விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Tuesday, April 12, 2011
ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்
கடவுள் மனிதனாக அவதரித்த நாள் இது.. அயோத்தியின் மன்னனான தசரதனுக்கும், கோசலைக்கும் சித்திரை மாதம், நவமி நன்னாளில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்தார்.
ஸ்ரீ ராமாவதாரம் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரம்.
பெரும்பாலானோர் இன்று விரதம் அனுஷ்டித்து நாளை விரதம் முடிப்பர்.
பானகமும், நீர்மோரும், பாசிப்பருப்பில் செய்த சுண்டலும் நிவேதனங்களாக வைக்கப்படுகின்றது.
இந்தியாவில் அயோத்தியிலும், பத்ராச்சலத்திலும், ராமேஸ்வரத்திலும் இன்று சிறப்பான வழிபாடுகளும், ராமநாம சங்கீர்த்தனங்களும் நடைபெறும். இதைக்காணவும், ராமபிரானின் அருளை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று இவ்விடங்களில் கூடுகின்றனர். இது தவிர எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் இன்று சிறப்பான பூஜைகள் செய்யப்படும்.
எனது சொந்த ஊரான தே.கல்லுப்பட்டியில் இன்று ஸ்ரீ ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் இறைபஜனையும், பேச்சுகளும், பட்டி மண்டபம் மற்றும் வழக்காடு மன்றங்களுமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நான் உத்திரப்பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஸ்ரீராம நவமியை ஒட்டி வீடுகளில் மைக்செட் கட்டி ராமாயணம் தொடர்ச்சியாக பாராயணம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ஊருக்கே அண்ணதானம் செய்யப்படும். ஒரு சுற்று முழுதும் முடிந்த பின்னர் வேறொருவர் வீட்டில் பாராயணம் ஆரம்பிக்கும்.. இப்படியாக ராமநவமிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ராமாயணம் எங்கே சென்றாலும் கேட்கும் உத்திரப்பிரதேசத்தில். பிரசாதம் வழங்கும் அன்று நாம் அந்த ஊர்களில் இருந்தால் நல்ல பசும் நெய்யில் வறுத்தெடுத்த பூரிகளும், தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு சப்ஜியும், நல்ல கெட்டித்தயிரும் போதும், போதும் எனச் சொல்லும்வரையிலும் கிடைக்கும். அந்த இனிய நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராமா" என்ற இரண்டெழுத்தினால் என்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.
ராமா என்ற இரண்டெழுத்தை வாழ்க்கை முழுதும் ஜெபித்து எல்லா பாவங்களையும் போக்கிக் கொள்வோமாக..
இன்றைய தினம் சில பகுத்தறிவுவாதிகளின் வீடுகளில் வெளியே தெரியாமல் அவர்தம் சில பல குடும்பங்கள் மூலம் ஸ்ரீராமபிரானை தவறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்ளப்படும். பகுத்தறிவுவாதிகள் ஊருக்கே உபதேசம் செய்பவர்கள், அவர்தம் மணைவிகளே இவர்கள் கூறும் பகுத்தறிவை கேட்பதில்லையே என்றெல்லாம் நாம் கேட்கக்கூடாது.
நாட்டில் நல்ல ஆட்சியாளர்கள் பதவிக்கு வரவும், நியாய, அநியாயங்களை மக்கள் உணரவும், நாடு சுபிட்சத்துடனும், எதிரிகளின் தொல்லையின்றியும், வளர்ச்சியை மட்டுமே காணவும் அருள்புரி ஸ்ரீராமா என இன்று பிரார்த்திக்கிறேன்.
எல்லோருக்கும், எல்லா நலன்களும் கிட்டுவதாக என இந்த ஸ்ரீராமநவமி நன்னாளில் எல்லோரையும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.
திரு ஜெயலக்ஷ்மி அவர்கள் எழுதிய பகைவனும் பாராட்டும் பகழி என்ற அருமையான கட்டுரையை வாசிக்கும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.
குறிச்சொற்கள்
sriramanavami,
ராமநவமி,
ஸ்ரீராமநவமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment