்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.

சுதாகர் கஸ்தூரி தமிழின் டான் பிரவுனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் டான் பிரவுனையெல்லாம் படித்த்தில்லை. ஆனால், இன்னொரு அருமையான கதை சொல்லி தமிழுக்கு கிடைத்திருக்கிறார் என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்.

சுதாகர் கஸ்தூரி அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், படிக்காதவர்களுக்கு அவசியம் வாங்கிப் படியுங்கள் என்ற பரித்துரையும் செய்கிறேன். நிச்சயம் ஒரு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும். Sudhakar Kasturi

பாட்டியின் கல்யாண பத்திரிக்கை

யார் யாரெல்லாம் இந்தக் கல்யாணத்துக்கு நாலு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தீர்கள்?  காலஞ்சென்ற பாம்பே லக்ஷ்மி என்றழைக்கப்பட்ட எனது பாட்டியின் கல்யாண பத்திரிக்கைதான் இது. அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.. — with Thiyagarajasarma Mayoorakiri.

இமாம் ஹுஸ்ஸைன்

பரவாயில்லையே.. எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்கே இந்த இமாம் ஹுசைன் நினைவு தினத்தில்கூடன்னு நெனச்சேன் இன்னிக்கு காலையில.. நேத்து ராத்திரியும் மகிழ்ச்சியா ஊரச்சுத்தி படமெல்லாம் எடுத்து தள்ளுனேன். இன்னிக்கு காலையில சைட்டுக்கு போய்ட்டு இருக்கேன், போலிஸ் செக்போஸ்ட்டில் வழக்கமான சிரிப்பு இல்லை. இந்தியனா, சரி, கிளம்பு என வழியனுப்பினர். இவனுங்க இப்படி இருக்க மாட்டாங்களேன்னு நெனச்சிட்டே போனா, நேத்து ராத்திரி ஒரு எகிப்தியன்(பிரித்தானிய பாஸ்போர்ட் உள்ளவன்) இமாம் ஹுசைன் படம் போட்ட கொடியை இரண்டாய்க் கிழித்து காலுக்கடியில் போட்டு மிதித்திருக்கிறான். அந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி இன்றைக்கு வெடிக்கக் காத்திருக்கும் குக்கர் போலாகிவிட்டது பாஸ்ரா.

இராக்கிய பிரதமரும் அந்த எகிப்தியனை உடனே நாட்டைவிட்டு வெளியே அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார். இப்போது கோபம் தலைக்கேறிய மக்கள் எகிப்தியர்களையும், பிரித்தானியர்களையும் தாக்கக்கூடும் என உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதால் பரவலாக பதட்டம் இருக்கிறது. எண்ணெய்க் கம்பெனிகள் வேலைக்குப் போயிருந்த எல்லோரையும் கேம்புக்கு அழைத்துவிட்டது. நாளையும் வேலை இல்லை. (இமாம் ஹுசைன் இறந்த 10ம் நாள் நாளை)

இப்படியே பொங்காமல் போய்விட்டால் நல்லது. கடந்த ஓராண்டுகளில் கலவரம் ஏதும் இல்லாத பாஸ்ராவில் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பாஸ்ரா மீண்டும் இன்னொரு பாக்தாத் ஆகும். (தினமும் 40 முதல் 60 பேர் வரை உயிரிழப்பு) ஷியா, சன்னி சண்டைகளால்.

ஒரு கிறுக்கன் செய்த சிறு தவறு அமைதியாக இருந்த சமூகத்தை மூர்க்கத்தனமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இதிலும் ஒரு லாஜிக்குடந்தான் ஆட்களைத் தாக்க முயல்கிறார்கள். அவன் பிறப்பால் எகிப்தியன்.. எனவே எகிப்தியர்களைத் தாக்கு, பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறான். எனவே பிரித்தானியர்களையும் தாக்கு என்பதே..

டுயுட்டீ ஃப்ரீ

டுயுட்டீ ஃப்ரீக்கள் என்பது ட்ரான்ஸிட் பாசஞ்சர்களின் பணத்தை கறக்க ஒரு கவர்ச்சிகரமான வழி என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம். அப்போதெல்லாம் விமானத்தில் கால் வைத்ததில்லை. ஆனால், இப்போது புரிகிறது அந்த வாக்கியம் எவ்வளவு உண்மை என. இந்த 6 மாதங்களின் டூட்டி ஃப்ரீயில் நான் செலவழித்த தொகை ஒரு 1000 டாலர் இருக்கும். ரெண்டு மொபைல், பெர்ஃபியூம், சோவனீர் இப்படியாக. 

ட்ரான்சிட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது கடுப்பாக இருப்பதால் டூட்டி ஃப்ரீயில் சுற்றுவோம். என்னமாச்சும் ஆரம்பித்து அட, நம்மூரைக்காட்டிலும் 2000 ரூபாய் கம்மியாய் இருக்கிறதே என தேவையே இல்லாத மொபைலையும், அக்செசரீஸ்களையும் வாங்கிய பின்னர்தான் ஏற்கனவே நம்மிடம் ரெண்டு மொபைல் இருப்பது உறுத்தும்.

அதுவும் துபாய் டூட்டி ஃப்ரீ விடாத கருப்பு போல முழு ஏர்போர்டிலும் வியாபித்திருக்கிறது. தப்பிக்கவே முடியாத அளவு. என்னமாச்சும் வாங்க வைத்துவிடும்.

இனிமேல் பர்சை ஏதேனும் ஒரு பையில் ஒளித்து வைத்துவிட்டுத்தான் டூட்டி ஃப்ரீயில் சுற்ற வேண்டும் என வைத்திருக்கிறேன்.

இமாம் ஹுஸ்ஸைன் இறந்த நாள் மற்றும் கசப்பான சம்பவங்கள்

இமாம் ஹுசைனின் கொடியை இரண்டாக கிழித்து காலில் போட்டு மிதித்தவரை அடையாளம் கண்டுபிடித்து தர்ம அடி கொடுப்பதை வீடியோவாக்கி ஈரொநியூஸ் வெளியிட்டிருக்கிறது. 

இந்த பிரித்தானிய செக்யூரிட்டி அட்வைசரை கோபமான கும்பல் படுத்தும்பாடு காணசகிக்கவில்லை. ஆனால், ஒரு நாடே அவரது இறப்பை துக்கமாக அனுஷ்டித்துக்கொண்டிருக்கும்போது இப்படி அவமரியாதை செய்பவனுக்கு கிடைத்த தர்ம அடி அவன் செய்த புண்ணியம். இலையெனில் செத்து சுண்ணாம்பாகி இருப்பான் இந்நேரம். உன்மையில் அந்த கோபக்கார கும்பலிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதும் ஈராக்கியர்களே, அவர்களும் ஷியாக்களே.

இன்னும் 28 நாளில் அரபயீன் என அழைக்கப்படும் இமாம் ஹுசைனின் 40 ம்நாள் நினைவுதினம் வருகிறது. அதற்கு உலகம் முழுக்க ஷியாக்கள் 2 முதல் 3 மில்லியன் வரை குவிவார்கள்.

இந்த கசப்பான நிகழ்வு இப்படியே மறக்கப்பட்டுவிட்டால் நல்லது. இல்லையெனில் அடுத்து ஒரு வம்பு இருக்கிறது.

ஈராக்கிய பிரதமர் நூர் அல் மாலிக்கியும் இரு அமெரிக்க கம்பெணிகளையும், பிரித்தானிய கம்பெணியையும் ஒழுங்காக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

நம்மூரில் குறிப்பாய் தமிழகத்தில் ராமாவமி ஆனாலும், விநயகர் சதுர்த்தி ஆனாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நமது இந்து தெய்வங்களை. ஒருவர் கும்பிடும் தெய்வங்களை சட்டவிரோதமாக அவமதிப்பதும் நம்மூரில்மட்டும்தான் நடக்கும். அந்த கும்பல்களையும் தலைவன் என அழைத்து பின்னால் சொல்லும் கூட்டம் இருக்கிறது. அந்த மூர்க்கர்கள் கூட்டத்தில் மாநில முதலமைச்சரும் இருப்பதும் நம்மூரில்தான். ஈராக்போல எளிதில் உணர்ச்சிவயப்படும் சமூகமாய் இருந்திருந்தால் இந்தக்கூட்டம் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கும்.

இப்படி அவமதிப்பதை பொறுத்துக்கொள்ளுதல்கூட சுரனையற்ற தன்மையோ என எண்ணத்தூண்டுகிறது.

அரசாங்கமும், அதன் தலைவனும் பெரும்பான்மைக்கு எதிராக செயல்படுவது நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும் என நினைக்கிறேன்.

கடந்த சில நாட்களாக இந்த விஷயம் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது.

துபாயின் சுவாரசியங்கள்..

எவ்வளவு ரூபாய் வேண்டுமென்றாலும் எந்த நாட்டுக்கும் ஹவலாவில் அனுப்பி வைக்க ஆட்கள் கிடைப்பார்கள். பெரும்பாலும் மலையாள, குஜராத்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். அவர்களின் அலுவலக்ம் என்பது 10 க்கு 8 ல் இருக்கும். இரண்டு பணம் என்னும் மிஷினும், 2 கள்ள நோட்டா எனக் கண்டுபிடிக்கும் மெஷினும் வைத்திருப்பார்கள். நேர்மையும், குறித்த நேரத்தில் பணம் போய்ச் சேர்வதும் உத்திரவாதத்துடன் நடக்கும்.

உயர்ரக கார்களில் ( மெர்சிடிஸ், பென்ஸ், லெக்ஸஸ்போன்ற) சென்று எந்த ஹோட்டலில் நிறுத்தினாலும் அரைமணி நேரத்திற்குள் வெறும் மொபைல் நம்பரும், அந்த பெண்ணின் அரைநிர்வானப்படமும் போட்டு 5 விசிட்டிங் கார்டுகள் மஸ்ஸாஜ் எனப் பெயரிட்டு வைப்பரில் சொருகப்பட்டிருக்கும்.

எந்த எலெக்ரானிக் பொருளும் உடனே கிடைக்கும், அது உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும். இல்லையெனில் 24 மணி நேரத்தில் தருவித்துக் கொடுப்பார்கள்.

கிட்டத்தட்ட 150 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ம் ஒரே இடம் அமீரகம். குறிப்பாய் துபாய்.

ஒருவேளை உணவை 5 திர்ஹாமிலிருந்து 5000 திர்ஹாம் வரை சாப்பிடலாம். அதுவும் அருகருகே. ( 1 திர்ஹாம் = 17.30 இந்திய ரூபாய்கள் இன்றைய நிலவரப்படி)

எல்லா விதமான போக்குவரத்து வசதிகளும் துபாயில் உண்டு. கார், பஸ், ரயில், ட்ராம், வாட்டர் டாக்ஸி, கப்பல், விமானம், ஹெலிகாப்டர், ஆம்பிபியன் வகை வாகனங்கள் எல்லாம்.

எந்தப் பொருளுக்கும் உலகின் எந்த நாட்டுத்தயாரிப்பும் கிடைக்கும்.

எல்லா நாட்டு மக்களுக்கும் அவரவர் நாட்டுப் பொருட்கள் விற்கும் கடை இருக்கும்.

உலகின் எல்லா நவ நாகரீக மங்கையரை துபாயில் மட்டுமே பார்க்கலாம்.

ஏழை, பனக்காரன் என்ற வித்யாசம் விமான நிலையத்தில் துவங்கி எல்லா இடத்திலும் பார்க்கலாம். ஒரே நாளில் விசா சம்பந்தப்பட்ட வேலைகளை கூடுதல் பணம் கொடுத்து முடிக்கலாம். நம்மூரில் லஞ்சம் கொடுத்துச் செய்தல்போல. ஆனால், இங்கே அரசாங்கமே கூடுதல் பணம் வாங்கிக்கொண்டு முடித்துக்கொடுக்கிறது.

அரபு நாடுகள் எல்லாம் பாலை நிலங்கள் என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அப்படியே முற்றிலும் மாறான பிம்பத்தை துபாய் மட்டுமே அளிக்கும். பாலைவன நாட்டின் நடுவே ஸ்கீயிங் செய்ய இடமும், ஐஸ் ஸ்கேட்டிங்கும், மிகப்பெரிய மீன் தொட்டியும் இருப்பது வித்தியாசமாய் இருக்கும்.

காசிருந்தால் அம்மா அப்பா தவிர எதையும் வாங்கலாம் என்பது துபாயைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை.

எனது பார்வையில் பட்டதை எழுதி இருக்கிறேன். மற்ற அமீரக நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

உங்களுடன் உறுதியுடன்... (நமோ பாடல்..)

உங்களுடன் உறுதியுடன்... (நமோ பாடல்..)

(நரேந்திரபாய் மோடியைப் புகழும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மொழியாக்கம் கீழே. வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது)

10 ஆண்டுகளாக உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தனர்...

ஆனால், நாங்கள் உங்களுடன் உறுதியாய் நிற்கிறோம்...

10 ஆண்டுகளாக உங்கள் மீது பொய்களை பரப்பினார்கள்...

ஆனால், நாங்கள் உங்களுடன் உறுதியாய் நிற்கிறோம்...

10 ஆண்டுகளாக உங்களுக்கு எதிராக ஊடகங்களை வைத்து தாக்குதல்...

ஆனால், நாங்கள் உங்களுடன் உறுதியாய் நிற்கிறோம்..

நீங்களே (எங்களின்) நம்பிக்கை...

நீங்களே (எங்களின் ) எதிர்காலம்...

நாங்கள் உங்களுடன் உறுதியாய் நிற்கிறோம்...

உங்களுடன் உறுதியாகவும், முழுமையாகவும்.... (நிற்கிறோம்)

உண்மையுடன்..

வளர்ச்சியுடன்...

எதிர்காலத்துடன்...

மேம்பாட்டுடன்... (நிற்கிறோம்)

சிங்கங்களின் நிலத்திலிருந்து...

ஒரு சிங்கம்.. இந்தியாவுக்கும், உலகுக்குமான ஒரு பரிசாக...

உறுதியாக உங்களுடன்...

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1vBDpEtzCK8
Narendra Modi: 'Solidly with you' Singham Lezim mix
Singham Narendra Modi: Solidly with you A video made by the fans of Narendra Modi

எனது வாழ்வனுபவம்

பாளையங்கோட்டை - எஸ்.ஜி.ஜே நாடர் கம்பெணியில் அவர்களின் அக்ரோ டிவிஷனில் வேலை

தானிப்பாறை அருகில் ஒரு மாட்டுப்பண்ணையில் சூபர்வைசர்

டெல்லி அருகில் உத்திரப்பிரதேசத்தின் புலுந்த்சாகர் மாவட்டத்தில் டாட்டா கெமிக்கல்ஸில் கார்டன் சூப்பர்வைசர் வேலை.

ஜெயின் ஃபார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் கம்பெனியின் ஆந்திர பண்ணையில் ப்ளாண்டேஷன் சூப்பர்வைசர். ( பெங்களுர் மற்றும் ஹைதரபாத் அருகில்)

ஸ்டெர்லிங் ட்ரீ மேக்னத்தில் பிளாண்டேஷன் சூப்பர்வைசர். ( ஆந்திராவில் நெல்லூர் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தில் பார்வதிபுரம்)

திண்டுக்கல்லில் தங்கி நத்தம் பகுதியில் விஷவெள்ளரி எனப்படும் கெர்க்கின்ஸ் சாகுபடி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மேனேஜர்..

மஸ்கட்டில் அஸ்ஸரைன் குருப்பில் கார்டன் சூப்பர்வைசர் வேலை. (மஸ்கட் - ஓமன்)

பின்னர் தற்சமயம் வேலை பார்க்கும் கம்பெனியில் அட்மின் மேனேஜராய் சேர்ந்து இன்றைக்கு கண்ட்ரி ஹெட். (ஓமான், கத்தார், குவைத், அமீரகம் மற்றும் ஈராக்)

இதெல்லாம் கம்பெனி என்ற அடையாளத்துடன் இருந்த நிறுவனங்கள்..

இது தவிர ஆரம்பத்தில் நான் செய்த வேலைகளில்..

க்ரவுன் பினாயில் கம்பெனியில் ஏரியா சேல்ஸ்மேன் கம் சூப்பர்வைசர்.(மதுரை)

கேம்லின் பேனா கம்பெனிக்கு ரெப்ரெசெண்டேடிவ் (மதுரை)

ஆயுர்வேத இருமல் மருந்துக்கு ரெப்ரெசெண்டேடிவ் (மதுரை)

டோர் டு டோர் சென்று வீட்டுச்சாமான்கள் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மேன்.. (மும்பாய்)

எம்பொழப்ப பாத்து எனக்கே சிரிப்பாய் இருக்கும் சில சமயங்களில்.

இதில் எனக்கு ஒருத்தரும் பொண்ணு குடுக்கலைன்னு வருத்தம் வேற.. இப்படி எந்த வேலையிலும் நிரந்தரமில்லாத எனக்கு எவன் பொண்ணு குடுப்பான் என எனக்கு தோன்றியதில்லை. நம்ம திறமைய பாத்துகூட இவங்களுக்கு நம்பிக்கை வரலையே என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் பல வருடங்களாய்..  2006ல் எனக்காகவே பிறந்து போருரில் வளர்ந்துகொண்டிருந்த வீட்டுக்காரம்மாவைக் கைப்பிடித்தேன்.

எனது பள்ளி ஆசிரியர்கள்..

குட்டி ஒண்ணாப்பு : அழகம்மாள் அக்கா. ( தூங்கலைன்னா அடிப்பாங்க  )

ஒண்ணாப்பு : ஜானகி அக்கா. 

ஒரு மாதிரியான ஆன்குரல் கலந்த குரலில் ஓரோன் ஒன்னு, ஈரோன் ரெண்டு என ஆரம்பித்து வைத்தவர்.

ரெண்டாப்பு : சந்திராபாய் அக்கா. 

மூனாப்பு : பாக்கியம் அக்கா 

கணக்கு வரவில்லை என்பதற்காக தலையில் ஸ்கேலால் அடித்து ரத்தம் வர வைத்தவர் 

நாலாப்பு : வாலகுருசாமி அய்யா.

சொரி அய்யர் என்ற பட்டத்தை வழங்கி வகுப்பில் கடைசியில் அமரவைத்து ரசித்தவர். அப்போது உடம்பெல்லாம் சிரங்கு.

ஐஞ்சாப்பு : லில்லி ஜாய்ஸ் அக்கா.

வகுப்பில் திருடுபோன அவர்களது அடிஸ்கேல், பேனா, மைக்கூடு, போன்ற விலைமதிக்க முடியாத பொருட்களை திருடியவர்களை கண்டுபிடித்துக்கொடுத்ததால் என் மீது மிகுந்த பிரியமாய் இருந்தவர். மேலும் முழுப்பரிட்சை நேரத்தில் குடும்பத்துடன் தென்னிந்திய சுற்றுலா சென்றுவிட, பரீட்சை எழுதாமலேயே ஆறாம் வகுப்புக்கு போக ப்ரமோட்டட் கார்டு தந்தவர். தலைமை ஆசிரியர் ராமசாமி அய்யா ஆசியுடன் தான்.

ஆறாப்பு : காந்தி ஐயா / பாக்கியம் அக்கா.

எதற்காக பாக்கியம் அக்கா வகுப்பில் இருந்து காந்தி ஐயா வகுப்புக்கு மாற்றினார்கள் என நினைவில்லை. ஆனால் எனது அண்ணன் அவரது மாணவன் என்பதால் வெங்கட்ராமன் தம்பியாடா நீயி, முட்டாப்பயலே என ஒவ்வொருமுறையும் எங்க அண்ணனுடன் கம்பேர் செய்தே என்னை நொங்கெடுத்தவர்.

ஏழாப்பு : பாக்கியம் அக்கா.

பெரியப்பா பள்ளியின் ஹாஸ்டலில் சமையல்காரராய் இருந்தார். பெரியப்பா மீதான மரியாதையால் அடி கொஞ்சம் குறைவாக கொடுத்தவர். சாமி மகனாடா நீயி, நல்லாப்படிக்கனும் என்னா?

எட்டாப்பு : மெய்ஞான குரு அய்யா.

இவர் பையனும் நானும் ஒரே வகுப்பு மற்றும் நண்பர்கள் என்பதால் சாத்துமுறை குறைவு. அவனும் என் ரேஞ்சுக்குத்தான் படித்தான்.

ஒம்பதாப்பு : சோமசுந்தரம் அய்யா.

வரலாறு & புவியியல் பாடம் எடுத்தவர். 10ம் வகுப்பில் 66 மார்க் வரலாறு, புவியியலில் எடுத்தேன். அதுதான் எனது அதிகபட்ச மாக் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில். அவரிடம் நான் கேட்ட அறிவுபூர்வமான கேள்வி துருவப் பிரதேசங்களில் ஏற்கனவெ குளுருது, இதுல எதுக்குங்கய்யா ஏ.சி.ரூமு? அப்போது ஏ.சி. என்பது எப்படி இருக்கும் என்பது கற்பனையில்கூட தெரிந்திராத காலம்.

பத்தாப்பு : அக்பர் அலி அய்யா.

காதில் கடுக்கன் போடும் அளவு கிள்ளுவார். அவர் கிள்ளி முடித்து 1 மணி நேரத்துக்காவது எரிச்சல் இருக்கும். கணக்கில் அவர் கொஞ்சம் தடுமாறுவார். அதனால், அவருக்கு தெரியாத கணக்குகளை சாய்ஸில் விட்ருங்கப்பா என்பார். ஒருமுறை நானும் அவர் போர்டில் கணக்குப்போடுவதற்கு தடுமாறுவதைப் பார்த்துவிட்டு சும்மா இல்லாமல், பரவாயில்லைய்யா, நங்க சாய்ஸ்ல விட்டுர்ரோம் எனச் சொல்ல, அப்பாவை அழைத்துவரச் சொல்லிவிட்டார், முறையான சாத்துமுறை மற்றும் கிள்ளலுக்குப் பின்னர்.

நாடார் மஹாஜன சங்க ஐ.டி.ஐ - கள்ளிக்குடி - எந்த ஆசிரியர் பெயரும் ஞாபகமில்லை. ( வகுப்பு நடந்ததே 40 நாட்களுக்குள்தான் இருக்கும், 3 மாதங்களில்) இங்குதான் 15 வயசுப்பய கூட சிகரெட் அடிப்பார்கள் என்பதையும், சோ கால்டு பலான புத்தகங்களை வகுப்பிலேயே படிக்கும் தைரியம் பெற்ற நண்பர்களையும் கொண்டிருந்தேன். ( இது மத்திய அரசின் என்.சி.வி.டி அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதை ஐ.டி.ஐ நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சொன்னதால், அந்த வருடம் வேஸ்ட் ஆனது. அந்த நேரத்தை கல்லுப்பட்டியின் கே.கே.எஸ். சுப்பையஞ் செட்டியார் கடையில் துணியைக் கிழித்துக்கொண்டிருந்தேன்.)

பதினொன்னாப்பு : அப்பாஸ் அலி அய்யா.

ஆல் த பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் 12பி க்கு வந்திருங்கடா, ஐ வில் டேக் போயம் கிளாஸ் .. என்ன புரியுதா? என ஒரு வித்யாசமான ஆங்கிலத்தை அறிமுகம் செய்து வைத்தவர். நானும், பிரகாஷ் ராஜகோபாலும், பள்ளியில் முதலிடத்தைப் பிடித்த பஷீர் அஹமதுவும் சந்தித்துக்கொண்டு மிக நெருக்கமானது, இந்த வகுப்பில்தான். இன்றும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.

பன்னெண்டாப்பு : அப்பாஸ் அலி அய்யா.

நாமளே ஆங்கிலத்தை படிச்சாதாண்டா பொழைக்க முடியும் என எங்களை ஆங்கிலம் படிக்க வைத்தவர். டெய்ரி சயின்ஸ் எடுத்த சாந்தி அக்காவுக்கு நெருக்கமாக பிரகாஷும், பஷீரும் இருக்க, நான் மட்டும் மந்தையில் இருந்து பிரிந்த ஆடாக இருந்த காலம். இருப்பினும் பிரகாஷின் உதவியால் பள்ளியில் மூன்றாம் இடத்தில் தேறினேன்.

டிப்ளமோ இன் அக்ரிகல்ச்சர் : கண்ணன் சார், கணேசன் சார், கோவிந்தன் சார் இவர்களே மனதில் நின்றவர்கள். இம்மூவரிலும் மாணவர்களைப் பார்த்து பேசிக்கொண்டே போர்டில் எழுத்தை நேர்வரியாக எழுதும் கோவிந்தன் சாரும், எண்டமாலஜியையும், ஜெனிடிக்ஸையும், அக்ரோ கெமிக்கல்ஸையும் அழகாய் நடத்திய கண்ணன் இருவரையும் மிகவும் பிடிக்கும். கண்ணன் சார் மூலமாகத்தான் 90 மினிட்ஸ் அட் எண்டப்பி கதையை முதன் முதலில் கேட்டு இஸ்ரேலியர்கள் மீதான ஒரு பிடிப்பு உண்டானது.

பிரகாஷ் ராஜகோபால் என்பவர்(ன்) அய்யாவும் அல்ல, சார் ருமல்ல.. ஆனால், எல்லா ஆசிரியர்களைவிடவும் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தவர்.

எல்லோரும் அவங்கவங்க வாத்யார்களைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்காங்க.. என்னோட பங்குக்கு நானும்..

Monday, November 18, 2013

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது (2013) - தெளிவத்தை ஜோசப்பிற்கு

ஜெயமோகனின் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது இந்த ஆண்டு (2013) தெளிவத்தை ஜோசஃப் என்ற இலங்கையைச் சேர்ந்த மலையக எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் என்ற  நாவலினால கவரப்பட்ட அவரது வாசகர்களும், ஜெயமோகனும் இணைந்து பொதுவாக கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்விருதின் நோக்கமாகக் கொண்டு இவ்விருதினை வழங்குகின்றனர்.

இம்முறை அதிகம் கவனம் பெறாமல் இருக்கும் நல்ல எழுத்தாளரும், மூத்த எழுத்தாளருமான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்குகின்றனர்.

பரிசு பெறும் ஜோசஃப் அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பணமும் ஒரு நினைவுப்பரிசும் வழங்கப்படும். 

தெளிவத்தை ஜொசப்பின் எழுத்துக்களை முதன் முறையாக வாசிக்கிறேன். ஜோசஃப் விருது பெறுவதை ஒட்டி அவருடைய மூன்று கதைகள் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்திருக்கிறது. 

பயணம் -  இலங்கையில் மலையக மக்கள் போக்குவரத்துக்கு படும் கஷ்டங்களை விவரிப்பதுடன் பெரும்பான்மைக்கு பயந்து தமிழ் மக்கள் வாழ்வதையும் தொட்டுச் செல்கிறது. தமிழ் மக்களுக்குள்ளும் மலையக மக்களுக்கும் இதர மக்களுக்குமான பிரிவினைகளையும் கோடி காட்டுகிறது.   இந்த அடிப்படை வசதிகூட இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் வாழ்க்கையை எப்படித்தான் நடத்தினார்களோ என்று முடிக்கிறார்.

மனிதர்கள் நல்லவர்கள் என்ற கதையில் பிச்சைக்காரர்களைக் குறித்து இரங்குகிறார். சமூகம் எப்படியெல்லாம் அவர்களைப் பற்றி யோசிக்கிறது என்பதையும் சொல்கிறார். அவர் பிச்சையிட்ட ஒரு ரூபாய் எப்படி பிச்சைக்காரனை திருடனாய்க் காண்பித்தது என்பதை இவ்வாறு முடிக்கிறார். “ உளுத்துப் போயிருக்கும் ஓட்டைக் குடிலுக்கு ஓடு போடப் போய் குடிலையே உடைத்துவிட்ட குற்றத்துக்காக மனம் என்னை வதைத்தது.”

மீன்கள் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் வரிகள் இவை. 

//[என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் , விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத்தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும்துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.
இக்கதையின் சிறுகதைமுடிச்சு மிக இயல்பானமுறையில் நிகழ்ந்திருப்பதை ஒரு கலைவெற்றி என்றே நினைக்கிறேன். ஆனால் இதை மேலும் வலுவானதாக ஆக்குவது இக்கதையின் தொடக்கத்தில் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ள மிகச்சங்கடமான ஒரு தருணம். வாழ்க்கையின் அவலங்களில் ஒன்று அது]//

உண்மையிலேயே தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அருமையாக சொல்லி இருக்கிறார். நாம் பரதேசி படத்தில் பார்த்த காட்சிகளுக்கே அரண்டு போயிருந்தோம். ஆனால் ஜோசஃப் எழுதி இருப்பது நேரடி வர்னனை. 

எனக்குத்தெரிந்து கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர் சமுதாயத்தை வாசிப்பின் பக்கம் இழுத்து வரச் செய்ததில் ஜெயமோகனுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த இளைஞர்களின் வாசிப்பை கூர்மை செய்ய ஊட்டியில் ஆண்டுதோறும் கூட்டங்கள் கூட்டி வாசிப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல பயிற்சியும், கூடி இருந்து வாசிக்கும் குருகுல வாசம் போன்ற சூழ்நிலையையும் உருவாக்கித்தருகிறார். இன்றுவரை தடையின்றி நட்ந்து வருகிறது ஊட்டி முகாம்.

தமிழில் பிற எழுத்தாளனை கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுவாக இருந்தாலும், முடிந்தவரை சக எழுத்தாளனை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தகுதி இருந்தும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள எழுத்தாளர்களை கவனத்திற்கு கொண்டு வருவது என்பது உண்மையிலேயே குறிப்பிட்ட எழுத்தாளனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கௌரவம். 

இதைச் சாதித்திருக்கும் ஜெயமோகனுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். விழா சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகள்.

Friday, December 14, 2012

பீயிங் மோகன்தாஸ் வலைப்பக்கம் குறித்த எனது எண்ணங்கள்

மலரினும் மெல்லிய காமம் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு மோகன்தாஸின் பீயிங் மோகன்தாஸிற்குள் நுழைந்தேன். அருமையான காதல் கதை. அவர்களின் உரையாடல்களும், மோகன் தாஸின் தற்குறிப்பேற்றங்களும் மிகவும் ரசித்துப் படிக்க வைத்தது. அப்படியே அவரது வலைப்பக்கங்களை முழுதும் படித்து முடித்த பொழுது கொஞ்சம் பிரமிப்பும், நிறைய மகிழ்வுமாய் இருந்தது.

மோகன் தாஸ் கதை எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், அருமையான புகைப்படம் எடுக்கிறார்,கவிதை எழுதுகிறார்...கவிதை தவிர எல்லாவற்றையும் சிறப்பாகவும் செய்கிறார். இது எனது அபிப்ராயம். அவரது வலைப்பதிவில் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை சுவாரசியமாக இல்லை.

இவரது வலைப்பதிவைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “ அழகான மெல்லிய காமம் “ என்பேன். வலைப்பதிவின் பெரும்பான்மையான இடத்தை மெல்லிய காமமே பிடித்துக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் கதாநாயகன்  மோகனாக, அல்லது தாஸாக அல்லது இரண்டும் சேர்ந்து மோகன் தாஸாக வருகிறார். அதேபோல நாயகியும் ஒரே ஆள்தான்.. அகிலா. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் ஆகிவிட்டது.

எல்லாக் கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களான கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேலை செய்யும் இடம், திருமணம் முடிந்து நடக்கும் வாழ்க்கை இப்படி மோகன் மற்றும் அகிலாவைக் குறித்த டைரிக்குறிப்பை ரசனையுடன் கதையாக்கித் தந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மோகன் தாஸின் வலைப்பதிவில் கதைகள்.

இது தவிர சொந்தக் கதையையும் அப்படியே எழுதுகிறார். பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதல் குறித்த பதிவு. எல்லோரும் எழுதலாம்தான். ஏன் நிறைவேறவில்லை என்பதில் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார்.

அதேபோல முடிந்தவரை மனதில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் செல்கிறார். ஹீரோ பில்டப் எல்லாம் இன்றி, என்னால் முடியவில்லை, அல்லது நான் அதற்கு தகுதியாய் இல்லை என்பதை எல்லாம் அப்படியே சொல்கிறார்.

காமக்கதை என்றாலே எப்படி இருக்கும் என்பது இணையத்தில் உலவும், அல்லது பள்ளி கல்லூரிகளில் அப்படிப்பட்ட புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்கு தெரியும். மிஞ்சிப்போனால் 5 அல்லது 10 உறவுமுறைகள்தான் மீண்டும், மீண்டும். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் குப்பை என நமக்கே தெரிந்துவிடும். ஆனால் இவரது கதைகளில் நமது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்லிச் செல்கிறார். வழக்கமாய் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தரங்கம் குறித்து எழுதுவதில்லை. பழைய சினிமாக்களில் காட்டுவதைப்போல இரண்டு பூக்களை ஒட்டவைத்து நம்மை கேவலமாய்ச் சிந்திக்க வைப்பதைப்போல. 

மோகன் தாஸ் அந்தரங்கம் என நாம் நினைப்பதையும் எழுதுகிறார், இயல்பான வார்த்தைகளில். அதைவிட முக்கியம் அந்த சூழ்நிலைகளில் நாம் எப்படிப் பேசுவோமோ அப்படியே. அதைவைத்து மட்டுமே மெல்லிய காமம் என்கிறேன் நான். 

