எனது நண்பர் டாக்டர் பிரகாஷ் பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்போதும் புத்தகமும், கையுமாய் இருப்பார். 10ம் வகுப்பு படிக்கும்போதே வெளிநாட்டுக்கு போவது எப்படி என்ற புத்தகத்தை வாங்கியவர். ஆனால் இரவல்வாங்கிப் படித்த நான் முதலில் வெளிநாடு வந்தேன். அதன் பின்னர் அவர் பல வெளிநாடு சுற்றுலாக்கள் சென்று வந்தார்.
என்னைவிட ஓராண்டு சிறிய அவரை எப்போதும் “ஏண்டா இப்படி புத்தகம் படிச்சு வீணாப்போற” என ரோட்டைத் தேய்ப்பதையே பொழுதுபோக்காய் கொண்ட நான் கிண்டல் செய்வதுண்டு. அவர் கோபப் படாமல் அண்ணே, படிச்சிப்பாருங்கண்ணே என எனக்கு புத்தகம் என்ற உலகினுள் கைபிடித்து அழைத்துச் சென்றார். வாசிக்க ஆரம்பித்த உடனேயே தீப்பிடித்ததுபோல படிக்க ஆரம்பித்து விட்டேன். யாரோ ஒருவர் வந்து இவ்வுலகை காண்பிப்பதற்காக காத்திருந்ததுபோல..
எங்களூரின் வாசக சாலையில் இருக்கும் பெருவாரியான புத்தகங்களை சில மாதங்களிலேயே வாசித்து விட்டேன். நூலகரோடு இருந்த நல்ல நட்பு எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்கும், பிரகாஷுக்கும் கிடைப்பதுபோல பார்த்துக்கொள்வார். சுற்றுக்குச் சென்றிருந்தால் வந்த உடன் அப்புத்தகத்தை எங்களுக்காக அவரது மேஜையிலேயே எடுத்துவைத்திருந்து கொடுப்பார். அவ்வளவுதூரம் எங்கள் மீது அன்பு அவருக்கு. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தனியாளாக கஷ்டப்படும் அவருக்கு புத்தகங்கள் அடுக்கிக் கொடுப்பது. ஆடிட்டிங் சமயத்தில் புத்தகங்களுக்கு வரிசை எண் இட்டு கொடுப்பது என எல்லாம் செய்வோம்.
கொஞ்சம் வளர்ந்து பெரியவர்களானதும் அதாகப்பட்டது 12ம் வகுப்பு பரீட்சையைத் தொடும் நேரத்தில் மதுரையின் டவுன் ஹால் ரோடு மற்றும் சர்வோதைய இலக்கியப் பண்ணை ( மேல வெளி வீதி) நடைபாதை புத்தகக்கடைகளில் புத்தகம் தேடப்பழகியிருந்தோம். எனக்கும் எனது நண்பனுக்கும் நட்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட கடைகளில் புத்தகம் வாங்குவது மிகப் பிடித்தமான விஷயம். அவனது அம்மா புத்தகம் வாங்க எனக் கேட்டலும் காசு தரக்கூடியவர். எங்கள் வீட்டின் உறுப்பினர்களை மனதில் கொண்டால் புத்தகம் வாங்குதல் அதுவும் காசுகுடுத்து புத்தகம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஆடம்பரம். எனவே இவரது புத்தகங்கள்தான் எனக்கும்.
இதுதவிர அதிருஷ்டவசமாய் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கிடைக்கும் காசுகளையும் சேமித்து இப்படி பழைய புத்தகக் கடைகளில் அப்போது அதிகம் வாசித்த பாலகுமாரன் புத்தகங்கள் வாங்குவோம்.
பின்னர் பல்கலையில் சேர்ந்த உடனே காந்திகிராமப் பல்கலையின் கல்லூரி வாசக சாலையின் உறுப்பினரானோம். அது எங்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷத்திற்கு சொந்தக்காரர்கள்போல எங்களை உணர வைத்தது. ஓராண்டு அக்கல்லூரியில் படித்த காலத்தில் ( பின்னர் காலநடை மருத்துவம் படிக்க நாமக்கல் புறப்பட்டு விட்டார் டாக்டர் பிரகாஷ்) எங்களின் மாலை நேர பொழுதுபோக்கே பல்கலையின் வாசகசாலையை புரட்டி எடுப்பதும், அப்போது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்து திண்டுக்கல் - மதுரை அகல ரயில்பாதையில் சில கிலோமீட்டர்கள் நடந்து வருவதும்தான். மாலையில் வைகை எக்ஸ்பிரஸ் எங்கள் காலடியின் கீழே ஓடுவதைப் பார்ப்பது ஒரு தனிசுகம். அகலரயில்பாதை மீட்டர்கேஜிலிருந்து கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்திலிருந்தது.
கல்லூரிப் பாடங்களை எல்லாம் ஊறுகாய் போல படிக்க ஆரம்பித்திருந்தோம். எப்போது பார்த்தாலும் லைப்ரரி வாசம், ஓஷோவும், பாலகுமாரனும் கிறுக்குப் பிடிக்க வைத்தார்கள். சொல்லி வைத்தாற்போல எங்களின் இன்னொரு நண்பன் கண்ணனும் பாலகுமாரனின் வெறியன். அவனும் ஏகப்பட்ட புத்தகங்கள் கொண்டுவருவான்.
பல்கலைக்கழக லைபரரியில் விவசாய மாணவர்களை புத்தகம் தொட விடமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் அண்ணன்மாரும் லைப்ரரியில் இருந்து படிக்க எடுத்துச் செல்லும் புத்தகங்களின் சில பக்கங்களை படிப்பதற்காக கிழித்து வைத்துக் கொள்ளும் நல்ல குணங்களைப் பெற்றிருந்ததும் எங்களுக்கு இருந்த இத்தடைக்குக் காரணம். அப்புறம் நூலகர் மனதை மாற்றி, சண்டையும் இட்டு நாங்கள் உண்மையான வாசகர்கள்தான் என நிரூபித்த பின்னரே நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் எங்களுக்காக திறந்தது. பிரிட்டானிக்க என்சைக்ளொபீடியாவெல்லாம் கண்ணால் பார்த்தது அங்கேதான். கிட்டத்தட்ட 20 வால்யூம்கள். அங்கே படித்த இரு ஆண்டுகளில் 10 வால்யூம்களை முழுதாய் வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். அதன் பின்னர் எனது வாசிக்கும் ஆர்வம் வெறித்தனமாய் வளர்ந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. வெளிமாநிலத்தில் வேலைக்குச் என்றபோதும் தமிழ் புத்தகம் விற்கும் கடைகளை கண்டுபிடிப்பதே எனது முதல் வேலையாகக் கொள்வேன். எனது ஒரு பிறந்த நாளுக்கு எனது அண்ணியிடமிருந்து பரிசாக ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைக் கேட்டு வாங்கினேன். நிறைய எழுத்துப் பிழைகளுடன் கூடிய முதல் பதிப்பு. 250 ரூபாய்கள். எனது அண்ணிக்கு இதில் என்ன இருக்கிறது என நினைத்தாலும், எனக்காக வாங்கிக் கொடுத்தார். இவ்வளவு அதிக பட்ச விலையில் புத்தகம் வாங்கியது அப்போதுதான். இப்போதெல்லாம் ஆண்டிற்கு 4000 முதல் 5000 வரை புத்தகங்களுக்கு செலவழிக்கிறேன். எனது மனைவியும் புத்தகப்பிரியை அதனால் சண்டை ஏதுமின்றியும், முனுமுனுப்பின்றியும் புத்தகம் வாங்க முடிகிறது. இங்கேயே கிட்டத்தட்ட 200 புஸ்தகங்கள் வரை வைத்திருக்கிறேன்.
இப்படியாக வளர்ந்தது எனது படிக்கும் ஆர்வம். இப்போது கிட்டத்தட்ட எழுத்து வடிவில் என்ன இருந்தாலும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வெளிநாடு சென்ற பின்னர் நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தேடித்தேடி புத்தகம் வாங்குவது எல்லாம் குறைந்துபோய் வாய்ப்புக் கிடைக்கும்போது மட்டுமே வாங்கமுடிகிறது.
திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியுடன் ஒரு முன் மதிய நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அலசி ஒரு 5 புத்தகங்கள் வாங்கியதும் பின்னர் 2009ம் ஆண்டு விடுமுறையில் சர்வோதய இலக்கியப் பண்ணையில் நிறைய நேரம் செலவழித்து புத்தகம் வாங்கியதும் இனிமையான அனுபவங்கள்.
புத்தகம் படித்தல் என்ற அருமையான பழக்கத்தை அறிமுகம் செய்து எனது வாழ்க்கையை மடைமாற்றிவிட்டதில் எனது நண்பன் பிரகாஷுக்கு மிக முக்கிய பங்குண்டு. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஒரு நன்றி.
புத்தகம் படித்தல் என்ற அருமையான பழக்கத்தை அறிமுகம் செய்து எனது வாழ்க்கையை மடைமாற்றிவிட்டதில் எனது நண்பன் பிரகாஷுக்கு மிக முக்கிய பங்குண்டு. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஒரு நன்றி.
6 comments:
மிக்க நன்றி! எனது புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு மேலும் ஊக்கம் கொடுப்பதாக இருந்தது! உங்களது எல்லா கட்டுரைகளையும் படித்தாலும் கருத்து பதிவு செய்ய முடிவதில்லை! நன்றி!
நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பதே ஒரு கலை தானுங்க மாம்ஸ்:)
வாழ்த்துக்கள்:)
snkm மற்றும் நண்பர் ரசிகனுக்கு வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நல்ல நண்பரும் நல்ல பழக்கமும் (புத்தகம் வாசிப்பது உள்பட ) கிடைப்பதே வரம்ங்க...... வாழ்த்துக்கள்!
பாத்ரூம்ல படிக்கற பழக்கம் உங்களுக்குமா.. :)
Post a Comment