Thursday, April 14, 2011

சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு!

தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளியான இக்கட்டுரை இன்றைய தினத்துக்குப் பொருத்தம் என்பதால் இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன்.

--------------

சித்திரை முதல் நாளே நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருவதை ஓர் அரசாணையால் தை மாத முதல்நாளாக மாற்ற தமிழக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசாணை போட்டபிறகும் ’அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஏன் சொல்லவேண்டுமென்றால் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான பொதுநல வழக்கை தமிழக அரசால் இன்னும் வெல்ல முடியவில்லை. தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழக அரசு வெற்றி பெற்றாலும் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் இந்த வழக்கில் தமிழக அரசு வெல்லக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது என்பதையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சித்திரை முதல்நாளே ஆண்டு தொடக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு பலவிதமான ஆதாரங்களை இலக்கிய மற்றும் வரலாற்று அறிஞர்கள் அளித்துவிட்ட போதிலும் ஏன் தை மாதத்தில் ஆண்டு துவங்க வேண்டுமென்ற ஆதாரங்களை அரசோ அல்லது இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்களோ இதுவரை அளிக்க வில்லை. வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவை எதிலும் தை மாதம் முதல் மாதம் என்பதற்கு ஆதாரமான கருத்தோ அல்லது சித்திரை முதல் மாதம் என்பதற்கு எதிரான கருத்தோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கான தரவுகளைத் தருவதற்கு அரசு தவறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக அறிஞர்கள் எழுப்பிய கருத்துகளுக்கும் வினாக்களுக்கும் விளக்கமளிக்கவில்லை.

இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்கள் வைக்கக் கூடிய சில வாதங்களை ஆராய்வோம்:

1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப் படுகிறது. ஆனால் எந்தெந்த ஆதாரங்களை வைத்து மறைமலை அடிகளார் தைமாதம் முதல் மாதம் என்றார் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மறைமலை அடிகளார் அவ்வாறு கருதுகிறார் என்பதே இதை ஆதரிப்பவர்கள் தரும் மிகப்பெரிய தரவாக இருக்கிறது. இதைத் தாண்டிய இலக்கிய மற்றும் வரலாற்றுத் தரவு எதனையும் நாம் காணமுடிவதில்லை. ஆனால் மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது மறைமலை அடிகள் மற்றும் வேறு சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டியிருக்கிறது.

2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு தைமாதம் சிறப்பிக்கப் படுவது உண்மையென்றாலும் இவற்றில் எந்த ஆதாரமும் தைமாதத்தை புத்தாண்டுத் தொடக்கமாக குறிக்கவில்லை என்பதும் உண்மை! ஆனால் நோன்பு நோற்று, நோன்பு நிறைவேற்றலாகத் தைநீராடல் செய்வதையே சிறப்பித்துக் கூறும் சங்கத் தமிழ்ப் பாடல்களை நாத்திகர்களும் இந்துமத எதிர்ப்பாளகளும் தைப்புத்தாண்டுக்கான ஆதாரமாகக் கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலம் தொட்டு பழந்தமிழரின் ஆன்மிக ஈடுபாடுகளுக்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாமேயன்றி தைப்புத்தாண்டுக்கும் இந்த தைமாதச் சிறப்பித்தலுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. இது தொடர்பான கல்வெட்டோ இலக்கியச் சான்றோ அல்லது பிறிதொன்றோ இல்லை. ஆதாரமில்லை என்பதனால் கொண்டாடப் படவில்லை எனக் கொள்ள இயலாது என்றொரு வாதம் வைக்கப்படலாம். இது உண்மைதான் என்றாலும் இத்தனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் பொங்கல் எவ்வாறு குறிக்கப் பெறாமல் இருக்கும் என்பது ஒரு மாபெரும் வினாவாகத் தோன்றுகிறது. பாரதமெங்கும் மகர சங்கராந்தி எனவும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப் பட்ட விழா தமிழகத்தில் கொண்டாடப்படத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் விவசாய மற்றும் வழிபாடு தொடர்பான வழக்கங்களோடு மிக உற்சாகமாகக் கொண்டாடப் படத் தொடங்கியது என்று கருதுவதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பார்க்க: உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

4. தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் விவசாய முறைமைகளை நோக்கும்போது ஒவ்வொரு தனிமனிதனின் ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக தை மாதத்தைக் காணலாம். விவசாயக் காரியங்கள் முடிந்த பிறகே அவ்வாண்டு திட்டமிடப்பட்ட திருமணமோ. வேறு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கலோ. தீர்த்த யாத்திரையோ. நேர்த்திக்கடன் நிறைவேற்றலோ செய்வதற்கான நேரமும் நிதியும் வாய்க்கப் பெற்றிருக்கும் காலமே தைமாதம். தை நீராடல் எனும் பழந்தமிழர் வழக்கத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆக இவை ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்காமல் ஆண்டு நிறைவை நோக்கிச் செல்லுதலைக் குறிக்கிறது என்பதே வெளிப்படை.

சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் செங்கிருதமாக (சம்ஸ்கிருதம்) இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும். செங்கிருதம் பாரதப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தவொன்றாக இருக்கிறது. வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டு அடிகளார் இயங்கினாரே தவிர அந்தப் பெயருக்காக தன்னையே மாற்றிக் கொள்ளவில்லையே! மேலும் அவர் செய்துகொண்ட பெயர் வெறும் மொழிமாற்றுதானே! அதுபோல கருணாநிதி, ஜெயலலிதா என்று முற்றிலும் செங்கிருதப் பெயர் கொண்டவர்களை பெயருக்காக யாரும் ஆட்சேபித்துவிடவில்லையே! பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையை தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள்ள், உருவகங்கள் மற்றும் அது உணர்த்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் இக்கதையைப் பரப்புரைப்பது அடாத செயல்.
சித்திரைப் புத்தாண்டு தான் அறிவியல்பூர்வமானதும் பல இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபாகும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

உண்மை வேறாக இருக்கையில், இனவாதத்தையும், வெறுப்புணர்வையும் கொட்டி எழுதப்பட்டிருக்கும் மேற்காணும் பாரதிதானின் பாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

இனி இது எவ்வாறு தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் பார்ப்போம்.

சித்திரைப் புத்தாண்டு தமிழரின் அறிவியல் பூர்வமான ஓரு மிகப்பழைய வழக்கம். நெடுநல்வாடையின் ஒரு பாடல் இதைப் பறைசாற்றுகிறது. ஆவணி மாதத்தில் ஒரு ஆண்டுத் தொடக்க முறை இலக்கியத்தில் காணப்பட்டாலும் அது வழக்கில் வராமல் சித்திரையே நிலைத்திருக்கிறது. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட வசந்தகாலம் அல்லது இளவேனிலின் தொடக்கம் பருவங்களின் புதிய சுழற்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. பனியால் கட்டுண்ட வண்டுகளின் சிறகுகள் இளஞ்சூட்டில் விரிந்து புதிய பூக்களின் மகரந்ததை நாடும் பொற்காலம் சித்திரை. வாடை தந்த நடுக்கம் நீங்கி வசந்தம் தரும் தென்றலின் சுகத்தில் மகரந்தம் மனக்கும் மாதம் சித்திரை.

பல பண்பாடுகளிலும் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் ஆண்டின் பருவங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து அதில் இளவேனிலை முதல் பருவமாக வைத்தார் நம் பழந்தமிழர். ஆனால் அரசோ அதில் மார்கழி மற்றும் தை மாதத்திற்கான முன்பனிக்காலத்தை இரண்டாக உடைத்து ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்க ஆவன செய்துகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டின் மிக நீண்ட இரவுப் பொழுதைக் கொண்டிருக்கும் தை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாக்குவதும் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் சித்திரை முதல்நாளை மாற்றுவதும் பழந்தமிழரின் அறிவியல் நோக்கை அவமதிப்பதாகும். ஆண்டுத் தொடக்கம் என்பதை வானவியலின் நிகழ்வுகளைக் கொண்டே முன்னோர் கணித்தனர். இன்றும் அரசு தை மாத முதல் தேதியை முன்னோர் வகுத்த பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்க இயலும். அவ்வாறு கணிக்கும்போது ஆட்டின் உருவத்தைக் கொண்ட மேழ இராசிக்குள் ஆதவன் நுழைவதே ஆண்டுப் பிறப்பு எனக் கொள்ளுதலின் முக்கியத்துவம் புரியும். ஏனெனில் ஆடு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டே ஆண்டு என்ற சொல் பிறந்தது என்ற கருத்து இருக்கிறது.

தற்கால வழக்கான கல்வி ஆண்டும் கணக்கு ஆண்டும் சித்திரை புத்தாண்டை ஒட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் - தையில் புத்தாண்டு - தமிழ் மரபன்று!http://www.bloggerhttp://www.blogger.com/img/blank.gif.com/img/blank.gif

தொடர்பான சுட்டிகள்:http://www.blogger.com/img/blank.gif

சித்திரையில்தான் புத்தாண்டு - தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்

தைந்நீராடல் - ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன்

Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government - I : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government - II : B R Haran

1 comment:

Unknown said...

தைமுதல் நாளை தமிழர் புதுவடுடமாகா ஏற்றுக்கொள்ளவில்லை மனசு