Wednesday, September 1, 2010

ஓமானில் கார்

செந்திலின் பக்கங்களில் இந்த பதிவைப் பார்த்த உடன் நம்ம கதையையும் கொஞ்சம் எடுத்து விடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

துபாய், மஸ்கட் பக்கம் வேலைக்குப் போறவங்கள்ள கிட்டத்தட்ட எல்லோருக்கும் விருப்பப்பட்டா லைசென்ஸ் வாங்கிக்கிற மாதிரி வாய்ப்பு இருக்கும். எனக்கு சென்னையில வேலைக்கு எடுக்கும்போதே 3 மாசத்துல லைசென்ஸ் வாங்கிடனும் அப்படிங்கிற கண்டிஷனோடதான் வேலைக்கு எடுத்தாய்ங்க..

இதென்ன பிரமாதம், இப்பதான் நம்மூர் லைசென்ஸ் வாங்கியிருக்கேன்.. அதே டெக்னிக்கை இடது புறமா செஞ்சா முடிஞ்சிச்சினு நெனச்சிகிட்டே விமானத்தில் ஏறும்போது விதி என்னையப் பாத்து சிரிச்சது எனக்குத் தெரியலை.

மஸ்கட்ல போய் இறங்குன அன்னிக்கே பேதிக்கு மருந்து குடுத்துட்டாய்ங்க.. ஏர்போர்ட்ல இருந்து நான் வேலை செய்யுற கம்பெனியோட கேம்ப்புக்கு போறதுக்கு ஒரு 40 கிலோமீட்டர் இருக்கும். வண்டிய எடுக்கும்போதே பைக்க எடுக்குற மாதிரி ஒரு சுண்டு சுண்டி எடுத்துட்டு அப்புறம் எங்கையும் ஸ்பீடைக் குறைக்காம அப்படியே வண்டி 140 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் போகும், அப்பப்ப 120கு வந்துட்டு திருப்பி 140 கி.மீலையே போய்க்கிட்டிருந்துச்சி. சரி, இன்னிக்கு கதைய முடிச்சுட்டாய்ங்கனுதான் நெனச்சேன். ஒரு 30 நிமிஷத்துல கேம்ப்புல இறக்கி விட்டபின்னாலதான் உசுரே வந்துச்சி.

வேலைக்குச் சேந்த மறுநாள்லையே எங்க டிவிஷன் மேனேஜர், தம்பி, ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குறதுக்கு உண்டான பெர்மிஷன மொதல்ல எழுதிரு, அப்ரூவல் வர்ரதுக்கு 15 நாள் ஆகும் அப்படின்னு சொல்லி எழுத வச்சாரு. ஒரு வாரத்துக்குள்ளையே ஐ.டி கார்டு வந்துருச்சி. அப்புறம் பெர்மிஷனும் வந்தாச்சி. மேனேஜர், சீக்கிரம் லைசென்ஸ எடுத்துரு. இல்லைன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னாரு.

ரொம்ப கஷ்டம் அப்படிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னா எனக்கு இப்ப வண்டியும் ட்ரைவரும் குடுத்துருக்காய்ங்க, அதை 3 மாசம் வரைக்கும்தான் தருவாங்க. அதுக்கப்புறம் லைசென்ஸ் எடுக்குறவரைக்கும் டாக்ஸியிலதான் போகனும். மஸ்கட் ஊரெல்லாம் சுத்துர தோட்டக்கலை சூப்பர்வைசர் நானு. அங்க அடிக்கிற வெயிலுக்கு 10 நிமிஷம் வெளிய நின்னா என்னப்பா குளிச்சிட்டு தொவட்டாம வந்துட்டியான்னு கேக்குற அளவு வேர்க்கும். கம்பெனி யுனிஃபார்ம் வேற முழுக்கை சட்டை, கழுத்துல டை. அங்க எப்பவோ இருந்த ஒரு இந்திய எக்ஸ் சர்வீஸ்மேன் எல்லாத்தையும் புரொஃபஷனல் ஆக்குறேன்னு ஆரம்பிச்சு வச்ச ட்ரெஸ்கோட் அது. நான் கொஞ்சமா சவுண்டு விடவும் எங்கூட சேந்துகிட்டு மத்தவைங்களும் சேந்து சவுண்டு விட்டு வெளிய வேலை செய்யுற எங்களமாதிரி சூப்பர்வைசர்களுக்கு அரைக்கை சட்டையும்,. டை கட்டவேண்டியதில்லைன்னும் பெர்மிஷன் வாங்குனோம்.

