Sunday, January 4, 2009

ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை ( Shall we dance - 2004)




ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை


2004ல் வெளிவந்த சினிமா இது.. இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது.
நிறைவான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு ( ரிச்சர்ட் கேர்) இன்னும் எதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது. அதை கண்டடையும் ஒருவனது வாழ்க்கையே ஷல் வி டான்ஸ் என்ற இந்த ஆங்கில திரைப்படம்.

மனைவு மற்றும் மகளுடன் வாழும் கதாநாயகனுக்கு தினமும் வேலைக்குச் செல்லுதல், வீடு திரும்புதல் இந்த தொடர் ஓட்டம் போரடிக்கிறது. சுவாரசியமாய் எதாவது செய்ய விரும்புகிறான், தினமும் ரயிலில் சென்று வரும் பாதையில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி தென்படுகிறது. அதில் ஒரு சோகமான முகமும் தென்படும். நாயகனும், அந்த சோகமான முகம் கொண்டவளும் ( Jenifer Lopez) தினமும் கண்களால் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த பால் ரூம் டான்சை ஏன் நாம் கற்றுக்கொள்ளக்கூடாது என நினைக்கிறான். இணையத்தில் இந்த நடனம் கற்றுக்கொடுக்கும் பள்ளியை தேடி பின்னர் தான் தினமும் போகும் வழியில் காணும் பள்ளியிலேயே சேர்கிறான்.

அந்தப் பள்ளியில் சேர்ந்த உடனேயே ஒரு மாணவனின் குதூகலம் தொற்றிக்கொள்கிறது. அலுவலகத்திலும் அவனது கால்கள் நடனமிடுகிறது. அங்கு நடனம் கற்றுத்தரும் பள்ளியில் வேலைசெய்யும் பாலினா ( Jenifer Lopez) உடன் சகஜமாக உரையாட நினைக்கிறான். ஆனால அவளோ நாயகனை எட்டவே வைக்கிறாள். மாணவர்களுடன் சோஷியலைஸ் செய்வதில்லை என்கிறாள். அவளுக்கு பெரிய நடனப்போட்டியில் கலந்து கொண்டு தகுதி சுற்றுக்குக் கூட வரமுடியாமல் போன சோகத்துடன் எப்போதும் இருக்கிறாள். இதை நாயகனுக்கு எழுதும் ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறாள் கடைசியில்.

இந்த இடைவெளியில் ம்னைவி பெவெர்லி க்ளார்க் ( Susan Sarandon) கணவன் மீது சந்தேகம் வருகிறது. எங்கு செல்கிறான்?? என் தற்போது ஒருமாதிரியாக நடந்து கொள்கிறான் என்ற சந்தேகத்திற்கு விடைகான உளவு நிறுவனத்தை அணுகி உதவி கேட்கிறாள். அவர்களும் நாயகனைப் பின்தொடர்ந்து அவன் நடனப்பள்ளியில் சேர்ந்திருப்பதையும், வேறு ஒரு சிக்கலும் இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். நடனப்பள்ளியில் தனது கணவன் சேர்ந்திருப்பதை நம்ப முடியாமல் என்ன காரணமாய் இருக்கும் என கேட்கிறாள். Desperation தான் காரணம் என தெரிகிறது.

தன்னிடம் கூட கூறாமல் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன என அவள் குழம்புகிறாள்.
இப்படியே போகிறது. ஒருநாள் நடனப்பள்ளிகளுக்கு இடையேயான பால்ரூம் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்கிறான் நமது நாயகன். மிக சிறப்பாக நடனமாடுகிறான். அங்கு நாயகனது மனைவியும், மகளும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். ஆர்வமிகுதியில் அவனது மகள் அவனது போட்டி என்னை சத்தமாக கூறி கவனத்தை ஈர்க்கிறாள். இதனால் கவனம் சிதறும் நாயகன் போட்டியில் தோற்கிறான். இதனிடையில் என்னிடம் என் கூறவில்லை என மனைவியும் கடிந்துகொள்கிறாள். சரி, இனிமேல் நான் இந்த நடனம் கற்றுக்கொள்ள போகவில்லை எனக் கூறிவிடுகிறான்.

இதனிடையில் நடனம் கற்றுக்கொடுத்த பள்ளியில் இருந்த ஆசிரியை பாலினா ( Jenifer Lopez) நடனத்தில் மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்கிறாள். . அதற்கான பிரிவு உபச்சார விழாவில் உங்களுடன் நடனமாட விரும்புகிறேன்.. வருவீர்களா என கேட்டு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்புகிறாள். அதைப்படிக்கும் நாயகனின் மனைவி உண்மையைப் புரிந்துகொண்டு கணவனுடன் அங்கு செல்கிறாள். அங்கு அவளது கணவன் எவ்வளவு உற்சாகமாக் இருக்கிறான் எனக் காண்கிறாள். அவளுக்கும் ஆவல் தொற்றிக்கொள்கிறது. அவளும் அந்த பள்ளியில் சேர்வதுடன் படம் நிறைவுறுகிறது.

இந்த படத்தில் பின்னணி இசையாக வரும் பால்ரூம் டான்சுக்கான இசை அப்படியே மனதை அள்ளுகிறது. ஒரு தெளிந்த நீரோடையைப்போல நகர்கிறது கதை.

நடனப்பள்ளியில் நடன ஆசிரியையாக வரும் ஜெனிபர் லோபசுக்கும், ரிச்சர்டு கெரெவுக்கும் இருக்கும் அந்த நட்புகலந்த உணர்வுகளும் அவர்களது ஒத்த என்ன அலைவரிசையில் இருவரும் இணைந்து ஆடும் நடனங்கள் அழகோ அழகு. நாமும் அங்கு சென்று ஆடமாட்டோமா என நினைக்கவைக்கிறது அங்கு இருக்கும் சூழ்நிலையும், நட்புகளும்.
தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டு வாழும் ஜெனிபர் லோபஸ் மெல்ல மெல்ல க்ளார்க்கின் கல்மிஷமில்லாத உண்மையான நட்பைக்கண்டு அவனுடன் நட்புகொள்கிறாள். க்ளார்க்கிடம் முதலில் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறாள்.
நடனப்பள்ளியில் அவனது உடன் படிக்கும் மாணவர்களாக ஒரு குண்டுப்பையனும் நடிக்கிறான். அவனுக்கும் அவனது ஆசிரியைக்குமான உறவுகள், அவனை அவனது உடல் வேர்வை நாற்றத்திற்க்காக வெறுக்கும் அவனது ஆசிரியை பின்னர் அவனது நிலையைக்கண்டு அவனுக்கு சொல்லித்தருகிறாள்.

இன்னும் மகளாக நடித்திருக்கும் பெண் தனது அப்பா அறைக்குள் நடனம் ஆடுவது கண்டு ஆச்சரியப்படுகிறாள். அம்மாவிடம் தெரிவிக்கிறாள்.

ஆங்கில சினிமாவில் வழக்கமாக காணும் அடிதடி காட்சிகளோ, அனாவசியமான முத்தக்காட்சிகளோ இல்லாத அருமையான உறவு முறையையும், நல்ல நட்புகளையும், அழகான இசையும் கொண்டுள்ள ஷல் வி டான்சை ஒரு கவிதை என நான் நினைக்கிறேன்.
மனதின் நுண்ணிய உணர்வுகளை இந்த திரைப்படத்தில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்.


ரிச்சர்டு கெரெயை தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். நம்மூர் ஷில்பா ஷெட்டியை மேடையில் முத்தமிட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டவர். புத்த மதத்தை தழுவியவர்.

ஜெயக்குமார்

1 comment:

ஹரன்பிரசன்னா said...

you wrote a post? Really shocking. Pl do NOT keep it up!!!