Tuesday, April 19, 2011

சொந்த வீடு எனும் பெருங்கனவு


இந்தியாவில் பலரின் பெருங்கனவு குடியிருக்க சொந்தமாய் ஒரு பெட்ரூம் வீடாவது வாழ்க்கை முடிவதற்குள் வாங்கிவிடமாட்டோமா என்பதே.

இந்த வருஷமாச்சும் ஒரு இடமாவது வாங்கிப்போட்டிடலாம், பக்கத்துல நாலஞ்சு வீடு வந்தப்புறம் கட்டிக்கலாம் என்பதும் இன்னொரு கனவு. வீடாக வாங்குவது ஒரு வகைக் கனவு எனில் இப்படி நகரிலிருந்து தள்ளிப்போய் ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டு அதன் அருகில் குறைந்தது ஒரு பஸ் ஸ்டாப்பாவது வந்த பின்னரே அங்கு வீடு கட்டிக்கலாம் என்பது இன்னொரு வகைக் கனவு.


சொந்தமாக கிராமங்களில் வீடிருப்பவர்களுக்கோ பிழைப்பெல்லாம் நகரங்களில். நகரில் பெரும்பாலும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையும், வரவுக்கும், செலவுக்கும் சரியாக்கிக் கொண்டுசெல்வதே பெரும்பாடாய் இருக்கும் கீழ் மற்றும் நடு நடுத்தர வர்க்க குடும்பங்களின் எப்போதைக்குமான கற்பனை சொந்த வீட்டில் வாழ்தல்.

நகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்படித் தேடி அலைந்தவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் குல கோத்திரம் முதல், உங்கள் சரித்திரமே அவர்களுக்குத் தெரிந்த பின்னர்தான் உங்களுக்குக் கொடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். எத்தனை பேர் இருக்கப் போகிறீர்கள் என்பதும் அவர்களுக்கு முக்கியம். பணமும் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட வீட்டு ஓனரின் அடிமையைப்போல பிழைப்பு நடத்துதல் எவ்வளவு கொடுமை என்பதும் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.


இங்கே கொடுக்கிற அந்தப்பனத்தை லோனுக்கு அடைச்சா ஒரு 15 வருஷத்துல வீடு நமக்குச் சொந்தமாயிரும் என்பதே எல்லோரின் கணக்கு. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் தடுக்கும் முக்கிய காரணி வீடுகளின் விலை.

இன்றைக்குச் சென்னையில் நடுத்தர வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பிலொரு வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 14 லட்சங்களில் ஆரம்பிக்கிறது. அதுவும் நகரின் மத்தியிலோ அல்லது வேலை செய்யும் இடங்களை ஒட்டியோ அல்ல. கிட்டத்தட்ட பழைய மஹாபலிபுரம் சாலை, ஒரகடம், சோளிங்கர் போன்ற இடங்களில்தான்.


சென்னை நகருக்குள் வீடு வாங்குவது குறித்து யோசிக்கக் கூட முடியாது. தனி வீடுகள் என்பது கற்பனைக்கும் எட்டாத விலையில் இருப்பதால் நமது மக்கள் அதுபற்றி யோசிப்பதுகூட இல்லை. வீடு கட்டும் பில்டர்களின் குறியோ மேல் நடுத்தரவர்க்க மக்கள்தான். அவர்களால்தான் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகளை வாங்க இயலும்.

பிரமிடின் அடியில் பொக்கிஷத்தைக் கண்டவர் என ஒரு கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் படித்தேன்.

இன்றைக்கு பணக்காரர்கள் வீடு வாங்குவது கருப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கு மட்டுமே. ஆனால் உண்மையிலேயே குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்க ஏழைகளுக்கு அவர்கள் வாங்கும் விலையில் வீடு கட்டித்தர யாருமில்லை. அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். உண்மையில் அப்படி வீடு கட்டி விற்பனை செய்வதே பெரும் லாபகரமாக இருக்கும். ஏனெனில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் இந்திய கீழ் மற்றும் நடு நடுத்தரவர்க்கத்தினர். அவர்களின் சந்தை மிகமிகப் பெரியது. டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் மொத்தமாக இடத்தை வாங்கி ஒரு குடியிருப்பு பகுதி போல கட்டி விற்றால் எவ்வளவு வசதியாய் இருக்கும். எவ்வளவு தூரமிருப்பினும் சென்னைக்கு சென்றுவர மின்சார ரயில் வசதியும், பேருந்து நிறுத்த வசதியும் இருக்குமிடத்தை ஒட்டி இருந்தாலே போதுமானது. செங்கல்பட்டிலிருந்தும்கூட சென்னைக்கு தினமும் வேலைக்குச் சென்று வருபவர்கள் இருக்கின்றனர். எனவே தூரம் ஒரு பிரச்சினை இல்லை. சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் 3 முதல் 5 லட்சங்களுக்குள் விலை இருப்பின் பெரும்பான்மையான மக்களின் சொந்த வீடு கனவு நனவாகும்.


டாடா கம்பெனி சுபகிருஹா என்ற பெயரில் பம்பாயில்(வாசிந்த்) ஒரு அடுக்குமாடி வீட்டுத்திட்டத்தை கொண்டுவந்து தற்போது விற்பனையில் இருக்கிறது. பம்பாய்க்கும், அந்தக் குடியிருப்புக்கும் சம்பந்தமே கிடையாது. அவ்வளவு தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் விலை மக்களை வாங்க வைக்கிறது. வெறும் 6 லட்சத்திற்கு ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்ட் கிடைக்கிறது. பம்பாய் நகரில் ஆறு லட்சத்திற்கு ஒரு கக்கூஸ் கூட கிடைக்காது

கானா, கப்டா அவுர் மக்கான் என்ற கோஷத்தை எத்தனை வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்/றோம். ஆனால் இன்று வரை உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்லும் இந்தியனின் எண்ணிக்கை கூட குறையவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் வீடுகளைப் பற்றி கனவு காண்பது கனவாகவே போகக்கூடும். பணக்காரர்களுக்கு மட்டுமே நகரில் வாழ்வு என்ற நிலை இன்றைக்கு.


இந்த நிலையை மாற்ற யாரெனும் முன்வருவார்கள் எனில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. ஆனால் கண்டுகொள்ளத்தான் யாருமில்லை.

திடீர்னு இன்னிக்கு இந்த விஷயம் போட்டு உறுத்திகிட்டே இருந்துச்சி. அதான் கட்டுரையா போட்டாச்சு.

2 comments:

ippadikku murugan said...

மூணு லட்சத்துல வீடா? சென்னைக்கு பக்கத்துல இருக்கற அரக்கோணத்துக்கு பக்கத்குல இருக்கற ஜோலார்பெட்டைக்கு பக்கத்துல இருக்கற இன்னும் பேரே வைக்காத கிராமத்தில்தான் அது சாத்தியம். ஆனா எல்லோருடைய ஆதங்கத்தையும் நல்லா வெளிப்படுத்தியிருக்கீங்க.

ராம்ஜி_யாஹூ said...

டி வி எஸ் ஹவுசிங் இந்த திட்டத்தோடு இருக்கிறதாம். ஏழு/எட்டு லட்சங்களில் வீடு திட்டம். பார்ப்போம்