Sunday, January 25, 2009

நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்


நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்

சின்ன வயதில் என்னை அதிக பயத்துக்குள்ளாக்கிய பேய்க்கதை இது. வசனம், இயக்கம், எல்லாம் எனது அண்ணன்.

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் காரைக்கேணி. அந்த ஊருக்கு எப்போதும் சைக்கிளிலும், நடையிலுமாக ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பாதையில் எங்குமே விளக்குகள் இருக்காது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த முத்தையா அண்ணாச்சி இரவு காரைக்கேணியிலிருந்து கல்லுப்பட்டிக்கு வரும் வழியில் யாரோ பின்னால் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டதுபோல இருந்ததாம்.. ஏய் யாருப்பா அது, யாருப்பா அதுன்னு முத்தையா அண்ணாச்சி கத்திக்கிட்டே வேக வேகமா அழுத்திகிட்டு கல்லுப்பட்டி எல்லை வரைக்கும் வந்துருக்காரு. அப்புறமா கொஞ்சம் வெளிச்சம் உள்ள் இடம் வந்த உடனே திரும்பிப் பாத்தா யாரையும் கானல.. ஆனா, ஒரு மொரட்டு ஆள வச்சு மிதிச்சிகிட்டு வந்த மாதிரி இருந்திருக்கு அவருக்கு... அப்புறம்தான் தெரிஞ்சிச்சி அங்க பேய் நடமாட்டம் இருக்குமாம்...அதுக்கப்புறம் ராத்திரி ரொம்ப நேரம் ஆச்சிருச்சின்னா எங்க வீட்லையே இல்லன்னா வேற எங்கையாச்சும் படுத்துட்டு கோழிகூப்ட ஊருக்குப் போவாரு. இத முத்தையா அண்ணாச்சியும் எங்கிட்ட சொல்லி இருக்காரு..

அதுக்கப்புறம் இதே மாதிரி இன்னோரு கதையக் கேட்டேன்.. இப்பையும் எங்கண்ணந்தான் இந்தக் கதையச் சொன்னாரு..

யாரோ ஒரு ஆளு ராத்திரி பதினோருமனிவாக்குல சைக்கிள்ள போய்க்கிட்டே இருந்திருக்காரு.. அப்ப அண்ணே பின்னாடி ஏறிக்கிரட்டுமா அப்படின்னு கேக்க இவரும் சரிப்பான்னுட்டாரு.. அப்புறம் பின்னாடி இருந்த ஆளு அண்ணே கடல சாப்பிடுறீங்களான்னு கேட்டு சைக்கிள் ஓட்றவருக்கு குடுத்துருக்காரு. கையில பாத்தா எல்லாமே மனுசப்பல்லு.. அய்யோன்னு கத்திக்கிட்டே திரும்பிப் பாத்திருக்காரு.. சைக்கிள் பின்னாடி யாருமே இல்ல.. கையிலையும் மனுசப்பல்லைக் காணோம்.

இது தவிர,

எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டு சந்துல லச்சுமின்னு ஒரு பேய் சுத்திகிட்டு இருக்கு ராத்திரி அது போற வழியில படுத்தா அப்படியே தூக்கி வீசிரும்,

கெனத்துக்குள்ள ஒரு சின்னப்புள்ள தினமும் இறங்கிப் போகுது.. அது பக்கத்துல இருக்குற புளிய மரத்துல இருந்துதான் வருது...

இதுமாதிரி எங்க ஊர்ல கேக்காத பேய்க்கதையே இல்ல.. அவ்வளவு கேட்ருக்கேன்.


ஜெயமோகனின் பன்முக ஆளுமை மற்றும் எழுத்தில் அவரது வீச்சு குறித்த விரிவான அலசல் திரு.வெங்கட் சாமிநாதன் முதல் நேற்றைய வலைப்பதிவர்கள் வரை அலசப்பட்டு விட்டது. புதிதாய் சொல்ல ஏதுமில்லை, நமது காலகட்டத்தில் வாழ்கின்ற ஒரு இலக்கிய மற்றும் பன்முக ஆளுமை என்பதைத்தவிர. அவரது சமீபத்திய கதைகளான , மத்தகம், ஊமைச் செந்நாய், அனல்காற்று தொடர், மற்றும் பல கதைகளும், கட்டுரைகளும் அவரது வலை வாசிப்பாளர்களுக்காகவே எழுதியவை. அழகான நடையுடன், வாசிப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வை அளிப்பவை அவரது கட்டுரைகளும், கதைகளும், நாவல்களும். அவர் எழுதி வாசிக்காமல் விட்டவை பல.. உண்மையில் அவரது எழுத்து வேகத்துக்கு வாசிப்பாளனால் ஈடு கொடுக்க முடியாது என்பது அவரது வலைப்பதிவை வாசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். அவ்வளவு விஷயங்கள் நமக்குச் சொல்ல வைத்திருக்கிறார் ஜெயமோகன், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்.

அந்த வகையில் இந்த நிழல் வெளிக்கதைகளும் இன்னொரு வகையான இனிமையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு.

பேய்க்கதை அரசன் பி.டி சாமி என்றொரு ஆசாமி இருந்தார். அவருக்குப்பின்னர் பேய்க்கதைகளை படிக்கும் பழக்கத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வைத்திருந்தேன். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி தற்போது படித்து முடித்த நிழல்வெளி கதைகள் பற்றி எனது எண்ணங்கள்..

இயக்குனர் லோகிததாசுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகம் ஒரு அருமையான பேய்க் கதைகளின் தொகுப்பு.

இமையோன் என்ற கதையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாபமிடப்பட்ட அரசகுலப் பெண்ணின் தீராத மோகம் தான் கரு. வாழ்க்கையில் தீராத ஆசைகள் கொண்ட ஒரு ஆன்மா தனது ஆசைகள் அடங்கும் வரை ஆவியாய் அலையும் என்ற நமது புராதன நம்பிக்கைதான் கதைக் களன். அதைப் பலவித சூழ்நிலைகளுடனும், உள்ளூரில் புழங்கும் செவி வழிக்கதையிலும் புகுத்தி சிறந்ததொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

வர்ணனைகளும், சூழலும், கதை மாந்தர்களும், எல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றமும், கதை சொல்லும் விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள எளிமை படிப்பதை நம்பும்படியாக்குகிறது. அதாவது பேய் இருக்கிறது என நம்புவோருக்கு..

தன்னிடம் போகம் கொள்ளுவதாக நினைக்கும் ஒருவரும்.. இறக்கும் தருவாயில் அந்த கதையை அவர் இன்னொருவனிடம் சொல்ல அவனுக்கும் அதேபோல அனுபவம் ஏற்படுவதும் அதை சக மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கும் அளவு அவர்கள் அந்த ஆவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் உறவும்.. நல்ல விதமாய் சொல்லப்பட்டுள்ளன.
ஒருமுறை ஒருவனைப்பிடித்த பேய் அவனை அனுபவிக்க தொடர்ந்து வரும் என்பது போன்ற நம்பிக்கைக்கு லாரி ஓட்டுனராக வரும் ஒருவனது கதையிலும் அந்த ஆவியின் நம்பிக்கையால் இருவரது சாவுக்கு அவன் காரணமாய் அமைவதும் நடக்கின்றன.

இமையோன்
பாதைகள்
அறைகள்
தம்பி
யட்சி
ஏழுநிலைப் பந்தல்
இரண்டாவது பெண்
குரல்
ஐந்தாவது நபர்
ரூபி

என மொத்தம் பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப்புத்தகம். கிராமங்களில் சாயந்திரம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரெண்டு,மூனு குடும்பங்கள் சேர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசும்போது கேள்விப்பட்ட செவி வழிச்செய்திகளை கதைகளாக்கும் உத்தி இது என நினைக்கிறேன். காதால் கேட்ட விஷயங்களை கதையாக மாற்றியமைக்கும் உத்தியில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயமோகன்.


விரிவான வர்ணனைகளும், நிஜ அனுபவங்களுக்கு நெருக்கமாக வாசகர்களை இட்டுச் செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பனுபத்தைக் கொடுக்கும். அவசியம் படியுங்கள்..

ஜெயக்குமார்

No comments: