Tuesday, April 12, 2011

சக்தி கொடு! !!! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்




மரியாதைக்குரிய திரு. அண்ணா ஹஸாரே அவர்களுக்கு,

வணக்கங்கள்.

வசந்த நவராத்திரியின் விரத தினத்தின் எட்டாம் நாளான இன்று அதிகாலை ஐந்து மணிக்கு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அதே நாட்களில் நானும் உண்ணாவிரதத்தில்தான் இருந்தேன் புனிதமான சக்தி அன்னையை துதிப்பதற்கான உண்ணா விரதம். தங்கள் தர்ம யுத்தத்தில் அன்னை ஜெகதாம்பாவின் அருளால் நானும் மறைமுகமாக பங்கு பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வசந்த நவராத்திரி விரதத்துடன் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்த போது அஸ்ஸாமில் அன்னை காமாக்யா கோவிலிலும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வணங்கும் போது அன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆசியும் சக்தியும் வழங்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன். பராசக்தி தங்கள் மீது தன் அருட்கண்களை வைத்தாள் என்பதில் ஐயமில்லை. இன்று கேரள பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு நான் காந்தி நகர் வந்து சேர்ந்தேன்.

குஜராத் குறித்து தங்களின் அன்பான வார்த்தைகள் குறித்த செய்தி நேற்று எனக்கு வந்தது. தங்கள் ஆசிகள் கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்கு நான் நன்றிக்கடனும் பட்டிருக்கிறேன்.

மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் முழுநேர ஊழியனாக இருந்தேன். அந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர்கள் எங்கள் பயிற்சி கூட்டங்களில், முகாம்களில், தங்கள் கிராம வளர்ச்சி செயல்திட்டங்களைக் குறித்து பேசுவார்கள். அதைப் போல எப்படி தாங்களும் செயல்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பார்கள். அது என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களை சந்திக்கும் புண்ணியமும் எனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது.

குஜராத் குறித்தும் என்னைக் குறித்தும் தாங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு குஜராத் மாநிலமும் அதன் சேவகனான நானும் கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே சத்தியத்தை சொல்லும் மன உறுதி கொண்ட ஒரு போர்வீரனாக அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் இந்த சத்திய உறுதியாலேயே தங்கள் வார்த்தைகள் அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கின்றன.

இந்த சமயத்தில் தங்கள் அன்பான புகழ்ச்சியால் எனக்கு என் கடமைகளில் கவனமின்மையோ என் செயல்களில் தவறுகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என தாங்கள் ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் ஆசிர்வாதம் எனக்கு எது உண்மையோ எது தர்மமோ அதை செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிக்கும். அதே நேரத்தில் அது என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக ஆக்கியுள்ளது. உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும். எனவே நான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கும் தங்கள் ஆசிகள் வேண்டும்.

மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,

இந்த முக்கியமான தருணத்தில் நானும் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன் தான். என் குடும்பத்தில் எவருக்கும் அரசியலிலோ அதிகார வர்க்கத்துடனோ தூர-உறவு கூட கிடையாது. நான் ஒரு 100 சதவிகித பரிபூரண மனிதன் என்று நான் நினைத்துக் கொள்ளவில்லை. எந்த சாதாரண மனிதனையும் போல எனக்கும் நல்ல குணங்களும் உண்டு குறைகளும் உண்டு.

அன்னை ஜெகதாம்பா என் குறைகளை நீக்க வேண்டுமென்றே நான் பிரார்த்திக்கிறேன். தீயகுணங்கள் என்னில் வளராமல் அவள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். குஜராத் மாநிலத்துக்கு நன்மை செய்ய என்னை பூரணமாக அர்ப்பணிப்பதே என் பிரார்த்தனை. குஜராத்தின் ஏழை எளிய மக்களின் கண்ணீரை அகற்றும் சேவகனாக நான் இருப்பதே என் பிரார்த்தனை. இந்த பணியில் என்றென்றைக்கும் எனக்கு தங்களின் ஆசிகளில் குறைவே இருக்கக்கூடாது என்பதே தங்களிடம் என் தாழ்மையான பிரார்த்தனை.

மதிப்பிற்குரிய அண்ணா,

நீங்கள் ஒரு காந்தியவாதி. நீங்கள் ஒரு போர்வீரர். நேற்று கேரள பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத்துக்கும் எனக்கும் தங்கள் ஆசிகளை நான் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு தங்களை மோசமாக சில சக்திகள் தாக்கக் கூடுமே என்றுதான் அச்சம் ஏற்பட்டது. குஜராத்தின் மீது பொறாமையும் கெட்ட எண்ணமும் கொண்ட ஒரு கூட்டம் உடனடியாக தங்கள் அன்பை, தங்கள் தியாகத்தை, சத்தியத்துக்கான அர்ப்பண உணர்வை, தங்கள் தவத்தை குறை சொல்ல ஆரம்பிக்கும். தங்கள் பெயரை அவர்கள் கெடுக்க ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நீங்கள் குஜராத் குறித்தும் மோடி குறித்தும் நல்ல வார்த்தைகளை பேசிவிட்டீர்கள் அல்லவா?

துரதிர்ஷ்டவசமாக எனது இந்த அச்சம் உண்மையாகிவிட்டது. குஜராத்தை வெறுக்கும் தீயசக்திகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன. வசந்த நவராத்திரியின் இந்த நேரத்தில், அன்னை ஜெகதம்பாவிடம் தங்கள் நற்பெயரை எவரும் கெடுத்துவிடக் கூடாதே என மட்டும் பிரார்த்திக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த சிலவற்றை எண்ணிப்பார்க்கிறேன். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் திரு. அப்துல்லா குட்டி, குஜராத்தின் வளர்ச்சியை புகந்ததற்காக அவரது கட்சியினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டார். குஜராத் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் பங்கேற்றதற்காக மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தாக்கப்பட்டார். குஜராத்தின் மூத்த காந்தியவாதியான குணவந்த் ஷா குஜராத்தின் ஆத்ம கௌரவம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசியதற்காக அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தாருல் உலாம் தியோபந்த் இறையியல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபப்ட்ட மௌலானா குலாம் வஸ்தநாவி குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டியதற்காக எத்தனை தாக்குதல்களுக்கு ஆளானார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அவர் கூறியதெல்லாம் குஜராத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் எந்த வித மதரீதியிலான பாரபட்சமும் இல்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா மத, சாதி மக்களும் குஜராத்தில் மாநிலத்தின் வளர்ச்சியின் பயனை அனுபவிக்கிறார்கள் என்பதுதான்.

அண்மையில் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சிங்கா (இந்திய ராணுவத்தின் கதாரா பிரிவு) குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டினார். அவருக்கும் குஜராத்துக்கு எதிரான சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டது.

இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்.

ஆனால் குஜராத்தின் உண்மையான வளர்ச்சி இந்த நாட்டுக்கு எதிரான தீயசக்திகளுக்கு அவதூறு பிரச்சாரங்களையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்வதற்கு தடையாக இருக்கிறது என்பதே உண்மை. எங்கே குஜராத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் இந்த தீயசக்திகள் உடனே எழுந்து தங்கள் பொய் பிரச்சாரஙக்ளையும் அவதூறுகளையும் தொடங்கிவிடும்.

வணக்கத்துக்குரிய அண்ணாஜி,

குஜராத்தின் ஆறுகோடி மக்களும் தங்கள் மீதும் அதே தீயசக்திகள் தாக்குதல்களைத் தொடங்கி தங்கள் இதயத்தைப் புண்படுத்தி விடக்கூடாது என பிரார்த்திக்கின்றனர்.இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.
பரம்பொருள் உங்களுக்கு சக்தி அளிக்கட்டும்.

தாங்கள் இந்த தேசத்துக்காக செய்யும் தியாகங்களுக்கும் தவத்துகும் முன்னால் நான் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். எல்லாம் வல்ல பரம்பொருள் தங்களுக்கு உன்னதமான ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் வழங்கட்டும். இதுவே கடவுளிடம் என் இதயத்தின் மையத்திலிருந்து எழும் பிரார்த்தனை

தங்கள் உண்மையுள்ள

நரேந்திர மோடி

நன்றி : தமிழ்ஹிந்து டாட் காம்


கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே

தமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆட்களை தங்களை ஆள தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி ஒரு உதாரணம்.

No comments: