பாஸ்ராவின் துப்புரவு வேலை முதலில் உள்ளூர் கான்ட்ராக்டர்களிடம் இருந்தது. அவர்கள் நம்மூரின் பாலம் கட்டும், ரோடுபோடும் கான்ட்ராக்டர்கள் வகை. கமிஷனெல்லாம் கொடுத்துவிட்டு, லாபமெல்லாம் எடுத்து வைத்துக்கொன்டபின்னர் மிச்சக்காசில் கட்டுவதைப்போல இங்கேயும் பேப்பர் அளவில் மட்டுமே துப்புரவு வேலை நடக்கும்.
உள்ளூர் ஈராக்கிக்கு மாத சம்பளம் 800 டாலர். வேலையும் சுமாருக்கு கீழே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குவைத்தி கம்பெனி இந்த க்ளீனிங் கான்ட்ராக்டை எடுத்தது.
மத்திய கிழக்குக்கென அதிகம் நேர்ந்துவிடப்பட்ட குறிப்பாய் இதுபோன்ற படிப்பு தேவையில்லாத வேலைகளுக்கெண இருப்போர்கள் பங்களாதேஷிகள். 250டாலர்கள் சம்பளத்திற்கு காலைமுதல் மாலைவரை குப்பையை அள்ளிக்கொன்டிருக்கிறார்கள். ஊரும் முன்னரைவிட இப்போது கொஞ்சம் சுத்தமாக இருக்கிறது, சில சரி செய்யவே முடியாத பகுதிகளை தவிர.
இந்த பெங்காலி என அழைக்கப்படும் பங்களாதேஷிகள் இந்த 250 டாலர் சம்பளம் உள்ள வேலைக்கு அவர்கள் ஊரின் 2 லட்சம் டாக்கா கொடுத்து வந்திருக்கிறார்கள். சிலருக்கு பெங்காலி தவிர வேறெதுவும் தெரியாது. மத்திய கிழக்கில் ஏற்கனவே வேலை செய்த மக்களுக்கு ஹிந்தியும், கொஞ்சம் அரபியும் தெரிந்திருக்கிறது.
250 டாலர் அளவு கூட பங்களாதேஷில் சம்பாதிக்க முடியாதா? இங்கே வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?