மோகன் தாஸ் பக்கத்தை நான் எனது தங்கைக்கோ, மகளுக்கோ அறிமுகம் செய்வேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவர்கள் படிக்கலாம் என்பதே எனது எண்ணம். ஆனால் அறிமுகம் செய்து படிக்க வைக்க மனத்தடை உள்ளது.

இன்னும் கொஞ்ச காலம் ஆனபின்னால் படிக்கச் சொல்வேனோ என்னமோ.

கதைகளில் சுவாரசியம்தான் அடிப்படையே. நமது காலகட்டத்திய கதையாய் இருப்பதால் நமது பள்ளி, கல்லுரி காலத்தை மீண்டும் மகிழ்வுடன் அசைபோடும் ஒரு வாய்ப்பாக எனக்குப் படுகிறது.

அழகான தொய்வற்ற எழுத்து நடை, நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தல், காமத்தையும் அதன் எல்லை மீறாமல் அழகாகச் சொல்வது, விவரனைகளை சுவாரசியமாக சொல்வது என அவருக்கென ஒரு நடையை வைத்திருக்கிறார். அவரது கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்த கதைகள் போலிருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பேசுவதால் போரடிப்பதில்லை.


ஏன் மோகன் தாஸ் வலைப்பக்கத்துக்கு ஒரு அறிமுகம் எழுதினேன்? நான் படிக்க ஆரம்பித்த பின்னர் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது கதைகள், சுவாரசியம்தான் காரனம்.

பலவகையான விஷயங்களைப் பற்றிச் சொல்ல தொடர்ந்து முயன்றிருக்கிறார். வலைப்பதிவின் அக்கப்போர்கள் இருந்த காலத்தில்கூட அக்கப்போர்களில் கலந்து கொள்ளாமல் அவைகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார். 

அவரது எழுத்தை அவரே ரசிக்கிறார். நமக்கே பிடிக்காத விஷயத்தை எப்படி மற்றவர்களுக்குத் தருவது? 2005 முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். செகுவேரா வின் தீவிர விசிறி. பிடல் காஸ்ட்ரோ குறித்தும் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நிறைய வாசித்திருக்கிறார், வாசிக்கிறார். பாரதியின் கவிதைகள் இவருக்கு ஆதர்சம். அச்சமில்லை என்ற பாரதியின் பாடல் எப்படி இவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

குறைகள் எனச் சொன்னால் சில நல்ல தொடர்கதைகளை அப்படியே பாதியிலேயே தொங்க விட்டிருப்பது. குறிப்பாக நீராக நீளும் காதல். வேறு வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணை நாயகன் சந்தித்து அதன் பின்னர் அது காதலாக மாறும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த பகுதியைக் காணவில்லை. 

அதேபோல கொலைத்தொழில் வல்லவன் என்ற ஒரு தொடர்..அதுவும் பாதியில்..

எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவுகள் எனில் கதைகள், தொடர் கதைகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள்.

Being Mohandoss'ல் எனக்குப்பிடித்த டாப் டென் கதைகள்..

01. மலரினும் மெல்லியது காமம் ( தலைப்பு உதவி வள்ளுவராம் :-) )

02. உள்ளம் உடைக்கும் காதல்

03. மதுமிதா

04. தேவதையின் காதலன்

05. சோழ பரம்பரைக் கதைகள்

06. மோகனீயம் தொடர்கள்

07. Curse of the Golden Flower - Cinema Review

08. கன்னடப் பைங்கிளீயுடன் ஒரு காதல் மொழி.

09. I lost my virginity to Mohandoss

10. அவளை அவன் கண்விடல்.

இது தவிர நிறையக் கதைகள் பிடித்திருந்தாலும் மேற்சொன்ன கதைகள் மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்தவை.

ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த பதிவும் அருமை. இவரது வலைப்பதிவில் நல்ல நல்ல புகைப்படங்களும், ஓவியங்களையும் காணலாம்.

என்னங்கப்பா மோகன் தாஸ் வலைப்பதிவுக்கே அறிமுகமானு கேட்பவர்களுக்கு.. புதுசா நான் தெரிஞ்சிகிட்டேன்.. அதை மத்தவங்களுக்கும் நான் சொல்றேன்..அம்புட்டுத்தேன்.

Saturday, November 10, 2012

இராக்கில் ஒரு பயணம்

இராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்"

எனது இராக்கிய பயண அனுபவங்களை இட்லிவடையில் எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இங்கே 


படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.

ஜெயக்குமார் 

Tuesday, June 26, 2012

3 திரைப்பட விமர்சனம்

நான் எழுதிய 3 திரைப்பட விமர்சனம் இட்லிவடையில் வெளியாகி இருக்கிறது.



படிக்க இங்கே சொடுக்குங்கள்.



Saturday, June 16, 2012

அம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)

கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும்? எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்தவர்தான் ஜெயலக்‌ஷ்மி எனும் எனது அம்மா. தற்போது இருக்கும் வசதிகள் எதுவும் அப்போது இருந்ததில்லை. காய்ந்த விறகு அடுப்பு இல்லையெனில் மரத்தூள் அடுப்பு. ( மர அறுவை மில்லில் மரம் அறுக்கும்போது கிடைக்கும் தூசிதான் மரத்தூள்) மரத்தூள் அடுப்பை சமையலுக்கு தயார் செய்தலே ஒரு தனி கலை. அடுப்பு வட்ட வடிவில் இருக்கும். கீழ் பகுதியில் விறகு வைக்க ஒரு இடம் இருக்கும். நடுவில் ஒரு மன் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு பின்னர் கழுத்துவரை மரத்தூளை நிரப்ப வேண்டும்.விறகு வைக்கும் பகுதியை கையால் மூடிக்கொண்டு மரத்தூளை அடுப்பில் நிரப்ப வேண்டும். மரத்தூளை அப்படியே நிரப்பினால் பாதி சமையல் செய்யும்போதே கீழே விழுந்துவிடும் எனவே கொஞ்சம் நீர் தெளித்து நன்றாக அழுத்தி அழுத்தி தூளை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் நடுவில் வைத்த பாட்டிலை எடுக்கும் முன்னர் விறகு வைக்கும் இடத்தில் இருக்கும் மரத்தூளை எடுத்து விட்டு பின்னர் பாட்டிலை கொஞ்சம், கொஞ்சமாக அசைத்து எடுக்க வேண்டும். அதுதான் சமையல் அடுப்பு. சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினால் சரியாக அடைத்துக் கொடுக்காமல் இருந்தால் அம்மாவின் பாடு பாவம். தூள் எல்லாம் கீழே விழுந்துவிடும். பிறகு முள் விறகால் சமையலைத் தொடர வேண்டும். இப்படித்தான் சமையல் 1982 வரை. அதன் பின்னர்தான் மன் எண்ணெய் அடுப்பு வந்தது. நூதன் ஸ்டவ். அதிலும் ஏதேனும் ஒன்றுதான் வைக்க முடியும். மீதி சமையல் எல்லாம் தூள் அடுப்பிலும், கரி அடுப்பிலுமாக நடக்கும். அம்மாவின் சமையல் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். அதிலும் நொட்டை, நொள்ளை சொல்லி இருக்கிறேன். சாப்பிடாமல் போயிருக்கிறேன். பாவம் அம்மா, வாசலில் அமர்ந்துகொண்டு குமாரோ..குமாரோ என நான் வீட்டிற்கு வந்து சாப்பாட்டை போட்டுத் தொலை என திட்டும்வரை வாசலிலேயே காத்திருப்பார்கள். தானும் சாப்பிட மாட்டர்கள். அதன்பின்னர் கொஞ்சம் வசதி வந்த பின்னர் அதாவது நான் 10வது படிக்கும்போது ஒரு மாபெரும் கிரைண்டர் வந்தது. அதன் பின்னர்தான் அம்மாவிற்கு கொஞ்சமேனும் ஓய்வு கிடைத்தது. இல்லையெனில் 15 பேருக்கு கையாலேயே இட்லி, தோசை மாவு அரைத்து அதை செய்தும் கொடுக்க வேண்டும். இப்போது நினைத்தாலே நெஞ்சடைக்கிறது. எப்படி அம்மா இதையெல்லாம் தனியாகச் செய்தார்கள் என. அம்மாவிற்கு இப்படி வேலை செய்ததில் எல்லாம் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் யாராவது சாப்பாடு பிடிக்கவில்லை என சாப்பிடாமல் போனால்தான் தாங்க முடியாது. எவ்வளவு அலுப்பில் படுத்திருந்தாலும் உடனே எழுந்து அவர்கள் சாப்பிட வேறு ஏதாவது செய்து கொடுத்துவிட்டுத்தான் படுப்பார். அம்மாவுக்கு என்மீது எப்போதும் தனிப்பிரியம். அம்மாவும், அப்பாவும் எதோ ஒரு சப்பைக் காரணத்துக்காக சண்டை போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிரிந்திருந்து மீண்டும் சேர்ந்த பிறகு பிறந்த குழந்தை நான். மேலும் எல்லோராலும் சோனிப்பூனை என அன்புடன் அழைக்கப்பட்டவன். அதனாலேயே இன்னும் கொஞ்சம் பிரியம் அதிகம். ஒரு சிறு தடுமாற்றத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டோம். அப்போதும் இந்தக் கூட்டுக் குடும்பமே கைகொடுத்தது. அப்பா அரசு வேலையில் இருந்ததால் உனவுக்கு ரொம்பக்கஷ்டமின்றி இருந்தாலும் மதியம் பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் பள்ளி சென்ற எங்கள் அனைவருக்கும் வசதியாக இருந்தது. சத்துணவு சாப்பிட்டு வருவதால் மாலை வந்தஉடன் எனக்கென கொஞ்சம் சாதம் எடுத்து வைத்து நிறைய நீர்மோர் ஊற்றி கொஞ்சம் குளம்போ, ரசமோ போட்டுத் தருவார்கள் அம்மா. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் அடையாளம் சொல்லி அழைப்பதற்காகவே இருக்கும். பெரியப்பாவும், எனது அப்பாவும் எல்லோருக்கும் அப்பாக்களே. ஆஸ்ரம அப்பா என்பது எனது பெரியப்பாவைக் குறிக்கும். அவர் காந்திநிகேதன் ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்தார் . அதனால் அந்தப் பெயர். பெரியம்மாவும், அம்மாவும் அம்மாவே. அப்பாவிடம் சொல்லி ஒரு காரியம் ஆகவில்லையெனில் பெரியப்பாவிடம் சொல்லி சாதிக்கப்பார்ப்போம். பெரும்பாலும் நடக்காது. எனது அப்பாவிற்கு பெரியப்பாவின் முதல் மகள் மற்றும் கடைசி பையன் மீதும் உயிர். அப்பாவிடம் நான் திட்டுவாங்குவதற்கு அவந்தான் காரனம். காலையில் எழுந்து பட்டையை போட்டுக்கொண்டு தெய்வப்பழம்போல இருப்பான். அவன் குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்த பின்னர்தான் நான் படுக்கையில் இருந்தே எழுவேன். படிப்பிலும் பயங்கர கெட்டி அவன். நான் 50 பேர் கொண்ட வகுப்பில் கீழிருந்த 5வது ஆள். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளுக்குள்ளாக நடக்கும் வழக்கமான போட்டிகள், சண்டைகள் எல்லாம் உண்டு. அம்மாவிற்கு என்மீது பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. ஆனல் நான் எப்படியாவது “ காலை ஊன்றிவிட வேண்டும்” என்பதற்காக எங்கள் தெரு ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார், பையனுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா என. எனது அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே அவரது கல்வியில் ஆரம்பித்து, வேலைவரை எதுவுமே அப்பாவிடம் கேட்ட்தில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்துக்கும் ஜாதிக்கொரு நோட்ஸ் வைத்திருப்பேன். அப்படியும் 272 மார்க்தான் பத்தாம் வகுப்பில். அது ஒரு குறை அம்மாவுக்கு. பின்னர் 12ம் வகுப்பில் உருப்படியாய் படித்ததில் கொஞ்சம் சந்தோஷம். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு ஆண்டிற்கு சராசரியாக மூன்று கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்ததில் நான் என்ன ஆவேனோ என்ற கவலை. என்னைப்பற்றி மட்டுமே எப்போதும் கவலையில் இருந்த அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஒருவருடம் தொடர்ச்சியாய் இருந்தபின்னர்தான் பையன் இனிமேல் பிழைத்துக்கொள்வன் என நம்பிக்கை பிறந்தது. வேலையற்று இருக்கும்போது அம்மாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். உனக்கு என்னம்மா வேனும் என .. அம்மாவுக்கு காசு மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என அதிக நாள் ஆசை. அதை நிறைவேற்றினோம்( நானும், அண்ணனும் சேர்ந்து) கைநிறைய காசு வேண்டும். அதையும் எப்போது எவ்வளவு கேட்டாலும் நிறைவேற்றினோம். இதற்கு ஒரு காரணமும் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதினால் எனது அப்பாவின் சம்பளம் முழுக்க பள்ளிக் கூட செலவுக்கும், வீட்டுச் செலவுக்குமே சென்றுவிடும். அம்மாவிடம் காசு என ஒன்றும், இருக்காது. கனவன் கை நிறைய சம்பாதித்தும், தன்னிடம் காசு இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. அது எங்களால் தீர்ந்தது. எங்கள் தலைமுறையினரில் முதல் திருமணம் எங்கள் அக்காவிற்கு நடந்தது 1989ல். கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்றார்கள் எங்கள் அக்கா. (பெரியப்பா மகள்) முதல் ஆறுமாதம் எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என எனது பெரியம்மாவைவிட அனது அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். வெள்ளந்தித்தனத்திற்கும் எனது அம்மாதான் உதாரனம். வெளியுலகம் குறித்த எந்த அனுபவமும் இன்றி இருந்தார்கள். வீட்டிற்கு முதன்முதலாய் தொலைபேசி வந்தது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மணி அடிக்கவும் அம்மா சமையல்கட்டில் இருந்தபடியே “இருங்க வாரேன்” எனச் சொல்ல மணி பாட்டுக்கு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதான் வாரேன்னு சொல்றேன்ல என தொலைபேசியை அன்புடன் கோபித்துக்கொள்வதற்குள் மணியடிப்பது நின்றுவிட்டது. இதை சொல்லிச் சொல்லியே அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அதேபோல பெரியம்மாவுக்கும், அம்மாவுக்குமான சண்டைகள்.. எதிலும் பெரியவர்கள் யாரும் எனது குழந்தை எனவோ, என் மனைவியை ஏன் சொன்னாய் என்றோ சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதையும் கலகலப்பாக்கி விடுவார்கள். சண்டை ஆரம்பித்த உடன் அப்பா சொல்வது இதெல்லாம் சண்டையா.. ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு கம்பைக் குடுத்து ரூமில அடைங்கடா. யாராவது ஒருத்தர் வெளியே வரட்டும் என்பார். அம்மா, பெரியம்மா சண்டையின் ஆயுசு அடுத்த காபி போடும் வரைக்கும்தான்.. ஏ லக்‌ஷ்மி காபி போடேன் என பெரியம்மாவோ அல்லது வேனி காபி போடேன் என அம்மாவோ சொல்வதுடன் அந்த பழைய சண்டை முடிவுற்று நீதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு காபி போடேன் என பெரியம்மாவை அம்மா சத்தம் போடுவதிலிருந்து அடுத்த சண்டை ஆரம்பமாகும். அது இரவு உணவுக்கு அமரும் வரைதான். அதன்பின்னர் குளம்பு புளிப்பு என்பதற்கோ, மோர் அநியாயத்திற்கு புளிக்கிறது என்பதற்கோ அடுத்த சண்டை ஆரம்பிப்பதில் முதலில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் இன்றோடு இந்தக் குடும்பம் இரண்டாகப் போகிறது என நினைப்பார்கள்..அப்படி சண்டை நடக்கும். ஆனால் அதன் ஆயுள் அரைமணி நேரம் மட்டுமே என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எனது காலஞ்சென்றுவிட்ட பாட்டிக்கு அம்மாவைக் குறை செல்வது ஒரு பொழுதுபோக்கு. எனது பாட்டிதான் எனது அப்பாவை எடுத்து வளர்த்தார் என்பதால் அவரது சவுண்டுக்கு அப்பாவிடம் பயங்கர மதிப்பு இருக்கும். பாட்டியை திருப்திப் படுத்த அம்மாவை திட்டுவார். பாட்டி எனது அம்மாவை மட்டும் திட்டுவதில்லை. நேற்று பிறந்த குழந்தை முதல் எனது தாத்தா வரை எல்லோருக்கும் சமமாக திட்டுக்களை பகிர்ந்தளிப்பார். அவரது மகளை அதாவது எனது பெரியம்மாவை அவர் திட்டுவதைப் பார்த்தால் மாமியார் மருமகள் சண்டை என நினைத்துக் கொள்வார்கள். இப்படி எல்லோரிடமும் திட்டும் வாங்கிக்கொண்டு, அப்பாவின் அனுசரனையும் முழுதாய் இல்லாமல் இருந்தாலும உடலில் வலு இருந்தவரை சமைப்பதில் எந்தக் குறையும் இன்றி செய்தார்கள். உடல்நிலை குறித்த சரியான அக்கறையின்மை சர்க்கரை வியாதியையும், ரத்தக் கொதிப்பையும் கொண்டுவந்தது. எல்லா வைத்தியங்களும் செய்தோம். 2012, ஏப்ரல் 14ம் தேதி சர்க்கரை அளவு அதிகமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவர்கள் போராடியும், மேமாதம் 5ம் தேதி இரவு 10.40க்கு எனது தாயார் காலமாகிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாகவே அதிகப்ட்சமாக வீட்டிற்குள் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இறைவன் அம்மாவுக்கு 74 வயது போதும் என நினைத்துவிட்டான். ஜெயக்குமார்

Friday, December 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகச்சிறந்த நாவலான “விஷ்ணுபுரம்” பெயரால் ஒரு இலக்கிய வாசகர் வட்டம் உருவாகி அவர்களும், ஜெயமோகன் அவர்களும் இணைந்து தகுதி இருந்தும் இதுவரை கவனிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களின் படைப்புகளை வாசிப்போர்களிடம் கொன்டு செல்வதுடன், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி எழுத்தாளருக்கும், அவரது படைப்புகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தருகின்றனர்.

குன்றிலிட்ட விளக்கை வெளியில் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சியே. இருப்பினும் இந்த அளவு இலக்கிய வாசகர்களை தனது எழுத்துமூலம் இணைத்து ”விஷ்ணுபுரம் விருது” வழங்கும் நிகழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறார் திரு.ஜெயமோகன். அவருக்கும், அவருடன் இணைந்து இலக்கியத்திற்காக தன்னாலான உழைப்பை நல்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் ”விஷ்ணுபுரம் விருது” இலக்கிய விருதை பெறுதல் ஒரு தகுதியாக ஆகும் காலம் கனிக எனவும் வாழ்த்துகிறேன்.



விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

Wednesday, November 2, 2011

13 Assassins (Japanese)


நமக்குத் தெரிந்ததெல்லாம் டி.வி.எஸ் சாமுராய் தான் ஒரு காலத்தில். ஆனால் சாமுராய் என்ற பெயருக்கு ஜப்பானில் இருக்கும் மதிப்பே தனி. சாமுராயாக இருப்பதே ஒருவகை சுமைதான். அதை விரும்பி ஏற்றுக்கொள்வோரே சிறந்த சாமுராயாக இருக்க முடியும்.

சாமுராய்கள் தொழில்மயமான ஜப்பானின் காலத்திற்கு முன்பு இருந்தவர்கள். அவர்களுக்கென தனியானதொரு சட்ட திட்டங்கள் உண்டு. அதன் பெயர் புஷிடோ. சாமுராய்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்கள், மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் செல்வங்களுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தனர். அவர்களது பாதுகாப்புக்காக உயிரையும் அர்ப்பணித்தல் அவர்களின் கடமைகளில் ஒன்று. சாமுராய்களில் பெண்களும் உண்டு. சாமுராய்கள் எதிராளியிடம் தோற்க நேர்ந்துவிட்டால் தற்கொலை ( ஹரகிரி ) செய்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்படி ஹரகிரி செய்து கொள்ளவேண்டும் என்ற சட்டங்களூம் உண்டு.

ஆனால் எங்கும் இருப்பதுபோல ஜப்பானிலும் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சாமுராய் எனக் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லம நம்மூர் “டாக்டர்கள்” போலத்தான்.

அப்படி ”சாமுராய்”க்களின் காலம் மறையும் நேரத்தில் 13 உண்மையான சாமுராய்கள் சேர்ந்து மக்களுக்கு கொடுமை செய்யும் ஒரு கொடூரமான பிரபுவை (நாரிட்சுகு)அழிக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறார்கள்.

யார் அந்த கொடூரமான பிரபு? ஜப்பானில் ”ஷோகுன்” என்றால் படைத்தலைவன். அப்படி ஒரு முன்னாள் படைத்தலைவனின் மகனும், தற்போதைய படைத்தலைவனின் இளைய தம்பியுமய் இருக்கும் ஒருவன், பெயர் மட்சுடிரா நாரிட்சுகு. இந்தத் தகுதிகளினால் எந்த சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாது. ஷோகுன்களை ஜப்பானிய அரசர் நேரடியாக நியமிப்பார். கேட்க வேண்டுமா? நினைத்த பெண்ணை கற்பழிப்பது, கொடூரமாக கொலை செய்வது, அங்கங்களை வெட்டி விளையாடுவது இப்படியாக கொடூரமாக இருந்தவன்.

இவனது கொட்டத்தைப் பார்க்கும் ஒரு அரசு அதிகாரி இப்போதே இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இவன், நாளைக்கு அதிகாரத்தின் உச்சிக்குச் செல்லும்போது இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வானோ? அதற்குள் இவனை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக ஷின்சிமொன் என்ற ஒரு சாமுராயை நாரிட்சுகுவைக் கொல்லும்படி வேண்டுகிறார்.

ஷின்சிமொன் பொறுக்கி எடுத்த மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்டு ”ஈடோ” என்ற இடத்திற்கு நாரிட்சுகு (வில்லன்) செல்லும் வழியில் ஊடறுத்து நாரிட்சுகுவை (வில்லன்)கொல்லுதல் என்று திட்டம்தீட்டுகிறார்.

13வது ஆள் பெயர் கிகா. காட்டில் இவர்களுக்கு வழி காட்டியாக வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்பவன்.கிகா சாமுராய் அல்லன். ஆனால் சாமுராய்கள் என்றால் பெரிய கொம்பா என்ற எண்ணம் கொண்டவன். அவனாலும் சிறப்பாய் சண்டையிட முடியும் என நினைப்பவன். அவனையும் அவர்களது திட்டத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.

நல்லவேளையாக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் பார்த்தேன். இல்லையெனில் ஒரு அட்சரம் கூட புரிந்திருக்காது.

ஏன் நாரிட்சுகுவைக் ( வில்லன்) கொல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள் உறைய வைக்கின்றன. ஒரு காட்சியில் ஒரு பெண்னை கையையும், காலையும் வெட்டி, நாக்கையும் அறுத்து வைத்திருப்பான். இப்படி செய்வது அவனது விளையாட்டாம். அவளுடன் விளையாடுவது போரடித்த பின்னர் அவளை வெளியே வீசிவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான்,அவள் ஹரகிரி செய்து கொள்வாள்.கணவனை வெட்டிக் கொன்றுவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு குடும்பத்தையே அம்புகள் விட்டு கொல்வான். சிறு குழந்தை உட்பட.

அதுபோல மக்கள் அனைவரும் அவனது அடிமைகள். அதுதான் அவன் கொள்கை. ஓரிடத்தில் ஹன்பேயிடம் Ruling is convenient, but only for rulers. The people must live to serve. என்பான்.

இதையெல்லாம் கேட்கும் ஷின்ஷிமோன் இந்த அநியாயத்தைச் செய்யும் நாரிட்சுவைக் கொல்வதே சாமுராயாக இருக்கும் தனக்குப் பெருமை அளிக்கும் என நினைக்கிறார். ஒரு சாமுராய் கௌரவமாய்ச் சாவதைவிட என்ன பெருமை இருக்க முடியும் என்கிறார். இதை, கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவரிடம் I shall accomplish your task... with magnificence என்பார்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்ற நம்மூர் பழமொழியையே ஜப்பானிலும் சொல்கின்றனர். தூண்டிலைப் போட்டு வைத்துவிட்டு காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டால் மீன் புழுவை மட்டும் சாப்பிட்டு ஓடிவிடும். பொறுமையாய் இருந்தால் மீன் வசமாய்ச் சிக்கும். வில்லனைக் கொல்ல காத்திருக்க வேண்டியிருக்கும் நேரத்தில் தனது குழுவிடம் ஷின்ஷிமோன் சொல்வது மேற்சொன்னது.

வில்லனைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டு காத்திருக்கும் இடத்திற்கு வராமல் வேறுபாதையில் சென்றுவிட்டதுபோல ஒரு மாயையை நாரிட்சுகு உருவாக்குவான். ஆனால் நிச்சயம் இவர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் வழியில்தான் வருவான் என்பதை ஷின்ஷிமொன் சொல்வார். அதைப்போலவே 70 பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்ட அந்தக்கொடூரன் மறைவாகப் பதுங்கி இருந்துவிட்டு ஆட்களை மேலும் சேர்த்து 200 பேருக்கும் மேலாக வந்து தாக்குவான்.

13 பேர் கொண்ட சாமுராய் குழு 200 பேர் கொண்ட குழுவை வென்றதா, அந்தக் கொடூரன் கொல்லப்பட்டானா என்பதுதான் கதை.

நாரிட்சுகுவைத் தாக்க திட்டமிட்டிருந்த முழுகிராமத்தையே அவர்களுக்கான வலையாக மாற்றியிருப்பார்கள், 13 பேரும் சேர்ந்து. வெடிகள், முட்கள், அம்புகள், வாட்கள் என எல்லாவற்றையும் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அருமை. ஆனால் அந்த சண்டைதான் மிக முக்கியம் என்பதால் மிக நீளமான சண்டையாக எடுத்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் ஒளி மற்றும் ஒலிப்பதிவு குறித்து. இசையற்றிருத்தலே சிறந்த இசை என்பதை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிக மிக அவசியமான இடம் தவிர வேறு எங்கும் இசையை நம்மால் உணர முடிவதில்லை. கிட்டத்தட்ட படத்துடன் இயல்பாக பயணிக்கிறது இசை. பிரம்மாண்டம் ஏதுமின்றி சாமுராய்களின் வாழ்க்கை பற்றி அருமையாகச் சொல்கிறது படம்.

ஒளிப்பதிவும் அருமை. கண்ணைகூசச் செய்யும் ஒரு இடம்கூட இல்லை. அழகான ஜப்பானிய கிராமங்களைப் பார்த்த உணர்வு. இவ்வளவு இயற்கை அழகுடனா ஜப்பான் இருக்கும்? அழகோ அழகு சாமுராய்கள் எதிரியை எதிர் கொள்ளும் இடம். படத்தில் எங்கும் வெயில் வந்து பார்த்தாக ஞாபகம் இல்லை.

ஹீரோயிஸம், பறந்து பறந்து சண்டை, என்ற எதுவும் இன்றி கெட்டவனை அழிக்க தன்னைப் பணயம் வைக்கும் 13பேரின் கதை. அவ்வளவே. அந்தக்காலத்தில் எப்படி செய்திருப்பரோ அதேபோல.

எதிரியின் படைத்தலைவன் ஹன்பே (அவனும் சாமுராய்தான்) தலை வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும். அதைக் காலால் எட்டி உதைப்பான் அந்தக் கொடுரன். “அவன் உன்னைக்காக்கத்தானே தனது உயிரை இழந்தான் அவன் தலையை எட்டி உதைக்கிறாயே என ஷின்ஷிமோன் கேட்பார். நாரிட்சுகு பதிலாக திமிருடன், உனக்கு வேண்டுமெனில் எனது தலையை வெட்டி நீ காலால் உதை என்பான்.

இறுதிச் சண்டையாக நாரிட்சுகுவை “உன்னால் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும், இனி நாடு அமைதியாக இருப்பதற்காகவும், எனது நண்பனின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், உன்னால் சர்வநாசம் செய்யப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணிற்காகவும் உன்னைக் கொல்கிறேன் எனச் சொல்லி அவனை அழிக்கிறான் சாமுராய் ஷின்ஷிமோன். ஷின்ஷிமோனும் நாரிட்சுவால் வாளால் குத்தப்படுகிறார். இருவரும் இறக்கின்றனர்.

எல்லா கொடூரர்களுக்கும் அவர்களது சாவு என்பது வலி மிகுந்தே இருக்கிறது,அன்று முதல் இன்றுவரை. ஷின்ஷிமோனால் வயிற்றில் குத்தப்பட்டு துடிக்கும்போது வலிக்காக அழுகிறான், சாகப்போவதை நினைத்து சகதியில் புரண்டு அழுகிறான். ஷின்ஷிமோன் அவனது தலையைக் கொய்து அவனது வலியிலிருந்து விடுதலை அளிக்கிறார். அவ்வளவு கொடூரமானவனுக்கும் கருனையே காட்டுகிறான் இந்த சாமுராய்.

சாமுராய்களின் வாழ்க்கை என்பதே ஒரு சுமைதான் என்பதை கடைசியில் வீழ்ந்து கிடக்கும் ஷின்ஷிமோன் சொல்வார். திருமணம் ஆகாத ஒரு சாமுராய்க்கு (ஷின்ஷிமோனின் மருமகன்) இனிமேல் உன் வாழ்க்கையை நீ விரும்பிய வழியில் வாழ்ந்துகொள் என்பதுடன் நிறைவு பெருகிறது.

கிகாவாக வரும் அந்த காட்டுவாசி ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு காட்டுப் பேய். ஆனால் நன்மை செய்யும் பேய். அவன் சொல்லும் உபாஷி என்ற பெண் அந்தக் கூட்டத்தின் தலைவியின் மகளாக இருக்கக் கூடும். அவனது தலைவியின் மகள்மீது கைவைத்ததால்தான் தன்னை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கிகா சொல்கிறான் ஓரிடத்தில்.

சண்டையில் அவனுக்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு விடுவான். கடைசியில் எநதக் காயமும் இன்றி அவன் அடுத்த காட்சியில் வருவான். எஞ்சி இருக்கும் ஒரு சாமுராய் எப்படி உனக்கு காயமே இல்லை எனக் கேட்கும்போது Compared to fighting a wild bear these wounds are nothing. என்று சொல்லி விடுவான்.

சாமுராய்களுக்கு உதவ கிகா என்ற நல்ல பேய் உதவுவதாகக் கூட கொள்ளலாம்.


இது திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல.. நிஜமாகவே நடந்தது, திரைவடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1963ல் இதே பெயரில் வந்த கருப்பு வெள்ளைப் படத்தின் மறுதயாரிப்புதான் இந்தப் படம்.

இயக்கம் : தகாஷி மைக் ( Takashi Miike.)
ஜப்பான் அகாதமி பரிசுக்கு சிறந்த படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்.

படத்தின் ட்ரெய்லரைக் காண இங்கே சொடுக்குங்கள்.

இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளம் இது.

Tuesday, November 1, 2011

ஜானி ட்ரை ஙுயென் .. எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்


ஜானி ட்ரை ஙுயென்.

அமெரிக்காவில் வசிக்கும் இவர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் டூப் நடிகராகவும் நடித்திருக்கிறார், 24 படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தற்காப்புக்கலை வல்லுநராகவும் இருக்கும் இவர் பிறந்தது தென் வியட்நாமில்.

8 வயதிலெயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்ட இவரது அம்மா சீனாவைச் சேர்ந்தவர்.எனவே இவர் பாதி சீனர், பாதி வியட்நாமியர்.

இவரது அண்ணன் சார்லி ஙுயென் தான் ”த ரீபெல்” படத்தை இயக்கியவர்.

சூர்யா நடித்த திரைப்படத்தில் வில்லனுக்கு கைதட்டும், விசிலும் பறப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டோங் லீ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

சும்மா அம்பது அடி தூரத்தில் இருந்து கொண்டு ஒருத்தனை மெஸ்மெரிசம் செய்தல் சாத்தியமா, 5 விநாடிக்குள் ஒருவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தல் சாத்தியமா என்ற லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ”டோங் லீ” என்ற பாத்திரத்தில் நடித்த ஜானி ட்ரை ஙுயெனின் நடிப்பு அட்டகாசம்.

அவரது உடல் மொழி, நடக்கும் விதம், அடுத்தடுத்து ஆளைத் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டே போவது, கொஞ்சம்கூட வில்லத்தனம் செய்யாமல் வில்லன் வேலையைச் செய்யும் விதம் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்திருக்கிறது.

சண்டை ஒவ்வொன்றும் இயல்பாய் இருக்கிறது. கிட்டத்தட்ட விமர்சனம் எழுதிய எல்லோரும் போட்டுச் சாத்திய அதே விஷயத்தை நாமும் எழுதாமல் நல்லதாய் எழுதுவோம் என நினைத்ததால் இந்தப் பதிவு.



இந்தப் பட விமர்சனங்களை தமிழ்கூறும் நல்லுலகின் வலைப்பதிவர்கள் கிட்டத்தட்ட போஸ்ட்மார்ட்டமே செய்துவிட்டதால் அங்கே சென்று படித்துக் கொள்க.

ஜானி ட்ரை ஙுயென் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்