Monday, August 30, 2010

அந்தம் தொடர் மற்றும் அகர முதல வலைப்பதிவு குறித்த எனது எண்ணங்கள்.

வற்றாயிருப்பு சுந்தர்..

அகர முதல என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர்.

தற்போது காணாமல் போய்விட்ட மரத்தடி.டாட்.காமில் தீவிரமாக இயங்கியவர்.
குற்றுயிரும், கொலைஉயிருமாய் இன்றிருக்கும் மரத்தடி குழுவின் உறுப்பினராய் இருப்பவர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர விசிறி. எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் அவருக்குப் பிடித்த பாடல்களை வரிசையாக பாடல் வரிகளுடன் பாடும் நிலா பாலு என்ற வலைத்தளத்தில் வலையேற்றுபவர்.

நல்ல புகைப்படக் கலைஞர்.

கவிப்பகைவர்களுக்கு எமன். ( நிறைய கவிதைகள் எழுதுவார் சார்)

மிகச் சிறந்த மனிதாபிமானி.

தீவிர இலக்கிய வாசிப்பும் அதைப்பற்றிய தனது கருத்தை பதிவும் செய்பவர். ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் பற்றி சில குறிப்புகள் என 5 பாகங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்தவர். கிட்டத்தட்ட அந்தக் கதையை திறனாய்வு செய்தவர்.

சுஜாதா, சுரா மற்றும் ஜெயமோகனின் தீவிர விசிறி.

நாட்டுப்பற்றும், சமூகக்கவலையும் கொள்பவர்.

ஆபிதின் கதைகளை ரசிப்பவர்.
சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளைத் திருடி தனது என உரிமைகொண்டாடியதைக் கண்டபின் சாருவை முழுதுமாய் வெறுத்தவர். தற்போது எப்படி எனத் தெரியவில்லை..

எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்கிறீர்களா?

எனக்குப் பிடித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதி வருவதில் இவரது அகர முதல வலைப்பூ வை அறிமுகம் செய்யவே இப்பதிவு.

2004ல் இருந்து வலைப்பதிவு எழுதினாலும் 200க்கும் குறைவான பதிவுகளே எழுதியிருக்கிறார். தரத்திற்கு அவர் காட்டும் முக்கியத்துவம் காரணமாயிருக்கலாம்.

மரத்தடி, ராயர் காபி கிளப், அகத்தியர், பொன்னியின் செல்வன், தமிழ் உலகம் போன்று இன்னும்பல இணைய குழுக்களில் முக்கிய பங்காற்றுபவர்.

அவர் எழுதிய அந்தம் என்ற தொடரை 2004 வாக்கில் படித்து விட்டேன். இன்றுவரை என் மனதை விட்டு அகலாத ஒரு கதை இருக்கிறதென்றால் அது அந்தம் மட்டுமே. நினைக்கும்தோறும் மனதில் மிக அருமையான உணர்வை அளிக்கும். கிட்டத்தட்ட நான் அனுபவிக்க விரும்பிய வாழ்க்கை அது. கணவன் மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் நிலாவைப் போன்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம். கதையைச் சுருக்கமாகச் சொன்னால், தற்போது தொலைக்காட்சித் தொடர்களுக்கு தீனியாகும் விஷயம்தான்.. கல்யாணமான ஒரு பெண்ணுடன் மலரும் காதலும், இறுதியில் கதாநாயகியின் கணவன் வந்ததும் இருவரும் பிரிவதும்தான் மொத்தக் கதை. மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் தனது ஞாபகங்களைத் திரும்பிப் பார்ப்பதுபோல சொல்லப்படுகிறது கதை.

தனது முதல் கதை இது எனச் சொல்கிறார் சுந்தர். ஆனால் நல்ல சரளமான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார். 2004ல் இத்தொடரைப் பற்றி அவரைப் பாராட்டி எழுதிய மின் மடல்கள் ஞாபகம் வருகிறது. அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை அதுதான் இந்தக்கதை இவ்வளவு பிடித்துப்போக காரணமோ? பல லாஜிக் ஓட்டைகள் கொண்ட இத்தொடரை இப்போது படித்தால் அபத்தமாக தெரிகிறது. ஆனாலும் இன்றுவரை என் மனதிற்கு நெருக்கமான காதல் கதை.

2004ல் இருந்து இக்கதையைப்பற்றிய எனது எண்னத்தைப் பதிவு செய்துவிட வேஎண்டும் என நினைத்து முடியாமல், இன்று கைகூடியிருக்கிறது. :-) கிறுக்குத் தெளிந்தபின் ?

2008 - 2009ல் 11 பாகங்களாக இவர் எழுதிய மூன்று வருடங்களூக்குப் பிறகு என்ற தொடர் தென்றல் இதழில் வந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஊருக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. இத்தொடர் நம்மை நாமே திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதையும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் விளைநிலங்களின் ஆக்கிரமிப்பு பற்றியும், கோவில்களிலும், பொது இடங்களிலும் பொது மக்களுக்கு சமூகபிரக்ஞை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நடந்து கொள்வதையும் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.

ரஜினி என்ற ஆளுமையுடனான அவரது சில சந்திப்புகளையும், ரஜினி பெப்சியை மதுரையில் வெளியிட்டதைக் குறித்தும் அவரது பதிவு இது. என்ன பிரமாதம் இது என்கிறீர்களா? சுந்தர் தீவிர கமல் விசிறி.

எந்த நடிகனின் பின்னால் செல்லும் சினிமா ரசிகர்கள் செய்கிற கிறுக்குத்தனங்களையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார்


சுந்தர் ஒரு நல்ல கவிஞரும்,கூட..(அ)கவிதைகள் என்ற வலைத்தளத்தில் கவிதைகள் எழுதுகிறார். அவரது கவிதைகளில் ஒற்றை இறகும் துயிலும் என்னை மிகவும் கவர்ந்தவை.

புகைப்படங்களை ராஜபார்வை என்ற வலைத்தளத்தில் பதிகிறார்.

அவரது வலைப்பதிவுகள் குறித்து அவரே தரும் வாக்குமூலம் கீழே...


*அகரமுதல* - இது கிட்டத்தட்ட எனது டைரிக்குறிப்புகள் போன்ற (முதல்) வலைப்பதிவு.
*ராஜபார்வை* -நான் எடுத்த புகைப்படங்களுக்கான வலைப்பதிவு
*அகவிதைகள்* - கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களுக்கான வலைப்பதிவு.

இவரது குறையாக நான் நினைப்பது நினைவலைகள் என்ற பெயரில் கொசுவத்தி சுற்றுவதுதான். சுவையாகத்தான் இருக்கிறது என்றாலும் மிக அதிகமாய் கொசுவத்தி சுற்றிவிட்டார்.

சுந்தர், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். என்னைக் கவர்ந்த நல்ல வலைப்பதிவுகளின் வரிசையில் இது இரண்டாவது. அவரது வலைப்பதிவில் தற்போது நிறைய எழுதுவதில்லை. நிறைய எழுதுங்கள் சுந்தர் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

வயதானாலும்,( :-) ) மனதில் என்றும் இளமையாய் இருக்கும் வற்றாயிருப்பு சுந்தருக்கு வாழ்த்துக்கள்.

2 comments:

Anonymous said...

//ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் பற்றி சில குறிப்புகள் என 5 பாகங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்தவர்.//
ஜே.ஜே. சில குறிப்புகள் என்று படித்ததாக ஞாபகம்.சுந்தரராமசாமி ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றிதான் எழுதினார்.ஜெ.ஜெயலலிதாவைப் பற்றி அல்ல.
:))
பிரகாஷ்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

அன்பின் ஜெயகுமார்

விரிவான, நாணப்பட வைக்கும் அறிமுகம் - நன்றி. பெரும்பாலான விபரங்கள் சரியாக இருக்கின்றன - ஒன்றே ஒன்றைத் தவிர!

//சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளைத் திருடி தனது என உரிமைகொண்டாடியதைக் கண்டபின் சாருவை முழுதுமாய் வெறுத்தவர். //

சாரு திருடினாரா இல்லையா என்பதைப்பற்றி எனக்குத் தெரியாது. அவரை நான் வெறுக்கவே இல்லை. இன்னும் அவரது இணையதளத்திற்கு தினமும் சென்று அவரது பதிவுகளைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

அந்தப் பத்தியைப் படித்தபின் ”நான் யாரை வெறுக்கிறேன்?” என்று ஒரு கேள்வி தீடீரென எழ எவ்வளவோ யோசித்தும் என்னால் வெறுக்கப்படுபவர் யாரும் இவ்வுலகில் இல்லை என்றுதான் தோன்றியது. என்னால் யாரையும் வெறுக்கவே முடியாது. பிடிக்காதவற்றிலிருந்து, பிடிக்காதவர்களிலிருந்து விலகிப் போவதே என் சுபாவம் - யாரையும் எதையும் வெறுக்கமாட்டேன்.

அப்புறம் ஒரு விஷயம். மறுபடியும் “அந்தம்“ கதையை முழுவதும் படித்தேன் :-)). கல்யாணத்திற்கு முன்பு நீங்கள் படித்து மயங்கி அப்புறம் தெளிந்ததெல்லாம் சரிதான். நான் எழுதியதே கல்யாணமாகி எட்டு வருடங்கள் கழித்துத்தானே ஐயா :-))

அப்புறம் அனானி சொன்னது மாதிரி. ஜெ.ஜெ. சில குறிப்புகள் என்று நான் எழுதினால்தான் உண்டு. எதிர்கட்சியாக இருந்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வரும் அபாயம் இன்னும் இருப்பதால் அதையெல்லாம் எழுதுவதாக உத்தேசம் இல்லை. ஜே.ஜே.சில குறிப்புகள்! இன்னொரு முறை படிக்க வேண்டும். அது ஒரு அனுபவம்.

மறுபடியும் நன்றி.