எதுக்கு இந்த பூர்வாங்கக் கதைன்னா லைச்சென்ஸ் எவ்வளவு முக்கியம்கிறதும், எடுக்குறது என்ன பெரிய பிரம்ம வித்தையான்னு நெனச்சதுக்கு கிடைச்ச அனுபவத்தை சொல்றதுக்கும். ஒரு சுபமுகூர்த்த நன்நாளில் எனக்கு ஒரு பலூச்சி - பாக்கிஸ்தானி வாத்தியார் கிடைச்சார். அவர்ட்ட ”இங்க பாருங்க, இப்பதான் எங்கூர்ல லைசென்ஸ் வாங்கிட்டு நேரா இங்க வாரேன்”னதும், அப்படியா, அப்படின்னுட்டு வண்டிய குடுத்து பார்க்கிங்கு உள்ளையே ஒரு ரவுண்டு எடுக்கச் சொன்னார். ரெண்டு வாட்டி ஆஃப் செஞ்சு ஒருவழியா வண்டி ஒட்டி, நிறுத்துனதும், ஒரு பெருமைப் பார்வை பாத்தேன். அவர் உடனே எவ்வளவு சீக்கிரம் உங்க ஊர் ட்ரைவிங்க மறக்குரையோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு லைசென்ஸ் கிடைக்கும்னார்.

காலையில 5 முதல் ஆறு மணிவரை எனக்கு ட்ரைவிங் கிளாஸ். என்னோட கேம்ப் வாசல்ல வந்து பிக்கப் செய்வார் ட்ரெயினர். 4.55க்கு கேட்டுல நான் இருக்கனும். 5 மணிக்கு கேட்டுல வந்துட்டு நான் இல்லைன்னா, இல்ல ஓடி வர்றத பாத்ததுக்கப்புறமும், வண்டிய கெளப்பிட்டு போய்ட்டே இருப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்டு. நாந்தாண்டா லேட்டா வரனும், நீ இல்லைடா அப்படிம்பார். பணம் கட்டிப் படிக்கிற உனக்கே அக்கறை இல்லைனா எனக்கு என்ன ஆச்சு அப்படிம்பார்.

அதி தீவிர கோச் அவர். அடிக்க மட்டும் மாட்டார். அவ்வளவு கண்டிப்பு. ஓமான்ல ட்ரைவிங் டெஸ்ட்ல மொதல்ல பார்க்கிங் போடுறது ஒரு டெஸ்ட். வண்டிய ரிவர்ஸ்ல பார்க்கிங் போடனும், வலதுபக்கம் இருந்து ஒருவாட்டி, இடது பக்கம் இருந்து ஒருவாட்டி. ரெண்டு பக்கமும் ட்ரம்ஸ் இருக்கும் அதைத் தொடாம போடனும். தொட்டா அவுட். பெயில். நம்மாளுக இடிக்கவே மாட்டான்னு நெனைக்கும்போதே எப்படியோ வந்து கரெக்டா இடிப்பாங்க.

அப்புறம் செயற்கையா உருவாக்கப்பட்ட ஒரு மலைப்பாதைமேல போய்ட்டு கீழ வரனும். மேல ஏறும்போது அங்க ஒரு சிக்னல் இருக்கும். அங்க சிவப்பு வந்து ஒரு நிமிஷம் கழிச்சு பச்சை வரும். உங்க வண்டி ஒரு அடி கீழ இறங்குனாலும் நீங்க பெயில். நம்மாளுக சில பேரு மேல போன வேகத்துலையே கீழ வருவாங்க.. பதட்டத்துல

இந்த ரெண்டு கண்டத்தையும் தாண்டிட்டீங்கன்னா, அடுத்தது ரோடு. இங்கனதான் எல்லாப் பயகளும் சீ, இதெல்லாம் ஒரு பொழப்பா அப்படிங்கிற மனநிலைக்கு வர்ற இடம்.

நாளைக்கு டெஸ்ட் அப்படினு ட்ரெயினர் சொன்ன உடனேயே மனசுக்குள்ள நம்ம கற்பனையிலேயே பலரவுண்டு வந்திருப்போம், இதுவரைக்கும் வண்டி ஓட்டுன இடங்கள்ல. டெஸ்ட் அன்னிக்கு உங்க கூட ஒரு ஓமான் போலிஸ் பக்கத்துல இருப்பார், உங்க ட்ரெயினர் பின்னாடி சீட்ல. சலாம் அலைக்கும் எல்லாம் முடிஞ்ச பின்னால, போலிஸ்காரர் உங்கள வண்டி எடுங்கனு சொல்வாரு. எடுத்துட்டீங்கன்னா பெயிலு :-) ஏன்னா பாஸஞ்சர் பெல்ட் போட்ருக்காரான்னு பாக்க வேண்டியது ட்ரைவரோட வேலை. சீட் பெல்ட் ப்ளீஸ்னு போலிஸ்ட்ட சொல்லனும். போலிஸுக்கு தெரியாததானு நாமளே நெனச்சிகிட்ட பெயில்தான்.. அதுவும் பார்க்கிங்க விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே பெயிலு.

அடுத்து வண்டி ஒரு ஜெர்க் ஆகி ஆஃப் ஆகும் பதட்டத்துல.. பெயில்

வண்டி போய்ட்டிருக்கும்போது கை சும்மா இல்லாம ரியர்வியூ மிரர்ல கைய வைப்பீங்க, பெயில். ஏன்னா, வண்டி கெளம்புறதுக்கு முன்னாடியே சீட், ரிவர்வியூ மிரர், செண்டர் மிரர் எல்லாத்தையும் சரி செய்யனும்.

போலிஸ் வலது பக்கம் திரும்பு அப்படிம்பார்.. அங்க நோ எண்ட்ரி இருக்கும். போலிஸே சொல்லிட்டாருனு வண்டிய திருப்புனா பெயில். அறிவில்ல, நோ எண்ட்ரியில போறியேன்னு ஒரு சவுண்டு வேற விழும்,. பத்தாக்கொறைக்கு ட்ரெயினருக்கு என்னய்யா உங்க ஆளுன்னு ஒரு இழுப்பு இழுப்பார். ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.

முதல் முறை பெயிலாகும்போது நமக்கு ஆறுதல் சொல்ல பலர் இருப்பார்கள்.. என்னய்யா இதுக்குப்போயி கலங்குற,.. அடுத்ததுல பாஸ் செஞ்சிருவ பாருன்னு சொல்வாங்க..

ரெண்டாவது தடவை பெயிலாகும்போது சரி, விடுங்க அடுத்ததுல பாருங்க அப்படிம்பாங்க..

மூணாவது தடவை பெயிலான பின்னாடி உங்களுக்கு 10, 15 நண்பர்கள் கிடைச்சிருப்பாங்க,

மஸ்கட்டுல எங்கெங்கல்லாம் டெஸ்ட் நடக்குதுனு ஒரு ஐடியா கிடைச்சுரும்.

எங்க போனா சீக்கிரம் பாஸாகலாம் அப்படிங்கிற மாதிரி நிறையபேரு ஐடியா சொல்ல ஆரம்பிப்பாங்க.

நாலாவது தடவை பெயிலாகும்போது ஓமான் போலிஸ் பாரபட்சம் காட்டுறது மாதிரி தெரியும்.

ஐந்தாவது முறை நமக்கெல்லாம் எப்ப லைசென்ஸ் கிடைச்சு என்னிக்கு வண்டி ஓட்டுறதுனு ஒரு எண்ணம் வந்துரும்.

ஆறாவது முறை, ஏழாவது முறையெல்லாம் கடவுள் மேல பாரத்த போட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிருவீங்க.

இப்படி அடிக்கடி டெஸ்ட்டுக்கு ஓட்டி, ஓட்டி உங்களுக்கும் வண்டிய எப்படி ஓட்டுறதுன்னு ஐடியா கிடச்சிருக்கும். போலிஸ் பயமும் போயிருக்கும். நெறைய பேருக்கு போலிஸ் ஃபிரண்டே இருப்பாங்கன்னா பாத்துக்கங்க. அவ்வளவுதடவ அங்க வந்திருப்பாரு.. .. கே ஃபாலக் ஜெகொமார் (எப்படி இருக்கீங்க ஜெயக்குமார் என்பதன் அரபுத் திரிபு) அப்படின்னு அன்பா கேட்டுட்டு கரெக்டா பெயில் போடுவார். அப்புறம் ஒரு டெஸ்ட்டுல இவைங்க எங்க பாஸ் போடப் போறாய்ங்க அப்படினு வண்டி ஓட்டிட்டு டெஸ்ட் முடிஞ்சு இறங்குனு சொல்லும்போது உங்க ட்ரைவிங் புஸ்தகத்த போலிஸ் கையில குடுப்பார்.. அப்படின்னா..நான்..நான்.. பாஸ் ஆய்ட்டேனா அப்படினு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.. அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.

நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு. ஒவ்வொரு வாட்டி பெயிலாகும்போதும் இந்த ஊர் போலிஸ்காரங்க சரியில்லைனு அடுத்த ஊர் போயிருவாரு. ஓமானில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல ட்ரெயினிங் எடுத்துட்டு காஷ்மீர்ல டெஸ்ட் தர்றதுமாதிரி.

பொதுவா லஞ்சம் வாங்க மாட்டாங்க. வாஸ்தா எனப்படும் ரெகமெண்டேஷன்ல சிலருக்கு லைசென்ஸ் கிடைக்கும். ஆனால் அப்படி லைசென்ஸ் வாங்குவது சாவை வாங்குவதற்குச் சமம். இவ்வளவு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி தேர்வுகள் நடத்தி அதில் பாசாகும் ஆட்களே விபத்தில் விழும்போது, இப்படி ரெகமெண்டேஷனில் லைசென்ஸ் வாங்குவோர் தானும் சிக்கலில் மாட்டி பிறரையும் விபத்தில் மாட்டிவிடுவார்கள்.

அப்புறம் லைசென்ஸ் வாங்குன பின்னாடி அப்படியே காத்துல ஒரு வாரம் மெதப்பீங்க.. எல்லோரும் வாழ்த்துச் சொல்வாங்க. கம்பெனி ரொம்ப தாராளமா டபுள் கேபின் பிக்கப் குடுக்கும். பெட்ரோல் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஒரு வருடம் அனுபவித்த பின்னர் ட்ரைவிங் போரடித்து எப்படா பக்கத்துல உக்காந்துட்டு போவோம்னு ரொம்பப் பேருக்கு ஆயிரும். ஆனா எனக்கு மட்டும் இன்னிக்கு வரைக்கும் ட்ரைவிங்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுதுபோக்கு. நானும் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிட்டேன் ஓமான், கத்தார், துபாய்னு. இன்னும் எனக்கு ரொம்பப் பிடிச்சது இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது..

அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய கனடாவில் கார் அவசியம் படியுங்கள். மனுஷன் கலக்கியிருப்பார்.

13 comments:

ஆயில்யன் said...

//அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.//

ஐய்யய்யோ அன்னிக்கு ஃபுல்லா சிரிச்ச முகத்தோடயே திரிஞ்சுக்கிட்டிருந்தேன்னா பாருங்களேன்! :))))

//இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது..

ம்ம்ம் எனக்கும் இப்படி போகணும்ன்னு ஆசைதான் பட்ஷே இப்போதைக்கு வெயிட்டிங் லிஸ்ட்ல !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல நகைச்சுவையா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க ஜெகொமார் ;)

நன்றி.

பத்மகிஷோர் said...

//நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு//
மாசத்துக்கு ஒரு டெஸ்டுன்னாலும் 4 வருஷம் ஆச்சே... அடேயப்பா..

Sundar Padmanaban said...

அந்த அற்புத அனுபவத்தைப் பத்தி எழுதணும்னு எத்தனிச்சப்போ (எவ்ளோ நாளாச்சு இந்த வார்த்தையை உபயோகிச்சு!) அ.முத்துலிங்கம் எழுதினதைப் படிச்சேனா - அதைவிட என்னத்தை எழுதிவிட முடியும்னு ட்ராஃப்ட்லயே தூங்க விட்டுட்டேன்! :0

நல்லா எழுதிருக்கீரு. ஆனாலும் ரொம்ப தைரியம்யா உமக்கு. அ.மு. எழுதினதையும் கடைசில சுட்டி குடுத்திருக்கீரே. அதைச் சொல்லுதேன். ;-)

ரிவர்ஸ் டெஸ்ட் எடுக்கும்போது காலு உதறு உதறுன்னு தையல் மிஷினை ஓட்டறமாதிரி உதறும் பாருங்க. இன்னிக்கு நினைச்சாலும் உதறுது!. ஆனாலும் மூணே மாசத்துல ரெண்டாவது அட்டம்ட்லயே பாஸான ஆளாக்கும் நானு!

மஸ்கட்ல இப்படின்னா துபாய்ல இன்னும் கொடுமை! கஜினி முகமது மாதிரி வருஷக்கணக்கா படையெடுத்து தோத்தவங்க கொள்ளப் பேரு இருக்காய்ங்க. துபாய்ல லைசென்ஸ் எடுத்து என்ன சாதிக்கப் போறாய்ங்களோ. வண்டி எப்படியும் ரோட்ல எங்கிட்டாவது ட்ராஃபிக் ஜாம்ல நின்னுக்கிட்டேதான் இருக்கப் போவுது. இப்ப எப்டீன்னு தெரியலை.

கானகம் said...

வருகை புரிந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி, நண்பர்களே

Anonymous said...

ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.


i laughed a whole day by this dialogue

Easakimuthu said...

Hi super post , i am also in oman , now where r u. Please contact me at m.easakimuthu@gmail.com

வடுவூர் குமார் said...

இங்கு வ‌ரும் போதே முடிவு செய்திட்டேன்,இந்த‌ விளையாட்டெல்லாம் விளையாட‌க்கூடாது என்று.துபாய் க‌தைக‌ளை கேட்ட‌ பிற‌கு ப‌ண‌த்தை ஏன் இதில் வேஸ்ட் செய்ய‌னும்.எப்ப‌டியும் இன்னும் 10 நாள் இங்கு வாழ்கை.

Anonymous said...

i read ur blog completely today.and want to say u stole my day and made me this a different day.may god bless you

INGENIOUS DRIVING STANDARD ACADEMY said...

அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார்

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார்

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார்

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார்