Saturday, August 28, 2010

சொல்வனம் இதழ் 32 குறித்து எனது எண்ணங்கள்.

சொல்வனம் இலக்கிய இணைய இதழ் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இதழும் அதன் முந்தைய இதழை முந்திச் செல்கிறது தரத்திலும், உள்ளடக்கத்திலும். 23.08.2010 தேதியிட்ட சொல்வனத்தின் 32 வது இதழ் குறித்த எண்ணங்கள் கீழே

இந்த இதழும் வழக்கம்போல அருமை.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக் கட்டுரை ராஜனின் எழுத்துத் திறமையின் பல பரிமானங்களை உனர்த்துகிறது. படிக்கப் படிக்க கட்டுரையின் உள்ளேயே இழுத்துச் சென்றுவிடுகிறது கட்டுரை. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து சந்திரசேகரின் கட்டுரை இந்திய விளையாட்டுத்துறையின் லட்சனத்தை தோலுரிக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற ஒன்று இந்த ஊழல்குறித்து ஏதும் செய்யாமல் இருப்பது, நாட்டின் மானத்தைவிட தனிப்பட்ட அரசியல்வாதிதான் முக்கியம் என்பது போல நடந்துகொள்வது அப்பட்டமாய் தெரிகிறது. ஒரு இந்தியனாய் மிக்க வருத்தமாய் உணர்கிறேன். நாட்டின் கௌரவத்துக்காக நடத்தப்படும் ( அவர்கள் சொல்லிக்கொள்வது போல) இந்த விளையாட்டுப்போட்டியிலேயே இவ்வளவு லஞ்சமும், ஊழலும் மோசமாய் தலைவிரித்தாடும் என நினைக்கவேயில்லை. அதிலும் நமது நாட்டின் கௌரவத்தையே அடகுவைத்துவிட்டு ஊழல் செய்யும் கல்மாதி போன்றவர்களைக்கூட நமது சட்டம் தண்டிக்காதெனில் மத்தியஅரசைப்பற்றி சாதாரன மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஆவுடை அக்காள் பாடல் திரட்டு குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை அருமை. பாரதிக்கு முன்னோடி மட்டுமின்றி, பாரதியின் கருத்துக்கள் ஆவுடை அக்காளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது என்ற ஒப்புமையும் புதிய தகவல். எப்போது எழுதினார் என்பதே தெரியாத அளவு பழமையான காலமாக இருந்தாலும் அக்காளின் கருத்துக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருப்பது நாஞ்சில நாடன் எடுத்துக்கட்டியுள்ள பாடல் வரிகளில் தெரிகிறது. இதுபோன்ற அடையாளம் அற்றுப்போன, அல்லது மறக்கப்பட்டுவிட்ட நமது மூதாதையர்களை எடுத்துக்காட்டும் நாஞ்சில் நாடனின் எழுத்து பாராட்டுக்குரியது.

துப்பு - சுகாவின் இன்னொரு அருமையான அனுபவக்கட்டுரை. அவர் சொல்லும் ”எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம்.’’ என்ற வரிகள்தான் இப்போதும் எத்தனைப் பொருத்தம். காலம் கடந்த பின்னர் இழந்ததை நினைத்து வருந்திப் பயன் என்ன? எத்தனை எத்தனை அண்ணன், தம்பிகள், அப்பா, மகன்கள் காலம் போடும் இந்தக் கண்ணாமூச்சியில் சிக்கி வாழ்க்கையின் நல்ல தருணங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்களோ? மொத்தக் கட்டுரையில் இந்த ஒரு வரி எவ்வளவு பெரிய உண்மையை சர்வசாதாரனமாய் சொல்லிச் செல்கிறது?

முதல் முறையாய் ராராவின் கார்டூன் சுமாருக்கும் கீழே வந்திருக்கிறது. வழக்கமாய் அவரது படங்கள் இன்றைய குழந்தைகளின் புத்திசாலினத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கும். இம்முறை குமுதத்தில் வரும் ஜோக் போலாகிவிட்டது.

சூப்பர் பக் குறித்த ராமன் ராஜாவின் கட்டுரை பயந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல். வெளிநாட்டவர் ஏன் இப்படி நம்மீது பாய்கிறர்கள் என்பதற்கு

// சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி//

இதுதான் காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். மேலும் வெளிநாட்டு ஆஸ்பத்திரின்னா எப்படித் தெரியுமா எனப் படம் போட்டவர்களுக்கு அங்கு கிடைக்கும் இலவச கிருமிகள் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

இன்னும் ஒரு அருமையான இதழ் சொல்வனழ் இதழ் 32.

1 comment:

பாஸ்கர் said...

குறைகளையும் சொல்லுங்க சார். அப்பதானே எழுதறவங்க இம்ப்ரூவ் பண்ணி இன்னும் நல்லா எழுதுவாங்க, அவங்க ஆசிரியர் குழுவும் உஷாரா இருப்பாங்க?

'அருமை'யான பதிவு :)