தமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் உண்டான ஆர்வமே இந்தப் பதிவு.
தேர்தலை அறிவிக்கும் பணியை மட்டும் செவ்வனே செய்து கொண்டிருந்த தேர்தல் ஆணையத்திற்கு பல்லும் உண்டு எனக்காட்டியவர் திரு.டி.என்.சேஷன். அதுவரை “மொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்கு” என எதுகை மோனையோடு பேசிக்கொண்டே மொந்தையிலே ஊற்றி, ஊற்றி கொடுத்தே ஜெயித்து வந்தனர்.
திருமங்கலம் பாணி என்ற ஒரு பாணியை உருவாக்கியது யாரென்றால் ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என தனக்கே நற்சான்றிதழ் அளித்துக்கொள்ளும் கருணாநிதியின் மகன் அழகிரி. ஒரு இடைத்தேர்தல் எவ்வளவு கேவலமாய் நடக்க முடியும் என எடுத்துக்காட்டியது திருமங்கலம்.
அதுவே முதலும், கடைசியுமாய் ஆகிப்போனது, தற்போதைய தேர்தல் கமிஷனின் பலமனைத்தும் அறிந்த தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால்.
நான் தமிழக முதல்வரா அல்லது தேர்தல் கமிஷனரா என வயிற்றெரிச்சலில் கருணாநிதி கேட்கும் அளவு ஊழல் எதும் நடக்க இயலாத அளவு தீவிர கண்காணிப்பில் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.
கருணாநிதி இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டாத அளவு சொத்துக்குவிப்பு செய்துவிட்டார். ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் எனச் சொல்ல மனசாட்சியற்ற கருணாநிதியால் மட்டுமே முடியும். அறிவியல் பூர்வமாய் ஊழல் செய்பவர் என சர்க்காரியா கமிஷன் சொல்லி கேவலப்பட்ட பிறகும் இப்படி சொல்லிக்கொள்ள கருணாநிதியால் மட்டுமே முடியும்.
இந்தத் தேர்தலில் கருணாநிதி ஜெயிக்க வேண்டியிருப்பது அவரது சொத்துக்களைப் பாதுகாக்கவும், சரியான இடங்களில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து நாளைக்கு மாட்டிக்கொள்ளாத அளவு முதலீடு செய்வதற்கு மட்டுமே.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அடுக்கு மொழிகளில் பேசி ஊரையே ஏமாற்றிவந்த அண்ணாவின் வழித்தோன்றல் இன்றைக்கு வடக்கு, தெற்கு இரண்டையும் தேயவிட்டு தான் மட்டும் ஊழல் செய்து வாழ்ந்திருக்கிறார். பலிகடாவாக ராஜாவும் அவரது உதவியாளர்களும்.
இந்தத் தேர்தலிலும் கருணாநிதி ஜெயிப்பது தமிழகம் ஜனநாயகத்திலிருந்து, ராஜாங்கத்துக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்குச் சமம். கிட்டத்தட்ட எண்ணெய் வளமிக்க ஒரு நாட்டின் ராஜா செய்யவேண்டிய அனைத்தையும் இலவசம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறார். ஏன் செய்கிறார் என்பது இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்கக் காத்துக்கொண்டிருந்த திருவாளர் பொதுஜனத்துக்கும் தெரியும். ஒரு ரூபாய்க்கு நூறுரூபாய் கொள்ளையடிப்பார் கருணாநிதி என்பதும் தெரியும்.
உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது தமிழ்நாட்டின் பெயரில். ஆனால் வருவாயைப் பெருக்க எந்த முயற்சியும் செய்யாமல் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சளைத்தவர் அல்ல. ஜெயலலிதாவுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியில் ஊழல் செய்வதில் கருணாநிதி கல்லூரியாக விளங்கினார் என்றால் அடுத்து பதவிக்கு வந்த ஜெயலலிதா ஊழல் பல்கலைக்கழகமாக விளங்கினார். அவர் செய்த இமாலய ஊழல்கள் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் இருதேர்தல்களிலிருந்து துரத்தியது.
டான்சி நிலபேர வழக்கிலிருந்து ஆரம்பித்து கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், சுடுகாட்டுக்கொட்டகை ஊழல்வரைக்குமாக அவரது ஊழல்.
மந்திரிகளையும், எம்.எல்.ஏக்களையும் கிட்டத்தட்ட புழுக்கள் போல நடத்தினார். அவர்களும் கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததைபோல நடந்து கொண்டனர். பாண்டுரெங்கன் என்ற ஒரு அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்வது வரை இவர்களது அசிங்கம் பிடித்த ஆட்சி நடந்தது.
அரசாங்க ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை டெஸ்மாவோ, அஸ்மாவோ ஏதோ ஒரு சட்டத்தின் பெயரில் சிறையில் தள்ளிய பெருமை இவருக்குண்டு.
இந்தத் தேர்தலில் சகோதரி, சகோதரி என ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டிருந்த வை.கோவை ஓரங்கட்டி தனது அராஜகமும், ஆணவமும் இன்னும் குறையவில்லை என்று நிரூபித்தார்.
இருக்கின்ற இந்த இரு கொள்ளிகளுக்கும் மாற்றாக வந்த விஜயகாந்த் நம்பிக்கையாகத் தெரிந்தார். தற்போது எல்லோரும் விழும் அதே திராவிட சாக்கடையில் போய் விழுந்து சேறு பூசிக்கொண்டு நிற்கிறார்.
யாரும் கூட்டு சேர்த்துக்கொள்ளாததால் தனியாக நிற்கிறது தேசியக் கட்சியான பாரதிய ஜனதா. அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும்படி கிட்டத்தட்ட எல்லா திராவிடக் கட்சிகளையும் கெஞ்சியது. கடைசியில் வேறு வழியின்றி வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக தீர்மானிக்க, டெல்லி தலைமையோ எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.
வேறு வழியின்றி தனியாக நிற்கும் பா.ஜ.கவின் தமிழக வாக்கு வங்கியைக் குறித்த உண்மையான தகவல் தெரிய வரும். தமிழக மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரிய வரும்.
பாரதிய ஜனதாவின் பலம் இவர்கள் ஆண்ட, ஆள்கிற எல்லா மாநிலங்களும் நல்ல நிலைமையில் உள்ளன. குஜராத்தைப் பாராட்டிப் பேசுதல் தவறு என்பது இணைய நடைமுறை. ஆனால் குஜராத்தைப்போல இன்றைக்கு வளர்ச்சியடைந்த மாநிலம், அதுவும் சாராயக்கடைகளை திறக்காமலேயே தொழில்துறை வளர்ச்சியைப் பெருக்கி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்வதுடன், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை உலக வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கிறது குஜராத்.
இனி காப்பாற்றவே முடியாது என இருந்த பீஹார் இன்றைக்கு வளர்ச்சிப்பாதையில். அதை உணர்ந்த மக்கள் இரண்டாம் முறையும் பா.ஜ.க கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினர்.
எல்லாவற்றையும் பார்க்கும்போது பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பதே நம்மிடம் இருக்கும் ஒரே வழி. ஆனால் கழக ஆட்சிகளிடமே நம்மை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து பழக்கப்பட்ட நாம், இலவசங்கள் ஏதும் தராத ஆனால் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்கையாகக் கொண்டு வாக்கு கேட்டு வரும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்போமா?
வாக்களிப்பதே நமது எதிர்காலத்துக்கு நல்லது. இல்லையெனில் இலவசங்களினால் நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்குவதுடன், இவர்கள் ஆட்சியை விட்டு விலகும்போது தமிழ்நாட்டு நிதி நிலைமையும் பிச்சைக்கார நிலைமையில்தான் இருக்கும்.
இப்போதே ஜெயலலிதாவின் வெற்றி உறுதி என கருத்துக்கணிப்புகள் மக்களின் மனதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூசகமாக சொல்ல ஆரம்பித்துவிட்டன. தமிழக மக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும், தமிழ்நாடு மீதும், தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளோரின் விருப்பமாய் இருக்க முடியும்.
ஒரு தமிழக வாக்காளனாக எனது வாக்குகள் பாரதிய ஜனதாவுக்கே.
இந்திய தூதரகங்களில் வாக்களிக்க நடைமுறை இருக்கிறதா எனக் கேட்க வேண்டும்.
3 comments:
தன குடும்பத்திற்காக ஊரில் பலரை கொன்று குவிக்கும் அக்கட்சியை விட ஜெயலலிதா எவளவோ மேலானவர்........... அதுபோக ப ஜ க வை பொறுத்தவரை யார் யார் என்றே நமக்கு தெரியாது அது போக அவர்களின் முதல் வடக்கு ராஜ்யம் கர்நாடக ஒன்றும் சொல்லிகொள்ளும் அளவிற்கு இல்லை..... இன்னும் சொல்லப்போனால் ஊழலில் மிக மோசமாக இருக்கிறது,,,,, ஜெயலலிதா அரசு உழியர்களை வேலை விட்டு தூக்கினர் என்று சொல்வதை விட அவர்களை ஒழுங்காக வேலை பார்க்க வைத்தார் என்பதே உண்மையான வாதம்..... அலுவகத்தில் தூங்கி கொண்டிருந்தவர்களை எச்சரித்து கண்டிப்பது எத்துறையிலும் தவறான போக்கு என்று சொல்ல முடியாது....
பா ஜ க விற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து சரியானதுதான். ஆனால் ஜெயலலிதா அரசு ஊழியர்களை கண்டித்தார் என்று அவரை விலக்க வேண்டியது இல்லை. தற்போது உள்ள நிலையில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் தமிழகத்துக்கு தேவையே. நன்றி.
விஜய் ராமசாமி மற்றூம் எஸ்.என்.கே.எம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment