Friday, December 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகச்சிறந்த நாவலான “விஷ்ணுபுரம்” பெயரால் ஒரு இலக்கிய வாசகர் வட்டம் உருவாகி அவர்களும், ஜெயமோகன் அவர்களும் இணைந்து தகுதி இருந்தும் இதுவரை கவனிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களின் படைப்புகளை வாசிப்போர்களிடம் கொன்டு செல்வதுடன், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி எழுத்தாளருக்கும், அவரது படைப்புகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தருகின்றனர்.

குன்றிலிட்ட விளக்கை வெளியில் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சியே. இருப்பினும் இந்த அளவு இலக்கிய வாசகர்களை தனது எழுத்துமூலம் இணைத்து ”விஷ்ணுபுரம் விருது” வழங்கும் நிகழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறார் திரு.ஜெயமோகன். அவருக்கும், அவருடன் இணைந்து இலக்கியத்திற்காக தன்னாலான உழைப்பை நல்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் ”விஷ்ணுபுரம் விருது” இலக்கிய விருதை பெறுதல் ஒரு தகுதியாக ஆகும் காலம் கனிக எனவும் வாழ்த்துகிறேன்.



விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

Wednesday, November 2, 2011

13 Assassins (Japanese)


நமக்குத் தெரிந்ததெல்லாம் டி.வி.எஸ் சாமுராய் தான் ஒரு காலத்தில். ஆனால் சாமுராய் என்ற பெயருக்கு ஜப்பானில் இருக்கும் மதிப்பே தனி. சாமுராயாக இருப்பதே ஒருவகை சுமைதான். அதை விரும்பி ஏற்றுக்கொள்வோரே சிறந்த சாமுராயாக இருக்க முடியும்.

சாமுராய்கள் தொழில்மயமான ஜப்பானின் காலத்திற்கு முன்பு இருந்தவர்கள். அவர்களுக்கென தனியானதொரு சட்ட திட்டங்கள் உண்டு. அதன் பெயர் புஷிடோ. சாமுராய்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்கள், மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் செல்வங்களுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தனர். அவர்களது பாதுகாப்புக்காக உயிரையும் அர்ப்பணித்தல் அவர்களின் கடமைகளில் ஒன்று. சாமுராய்களில் பெண்களும் உண்டு. சாமுராய்கள் எதிராளியிடம் தோற்க நேர்ந்துவிட்டால் தற்கொலை ( ஹரகிரி ) செய்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்படி ஹரகிரி செய்து கொள்ளவேண்டும் என்ற சட்டங்களூம் உண்டு.

ஆனால் எங்கும் இருப்பதுபோல ஜப்பானிலும் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சாமுராய் எனக் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லம நம்மூர் “டாக்டர்கள்” போலத்தான்.

அப்படி ”சாமுராய்”க்களின் காலம் மறையும் நேரத்தில் 13 உண்மையான சாமுராய்கள் சேர்ந்து மக்களுக்கு கொடுமை செய்யும் ஒரு கொடூரமான பிரபுவை (நாரிட்சுகு)அழிக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறார்கள்.

யார் அந்த கொடூரமான பிரபு? ஜப்பானில் ”ஷோகுன்” என்றால் படைத்தலைவன். அப்படி ஒரு முன்னாள் படைத்தலைவனின் மகனும், தற்போதைய படைத்தலைவனின் இளைய தம்பியுமய் இருக்கும் ஒருவன், பெயர் மட்சுடிரா நாரிட்சுகு. இந்தத் தகுதிகளினால் எந்த சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாது. ஷோகுன்களை ஜப்பானிய அரசர் நேரடியாக நியமிப்பார். கேட்க வேண்டுமா? நினைத்த பெண்ணை கற்பழிப்பது, கொடூரமாக கொலை செய்வது, அங்கங்களை வெட்டி விளையாடுவது இப்படியாக கொடூரமாக இருந்தவன்.

இவனது கொட்டத்தைப் பார்க்கும் ஒரு அரசு அதிகாரி இப்போதே இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இவன், நாளைக்கு அதிகாரத்தின் உச்சிக்குச் செல்லும்போது இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வானோ? அதற்குள் இவனை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக ஷின்சிமொன் என்ற ஒரு சாமுராயை நாரிட்சுகுவைக் கொல்லும்படி வேண்டுகிறார்.

ஷின்சிமொன் பொறுக்கி எடுத்த மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்டு ”ஈடோ” என்ற இடத்திற்கு நாரிட்சுகு (வில்லன்) செல்லும் வழியில் ஊடறுத்து நாரிட்சுகுவை (வில்லன்)கொல்லுதல் என்று திட்டம்தீட்டுகிறார்.

13வது ஆள் பெயர் கிகா. காட்டில் இவர்களுக்கு வழி காட்டியாக வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்பவன்.கிகா சாமுராய் அல்லன். ஆனால் சாமுராய்கள் என்றால் பெரிய கொம்பா என்ற எண்ணம் கொண்டவன். அவனாலும் சிறப்பாய் சண்டையிட முடியும் என நினைப்பவன். அவனையும் அவர்களது திட்டத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.

நல்லவேளையாக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் பார்த்தேன். இல்லையெனில் ஒரு அட்சரம் கூட புரிந்திருக்காது.

ஏன் நாரிட்சுகுவைக் ( வில்லன்) கொல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள் உறைய வைக்கின்றன. ஒரு காட்சியில் ஒரு பெண்னை கையையும், காலையும் வெட்டி, நாக்கையும் அறுத்து வைத்திருப்பான். இப்படி செய்வது அவனது விளையாட்டாம். அவளுடன் விளையாடுவது போரடித்த பின்னர் அவளை வெளியே வீசிவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான்,அவள் ஹரகிரி செய்து கொள்வாள்.கணவனை வெட்டிக் கொன்றுவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு குடும்பத்தையே அம்புகள் விட்டு கொல்வான். சிறு குழந்தை உட்பட.

அதுபோல மக்கள் அனைவரும் அவனது அடிமைகள். அதுதான் அவன் கொள்கை. ஓரிடத்தில் ஹன்பேயிடம் Ruling is convenient, but only for rulers. The people must live to serve. என்பான்.

இதையெல்லாம் கேட்கும் ஷின்ஷிமோன் இந்த அநியாயத்தைச் செய்யும் நாரிட்சுவைக் கொல்வதே சாமுராயாக இருக்கும் தனக்குப் பெருமை அளிக்கும் என நினைக்கிறார். ஒரு சாமுராய் கௌரவமாய்ச் சாவதைவிட என்ன பெருமை இருக்க முடியும் என்கிறார். இதை, கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவரிடம் I shall accomplish your task... with magnificence என்பார்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்ற நம்மூர் பழமொழியையே ஜப்பானிலும் சொல்கின்றனர். தூண்டிலைப் போட்டு வைத்துவிட்டு காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டால் மீன் புழுவை மட்டும் சாப்பிட்டு ஓடிவிடும். பொறுமையாய் இருந்தால் மீன் வசமாய்ச் சிக்கும். வில்லனைக் கொல்ல காத்திருக்க வேண்டியிருக்கும் நேரத்தில் தனது குழுவிடம் ஷின்ஷிமோன் சொல்வது மேற்சொன்னது.

வில்லனைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டு காத்திருக்கும் இடத்திற்கு வராமல் வேறுபாதையில் சென்றுவிட்டதுபோல ஒரு மாயையை நாரிட்சுகு உருவாக்குவான். ஆனால் நிச்சயம் இவர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் வழியில்தான் வருவான் என்பதை ஷின்ஷிமொன் சொல்வார். அதைப்போலவே 70 பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்ட அந்தக்கொடூரன் மறைவாகப் பதுங்கி இருந்துவிட்டு ஆட்களை மேலும் சேர்த்து 200 பேருக்கும் மேலாக வந்து தாக்குவான்.

13 பேர் கொண்ட சாமுராய் குழு 200 பேர் கொண்ட குழுவை வென்றதா, அந்தக் கொடூரன் கொல்லப்பட்டானா என்பதுதான் கதை.

நாரிட்சுகுவைத் தாக்க திட்டமிட்டிருந்த முழுகிராமத்தையே அவர்களுக்கான வலையாக மாற்றியிருப்பார்கள், 13 பேரும் சேர்ந்து. வெடிகள், முட்கள், அம்புகள், வாட்கள் என எல்லாவற்றையும் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அருமை. ஆனால் அந்த சண்டைதான் மிக முக்கியம் என்பதால் மிக நீளமான சண்டையாக எடுத்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் ஒளி மற்றும் ஒலிப்பதிவு குறித்து. இசையற்றிருத்தலே சிறந்த இசை என்பதை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிக மிக அவசியமான இடம் தவிர வேறு எங்கும் இசையை நம்மால் உணர முடிவதில்லை. கிட்டத்தட்ட படத்துடன் இயல்பாக பயணிக்கிறது இசை. பிரம்மாண்டம் ஏதுமின்றி சாமுராய்களின் வாழ்க்கை பற்றி அருமையாகச் சொல்கிறது படம்.

ஒளிப்பதிவும் அருமை. கண்ணைகூசச் செய்யும் ஒரு இடம்கூட இல்லை. அழகான ஜப்பானிய கிராமங்களைப் பார்த்த உணர்வு. இவ்வளவு இயற்கை அழகுடனா ஜப்பான் இருக்கும்? அழகோ அழகு சாமுராய்கள் எதிரியை எதிர் கொள்ளும் இடம். படத்தில் எங்கும் வெயில் வந்து பார்த்தாக ஞாபகம் இல்லை.

ஹீரோயிஸம், பறந்து பறந்து சண்டை, என்ற எதுவும் இன்றி கெட்டவனை அழிக்க தன்னைப் பணயம் வைக்கும் 13பேரின் கதை. அவ்வளவே. அந்தக்காலத்தில் எப்படி செய்திருப்பரோ அதேபோல.

எதிரியின் படைத்தலைவன் ஹன்பே (அவனும் சாமுராய்தான்) தலை வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும். அதைக் காலால் எட்டி உதைப்பான் அந்தக் கொடுரன். “அவன் உன்னைக்காக்கத்தானே தனது உயிரை இழந்தான் அவன் தலையை எட்டி உதைக்கிறாயே என ஷின்ஷிமோன் கேட்பார். நாரிட்சுகு பதிலாக திமிருடன், உனக்கு வேண்டுமெனில் எனது தலையை வெட்டி நீ காலால் உதை என்பான்.

இறுதிச் சண்டையாக நாரிட்சுகுவை “உன்னால் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும், இனி நாடு அமைதியாக இருப்பதற்காகவும், எனது நண்பனின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், உன்னால் சர்வநாசம் செய்யப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணிற்காகவும் உன்னைக் கொல்கிறேன் எனச் சொல்லி அவனை அழிக்கிறான் சாமுராய் ஷின்ஷிமோன். ஷின்ஷிமோனும் நாரிட்சுவால் வாளால் குத்தப்படுகிறார். இருவரும் இறக்கின்றனர்.

எல்லா கொடூரர்களுக்கும் அவர்களது சாவு என்பது வலி மிகுந்தே இருக்கிறது,அன்று முதல் இன்றுவரை. ஷின்ஷிமோனால் வயிற்றில் குத்தப்பட்டு துடிக்கும்போது வலிக்காக அழுகிறான், சாகப்போவதை நினைத்து சகதியில் புரண்டு அழுகிறான். ஷின்ஷிமோன் அவனது தலையைக் கொய்து அவனது வலியிலிருந்து விடுதலை அளிக்கிறார். அவ்வளவு கொடூரமானவனுக்கும் கருனையே காட்டுகிறான் இந்த சாமுராய்.

சாமுராய்களின் வாழ்க்கை என்பதே ஒரு சுமைதான் என்பதை கடைசியில் வீழ்ந்து கிடக்கும் ஷின்ஷிமோன் சொல்வார். திருமணம் ஆகாத ஒரு சாமுராய்க்கு (ஷின்ஷிமோனின் மருமகன்) இனிமேல் உன் வாழ்க்கையை நீ விரும்பிய வழியில் வாழ்ந்துகொள் என்பதுடன் நிறைவு பெருகிறது.

கிகாவாக வரும் அந்த காட்டுவாசி ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு காட்டுப் பேய். ஆனால் நன்மை செய்யும் பேய். அவன் சொல்லும் உபாஷி என்ற பெண் அந்தக் கூட்டத்தின் தலைவியின் மகளாக இருக்கக் கூடும். அவனது தலைவியின் மகள்மீது கைவைத்ததால்தான் தன்னை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கிகா சொல்கிறான் ஓரிடத்தில்.

சண்டையில் அவனுக்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு விடுவான். கடைசியில் எநதக் காயமும் இன்றி அவன் அடுத்த காட்சியில் வருவான். எஞ்சி இருக்கும் ஒரு சாமுராய் எப்படி உனக்கு காயமே இல்லை எனக் கேட்கும்போது Compared to fighting a wild bear these wounds are nothing. என்று சொல்லி விடுவான்.

சாமுராய்களுக்கு உதவ கிகா என்ற நல்ல பேய் உதவுவதாகக் கூட கொள்ளலாம்.


இது திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல.. நிஜமாகவே நடந்தது, திரைவடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1963ல் இதே பெயரில் வந்த கருப்பு வெள்ளைப் படத்தின் மறுதயாரிப்புதான் இந்தப் படம்.

இயக்கம் : தகாஷி மைக் ( Takashi Miike.)
ஜப்பான் அகாதமி பரிசுக்கு சிறந்த படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்.

படத்தின் ட்ரெய்லரைக் காண இங்கே சொடுக்குங்கள்.

இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளம் இது.

Tuesday, November 1, 2011

ஜானி ட்ரை ஙுயென் .. எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்


ஜானி ட்ரை ஙுயென்.

அமெரிக்காவில் வசிக்கும் இவர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் டூப் நடிகராகவும் நடித்திருக்கிறார், 24 படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தற்காப்புக்கலை வல்லுநராகவும் இருக்கும் இவர் பிறந்தது தென் வியட்நாமில்.

8 வயதிலெயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்ட இவரது அம்மா சீனாவைச் சேர்ந்தவர்.எனவே இவர் பாதி சீனர், பாதி வியட்நாமியர்.

இவரது அண்ணன் சார்லி ஙுயென் தான் ”த ரீபெல்” படத்தை இயக்கியவர்.

சூர்யா நடித்த திரைப்படத்தில் வில்லனுக்கு கைதட்டும், விசிலும் பறப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டோங் லீ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

சும்மா அம்பது அடி தூரத்தில் இருந்து கொண்டு ஒருத்தனை மெஸ்மெரிசம் செய்தல் சாத்தியமா, 5 விநாடிக்குள் ஒருவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தல் சாத்தியமா என்ற லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ”டோங் லீ” என்ற பாத்திரத்தில் நடித்த ஜானி ட்ரை ஙுயெனின் நடிப்பு அட்டகாசம்.

அவரது உடல் மொழி, நடக்கும் விதம், அடுத்தடுத்து ஆளைத் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டே போவது, கொஞ்சம்கூட வில்லத்தனம் செய்யாமல் வில்லன் வேலையைச் செய்யும் விதம் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்திருக்கிறது.

சண்டை ஒவ்வொன்றும் இயல்பாய் இருக்கிறது. கிட்டத்தட்ட விமர்சனம் எழுதிய எல்லோரும் போட்டுச் சாத்திய அதே விஷயத்தை நாமும் எழுதாமல் நல்லதாய் எழுதுவோம் என நினைத்ததால் இந்தப் பதிவு.



இந்தப் பட விமர்சனங்களை தமிழ்கூறும் நல்லுலகின் வலைப்பதிவர்கள் கிட்டத்தட்ட போஸ்ட்மார்ட்டமே செய்துவிட்டதால் அங்கே சென்று படித்துக் கொள்க.

ஜானி ட்ரை ஙுயென் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்

Thursday, April 21, 2011

சில எண்ணங்கள் ( நாவரசு, மன்மோகன் மற்றும் அண்ணா ஹசாரே )

நாவரசுவை ஜான் டேவிட் கொலை செய்தது உண்மைதான், அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைதான் சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தற்போது ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக் தெரிகிறது. அதுவும் எப்படி, கிறிஸ்தவ மத போதகராக. இந்தியாவில் கொடூரக் கொலை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யேசுவின் கருணையையும், அன்பையும் ஆஸ்திரேலியர்களுக்கு போதிப்பான் போல.


முதலில் ஜான் டேவிட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது முழுக்க முழுக்க ”யேசுவின் கருணை”யால் என்றான் அந்தக் கொலைகாரன். இப்போது அந்த யேசு கருணையற்றவர்போல. இப்படி ஒரு தீர்ப்பு வரும் முன்னரே நாட்டை விட்டு ஓடியிருக்கிறான்.


முதலில் சாதகமாக தீர்ப்பு வரும்படி ஆதாரங்களை சரியாக சமர்ப்பிக்காத போலீசுக்கு என்ன தண்டனை? அவனது பாஸ்போர்ட்டை கேஸ் முடியும்வரை முடக்க உத்தரவிடத நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?


இவ்வளவு தாமதித்த தீர்ப்பு வந்தும் தனது மகனைக் கொன்றவன் தண்டனையிலிருந்து தப்பித்து ஓடியிருக்கிறானே என புலம்பும் நாவரசுவின் பெற்றோருக்கு யார், எப்படி ஆறுதல் சொல்வார்கள்?

செத்தது இந்து என்பதாலும், கொலையாளி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவன் என்பதாலும் இனி பிரதமரின் ராத்தூக்கம் பறிபோகுமே, அதையெல்லாம் தாண்டி எப்படி ஜான்டேவிட்டை இந்தியா கொண்டுவந்து தீர்ப்பை நிறைவேற்றப்போகிறது காவல்துறையும், நீதித்துறையும்?


தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றார் அண்ணல் காந்தியடிகள். இன்றைக்கு தாமதித்தோடல்லாமல், குற்றவாளியை தப்பிக்கவும் விட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை முழுதும் மறுத்து விட்டது, .



எப்போதும் எதற்காகவாவது எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டெ இருக்கும் இந்து முன்ணனி மனதைத் தொடும் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது.


கீழே உள்ள படத்திற்கு விளக்கம் தேவையில்லை.




கணையாழி மீண்டும் வந்திருக்கிறது.சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் மூலமே கணையாழி என்ற ஒரு புத்தகம் இருப்பதை தெரிந்துகொண்டவன் நான்.


புதிய இதழில் எஸ்.ராவின் புத்தனாவது சுலபமும், இமையம் எழுதிய எது இலக்கியம், எது தலித் இலக்கியம் கட்டுரையும் அருமை.


அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெயமோகன் எழுதிய இந்த இரு பதிவுகளும் ( அண்ணா ஹஸாரே 1 & அண்ணா ஹஸாரே 2 முக்கியமானவை. எனது முந்தைய பதிவிற்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை ஜெயமோகனின் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மிகவும் கவர்ந்தன இப்பதிவுகள். இன்னும் தெளிவாய், தீர்க்கமாய் எடுத்துச் சொல்கிறார், ஜெயமோகன்.



எஸ்.ராவிற்கு அவரது யாமம் நாவலுக்காக தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அவரது புத்தனாவது சுலபம் சிறுகதை புதிதாக வெளிவந்திருக்கும் கணையாழியில் வந்திருக்கிறது. அருமையான சிறுகதை. பதின்மவயதில் இருக்கும் ஆண் குழந்தைகள் குறித்த தகப்பனின் பார்வையும், தாயின் பார்வையும்.



மே 13 வரையில் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் கனவு காண்பதில்லை நான். எனவே அடுத்து யார் வந்தாலும் தயவு செய்து இலவசங்களை நிறுத்தி வேலைவாய்ப்பை பெருக்குங்கள். உங்களிடம் பிச்சை வாங்காமலேயே தமிழக மக்கள் வாழ்ந்துகொண்டுதானிருந்தனர். நீங்கள் கொள்ளை அடிப்பதற்காக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் பிச்சை இடுவதால் ஒரு சமூகமே இலவசங்கள் பின்னால் அலையும் கூட்டமாக மாற்றியிருக்கிறீர்கள். இனிமேலாவது உங்களுக்காக மட்டும் சிந்திக்காமல் மக்களுக்காகவும் சிந்தியுங்கள்.



இஸ்ரோவின் சமீபத்திய சாதனை பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி அதை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியும் விட்டது.


நமது விஞ்ஞானிகளை வாழ்த்துவோம். ஆனால் வழக்கம்போல சோனியாவின் ஜால்ரா சோனியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்தால் கிடைக்கும் மரியாதையையும், கைநிறையக்கிடைக்கும் பணத்தையும் உதறிவிட்டு நாட்டுக்காக உழைக்கும் இந்திய விஞ்ஞானிகள் எங்கே? இந்தியாவையே அடகுவைக்கும் சோனியா எங்கே? இவர்களது உழைப்பிற்கு சோனியாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் ஈனர்கள்தான் நாட்டைக்கெடுக்கும் கயவர்கள்.


ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மன்மோகன்சிங் தவிர வேறுயாருக்கும் இப்படிச் சொல்ல ஒரு தைரியம் வராது. இதுவரை ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் தரவும் ஒரு தைரியம் வேண்டும். அப்படியே சுப்ரமணியசாமி உங்களின் தங்கத்தலைவி மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு ஒப்புதல் அளித்து முதல் துணிச்சலைக் காட்டுங்கள். மடியில் கனம் இல்லையெனில் என்ன பயம்?


மீண்டும் சந்திப்போம்..

Tuesday, April 19, 2011

சொந்த வீடு எனும் பெருங்கனவு


இந்தியாவில் பலரின் பெருங்கனவு குடியிருக்க சொந்தமாய் ஒரு பெட்ரூம் வீடாவது வாழ்க்கை முடிவதற்குள் வாங்கிவிடமாட்டோமா என்பதே.

இந்த வருஷமாச்சும் ஒரு இடமாவது வாங்கிப்போட்டிடலாம், பக்கத்துல நாலஞ்சு வீடு வந்தப்புறம் கட்டிக்கலாம் என்பதும் இன்னொரு கனவு. வீடாக வாங்குவது ஒரு வகைக் கனவு எனில் இப்படி நகரிலிருந்து தள்ளிப்போய் ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டு அதன் அருகில் குறைந்தது ஒரு பஸ் ஸ்டாப்பாவது வந்த பின்னரே அங்கு வீடு கட்டிக்கலாம் என்பது இன்னொரு வகைக் கனவு.


சொந்தமாக கிராமங்களில் வீடிருப்பவர்களுக்கோ பிழைப்பெல்லாம் நகரங்களில். நகரில் பெரும்பாலும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையும், வரவுக்கும், செலவுக்கும் சரியாக்கிக் கொண்டுசெல்வதே பெரும்பாடாய் இருக்கும் கீழ் மற்றும் நடு நடுத்தர வர்க்க குடும்பங்களின் எப்போதைக்குமான கற்பனை சொந்த வீட்டில் வாழ்தல்.

நகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்படித் தேடி அலைந்தவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் குல கோத்திரம் முதல், உங்கள் சரித்திரமே அவர்களுக்குத் தெரிந்த பின்னர்தான் உங்களுக்குக் கொடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். எத்தனை பேர் இருக்கப் போகிறீர்கள் என்பதும் அவர்களுக்கு முக்கியம். பணமும் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட வீட்டு ஓனரின் அடிமையைப்போல பிழைப்பு நடத்துதல் எவ்வளவு கொடுமை என்பதும் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.


இங்கே கொடுக்கிற அந்தப்பனத்தை லோனுக்கு அடைச்சா ஒரு 15 வருஷத்துல வீடு நமக்குச் சொந்தமாயிரும் என்பதே எல்லோரின் கணக்கு. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் தடுக்கும் முக்கிய காரணி வீடுகளின் விலை.

இன்றைக்குச் சென்னையில் நடுத்தர வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பிலொரு வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 14 லட்சங்களில் ஆரம்பிக்கிறது. அதுவும் நகரின் மத்தியிலோ அல்லது வேலை செய்யும் இடங்களை ஒட்டியோ அல்ல. கிட்டத்தட்ட பழைய மஹாபலிபுரம் சாலை, ஒரகடம், சோளிங்கர் போன்ற இடங்களில்தான்.


சென்னை நகருக்குள் வீடு வாங்குவது குறித்து யோசிக்கக் கூட முடியாது. தனி வீடுகள் என்பது கற்பனைக்கும் எட்டாத விலையில் இருப்பதால் நமது மக்கள் அதுபற்றி யோசிப்பதுகூட இல்லை. வீடு கட்டும் பில்டர்களின் குறியோ மேல் நடுத்தரவர்க்க மக்கள்தான். அவர்களால்தான் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகளை வாங்க இயலும்.

பிரமிடின் அடியில் பொக்கிஷத்தைக் கண்டவர் என ஒரு கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் படித்தேன்.

இன்றைக்கு பணக்காரர்கள் வீடு வாங்குவது கருப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கு மட்டுமே. ஆனால் உண்மையிலேயே குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்க ஏழைகளுக்கு அவர்கள் வாங்கும் விலையில் வீடு கட்டித்தர யாருமில்லை. அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். உண்மையில் அப்படி வீடு கட்டி விற்பனை செய்வதே பெரும் லாபகரமாக இருக்கும். ஏனெனில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் இந்திய கீழ் மற்றும் நடு நடுத்தரவர்க்கத்தினர். அவர்களின் சந்தை மிகமிகப் பெரியது. டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் மொத்தமாக இடத்தை வாங்கி ஒரு குடியிருப்பு பகுதி போல கட்டி விற்றால் எவ்வளவு வசதியாய் இருக்கும். எவ்வளவு தூரமிருப்பினும் சென்னைக்கு சென்றுவர மின்சார ரயில் வசதியும், பேருந்து நிறுத்த வசதியும் இருக்குமிடத்தை ஒட்டி இருந்தாலே போதுமானது. செங்கல்பட்டிலிருந்தும்கூட சென்னைக்கு தினமும் வேலைக்குச் சென்று வருபவர்கள் இருக்கின்றனர். எனவே தூரம் ஒரு பிரச்சினை இல்லை. சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் 3 முதல் 5 லட்சங்களுக்குள் விலை இருப்பின் பெரும்பான்மையான மக்களின் சொந்த வீடு கனவு நனவாகும்.


டாடா கம்பெனி சுபகிருஹா என்ற பெயரில் பம்பாயில்(வாசிந்த்) ஒரு அடுக்குமாடி வீட்டுத்திட்டத்தை கொண்டுவந்து தற்போது விற்பனையில் இருக்கிறது. பம்பாய்க்கும், அந்தக் குடியிருப்புக்கும் சம்பந்தமே கிடையாது. அவ்வளவு தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் விலை மக்களை வாங்க வைக்கிறது. வெறும் 6 லட்சத்திற்கு ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்ட் கிடைக்கிறது. பம்பாய் நகரில் ஆறு லட்சத்திற்கு ஒரு கக்கூஸ் கூட கிடைக்காது

கானா, கப்டா அவுர் மக்கான் என்ற கோஷத்தை எத்தனை வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்/றோம். ஆனால் இன்று வரை உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்லும் இந்தியனின் எண்ணிக்கை கூட குறையவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் வீடுகளைப் பற்றி கனவு காண்பது கனவாகவே போகக்கூடும். பணக்காரர்களுக்கு மட்டுமே நகரில் வாழ்வு என்ற நிலை இன்றைக்கு.


இந்த நிலையை மாற்ற யாரெனும் முன்வருவார்கள் எனில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. ஆனால் கண்டுகொள்ளத்தான் யாருமில்லை.

திடீர்னு இன்னிக்கு இந்த விஷயம் போட்டு உறுத்திகிட்டே இருந்துச்சி. அதான் கட்டுரையா போட்டாச்சு.

Sunday, April 17, 2011

மந்திரத்தில் மழை பெய்யுமா? பெய்திருக்கிறது கேரளத்தில்..

அதிராத்ர மஹா யாகத்தால் கேரளத்தில் மழை.

வெயில் கொழுத்தும் நாளில், நட்சத்திரம் மிகுந்த இரவொன்றில் காற்றுடன் கூடிய மழை பொழிந்தால் எப்படி இருக்கும்? கேரளாவில் பாஞ்சல் என்ற இடத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. ஆனால் மழை சாதாரனமாக வராமல் வரவைக்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் விசேஷம்.

அன்றைய இரவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் நம்பமுடியாத ஆச்சரியத்தில் மூழ்கினர். நட்சத்திரம் மிகுந்த இரவில் திடீரென காற்றும், பின்னர் மழையும் பெய்தால் எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

கேரளத்தில் பாஞ்சல் என்ற இடத்தில் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கலந்துகொண்ட அதிராத்ர மஹா யாகம் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த அதிராத்ர மஹா யாகம் உலக அமைதிக்காகவும், தூய்மைப்படுத்தலுக்கும், விளைச்சல் பெருகவும், நலன்கள் பெருகவும், மழைபொழியவும் வேண்டி செய்யப்படுவது. 2011 ஏப்ரல் மாதம் நான்காம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த யாகத்தால் பாஞ்சலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொச்சி மற்றும் திருச்சூர் அருகிலும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பகுதிகளிலும் கனத்த மழை பெய்திருக்கிறது.

மழை பெய்த இரவு வானம் நட்சத்திரங்களுடன் காணப்பட்டதாம். பொதுவாக நட்சத்திரங்கள் இருக்கும் இரவுகளில் மழை பெய்வதில்லை. ஊரில் மழை மீண்டும் வருமா என்பதற்கு அடையாளம் வெள்ளி வந்திருச்சா பாரு எனச் சொல்வதுதான். வெள்ளி வந்துவிட்டது எனில் மழை நின்றுவிட்டது எனப் பொருள். ஆனால் நட்சத்திரம் மிகுந்த இரவில் பெய்த இந்த மழை வேத உச்சாடனத்தாலும், ஹோமப்புகையின் மூலமும் உருவாக்கப்பட்ட அலைகளினாலும் ("The rain was caused by the strong convection current generated by the smoke rising from the altar and the continuous chanting of the mantras,")தருவிக்கப்பட்டது என்கிறார் இந்த யாகத்தை நடத்தும் வி.பி.என் நம்பூதிரி என்பவர். இவர் கொச்சி சர்வகலா சாலையின் முன்னாள் ஆராய்ச்சியாளர். தொழில் மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் முக்கியமான விஞ்ஞானியும் ஆவார்.

4000 ஆண்டுகள் பழமையான இந்த யாகத்தால் பெய்த முதல் மழைத்துளியை நேரடியாகக் கண்ட 2 லட்சம் மக்கள் கைதட்டல் ஓசையின் மூலம் மழையை வரவேற்றனர்.
காற்றும், மழையும் யாகசாலை குண்டங்களை நனைத்துச் சென்றுவிட்டது. அப்படி ஒரு மழை. இதற்குக் காரணம் மிகப்பழமையான அதிராத்ரம் என்ற அக்கினி யாகம்.

மழை பெய்த அன்று காலையிலிருந்தே கொளுத்தும் வெயிலாக இருந்ததாகவும், காற்று மிகவும் வறட்சியாக இருந்ததாக்வும் குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நாளின் இரவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது அந்தப்பகுதி மக்களை ஆச்சரியம் அடையச் செய்ததுடன், இந்த யாகத்தால் ஏற்படும் நல்விளைவுகளைக் குறித்து அறிந்தும் கொண்டனர்.

1901, 1918, 1956, மற்றும் 1975ல் இதே போன்று யாகம் செய்து மழையை தருவித்தது போன்றே இந்த ஆண்டும் செய்திருப்பதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி இது

அதிராத்ரம் குறித்து அறிந்து கொள்ள ஒரு தளம் இது


ஒருமுறை சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி வைத்தியநாதன்! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது! அமிர்தவர்ஷினி ராகம் வாசித்தார் அன்று.

Saturday, April 16, 2011

அண்ணா ஹசாரே !!!!

ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட மஹான் அண்ணா ஹஸாரே அன்று.. ஆனால் போலி மதச்சார்பின்மை கூட்டத்தின் கைப்பாவை இன்று.

சமீபத்தில் லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவேண்டும் என்றும், அந்தச் சட்டம் வந்துவிட்டால் உடனே எல்லா அரசியல்வாதிகளையும் தண்டிக்கலாம் என்றும் கூறி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி ஊழல் மன்னன் கபில்சிபல் சில நாட்களை கடத்திவிட்டு எல்லாக் கோரிக்கையையும் ஏற்பதாகவும், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார். இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தேசப்பற்று பொங்க ஆரம்பித்து, ஊழலை ஒழிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.

அண்ணா ஹஸாரே ”மிகச்சிறந்த நிர்வாகி”யாக நரேந்திர மோடியையும், சிறந்த மாநிலமாக, அதாவது ஊழலற்ற மாநிலமாக குஜராத்தையும் சொன்னார். நரேந்திரமோடி நன்றி தெரிவித்ததுடன், இப்படிச் சொன்னதற்காக உங்களை கேவலப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என கவலையுடன் கடிதம் எழுதினார். மோடி சொன்னதுபோலவே உடனே பர்கா தத்துக்கள் தொடங்கி, இதர கொலைவெறி நிருபர்கள் அவர்களின் வழக்கமான உச்சகட்ட குரலில் இவரை ஆர்.எஸ்.எஸ் ஆளோ என சந்தேகப்படும்படியாக செய்திகளை வெளியிட்டனர்

போதாததற்கு அவரது உண்ணாவிரதப்பந்தலில் பாரதமாதா படமும் இருந்தது. பாரதமாதா படத்தைக்கூட இந்துத்துவ சார்பு என மதச்சார்பின்மை மஹாத்மாக்கள் அண்ணா ஹஸாரேயிடம் போட்டுக்கொடுக்க, அவரும் தனது மதச்சார்பின்மையை நிரூபிக்க பாரத மாதா படத்தையும் எடுத்துவிட்டார். இனிமேல் சோனியா படம் வைக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அண்ணா ஹஸாரேயைப் பொருத்தவரை சோனியா ஊழல்வாதி கிடையாதாம்.

இனிமேல் இந்த மதச்சார்பின்மை கோஷ்டி அண்ணா ஹஸாரே பேரைச் சொல்லி தனது ஆட்களை ”பொதுமக்கள்” என்ற பெயரில் உள்ளே அனுப்ப ஆரம்பிக்கும். வழக்கமான இந்திய எதிர்ப்பு, எவாஞ்சலிக்கல் கோஷ்டியினர் சட்டம் அமைக்கும் லெவலுக்கு தங்களை உயர்த்திக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு குடைச்சலைக் கொடுப்பார்கள். வாயை அடைக்க அவர்கள் செய்யும் அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாதது மாதிரி இருப்பார்கள்.

அண்ணா ஹஸாரேயின் குறிக்கோள்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. அதுதான் ஒவ்வொரு இந்தியனும் கணவு காண்பது. ஆனால் அவர் கூட சேர்த்துக்கொண்டிருக்கும் ஆட்கள் எவருக்கும் நாட்டு நலன் குறித்த அக்கறையோ, இந்த மிகப்பெரும் மக்கள் எழுச்சியை எப்படி ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமாக கொண்டு செல்லுவது என்ற பிரக்ஞையோ இன்றி வெற்று விளம்பரத்துக்காகவும், கூச்சல் இடவுமே இதுவரை பயன்படுத்தியுள்ளார்கள்.

பிரான்ஸில் முகத்தை மூடும் துணியை சட்டவிரோதம் என்று சொன்னால், இந்திய மீடியாக்கள் இஸ்லாமியர்கள் இனிமேல் வாழவே முடியாது என்ற ரேஞ்சில் முஸ்லீம்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தனர். எப்படியாவது ஒரு கலவரம் நடந்துவிடாதா, நமக்கு பரபரப்பாக செய்தித்தீனி கிடைக்காதா என ஏங்கியது இந்த செல்லரித்துப்போன மீடியா. நல்லவேளையாக முஸ்லிம்கள் இவர்களின் போலிக்கூச்சலை கண்டுகொள்ளவில்லை.


இவர்களை வைத்துக்கொண்டா இனி லஞ்சத்தை ஒழிப்பது??

2 ஜி ஊழலில் பர்காதத்துக்கு சம்பந்தம் இருக்கிறது என டெலிபோன் உரையாடல்கள் சொல்கின்றன. ஊழலுக்கு எதிரான கூட்டத்தில் அவரே முண்ணனியில்.. என்ன ஒரு முரன் நகை?

கிட்டத்தட்ட சோடாவைத் திறந்தது போன்ற உற்சாகத்தில் ஆரம்பித்து, தற்போது மக்கள் அனைவரும் நான்குநாள் கூத்துடன் தங்களது வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். தமிழக மக்களோ தேர்தல் ஆணையம் மீதான உச்சகட்ட கடுப்பில் இருந்தனர். வாக்குக்கு கிடைக்கும் பணத்தையும் கிடைக்க விடாமல் செய்துவிட்டனர் என்ற ரீதியில்.


என்ன நடக்கும் இனி? சட்டம் இயற்றப்படும், அதற்கு மாலை, மரியாதை எல்லாம் செய்து ஓரமாக படுக்கவைத்துவிட்டு, அடுத்த ஊழலுக்கு அரசியல்வாதிகளும், காரியத்தை சாதிக்க லஞ்சம் கொடுக்க மக்களும் கிளம்பிச் செல்வார்கள்.

இந்தியா வழக்கம்போல இயங்கும்..

இப்படிப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே உழைக்கும் அண்ணா ஹஸாரே செய்யவேண்டியது ஊழல் பெருச்சாளிகளையும்,போலி மதச்சார்பின்மைவாதிகளையும் அண்டவிடாமலும், தீர்க்கமான ஒரு முன்வரைவை உண்டாக்கி அரசுக்கு அனுப்பி அதை அரசு செயல்படுத்துகிறதா எனப்பார்ப்பதே சரியாக இருக்கும். அரசியல்வாதிகள் ஹஸாரே குறித்து பாராட்டி கருத்துக்கூட சொல்ல அனுமதிக்கக் கூடாது.

இதற்கிடையில் இன்னொரு கும்பல் அண்ணா ஹஸாரே மீதான பழைய ஊழல் பட்டியலைத் தேடிக்கொண்டிருக்கிறது.

உச்சகட்ட நகைச்சுவையாக பதவிவெறியற்ற, தன்னலமற்ற தாய் சோனியா காந்தியும், அண்ணா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதே எங்கோ கருகல் வாசனை அடித்தது. இனி இது தேறாது என.

இன்று அது நிருபிக்கப்பட்டிருக்கிறது.

சோ எழுதிய இந்தக் கட்டுரையும் அதைத்தான் எதிரொலிக்கிறது..

அயல்நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கிற, கற்பனைக்கும் எட்டாத, கோடானு
கோடி ரூபாய்களுக்கும் மேலான, கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு
வர, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று அவர் கோரவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற உலக அற்புதங்களில் ஒன்றாகி விட்ட ஊழலில், பிடிபட்ட
சுண்டெலிகளுக்குப் பின் உள்ள பெருச்சாளிகளையும் பிடியுங்கள் – என்று அவர்
கேட்கவில்லை.

சுதந்திர இந்தியாவில் பதவி ஏற்ற அரசுகளில், மிக அதிகமாக ஊழலில் திளைத்த
அரசு வெளியேற வேண்டும் – என்று அவர் கூறவில்லை.

தன்னைச் சுற்றி நடக்கிற ஊழல்களை எல்லாம் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய
புகழ் பெற்ற ‘நேர்மை’ப் போர்வையால், எல்லா மோசடிகளையும் மூடி மறைக்க
முயன்று கொண்டு, ‘தருமம் எது என்று எனக்குத் தெரியும்; ஆனால் அதை என்னால்
கடைப்பிடிக்க முடியவில்லை’ என்று ஒப்புக்கொண்ட, திருதராஷ்டிரனின் நேர்மை
கூட இல்லாத பிரதமர், பதவி விலக வேண்டும் – என்று அவர் கோஷம்
எழுப்பவில்லை.

இதற்கெல்லாம் தாயாகத் திகழ்கிற அன்னை பற்றியோ, அன்னையின் அருள் பெற்ற
ஊழல்கள் பற்றியோ – அவர் ஒரு முணுமுணுப்பு கூட செய்யவில்லை.
ஸி.பி.ஐ.யையும், ஊழல் ஒழிப்புத் துறையையும் நேர்மையாகச் செயல்பட விட
வேண்டும் என்று கூட அவர் பேசவில்லை.

பின் என்னதான் செய்தார் அன்னா ஹசாரே? ஊழல் புகார்களை உடனடியாக
விசாரித்து, வழக்கை விரைவில் முடித்து, சரியான தீர்ப்பு வழங்க – முறையாக
நிறுவப்பட்ட லோக்பால் அமைப்பு தேவை; அதற்கான மசோதாவை தயாரிக்க, அரசு
பிரதிநிதிகளுடன் அரசியல் சாராத நேர்மையாளர்களையும், குடிமக்களைப்
பிரதிநிதிகளாகக் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்! இதுதான் அன்னா
ஹசாரே விடுத்த கோரிக்கையின் சாராம்சம்.

இதைச் செய்யக் கூட இந்த மத்திய அரசுக்கு, இத்தனை அமர்க்களம்
தேவைப்பட்டது. டெலிவிஷன் சேனல்கள், கிரிக்கெட் வெறியைக் கூட தணித்துக்
கொண்டு, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தைப் படம் பிடித்து, பிடித்து,
பிடித்துக் காட்டிக் கொண்டேயிருக்க – பத்திரிகைகள் ஐந்து மாநில சட்டசபைத்
தேர்தல்களைக் கூட பின்னுக்குத் தள்ளி, அன்னா ஹசாரேயின் போராட்டத்தை
பக்கம் பக்கமாக, பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இத்தனை நடந்த பிறகு அரசு மனமிறங்கி, ‘சரி, கமிட்டி போடுகிறோம்’ என்று

கூறிவிட்டது. கல்கி முன்பு சொன்னார்: ‘ஒரு விஷயத்தைக் கொல்வதற்கு, அதன்
மீது கல்லைப் போடு; அல்லது கமிட்டியைப் போடு’ என்றார். இப்போது அன்னா
ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு மசோதா கோரிக்கை மீது, அரசு ஒரு கமிட்டியைப்
போட்டு விட்டது.

‘ஒரு கொடிய விஷப் பாம்பைக் கண்டால், அதை அடித்துக் கொன்று விடு; அதை என்ன
செய்யலாம் என்று அறிய, ஒரு கமிட்டியை நியமிக்காதே!’ என்றார் ஒரு
மேல்நாட்டு அறிஞர். ஊழல் எனும் விஷப் பாம்பை ஒழிக்க, ஒரு அமைப்பைத்
தோற்றுவிக்க, ஒரு சட்டம் இயற்ற, ஒரு மசோதா தயாரிக்க, கலந்தாலோசனை நடத்த –
ஒரு கமிட்டி வந்தாகி விட்டது.

‘வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே!’ என்று பத்திரிகைகளும்,
டெலிவிஷன் சேனல்களும் மகிழ்ந்து முரசு கொட்டுகின்றன. நாமும் மகிழ்வோம்.
அம்மண ஊரில், கோவணம் கட்டித் திரிகிற பைத்தியக்காரத்தனத்தைத் தவிர்த்து,
நாமும், மற்றவர்களுடன் சேர்ந்து, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோம்! பூம்...
பூம்... பூம்....!

Thursday, April 14, 2011

சித்ராவுக்கு இப்படி ஒரு இழப்பை இறைவன் தந்திருக்க வேண்டாம்



எனது பிரியமான பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டது.

ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போன இடத்தில் இப்படி ஒரு சோகம்.

திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தவமிருந்து கிடைத்த குழந்தை இவள்.கிருஷ்ணணின் தீவிரபக்தை சித்ரா. வெறும் எட்டே ஆண்டுகளில் மீண்டும் இறைவன் அழைத்துக்கொண்டுவிட்டான். அதுவும் மலையாளிகளின் மிக முக்கிய தினமான விஷு அன்று.

நாம் எப்போதும் சிரித்த முகம் கொண்ட சித்ராவையே பார்த்திருக்கிறோம். அவரை ஒரு மலையாளியாகக் கூட நம்மால் நினைக்க முடியாத அளவு மனதைக் கொள்ளைகொள்ளும் பாடல்களால் நம்முடன் கலந்துவிட்டவர். எட்டு ஆண்டுகளாக சீராட்டி வளர்த்த குழந்தையை இழந்து தவிக்கும் சித்ராவின் ஆற்றாமையை, இழப்பை புரிந்துகொள்ள முடிகிறது.

அவருக்கும், அவரது கணவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருக்கு இந்த மிகப்பெரிய இழப்பை தாங்கிக்கொள்ளும் மனோபலத்தை இந்த துன்பத்தை அளித்த இறைவனே அளிக்கட்டும்.

காலம் எல்லாத்துயரையும் ஆற்றும் என்றாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத, எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வந்த சித்ராவிற்கு இது நடந்திருக்க வேண்டாம்.

இறைவனின் கணக்கை யாரறிவார்?

சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு!

தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளியான இக்கட்டுரை இன்றைய தினத்துக்குப் பொருத்தம் என்பதால் இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன்.

--------------

சித்திரை முதல் நாளே நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருவதை ஓர் அரசாணையால் தை மாத முதல்நாளாக மாற்ற தமிழக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசாணை போட்டபிறகும் ’அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஏன் சொல்லவேண்டுமென்றால் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான பொதுநல வழக்கை தமிழக அரசால் இன்னும் வெல்ல முடியவில்லை. தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழக அரசு வெற்றி பெற்றாலும் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் இந்த வழக்கில் தமிழக அரசு வெல்லக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது என்பதையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சித்திரை முதல்நாளே ஆண்டு தொடக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு பலவிதமான ஆதாரங்களை இலக்கிய மற்றும் வரலாற்று அறிஞர்கள் அளித்துவிட்ட போதிலும் ஏன் தை மாதத்தில் ஆண்டு துவங்க வேண்டுமென்ற ஆதாரங்களை அரசோ அல்லது இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்களோ இதுவரை அளிக்க வில்லை. வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவை எதிலும் தை மாதம் முதல் மாதம் என்பதற்கு ஆதாரமான கருத்தோ அல்லது சித்திரை முதல் மாதம் என்பதற்கு எதிரான கருத்தோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கான தரவுகளைத் தருவதற்கு அரசு தவறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக அறிஞர்கள் எழுப்பிய கருத்துகளுக்கும் வினாக்களுக்கும் விளக்கமளிக்கவில்லை.

இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்கள் வைக்கக் கூடிய சில வாதங்களை ஆராய்வோம்:

1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப் படுகிறது. ஆனால் எந்தெந்த ஆதாரங்களை வைத்து மறைமலை அடிகளார் தைமாதம் முதல் மாதம் என்றார் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மறைமலை அடிகளார் அவ்வாறு கருதுகிறார் என்பதே இதை ஆதரிப்பவர்கள் தரும் மிகப்பெரிய தரவாக இருக்கிறது. இதைத் தாண்டிய இலக்கிய மற்றும் வரலாற்றுத் தரவு எதனையும் நாம் காணமுடிவதில்லை. ஆனால் மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது மறைமலை அடிகள் மற்றும் வேறு சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டியிருக்கிறது.

2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு தைமாதம் சிறப்பிக்கப் படுவது உண்மையென்றாலும் இவற்றில் எந்த ஆதாரமும் தைமாதத்தை புத்தாண்டுத் தொடக்கமாக குறிக்கவில்லை என்பதும் உண்மை! ஆனால் நோன்பு நோற்று, நோன்பு நிறைவேற்றலாகத் தைநீராடல் செய்வதையே சிறப்பித்துக் கூறும் சங்கத் தமிழ்ப் பாடல்களை நாத்திகர்களும் இந்துமத எதிர்ப்பாளகளும் தைப்புத்தாண்டுக்கான ஆதாரமாகக் கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலம் தொட்டு பழந்தமிழரின் ஆன்மிக ஈடுபாடுகளுக்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாமேயன்றி தைப்புத்தாண்டுக்கும் இந்த தைமாதச் சிறப்பித்தலுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. இது தொடர்பான கல்வெட்டோ இலக்கியச் சான்றோ அல்லது பிறிதொன்றோ இல்லை. ஆதாரமில்லை என்பதனால் கொண்டாடப் படவில்லை எனக் கொள்ள இயலாது என்றொரு வாதம் வைக்கப்படலாம். இது உண்மைதான் என்றாலும் இத்தனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் பொங்கல் எவ்வாறு குறிக்கப் பெறாமல் இருக்கும் என்பது ஒரு மாபெரும் வினாவாகத் தோன்றுகிறது. பாரதமெங்கும் மகர சங்கராந்தி எனவும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப் பட்ட விழா தமிழகத்தில் கொண்டாடப்படத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் விவசாய மற்றும் வழிபாடு தொடர்பான வழக்கங்களோடு மிக உற்சாகமாகக் கொண்டாடப் படத் தொடங்கியது என்று கருதுவதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பார்க்க: உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

4. தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் விவசாய முறைமைகளை நோக்கும்போது ஒவ்வொரு தனிமனிதனின் ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக தை மாதத்தைக் காணலாம். விவசாயக் காரியங்கள் முடிந்த பிறகே அவ்வாண்டு திட்டமிடப்பட்ட திருமணமோ. வேறு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கலோ. தீர்த்த யாத்திரையோ. நேர்த்திக்கடன் நிறைவேற்றலோ செய்வதற்கான நேரமும் நிதியும் வாய்க்கப் பெற்றிருக்கும் காலமே தைமாதம். தை நீராடல் எனும் பழந்தமிழர் வழக்கத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆக இவை ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்காமல் ஆண்டு நிறைவை நோக்கிச் செல்லுதலைக் குறிக்கிறது என்பதே வெளிப்படை.

சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் செங்கிருதமாக (சம்ஸ்கிருதம்) இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும். செங்கிருதம் பாரதப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தவொன்றாக இருக்கிறது. வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டு அடிகளார் இயங்கினாரே தவிர அந்தப் பெயருக்காக தன்னையே மாற்றிக் கொள்ளவில்லையே! மேலும் அவர் செய்துகொண்ட பெயர் வெறும் மொழிமாற்றுதானே! அதுபோல கருணாநிதி, ஜெயலலிதா என்று முற்றிலும் செங்கிருதப் பெயர் கொண்டவர்களை பெயருக்காக யாரும் ஆட்சேபித்துவிடவில்லையே! பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையை தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள்ள், உருவகங்கள் மற்றும் அது உணர்த்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் இக்கதையைப் பரப்புரைப்பது அடாத செயல்.
சித்திரைப் புத்தாண்டு தான் அறிவியல்பூர்வமானதும் பல இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபாகும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

உண்மை வேறாக இருக்கையில், இனவாதத்தையும், வெறுப்புணர்வையும் கொட்டி எழுதப்பட்டிருக்கும் மேற்காணும் பாரதிதானின் பாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

இனி இது எவ்வாறு தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் பார்ப்போம்.

சித்திரைப் புத்தாண்டு தமிழரின் அறிவியல் பூர்வமான ஓரு மிகப்பழைய வழக்கம். நெடுநல்வாடையின் ஒரு பாடல் இதைப் பறைசாற்றுகிறது. ஆவணி மாதத்தில் ஒரு ஆண்டுத் தொடக்க முறை இலக்கியத்தில் காணப்பட்டாலும் அது வழக்கில் வராமல் சித்திரையே நிலைத்திருக்கிறது. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட வசந்தகாலம் அல்லது இளவேனிலின் தொடக்கம் பருவங்களின் புதிய சுழற்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. பனியால் கட்டுண்ட வண்டுகளின் சிறகுகள் இளஞ்சூட்டில் விரிந்து புதிய பூக்களின் மகரந்ததை நாடும் பொற்காலம் சித்திரை. வாடை தந்த நடுக்கம் நீங்கி வசந்தம் தரும் தென்றலின் சுகத்தில் மகரந்தம் மனக்கும் மாதம் சித்திரை.

பல பண்பாடுகளிலும் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் ஆண்டின் பருவங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து அதில் இளவேனிலை முதல் பருவமாக வைத்தார் நம் பழந்தமிழர். ஆனால் அரசோ அதில் மார்கழி மற்றும் தை மாதத்திற்கான முன்பனிக்காலத்தை இரண்டாக உடைத்து ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்க ஆவன செய்துகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டின் மிக நீண்ட இரவுப் பொழுதைக் கொண்டிருக்கும் தை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாக்குவதும் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் சித்திரை முதல்நாளை மாற்றுவதும் பழந்தமிழரின் அறிவியல் நோக்கை அவமதிப்பதாகும். ஆண்டுத் தொடக்கம் என்பதை வானவியலின் நிகழ்வுகளைக் கொண்டே முன்னோர் கணித்தனர். இன்றும் அரசு தை மாத முதல் தேதியை முன்னோர் வகுத்த பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்க இயலும். அவ்வாறு கணிக்கும்போது ஆட்டின் உருவத்தைக் கொண்ட மேழ இராசிக்குள் ஆதவன் நுழைவதே ஆண்டுப் பிறப்பு எனக் கொள்ளுதலின் முக்கியத்துவம் புரியும். ஏனெனில் ஆடு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டே ஆண்டு என்ற சொல் பிறந்தது என்ற கருத்து இருக்கிறது.

தற்கால வழக்கான கல்வி ஆண்டும் கணக்கு ஆண்டும் சித்திரை புத்தாண்டை ஒட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் - தையில் புத்தாண்டு - தமிழ் மரபன்று!http://www.bloggerhttp://www.blogger.com/img/blank.gif.com/img/blank.gif

தொடர்பான சுட்டிகள்:http://www.blogger.com/img/blank.gif

சித்திரையில்தான் புத்தாண்டு - தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்

தைந்நீராடல் - ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன்

Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government - I : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government - II : B R Haran

Wednesday, April 13, 2011

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு( ஸ்ரீ கர )நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என வாழ்த்தி, உலகில் அமைதியும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வு செழிக்கவேண்டும் எனவும் மனமார வாழ்த்துகிறேன்.

கருணாநிதி காலம் உள்ளளவும் தனது பெயர் நிலைப்பதற்காகச் செய்த கோமாளித்தனம் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது. அந்த ஆண்டுமுதலே யாரும் கடைப்பிடிக்காமல் போய் காலம் உள்ளவரை அவருக்கு இந்த கிறுக்குத்தனத்தைச் செய்தவர் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

உலகத் தமிழர்கள் அனவைரும் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமை தனது அடுத்த தலைமுறைக்கு தமிழை கடத்துவது. இது ஒரு தலையாய கடமை என எண்ணிச் செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழ் மெல்லச் சாகாது.. வெகு சீக்கிரம் சாகும்..

தமிழ் புத்தாண்டைத் தவிர இன்றைக்கு அண்ணல் போதிசத்வ அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமும் கூட. எனவே அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்களும்.

ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம் என்று சொன்னவர்.



எல்லா நலன்களும் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் கிட்டுவதாக.

Tuesday, April 12, 2011

ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்



கடவுள் மனிதனாக அவதரித்த நாள் இது.. அயோத்தியின் மன்னனான தசரதனுக்கும், கோசலைக்கும் சித்திரை மாதம், நவமி நன்னாளில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்தார்.

ஸ்ரீ ராமாவதாரம் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரம்.

பெரும்பாலானோர் இன்று விரதம் அனுஷ்டித்து நாளை விரதம் முடிப்பர்.

பானகமும், நீர்மோரும், பாசிப்பருப்பில் செய்த சுண்டலும் நிவேதனங்களாக வைக்கப்படுகின்றது.

இந்தியாவில் அயோத்தியிலும், பத்ராச்சலத்திலும், ராமேஸ்வரத்திலும் இன்று சிறப்பான வழிபாடுகளும், ராமநாம சங்கீர்த்தனங்களும் நடைபெறும். இதைக்காணவும், ராமபிரானின் அருளை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று இவ்விடங்களில் கூடுகின்றனர். இது தவிர எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் இன்று சிறப்பான பூஜைகள் செய்யப்படும்.

எனது சொந்த ஊரான தே.கல்லுப்பட்டியில் இன்று ஸ்ரீ ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் இறைபஜனையும், பேச்சுகளும், பட்டி மண்டபம் மற்றும் வழக்காடு மன்றங்களுமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



நான் உத்திரப்பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஸ்ரீராம நவமியை ஒட்டி வீடுகளில் மைக்செட் கட்டி ராமாயணம் தொடர்ச்சியாக பாராயணம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ஊருக்கே அண்ணதானம் செய்யப்படும். ஒரு சுற்று முழுதும் முடிந்த பின்னர் வேறொருவர் வீட்டில் பாராயணம் ஆரம்பிக்கும்.. இப்படியாக ராமநவமிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ராமாயணம் எங்கே சென்றாலும் கேட்கும் உத்திரப்பிரதேசத்தில். பிரசாதம் வழங்கும் அன்று நாம் அந்த ஊர்களில் இருந்தால் நல்ல பசும் நெய்யில் வறுத்தெடுத்த பூரிகளும், தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு சப்ஜியும், நல்ல கெட்டித்தயிரும் போதும், போதும் எனச் சொல்லும்வரையிலும் கிடைக்கும். அந்த இனிய நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராமா" என்ற இரண்டெழுத்தினால் என்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

ராமா என்ற இரண்டெழுத்தை வாழ்க்கை முழுதும் ஜெபித்து எல்லா பாவங்களையும் போக்கிக் கொள்வோமாக..

இன்றைய தினம் சில பகுத்தறிவுவாதிகளின் வீடுகளில் வெளியே தெரியாமல் அவர்தம் சில பல குடும்பங்கள் மூலம் ஸ்ரீராமபிரானை தவறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்ளப்படும். பகுத்தறிவுவாதிகள் ஊருக்கே உபதேசம் செய்பவர்கள், அவர்தம் மணைவிகளே இவர்கள் கூறும் பகுத்தறிவை கேட்பதில்லையே என்றெல்லாம் நாம் கேட்கக்கூடாது.

நாட்டில் நல்ல ஆட்சியாளர்கள் பதவிக்கு வரவும், நியாய, அநியாயங்களை மக்கள் உணரவும், நாடு சுபிட்சத்துடனும், எதிரிகளின் தொல்லையின்றியும், வளர்ச்சியை மட்டுமே காணவும் அருள்புரி ஸ்ரீராமா என இன்று பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும், எல்லா நலன்களும் கிட்டுவதாக என இந்த ஸ்ரீராமநவமி நன்னாளில் எல்லோரையும் வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.

திரு ஜெயலக்‌ஷ்மி அவர்கள் எழுதிய பகைவனும் பாராட்டும் பகழி என்ற அருமையான கட்டுரையை வாசிக்கும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.

சக்தி கொடு! !!! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்




மரியாதைக்குரிய திரு. அண்ணா ஹஸாரே அவர்களுக்கு,

வணக்கங்கள்.

வசந்த நவராத்திரியின் விரத தினத்தின் எட்டாம் நாளான இன்று அதிகாலை ஐந்து மணிக்கு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அதே நாட்களில் நானும் உண்ணாவிரதத்தில்தான் இருந்தேன் புனிதமான சக்தி அன்னையை துதிப்பதற்கான உண்ணா விரதம். தங்கள் தர்ம யுத்தத்தில் அன்னை ஜெகதாம்பாவின் அருளால் நானும் மறைமுகமாக பங்கு பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வசந்த நவராத்திரி விரதத்துடன் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்த போது அஸ்ஸாமில் அன்னை காமாக்யா கோவிலிலும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வணங்கும் போது அன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆசியும் சக்தியும் வழங்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன். பராசக்தி தங்கள் மீது தன் அருட்கண்களை வைத்தாள் என்பதில் ஐயமில்லை. இன்று கேரள பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு நான் காந்தி நகர் வந்து சேர்ந்தேன்.

குஜராத் குறித்து தங்களின் அன்பான வார்த்தைகள் குறித்த செய்தி நேற்று எனக்கு வந்தது. தங்கள் ஆசிகள் கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்கு நான் நன்றிக்கடனும் பட்டிருக்கிறேன்.

மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் முழுநேர ஊழியனாக இருந்தேன். அந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர்கள் எங்கள் பயிற்சி கூட்டங்களில், முகாம்களில், தங்கள் கிராம வளர்ச்சி செயல்திட்டங்களைக் குறித்து பேசுவார்கள். அதைப் போல எப்படி தாங்களும் செயல்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பார்கள். அது என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களை சந்திக்கும் புண்ணியமும் எனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது.

குஜராத் குறித்தும் என்னைக் குறித்தும் தாங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு குஜராத் மாநிலமும் அதன் சேவகனான நானும் கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே சத்தியத்தை சொல்லும் மன உறுதி கொண்ட ஒரு போர்வீரனாக அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் இந்த சத்திய உறுதியாலேயே தங்கள் வார்த்தைகள் அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கின்றன.

இந்த சமயத்தில் தங்கள் அன்பான புகழ்ச்சியால் எனக்கு என் கடமைகளில் கவனமின்மையோ என் செயல்களில் தவறுகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என தாங்கள் ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் ஆசிர்வாதம் எனக்கு எது உண்மையோ எது தர்மமோ அதை செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிக்கும். அதே நேரத்தில் அது என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக ஆக்கியுள்ளது. உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும். எனவே நான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கும் தங்கள் ஆசிகள் வேண்டும்.

மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,

இந்த முக்கியமான தருணத்தில் நானும் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன் தான். என் குடும்பத்தில் எவருக்கும் அரசியலிலோ அதிகார வர்க்கத்துடனோ தூர-உறவு கூட கிடையாது. நான் ஒரு 100 சதவிகித பரிபூரண மனிதன் என்று நான் நினைத்துக் கொள்ளவில்லை. எந்த சாதாரண மனிதனையும் போல எனக்கும் நல்ல குணங்களும் உண்டு குறைகளும் உண்டு.

அன்னை ஜெகதாம்பா என் குறைகளை நீக்க வேண்டுமென்றே நான் பிரார்த்திக்கிறேன். தீயகுணங்கள் என்னில் வளராமல் அவள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். குஜராத் மாநிலத்துக்கு நன்மை செய்ய என்னை பூரணமாக அர்ப்பணிப்பதே என் பிரார்த்தனை. குஜராத்தின் ஏழை எளிய மக்களின் கண்ணீரை அகற்றும் சேவகனாக நான் இருப்பதே என் பிரார்த்தனை. இந்த பணியில் என்றென்றைக்கும் எனக்கு தங்களின் ஆசிகளில் குறைவே இருக்கக்கூடாது என்பதே தங்களிடம் என் தாழ்மையான பிரார்த்தனை.

மதிப்பிற்குரிய அண்ணா,

நீங்கள் ஒரு காந்தியவாதி. நீங்கள் ஒரு போர்வீரர். நேற்று கேரள பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத்துக்கும் எனக்கும் தங்கள் ஆசிகளை நான் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு தங்களை மோசமாக சில சக்திகள் தாக்கக் கூடுமே என்றுதான் அச்சம் ஏற்பட்டது. குஜராத்தின் மீது பொறாமையும் கெட்ட எண்ணமும் கொண்ட ஒரு கூட்டம் உடனடியாக தங்கள் அன்பை, தங்கள் தியாகத்தை, சத்தியத்துக்கான அர்ப்பண உணர்வை, தங்கள் தவத்தை குறை சொல்ல ஆரம்பிக்கும். தங்கள் பெயரை அவர்கள் கெடுக்க ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நீங்கள் குஜராத் குறித்தும் மோடி குறித்தும் நல்ல வார்த்தைகளை பேசிவிட்டீர்கள் அல்லவா?

துரதிர்ஷ்டவசமாக எனது இந்த அச்சம் உண்மையாகிவிட்டது. குஜராத்தை வெறுக்கும் தீயசக்திகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன. வசந்த நவராத்திரியின் இந்த நேரத்தில், அன்னை ஜெகதம்பாவிடம் தங்கள் நற்பெயரை எவரும் கெடுத்துவிடக் கூடாதே என மட்டும் பிரார்த்திக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த சிலவற்றை எண்ணிப்பார்க்கிறேன். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் திரு. அப்துல்லா குட்டி, குஜராத்தின் வளர்ச்சியை புகந்ததற்காக அவரது கட்சியினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டார். குஜராத் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் பங்கேற்றதற்காக மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தாக்கப்பட்டார். குஜராத்தின் மூத்த காந்தியவாதியான குணவந்த் ஷா குஜராத்தின் ஆத்ம கௌரவம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசியதற்காக அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தாருல் உலாம் தியோபந்த் இறையியல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபப்ட்ட மௌலானா குலாம் வஸ்தநாவி குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டியதற்காக எத்தனை தாக்குதல்களுக்கு ஆளானார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அவர் கூறியதெல்லாம் குஜராத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் எந்த வித மதரீதியிலான பாரபட்சமும் இல்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா மத, சாதி மக்களும் குஜராத்தில் மாநிலத்தின் வளர்ச்சியின் பயனை அனுபவிக்கிறார்கள் என்பதுதான்.

அண்மையில் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சிங்கா (இந்திய ராணுவத்தின் கதாரா பிரிவு) குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டினார். அவருக்கும் குஜராத்துக்கு எதிரான சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டது.

இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்.

ஆனால் குஜராத்தின் உண்மையான வளர்ச்சி இந்த நாட்டுக்கு எதிரான தீயசக்திகளுக்கு அவதூறு பிரச்சாரங்களையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்வதற்கு தடையாக இருக்கிறது என்பதே உண்மை. எங்கே குஜராத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் இந்த தீயசக்திகள் உடனே எழுந்து தங்கள் பொய் பிரச்சாரஙக்ளையும் அவதூறுகளையும் தொடங்கிவிடும்.

வணக்கத்துக்குரிய அண்ணாஜி,

குஜராத்தின் ஆறுகோடி மக்களும் தங்கள் மீதும் அதே தீயசக்திகள் தாக்குதல்களைத் தொடங்கி தங்கள் இதயத்தைப் புண்படுத்தி விடக்கூடாது என பிரார்த்திக்கின்றனர்.இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.
பரம்பொருள் உங்களுக்கு சக்தி அளிக்கட்டும்.

தாங்கள் இந்த தேசத்துக்காக செய்யும் தியாகங்களுக்கும் தவத்துகும் முன்னால் நான் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். எல்லாம் வல்ல பரம்பொருள் தங்களுக்கு உன்னதமான ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் வழங்கட்டும். இதுவே கடவுளிடம் என் இதயத்தின் மையத்திலிருந்து எழும் பிரார்த்தனை

தங்கள் உண்மையுள்ள

நரேந்திர மோடி

நன்றி : தமிழ்ஹிந்து டாட் காம்


கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே

தமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆட்களை தங்களை ஆள தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி ஒரு உதாரணம்.

Monday, April 11, 2011

தலைவர் ஜோக்குகள்



ரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான்.

சமீபத்தில், ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?' என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப்.

எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான்.

தலைவர் ரசிகர்கள் அமிதாப்புக்கு வருத்ததுடன் எழுதிய ஜோக் இதுதான்

"கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த போது, அவருக்கு ரஜினியிடமிருந்து இரு மிஸ்டு கால்கள் வந்திருப்பதைக் கண்டாராம்"

இது ஒரு நல்ல கற்பனை என்றே எழுதியிருந்தாராம்..

மேலும் ரஜினி எந்த அளவு உயர்வானவர், அவரால் முடியாத விஷயமே இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. மிகவும் உன்னதமான மனிதர், மிகச் சிறந்த மனிதாபிமானி, கடவுளுக்கு நிகரானவர், அன்பு மிக்கவர்", என்று குறிப்பிட்டுள்ளார்


எந்திரன் வெற்றிக்குப் பிறகு ரஜினி குறித்த ஜோக்குகள் வட இந்தியாவில் அதிகம் புழங்குகின்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான சில ரஜினி ஜோக்குகளை கீழே தமிழ்படுத்தி இட்டிருக்கிறேன்.


-----------



01. சமீபத்தில் சீன விமானநிலையம் புகைமண்டலம் காரனமாக மூடப்பட்டது. புகைமண்டலத்திற்கான காரனம் கண்டறியப்பட்டது - இந்தியாவில் ரஜினி புகைபிடிக்கிறார்.


02. குழந்தையாக இருக்கும்போது ரஜினி 7 வெவ்வேறு பள்ளிகளில் படித்தார்..அவைகள் இன்று ஐ.ஐ.டி என அழைக்கப்படுகின்றன.


03. ரஜினிகாந்த் இந்தியாவில் வாழ்வதற்காக இந்திய அரசு ரஜினிக்கு வரி கட்டுகிறது.


04. ரஜினிகாந்த் சூரியனை கோபப்பட்டு நோக்கும்போது சந்திரனுக்குப் பின்னால் சூரியன் ஒளிந்துகொள்கிறது. அதுவே சூரியகிரகனம் என்றழைக்கபடுகிறது.


05. ஒருநாள் தூங்கி எழுந்தபின்னர் ரஜினி தனது அறிவில் 1 சதவீதத்தை உலகிற்கு கொடுத்தார். கூகிள் பிறந்தது.


06. ரஜினி 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிரிட்டிஷார் சுதந்திரப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.


07. கஜினிகூட ரஜினிய மறக்க மாட்டார்.


08. நிலநடுக்கம் எப்போது உண்டாகிறது? ரஜினியின் மொபைல் போன் வைப்ரேஷனில் இருக்கும்போது.


09. ரஜினி ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டார், அப்போதிலிருந்து அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என அழைக்கப்படுகிறது.


10. எகிப்திய பிரமிடுகள் என்பவை ரஜினிகாந்த் சிறுகுழந்தையாய் இருக்கும்போது பள்ளியில் செய்த பிராஜக்ட்டுகள்.


11. இஸ்ரோவே இனி கிடையாது. எல்லா ராக்கெட்டுகளையும் தலைவர் தீபாவளிக்காக வாங்கிவிட்டார்.


12. தலைவர் ஏன் நாலுபக்கமும் கினறு இருப்பதுபோல ஒரு ஏக்கர் நிலத்தை வாங்குகிறார்? கேரம் விளையாடுவதற்காக.


13. மிஷன் இம்பாஸிபிள் படத்திற்கு ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் படத்தின் தலைப்பு அவரை அசிங்கப்படுத்துவடுபோல இருந்ததால் வேண்டம் எனச் சொல்லிவிட்டார். ( ரஜினியால முடியாததா??)


14. ரஜினி ஒரு அறைக்குள் நுழையும்போது விளக்கை ஏற்றுவதில்லை, இருட்டை விரட்டி விடுகிறார்.


15. ரஜினிகாந்த் உங்களை நோக்கி விரலைக் காண்பிக்கும்போது நீங்கள் பிழைத்திருக்க இன்னும் எத்தனை விநாடிகள் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.


16. குளோபல் வார்மிங் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாது. ரஜினி அப்படி ஒரு குளிர்ச்சி, அதனால சூரியன மேல பாத்து திருப்பி விட்டுட்டார்.


17. தலைவர் ஒருவாட்டி ஜெர்மன் ஃபைட்டர் ஜெட் விமானத்தை விரலாலேயே சுட்டுத்தள்ளினார். செஞ்சதெல்லாம் ”பேங்” (Bang) குனு கத்தியதுதான்..


18.கிழக்கிந்தியக் கம்பெணி இந்தியாவை விட்டு 1947ல் கிளம்பியது. ஏனெனில் ரஜினி 1949ல் பிறக்க வேண்டியது.


19. இந்தி கஜினியில் ரஜினி நடிப்பதாய் இருந்தது.. ஆனால் மறுத்துவிட்டார். ஏனெனில் ரஜினி மற்றவர்களுக்குத்தான் ஞாபக மறதியைக் கொடுப்பார்.


20. வரம் கொடுக்கும் பூதங்கள் ரஜினியை தேய்த்து மூன்று வரங்களை பெற்றுச் செல்லும்.


21. டெல்லி ராஜதானி ரயில் ஒருமுறை ரஜினியை விட்டுச் சென்றுவிட்டது. அதன் பின்னர் எத்தனை வேகமாய் ஓடியும் அவரைப் பிடிக்கமுடியவில்லை.

இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே எல்லோருக்கும் தெரிந்த/ பிடித்த ஒரு நடிகர் இருக்கிறாரெனில் ரஜினிகாந்த் மட்டுமே. நமக்குத்தெரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் அவரது திரைப்படங்கள் சக்கைப்போடுபோடுகின்றன. இத்தனைக்கும் பக்கத்து மாநிலங்களில் ரீமேக்கூட செய்யாமல் வெறும் டப்பிங் படங்களே பட்டையைக் கிளப்புகின்றன. அவரைப் பற்றிய செய்திகளுக்கும் குறைவில்லை. ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடித்துவிட்டு அதே கையோடு இமயமலைக்குச் செல்லும் பக்குவம் அவருக்கு மட்டுமே உண்டு.

எனது நூறாவது பதிவு இது..

மொத்தத்தில் உருப்படியாய் எத்தனை பதிவு தேறும் எனத் தெரியவில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுதவேண்டும் என்ற வைராக்கியத்துடன்..

ஜெயக்குமார்

Sunday, April 10, 2011

நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

தமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் உண்டான ஆர்வமே இந்தப் பதிவு.

தேர்தலை அறிவிக்கும் பணியை மட்டும் செவ்வனே செய்து கொண்டிருந்த தேர்தல் ஆணையத்திற்கு பல்லும் உண்டு எனக்காட்டியவர் திரு.டி.என்.சேஷன். அதுவரை “மொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்கு” என எதுகை மோனையோடு பேசிக்கொண்டே மொந்தையிலே ஊற்றி, ஊற்றி கொடுத்தே ஜெயித்து வந்தனர்.

திருமங்கலம் பாணி என்ற ஒரு பாணியை உருவாக்கியது யாரென்றால் ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என தனக்கே நற்சான்றிதழ் அளித்துக்கொள்ளும் கருணாநிதியின் மகன் அழகிரி. ஒரு இடைத்தேர்தல் எவ்வளவு கேவலமாய் நடக்க முடியும் என எடுத்துக்காட்டியது திருமங்கலம்.

அதுவே முதலும், கடைசியுமாய் ஆகிப்போனது, தற்போதைய தேர்தல் கமிஷனின் பலமனைத்தும் அறிந்த தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால்.

நான் தமிழக முதல்வரா அல்லது தேர்தல் கமிஷனரா என வயிற்றெரிச்சலில் கருணாநிதி கேட்கும் அளவு ஊழல் எதும் நடக்க இயலாத அளவு தீவிர கண்காணிப்பில் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.

கருணாநிதி இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டாத அளவு சொத்துக்குவிப்பு செய்துவிட்டார். ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் எனச் சொல்ல மனசாட்சியற்ற கருணாநிதியால் மட்டுமே முடியும். அறிவியல் பூர்வமாய் ஊழல் செய்பவர் என சர்க்காரியா கமிஷன் சொல்லி கேவலப்பட்ட பிறகும் இப்படி சொல்லிக்கொள்ள கருணாநிதியால் மட்டுமே முடியும்.

இந்தத் தேர்தலில் கருணாநிதி ஜெயிக்க வேண்டியிருப்பது அவரது சொத்துக்களைப் பாதுகாக்கவும், சரியான இடங்களில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து நாளைக்கு மாட்டிக்கொள்ளாத அளவு முதலீடு செய்வதற்கு மட்டுமே.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அடுக்கு மொழிகளில் பேசி ஊரையே ஏமாற்றிவந்த அண்ணாவின் வழித்தோன்றல் இன்றைக்கு வடக்கு, தெற்கு இரண்டையும் தேயவிட்டு தான் மட்டும் ஊழல் செய்து வாழ்ந்திருக்கிறார். பலிகடாவாக ராஜாவும் அவரது உதவியாளர்களும்.

இந்தத் தேர்தலிலும் கருணாநிதி ஜெயிப்பது தமிழகம் ஜனநாயகத்திலிருந்து, ராஜாங்கத்துக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்குச் சமம். கிட்டத்தட்ட எண்ணெய் வளமிக்க ஒரு நாட்டின் ராஜா செய்யவேண்டிய அனைத்தையும் இலவசம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறார். ஏன் செய்கிறார் என்பது இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்கக் காத்துக்கொண்டிருந்த திருவாளர் பொதுஜனத்துக்கும் தெரியும். ஒரு ரூபாய்க்கு நூறுரூபாய் கொள்ளையடிப்பார் கருணாநிதி என்பதும் தெரியும்.


உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது தமிழ்நாட்டின் பெயரில். ஆனால் வருவாயைப் பெருக்க எந்த முயற்சியும் செய்யாமல் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சளைத்தவர் அல்ல. ஜெயலலிதாவுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியில் ஊழல் செய்வதில் கருணாநிதி கல்லூரியாக விளங்கினார் என்றால் அடுத்து பதவிக்கு வந்த ஜெயலலிதா ஊழல் பல்கலைக்கழகமாக விளங்கினார். அவர் செய்த இமாலய ஊழல்கள் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் இருதேர்தல்களிலிருந்து துரத்தியது.

டான்சி நிலபேர வழக்கிலிருந்து ஆரம்பித்து கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், சுடுகாட்டுக்கொட்டகை ஊழல்வரைக்குமாக அவரது ஊழல்.

மந்திரிகளையும், எம்.எல்.ஏக்களையும் கிட்டத்தட்ட புழுக்கள் போல நடத்தினார். அவர்களும் கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததைபோல நடந்து கொண்டனர். பாண்டுரெங்கன் என்ற ஒரு அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்வது வரை இவர்களது அசிங்கம் பிடித்த ஆட்சி நடந்தது.

அரசாங்க ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை டெஸ்மாவோ, அஸ்மாவோ ஏதோ ஒரு சட்டத்தின் பெயரில் சிறையில் தள்ளிய பெருமை இவருக்குண்டு.

இந்தத் தேர்தலில் சகோதரி, சகோதரி என ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டிருந்த வை.கோவை ஓரங்கட்டி தனது அராஜகமும், ஆணவமும் இன்னும் குறையவில்லை என்று நிரூபித்தார்.

இருக்கின்ற இந்த இரு கொள்ளிகளுக்கும் மாற்றாக வந்த விஜயகாந்த் நம்பிக்கையாகத் தெரிந்தார். தற்போது எல்லோரும் விழும் அதே திராவிட சாக்கடையில் போய் விழுந்து சேறு பூசிக்கொண்டு நிற்கிறார்.

யாரும் கூட்டு சேர்த்துக்கொள்ளாததால் தனியாக நிற்கிறது தேசியக் கட்சியான பாரதிய ஜனதா. அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும்படி கிட்டத்தட்ட எல்லா திராவிடக் கட்சிகளையும் கெஞ்சியது. கடைசியில் வேறு வழியின்றி வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக தீர்மானிக்க, டெல்லி தலைமையோ எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.


வேறு வழியின்றி தனியாக நிற்கும் பா.ஜ.கவின் தமிழக வாக்கு வங்கியைக் குறித்த உண்மையான தகவல் தெரிய வரும். தமிழக மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரிய வரும்.

பாரதிய ஜனதாவின் பலம் இவர்கள் ஆண்ட, ஆள்கிற எல்லா மாநிலங்களும் நல்ல நிலைமையில் உள்ளன. குஜராத்தைப் பாராட்டிப் பேசுதல் தவறு என்பது இணைய நடைமுறை. ஆனால் குஜராத்தைப்போல இன்றைக்கு வளர்ச்சியடைந்த மாநிலம், அதுவும் சாராயக்கடைகளை திறக்காமலேயே தொழில்துறை வளர்ச்சியைப் பெருக்கி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்வதுடன், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை உலக வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கிறது குஜராத்.

இனி காப்பாற்றவே முடியாது என இருந்த பீஹார் இன்றைக்கு வளர்ச்சிப்பாதையில். அதை உணர்ந்த மக்கள் இரண்டாம் முறையும் பா.ஜ.க கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினர்.

எல்லாவற்றையும் பார்க்கும்போது பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பதே நம்மிடம் இருக்கும் ஒரே வழி. ஆனால் கழக ஆட்சிகளிடமே நம்மை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து பழக்கப்பட்ட நாம், இலவசங்கள் ஏதும் தராத ஆனால் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்கையாகக் கொண்டு வாக்கு கேட்டு வரும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்போமா?

வாக்களிப்பதே நமது எதிர்காலத்துக்கு நல்லது. இல்லையெனில் இலவசங்களினால் நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்குவதுடன், இவர்கள் ஆட்சியை விட்டு விலகும்போது தமிழ்நாட்டு நிதி நிலைமையும் பிச்சைக்கார நிலைமையில்தான் இருக்கும்.

இப்போதே ஜெயலலிதாவின் வெற்றி உறுதி என கருத்துக்கணிப்புகள் மக்களின் மனதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூசகமாக சொல்ல ஆரம்பித்துவிட்டன. தமிழக மக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும், தமிழ்நாடு மீதும், தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளோரின் விருப்பமாய் இருக்க முடியும்.


ஒரு தமிழக வாக்காளனாக எனது வாக்குகள் பாரதிய ஜனதாவுக்கே.

இந்திய தூதரகங்களில் வாக்களிக்க நடைமுறை இருக்கிறதா எனக் கேட்க வேண்டும்.

Wednesday, April 6, 2011

ஓட்டுப் போடுங்க மக்கா..

டுபுக்கு தயாரித்து இட்லிவடையில் வெளியான இந்த வீடியோ படித்த மக்கள் ஓட்டளிப்பதற்காக வேண்டுகிறது. சரியான நபரை தேர்வு செய்ய அவசியம் எல்லோரும் வாக்களிப்போம்.



ஜனநாயகத்தைக் காக்க தன்னளவில் முயன்றிருக்கும் டுபுக்குவிற்கும் அவரது குழுவினருக்கும் எனது வணக்கங்களும், பாராட்டுதல்களும்.

Tuesday, April 5, 2011

பேச வந்துட்டானுங்க..


அண்ணன் அஃப்ரிடியின் அருள்வாக்கு

”இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்களைப் போலவும் இஸ்லாமியர்களைப் போலவும் பரந்த மனம் படைத்தவர்கள் அல்ல..”

உண்மைதான்..

இந்தியாவிலிருந்து நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரிந்து சென்றீர்கள்.

உங்களுக்கு சேரவேண்டியதை இந்தியர்கள் பரந்த மனப்பான்மையின்றிதான் கொடுத்தார்கள்.

நீங்கள் வைத்த ஒவ்வொரு குண்டுக்கும் இந்தியர்கள் உங்களைத் திருப்பித்தாக்காததும் கூட பரந்த மனப்பான்மை இல்லாததால்தான்..

இந்தியக் கள்ள நோட்டு வெளியிடல், இந்தியாவில் உள்நாட்டுக்குழப்பம், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்குப் பயிற்சி, தொடர்ந்து பொய்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருத்தல் ஆகியன பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு மட்டுமே தோன்றும் செயல்கள்.

”முஷ்டியை மடக்கிக்கொண்டிருப்பவருடன் எப்படி கைகுலுக்குவது?” என இந்திரா பரந்த மனப்பான்மை கொண்ட உங்களைத்தான் சொன்னார்.

நல்லெண்ணத்தில் இந்தியா செய்த பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை கிண்டலும், கேலியும் செய்தும், அதில் தீவிரவாதச் செயல்களைச் செய்தும் பரந்த மனப்பான்மையைக் காட்டியதும் பாக்கிஸ்தானிகளே.

நாங்கள் உள்ளுரில் சர்க்கரையை ஆனைவிலை, குதிரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது பாக்கிஸ்தானுக்கு குறைந்த விலையில் அனுப்பியது பரந்த மனப்பான்மையற்ற இந்தியர்களே..

கிரிக்கெட்டில்கூட சோடா மூடியைக்கொண்டு பந்தை சிதைப்பது உள்ளிட்ட செயல்களை பரந்த மனப்பான்மையுடன் செய்தவர்கள் பாக்கிஸ்தானிகளே..

இஸ்லாமிய நாடுகளில்கூட வேண்டாத அழையாத விருந்தாளியாய் அமர்ந்திருப்பதும் பரந்த மனப்பான்மை கொண்ட பாக்கிஸ்தானிகளே.


இஸ்லாமியர்களுக்குள் இருக்கும் பரந்த மனப்பான்மைதான் சுஃபிக்கள் ஆலயத்தில் தொழும் பக்தர்களை குண்டுவைத்துக் கொல்ல வைக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மாட்டுக்கறியை உணவாகக் கொடுக்கும் அளவு உங்கள் பரந்த மனப்பான்மை இருக்கிறது.

காஃபிராய் இருந்தால் ஜிகாத் என்ற பெயரில் யாரையும் கொல்லலாம் எனச் சொல்வதும் உங்கள் பரந்த மனப்பான்மை கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளே..

பாக்கிஸ்தானின் மக்கள் தொகையை விட அதிக இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசதி வாய்ப்புகளுடன் இருப்பது பெருந்தன்மையற்ற இந்தியர்களால்தான். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மூன்றாம்தரக் குடிமக்களாய் பாக்கிஸ்தானில் வாழ்க்கை நடத்தவேண்டியிருப்பதும் பெருந்தன்மை கொண்ட பாக்கிஸ்தானிகள் என்ற பெயர் கொண்ட பக்கிகளால்.


பேச வந்துட்டானுங்க..

Sunday, March 27, 2011

ஜெர்மனியும் இந்தியாவும்



ஜெர்மனிக்கும், இந்தியாவுக்குமான குடிமக்களின் ஒழுங்கு பற்றிய ஒப்பீடு.. நெட்டில் கிடைத்தது.. நம்மைக் கிண்டல் செய்வதுபோல பட்டாலும் நம் இன்னும் அவ்வாறுதான் இருக்கிறோம். பொது இடங்களில் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லையெனில் வெளிநாடுகளில் நமக்கு அவமானம் காத்திருக்கிறது.

Saturday, March 26, 2011

குவைத்தில் ஒரு மணற்சுனாமி..


நாங்க சுனாமியிலேயே சும்மிங்கபோடுறவைங்க என ஆடுகளத்தில் தனுஷ் சொல்வார். ஜப்பானில் சுனாமி வந்ததைப் பார்த்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் சும்மிங் போடுவாரா இல்லை சுனாமி அவரை சாப்பிடுமா என்பது.. நேற்று குவைத்தில் வந்திருந்த மணற்சுனாமி வந்து சென்றது.

நேற்று ( 25.03.2011) திடீரென ஐந்து மணியளவில் நான் குடியிருக்கும் மங்காஃப் ஏரியாவில் மொத்தமும் இருட்டிவிட்டது. வீடு முழுதும் திரைச்சீலை என்பதால் வெளியே நடப்பது எதுவுமே தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு போன் வந்து வெளியே பாருங்கள் எனச் சொன்னார்கள். கிட்டத்தட்ட மணலை தொடர்சியாக கொட்டி விடுவதுபோல எங்கெங்கும் சுழற்காற்றுடன் கூடிய தூசி மட்டுமே.

வீட்டுக்குள்ளேயே எளிதாக மூச்சுவிட சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கு தொடர்ச்சியாக தலைவலி தூசியினால். வெளியே ரோட்டில் நடந்து சென்றவர்கள் எவ்வளவு அவதிப்பட்டார்களோ? மணலை மட்டுமே சுவாசிக்க முடியும். அவ்வளவு மணற்சுனாமி.

அடிக்கடி ஜன்னலைத் திறந்து எவ்வளவு குறைந்திருக்கிறது எனப் பார்த்தால் வீட்டுக்குள் தூசி வருகிறது.

கிட்டத்தட்ட எதையுமே பார்க்க இயலாத நிலை. Zero Visibility என்பதை நேரில் பார்த்தேன். வீட்டிலிருந்து பார்த்த எனக்கே இப்படியெனில் சாலையில் வண்டியோட்டிக்கொண்டிருந்த எத்தனை பேர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என நினைக்கவே பயமாய் இருக்கிறது.

நேற்றைக்கு க்ரை சார்பாக ( CRY -Children Rights and You)கிரிக்கெட் போட்டி நடந்தது. நிறையக்குழந்தைகள் பெற்றோர்கள் துணையின்றி ஆசிரியரின் கண்காணிப்பில் வந்திருந்தன. ஐந்து மணிக்கு மேலும் ஆட்டம் நீடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் பெற்றோர்கள் பட்ட அவஸ்தையை வர்ணிக்க இயலாது. மனற்புயலால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொலைபேசிகள் இயங்கவில்லை. பக்கத்து வீட்டுப் பையனும் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான். அவனது அம்மா ஒரே அழுகை. போன் லைன் வேறு கிடைக்கவில்லை. ஒருவழியாக லைன் கிடைத்த பிறகு வேறு ஒரு குழந்தையின் தகப்பனார் பக்கத்துவீட்டுப் பையனை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றார்.

காலையில் எல்லாம் தெளிந்து வானம் தெளிவாய் இருந்தது. நிறுத்தி வைத்திருந்த எனது வண்டியின் மீது 1 இன்சுக்கு மனல்பொடி. வைப்பர் இட்டால் கண்ணாடி முழுதும் கோடுகள் விழும். துணியை வைத்து கொஞ்சம் துடைத்துவிட்டு வண்டியை எடுத்து வேகமாக ஓட்டியதில் எல்லா தூசிகளும் போயே போச்சு.

வீடெல்லாம் ஒரே தூசி. வீட்டுக்காரம்மாதான் இன்று முழுக்க வீட்டை பெருக்கி, துடைத்துக் கொண்டிருப்பார். இன்று மாலை தூசிப்புயல் வராமல் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது என யாராவது சொல்லித்தரலாம்.

இன்றைக்கு அராப் டைம்ஸில் இந்த செய்தியும் வந்திருக்கிறது. 50 கிமி வேகத்தில் மனற்புயல் அடித்ததாம்.

குவைத்தின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்ததால் தூசியெல்லாம் குறைந்துவிட்டதாம். 60 வயது பெண்ணும் அவரது மகனும் சால்மி பாலைவன ஏரியாவில் காணமல்போய்விட்டார்கள். இப்போதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. மற்றபடி பெரிய சேதங்கள் ஏதுமில்லை எனினும், ஒரு மாலை நேரத்தை அதி பயங்கர மாலையாக்கிவிட்டு சென்றுவிட்டது மனற்புயல்.

குவைத்துக்கா கானூன், குவைத்கா மோசம், குவைத்திக்கா திமாக் கபிபி பதலி ஹோசக்தாகை ( குவைத்தின் சட்டங்கள், குவைத்தின் காலநிலை, குவைத்தியின் மூளை அல்லது மூட் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்) என நண்பர்கள் இங்கு அடிக்கடி சொல்லும் சொலவடையை நேற்று காலநிலை விஷயத்தில் பார்த்தேன்.

தொடர்புடைய சுட்டி இங்கே

படம் அராப் டைம்ஸ் - குவைத் பத்திரிக்கையிலிருந்து

Tuesday, January 25, 2011

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.




அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்…

குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது, புன்முறுவல் தேக்கி, உடன்பிறந்தவளைப் பார்க்க வரும் தூர தேசத்துத் தமையன் போல…

அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்!

பிள்ளை பிடிக்காரர்களைப் போல அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். முதுகில் வலிய கோணிப்பை இருக்கிறதா என்று தேடாதீர்கள். அதை அவர்களைத் தொடர்ந்து வரும் மாமாக்கள் வைத்திருப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் கட்கங்களில் சுருட்டி!

‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என

ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’

என்று மணிமேகலை பாடும் ஆதிரையின் அட்சயப் பாத்திரம் போல அவர்கள் வாய் அமைந்துள்ளது. எதைக் கேட்டாலும் தரும்; எத்தனை கேட்டாலும் தரும்.

ஆயர்பாடிக் கண்ணன் வாய் அகலத் திறந்து காட்டினால் ஈரேழு பதினான்கு உலகங்களும் தெரியும் என்பார்கள். ஆனால், வந்துகொண்டு இருப்பவர் வாயோ எதையும் வழங்க வல்லது.

‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ எழுதிய அய்யன் திருவள்ளுவர் சிலை, 18 ஆண்டுகளாகக் கோணிச் சாக்கில் பொதியப்பட்டு பெங்களூரில் அமர்ந்துள்ளது. திறக்கப்பட வேண்டுமா? 30 ஆண்டுகளாகச் சொல்லி வரும் குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட வேண்டுமா? சேது சமுத்திரத் திட்டமா? ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமா? காவிரி நதி நீர்ப் பங்கீடா? முல்லைப் பெரியாறு அணை வழக்கா? நறும்புனல் ஓடும் நாவாய் ஓடும் கூவம் மணக்கும் திட்டமா? இந்திய நதிகளை இணைத்துக் காசியில் ஏறி, குமரியில் இறங்க வேண்டுமா கப்பல்களில்? 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொதுமருத்துவமனைத் திட்டமா? போக்குவரத்து நெரிசல் குறைக்க எல்லா மாநிலத் தலைநகர்களிலும் குழாய் ரயில் அல்லது பறக்கும் ரயில் திட்டமா? போத்தல்களில் அடைத்த சுத்தமான இலவசக் காற்றுத் திட்டமா… எது வேண்டும் உங்களுக்கு? வாரி வழங்குவார்கள், வாய் எனும் அட்சய பாத்திரம்கொண்டு! வாயில் எங்கிருந்து வாக்குறுதிகள் முளைத்துக் கிளைத்து வருகின்றன என்று முனிவனும் விஞ்ஞானியும் ஞானியும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

68 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வருவார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் அவர்கள் நிரபராதிகளே என்கிறது சட்டம். இந்தியத் துணைக்கண்டத்தில் குற்றம் வெகு வேகமாக நிரூபிக்கப்பட்டுச் சிறை செல்லும் பாக்கியம் உடையவர்கள் பெரும்பாலும் ராப்பட்டினிக்காரர்கள். அவர்கள் நீதி வாங்கும், விற்கும் வக்கும் சிறுவாடும் இல்லாதவர்கள். அவர்களைப் பற்றி இங்கு நமக்குப் பேச்சில்லை. 20 கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டு என்கவுன்ட்டர் எனும் அதி நவீன நீதி வழங்கலில் கொலைப்பட்டவர்களின் இளம் விதவைகள் வருவார்கள், தமது அதி மேதாவிலாச அரசியல் அறிவுடன். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட, பதவி துறந்த தேசத் தலைவர்களின் மனைவிகள், மைத்துனிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். பத்தாயிரம் கோடிகள் வரவு-செலவு செய்கிறவர்களுக்கு ஊழியம் செய்யும் முகவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இனத் துரோகிகள், மொழித் துரோகிகள், மக்கள் விரோதிகள், நாட்டு விரோதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சாதியின், மதத்தின் பெயரால் கொலை செய்தவர்கள் வந்து நிற்பார்கள். 8 ரூபாய் பொருளை 88 ரூபாய்க்கு விற்கும், தேச நிர்மாணத்துக்கு உழைக்கும், தன்னலம் கருதாத வணிகர் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

சாலையில் குப்பை பொறுக்கும் 12 வயதுச் சிறுவர் போல, வாக்குப் பொறுக்குகிற மூன்றாவது இளைய தலைமுறையினர் வந்துகொண்டு இருக்கிறார்கள். ‘வாக்குப் பொறுக்கிகள்’ எனும் தலைப்பில் 1985-ல் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்று, பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தலைப்பு காரணமாக நீக்கப்பட்டது. வாக்கு என்பது பொறுக்கப்படுவது என்பது இன்று நிரூபணமாகிய ஒன்று.

ஆண்ட, ஆளுகிற வர்க்கத்தின் இளைய தலைமுறை அவர்கள். தியாகத் தழும்புகள் ஏற்றவர். இளைய இந்தியரின் உள்ளாடைகளை உருவி எடுத்துக் கொடிகளாக ஆட்டிக்கொண்டு, அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

பாலம் கட்டிய ஊழல், பருப்பு இறக்குமதி ஊழல், சுடுகாடு கட்டிய ஊழல், மணற்கொள்ளை ஊழல், கற்குன்றுகள் களவாடிய ஊழல், மாட்டுத் தீவன ஊழல், வங்கிக் கடன் ஊழல், சிமென்ட் இறக்குமதி ஊழல், நிலக்கரி ஊழல், பங்குச் சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் எனப் பட்டியல் போட்டால் ஆனந்த விகடனின் பக்கங்கள் தீர்ந்துபோகும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாம் பட்டாளக் காரர் போல் கால் வீசி, கை வீசி, கன கம்பீரமாக, இயந்திரத் துப்பாக்கிப் பாதுகாப்புடன் வந்துகொண்டு இருக் கிறார்கள்.

ஞாபகம் இருக்கிறதா, போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் மரித்து நட்ட ஈடு கேட்டு, 30 ஆண்டுகளாக வழக்கு நடந்துகொண்டு இருப்பது?

ஞாபகம் இருக்கிறதா, பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வதைக்கப்பட்டு, இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் 25 ஆண்டுகளாக வழக்கு நடப்பது?

ஞாபகம் இருக்கிறதா… இனத்தை, மொழியை, பண்பாட்டை, வாழிடத்தைக் காக்க நமது உடன் பிறப்புகள் 25 ஆண்டுகளாக ஈழத்தில் ஆயிரமாயிரம் உயிர் ஈந்து போராடி வருவது?

எனினும், அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, பல வர்ணப் பதாகைகளோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஐந்தாம் வகுப்பு தோற்றவர் இருப்பார், ஆர்வர்டில் பயின்றவர் இருப்பார். மருத்துவர், பொறி இயலாளர், வழக்குரைஞர், விஞ்ஞானியர், வியாபாரிகள், தொழில் முனைவோர் இருப்பார்கள்.

234 அரச குமாரிகளுக்கான சுயம்வரத்தில் பங்கேற்க 5,000 அரசிளங்குமரர்கள் வருகிறார்கள். வில்வித்தை கற்றதில்லை; ஆனால், சொல்வித்தை தெரியும்.

‘கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?’ என 45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள் இன்று தாமே கொடைக்கானலாக, ஊட்டியாக, குலுமணாலியாக, சிம்லாவாக நடமாடி வருகிறார்கள்.

எல்லா இந்தியனுக்கும் வீடு, வீட்டுக்கொரு பால் மாடு, மாடு மேய இரண்டு ஏக்கர் தோட்டம், தோட்டந்தோறும் ஊறும் கிணறு, கிணறுகளுக்கெல்லாம் பம்புசெட், பம்பு செட்டுகளுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என சகல இலவசத் திட்டங்களோடும் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மிமிக்ரி செய்துகொண்டும் கலையுலக பழைய, புதிய கலைத் தளபதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். கள்ளப் பணம் வாங்குகிற, வரிகள் கட்டாத, ஏழை எளிய மக்கள் பைக்குள் கை விட்டுக் காசு எடுக்கிற புரட்சிகள், தளபதிகள், திலகங்கள், குரிசில்கள், குன்றுகள் யாவரும் அணியணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியக் குடி மக்களுக்கு சேவை சாதிப்பது ஒன்றே அவர்தம் சங்கல்பம். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், துகிலுரிந்த இசைத்தட்டு நடனம் என அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஈழத் தமிழனுக்கான ஆதரவுக் கோஷம் விண்ணைத் துளைக்க அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆடு வெட்டிப் பந்திவைக்க, சீமைச் சாரயப் பந்தல் நடத்த, ஊதா நிறக் காந்தித் தாட்கள் வழங்க, குடம், குத்துவிளக்கு, தாலி, தாம்பாளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம் தர அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இது மக்களாட்சி. ‘நான் ஆண்டேன், என் மகன் ஆள்கிறான், பின்பு அவன் மகன் ஆள்வான். நாடாள எனப் பிறந்த நற்குடியினர் நாங்கள்’. பிரியாணிப் பொட்டலத்துக்கும் கால் குப்பி மதுவுக்கும் கோஷம் போடப் பிறந்தவர் ஏனையோர் என்பது அவர்கள் தீர்மானம்.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியச் சிறைச்சாலை களில் மாண்டவர் 7,500. கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகள் 2 லட்சம் பேர். ஒரு இந்தியனின் சொத்து மதிப்பு 2,49,000 கோடிகள். ஆனால், 28 கோடி பேர் இங்கு இரவில் பசியோடு தூங்கப் போகிறார்கள். சுதந்திரம் பெற்ற 62 ஆண்டு களில் இந்நாட்டை ஒரு கட்சி 50 ஆண்டு காலம் ஆண்டுள்ளது. அதில் ஒரே ஒரு குடும்பம் 40 ஆண்டுக் காலம் ஆண்டது.

உலகின் சிறந்த ஆட்சித் தத்துவமான மக்களாட்சிக் கொடியேந்தி அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, பொன் வட்டில் சுமந்து மருங்கே, தோளோ அசைய…

மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. மொத்த மக்கள்தொகை 112 கோடி. அதில் 8 கோடிப் பேர் சாலைகள், மின்சாரம், குடி தண்ணீர், கல்விச் சாலை, மருத்துவ வசதி இல்லாத காடுகளில் வாழ்கிற ஆதிவாசிகள். அதிகக் கல்வி பெற்ற, பெண் வாக்காளர் அதிகம் உள்ள கேரளாவில், கடந்த 57 ஆண்டுகளில் வெறும் ஏழே பெண்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நடப்பு நாடாளுமன்றத்தில் வெறும் 45 பேர்தான் பெண்கள். என்றாலும், கடையனுக்கும் கடைத்தேற்றம், பெண்களுக்குச் சம உரிமை என்று வாயகன்ற கூக்குரல்களோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

வந்தவுடன் தளர்ந்தது போல் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். சிலர் பழைய சோறு, கூழ் கேட்டு வாங்கிப் பருகுவார்கள். குழந்தைகளை வாங்கி, மூக்குச் சிந்தி முத்தம் கொடுப்பார்கள். கையில் 500, 1,000 தாள் கொடுப்பார்கள். மூதாட்டிகளைத் தோளோடு அணைத்துக்கொள்வார்கள். பருவப் பெண்களைப் பார்த்தால், நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள ஆசை அற்றவர்கள் அல்ல. ஆனால், இந்தியன் அதற்கு மேல் தாங்க மாட்டான் என்பது தெரியும். தலித்துகளைக் கூடப்பிறப்புகள் என்பார்கள். வெளியில் மட்டும் பார்ப்பன எதிர்ப்புக் காட்டு வார்கள்.

சாதனைகளை விளக்குவார்கள். பினாமி சொத்துக்கள், சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றிப் பேச மாட்டார்கள். அவர்களுக்கு நுனி நாக்கு ஆங்கிலமும் தெரியும்; குப்பத்துத் தமிழும் தெரியும்.

வழியெங்கும் அவர்களைக் கோவலனே, காவலனே, ஞானப் பிழம்பே, இனமானக் கீற்றே, சாக்ரடீஸே, அலெக்சாண்டரே என்று மதக் களிறு போல் நடந்து வரும் ஃப்ளெக்ஸ் போஸ்டர்கள் கட்டியம் கூறும். நன்னடை இல்லாதவன் நடந்து வரும் தோரணையில் கொம்பன் யானைகள் தோற்றுப் போகும். கம்பந் தோறும் கட்சிக் கொடிகள் மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கும்.

அன்று புலவர் பட்டினி போக்கப் பாடிப் பொருள் பெற்றனர். இன்று பளிங்கு மாளிகை, படகுக்கார் பாவலர்கள், நாப் பாவாடை விரிக்கின்றனர். பட்டங்களைக் கழுதை போல் சுமந்துகொண்டும், கந்தலாடைப் புலவர்களின் வாரிசு என்று சொல்லிக்கொண்டும் வருகிறவர்களுக்கு இது கொய்தல் காலம். உண்ணா நோன்பு இருப்பார்கள்; பேரணி நடத்துவார்கள்; மனிதச் சங்கிலி கோப்பார்கள். ஆளுக்கு நான்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில் திறமைசாலிகள் அவர்கள்.

அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, அணியணியாக, அலையலையாக!

பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.

ஆயுதங்களைப் பயன்படுத்த அறியாதவருக்கு ஆயுதம் எதற்கு? ஒரு வாக்கின் சராசரி இந்திய சந்தை விலை ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கும் தெரியும். அதைச் சேகரிக்க வருபவரின் பேராசைக் கண்களில் விரியும் பெரும் சாம்ராஜ்யங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்? உங்களால் மதிப்பீடு செய்யவும் இயலாது.

உங்களை யோசித்து முடிவெடுக்க நேரம் கூடத் தராமல் மூச்சுப் பிடித்து வேகமெடுத்து அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். விற்பனைக்குத் தயாராக இருக்கும் உங்களை நம்பித்தான் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆம்… வந்துகொண்டே இருக்கிறார்கள்!

-------------------

இவர்களைப்போன்ற வியாதிகளின் ஊழல்களைத்தாண்டியும் இந்திய ஜனநாயகமும், குடியரசும் சாதாரன இந்தியர்களாலேயே காப்பாற்றப்படுகிறது.. அவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்!! இந்தியக் குடியரசு வாழ்க!!வாழ்க இந்தியா!!!

நாஞ்சில்நாடன் அவர்களின் கட்டுரையை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன்